15-12-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
9 ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா நேற்று மாலை 7 மணிக்கு கொஞ்சம் திருஷ்டிப் பொட்டோடு அமர்க்களமாக ஆரம்பித்தது. முறைப்படி மாலைதான் துவக்க விழா நிகழ்ச்சி என்றாலும், காலையில் இருந்தே படங்கள் திரையிடப்பட்டு வந்தன.
வாசலில் டம், டம் டமாரம் காதைக் கிழிக்க... அங்கே போடப்பட்டிருந்த கேரளாவின் பூக்கோலத்தை யாரும் சரியாகக் கவனிக்காததால் ஆரம்பம் அமர்க்களமாகத்தான் இருந்தது..! சுஹாசினி மணிரத்னமும், பூர்ணிமா பாக்யராஜூம், ஷைலஜா ஷெட்லூரும், பாத்திமா பாபுவும் காலையில் இருந்தே பரபரப்பில் இருந்ததால், அரங்கமும் அதே பரபரப்பில்தான் இருந்தது.
காலை காட்சிக்குப் பின்பு உட்லண்ட்ஸில் காட்சிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டு அலங்கார வேலைகள் அமர்க்களப்பட்டன. ஆத்தா வருவார் என்று எதிர்பார்த்து அவர் வராமல் போக, முதல் முறையாக.. இந்த ஆட்சி அரசவை ஏற்ற பின்பு, ஒரு சினிமா விழாவுக்கு அமைச்சர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை என்பதால் கொஞ்சம் விமரிசையாகவே அவரை வரவேற்போம் என்று நினைத்துவிட்டார்கள்..!
மேடையில் இரண்டு பக்கமும் ஜெயா டிவியின் லோகோ அசத்தலாக இருக்க ஸ்பான்ஸர் லிஸ்ட்டிற்காக பணம் கொடுத்தவர்கள் பட்டியல் இருபதைத் தொட்டிருந்த்து. சென்ற சில ஆண்டுகளில் பட விழாக்கள் நடக்கும்போது உடனிருந்து அனைத்து வேலைகளையும் செய்து வந்த அமைப்பின் துணைத் தலைவரான, நடிகர் எஸ்.வி.சேகர் இந்தாண்டு ஏனோ தலைமறைவாகிவிட்டார்.
அவருக்குப் பதிலாக அவரது இடத்தை அண்ணன் சரத்குமார் பிடித்துக் கொண்டார். அவரது மீடியா வாய்ஸ் பத்திரிகைதான் இந்த்த் திரைப்பட விழாவின் பிரதான பத்திரிகை ஸ்பான்ஸராம்..! ஆத்தாவிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியதும், 25 லட்சம் ரூபாய் டொனேஷன் கிட்டியதும் நாட்டாமையின் செல்வாக்கினால்தான்..!
யாரோ ஒரு நடிகை என்றார்கள். பி.எம்.டபிள்யூ காரில் வந்திறங்கி உள்ளே வந்தவரை அப்படியே சுவர் ஓரமாக நிறுத்திவைத்து ஏதோ ஓவியம் வரைவதைப் போல சுட்டுத் தள்ளினார்கள் வீடியோகிராபர்களும், புகைப்படக்காரர்களும்..! முடிந்த்து என்று சொல்லி படியேறப் போனவரை மீண்டும் தடுத்துப் பிடித்து எனக்கு மட்டும் என்று சொல்லி 2 பேர் போட்டோ புடிக்க.. திரும்பி நின்ற அந்த நடிகை அந்த 2 பேரும் தங்களது செல்போனில் தனது அழகை தைரியமாகப் படம் புடித்த அழகைப் பார்த்து தன் சூரிய விழி கண்களில் டஜன் கணக்கான அதிர்ச்சியைக் கொடுத்தார்.
சரியாக 6 மாதங்கள் கழித்துச் சந்தித்த நண்பர் ரோசாவசந்த், சரியாக 1 மாதம் கழித்துச் சந்தித்த அண்ணன்மார்கள் ஜாக்கிசேகர், நித்யாவுடன் அரங்கத்திற்குள் அடித்துப் பிடித்துதான் நுழைய முடிந்தது.. டிவி சேனல்களின் அராஜகம் அதற்குள்ளாகவே அங்கே பட்டையைக் கிளப்பிவிட்டது. உட்கார்ந்திருப்பவர்களுக்கு தங்களது பரந்த முதுகைக் காட்டியபடியே கேமிராமேன்கள் நிற்க.. சிலர் கத்தியும், பலர் தன்மையாகச் சொல்லியும் தள்ளி நிற்கும்படி அனத்திக் கொண்டேயிருந்தார்கள். இவர்கள்தான் ஜெயா டிவியில் குஷ்பூவின் முதுகு தெரியும் ஜாக்கெட்டை பற்றியே பேசிக் கொண்டிருந்த மகாத்மாக்கள்..!
மெயின் ஸ்பான்ஸர் ஜெயா டிவிதான் என்றாலும், அனைத்து டிவி சேனல்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.. பிரபலங்கள் பாத்ரூம் செல்வதைக்கூட எடுத்து வெளியிடத் தயாராக இருக்கும் நிலை இன்றிருப்பதால் முடிந்த அளவுக்கு ஓசியில் பிரியாணி சாப்பிடத் தயாராகவே வந்திருந்த்து மீடியாக்கள்..!
இருக்கைகள் நிகழ்ச்சி துவங்க அரைமணி நேரம் இருக்கும் முன்பாகவே நிரம்பி வழிய.. முன் வரிசையில் வி.வி.ஐ.பி. வரிசைகளில்கூட பழக்க தோஷத்தில் தமிழர்கள் தொற்றிக் கொள்ள.. படாதபாடுபட்டு அவர்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள் விழா நடத்துனர்கள்..!
ராஜேந்திர பாலாஜி என்ற அமைச்சரொருவர் விழாவினைத் துவக்கி வைக்க வந்தார். அவருடைய கைத்தடிகளாக 20 பேர் திமுதிமுவென உள்ளே நுழைந்து மிச்சம், மீதமிருந்த இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்ள.. நிகழ்ச்சிக்கு ஸ்பான்ஸர் செய்தவர்களெல்லாம் நிற்க வேண்டியதாகிவிட்டது..! வேணும்டி உங்களுக்கு..!
அமைச்சருக்கு சேகர் கபூர் யார் என்று தெரியவில்லை.. அமைச்சரின் அருகில் வந்து அமர்ந்த அவரை பார்த்து ஒரு சின்ன ஸ்மைல்.. ஒரு மரியாதை.. ம்ஹூம்.. தேமே என்று தேவாங்குபோல் அமர்ந்திருந்தார் அமைச்சர். உலகத்தின் எட்டாவது அதிசயமாக தனியொரு நபராக வந்திருந்து ஒட்டு மொத்த கைதட்டல்களையும் அள்ளிச் சென்றார் பவர் ஸ்டார் சீனிவாசன்.
இதுக்கு மேலும் தாமதித்தால் பசங்க தாளித்துவிடுவார்கள் என்ற பயம் வந்ததால் பீமபுஷ்டி அல்வாவுக்கு விளம்பரம் கொடுக்கும் அழகில் இருக்கும் கோட்டு, சூட்டு போட்ட கணேஷ் வெங்கட்ராமனையும், வேஷ்டியுடன் சிக்கென்று இருந்த பார்த்திபனையும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக்கி மேடைக்கு அழைத்தார்கள். கணேஷ் ஆங்கிலத்தில் பொளந்து கட்ட, பார்த்திபன் தன் பங்குக்கு தமிழில் பொளந்தார்.
பொண்ணுகள், பையன்கள், சைட் அடிப்பது, காதலிப்பது, லுக்கு விடுவது.. இதைத் தவிர வேறு எதையும், எங்கேயும் பேசக் கூடாது என்று கங்கணம் கட்டியிருக்கிறாரா பார்த்திபன்..? அவரே ஒரு இள வயது பெண்ணுக்கு அப்பன்தான்.. அந்த நினைப்பாவது அவருக்கு இருக்கா..? வந்திருக்கும் வயசுப் பசங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்குறதா நினைத்து அவர் பேசினதுல ஒண்ணுமே இல்லை..!
அப்பாலிக்காதான் மேடையே ஆடுச்சு.. வத, வதன்னு ஆணும், பொண்ணுமா வந்தாங்கோ.. ஆடினாங்கோ.. “யாரடி நீ மோகினில” இருந்து “கொலைவெறிடி” பாட்டுவரைக்கும் நாலு, நாலு வரிக்கெல்லாம் ஸ்டெப் வைச்சு ஜெயா டிவிக்கு மார்க்கெட்டிங் பண்ணி முடிச்சாங்க.. சர்வதேசத் திரைப்பட விழான்னு பேர் வைச்சுக்கிட்டு இது என்னாத்துக்கு..? இதற்குப் பதிலாக பழைய தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பையே காட்டியிருக்கலாம். வந்திருந்த வெளி மாநில, வெளிநாட்டு விருந்தினர்களுக்காவது புதிய விஷயமாக இருந்திருக்கும்.. சொதப்பல்..!
விழாவில் எதுவும் நடக்கும் என்று எதிர்பார்த்துதானோ என்னவோ மேடையில் சரியாக கிரங்கள் வரிசையாகவே ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். சேகர் கபூர் மேடையேறியபோது அவருக்கு மனதிருப்தி கிடைக்கும் அளவுக்கான கை தட்டல்கள் கிடைத்தன என்று நினைக்கிறேன்.
குத்துவிளக்கை ஏற்ற 3 குடும்பக் குத்துவிளக்குகளை மேடையில் ஏற்றினார்கள். கார்த்திகா, தன்ஷிகா, இவர்களுடன் ஒரு நடிகை.. பெயர் மறந்துபோய்விட்டது. ஆளுக்கு 2 இடங்களில் பற்ற வைத்துவிட்டு கடமை முடிந்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு தங்களது ஒய்யார கொண்டையை சிலுப்பிவிட்டுக் கொண்டு அமைச்சருக்கு மட்டும் டென்ஷனை ஏற்றிவிட்டு போனார்கள்..!
பேசிய அனைவரும் 2 நிமிடங்களில் தங்களது பேச்சுக்களை முடித்துவிட்டாலும் ஒருவரும் உருப்படியாகப் பேசவில்லை என்பதால் எதையும் குறிப்பிட முடியவில்லை..! சேகர் கபூர் பேசத் தயாராக இருக்கும் நிலையில்தான் திடீரென்று அரங்கத்தில் ஒரு சலசலப்பு. பதாகைகளைத் உயரத் தூக்கியபடியே “தணிக்கை செய்யாதே.. செங்கடலை தடை செய்யாதே” என்ற கூக்குரல்கள் எழுந்தன. ஸ்டேண்டில் பொறுத்தப்பட்டிருந்த கேமிராக்கள் நொடியில் கேமிராமேன்களின் கைகளுக்குத் தாவ.. அவர்களைச் சுற்றிலும் பிளாஷ் மழைகள்..!
பிரபல எடிட்டர் பி.லெனின் தலைமையில், அருண்மொழி, அம்ஷன்குமார், வெளிரங்கராஜன் என்ற பிரபலங்களுடன் லீனா மணிமகேலை தனது செங்கடல் படத்திற்காக நீதி கேட்டு கூக்குரலை எழுப்பினார். வந்திருந்தவர்களில் பாதி பேருக்கு விஷயம் தெரியவில்லை என்பதால் குழப்பத்துடன் பார்க்க.. பேசுவதற்காக எழுந்து வந்த சேகர் கபூர், சிறிது நேரம் அமைதி காத்து வேடிக்கை பார்த்தார்.
வாலண்டியராக நியூ காலேஜில் படிக்கும் மாணவர்களை அமர்த்தியிருந்தால் அவர்களுக்கு இதை எப்படி ஹேண்டில் செய்வது என்று தெரியவில்லை. பல சினிமாக்காரர்கள் அவசரமாக அங்கே ஓடி வந்து பார்க்க எடிட்டர் லெனினே கோஷம் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் அப்படியே சிலையாய் நின்றார்கள்..!
சரத்குமார் மேடையில் இருந்தபடியே மைக்கில் சொல்லிப் பார்த்தார். கேட்காததால் கீழே இறங்கிவந்து லெனினிடம் பேசினார். லெனின் மீதிருந்த மரியாதையின் காரணமாக ஒரே வரியில், “இந்த பெஸ்டிவலில் இந்தப் படத்தை நிச்சயமாக திரையிட நான் ஏற்பாடு செய்கிறேன். என் மேல நம்பிக்கை வைச்சு போராட்டத்தை முடிச்சுக்குங்க..” என்று சரத்குமார் கேட்டுக் கொள்ள.. ஒரே நொடியில் அந்தப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. (எனக்கு ஒரு ஆப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகவே எனக்குத் தெரிகிறது.. ஹி.. ஹி.. ஹி.. அடி வாங்கறதுக்கு முன்னாடியே வாங்குற மாதிரி நடிச்சிட்டோம்ன்னா வலி குறையும் பாருங்க.. அதுக்குத்தான்..!)
இந்தக் களேபரத்துக்கு இடையில் திடீரென்று அரங்கமே எழுந்து நின்று எதற்கோ ஆரவாரம் செய்ய என்னடா என்று மேடையை பார்த்தால், நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்..! என்ன கொடுமை சரவணா இது..?
லீனா முறைப்படிதான் தேர்வுக் கமிட்டிக்கு விண்ணப்பத்திருக்கிறார். விண்ணப்ப மனுவையும் தவறில்லாமல் நிரப்பியும் அனுப்பியிருக்கிறார். எப்படியும் தேர்வாகிவிடும் என்று காத்திருந்தவருக்கு லிஸ்ட்டில் பெயர் இல்லை என்றதும் அதிர்ச்சியாகியிருக்கிறது. போன் செய்து விபரம் கேட்டவருக்கு சரிவர பதில் சொல்லவில்லை. இதுதான் அவருக்கு அசாத்தியமான கோபம் வரக் காரணம்..! ஏதாவது இருந்தால்தானே அவங்க சொல்வாங்க..?
கோவா பிலிம் பெஸ்டிவலில் இந்தியன் பனோரமாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்ட ஒரே தமிழ்த் திரைப்படம் செங்கடல் மட்டுமே..! அதேபோல் பெங்களூர் சர்வதேசத் திரைப்பட விழா, திருவனந்தபுரம் திரைப்பட விழா என்று 2 விழாக்களிலும் தமிழ் மொழி சார்பாகவும் செங்கடல் திரையிட தேர்வாகியிருக்கும் சூழலில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடத்தப்படும் திரைப்பட விழாவில் மட்டும் தேர்வாகவில்லையெனில் இது எந்தவகையில் நியாயம்..?
ஆத்தாவிடம் 25 லட்சம் வாங்கியிருக்கிறோம். மாநில, மத்திய அரசுகளை வன்மையாகக் கண்டிக்கும் செங்கடல் படத்தை வெளியிட்டால் ஆத்தாவின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமா என்கிற பயம்தான் இதற்கான முதல் காரணமா நான் நினைக்கிறேன். வேறு இருக்க முடியாது.. தேர்வுக் கமிட்டியினராக நடிகை ரோகிணி, மதன், பிரதாப்போத்தன் மூவரும் இருந்துள்ளனர்.
இதேபோல் சென்ற ஆண்டுக்கான சிறந்த மாநில மொழித் திரைப்படம், சிறந்த பாடலாசிரியருக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது என்று 3 தேசிய விருதுகளைப் பெற்ற தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படமும் இந்த பெஸ்டிவலில் சேர்க்கப்படவில்லை. இதற்கு விழா அமைப்பினர் சொல்லும் பதில், “அவர்கள் விண்ணப்பிக்கவே இல்லை. அதனால் நாங்கள் செலக்ட் செய்யவில்லை..” என்பது. ஆனால் விழா அமைப்பாளர்களில் ஒருவரான சந்தானம் என்பவர் டிவி மீடியாக்களுக்கு பதில் அளித்தபோது இந்தியன் பனோரமாவில் இடம் பெற்றிருக்கும் சில படங்களுக்காக அந்தந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை நாங்களே கேட்டு விண்ணப்பம் அனுப்பச் சொன்னதாகச் சொல்கிறார். “ஏன் இதே போல் தென்மேற்குப் பருவக் காற்று படத்துக்கும் கேட்டிருக்கலாமே..?” என்கிறார் அதன் இயக்குநர் சீனுராமசாமி. நியாயமான கேள்விதான்..! ஆனால் இதற்கு விழா கமிட்டியினரிடம் இப்போது பதில் இல்லை.
சீனு ராமசாமி இதனை இயக்குநர் சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு போக.. செயலாளரான இயக்குநர் அமீர், விழா கமிட்டியினரிடம் கேட்டும் இதே பதில்தான் வந்திருக்கிறது. அதே நேரத்தில் விழா கமிட்டியில் பாரதிராஜாவின் பெயரும், தன் பெயரும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியான அமீர், தனக்கு யாதொரு பொறுப்பும் இல்லாமலேயே தனது பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஆத்தாவின் கவனத்துக்குக் கொண்டு போய், விழாவுக்கு ஜெயலலிதா செல்லக் கூடாது என்றும், இந்த பட விழாவை இயக்குநர்கள் சங்கம் புறக்கணிப்பதாகவும் அறிக்கையே வெளியிட்டார்.
சரத்குமாரே பக்கத்தில் இருப்பதால் இதைப் பற்றியெல்லாம் விழா கமிட்டியினர் இப்போதுவரையிலும் கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் செங்கடல் போலவே, தென் மேற்குப் பருவக் காற்று படமும் இதே விழாவில் திரையிடுவதற்கான முன் முயற்சிகள் இந்த இரவில் இருந்தே நடந்து வருகின்றன. இந்த 2 படங்களையும் திரையிட்டால் தமிழுக்கும், தமிழகத்திற்கும் பெருமை கிடைக்கும்.
அத்தோடு திரைப்பட விழாக்கள் சென்சார் போர்டுகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டிய இந்தக் காலக்கட்டத்தில், அவர்களை போலவே உள்ளடி வேலையில் இறங்குவது கேவலமான செயல்..! கலைஞனுக்கு கலைஞனே எதிரியாக இருக்கக் கூடாது..! மக்களுடைய வரிப்பணத்தில் நடத்தப்படும் ஒரு விழா, அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமே ஒழிய, ஒரு சிலரின் ஆசைகளுக்காகவும், எதிர்ப்புகளுக்காகவும் அடிபணிந்து நடப்பதாக இருக்கக் கூடாது..
சேகர் கபூரின் ஆங்கில உரைக்கு பின்பு அமைச்சரின் நீண்ட நெடிய உரை அரங்கேறியது. கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசியது போலவே அவர்களே, இவர்களே என்றழைத்து இது போன்ற விழாக்களுக்கு இவர் மாதிரியான ஆட்களை அழைக்கவே கூடாது என்பதை கச்சிதமாக நிரூபித்தார் அமைச்சர் பாலாஜி..!
ஆத்தா 25 லட்சத்தை வாரிக் கொடுத்திருப்பதால் அமைப்பின் செயலாளரான தங்கராஜ், என்றைக்கும் இல்லாத அதிசயமாக இன்றைக்கு தனது ஆங்கில நன்றியுரை பேச்சில், “புரட்சித் தலைவி அம்மா” என்று தமிழில் சொல்லியது ஐ.சி.ஏ.எஃப் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று..! நோட் செய்து வைத்துக் கொள்வோம். அடுத்து தி.மு.க. ஆட்சியில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..!
நிகழ்ச்சி முடிந்தவுடனேயே டிவி கேமிராக்கள் லீனாவையும், அவருடைய கூட்டத்தினரையும் மாறி, மாறி பேட்டி எடுக்கத் துவங்க.. இந்தக் களேபரத்தில் வெளியே வந்த ஜூரிகள் மூன்று பேரும் பேட்டியளிக்க பிடிவாதமாக மறுத்துவிட்டனர். யாராச்சும் ஒருத்தராவது பேட்டி கொடுங்க என்று மீடியாக்கள் விழா கமிட்டியினரை நச்சரித்துக் கொண்டிருந்த நேரத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் வெளியில் வர.. அவ்வளவுதான்.. திரைப்பட ஆர்வலர்களும், குஞ்சுகளும், சுளுவான்களும் அவருடன் புகைப்படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்டு நிற்க.. சீனிவாசனின் மனைவியே இந்தக் கூத்தைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தது சீனிவாசனைவிடவும் காமெடியாக இருந்தது..!
இந்த காமெடிக் கூத்துக்கள் இன்னும் 8 நாட்கள் தொடரும்போல தெரிகிறது. ஏனெனில் நம்ம பவர் ஸ்டார், விஐபி பாஸ் வாங்கி வைத்திருக்கிறாராம். எப்பல்லாம் படம் பார்க்க வந்து, தியேட்டரை காலி செய்யப் போறாரோ தெரியவில்லை..! காத்திருப்போம்..!
நன்றி : indiaglitz.com
|
Tweet |
25 comments:
very good coverage, keep it up
அண்ணே : பவர் ஸ்டாரும் நீங்களும் இருக்குற அந்த போட்டோவ போடுறது.....
[[[காவேரி கணேஷ் said...
very good coverage, keep it up.]]]
நன்றி காவேரி..!
[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
அண்ணே : பவர் ஸ்டாரும் நீங்களும் இருக்குற அந்த போட்டோவ போடுறது.....]]]
அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்கலப்பா..!
Why was 'Aranya Kandam' not selected? Is 'Aadukalam' included in the screening list?
அண்ணா விழா குழுவே படத்தை கேட்டு போடுவதாக இருந்தால் ஆரண்ய காண்டத்தை போடா வைக்க வேண்டும் . செங்கடல் படு பொருள் நயமாக தோன்றினாலும் அது நடுநிலையான படம் அல்ல அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதற்கு . தென்மேற்கு பருவ கற்று !!! தேசிய விருது வாங்கிகொடுத்த படம் தன் அனால் அதனையும் விட தமிழ் நாட்டில் பின்னணி இசையில் இருந்து கட்சி பதிவு எடிட்டிங் சவுண்ட் மிக்ஸிங் பின்னணி இசை படத்தினுடே இழையோடும் பகட்டில்லாத நகைசுவை நடிப்பு என்று அனைத்து விதத்திலும் உலக சினிமா என்று sollikollum ரசனைக்கு ஒரு மாற்று கூட குறைவில்லாத ஒரே தமிழ் படமான ஆரண்ய காண்டத்தை திரையிட வைக்க கோரிக்கை விடலாம்
//அண்ணா விழா குழுவே படத்தை கேட்டு போடுவதாக இருந்தால் ஆரண்ய காண்டத்தை போடா வைக்க வேண்டும் .செங்கடல் படு பொருள் நயமாக தோன்றினாலும் அது நடுநிலையான படம் அல்ல அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதற்கு .//
ஆரண்யகாண்டம் படம் வெளியிடப்பட்டுள்ளதால் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த படம் என்ற உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே.ஆனால் திரையிடப்படாத,மறுக்கப்பட்ட படத்தை நடுநிலையானதா இல்லையா என்ற உங்கள் விமர்சனம் தவறு.
கலக்கல் பதிவுங்கோ
ஈழம் பற்றிய செங்கடல் படத்தை தமிழ்நாட்டு திரைப்பட விழாவில் போட தமிழனுக ரிஜட் பண்ணினிட்டாங்க. ஆனா திருவனந்தபுரம் திரைப்பட விழாவுல போட சேட்டனுக செலக்ட பண்ணிருக்காங்களாம்... தமிழுனுகளே இத நோட் பண்ணுங்கப்பா!
[[[AC said...
Why was 'Aranya Kandam' not selected? Is 'Aadukalam' included in the screening list?]]]
ஆரண்யகாண்டம் படத்தின் தயாரிப்பாளரான சரண் வெளிநாட்டில் இருந்ததால் அவரால், படத்தை குறித்த காலத்திற்குள் போட்டிக்கு அனுப்ப முடியவில்லை..!
ஆடுகளம் சிறந்த படம்தானே..? இதில் தேர்வானதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லையே..?
[[[G.Ganapathi said...
அண்ணா விழா குழுவே படத்தை கேட்டு போடுவதாக இருந்தால் ஆரண்ய காண்டத்தை போடா வைக்க வேண்டும். செங்கடல் படு பொருள் நயமாக தோன்றினாலும் அது நடுநிலையான படம் அல்ல அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதற்கு. தென்மேற்கு பருவ கற்று !!! தேசிய விருது வாங்கி கொடுத்த படம். தன் அனால் அதனையும் விட தமிழ் நாட்டில் பின்னணி இசையில் இருந்து கட்சி பதிவு எடிட்டிங் சவுண்ட் மிக்ஸிங் பின்னணி இசை படத்தினுடே இழையோடும் பகட்டில்லாத நகைசுவை நடிப்பு என்று அனைத்து விதத்திலும் உலக சினிமா என்று sollikollum ரசனைக்கு ஒரு மாற்று கூட குறைவில்லாத ஒரே தமிழ் படமான ஆரண்ய காண்டத்தை திரையிட வைக்க கோரிக்கை விடலாம்.]]]
இந்தக் கோரிக்கையை அப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும்தான் முன் வைக்க வேண்டும். ரசிகர்களின் கோரிக்கைகள் எடுபடாது.. இது தனியார் விழா.. அரசு விழா என்றாலாவது தட்டிக் கேட்கலாம்..!
[[[ராஜ நடராஜன் said...
//அண்ணா விழா குழுவே படத்தை கேட்டு போடுவதாக இருந்தால் ஆரண்ய காண்டத்தை போடா வைக்க வேண்டும் .செங்கடல் படு பொருள் நயமாக தோன்றினாலும் அது நடுநிலையான படம் அல்ல அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதற்கு .//
ஆரண்யகாண்டம் படம் வெளியிடப்பட்டுள்ளதால் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த படம் என்ற உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் திரையிடப்படாத,மறுக்கப்பட்ட படத்தை நடுநிலையானதா இல்லையா என்ற உங்கள் விமர்சனம் தவறு.]]]
சரிதான் ஸார்..
ஆனால் செங்கடல் படமும் சிறந்த படம்தான். படம் ரிலீஸானவுடன் நீங்களே என் கருத்தை ஒத்துக் கொள்வீர்கள்..!
[[[Selvam Muniyandi said...
you lines are simply super super super. i written some tamil kavithai in my blog.]]]
அண்ணா.. கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரமுங்கோ.. மன்னிச்சு விட்ருங்கோண்ணா..!
[[[ILA(@)இளா said...
கலக்கல் பதிவுங்கோ..]]]
நன்றிங்கோ.. (ஆனா ஓட்டு மட்டும் போட்டுராதீங்க..)
என்னது அடுத்த திமுக ஆட்சியா? ஹேஹேஹே ஹோஹோஹோ ஹாஹாஹா! வந்துட்டாரு ஆம்பிளை குஷ்பு!
[[[ராஜரத்தினம் said...
என்னது அடுத்த திமுக ஆட்சியா? ஹேஹேஹே ஹோஹோஹோ ஹாஹாஹா! வந்துட்டாரு ஆம்பிளை குஷ்பு!]]]
என்னது ஆம்பளை குஷ்புவா..? ஹோ.. ஹோ.. ஹோ.. ஹா.. ஹா.. ஹா..!
ரொம்ப விபரமான பதிவு.
விவகாரங்கள் எனக்கு ரொம்பத் தொலைவு
//நம்ம பவர் ஸ்டார், விஐபி பாஸ் வாங்கி வைத்திருக்கிறாராம்// அப்ப உலகப் படத்தை எல்லாம் ஒண்ணு விடாம பார்த்துட்டு தன்னை வச்சு ரீமேக் பண்ண கிளம்பிடுவார்னு நினைக்கிறேன்...பேசாம அண்ண பவர் ஸ்டார் mission possible என்று பேர் வைத்து ஒரு நாலு படம் பண்ணலாம்...
[[[மாயன் : அகமும் புறமும் said...
//நம்ம பவர் ஸ்டார், விஐபி பாஸ் வாங்கி வைத்திருக்கிறாராம்//
அப்ப உலகப் படத்தை எல்லாம் ஒண்ணுவிடாம பார்த்துட்டு தன்னை வச்சு ரீமேக் பண்ண கிளம்பிடுவார்னு நினைக்கிறேன்... பேசாம அண்ண பவர் ஸ்டார் mission possible என்று பேர் வைத்து ஒரு நாலு படம் பண்ணலாம்.]]]
செய்யச் சொல்லிருவோம்..! அவரால முடியாதது எதுவுமில்லை.. பணம் குவிஞ்சு கிடக்குதாம்..!
நல்ல தொகுப்பு
http://anbudan-raja.blogspot.com
உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்
[[[Kamalakkannan c said...
நல்ல தொகுப்பு.]]]
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் ஸார்..!
[[[அன்புடன் Raja said...
http://anbudan-raja.blogspot.com
உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.]]]
வருகிறேன் ராஜா..!
நானும் திரைப்படவிழாவில் கலந்துகொண்டேன் நீங்க எழுதி இருக்குற எல்லாத்தையும் நானும் கவனித்தேன், ஆனால் எழுதல...
சரியாக, சிறப்பாக, அழகாக, நக்கலாக எழுதி இருக்கிங்க தோழமையே...!!!!
[[[-தாஸ்.., said...
நானும் திரைப்பட விழாவில் கலந்து கொண்டேன். நீங்க எழுதி இருக்குற எல்லாத்தையும் நானும் கவனித்தேன், ஆனால் எழுதல... சரியாக, சிறப்பாக, அழகாக, நக்கலாக எழுதி இருக்கிங்க தோழமையே!]]]
வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிகள் தோழரே..!
Post a Comment