2001-ல் கருணாநிதி நடு இரவில் கைது - நடந்த நிகழ்வுகள்..!

22-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புரட்சித் தலைவி, பொன்மனச்செல்வி, தங்கத் தாரகை, இந்தியாவின் இரும்பு மனுஷி, மனிதநேயமிக்க முதல்வர், அன்னை ஜெயலலிதாவின் 2-வது ஆட்சிக் காலத்தின் துவக்கத்திலேயே, 2001-ம் வருடம் ஜூன் 30-ம் தேதியன்று அதிகாலையில் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், முத்தமிழ்வித்தகர், தமிழாய்ந்த தமிழன், ஓய்வறியாத உழைப்பாளி, ஒப்பற்ற கலைஞன், கலையுலகின் வித்தகர், இரண்டாம் ராஜராஜசோழன், மனுநீதிச் சோழனின் நேரடி வாரிசு, டாக்டர் கலைஞர் என்னும் திருக்குவளை மு.கருணாநிதி மேம்பால ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டபோது நடந்த நிகழ்வுகளை ஜூனியர்விகடனும், நக்கீரனும் ஸ்பெஷல் காவரேஜ் செய்து கட்டுரைகளை வெளியிட்டிருந்தன.

பழசு என்றும் புதுசு என்னும் தலைப்பில் ஜூனியர்விகடன் அப்போது எழுதியதை இப்போது மீண்டும் பிரசுரித்துள்ளது.

தொடர்ந்து 4 இதழ்களில் வந்திருந்த செய்திகளைத் தொகுத்து ஒரே செய்திக் கட்டுரையாக்கி இங்கே கொடுத்துள்ளேன்.

கூடவே முரசொலியின் இணையத்தளத்தில் வைத்திருந்த நக்கீரன் இதழின் கட்டுரையையும் இதில் இணைத்துள்ளேன்.

ஸ்டாலின் வீட்டில் நடு இரவில் போலீஸ் நடந்து கொண்டதை விவரிக்கும் ஜூனியர் விகடனின் கட்டுரையும் இதில் இருக்கிறது.

கலைஞரின் கைதுக்கு மறுநாள் அவருடைய மாமியார்(ராஜாத்தியின் தாயார்) திடீரென்று மாரடைப்பால் இறந்து போனார். அது தொடர்பான ஜூனியர்விகடன் கட்டுரையும் உள்ளது.

கடைசியாக அன்றைய சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியும் இதில் உள்ளது.

அன்றைய தினம் முழுமையாக நடந்ததைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள், கடைசிவரையிலும் விடா முயற்சியுடனும், பொறுமையுடனும் படிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..!

இந்தக் கொடூரச் சம்பவத்தின் பாதியில் இருந்து நேரடியாக கவனித்ததினால் கிடைத்த எனது அனுபவத்தையும் அடுத்தப் பதிவில் தொகுத்து வழங்கவுள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..! சிரமம் பார்க்காமல் அதையும் காத்திருந்து படிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

நன்றி..!

இனி ஜூனியர்விகடன்..

ஜூன் 30... பொழுது விடிந்து சூரியன் உதிக்கும் நேரத்தில், கீழ்ப்பாக்கம் டெய்​லர்ஸ் ரோடு!
   
நீதிபதிகள் குவார்ட்டர்ஸில் பிரின்சிபல் செஷன்ஸ் ஜட்ஜ் அசோக்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் படை சூழ... தள்ளாடியபடி வெளியில் வந்த கலைஞ​ரிடம் சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. அருகில் நின்று இருந்த மகள் கனிமொழி வாய்விட்டுக் கதற, அவரை சமாதானப்படுத்திவிட்டு நம்மிடம் பேசினார் கலைஞர்.

''இரவு 2 மணி தாண்டி இருக்கும்... ஆலிவர் ரோட்டில் உள்ள என் வீட்டின் வெளிப்புறம் பெரிய வெடிச் சத்தம் கேட்டதுபோல் இருந்தது. திடுக்கிட்டு எழுந்தேன். என்னைச் சுற்றி 13 போலீஸ் அதிகாரிகள். ஏன் வந்தார்கள்... எப்படி வந்தார்கள் என்று புரிந்துகொள்ளும் முன்பே, 'நீங்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறீர்கள்... உடனே கிளம்புங்கள்!’ என்றார் காவலர்களுக்கு தலைமை தாங்கி வந்த போலீஸ் அதிகாரி சாரங்கன்.

லுங்கியில் இருந்த எனக்கு சட்டை மாட்டிக்கொள்ளக்கூட மிகக் குறைந்த அவகாசமே கொடுத்தார்கள். வேட்டை​யாட வந்த மிருகங்கள்போல என்னைச் சூழ்ந்துகொண்டு குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றார்கள். என் மீதும் மத்திய அமைச்சர் மாறன் மீதும் நடந்த தாக்குதல்களைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை...'' - கலைஞர் சொல்லி முடிப்பதற்குள், அவரைச் சுற்றி நின்ற போலீஸ் படை அந்த குவார்ட்டர்ஸைவிட்டு வெளியே நகரச் சொல்லி பிரஷர் கொடுக்க, ''தமிழக மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். தேர்தல் முடிவு வந்ததுமே, இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். இந்த சோதனைகள் எனக்குத் தூசு!'' என்றபடி கை கூப்பினார் கலைஞர்.

மீண்டும் ஆரம்பக் காட்சியில் இருந்து வருவோம்!


ஆலிவர் ரோடு வீட்டின் வாசலில் சந்தடி இல்லாமல் வந்து நின்ற போலீஸ் வண்டிகளில் இருந்து,  தபதபவென பூட்ஸ் கால்கள் குதித்து வீட்டைச் சூழ்ந்து நின்றன. போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவைத் தொடர்ந்து, ஒரு போலீஸ்காரர் துப்பாக்கியின் பின் கட்டையால் கலைஞர் வீட்டு கேட்டில் போட்டிருந்த பூட்டை ஓங்கி அடித்து உடைக்க, மடை திறந்த காக்கி வெள்ளமாக அத்தனை பேரும் உள்ளே பாய்ந்தார்கள்.

ராஜாத்தி அம்மாளும் கனிமொழியும் கேட்கக் கேட்கப் பதிலே சொல்லாமல், கலைஞர் உறங்கிக்கொண்டு இருந்த அறைக்குள் புகுந்தார்கள். அந்நேரம் விழித்து இருந்த கலைஞர், கைதுக்கான காரணங்களைக் கேட்டு வாக்குவாதம் தொடங்க, அதற்குள் மாறன் வீட்டுக்கும் ஸ்டாலின் வீட்டுக்கும் தகவல் பறந்தது.

வீட்டில் இருந்து மாறன் ஓடோடி வந்து சேர்ந்தபோது, கலைஞரை... கையையும் காலையும் பிடித்துத் தூக்கிக்கொண்டு இருந்தனர் போலீஸார். ''ஐயோ... ஐயோ...'' என்ற வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கலைஞர் கதறிக்கொண்டு இருந்தார். போலீஸ் இழுபறியில் கலைஞரின் மூக்குக் கண்ணாடி ஒரு பக்கம் எகிறி விழுந்தது. தடுக்க வந்த மாறனை குண்டுகட்டாகச் சுமந்தபடி வெளியே கொண்டு​வந்து வீசினார்கள். வாசலில் தரையில் படுத்தபடி தர்ணா செய்ய முயன்ற பரிதி இளம்​வழுதிக்கு இடுப்பில் பூட்ஸ் காலால் பலமான ஓர் உதை. துடித்துப் புரண்டு எழுந்து சுதாரிப்பதற்குள், கலைஞரை காரில் ஏற்றிக்கொண்டு போலீஸ் அணிவகுப்பு அரசினர் தோட்டத்தை நோக்கிப் பறந்தது.

அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகம்....

கடந்த ஆட்சியில் பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்த சண்முகசுந்தரம் பதறி அடித்துக்கொண்டு வர, அதற்குள் அரசினர் தோட்ட வளாகத்தின் எல்லா வாயில்களிலும் ராணுவ அணிவகுப்புபோல போலீஸ் வண்டிகள் திரண்டு நின்றன. அதையும் மீறி, சண்முகசுந்தரம் எப்படியோ உள்ளே நுழைந்துவிட, பத்திரிகையாளர்களை உள்ளேவிட மறுத்தது போலீஸ். 

மீறி உள்ளே ஓடிச் சென்ற சுமார் 30 பத்திரிகையாளர்கள் தடிகளால் காட்டுத்தனமாகத் தாக்கப்பட்டு, போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர். கண நேரத்தில் தாங்கள் கைது செய்யப்பட்டதை நம்பவே முடியாமல், ஆட்சிக்கு எதிரான கோஷங்களை நிருபர்கள் உரக்க எழுப்ப, அவர்களை சுமந்தபடி வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் நோக்கி வேன் பறந்தது.

அந்த நேரம் கணவர் அரவிந்தனுடன் வந்து சேர்ந்தார் கனிமொழி. ''எக்காரணம் கொண்டும் உங்களை உள்ளேவிட முடியாது!'' என்று அங்கே இருந்த டெபுடி கமிஷனர் சொல்ல, ''இது பொது வளாகம். இதற்குள் செல்லவிடாமல் என்னைத் தடுக்க, உங்களுக்கு ஏது உரிமை?'' என்று கனிமொழி வாதாடத் துவங்க, ''ஏய்... சொன்னா, மரியாதையாப் போயிடணும்...'' என்று அந்த அதிகாரி மட்டமான வார்த்தைகளில் இறங்க, வந்து சேர்ந்திருந்த நிருபர்களே திகைப்பில் உறைந்து போனார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் கனிமொழியின் தோளில் கை வைத்து அந்த அதிகாரி தள்ள, நிலைமை படுமோசம் என்று புரிந்துகொண்டவராக அவரது கணவர் அரவிந்தன், கனிமொழியை சமாதானப்படுத்தி ஓரமாக அழைத்துச் சென்றார். வெகு நேரக் கெஞ்சலுக்குப் பிறகு, ஆயிரம் விளக்கு உசேன் மற்றும் கனிமொழியை மட்டும் உள்ளே நுழைய அனுமதித்தது போலீஸ்.

சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கலைஞருடன் இருந்த சண்முகசுந்தரத்தை நாம் செல்போனில் தொடர்புகொள்ள, ''என்ன வழக்கு... எதற்காக கைது என்று சொல்ல மறுக்கிறார்கள். அடுத்து எங்கே கொண்டு செல்லப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை...'' என்றார் சண்முகசுந்தரம் குரல் கம்ம!

அதே சமயம், டி.ஆர்.பாலு எம்.பி-யுடன் ஒரு காரில் வந்த மாறனை அரசினர் தோட்டத்தின் பிரதான நுழைவாயிலில் தடுத்து நிறுத்தியது போலீஸ். வாயிலில் மறித்துப் போடப்பட்டிருந்த இரும்புத் தடுப்பை முட்டித் தூக்கி எறிந்தபடி மாறனின் கார் உள்ளே பறந்துவிட்டது. பிற்பாடு அவரை விரட்டிச் சென்ற போலீஸார், கலைஞரின் கண் எதிரேயே தாக்கித் தள்ளி இருக்கிறார்கள். சட்டை காலரைப் பிடித்து சுழற்றி அடித்தனர்.

கலைஞரை போலீஸ் படை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீதிபதி அசோக்குமார் வீட்டுக்குக் கொண்டுபோகிறார்கள் என்று தகவல் கிடைத்து, நிருபர்கள் அங்கே பறந்தனர். அங்கும் சாலையே தெரியாத அளவுக்குக் குவிந்துகிடந்த போலீஸார், நீதிபதியின் குடியிருப்புக்கு 100 அடி தூரத்திலேயே நிருபர்களைத் தடுத்து நிறுத்தினர். ''செய்தி சேகரிப்பது எங்கள் உரிமை!'' என்றபடி நிருபர்கள் முன்னேற, ''உங்களைத் தடுப்பது எங்கள் கடமை!'' என்று வக்கிரமாகச் சொன்ன ஒரு போலீஸ் அதிகாரி, லத்தி சார்ஜுக்கு உத்தரவு போட்டார்.

அவ்வளவுதான் ரணகளம் தொடங்கியது. சரமாரியாக போலீஸ் லத்திகளால் பின்னியெடுக்க... ரத்தம் பெருக்கெடுக்க... அங்குமிங்கும் அலைபாய்ந்த நிருபர்கள், ''ஆட்சி அராஜகம் ஒழிக!'' என்று கோஷம் போட்டபடி, தொடர்ந்து நீதிபதியின் வீட்டை நோக்கி முன்னேறினார்கள்.

சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு, கலைஞரை ஏற்றிக்​கொண்டு கார் வர, அதைத் தொடர்ந்து மாறன், மு.க.தமிழரசு ஆகி​யோர் வரிசையாக வந்தனர். காரை சில நிமிடம் வாசலி​லேயே நிறுத்தி கலைஞரை ஒரு படமாவது எடுத்துவிடலாம் என்று நிருபர்களும் டி.வி. கேமராக்காரர்களும் நெருக்கியடிக்க... யாருமே எதிர்பாராதது நடந்தது.

லேசாகத் தயங்கி நின்ற வாகன அணிவகுப்பு திடீரெனச் சீறலுடன் வேகம் எடுத்து சாலையில் நேராகப் பாய்ந்தது. கலைஞரை வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோகிறார்கள் என்று எப்படியோ தெரிந்து கொண்ட நிருபர்கள் கார்களிலும் டூவீலர்களிலும் பறந்தனர். அங்கே போய்ச் சேர்ந்தபோது, வேப்பேரி காவல்நிலையத்தின் உயர்ந்த கதவுகள் உள்ளே மூடப்பட்டு இருந்தன. (அதற்கு முந்தைய நாள்தான் 150-க்கும் மேற்பட்ட நிருபர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட கொடுமை நடந்த அதே இடம்!)

போலீஸ் ஸ்டேஷனை நெருங்க முயன்ற நிருபர்களுக்கு, அங்கேயும் காட்டுத்தனமான தாக்குதல் பரிசாகக் கிடைத்தது. விழுந்த அடிகளில் இரண்டு மூன்று கேமராக்கள் நொறுங்க, உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, கிடைத்த இண்டு இடுக்கில் எல்லாம் புகுந்து ஓடினார்கள் நிருபர்கள். அதில் பெண் நிருபர்களைக்கூட விடாமல்... அவர்கள் தரையில் தடுக்கி விழுந்தபோதும் லத்தியால் தாக்கித் தள்ளியது போலீஸ்.

''சிறையில் அடைக்கப்படும்வரை கலைஞரை யாரும் ஒரு புகைப்படம்கூட எடுத்துவிடக் கூடாது. அவருடன் யாரும் ஒரு வார்த்தைகூட பேசிவிடக் கூடாது. அதைக் கவனத்தில் கொள்ளுங்கள்'' என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனிடம் இருந்து வந்த உத்தரவுதான் இத்தனைக்கும் காரணம் என்று பிற்பாடுதான் புரிந்தது.

ஒரு வழியாக ஸ்டேஷனின் பக்கவாட்டு காம்பவுண்டு சுவரைத் தாண்டிக் குதித்து, இருட்டில் பதுங்கியபடி அந்தக் கட்டடத்தை நெருங்கினர் சில நிருபர்கள். அங்கே கண்ட காட்சியில் அவர்கள் ரத்தம் உறைந்தது. தொடர்ந்து உரத்த குரலில் கேள்விகள் கேட்ட முரசொலி மாறனின் சட்டையைப் பிடித்து கீழே தள்ளினார் ஒரு போலீஸ்காரர்.

இன்னொருவர் ஸ்டேஷனுக்குள் இருந்த நாற்காலியை அவரை நோக்கி எட்டி உதைக்க, மாறனின் காலில் சுளீரெனத் தாக்கியது அந்த நாற்காலி. இதனைத் தொடர்ந்து மாறன் வாய்விட்டு அலறியது ஸ்டேஷனுக்கு வெளியிலும் கேட்டது.

அரை மணி நேரம் உள்ளே கலைஞரை வைத்து இருந்தவர்கள், அப்போதும் கைதுக்கான காரணத்தைச் சொல்லவில்லை. மறுபடி அவரை நீதிபதி விட்டுக்கே கூட்டிக்கொண்டு கிளம்பினார்கள். கலைஞர் காரைத் தொடர்ந்து தன் காரில் கிளம்பப் போனார் மாறன். மின்னலெனப் பாய்ந்து சென்று அவர் காரில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு ஓடி மறைந்தார் ஒரு காவலர்.

ரத்தம் வடிந்த கால்களுடன் தள்ளாடியபடி வாசலுக்கு ஓடி வந்து அங்கு நின்று இருந்த ஒரு ஆட்டோவில் ஏறி அதை மாறன் கிளம்பச் சொல்ல, அதற்குள் சன் டி.வி-யின் கவரேஜ் கார் வந்து நிற்க... அதில் ஏறிக்கொண்டார்.

வேப்பேரி ஸ்டேஷனுக்குள் இருந்த கனிமொழியைத் திடீரென வெளியேவிட மறுத்தது போலீஸ். ஓர் அதிகாரியிடம் அவர் வாதாடத் துவங்க, அவரது கையைப் பிடித்து இழுத்தபடி உள்ளே சென்றார் அந்த அதிகாரி. அடுத்த சில நொடிகளில், கனிமொழி வீறிட்டு அலறும் சத்தம். அதைத் தொடர்ந்து விம்மி அழுதபடி அவரும் ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டார்...

நன்றி : ஜூனியர்விகடன்

பழசு இன்றும் புதுசு - நேற்றும் நமதே - 34: 4.7.01

வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறிய கலைஞரின் கார் மட்டும் நீதிபதியின் வீடு இருந்த குடியிருப்புக்குள் நுழைந்தது. அவரைப் பின் தொடர்ந்து நிருபர்கள் உள்ளே நுழைய முயல, அந்தக் குடியிருப்பின் கனத்த கேட்டை வேகமாக அடித்து மூடியது போலீஸ்.

அப்போது கேட்டின் இடுக்கில் கால்கள் சிக்கி ஒரு பெண் நிருபர் வாய்விட்டுக் கதற... அது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கேட்டை முரட்டுக் கரங்களால் அழுந்த மூடியபடியே இருந்தனர் போலீஸார். ஒட்டுமொத்த நிருபர்களும் ஒரு போலீஸ்காரரை இழுத்துச் சென்று, சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர். அந்தப் போலீஸ்காரரை மீட்க மறுபடி நிருபர்கள் மீது லத்தி சார்ஜ். ரத்தக் காயம்... சிதறி ஓட்டம்!

அப்போது உள்ளே கலைஞருடன் இருந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டோம்.

''சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியதில் 12 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் உண்டாக்கிவிட்டதாக, கலைஞர் மீது மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு புகார் கொடுத்திருக்கிறார். கலைஞர் தவிர, மேயர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி, பொன்முடி ஆகியோரும் இதில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்...'' என்று படபடப்பான குரலில் பேசிய சண்முகசுந்தரம், அடுத்தடுத்து நீதிபதி வீட்டுக்கு உள்ளே நடந்தவற்றை விவரித்துக்கொண்டே வந்தார்.

கலைஞருக்கு 'வர்டிகோ’ தொந்தரவு இருப்பதால் அவரால் தொடர்ந்து 10 நிமிடங்கள் நிற்பதுகூட இயலாத காரியம் என்று அவருடன் சென்ற அவரது குடும்ப டாக்டர் கோபால் எடுத்துச் சொல்லி இருக்கிறார். கழுத்து வலி, முதுகு வலி ஆகியவையும் கலைஞரை வாட்டுவதாக நீதிபதியிடம் சொன்னார்.

''அதற்காக பட்டு மெத்தையில் வைத்தா பராமரிக்க முடியும்?'' என்று பக்கத்திலேயே நின்றிருந்த போலீஸ் அதிகாரி கமென்ட் அடிக்க, துடித்துப்போய் அவரை ஒரு கணம் பார்த்தாராம் கலைஞர்.

தொடர்ந்து நடந்த வாக்குவாதங்களுக்குப் பிறகு ஜூலை 10-ம் தேதி வரை கலைஞரை ரிமாண்டில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி. குடும்ப டாக்டர் கோபால் தவிர, அரசு டாக்​டர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, கலைஞரின் உடல்நிலையை உடனடியாக சோதிக்க வேண்டும் என்றும், இதற்காக அவரை சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டார்.

இது நடந்து கொண்டு இருந்தபோதே அடுத்தடுத்து கார்கள் வெளியே வந்து நின்றன. தயாளு அம்மாள், செல்வி, மு.க. தமிழரசு மூவரும் முதலில் உள்ளே போனார்கள். அடுத்து ராஜாத்தி அம்மாள், கனிமொழி, அரவிந்தன் ஆகியோர் சென்றனர். கடைசியாக வந்து நின்ற காரில் இருந்து மாறன் இறங்கியபோது, ஒட்டு மொத்தக் கூட்டமும் நடுங்கிப்போனது.

நார் நாராகக் கிழிந்துபோயிருந்த வேட்டியை உயர்த்திப் பிடித்தபடி, உள்ளே இருந்த அண்டர்வேர் தெரிவதுபற்றிக்கூட உணரா​தவராக, தள்ளாட்ட நடை போட்டு இறங்கினார் மாறன். ''நான் வயசானவன்... ஹார்ட் பேஷன்ட்... அடிச்சிட்டாங்க... முடியலை... என்னால எதுவுமே முடியலை...'' என்று அவர் சொல்ல, குடியிருப்பின் கேட்​அருகே நின்றிருந்த துரை​முருகன் வாய்விட்டுக் கதறத் தொடங்​கிவிட்டார்.

''தலைவர் செருப்பை போட்​டுக்​கக்கூட அந்தப் பாவிங்க அவகாசம் கொடுக்கலை. இதோ நான் கொண்டாந்திருக்கேன்...'' என்றபடி வெண்ணிறச் செருப்பை மாறன் முன் துரைமுருகன் நீட்ட, அவர் சொல்வதைப் புரிந்து கொள்ளக்கூடத் திராணி இல்​லாதவராத, விழிகள் மேலே செருக நீதிபதியின் வீட்டை நோக்கி நடந்தார் மாறன்.

ரிமாண்ட் உத்தரவு போடப்​பட்டு, நீதிபதி வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார் கலைஞர். அவரது குடும்பத்துப் பெண்கள் அத்தனை பேரும் கண்ணீரும் கம்பலை​யுமாக தலைவிரி கோலமாக அவரைத் தொடர்ந்து வர, ஆறுதல் சொன்னபடியே காரில் ஏறப்​ போனார் கலைஞர்.

அடுத்த காட்சி சென்னைப் பொது மருத்துவமனையில்தான் இருக்கும் என்று கணக்குப் போட்டு நூற்றுக்கணக்கான தி.மு.க. தொண்டர்களும் பிரமுகர்​களும் அங்கே ஓடினர். சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தும் கலை​ஞரை போலீஸ் அங்கே கொண்டு வரவில்லை.

பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி மாஜிஸ்​திரேட் சொன்னதையும் மீறி, தங்களது கொடூரக் கண்ணாமூச்சி விளையாட்டின் அடுத்த கட்டமாக, கலைஞரை நேரடியாக சென்னை மத்தியச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

ஜெயில் வளாகத்தை நெருங்க முடியாதபடி மேலே இருந்த பாலத்திலேயே அத்தனை பேரும் தடுத்து நிறுத்தப்பட, அங்கே இருந்தே கேமராக்கள் ஜூம் செய்யப்பட்டன.

காருக்குள் இருந்து லுங்கியும் கிழிந்த சட்டையுமாக இறங்கிய கலைஞர் மெள்ளத் தலையை நிமிர்த்தி பாலத்தின் மேல் குவிந்துகிடந்த பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களைப் பார்த்து கையசைக்க... ''தலைவா! நீ யாருக்கு என்ன பாவம் செஞ்சே? போலீஸ்காரங்களுக்கு சம்பளத்தை ஏத்திக் கொடுத் தியே... அந்தப் பாவத்துக்காகத்தான் உன்னை வீட்டில் அடிஅடினு அடிச்சாங்களா தலைவா?'' என்று உரக்கக் கதறியபடியே மயங்கி விழுந்தார் ஒரு தி.மு.க. தொண்டர்.


சிறையின் முன்பு இருந்த சிமென்ட் தளத்தில் அப்படியே சப்பணமிட்டு அமர்ந்த கலைஞர் ஓங்கி உயர்ந்த சிறைக் கட்டடத்தை ஒரு தரம் நிமிர்ந்து பார்த்தார். குடும்ப டாக்டர் கோபாலும், கனிமொழியும் அடக்க மாட்டாமல் விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள். உடனடியாக சுதாரித்துக் கொண்ட கனிமொழி, மேலே நிமிர்ந்து பாலத்தின் மேலே இருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து, ''தலைவருக்கு சிறைச்சாலை பயம் இல்லை... ஆனால், நீதிபதி உத்தரவு போட்ட மருத்துவ வசதி எதுவும் சிறைச்சாலைக்குள் அவருக்குக் கிடைக்கப்போவது இல்லை. அவரைச் சிறையில் தள்ளினால் மறுபடி பார்க்க முடியுமா என்பதே சந்தேகம்தான்...'' என்று சொல்லிக் கதறினார்.

நீதி கேட்டு கலைஞர் அங்கேயே உண்ணாவிரதம் இருக்கப்போவதாகச் சொல்ல, ஒட்டு மொத்த போலீஸ் அதிகாரி​களும் அவரை பெருங்கூட்டமாகச் சூழ்ந்து கொண்டு மிரட்டும் குரலில் கைகளை ஆட்டி, ஏதோ சொன்னார்கள். கலைஞரும் பதிலுக்குக் கைகளை வீசி அவர்களுக்கு பதில் சொல்ல... இந்த வாக்குவாதம் சுமார் அரை மணி நேரம் நீண்டது. அதே சமயம் சிறையின் உள்ளே இருந்த ஒரு போலீஸ்காரர் ஃபைபர் சேர் ஒன்றை கலைஞர் அமர்​வதற்காக எடுத்து வர, பாய்ந்து சென்ற ஓர் அதிகாரி அந்தக் காவலரை அடிக்காத குறையாகப் பாய்ந்து, உள்ளே திருப்பி விரட்டினார்.

ஒருவழியாக காலை 7.50 மணிக்கு மத்திய சிறையின் கதவுகள் கலைஞரை உள்வாங்கிக் கொண்டபோது, பாலத்தின் உச்சியில் இருந்து ஒட்டுமொத்த ஜனமும் கதறித் தீர்த்தது.

வளாகம் எங்கும் கதறல் சத்தம்!

அதே சமயம் அங்கு வந்து சேர்ந்தார் ஸ்டாலின் மனைவி துர்கா. அவர் மகன் உதயநிதியும் மகள் செந்தாமரையும் இறங்​கினர். ''போட்டுட்டாங்களா... நிஜமாவே தலைவரை உள்ளே போட்டுட்டாங்களா?'' என்று நம்ப முடியாதவராக மறுபடி மறுபடி நிருபர்களிடம் கேட்டார் துர்கா.

''உங்கள் வீட்டுக்குள்ளும் போலீஸ் புகுந்ததாமே...?'' என்று நாம் கேட்க, ''ஆமாம். மேயரைத் தேடிக்கிட்டு வர்றதா சொன்னாங்க. அவர் வீட்டில் இல்லைனு சொன்னபோதும், எங்களைத் தள்ளிவிட்டுட்டு உள்ளே புகுந்து சூறையாடினாங்க. வாசல் கேட்டில் தொடங்கி, உள்ளே இருக்கிற அறைகள்வரை கைக்குக் கிடைத்ததை எல்லாம் உடைச்சுத் தள்ளினாங்க. பொம்பளைனுகூடப் பார்க்காம திரும்பத் திரும்பக் கையைப் பிடித்து இழுத்து. 'உன் புருஷன் எங்கேனு சொல்லு!?’னு என்னை சித்ரவதை பண்ணாங்க...'' என்று துர்கா சொல்ல, மகள் செந்தாமரை, ''இவ்வளவு பத்திரிகைகாரங்க நாட்டில் இருக்கீங்களே... இந்தக் கொடுமையை யாருமே தட்டிக் கேட்க மாட்டீங்களா?'' என்று தாயின் தோளில் சரிந்து விம்மினார்.

ஸ்டாலின் மகன் உதயநிதி நம்மிடம், ''எதுக்குக் கைது... வாரன்ட் இருக்கா? என்பது போன்ற எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை. 'உங்கப்பன் பயந்து ஓடிட்டானா?’னு எகத்தாளமா என்னைக் கேட்டாங்க. இப்ப எங்க அப்பா எங்கே இருக்கார்னே தெரியலை...'' என்று உதயநிதி குமுறி அழுதார்.

சென்னைக்கு உள்ளேயே ஸ்டாலின் மடக்கிக் கைது செய்யப்பட்டதாக செல்போனில் ஒரு தகவல் வந்து சேர்ந்தது. அனால், அது உண்மை இல்லை என்பது பின்னர் தெரிந்தது. காலை 8.30 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு வந்த ஸ்டாலின் அங்கு வந்த இல.கணேசனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். ''அப்பாவை அராஜகமாக அடித்து, இழுத்துக் கைது செய்து கொண்டு போயிருக்கிறார்கள். எங்கள் குடும்பத்துப் பெண்களிடம் போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டனர். எல்லா வெறியாட்டத்துக்கும் காரணமானவர்களைத் தண்டிக்காமல், எனது அரசியல் வாழ்க்கை ஓயாது. நானும் இன்னும் சிறிது நேரத்தில் நீதிபதி முன்பு  சரண்டர் ஆகப் போகிறேன்...'' எனப் படபடப்புடன்  நிருபர்களிடம் சொல்லி முடித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் கோசி.மணி, நேரு ஆகியோர் கைது... முன்னாள் அமைச்சர்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்துக் கைதாவார்கள் என்ற செய்தி சிறை வளாகத்துக்கு வெளியே இருந்த கலைஞர் மகள் செல்விக்கு வந்து சேர, ''அண்ணே... இந்த நாட்டுல என்னண்ணே நடக்குது? இப்படி தலைகால் தெரியாம ஆட்டம் போடுறாங்களே... அவங்க உருப்படுவாங்களா?'' என்று வீரபாண்டியாரை நோக்கிக் கதறலுடன் கேட்க, செல்விக்கு பதில் சொல்ல வந்த வீரபாண்டியாருக்கு வாய் கோணிக்கொண்டது. வெடித்துக் கிளம்பிய அழுகையை அடக்க முடியாமல் நடு ரோட்டில் அப்படியே உட்கார்ந்துவிட்டார் ஆறுமுகம்.

கலைஞர், மாறன், ஸ்டாலின் ஆகியோர் கைதைத் தொடர்ந்து, மாநிலம் எங்கும் பதற்றம் பரவிக் கொண்டு இருக்கிறது!

- நமது நிருபர்கள்

படங்கள் : கே.ராஜசேகரன்
 

நன்றி : ஜூனியர்விகடன்
 
கலைஞர் கைது - நக்கீரனின் கட்டுரை..!

நள்ளிவு கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகியிருந்தது. போலீஸ் வாகனங்கள் சரசரவென கோபாலபுரத்துக்குள் நுழைந்தன. ஒரு தீவிரவாதியை பிடிக்கப் போவதுபோல் கோபாலபுரம் பகுதியையே `சீல்’ பண்ணி விட்டு, கலைஞர் வீட்டுக்குள் தடதடவென நுழைந்தன பூட்ஸ் கால்கள். வீட்டிலிருந்தவர்கள் மிரண்டு போகிறார்கள். போலீசாரின் கண்கள், கலைஞர் எங்கே என ஊடுருவிப் பார்த்தன. அவர் அங்கு இல்லை என்பதை அறிந்த அடுத்த நிமிடமே, காவல்துறை வாகனங்கள், ஆலிவர் ரோடு இல்லம் நோக்கி சீறின.

இரவு 2.20 மணி.

ஏழு வாகனங்கள் வரிசையாக வந்து நிற்பதையும் அதிலிருந்து போலீஸ்காரர்கள் படபடவென இறங்குவதையும் பார்த்த கலைஞரின் கார் டிரைவர், ``என்ன?’’ என்று கேட்ட மாத்திரத்தில் அவரை அடித்து கீழே தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தது போலீஸ். போனதும் அவர்கள் செய்த முதல் வேலை, கீழ்த்தளத்தில் இருந்த டெலிபோனை அடித்து நொறுக்கியதுதான்.

அடுத்து முதல் மாடிக்கு சென்ற போலீஸ் படை, பூட்டியிருந்த கதவை உடைத்துத் தள்ளி உள்ளே நுழைந்தது. மாடியிலிருந்த பெட்ரூம் கதவைத் திறந்து, 12 போலீசார் திமுதிமுவென நுழைந்தனர். தூக்கத்திலிருந்த கலைஞர், பதற்றத்துடன் விழித்தார். அவரைச் சுற்றிலும் காக்கிச் சட்டைகள். கலைஞர் சாதாரண கைலி அணிந்திருந்தார். அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் இரவு நேர ஆடை உடுத்தியிருந்தார். படுக்கை அறைவரை ஊடுருவியிருக்கும் போலீசாரைக் கண்டதும், ``என்ன... என்ன...?’’ எனக் கொஞ்சம் பதற்றம் கலந்த குரலில் கலைஞர் கேட்டார்.

``உங்களைக் கைது செய்கிறோம்!’’

``வாரண்ட் இருக்கிறதா?’’

``அதெல்லாம் இல்லை... எழுந்திருங்க’’ என்று போலீஸ் அதிகாரி சொன்னதும் கலைஞர் முகத்தில் அதிர்ச்சி. உடனடியாகப் போனை எடுத்தார். அது `சாகடிக்கப்பட்டிருந்தது.’ உடனே செல்போனை எடுத்த கலைஞர், போலீசாரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு முரசொலி மாறனைத் தொடர்பு கொண்டார். தன்னைக் கைது செய்ய போலீஸ் வந்திருப்பது பற்றித் தெரிவித்தார். உடனடியாக புறப்படுமாறு போலீசார் பரபரத்தனர். கைலியை மாற்றிக் கொண்டு வேட்டி அணிந்து வருகிறேன் என்றார் கலைஞர். `கூடாது’ என்றார் போலீஸ் அதிகாரி. செருப்பு அணிந்து கொள்கிறேன் என்றார் கலைஞர். அதற்கும், `கூடாது’ என்ற பதில்தான் வந்தது. `பாத்ரூமிற்காவது போயிட்டு வரலாமா?’’ என்றார் கலைஞர். அதுவும் கூடாது என்று போலீசார் சொன்னதுதான் கெடுபிடியின் உச்சம். ``அங்கிருந்து நான் என்ன தப்பித்தா போய்விடுவேன்?’’ என்று கலைஞர் கேட்டார். ``கிளம்புங்க’’ என்று போலீசார் மீண்டும் அவரசப்படுத்தினர்.

அப்போது ஆலிவர் ரோடு இல்லத்திற்கு மாறன் வந்தார் ``கைது செய்வதாக சொல்கிறீர்களே? வாரண்ட் இருக்கிறதா?’’ என்று அவரும் கேட்டார். அப்போதும் போலீஸ் அதிகாரிகள், கலைஞரை கிளம்பச் சொல்லி வலுக்கட்டாயப்படுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ``ஏன்யா இப்படி தள்ளுறீங்க?’’ என கேட்டபடி, போலீஸ் அதிகாரிகளை முரசொலி மாறன் விலக்கியும் தள்ளியும் விட, ``அரெஸ்ட் ஹிம்’’ என்ற உத்தரவு ஓங்கி ஒலித்தது. 


அதை தொடர்ந்து, கலைஞரின் வயதைக்கூட பொருட்படுத்தாமல் அவரைப் பிடித்தும், இழுத்தும் அலேக்காகத் தூக்கி கைது நடவடிக்கையை மேற்கொண்டது காவல் துறை. கலைஞர் மீது போலீசின் கரம் பட்டதும் குடும்பத்தினர் பதறிப்போய் கதறி அழுதனர். அழுகுரல்களுக்கிடையே கலைஞரை கைது செய்து வாகனத்தில் ஏற்றியது போலீஸ்.

இரவு 3.15 மணி.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள சி.பி.சி.ஜ.டி. அலுவலகத்திற்கு கலைஞரைக் கொண்டு வந்தனர். அங்கே ஒரு தனி அறையில் அவரை உட்கார வைத்தனர். கலைஞரை படம் எடுக்கவும் அவரது கருத்தைக் கேட்கவும் அரசினர் தோட்ட வளாகத்தில் திரண்டிருந்த பத்திரிகையாளர்களை போலீசார் விரட்டியடித்தனர்.  அப்போது, கலைஞரைப் பார்ப்பதற்காக மத்திய அமைச்சர்கள் மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் காரில் வந்தனர். அவர்களது காரை தடுப்புக் கம்பிகள் போட்டு மறித்தனர்.

காரிலிருந்து இறங்கிய டி.ஆர். பாலு, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈ.டுபட்டார். ``நான் மத்திய அமைச்சர். உள்ளே செல்ல என்னை அனுமதித்தாக வேண்டும். இது என்ன எமெர்ஜென்சி காலம் என்றா நினைத்துக் கொண்டீர்கள்?’’ என சத்தம் போட்டார் பாலு. அவரையும் போலீசார் கீழே தள்ளினர். `இனி பொறுப்பதில்லை’ என்பது போல் மத்திய அமைச்சர் மாறனின் கார், தடுப்புக் கம்பிகளை உடைத்து நொறுக்கிவிட்டு முன்னேறியது.

சி.பி.சி.ஜ.டி அலுவலகத்தில் சுமார் 1 மணிநேரம் கலைஞர் வைக்கப்பட்டிருந்தார். 4.10 மணியளவில் கெடுபிடியைக் கொஞ்சம் தளர்த்திய போலீசார், பத்திரிகையாளர்கள் உள்ளே செல்ல அனுமதித்தனர். ஆனால், பத்திரிகையாளர்கள் உள்ளே நுழைந்தபோது, போலீஸ் வாகனங்கள் மூன்று சீறிப் பறந்தன. அதில்தான் கலைஞர் அழைத்துச் செல்லப்படுகிறார் என்பதை அறிந்து கொண்ட பத்திரிகையாளர்கள் பின் தொடர்ந்தனர். ஒரு காரில் கலைஞர் ஏற்றப்பட்டிருந்தார். அவருக்கு பக்கத்தில் மாறனும் பரிதி இளம்வழுதியும் உட்கார்ந்திருந்தனர்.

மத்திய சென்னை ஜாயிண்ட் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில், எஸ்.பி.க்கள் கிறிஸ்டோபர் நெல்சன், சாரங்கன் ஆகியோர் அடங்கிய வாகன அணி வரிசை தொடர்ந்து அந்த வாகனங்களைப் பின்தொடர்ந்து, ஒரு டாடா சஃபாரியில் கலைஞர் குடும்பத்தினர் சென்றனர். தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், மு.க. தமிழரசு, கனிமொழி, செல்வி, மாறனின் மனைவி, மகள் ஆகியோர் அந்த சியாராவில் இருந்தனர். இருளின் அமைதியை கிழித்துக்கொண்டு போலீஸ் வாகனங்கள் பறந்தன.

கீழ்பாக்கம் டவர் பிளாக் குடியிருப்பில் உள்ள நீதிபதி அசோக்குமார் வீட்டில்தான் கலைஞர் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார் எனத் தெரிந்ததால் பத்திரிகையாளர்கள் அந்தக் குடியிருப்பின் முன் திரண்டிருந்தனர். அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸ் படை பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தது. சாலையில் பத்திரிகையாளர்கள் காத்திருந்த நிலையில், கலைஞரை ஏற்றி வந்த காரும் அதைத் தொடர்ந்து வந்த வாகனங்களும் நீதிபதி வீட்டுக்கு செல்லாமல் கெல்லீஸ் நோக்கி சென்றது. போலீசாரின் திசைதிருப்பும் நடவடிக்கையை அறிந்த பத்திரிகையாளர்கள் உடனடியாக அதனைப் பின் தொடர்ந்தனர்.

வேப்பேரி காவல்நிலையத்திற்குத்தான் கலைஞரைக் கொண்டு செல்கிறார்கள் என்று கணித்த பத்திரிகையாளர்களின் வாகனங்களும் சீறின. வேப்பேரி காவல்நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அங்குள்ள பாலத்தின் கீழ்ப் பகுதி வழியாகத்தான் செல்லவேண்டும். ஆனால் போலீஸ் வாகனங்கள், பத்திரிகையாளர்களைத் தவிர்ப்பதற்காக பாலத்தின் மேலே ஏறி ராங் ரூட்டில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றது.
கலைஞரை அழைத்து வந்த காரின் கதவு திறக்கப்பட்டது. முதலில் பார்வைக்குத் தென்பட்டவர் மாறன்தான். அவரது மூக்குக் கண்ணாடி உடைந்திருந்தது. வேட்டி பாதிக்குமேல் கிழிந்து போயிருந்தது. பக்கத்தில் கலைஞர் உட்கார்ந்திருந்தார். அவரையடுத்து பரிதி உட்கார்ந்திருந்தார்.

அப்போது, கலைஞர் குடும்பத்தினரின் கார், ஸ்டேஷனுக்குள் வந்தது. ``மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்துப் போவதா சொல்லிட்டு ஏன் இங்கே அழைச்சிட்டு வந்தீங்க?’’ எனக் கலைஞர் குடும்பத்து பெண்கள் போலீசிடம் கேட்டனர். கனிமொழி இது பற்றி போலீசாரிடம் வாதிட, ``விமன் போலீஸ்....’’ எனக் குரல் கொடுத்த ஜாயிண்ட் கமிஷனர் ஜார்ஜ், ``அரெஸ்ட் தெம்...’’ என உத்தரவிட்டார். உடனே பெண் காவலர்கள் கனிமொழியை நெருங்க, அவரது கணவர் அரவிந்தன் குறுக்கிட்டு, `ஏன் கைது செய்கிறீர்கள்?’’ என்றார். போலீசார் தயங்கி நின்றனர்.

அப்போது எஸ்.பி. கிறிஸ்டோபர் நெல்சன், முரசொலி மாறனிடம் சென்று ``உங்களையும் கைது செய்கிறோம். அரெஸ்ட் ஆயிடுங்க’’ என்றதும் ``வாரண்ட் இருக்கா?’’ எனக் கேட்ட மாறன், ``மத்திய அமைச்சர் எனத் தெரிந்திருந்தும் எதற்கு என்னை தாக்கினீர்கள்?’’ என்றபடி, கிழிந்து தொங்கிய தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு லிஸ்டை எடுத்தார். ஆபத்தான கட்டத்திற்கு ஆளானால் தனக்கு என்னென்ன ட்ரீட்மெண்ட் தரப்படவேண்டும் என்பதை விளக்கும் சீட்டு அது: அப்பல்லோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்தது முதல் அந்த லிஸ்டை பாக்கெட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸ்.

எஸ்.பி.யோ அந்த லிஸ்டை பார்க்கக்கூட ஆர்வம் காட்டாமல், மாறனைத் தூக்கிச் செல்ல உத்தரவிட்டார். காரிலிருந்து மாறனை பிடித்து இழுத்த போலீசார் அவரைக் குண்டுகட்டாக உயரே தூக்கி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பதறிப்போன பரிதி, போலீசாருடன் மல்லுக்கட்டியபடி மாறனுடன் சென்றார். மாறன் ஏறத்தாழ மயக்க நிலைக்குச் சென்றுவிட `அய்யோ.. அம்மா...’ என்று அவரது குடும்பத்தினரின் அழுகுரல்கள் காவல்நிலையம் முழுக்க எதிரொலித்தது. மாறனை ஒரு பெஞ்ச்சில் படுக்க வைத்து ஆசுவாசப்படுத்தினார் பரிதி.

மாறனையும் கலைஞர் குடும்பத்தினரையும் கலைஞருடன் வராதபடி பிரிக்க வேண்டும் என்பதுதான் போலீசின் திட்டம். அது நடந்துவிட்டதால் கலைஞரை மாஜிஸ்திரேட்டின் வீட்டிற்கு கொண்டு சென்றனர். போகும்போது, கலைஞர் குடும்பத்தினர் வந்த காரின் சாவியை பூட்டி எடுத்துச் சென்றுவிட்டது போலீஸ்.

அதிகாலை 5.10 மணி.

டவர் பிளாக்கில் உள்ள மாஜிஸ்திரேட் அசோக்குமாரின் வீட்டிற்கு கலைஞர் அழைத்துச் செல்லப்பட்டார். முதல் தளத்தில் மாஜிஸ்திரேட்டின் வீடு இருந்ததால் லிஃப்ட் பயன்படுத்தப்பட்டது. வீட்டில் தயாராக இருந்தார் அசோக்குமார். அவருடன் முன்னாள் அட்வகேட் ஜெனரல் வெங்கடபதி, முன்னாள் அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சி.பி.சி.ஜ.டி. அதிகாரி ஆகியோர் காத்திருந்தனர்.

அவர்களுடன் அங்கு இருந்த மற்றொரு பிரமுகர், கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ஏ. நம்பியார். மாஜிஸ்திரேட் வீட்டுக்குள் கலைஞர் வந்ததும் முன்னாள் அட்வகேட் ஜெனரல் எழுந்து இடம் தந்தார். இருக்கையில் உட்கார்ந்த கலைஞர், நம்பியாரைப் பார்த்து கொஞ்சம் அசந்து போனார். ``உங்களை எப்போது அரெஸ்ட் செய்தார்கள்?’’ என்று கலைஞர் கேட்க, ``2 மணிக்கு’’ என பதில் வந்தது நம்பியாரிடமிருந்து.

``சென்னை நகருக்கு பாலங்கள் கட்டியதில் 12 கோடி ஊழல் செய்தது தொடர்பாக இவர்களைக் கைது செய்தோம்’’ என மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்த சி.பி.சி.ஜ.டி. அதிகாரி, அதற்கான முதல் தகவல் அறிக்கையையும் ரிமாண்ட் ரிப்போர்டையும் கொடுத்தார். ``டாக்குமெண்ட் எவிடென்ஸ் இருக்கா?’’ என மாஜிஸ்திரேட் கேட்க, ``இருக்கு... அதை இங்கே எடுத்து வரக் கூடிய அளவில் இல்லை. பெரிய பெரிய கட்டுகளாக இருக்கின்றன’’ என்றார்.

``எஃப்.ஜ.ஆர். எப்ப போட்டீங்க?’’ என மறுபடி கேள்வி எழுப்பினார் மாஜிஸ்திரேட் அசோக்குமார் ``மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு நேற்றுதான்(ஜூன்,29) புகார் கொடுத்தார். அதன் பின்தான் எஃப்.ஜ.ஆர். போட்டோம்..’’ இது அதிகாரி.

கேள்விகள் தொடர்ந்தன.

``12 கோடிக்கு ஊழலா? எந்த அளவுக்கு புலனாய்வு செய்துள்ளீர்கள்?’’

``ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும் ஒவ்வொரு கட்டத்திலும் விலையை ஏற்றி ஊழல் செய்யப்பட்டுள்ளது.’’

``வேறு யார், யார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது?’’

``ஏ-1 மு.க. ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, கோ.சி. மணி, நம்பியார், பொன்முடி, ஏ.கே. ஜெகதீசன், ராஜாசங்கர், ஆர்.எஸ். ஸ்ரீதர்’’ - என்று பட்டியலை சொன்னார் அதிகாரி.

அதன்பின், நம்பியார் பக்கம் திரும்பிய மாஜிஸ்திரேட், ``உங்களை அரெஸ்ட் செய்யும்போது முறையாக நடந்து கொண்டார்களா? உங்கள் மீதான குற்றச்சாட்டு பற்றி என்ன சொல்கிறீர்கள்?’’ எனக் கேட்டார்.

``பாலம் கட்டுவது என்பது தலைமைச் செயலாளரின் கீழ் வராது. அது சம்பந்தமான ஃபைலை நான் பார்க்கவில்லை. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. 5 பக்கங்களில் கடைசி 2 பாராவில் மட்டும்தான் என் பெயர் எழுதப்பட்டுள்ளது என் பெட்ரூமுக்கு வந்து அரெஸ்ட் செய்தார்கள். நான் மத்திய அரசுப் பணியில் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றியவன். தப்பித்து ஒடக் கூடியவனல்ல. நான் சமீபத்தில் முதுகுப் பகுதியில் ஆபரேஷன் செய்து கொண்டேன். என்னை சிறைக்கு அனுப்பினால் சிகிச்சையளிக்க ஒரு நர்ஸ் தேவை’’ என்றார் நம்பியார்.

மாஜிஸ்திரேட்டின் கண்கள் கலைஞர் பக்கம் திரும்பின. தன்னை போலீசார் கைது செய்த விதம் குறித்து விளக்கத் தொடங்கினார் கலைஞர். ``நான் எழுத்து வேலைகளை முடித்துவிட்டு, புத்தகங்கள் படித்துவிட்டு இரவு 12 மணிக்கு உறங்கப் போனேன். ஆழ்ந்த உறக்கம். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. நானும் என் மனைவியும் அறையில் இருந்தோம். அந்த இடத்திற்கு வந்த போலீசார் என்னை குண்டு கட்டாகத் தூக்கி இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். செருப்பு அணிந்து கொள்ளவோ வேட்டி மாற்றிக்கொள்ளவோ கூட போலீசார் என்னை அனுமதிக்கவில்லை.’’ என்று கலைஞர் சொன்னபோது, அவரது சட்டை கிழிக்கப்பட்டிருப்பதை மாஜிஸ்திரேட் பார்த்தார்.

கலைஞரின் வழக்கறிஞர்கள் ராஜாவும், சண்முகசுந்தரமும் நீதிபதியிடம் சில விளக்கங்களை அளித்தனர். ``புலனாய்வே தொடங்கப்படாத ஒரு வழக்கிற்காக நள்ளிரவில் கைது செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவரது வயதையும் உடல்நிலையையும் கருத உடனடியாக அவரை பெயிலில் விடவேண்டும்’’ என்றனர். இதற்கு முன்னுதாரணமாக உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் காட்டினார் சண்முகசுந்தரம்.

மாஜிஸ்திரேட்டிடம் கலைஞர் விளக்கிக் கொண்டிருந்தபோது, வேப்பேரி காவல் நிலையத்திலிருந்து ஒரு வாடகை ஆட்டோவில் ஏறி, டவர் பிளாக்கிற்கு வந்தார் மாறன். அவரது உடல் ரொம்பவும் தளர்ந்திருந்தது. மாஜிஸ்திரேட் வீட்டிற்குள் மாறனும் கலைஞர் குடும்பத்தினரும் அனுமதிக்கப்பட்டனர்.

சுமார் இரண்டு மணி நேர இடைவெளிக்குப்பின் குடும்பத்தினரைப் பார்த்த கலைஞர் நெகிழ்ந்து போனார். ``என்னை 2 நாள் ஜெயிலில் வைக்கணும்ங்கிறதுக்காகத் தானே சனிக்கிழமையில் கைது பண்ணியிருக்காங்க. என்ன பெரிய ஜெயில்? அந்த சசிகலாவே சர்வசாதாரணமா இருந்துட்டு வருது’’ என்று அந்த சூழ்நிலையிலும் குடும்பத்தினருக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொன்னார்.

மாஜிஸ்திரேட்டிடம் மாறன், ``பெரியார், அண்ணா போன்ற பெரிய தலைவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன் நிறுத்தப்பட்டு, அங்கேயே பெயில் பெற்ற வரலாறு உண்டு’’ என்று தெரிவித்ததுடன், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் விளக்கினார். அத்துடன், இதை நீங்கள் அவசியம் குறித்துக் கொள்ள வேண்டும் என்று சொன்ன மாறன், “One police officer. Mr. George. அவர் பெயரை நீங்க ரிமாண்ட் ரிப்போர்ட்டில் நோட் பண்ணனும். you arrest that bloddy fellow என்று என்னைப் பார்த்துச் சொன்னார். நான் இதை நாடாளுமன்றத்தில் உரிமை பிரச்சினையாக கொண்டு வருவேன்” என்றார். மாஜிஸ்திரேட்டும் குறித்துக் கொண்டார்.

அதன்பின், ``இது ஹாலிடே கோர்ட். இங்கே பெயில் தரமுடியாது. ரெகுலர் கோர்ட்டில்தான் பெயில் தரமுடியும்’’ என்றார். அப்போது, கலைஞர் தன் உடல்நலம் குறித்து விளக்கினார். ``சமீபகாலமாக சட்டமன்றத்திலும் பொது இடங்களிலும் நான் உட்கார்ந்துதான் பேசுகிறேன். ஒரு நிமிடத்திற்கு மேல் என்னால் நிற்க முடியாது’’ என்றார். அவரை சிறைக்கு அனுப்புவதாக இருந்தால் உரிய மருத்துவர்கள் வேண்டும் என்று வலியுறுத்தினார் டாக்டராக உள்ள மாறனின் மகள். முரசொலி மாறன், “சசிகலாவே மாஜிஸ்திரேட் வீட்டிலிருந்து நேராக அப்பல்லோவுக்குப் போகுது. கலைஞருக்கும் அதுபோல் சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணுங்க..” என்றார்.

``என்னை ரெகுலராக செக் செய்யும் டாக்டர் கோபாலையே அனுப்புங்க’’ என்றார் கலைஞர். “அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். டாக்டர் கோபாலே அங்கு வந்து சிகிச்சை தரட்டும்” என்றார் மாஜிஸ்திரேட் அசோக்குமார். கலைஞர் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், மாறனின் மகள், “பொது மருத்துவமனையில் தண்ணீர் வசதியே இல்லை. அங்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும்?’’ எனக் கேட்டார். “அரசு மருத்துவமனைக்கு கலைஞரைக் கொண்டு போனால் அவரைக் கொன்னு போட்டுடுவாங்க’’ என் பதற்றத்துடன் தெரிவித்தனர் குடும்பத்தினர்.

அதன் பின் பேசிய மாஜிஸ்திரேட் அசோக்குமார், கலைஞரிடம், “நீங்கள் முன்னாள் முதல்வர், தற்போதைய எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில் உங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க உத்தரவிடுகிறேன்’’ என்றார். மருத்துவமனைக்கு அனுப்பப்படலாம் அல்லது பெயில் கிடைக்கும் என சிறிது நம்பிக்கை மட்டுமே கொண்டிருந்த கலைஞருக்கு, மாஜிஸ்திரேட்டின் இந்த முடிவு பெரிய அதிர்வை ஏற்படுத்தவில்லை.

“பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடல்நிலையை பரிசோதித்து, டாக்டர்கள் சம்மதித்த பின்னரே சிறைக்கு கொண்டு செல்லவேண்டும். இவரைக் கைது செய்யும்போது போலீசார் நடந்து கொண்ட முறை கடுமையாக இருந்திருக்கிறது. இனி எக்காரணம் கொண்டும் இவர் மீது கை வைக்கக் கூடாது’’ என ரிமாண்ட் மெமோவில் மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார். ஜூலை 10-ம் தேதி வரை ரிமாண்ட் செய்வதாக உத்தரவிட்டார். ``நான் இதுதான் செய்ய முடியும். இதற்கு மேல் ஏதாவது செய்தால் அதற்கு ஆயிரம் உள்நோக்கங்கள் கற்பிப்பார்கள்’’ என்று கலைஞரிடம் தனிப்பட்ட முறையில் மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.

அங்கிருந்து புறப்படும்போது நம்பியாரைப் பார்த்த கலைஞர், `நீங்க ரிடையரானதிலிருந்து என்னை பார்க்கவே இல்லை. இப்ப பார்க்க வச்சிட்டாங்க பார்த்தீங்களா?’ என்று சொல்ல, “சி.எம்.முக்கு நிறைய வேலை இருக்கும்னுதான் நான் வரலை. தப்பா நினைக்க வேணாம்.’’ என்று நம்பியார் தெரிவித்தார். “நான் காரணமாகத்தான் சொன்னேன்’’ என்றார் கலைஞர். நம்பியார் தலைமைச் செயலாளராக இருந்தபோதுதான் ஜெ. மீது வழக்குகள் போடப்பட்டன. இதனால்தான் பழிக்கு பழி வாங்கும் லிஸ்டில் நம்பியாரும் சேர்க்கப்பட்டார்.

சிறைக்குச் செல்வதற்கு கலைஞர் தயாரான நிலையில், நமது இணையாசிரியரிடம், “எங்க ஆட்சியின்போது போலீஸ் அதிகாரிகள் பற்றி நீங்க மோசமா எழுதும்போது, ஏன் இப்படி தப்பா எழுதுறீங்கன்னு கேட்டேன். இப்பதான் போலீஸ் அதிகாரிகள் எப்படிப்பட்டவங்கன்னு புரியுது!’’ என்று கண்கலங்கச் சொன்னார். ``நேர்மைக்கு இதுதான் பரிசு’’ என்று வருத்தம் தொணிக்கும் குரலில் சொன்னார் நம்பியார்.

காலை 6.20 மணி.

கலைஞரை ஒரு காரில் அழைத்துச் சென்றனர் போலீசார். அவருடன் டாக்டர் கோபாலும் மகள் கனிமொழியும் சென்றனர். பொது மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மருத்துவரின் ஆலோசனைப்படியே கலைஞரை சிறைக்கு கொண்டு செல்லவேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்ததால், கலைஞரை எதிர்பார்த்து மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால், போலீசார் நேராக சென்னை மத்திய சிறைச்சாலைக்கு கலைஞரின் காரை கொண்டு சென்றனர்.

நீதிபதியின் உத்தரவை மதிக்காத போலீசாரின் போக்கைக் கண்டித்து சிறைச்சாலை வாசலிலேயே தரையில் அமர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார் கலைஞர். சிறைச்சாலையை ஒட்டியுள்ள பாலத்திலிருந்து இதனைப் பார்த்த கட்சிக்காரர்களும் பொதுமக்களும், `அடப்பாவிகளா?’ என குரல் எழுப்பியது நெஞ்சை குலுக்கியது. அமைதியாக அரைமணி நேரம் தன் எதிர்ப்பை வெளிப்படுத்திய கலைஞர், காலை 7 மணியளவில் சிறைச்சாலைக்குள் நுழைந்தார். அடக்குமுறைகளைத் தாங்கிய ஒரு கிழட்டுச் சிங்கம் கம்பீரமாக கூண்டுக்குள் நுழைவது போல் இருந்தது அந்த காட்சி.

நன்றி : நக்கீரன்

 
ஸ்டாலின் வீட்டில் போலீஸ்

30-ந் தேதி, இரவு 1.10 மணி! சென்னை மேயர் மு.க. ஸ்டாலினை தேடி, அவரது வேளச்சேரி வீட்டுக்கு விரைந்தார்கள் ஒரு பெண் போலீஸ் உட்பட 4 போலீஸ்காரர்கள்! ஏரியவே வெகு நிசப்தமாக இருந்தது! ஜீப்பை விட்டு இறங்கிய போலீஸ்காரர்கள், ‘கேட்’ அருகே இருந்த வாட்ச்மேனிடம், "ஸ்டாலின் இருக்காரா?" என்றனர். "அய்யா, வெளியூர் போயிருக்கிறார்?" என்று வாட்ச்மேன் படபடப்புடன் பேச, "அப்படின்னா... ‘கேட்’டை திறந்து விடுங்க; நாங்க செக் பண்ணிக்கிறோம்" என்ற போலீஸ்காரர்கள் வலுக்கட்டாயமாக வாட்ச்மேனின் தோளில் கை வைத்து இழுக்க... "லேடிஸ் மட்டும்தான் உள்ளே இருக்காங்க; என்னால் எதுவும் செய்ய முடியாதுங்க அய்யா!" என்று கெஞ்சினார் வாட்ச்மேன்!  சரி! காலையில நாங்க பார்த்துக்கிறோம்; இந்த லட்டரை வீட்டுல கொடுத்திடுங்க"" என்று மிரட்டலுடன் போலீஸ் பேச... பிடிவாதமாக வாங்க மறுத்துவிட்டார் வாட்ச்மேன்.

உடனே அங்கிருந்து விலகிய போலீஸ்காரர்கள் அடுத்த 15 நிமிடத்தில், ஒரு பெரும் போலீஸ் படையுடன் மீண்டும் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டனர்! இந்த முறை வாட்ச்மேனிடம் எதையும் பேசாத போலீஸ் படை, ‘கேட்’ ஏறி திடுதிடுவென உள்ளே குதித்தது. சிலர் ‘கேட்’டை திறக்க முற்பட்டு... பிறகு வாட்ச்மேனிடம் சாவியை பிடுங்கி கேட்டை திறந்தனர்.

உள்ளே நுழைந்து மெயின் கதவை உடைக்க முயற்சி செய்தும், படபடவென தட்டியும் ஆர்ப்பாட்டம் செய்ய... கதவை திறந்து வெளியே வந்தார் ஸ்டாலின் மனைவி துர்கா! கதவு திறந்ததும் ஸ்டாலின் இருக்காரா?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த போலீஸ்காரர்கள் அங்கும் இங்கும் அறைகளுக்குள் ஓடினார்கள். 

அவர் வெளியூர் போயிருக்கார்; அவர் இல்லாத நேரத்தில் இப்படி அர்த்த ராத்திரியில் ரகளை செய்யறது உங்களுக்கே நல்லாயிருக்க?" என்று ஸ்டாலின் மனைவி சத்தம் போட, போலீஸ்காரங்ககிட்டே கை நீட்டி பேசறீங்களா? உள்ளே வெச்சுக்கிட்டு நாடகம் ஆடாதீங்க! என்று சொல்லிய போலீஸ்காரர்கள், சிலர் அவரது கையைப் பிடித்து இழுத்து தள்ளினார்கள். இந்த களேபரத்தை பார்த்துக்கொண்டிருந்த ஸ்டாலின் மகள், போலீஸ்காரர்களை தடுக்க முயன்ற போது அவரையும் பிடித்து கீழே தள்ளினார்கள் பெண் போலீஸார்!

நேரம் கிடைக்கும்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூர் சென்று வருவது ஸ்டாலின் வழக்கமாம். இம்முறையும் பெங்களூர் விரைந்து கொண்டிருந்த ஸ்டாலினுக்கு கலைஞர் கைது செய்யப்பட்டிருப்பதும், நீங்கள் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலும் சொல்லப்பட... உடனடியாக சென்னை திரும்பினார். போலீஸ்காரர்கள் தனது வீட்டில் நடந்து கொண்ட அட்டூழியத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மனைவி துர்காவுக்கும், மகளுக்கும் ஆறுதல் கூறிவிட்டு கட்சிக்காரர்களுடன் கிளம்பிய, ஸ்டாலின் கோபாலபுரம் வீட்டு விரைந்தார்.

தனது இளைஞரணியினரை அமைதியாக இருக்க அடிக்கடி கட்சிகாரர்களை தொடர்பு கொண்டு பேசிய ஸ்டாலின், போலீஸிடம் சிக்கினால் தனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என கருதியவர், கீழ்பாக்கம், டெய்லர்ஸ் சாலையில் இருந்த மாவட்ட செசன்ஸ் நீதிபதி அசோக்குமாரிடம் சரணடைய விரைவாக வந்தார். போலீஸ் படையும் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதியை சந்திப்பதற்கு முன்பு, நம்மிடம் பேசிய ஸ்டாலின், "அந்த அம்மா ஆட்சியில் நடந்த ஊழல்களை நாங்க ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறோம். அதுக்கு பழிவாங்கவே எங்க மீது வழக்கு, கைதுன்னு போடுறாங்க! இதை நாங்க சட்டப்படி, தைர்யமா சந்திப்போம்! மூட்டு, கால் வலி, இடுப்பு வலின்னு போய் படுத்துக்க மாட்டோம்!" என்றவரிடம்  "உங்களை சி.பி.சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனரா?" என்றபோது  "யாரும் கைது செய்யவில்லை. நானே சரணடைய வந்துள்ளேன். ஏற்கனவே, என் மீது வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டபோது, நானே முன் வந்து கோர்ட்டில் ஆஜராகி அதை சந்தித்தேன். என் மடியில் கனமில்லை; அதனால் கோர்ட்டில் ஆஜரானேன். இப்போது என்னை யாரும் கைது செய்யவில்லை. நானே சரணடைய வந்திருக்கிறேன்!" என்று கூறிவிட்டு நீதிபதியை சந்திக்க மாடிபடி ஏறினார் பதட்டத்துடன்.

நீதிபதி அசோக்குமார் முன்பு ஆஜரான ஸ்டாலின் போலீஸ்காரர்கள் தனது வீட்டில் நடந்துகொண்ட அநாகரிகமான நடவடிக்கையை கூறிவிட்டு, "என்னை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள் அதனால் நானே சரணடைய வந்திருக்கிறேன்" என்றதை கேட்டுக் கொண்ட நீதிபதி, ஸ்டாலின் வக்கீல் ராஜஇளங்கோ, நீட்டிய சரண்டர் பெட்டிஷனை வாங்கிக் கொண்டார்.

"வாரண்ட் நோட்டீஸ் கொண்டு வந்திருக்கீங்களா?" என்று நீதிபதி கேட்க, "எங்களிடம் இல்லை; சி.பி.சி.ஐ.டி.யினரிடம்தான் இருக்கிறது. அரைமணி நேரத்தில் கொண்டு வந்து விடுகிறோம்!" என்றவர், சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு ஸ்டாலின் இங்கு இருப்பதாக தகவல் அனுப்பினார்.

அதன் பின்பு நீதிபதியிடம் பேசிய வக்கீல் ராஜ இளங்கோ, "சென்னை மத்திய சிறையில் அடைக்க நீங்கள் தயவு செய்து உத்திரவிட வேண்டும்!" என்று கேட்க, அதற்கு தனக்கு ‘பவர்’ இல்லை என்று கூறிய அசோக்குமார், "இது பற்றி ஜெயில் அத்தாரிட்டியிடம்தான் நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும்" என்றார்.

"சென்னையிலே இருக்க வேண்டி நீங்கள் சிபாரிசு செய்யுங்கள்" என்று மீண்டும் ராஜ இளங்கோ மன்றாடியதும், "எவ்வித ரீசனும் இல்லாமல் எதுவும் என்னால் செய்ய இயலாது" என மறுத்தபோது... சென்னை சென்ட்ரல் ஜெயிலில் இருக்க வேண்டிய அவசியம் காரணத்தை தனி கோரிக்கையாக எழுதி கொடுத்தார் வழக்கறிஞர்.

இந்த மனுவில், சென்னை மேயராகவும், ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும், தி.மு.க.வின் இளைஞர் அணியின் தலைவராகவும் ஸ்டாலின் இருக்கிறார். சென்னையை தவிர வேறு சிறைகளில் தனக்கு பாதுகாப்பு கிடையாது என்றும், சென்னை எம்.எல்.ஏ.வாக இருப்பதாலும் எனது உறவினர்கள் பலரும் சென்னையிலேயே இருப்பதாலும் சென்னை மத்திய சிறையில் இருக்கவே ஸ்டாலின் நினைக்கிறார். அதனால், அவரின் உயிர் பாதுகாப்பு கருதி சென்னையில் இருக்க உத்திரவிட வேண்டுகிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் ஏற்றுக் கொண்டு குறிப்பு எழுதிய அசோக்குமார் ஸ்டாலினை 15 நாள் ரிமாண்டில் வைக்க உத்திரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடமிருந்து ஒன்றரை மணி நேரமாக வாரண்ட் ஆர்டர் வராததால் நீதிபதி வீட்டிலேயே அமர்ந்திருந்தார் ஸ்டாலின்.

அப்போது வக்கீல் இளங்கோ, பெயில் பெட்டிஷனை போட முயற்சித்தபோது, "சனி, ஞாயிறு என்பதால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. திங்கள்கிழமை அப்ளை செய்யுங்கள். இந்த விடுமுறை நாளில் பொறுமையாக அவர் மீது கூறப்பட்டுள்ள வழக்கை படித்து தெரிந்து கொண்டு பெயில் மூவ் பண்ணுங்களேன்; இப்போ ஏன் அவசரம்?" என்றார் நீதிபதி அசோக்குமார்.

இதற்கிடையே கிடைத்த சின்ன இடைவெளியில் ஸ்டாலினிடம், "உங்க மீது என்ன வழக்கு என்பது தெரியுமா?" என்று நாம் கேட்டபோது, "தெரியாது! எந்த வழக்காக இருந்தாலும் சட்டப்படி சந்திப்பேன்" என்று கூறிவிட்டு மௌனமாகிவிட்டார் ஸ்டாலின்.

சென்னை நகரில் கட்டப்பட்ட 11 பாலங்களில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த ஒரு வழக்கிற்காக 120(இ) (கூட்டுசதி), 420 (மோசடி), 13(1); (2) (லஞ்ச ஒழிப்பு), 409 (அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது) 167 (பொது ஊழியராக இருந்து கொண்டு குற்றம் செய்வது) என்கிற ஆறு செக்ஷன்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது!

10.50-க்கு வந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஸ்டாலினை கைது செய்து கீழே கொண்டு வந்தனர். "உங்க காரில் வருகிறீர்களா? எங்க வேனில் ஏறிக் கொள்கிறீர்களா?"" என்று போலீஸார் கேட்க, "போலீஸ் வேனிலே வருகிறேன்" என்று ஸ்டாலின் ஏறிக் கொள்ள திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் ஜெ.யின் அராஜக ஆட்சிக்கு எதிராக கோஷங்கள் போட்டனர்.  வேன், மத்திய சிறைச்சாலை நோக்கி விரைந்தது!

ஸ்டாலினை மதுரை சிறைச்சாலையில் அடையுங்கள் என்று சிறை அதிகாரிக்கு வந்த உத்தரவின் பேரில் ஸ்டாலின் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

- நன்றி : ஜூனியர்விகடன்

 
ராஜாத்தி அம்மாளின் தாயார் திடீர் மரணம்..!

ஆலிவர் சாலையில் சற்று உள்வாங்கி இருக்கிறது அந்த வீடு. அடுத்தடுத்த இரண்டு அதிகாலைகளில் இறுக்கமான இரு சம்பவங்களை அந்த வீடு எதிர்கொண்டதற்கான அத்தனை அடை​யாளங்களும் அங்கே இருப்பவர்கள் முகங்களில் பிரதி பலிக்கின்றன.

சனிக்கிழமை அதிகாலை கலைஞர் கைது செய்யப்பட, அந்த அதிர்ச்சி தாள முடியாமல் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் தாய் (மாமியார்) சிவபாக்கியத்தம்மாள் ஞாயிறன்று இறந்துபோனார். 

''நான் நம்பியிருந்தவங்க எல்லாம் இப்ப என் பக்கத்தில் இல்லையே...'' என்று தன் தாயார் உடலுக்கு அருகே உட்கார்ந்து ஈனமான குரலில் முனங்கிக்கொண்டு இருந்தார் ராஜாத்தி அம்மாள்.

அருகிலேயே கண்ணீர் சிந்தியபடி அவர் மகள் கனிமொழி. வீட்டுக்கு வெளியே உணர்ச்சிப் பிழம்புகளாக தி.மு.க. தொண்டர்கள். பார்வையாளர்களின் வருகை அந்த வீட்டின் இறுக்கத்தை சற்றே தளர்த்த, வந்தவர்களிடம் ஒருசில வார்த்தைகள் பேசுகிறார் கனிமொழி.

நமது அனுதாபத்தை வெளிப்படுத்தி​னோம். ஆற்ற மாட்டாமல் பேச ஆரம்​பித்தார் கனிமொழி...

''அன்னிக்கு இரவில் கெடுபிடியா அப்பாவை அரெஸ்ட் பண்ணிட்டுப் போனதை, பாட்டி பார்த்துட்டு இருந்தாங்க. பாட்டி ஏற்கெனவே இதய நோயாளி. தவிர முதுமையின் விளிம்பில் இருந்தவங்க.

அப்பாவைக் கைது செஞ்சப்புறம், பாட்டி ரொம்ப சோர்வா இருந்தாங்க. வீட்டில் எல்லா​ருமே போலீஸ், சிறைனு அலைய... பாட்டி வீட்டுக்குள்ளேயே இருந்துட்டு தன்னோட சோகத்தை உள்ளுக்குள்ளேயே வெச்சிருந்தாங்க. சனிக்கிழமை ராத்திரி தூங்கப் போனவங்கதான்... தூக்கத்திலேயே மாரடைப்பு வந்து உயிர் பிரிந்துபோனது.

அப்பா வீட்டுக்கு வந்துட்டார்னா, மரியாதை காரணமா பாட்டி எதிர்லயே வர மாட்டங்க. ஏதாவது ஒரு ரூம்ல இருந்துப்பாங்க. அப்பா வெளியே போனப்புறம்தான் வெளியே வருவாங்க. சில சமயங்களில், 'என்னம்மா உன் பாட்டியைக் காணோம்?’னு கேட்டு அப்பாவே போய் அவங்ககிட்ட நலம் விசாரிப்பாரு. தன் கண் முன்னே கம்பீரமாக நடமாடியவரை இவ்வளவு கீழ்த்தரமா நடத்திட்டாங்களேனு உள்ளுக்குள்ளேயே குமைஞ்சு​போய்த்தான் பாட்டி உயிரைவிட்டு இருக்கணும்...''

- சொல்லும்போதே கனிமொழியின் கண்களில் நீர் எட்டிப் பார்க்கிறது. அதைச் சமாளித்தவராகத் தொடர்கிறார்...

''அப்பா அரெஸ்ட் ஆன பிறகு, அவரை ஜெயிலில் அடைக்கிறதுக்கு முன் அவரோடு காரில் போய்ட்டு இருந்தேன். 'என்னம்மா ரொம்ப அழுதுட்டியா, கவலைப்படாதம்மா’னு எனக்குத் திரும்பத் திரும்ப ஆறுதல் சொன்னார். ஏதாவது மாற்றுத் துணி இருக்கா... இல்லை, நான் போய் கொண்டுவரவா?’னு அப்பாகிட்டே கேட்டேன். 'ரெண்டு சட்டை வெச்சிருக்கேம்மா. ரெண்டு வேஷ்டியும் எடுத்துட்டேன். நாலு துண்டு வெச்சிருக்கேன். இது போதும், வலது கைதான் கொஞ்சம் வீக்கமா இருக்கு. வீட்டுல இருந்த அயோடக்ஸையும் பாக்கெட்ல வெச்சிருக்கேன்’.. அப்படினு நிதானமாப் பேசின அப்பாவைப் பார்த்தபோது, எனக்கு பழைய நினைவுகள் நிழலாடத் துவங்கின.

நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது பல முறை அப்பா சிறைக்குப் போயிருக்கார். அவர் சிறை சென்றதற்கான காரணங்கள் அப்போது எனக்குப் புரிந்தது இல்லை. ஆனால், அந்தச் சந்தர்ப்பங்களில் அப்பாவின் சிரித்த முகம் இன்னும் எனக்கு நினைவிருக்கு.

பள்ளிக்கூடத்துக்குப் போய்ட்டுத் திரும்ப வந்தா, 'அப்பாவை சிறையில் போட்டு இருக்காங்கம்மா’னு என் அம்மா சொன்ன சந்தர்ப்பங்கள் உண்டு. அப்பல்லாம் சிறைன்னா ஒரு பிக்னிக் மாதிரி எனக்குத் தோணும். சிறைக்குப் போனா, அப்பாவைப் பார்க்கலாம். ஸ்கூலுக்கு கட் அடிக்கலாம் என்ற ஓர் இனம்புரியாத குதூகலம்தான் அந்தப் பள்ளி வயதில் என்னுள்ளே எழும்.

எனக்கு நினைவு தெரிந்து, உலக விஷயங்கள் தெரிந்து, அரசியல் புரிந்து பக்குவப்பட்டதற்குப் பின்தான் நான் சின்ன வயதில் அனுபவித்த குதூகலம் எவ்வளவு மடத்தனமானதுன்னு புரிஞ்சுது.

இந்த முறை அப்பாவை சிறையில் போட்டதையும் அதுக்கான காரணத்தையும் என்னால் ஜீரணிக்க முடியலை. அன்னிக்கு நடு ராத்திரி தொடங்கி, பொழுது விடியறதுக்குள் போலீஸ் நடந்துகொண்ட விதத்தை எல்லாம் பார்க்கும்போது, ஒரு கைதுன்னா... இவ்வளவு கோரமாக்கூட இருக்குமான்னு அதிர்ந்துபோனேன்.

இன்றுகூட பாட்டியின் உடலை அப்பா வராமல் எடுக்க சம்மதிக்க மாட்டேன் என்று அம்மா புலம்பியபோதும்கூட, நாங்கள் அவரை சமாதானப்படுத்தினோம். வக்கீல் மூலம் 'பரோல்’ வாங்க முயற்சி செய்தபோதும் ஏக அலைக்கழிப்பு. அதுக்குள் அப்பாவே 'எனக்கு வெளியில் வர சம்மதம் இல்லை. எனக்காக யாரிடமும் கெஞ்ச வேண்டாம்’னு சொல்லிட்டாராம்.

என்னோட கவலை எல்லாம் அப்பாவோட உடல்நிலையைப்​பற்றித்தான். அவருக்குத் தொடர்ச்​சியாக இருந்து வந்த கைவலியை நிரந்தரமாக் குணமாக்க ஃபிஸியோ​தெரபி செய்து கொண்டிருந்தார். அரசியல் பரபரப்பு, தேர்தல் சமயங்​களில்கூட தனது ஃபிஸியோதெரபி பயிற்சியை அவர் கைவிடலை. அந்த அளவுக்குக் கை வலி அவரை வாட்டியது. கைதுக்கு இரண்டு நாள் முன்புதான் பயிற்சியை முடிச்சார். 'இப்போ நிறைய எழுத முடியுதும்மா... கை வலி இல்லை’னு குழந்தை மாதிரி சிரிச்சுட்டு சொன்னார். அந்தக் கையைப் பிடிச்சு போலீஸ் தூக்கிய வேகத்தில் அப்பா எந்த அளவுக்குத் துடிச்சிருப்பார்னு புரியுது. இப்போ சிறையில் அப்பாவின் கைகள் வீங்கி இருக்குனு சொன்னாங்க. சின்ன ரூம்ல குறுகிய மர பெஞ்சில்தான் படுத்துத் தூங்கறாராம்...''

அதற்கு மேல் தொடர முடியாமல் தன் அம்மாவின் அருகில் போய் அமர்ந்து அவர் தோளில் சாய்ந்து​கொண்டார் கனிமொழி. தலை கவிழ்ந்தபடி இருந்த அவரை, அங்கு வந்த தயாளு அம்மாளும் அவர் மகள் செல்வியும் பற்றியெழுப்பினர்.

உடனே தயாளு அம்மாளின் தோளில் சாய்ந்தபடி அழத் துவங்கி​விட்டார் கனிமொழி. இன்னொரு புறம், தன் தாயார் மறைவு குறித்து விவரங்களை செல்வியிடம் விளக்க ஆரம்பித்தார் ராஜாத்தி அம்மாள்.

மதியம் ஆலிவர் சாலை இல்லத்துக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், மத்திய மந்திரிகள் சுக்தேவ்சிங் தின்ஸா, வி.கே.மல்ஹோத்ரா போன்ற தலைவர்கள் வந்தனர். சிவபாக்கியத்தம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, கலைஞர் கைது அமளி நடந்த அறையைப் பார்வையிட்டனர்.


மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்​ணனுடன் சேர்ந்து மாடியில் இருந்த அந்த அறைக்குச் சென்றனர். தி.மு.க. மாநாடு ஒன்றில் கலைஞருக்கு அவரது தாயார் படம் பொறித்த நினைவுக் கேடயத்தை வழங்கி இருந்தார்கள். கலைஞர் போற்றிப் பாதுகாத்த அந்தக் கேடயத்தை வீட்டுக்குள் வந்த போலீஸார் தூக்கி வீசியதாகச் சொல்லி அதைக் காட்ட... விழுந்து கிடந்த கேடயத்தை எடுத்துப் பார்த்தார் ஜார்ஜ்.

இது டிராயிங் ரூம், இதைத் தாண்டினால் கலைஞரின் பெட்ரூம்... 'அங்கே செல்வது நாகரிகம் அல்ல. இந்த அறையைப் பார்த்தாலே, போலீஸின் அத்துமீறல் தெரிகிறது’ என்று ஃபெர்னாண்டஸ் சொல்ல... திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வான உசேன். ''பரவாயில்லை சார்... தலைவரின் பெட்ரூமுக்குள்ளும் நீங்க போய் பார்த்தால்தான், டெல்லியில் தெளிவாக விளக்க முடியும்!'' என்றார்.

அதற்குள் கனிமொழியும் அங்கு வந்துவிட, அவரே அந்த அறைக்குள் அனைவரையும் கூட்டிச் சென்று அங்கே நிகழ்ந்த சில விஷயங்களைச் சொன்னார். இடையிடையே, முரசொலி மாறனின் மகளும் நடந்த சம்பவங்களைப் பற்றி ஃபெர்னாண்டஸிடம் சொன்னார்.

தன் அப்பாவின் உடல்நிலை, போலீஸ் நடந்துகொண்ட விதம்பற்றி எல்லாம் கனிமொழி எடுத்துரைக்க, சிறு தாளில் அவற்றைக் குறித்துக்கொண்ட ஃபெர்னாண்டஸ். தன்னுடன் வந்திருந்த இருவரிடமும் சிறிது நேரம் தனியே பேசினார். பிறகு அவர்களை ராஜாத்தி அம்​மாளிடம் அழைத்துச் சென்றார் பி.ஜே.பி-யின் இல.கணேசன்.

''பெண் என்றும் பாராமல் இவரது கையில் லத்தியால் அடித்துள்ளனர்'' என்று கணேசன் சொல்ல, ராஜாத்தி அம்மாளின் இடது கை காயப்பட்டு இருப்பதைப் பார்த்துக் குறித்துக்கொண்டார்கள். நெம்பித் திறக்கப்பட்டு இருந்த கதவின் தாழ்ப்பாளையும் பார்த்துக் குறித்துக்கொண்டனர்.

இந்தக் குழுவுடன் வந்த திருநாவுக்கரசும், டாக்டர் கிருஷ்ணசாமியும் கலைஞர் கைது செய்தியைத் தாங்கி, ஞாயிறு அன்று வந்திருந்த தமிழ்ப் பத்திரிகைகளைக் கொடுத்து, அதில் இருந்த விவரங்களை விளக்கினார்கள். அவற்றைத் தனது ஃபைலில் வைத்தபடி, ''இப்படிப்பட்ட அவமானச் செயல்கள் எல்லாம்கூட நடக்குமா? வேதனையாகவும் திகைப்பாகவும் இருக்கிறது!'' என்று அதிர்ச்சியுடன் கிளம்பினார் ஃபெர்னாண்டஸ்!

அரவிந்தனே ஆட்டோ பிடித்து...

ஆலிவர் சாலை வீட்டுக்குள் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான தூதுக் குழு நுழைந்தபோது, ஜெயா டி.வி. கேமராமேனும், அவரது உதவியாளர் ஒருவரும் மற்ற பத்திரிகையாளர்களோடு சேர்ந்து நுழைந்தனர். யாரோ ஒருவர் பேச்சுவாக்கில் அவர்களை அடையாளம் காட்டி, ''ஜெயா டி.வி'' என்று சொல்லிவிட... அவ்வளவுதான்!

அங்கே இருந்த தி.மு.க. தொண்டர்கள் அந்த இருவரையும் வீட்டைவிட்டு வெளியே தள்ளிக் கொண்டுபோய், சாலையில் வைத்துத் துவைத்தெடுக்க ஆரம்பித்தனர். அவர்களிடம் இருந்த கேமராவை வாங்கி, அதில் இருந்த காஸெட்டையும் பிடுங்கிக்கொண்டனர். அந்த இருவரும் அடி தாங்காமல் துவண்டு போக, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த சில தி.மு.க. வி.ஐ.பி-கள் தொண்டர்களிடம் இருந்து இருவரையும் மீட்டனர்.

கனிமொழியின் கணவர் அரவிந்தன், தொண்டர்களைப் பார்த்து, ''விட்டுடுங்கப்பா, அவங்களுக்கு என்ன தெரியும்? அவங்க கடமையை செய்ய வந்திருக்காங்க...'' என அட்வைஸ் கொடுக்க, தொண்டர்கள் கூட்டம் விலகியது. ஜெயா டி.வி. ஊழியர்கள் இருவரையும் அரவிந்தனே ஒரு ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தார்.

இதேபோல் தமிழக உளவுத் துறையைச் சேர்ந்த ஒருவரையும் அடையாளம் கண்டு தி.மு.க-வினர் துரத்த... அவரையும் காப்பாற்றி அனுப்பி வைத்தனர் தி.மு.க. வி.ஐ.பி-கள்!
 
நன்றி : ஜூனியர்விகடன்

 
சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனின் பேட்டி

அடுத்து டெல்லி என்ன நடவடிக்கை எடுக்குமோ?’ என்று தமிழகமே பரபரப்பின் உச்சத்தில் இருந்த ஜூலை 2-ம் தேதி மத்தியானம்... சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் தனது அலுவலக அறையில் ரொம்ப கூலாக இருந்தார். அவரிடம் நாம் கேள்விகளை முன் வைத்தோம்!

 ''கலைஞரைக் கைது செய்யும் முன், எப்படித் திட்டமிட்டீர்கள்?''

''சி.பி.சி.ஐ.டி-யில் இரண்டரை வருஷங்கள் வேலை பார்த்த அனுபவம் எனக்குக் கை கொடுத்தது. ஜூன் 29-ம் தேதி இரவு, குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகளை மட்டும் அழைத்து, 'இன்னிக்கு நள்ளிரவு ஸ்பெஷல் ஆபரேஷன் இருக்கு’ என்று சொல்லித் தயார்படுத்தினேன். போலீஸ் பட்டாளத்தையும் அசெம்பிள் செய்தேன்.

போலீஸ் வாகனங்கள் போதாது என்று 60 தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து, அவற்றிலும் போலீஸ் என்று எழுதி ஒட்டி, மாநகர் முழுக்க ரோந்துப் பணியில் ஓடவிட்டேன். நள்ளிரவு 1 மணிக்கு ஆபரேஷன் துவங்க சில நிமிடங்கள் முன்புதான், போலீஸ் அதிகாரிகளுக்கு, அவர்கள் யார் யாரைக் கைது செய்யப் போகிறார்கள் என்பதை விளக்கினேன். அவர்களும் கனகச்சிதமாக நடத்தி முடித்தார்கள்.''

''இப்படி ஒரு நள்ளிரவு நேர அதிரடி தேவையா? அது இப்போது மிகப் பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறதே..?''

''பொதுவாகவே வி.வி.ஐ.பி-களை நள்ளிரவில் கைது செய்வதுதான் சரி. சட்டம்-ஒழுங்குப் பிரச்னை கள் இருக்காது. பதற்றம் உண்டாக்கக்கூடிய சக்திகளும் அப்போது உஷாராகிவிடாது. மளமளவென்று கைது செய்து, சம்பந்தப்பட்டவரை சிறைக்குள் அடைத்துவிட முடியும். பாலம் ஊழல் கேஸ் என்பது சி.பி.சி.ஐ.டி. போலீஸின் விசாரணைக்குள் உள்ள வழக்கு. கைது செய்ய வேண்டியதும் அவர்கள்தான். அவர்களுக்கென்று பெரிய போலீஸ் படை கிடையாது என்பதால், மாநகர போலீஸில் இருந்து நாங்கள் அவர்களுக்கு உதவப் போனோம். சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகளைப் பாதுகாக்க வேண்டியதும் எங்கள் கடமை அல்லவா? அதான், திட்டமிட்டு அந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தோம்!''


''அந்த இரவில் ஆலிவர் ரோடு வீட்டில் நடந்ததுபற்றி நீங்கள் சொல்வது என்ன..?''

''நள்ளிரவு 1.30 மணிக்கு ஆலிவர் ரோடு வீட்டுக்குள் போலீஸ் நுழைந்தது. வாசலில் சுமார் ஒன்றரை மணி நேரம் போலீஸாரைக் காக்கவைத்துத்தான் உள்ளே அனுமதித்தனர்.''

''நீங்கள் காட்டிய வீடியோவிலேயே கருணாநிதியை ஒரு கிரிமினல் குற்றவாளி போல் இழுத்துச் செல்லும் காட்சி வருகிறதே..?''

''முன்னாள் முதல்வரான அவரை நாங்கள் அப்படி நடத்த நினைப்போமா? சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் போய் பெட் ரூமில் இருந்த கருணாநிதியிடம், 'பாலம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறீர்கள்...’ என்று சொன்னபோது, 'அப்படியா? ஸ்டாலின்தானே பாலத்தைக் கட்டினார்?’ என்று தமாஷ் பண்ணி இருக்கிறார். கைது விஷயத்தைச் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார். பாத்ரூமுக்குப் போய் இருக்கிறார். பாத்ரூம் செல்கிற வழியில் நின்றிருந்த ஆபாஷ் குமார் ஐ.பி.எஸ்-ஸிடம், 'என்னங்க... நீங்களும் உள்ளே வர்றீங்களா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டுப் போய் வந்திருக்கிறார்.

ஆக, ரொம்ப ஸ்மூத்தாகத்தான் கருணாநிதி ஒத்துழைப்பு தந்தார். பெட்ரூமில் இருந்த அந்த விநாடி முதல் அவர் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியின் கஸ்டடிக்கு வந்துவிட்டதாகவே சட்டப்படி அர்த்தம். அவரைப் பத்திரமாக கோர்ட்டில் ஒப்படைப்பதுவரையில் சிறு கீறலோ, காயமோ, எதுவும் அவர் உடம்பில் ஏற்பட்டுவிடக் கூடாது. அந்தக் கவனத்தோடுதான் அதிகாரிகள் செயல்பட்டு இருக்கிறார்கள்.''

''கருணாநிதி வீட்டுக் கதவு தாழ்ப்பாளை, துப்பாக்கிக் கட்டையால் இடித்து உடைத்து இருக்கிறார்களே?''

''நோ... நோ... எங்களது வீடியோ காட்சியில் அந்த தாழ்ப்பாள் நன்றாகவே உள்ளது. அவருடைய வீட்டு போட்டோ, போன் மற்றும் அவரது அறையில் இருந்த பொருட்கள் நல்ல நிலைமையில் இருந்ததற்கான ஆதாரம் எங்கள் வசம் உள்ளன. பிறகு நடந்தது என்னவோ... நோ கமென்ட்ஸ்! நான் கமிஷனராகப் பதவி ஏற்றதும் ஒன்பது வீடியோ கேமராக்களை விலைக்கு வாங்கினேன். அதில் இரண்டை, சம்பவத்தன்று கைது செய்யும் படலத்தை முழுவதுமாக கவர் செய்வதற்குக் கொடுத்து அனுப்பினேன். அந்த ஆதாரங்கள் எங்களுக்குப் போதும்.''

''சரி... இப்படி நீங்கள் வீடியோ பதிவு செய்ததை, ஏன் வெளியே சொல்லவில்லை. அதுவும் தவிர, கைது நடந்து 40 மணி நேரம் கழித்து நிருபர்களுக்குப் போட்டுக் காட்டவேண்டிய அவசியம் என்ன?''

''இரண்டு வெவ்வேறு கோணங்களில் எடுத்து முடித்த வீடியோ காஸெட்களை உளவுப் பிரிவின் வீடியோ லைப்ரரியில் வழக்கம்போல் ஒப்படைத்துவிட்டார்கள் அதிகாரிகள். சட்டம்-ஒழுங்குப் பிரச்னை அடுத்தடுத்து வந்ததால், அதில் என்ன பதிவாகி இருக்கிறது என்பதையும் உடனே பார்க்க முடியவில்லை.

கைது சம்பவம் நடந்து சில மணி நேரம் கழித்து ஒரு காஸெட்டைப் போட்டுப் பார்த்தோம். அடுத்த காஸெட்டை லேட்டாகத்தான் பார்த்தோம். இதற்குள் 40 மணி நேரம் ஆகிவிட்டது. கருணாநிதி கைது சர்ச்சையைத் தணிக்கும் வகையில் உடனே பிரின்ட் போட்டு எல்லா பிரஸ்களுக்கும் கொடுத்து, உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்கச் சொன்னோம்.''

''40 மணி நேரம் என்பது, உங்களுக்கு சாதகமான காட்சிகளை வெட்டி ஒட்ட எடுத்துக்கொண்ட அவகாசம் என்று சொல்லப்படுகிறதே?''

''போலீஸ் கஷ்டம் போலீஸுக்குத்தான் தெரியும். கைது நடந்த அன்று விடிய விடிய டென்ஷன்... மறுநாள், சிட்டியில் ஆங்காங்கே கல்வீச்சு... தகராறுகள். திங்கட்கிழமை அன்று பந்த்... அதையட்டி கைதுகள்... பஸ்கள் மீது தாக்குதல்... நாட்டு வெடிகுண்டுகளுடன் தி.மு.க. பிரமுகர் கைது... இதற்கு நடுவே டெல்லியில் இருந்து வந்த மத்திய உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயம்... இப்படி ஏகப்பட்ட பணிகள்!

நான் கமிஷனர் பணியைத்தான் பார்ப்பேனே தவிர, வீடியோ எடிட்டிங் என் வேலை அல்ல. எங்களது இரண்டு வீடியோ காஸெட்களில் ஒன்றின் பிரதியை மத்திய உள்துறையில் இருந்து வந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். மற்றொன்றை, பிறகு டெல்லிக்கு அனுப்பினோம். இதுதான் நடந்தது.''

- ஆர்.பி.

படங்கள்: பொன்.காசிராஜன்

நன்றி : ஜூனியர்விகடன்

18 comments:

Rafeek said...

எப்பா.... சம்பவங்களின் வர்ணனை இப்போதும் பீபி ஏற்றும் ஒன்று!!அரசியல் வியாதிகளை விடவும் கொடியவர்கள் போலீஸ் என்பதற்கு இதை விட உதாரணம் காட்ட முடியாது. இதற்கு அப்போது தாத்தா ஒரளவு நல்ல முறையில் தான் ஆட்சி செய்து தோற்றார். ஜெ,சசி கைது தவிர பெரிதாக அம்மாவை சீண்டவில்லை. அதுக்கே இப்படின்னா.. போன 5 வருசத்துக்கு..இன்னும் என்னென்ன காட்சிகள் காத்திட்டிருக்கோ..!!

Rafeek said...

அதிகாலை சன் டிவியின் சென்ஷெனல் லைவ்.. அனைவரையும் உறைய வைத்தது!!!ஏதோ நம் வீட்டு முதியவருக்கு ஏற்பட்ட துயர சம்பவமாகதான்.. அன்று அனைவரின் மனநிலையும் இருந்தது!! அது சரி இந்த முத்து கருப்பன்..ஜார்ஜ் இவங்கள்ளாம் என்ன ஆனாங்க?

Sivakumar said...

இதைப்படிக்கவே நாக்குல நுரை தள்ளுது. தயவு செஞ்சி Read more பட்டனை எடுத்துருங்க சார்!!

ஒரு வாசகன் said...

//இந்தக் கொடூரச் சம்பவத்தின் பாதியில் இருந்து நேரடியாக கவனித்ததினால் கிடைத்த எனது அனுபவத்தையும் அடுத்தப் பதிவில் தொகுத்து வழங்கவுள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..! சிரமம் பார்க்காமல் அதையும் காத்திருந்து படிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!//

ஆகா அண்ணனின் டச்சுக்காக அடுத்த பதிவிற்க்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்

காரிகன் said...

எப்பவோ நடந்த ஒரு உப்பு பெறாத சம்பவத்தை எதோ நேற்று நடந்தது போல எழுதி உங்கள் தலைவருக்கு ஏன் இப்படி வீணான விளம்பரம் தேடிக்கொள்கிறீர்கள்?இன்று இப்படி நடந்தால் மக்கள் முன்பு போல கருணாநிதியிடம் அனுதாபம் காட்ட மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை.உருப்படியாக எதையாவது போய் செய்யுங்கள்.

Unknown said...

Jaya did not create the "drama" during her arrest. She could have done the same thing as Kalaignar and lady police would have been ordered to do the same. The difference is in politics MK is a great actor while Jaya is novice.

Anonymous said...

20/20 பார்த்த பீல்...அடுத்து ஜெயா பாட்டிங்கா?

உண்மைத்தமிழன் said...

[[[Rafeek said...

எப்பா.... சம்பவங்களின் வர்ணனை இப்போதும் பீபி ஏற்றும் ஒன்று!! அரசியல்வியாதிகளை விடவும் கொடியவர்கள் போலீஸ் என்பதற்கு இதைவிட உதாரணம் காட்ட முடியாது. இதற்கு அப்போது தாத்தா ஒரளவு நல்ல முறையில்தான் ஆட்சி செய்து தோற்றார். ஜெ.,சசி கைது தவிர பெரிதாக அம்மாவை சீண்டவில்லை. அதுக்கே இப்படின்னா. போன 5 வருசத்துக்கு. இன்னும் என்னென்ன காட்சிகள் காத்திட்டிருக்கோ..!!]]]

அதான் கட்சியினரை வளைத்துப் பிடித்து உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறாரே.. பத்தாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[Rafeek said...

அதிகாலை சன் டிவியின் சென்ஷெனல் லைவ்.. அனைவரையும் உறைய வைத்தது!!! ஏதோ நம் வீட்டு முதியவருக்கு ஏற்பட்ட துயர சம்பவமாகதான்.. அன்று அனைவரின் மனநிலையும் இருந்தது!! அது சரி இந்த முத்துகருப்பன். ஜார்ஜ் இவங்கள்ளாம் என்ன ஆனாங்க?]]]

எனக்கும் ரொம்ப வருத்தம்தான். ஆனாலும் என்ன செய்ய..? பேய் ஆட்சி செய்தால் இப்படித்தான் நடக்கும்..

முத்துக்கருப்பன் இப்போதும் ஏதோ ஒரு பதவியில் இருக்கிறார். ஜார்ஜ் சென்னை மாநகர துணை கமிஷனராக இருக்கிறார்.

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...
இதைப் படிக்கவே நாக்குல நுரை தள்ளுது. தயவு செஞ்சி Read more பட்டனை எடுத்துருங்க சார்!!]]]

இதுக்கெல்லாம் வருத்தப்படவே கூடாது சிவக்குமார்..! பாடப்புத்தகத்தை கட்டாயமா படிச்சு பாஸ் பண்ணுனீங்களே.. அதே மாதிரி இதையும் கட்டாயமா படிச்சு நாலு பேரு பாஸ் பண்ணி விடுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...

//இந்தக் கொடூரச் சம்பவத்தின் பாதியில் இருந்து நேரடியாக கவனித்ததினால் கிடைத்த எனது அனுபவத்தையும் அடுத்தப் பதிவில் தொகுத்து வழங்கவுள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..! சிரமம் பார்க்காமல் அதையும் காத்திருந்து படிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!//

ஆகா அண்ணனின் டச்சுக்காக அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.]]]

ஆகா.. எனக்காக ஒரு வாசகர் காத்திருக்கிறாரே.. என்ன தவம் செய்தேன்..?

உண்மைத்தமிழன் said...

[[[karlmarx said...

எப்பவோ நடந்த ஒரு உப்பு பெறாத சம்பவத்தை எதோ நேற்று நடந்தது போல எழுதி உங்கள் தலைவருக்கு ஏன் இப்படி வீணான விளம்பரம் தேடிக் கொள்கிறீர்கள்? இன்று இப்படி நடந்தால் மக்கள் முன்பு போல கருணாநிதியிடம் அனுதாபம் காட்ட மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை. உருப்படியாக எதையாவது போய் செய்யுங்கள்.]]]

அப்படீங்களா ஸார்..? போலீஸ் உங்க வீட்டுக்கு வந்து உங்களையோ, உங்களது குடும்பத்தினரையோ இப்படி நடத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா..?

உண்மைத்தமிழன் said...

[[[neovasant said...

Jaya did not create the "drama" during her arrest. She could have done the same thing as Kalaignar and lady police would have been ordered to do the same. The difference is in politics MK is a great actor while Jaya is novice.]]]

ஓகேதான்..

உண்மைத்தமிழன் said...

[[[ரெவெரி said...

20/20 பார்த்த பீல்... அடுத்து ஜெயா பாட்டிங்கா?]]]

அம்மா ஸ்டைலே தனிதான்..!

மரணதண்டனையை ஒழிப்போம் said...

அண்ண.
பொலிஸ் வந்தபோது கலைஞ்ஞர் முழிச்சிருந்ததா ஜீனியர் விகடன் சொல்லுது. ஆனா அவர்
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததா நக்கீரன் சொல்லுது. இதுல யார் சொல்லுறது உண்மை?
பார்த்தீங்களா இந்த சின்ன விஷயத்தையே இப்படி மாத்தி மாத்தி சொல்லுறாங்களே
மற்ற உள்ளடக்கமெல்லாம் எவ்வளவு மாத்தி எழுதப்பட்டிருக்கும். ??

உண்மைத்தமிழன் said...

[[[மரணதண்டனையை ஒழிப்போம் said...

அண்ண. பொலிஸ் வந்தபோது கலைஞ்ஞர் முழிச்சிருந்ததா ஜீனியர் விகடன் சொல்லுது. ஆனா அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததா நக்கீரன் சொல்லுது. இதுல யார் சொல்லுறது உண்மை?]]]

நக்கீரன் சொல்வதுதான். கருணாநிதி தூங்கிக் கொண்டிருந்தார் என்பதுதான் உண்மை.

[[[பார்த்தீங்களா இந்த சின்ன விஷயத்தையே இப்படி மாத்தி மாத்தி சொல்லுறாங்களே மற்ற உள்ளடக்கமெல்லாம் எவ்வளவு மாத்தி எழுதப்பட்டிருக்கும்.?]]]

இதெல்லாம் மீடியால சகஜமப்பா..!

ஜோதிஜி said...

நன்றி சரவண்ன். கோர்வையாக படிக்கும் போது வியப்பாக உள்ளது.

உண்மைத்தமிழன் said...

[[[JOTHIG ஜோதிஜி said...

நன்றி சரவண்ன். கோர்வையாக படிக்கும்போது வியப்பாக உள்ளது.]]]

எனக்கும் இப்போது படிக்கும்போது அப்படித்தான் உள்ளது..! ஒரே சம்பவத்தை இரண்டு மாறுபட்ட கண்களின் பார்வையில் அழகாக எழுதியிருக்கிறார்கள்..!