கேளிக்கை வரிவிலக்கு - ஆரோகணம் இயக்குநருக்கு நேர்ந்த அனுபவம்..!

16-07-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று காலையில் வெளிவந்த இந்தச் செய்தியைப் படித்தபோது மிகவும் ஆச்சரியமாகத்தான் உள்ளது..! 

நல்ல சினிமாக்களை ஊக்குவிக்கும் பொருட்டு தாத்தா கொண்டு வந்த வரிவிலக்கு என்ற திட்டத்தின் மூலம் பல லட்சங்கள் அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மாமூலாகச்  செல்கிறது.. கட்டிங் கொடுக்காமல் சர்டிபிகேட்டும், ஆர்டரும் நம்ம கைக்கு வராது என்று தயாரிப்பாளர்கள் யூனியன் வாசலில் பலரும் பேசுவதாக செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன. இப்போது இது அத்தனையையும் துடைத்தெறிவதைப் போல 'ஆரோகணம்' திரைப்படத்தின் இயக்குநர் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணனுக்கு கிடைத்த அனுபவங்கள் சொல்கிறது..!

இதோ நீங்களும் படியுங்கள் :


ஆரோகணத்தின் ‘ஆன்ட்டி க்ளைமாக்ஸ்’!

“தமிழ் சினிமாக்கள், உலகம் முழுவதிலும் அலைகளை ஏற்படுத்தி வருகின்றன.” -   ‘ஆரோகணம்’ படத்தைப் பார்த்ததும், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடமிருந்து வந்த முதல் கருத்து இதுதான். படத்தைப் பார்த்த மற்ற முன்னணி இயக்குநர்கள் மற்றும் வெற்றிப்படங்களைத் தரும் இன்றைய இளம் இயக்குநர்கள் அனைவரின் கருத்தும் அதையேதான் பறைசாற்றின. 

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் இப்படத்தைத் திரையிட்டபோதும், மலையாளப் படவுலகின் குறிப்பிடத்தகுந்த பிரபலங்கள், ‘தமிழ் சினிமாக்களின் புத்தம்புதுமையும் புதுமையான உத்திகளும், எப்போதுமே முத்திரை பதிக்கத் தவறுவதில்லை‘ என்று புகழாரம் சூட்டினர்.


படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்த்த பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துகொண்டிருக்கும் வேளையில், ‘ஆரோகண’த்தைப் பார்வையிட்ட தணிக்கைத் துறை அதிகாரிகளும் வரிவிலக்குக் குழுவினரும் ‘சமூகத்துக்கு இது போன்ற திரைப்படங்கள்தான் இப்போது தேவை’ என்ற தங்களின் உண்மையான உணர்வைப் பதிவு  செய்தனர்.  அமைதியாகவும் மனநிறைவோடும் நான், வரிவிலக்குச் சான்றிதழை எதிர்நோக்கிக் காத்திருந்தேன்.

இது நடந்து 3 வாரங்கள் ஆகியும் அந்தத் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வராமல் போகவே, என்னைக் கவலை அரிக்க ஆரம்பித்தது. அந்த அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டுமானால், அவர்களைக் ‘கவனித்தால்’தான் வேலை நடக்கும் என்பது போன்ற வதந்திகளும் எச்சரிக்கைகளும் என் கவலையை இன்னும் அதிகரிக்கச் செய்தன.  ஏற்கெனவே பார்த்துப் பார்த்து சிக்கனமாய் நான் போட்டிருந்த பட்ஜெட்டில், காரணமே இல்லாமல் ஒரு பைசா செலவழிப்பதைக் கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாத நிலை..! என்ன செய்யலாம் என்று தீவிரமாய் யோசித்த நான், எனது வழியிலேயே சென்று விஷயங்களைக் கையாள்வது என்று முடிவெடுத்தேன்.  லஞ்ச ஒழிப்புத் துறையில் பணிபுரியும் என் நண்பர்கள் சிலருடன் தொடர்புகொண்டபோது, அந்த லஞ்ச லாவண்ய அதிகாரிகளை நான் எப்படியெல்லாம் தந்திரமாகக் கையாளவேண்டும் என்ற அறிவுரைகளை அள்ளி வழங்கினார்கள். ஆனால் ஒருவர் மாற்றி ஒருவரைக் குறை சொல்லிக் கொண்டிருக்காமல், நானே களத்தில் இறங்கிப் பார்த்துவிடத் தீர்மானித்தேன். 

எனவே, ஒரு நாள் காலையில் கிளம்பி, எழிலகத்தில் இருக்கும் வணிக வரித் துறை அலுவலகத்துக்குச் சென்றேன். (‘இந்தியன்’ படத்தின் ஏதோ ஒரு காட்சியில் நடிப்பது போன்ற உணர்வு எனக்கு!). ஆனால், அங்கே நடந்ததே வேறு! மிகவும் ஆச்சர்யப்படத்தக்க வகையில் எனக்கு அன்பான வரவேற்பு கிடைத்ததுடன், வரிவிலக்கு சான்றிதழுக்காக வந்த ‘ஆரோகணம்’ கோப்பு, அந்த வணிகவரித் துறை அலுவலகத்தில் அரை மணி நேரத்துக்கு மேல் தங்கவில்லை என்றும், உடனேயே கையெழுத்தாகி, அடுத்த நடவடிக்கைக்காக தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டு விட்டது என்றும் தகவல் சொல்லப்பட்டது.

‘அப்பாடா.. இனிமேல் கவலைப்பட வேண்டாம்!’‘ என்ற நிம்மதிப் பெருமூச்சு என்னிடம். ஆனால் அந்த நிம்மதி வெகு நேரம் நீடிக்கவில்லை. ‘செகரட்டரியேட்லதான் கண்டிப்பா வாங்குவாங்க..’. ‘ஒரு சூட்கேஸைக் கொண்டு போய்க் காட்டும்வரையில் உங்க ஃபைல் அங்கேயிருந்து மாதக்கணக்கில் நகரவே நகராது’, ‘அங்கே உள்ளே என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியாது’.. இப்படியான ஏளனமான பயமுறுத்தல்கள் மீண்டும் வர ஆரம்பித்தன.

‘இதை விடக் கூடாது.. என்னதான் ஆகுதுன்னு பார்த்துடணும்’ என்ற உறுதியோடு, நான் தலைமைச் செயலகத்துக்குப் படையெடுத்தேன். அங்கிருந்த பணியாள் ஒருவர், எனக்கு இணைச்செயலரின் அறையைக் காண்பித்தார். அவரைப் பார்க்கும்போதே நல்ல மனிதராகத் தெரிந்தது. நான் வந்த விஷயத்தைச் சொன்னதும், சிறிது குழப்பமாகப் பார்த்தார் இணைச் செயலர். நான் இன்னும் விளக்கமாக, ‘‘இங்கே இன்னின்ன படத்துக்கு இவ்வளவு தொகை கொடுக்கப்பட வேண்டும்’’ என்று நான் கேள்விப்பட்ட கணக்கு விவரத்தைக் கூறியதும், அவர் ‘சட்’டெனத் தூக்கிவாரிப் போட்டவராக நிமிர்ந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை அவசரமாக மறுத்த அவர், என்னை செயலரின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

செயலரின் உதவியாளர், மிகவும் சிநேகிதமான தோற்றம் கொண்ட நடு வயதுப் பெண்மணி. எனக்கு வாழ்த்துச் சொன்ன அவர், என்னைப் பற்றிய விவரங்களை செயலரிடம் தருவதற்காக ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தருமாறு கோரினார். பசியோடும், களைப்போடும், விரக்தியோடும் இருந்த நான், முற்றிலும் கலங்கிய நிலையில், ‘‘லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகை, திரைப்பட இயக்குநர் மற்றும் இல்லத்தரசி’’ என்று ஒரு சீட்டில் அவசரமாகக் கிறுக்கி அவரிடம் கொடுத்து செயலரிடம் தரச் சொன்னேன். 

அடுத்த 2 வது நிமிடத்தில் அழைப்பு வந்தது. செயலரின் அறைக்குள் நுழைந்தேன்.. அங்கே நாற்காலியில் கண்ணியமான தோற்றத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் அவர். பண்புள்ள, மரியாதையான அவருடைய தோற்றத்தைப் பார்த்ததுமே எனக்கு பயமின்றி அவரிடம் எல்லாம் சொல்லலாம் என்று தோன்றியது. அவரிடம் சகஜமாக என்னால் பேச முடிந்ததால், நடந்த எல்லாவற்றையுமே விளக்கமாகச் சொன்னேன்.

நான் சொல்லி முடித்த உடனே, முகத்தில் எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தனது துறைக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் திட்டவட்டமாக மறுத்தார் அவர். என்னுடைய ஃபைல் அங்கே வந்ததிலிருந்து, அதற்கு அடுத்தகட்டமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இப்போதைய அதன் நிலைமை.. என்று அனைத்து விவரங்களையும் தயாராக வைத்திருந்தார். அந்த ஃபைல் தற்போது அமைச்சரிடம் இருப்பதாகவும், அதைப் பற்றி அமைச்சரிடம் தான் நினைவுபடுத்துவதாகவும் உறுதிபடக் கூறினார்.

மேலும், ‘ஆரோகணம்’ திரைப்படம், ‘யு’ சர்டிஃபிகேட் மற்றும் தமிழ் தலைப்பு போன்ற வரிவிலக்கு பெறுவதற்கான எல்லாவிதமான தகுதிகளையும் பெற்றிருப்பதால், வரிவிலக்குக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் உறுதியளித்தார். அடுத்து அவர் பேசும்போது, தங்களுடைய துறை லஞ்சம் அற்றது என்றும், அங்கே பணிபுரியும் ஒவ்வொருவரும் சுத்தமான கரங்களுடன் பணிபுரிவதாகவும் கூறினார். அவர் பேசுவதையே கேட்ட நான், சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.. 

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஓர் அரசு அதிகாரி எவ்வளவு ஆணித்தரமான நம்பிக்கையோடு தன் துறையைப் பற்றிப் பேசுகிறார்! நான் வாயடைத்துப்போனேன். நான் கேள்விப்பட்ட வதந்திகள் எல்லாம் அந்தச் சில நிமிஷங்களில் ஒன்றுமில்லாமல் போயின. உடனே நான் நினைத்ததை அவரிடம் சொன்னேன்.. ‘நல்லவேளை.. எனக்கு உண்மையைப் புரியவைத்தீர்கள்.. உங்களைச் சந்தித்தது, என் கண்ணைத் திறந்துவிட்டது போல் இருக்கிறது’’ என்று நன்றி சொல்லிவிட்டு, அவருடைய நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ள விரும்பாமல் கிளம்பிவிட்டேன். 

ஓர் அரசு அலுவலகத்திலிருந்து, ஓர் அரசு அதிகாரியுடனான இனிமையான சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்தபோது, மிகவும் பயங்கரமாகச் சித்திரிக்கப்படுகின்ற சில விஷயங்கள், அருகில் சென்றால் உண்மையிலேயே அப்படி இல்லை என்ற விடியல் வெளிச்சம் எனக்குள் ஏற்பட்டது!  ‘இது இப்படித்தான்..!’ என்று வழிவழியாக நமக்குள் உருவாக்கி வைத்திருக்கும் சில பிம்பங்களை விட்டு வெளியே வரவேண்டிய நேரம் இது.. உண்மையைக் கண்டறிய நாமே தேடிச் செல்வோமானால்.. யார் கண்டது..? அங்கே நாம் காண்பது முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு பிம்பமாகவும் இருக்கலாம்!

பின்குறிப்பு: எனது அடுத்த திரைப்பட முயற்சிக்கு, இதையே அடிநாதமாக வைத்துக்கொள்ளலாமா எனப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன்.

இதுவரையிலும் சரிதான்.. இனிமேல் அமைச்சரின் டேபிளில் இருந்து இது எவ்வளவு வேகத்தில் பயணிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆரோகணம் திரைப்படத்தை 38 லட்சம் ரூபாயில் தயாரித்திருக்கிறார்கள். பிரபல விநியோகஸ்தர் ஜெ.சதீஷ்குமார்  45 லட்சம் ரூபாய்க்கு இதன் ஒட்டு மொத்த விநியோக உரிமையைப் பெற்றுள்ளார்.  ஆனாலும் கூடுதலாக 30 அல்லது 40 லட்சம் விளம்பரத்திற்காக செலவு செய்தால்தான் இந்தப் படத்தை தியேட்டர்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்று சதீஷ்குமாரே ஆரோகணம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

தமிழக அரசின் வரிவிலக்கு இப்படத்திற்குக் கிடைத்தால் அது விநியோகஸ்தருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நல்லதாச்சே என்பதால் வரிவிலக்கு கிடைத்த பின்பு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று காத்திருக்கிறார்கள்.  ரிலீஸின்போதே வரிவிலக்கு கிடைப்பது வேட்டை, 3 ஆகிய பெரிய படங்களுக்கு நடந்திருக்கிறது. சில படங்களுக்கு ரிலீஸாகி சில நாட்களுக்குப் பிறகு கொடுத்து தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார்கள். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு கடைசிவரையிலும் வரிவிலக்கு தராமல் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தார்கள். 

இப்போது இவர் எழுதியிருப்பதையும், நடப்பதையும் பார்த்தால், ஆட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதனை அப்படியே கீழே உள்ளவர்கள் பின்பற்றுவார்கள் போலும்..! யார் ஆட்சியாக இருந்தாலும் சட்டவிதிமுறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் மேலிடம் கொடு என்றால் கொடுப்பதும், கொடுக்காதே என்றால் கொடுக்காமல் இருப்பதுமாக அதிகாரிகளின் செயல்பாடுகள் ஒரு அடிமைத்தனமாகவே இருப்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகிறது..!

25 comments:

Prakash said...

போன ஆட்சியில் யாருக்கு கொடுக்கவில்லை ???

வவ்வால் said...

// Prakash said...
போன ஆட்சியில் யாருக்கு கொடுக்கவில்லை ???//

கழக சொம்புகளுக்கு பழசெல்லாம் மறந்து போய்விடும் :-))

இங்குப்பார்க்கவும்.

http://vovalpaarvai.blogspot.in/2012/04/blog-post_24.html

------------
என்னைப்பொறுத்த வரை வரிவிலக்கு சின்னப்பட்ஜெட் படத்துக்கு மட்டும் கொடுக்கணும்.

நெல்லை கபே said...

சின்ன படத்துக்கும் புதுமையா முயற்சி பண்ணின படத்துக்கும்தான் கொடுக்கணும்.ஆனா இது சினிமாகாரங்களை கன்ட்ரோல்ல வச்சிக்க ஆட்சியாளர்கள் பயன்படுத்தற ஆயுதமாவே இருக்கு.


ஆளவந்தான் படத்தின் காட்சியால் பாதிக்கப்பட்டு Kill Bill-2 காட்சிகளை அமைத்த Quintin Tarantino

MANO நாஞ்சில் மனோ said...

லஞ்சம் லாவண்யம் என்று அழியுமோ அன்றைக்குத்தான் நாடும் சுபிட்சம் பெரும் ச்சே...!

எல் கே said...

வரிவிலக்கு அவசியமா ?? நாட்டுக்கு ரொம்ப முக்கியம் . வரியை வெச்சு நாலு நல்லது பண்ணலாம். படம் எடுக்கறவன் நடிக்கறவன் அத்தனை பேரையும் உண்மையான வருமான வரி கட்ட சொல்லுங்க மொதல்ல அப்புறம் வரி விலக்கு கேட்கலாம்

அமர பாரதி said...

வரி விலக்கு எந்தத் திரைப் படத்துக்கும் கொடுக்கக் கூடாது. பொது மக்களுக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை. தனிப் பட்ட மனிதர்கள் பயனடைவதற்காக வரி விலக்கு அளிப்பது திரைத் துறைடில் மட்டுமே இருக்கிறது. நல்ல உணவு கொடுத்தால் வரி விலக்கு உண்டு என்று எந்த உணவகத்துக்கும் கிடையாது. சினிமா என்பது ஒரு சிலர் மட்டுமே லாபமடைகிற ஒரு துறை, இதில் எதற்கு வரி விலக்கு?

அமர பாரதி said...

மேலும் கேளிக்கை வரி என்பது அந்தந்த உள்ளூர் அமைப்புகளுக்கு நேரடியாக கிடைக்கும் ஒரு வருமானம். அதை வைத்து நல்ல திட்டப் பணிகளை முன்னெடுக்க முடியும். இந்த வரி விலக்கால் அது அடி பட்டுப் போகிறது. யாராவது ஒருவர் பொது நல வழக்கு தொடுக்க வேண்டும்.

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

போன ஆட்சியில் யாருக்கு கொடுக்கவில்லை???]]]

வரிவிலக்கையே கடைசி கட்டத்தில்தான் கொண்டு வந்தார்கள். ஒரு சிலருக்குக் கொடுத்தார்கள். ஒரு சிலருக்குத் தரப்படவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...
------------
என்னைப் பொறுத்தவரை வரிவிலக்கு சின்ன பட்ஜெட் படத்துக்கு மட்டும் கொடுக்கணும்.]]]

ஆமோதிக்கிறேன். சேவற்கொடி, மை, தா, தென்மேற்குப் பருவக்காற்று, ராட்டினம், வழக்கு எண் போன்ற படங்களுக்குக் கொடுக்கலாம்..! ஆனால் இவைகளை சிறப்பானவை என்று யார் தேர்வு செய்வது..? இதுதான் சிக்கல்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாயன்:அகமும் புறமும் said...

சின்ன படத்துக்கும் புதுமையா முயற்சி பண்ணின படத்துக்கும்தான் கொடுக்கணும். ஆனா இது சினிமாகாரங்களை கன்ட்ரோல்ல வச்சிக்க ஆட்சியாளர்கள் பயன்படுத்தற ஆயுதமாவே இருக்கு.]]]

ஆக.. இது அதிகாரத் துஷ்பிரயோகத்திற்குத்தான் துணை போகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[MANO நாஞ்சில் மனோ said...

லஞ்சம் லாவண்யம் என்று அழியுமோ அன்றைக்குத்தான் நாடும் சுபிட்சம் பெரும் ச்சே...!]]]

கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் எனக்கு நம்பிக்கையில்லை மனோ..!

உண்மைத்தமிழன் said...

[[[எல் கே said...

வரி விலக்கு அவசியமா?? நாட்டுக்கு ரொம்ப முக்கியம். வரியை வெச்சு நாலு நல்லது பண்ணலாம். படம் எடுக்கறவன் நடிக்கறவன் அத்தனை பேரையும் உண்மையான வருமான வரி கட்ட சொல்லுங்க மொதல்ல. அப்புறம் வரி விலக்கு கேட்கலாம்.]]]

ஓகே.. நியாயமான கருத்துதான்..! ஆத்தாகிட்ட கேட்டுச் சொல்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[அமர பாரதி said...

வரி விலக்கு எந்தத் திரைப் படத்துக்கும் கொடுக்கக் கூடாது. பொது மக்களுக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை. தனிப்பட்ட மனிதர்கள் பயனடைவதற்காக வரி விலக்கு அளிப்பது திரைத் துறைடில் மட்டுமே இருக்கிறது. நல்ல உணவு கொடுத்தால் வரி விலக்கு உண்டு என்று எந்த உணவகத்துக்கும் கிடையாது. சினிமா என்பது ஒரு சிலர் மட்டுமே லாபமடைகிற ஒரு துறை, இதில் எதற்கு வரி விலக்கு?]]]

நியாயமான வாதம்..! ஆனால் சரவணபவன் அண்ணாச்சி மேடையேறி தன்னை வாழ்த்துவதைவிட நமீதா மேடையேறி வாழ்த்துவதுதான் தனக்கு பெருமை என்று தாத்தா நினைத்தார். அதனால்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[அமர பாரதி said...

மேலும் கேளிக்கை வரி என்பது அந்தந்த உள்ளூர் அமைப்புகளுக்கு நேரடியாக கிடைக்கும் ஒரு வருமானம். அதை வைத்து நல்ல திட்டப் பணிகளை முன்னெடுக்க முடியும். இந்த வரி விலக்கால் அது அடி பட்டுப் போகிறது. யாராவது ஒருவர் பொது நல வழக்கு தொடுக்க வேண்டும்.]]]

அரசுகளின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது..! இதில் முறைகேடு என்றால் மட்டுமே அது தலையிடும்..!

Kannan said...

சுத்த காமெடி. நான் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவன். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பி விட வேண்டும் என்று முடிவு எடுத்து வந்து சேர்ந்தேன். நாங்கள் "வெளிநாட்டுகாரர்கள்" என்பதால் foreigners செல்லில் பதிவு செய்ய வேண்டும் (ஆறு மாத காலத்திற்குமேல் தங்குவதென்றால்). பதிவு செய்ய சென்ற போது நடந்த தொல்லை தாங்க முடியாதது. ஏன் இங்கு வந்தோம் என்று நினைக்க வைக்கும் அளவிற்கு செயல் பட கூடிய திறமை சாலிகள் உள்ளது தான் தமிழ்நாடு / இந்தியா. இந்தியாவில்/மதுரையில் பிறந்து வளர்ந்ததினால், "பார்த்தா காமாச்சி நாய்க்கன் பார்க்கலேன்னா கம்பூண்டி நாய்க்கன்" (இது ஒரு வட்டார சொல் தான்!) என்பதற்கேற்ப "கூப்புடறா உங்க பாசை", என்று அலப்பறை செய்து, கடைசியில் சட்டப்படி ஒரு நாளில் முடிக்க வேண்டிய வேலையை அல்வா கொடுத்து இரண்டு வாரங்களில் முடித்தேன், தோராயமாக இந்த வேலை ஒரு ஆறு வாரங்கள் எடுக்கும். இது ஒரு சாம்பிள் மட்டுமே.

உண்மைத்தமிழன் said...

[[[Kannan said...
சுத்த காமெடி. நான் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவன். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பி விட வேண்டும் என்று முடிவு எடுத்து வந்து சேர்ந்தேன். நாங்கள் "வெளிநாட்டுகாரர்கள்" என்பதால் foreigners செல்லில் பதிவு செய்ய வேண்டும் (ஆறு மாத காலத்திற்குமேல் தங்குவதென்றால்). பதிவு செய்ய சென்ற போது நடந்த தொல்லை தாங்க முடியாதது. ஏன் இங்கு வந்தோம் என்று நினைக்க வைக்கும் அளவிற்கு செயல் பட கூடிய திறமை சாலிகள் உள்ளது தான் தமிழ்நாடு / இந்தியா. இந்தியாவில்/மதுரையில் பிறந்து வளர்ந்ததினால், "பார்த்தா காமாச்சி நாய்க்கன் பார்க்கலேன்னா கம்பூண்டி நாய்க்கன்" (இது ஒரு வட்டார சொல் தான்!) என்பதற்கேற்ப "கூப்புடறா உங்க பாசை", என்று அலப்பறை செய்து, கடைசியில் சட்டப்படி ஒரு நாளில் முடிக்க வேண்டிய வேலையை அல்வா கொடுத்து இரண்டு வாரங்களில் முடித்தேன், தோராயமாக இந்த வேலை ஒரு ஆறு வாரங்கள் எடுக்கும். இது ஒரு சாம்பிள் மட்டுமே.]]]

கண்ணன் ஸார்.. தங்களுடைய முதல் வருகைக்கு எனது நன்றிகள்..!

எல்லா இடங்களிலும் அரசு ஊழியர்கள் ஒன்று போலவே இருப்பதில்லை. தலைமைச் செயலகம் என்பதால் அப்படியிருக்கலாம்..! பொதுப்பணித் துறைக்குள் நுழைந்தால் கட்டிங் கொடுக்காமல் செக்கை கையில் வாங்க முடியாது என்று ஒப்பந்ததாரர்களே சொல்வார்கள்..! அது போலத்தான் உங்களது அனுபவமும்..!

maha said...

ஒரு சிலருக்கு எங்கு நல்லது நடதாலும் பிடிக்காது அதில் குறை கூறவே ஒரு கூட்டம் இருக்கும் , அதை தப்பு சொல்லவில்லை , நல்லது நடக்கும் பொது பாராட்ட வேண்டும் அப்படி இல்லை என்றால் ஏதும் சொல்லாமல் இருந்து விடலாம் , எந்த ஒரு மனிதனும் நல்லவன் கிடையாது எந்த ஒரு அரசியல் கட்சியும் நல்ல கட்சி கிடையாது , அவர்கள ஒரு நல்லது செய்யும் போது பாராட்ட செய்வதில் தப்பு இல்லை .

உண்மைத்தமிழன் said...

[[[maha said...

ஒரு சிலருக்கு எங்கு நல்லது
நடதாலும் பிடிக்காது அதில் குறை கூறவே ஒரு கூட்டம் இருக்கும் , அதை தப்பு சொல்லவில்லை , நல்லது நடக்கும் பொது பாராட்ட வேண்டும் அப்படி இல்லை என்றால் ஏதும் சொல்லாமல் இருந்து விடலாம் , எந்த ஒரு மனிதனும் நல்லவன் கிடையாது எந்த ஒரு அரசியல் கட்சியும் நல்ல கட்சி கிடையாது , அவர்கள ஒரு நல்லது செய்யும் போது பாராட்ட செய்வதில் தப்பு இல்லை .]]]

இதில் நல்லது என்றில்லை.. சூதும் நிரம்பியிருக்கிறது. அதைத்தான் தனியே குறிப்பிட்டிருக்கிறேன்..!

Kannan said...

இந்தியாவில் சமீபத்தில் சொல்ல கூடிய அளவு எதுவும் நடக்கவில்லை. இதற்க்கு நாம் படிக்க நேரும் மின்னஞ்சல்களே சாட்சி such as why india is great யோகா, மற்றும் இன்ன பிற. எனக்கு தெரிந்து "ஏன் சீனா அல்லது அமெரிக்கா அல்லது வேறு நாடு பெரிது" என்ற மின் அஞ்சல்கள் நான் படித்தது இல்லை. இந்தியர்கள் மட்டுமே நம்மை உயர்த்தி கொள்ள சில நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்கின்றனர். இன்னைக்கி என்னடா சாப்பாடுன்னு கேட்டா வக்காலி போன மாசம் எங்க ஊட்டுல பொரியல்ன்னு சொல்லறான்.

”தளிர் சுரேஷ்” said...

லஞ்சம் இல்லாத தமிழ்நாடு அலுவலகமா? ஆச்சர்யமாய் இருக்கிறது!

உண்மைத்தமிழன் said...

[[[Kannan said...

இந்தியாவில் சமீபத்தில் சொல்ல கூடிய அளவு எதுவும் நடக்கவில்லை. இதற்க்கு நாம் படிக்க நேரும் மின்னஞ்சல்களே சாட்சி such as why india is great யோகா, மற்றும் இன்ன பிற. எனக்கு தெரிந்து "ஏன் சீனா அல்லது அமெரிக்கா அல்லது வேறு நாடு பெரிது" என்ற மின் அஞ்சல்கள் நான் படித்தது இல்லை. இந்தியர்கள் மட்டுமே நம்மை உயர்த்தி கொள்ள சில நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்கின்றனர். இன்னைக்கி என்னடா சாப்பாடுன்னு கேட்டா வக்காலி போன மாசம் எங்க ஊட்டுல பொரியல்ன்னு சொல்லறான்.]]]

ஹி.. ஹி.. தற்பெருமையடிச்சே காலத்தை ஓட்டுறதுதான் நம்மாளுகளோட முழு நேர வேலை..!

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

லஞ்சம் இல்லாத தமிழ்நாடு அலுவலகமா? ஆச்சர்யமாய் இருக்கிறது!]]]

எனக்கும்தான்..!

NAGARAJAN said...

உண்மைத் தமிழன் அய்யா, கடைசியில் ஆரோகணத்திற்கு வரி விலக்கு கிடைத்ததா இல்லையா, கேட்டுச் சொல்லுங்க.

உண்மைத்தமிழன் said...

[[[NAGARAJAN said...

உண்மைத் தமிழன் அய்யா, கடைசியில் ஆரோகணத்திற்கு வரி விலக்கு கிடைத்ததா இல்லையா, கேட்டுச் சொல்லுங்க.]]]

நாகராஜன் அய்யா.. படத்துக்கு வரிவிலக்கு கிடைச்சாச்சு..! சர்டிபிகேட்டை மேடம் கைல வாங்கிட்டாங்களாம்..!

Doha Talkies said...

நல்ல பதிவு அண்ணா.
சமயம் கிடைக்கும் போது இந்த தம்பியின் ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க அண்ணா...
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html