27-11-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
'டூட்ஸி' என்கிற ஆப்பிரிக்க திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த 'யோகி' என்கிற தமிழ் திரைப்படம்..
பணத்துக்காக எதையும் செய்யும் தாதா கும்பலின் தலைவன் யோகி. வேட்டை என்று சொல்லப்படும் தங்களது தாதா பணிக்காக ஒரு நாள் கிளம்புகிறார்கள். சுனாமி என்கிற ஹோட்டலுக்குள் புகுந்து வேலையாட்களைக் கட்டிப் போட்டுவிட்டு, ஹோட்டல் அறைகளுக்குள் தடாலடியாக நுழைந்து தங்கியிருந்தவர்களைத் தாக்கித் தங்களது வேட்டையை நடத்துகிறார்கள் யோகியும், அவனது ஆட்கள் மூன்று பேரும்.
காருக்குரிய பெண் வேகமாக வெளியே ஓடி வர பின்னால் துரத்தி வந்த போலீஸ் காரால் தாக்கப்பட்டு கீழே விழுகிறாள். யோகி வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு ஓட முயல.. காரின் பின் சீட்டில் அம்சமாகப் படுத்திருக்கும் கைக்குழந்தை வீரிட்டு அழுக.. இனிதான் கதையே..
அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டுப் போக மனமில்லாமல் தூக்கிச் சென்று வளர்க்கிறான் யோகி. அதற்காக அவன் படும் சிரமங்களும், அந்தக் கஷ்டத்துடன் குழந்தையை வளர்க்க முயலும் அவனது நோக்கத்திற்கான காரணம் என்ன என்பதிலும்தான் யோகியின் பிறப்பு முதல் இன்றைய வரையிலான ஜாதகமே சொல்லப்படுகிறது.
இன்னொரு புறம் போலீஸ் காரில் மோதி மருத்துவமனையில் பேச்சுமூச்சில்லாமல் கிடக்கிறாள் குழந்தையின் அம்மா. குழந்தையின் அப்பா நகரின் அத்தனை வட்டங்களுக்கும் படையெடுத்து லோக்கல் தாதாக்களிடம் பணத்தை அள்ளிக் கொடுத்து பணத்தையும் கொடுத்து குழந்தையை மட்டும் மீட்டுக் கொடுக்கும்படி கெஞ்சுகிறான்.
போலீஸும் ஒரு பக்கம் குழந்தையைத் தேடுகிறது. லோக்கல் தாதாக்களும் தேடுகிறார்கள். இந்தத் தேடுதல் கடைசியில் யோகியின் கைக்கும் வருகிறது. யோகியும் குழந்தையும் என்ன ஆனார்கள் என்பதுதான் மீதிக் கதை..
இப்படியொரு மாற்று மொழி திரைப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் அப்படியே காட்சி மாறாமல் சுட்டுத் திரைப்படமாக்க நிச்சயம் அசாத்தியமான தைரியம் வேண்டும். அந்த தைரியம் இத்திரைப்படத்தின் கதை ஆசிரியராக தன் பெயரைப் போட்டிருக்கும் இயக்குநர் சுப்ரமண்யசிவாவுக்கு உண்டு. இதற்காக அவரைப் பாராட்டியே தீர வேண்டும்.
அமீரின் அறிமுகக் காட்சியிலேயே கை தட்டல் பறக்கப் போகிறது என்று எதிர்பார்த்து போயிருந்த எனக்கு தியேட்டரின் உள்ளே நடந்த 'உல்டா' அதிர்ச்சியைத் தந்தது. 'நாடோடிகள்' திரைப்படத்தின் முதல் காட்சியில் சசிகுமாருக்கு கிடைத்த வரவேற்பை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.
இத்திரைப்படத்திற்கு அமீர் எதற்கு என்பது புரியவில்லை. தனது உடலை கொஞ்சம் ஏற்றி, இறக்கி மற்ற நடிகர்களுக்கு சவால் விடுவதைப் போல சிக்ஸ் பேக்கெல்லாம் வைத்து காட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு வழக்கம்போல டெக்னாலஜி இருப்பதால் அதனை வைத்துத் தப்பித்துக் கொண்டார். மற்ற காட்சிகளில்..?
நடிக்க வேண்டிய காட்சிகளில் அது தேவையில்லாததுபோல் அமீரின் மீது சுமையைச் சுமத்தாமல் விடுபட வைத்து அவரைக் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்...
தமிழ்ச் சூழலுக்கு புதிய விஷயமே மதுமிதாவுக்கும் குழந்தைக்குமான உறவுதான். இந்த விஷயம்தான் 'டூட்ஸி'யிலும் முக்கியமானதாக இருந்தது.. செய்நேர்த்தியினால் அந்தக் காட்சிகள் மட்டும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கக்கூடிய வகையில் எடுத்திருக்கிறார் இயக்குநர்.
கிட்டத்தட்ட குடிசைப் பகுதியாக இருக்கும் அந்த இடத்தில் குழந்தையின் சப்தங்கள்கூட வெளியில் கேட்காமல் இருக்கிறது என்று இயக்குநர் சொல்வது கொஞ்சம் காமெடியாக இருந்தாலும், கதையை நகர்த்தியாக வேண்டுமே என்கிற அவரின் தவிப்புக்காக அதனை நாம் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம்.
குடியும், போதையும், புகையும் இளைஞர்களை எந்த அளவுக்கு ரசிக்க வைக்கும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சாட்சி. முதல் காட்சியில் இருந்து இறுதிவரையில் புகை பொங்காத ஷாட்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அந்த ரவுடியிஸத்தை அப்பட்டமாகக் காட்டுவதாக நினைத்து போதை வஸ்துக்களை பரப்பியிருக்கிறார்கள்.
இன்றைய இளைய சமுதாயத்தினரின் எண்ணவோட்டங்கள் வெறுமையான கொண்டாட்டங்கள் மட்டுமே என்பதற்கு இத்திரைப்படத்தில் கைதட்டல்கள் கிடைத்த காட்சிகளை வரிசைப்படுத்தினால் தெளிவாகிறது.
கூடவே எதுவெல்லாம் நமக்கு தவறாகப் படுகிறதோ அதற்கெல்லாம் மற்றுமொரு நியாயமும் உண்டு என்பதையும் உறுதிப்படுத்துகிறது ரசிகர்கள் கூட்டம். பேருந்தில் நடக்கும் முதல் கொலைக்குக் கிடைத்த கைதட்டல் இதைத்தான் உறுதிப்படுத்தியது. அது வெறும் பணத்துக்காக நடக்கும் கொலைதான். அதற்குமா..?
தன்னைப் பள்ளிக்கூடம் போக விடாமல் தடுத்து, தனது அம்மாவை சித்ரவதைப்படுத்தி, சிறு குழந்தையான தங்கை சாவுக்குக் காரணமாக இருந்து, அம்மாவின் தற்கொலைக்கு சிறிதும் வருத்தப்படாத தனது அப்பாவுக்கு சிறுவன் யோகி கொடுக்கும் தண்டனையின்போதுதான் தியேட்டரே கரவொலியில் கலகலத்தது. மறுபடியும் உள்ளுக்குள் ஒரு பயம்.. வரவேற்பு எதற்கெல்லாம் கிடைக்கிறது என்று பார்த்தால் எதிர்காலத்தை நினைத்து பயமாகத்தான் இருக்கிறது..
சிறிய சிறிய வெட்டு, வெட்டான காட்சிகளால் கதையை நகர்த்திவிட முடியும் என்று நம்பியிருக்கிறார் இயக்குநர். இயக்குநருக்கு பக்கபலமாக ஒளிப்பதிவாளரின் 'நச்'சான படப்பதிவு. சண்டைக் காட்சிகளில் 'எடிட்டிங் தெய்வம்' கண்வித்தை காட்டியிருக்கிறார். முதல் பாடல் பல 'முன்னாள் ஹிட்'டுகளின் கலவை. ஆனால் ஆட்டம் அசத்தல் ரகம்.. அமீர் ஹீரோவாக நிற்பது இங்குதான்.. இன்னும் மூன்று பாடல்கள் இருந்தன. தனியாகக் கேட்டால்தான் புரியும்போலிருந்தது.
உடன் நடித்த அக்மார்க் திருவான்மியூர் சென்னைவாசிகளுக்கு அதே மேக்கப். ஏதோ இது போன்ற ரவுடித்தனம் செய்பவர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்து அது போலவே செயற்கைத்தனம் மிக்க அலங்கோலத்துடன் காட்சியளிக்கிறார்கள்.
அமீரின் நண்பனாக கவிஞர் சினேகன் படம் முழுவதும் பவனி வருகிறார். அவர் முடிவுறும் காட்சியில் பாய்கின்ற துப்பாக்கிக் குண்டின் சப்தம் தியேட்டரில் அத்தனை பேரையும் உலுக்கிவிட்டது. ஹேட்ஸ் ஆஃப் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் அண்ட் சவுண்ட் ரிக்கார்டிங்..
இயக்கத்தில் சிற்சில இடங்களில் நகைச்சுவையும், திடுக் திருப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. முக்கியமாக முதல் கொலைச் சம்பவம், ரவுடிகள் கூட்டத்திற்கிடையில் புகுந்து வெளியேறும் அமீர் மின்னல் வேகத்தில் செய்கின்ற கத்தி டச்.. பாம்பை அகற்றியவுடன் குழந்தை பளீரென்று சிரிப்புடன் பார்க்கின்ற காட்சி.. குழந்தையுடன் நண்பர்கள் அமர்ந்திருக்கும் காட்சி.. இறுதியில் குழந்தையின் அம்மா என்ட்ரியாவது என்று பல இடங்களில் இயக்குநரின் கலக்கல் நன்றாகவே இருக்கிறது.
ஹோட்டலில் நங்கையருடன் ரூம் போட்டுத் தங்கியிருக்கும் இன்ஸ்பெக்டர்.. அந்த இன்ஸ்பெக்டரிடமே கொள்ளையடித்துவிட்டதால் மனிதர் கருவிக் கொண்டு திரிவது.. அவருடைய துப்பாக்கியின் மூலமாக நடந்த ஒரு கொலைக்காக மேலதிகாரியிடம் வெளிப்படையாக உண்மையைச் சொல்லி தன்னைக் காப்பாற்றும்படி இன்ஸ்பெக்டர் சொல்கின்ற காட்சி என்று முடிந்த அளவுக்கு இயல்பை காட்டியிருக்கிறார் இயக்குநர்.
மதுமிதா இயல்பாகவே நன்கு நடிப்பவர்தான்.. இப்படத்திலும் அதை இன்னும் கொஞ்சம் செய்திருக்கிறார். இந்த கேரக்டரை செய்வதற்கு நடிகைகள் பலரும் முன் வராதததற்கான காரணம் திரைப்படத்திலேயே உள்ளது. தைரியமாக முன் வந்த மதுமிதாவுக்கு அதற்கான பரிசுகள் காத்திருக்கின்றன. சந்தேகமேயில்லை.
கஞ்சா கருப்பு என்கிற நடிகரை வேஸ்ட்டாக்கியிருக்கிறார்கள். 'நன்றிக்கடனை' செவ்வனே செய்திருக்கிறார் கஞ்சா. ஆனால் கதையுடன் ஒட்டாததால் கவனத்தில் கொள்ள முடியவில்லை. ஆனால் வருகின்ற காட்சிகளில் கொஞ்சம் நகைக்க வைக்கிறார். படத்தை முடித்து வைக்க இவர் வருகின்ற காட்சியில் இயக்குநரின் 'டச்' நச்..
"நான் செய்றதெல்லாம் எனக்குத் தப்பாவே தெரியலை.." என்று யோகி சொல்வதன் மூலம் அவனுக்குத் தெரிந்த நியாயம், அநியாயம் எது என்பதை இயக்குநர் சொல்லிவிட்டதால் நமக்கும் அதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. "உலகத்துல நல்லவங்களும் இருக்காங்க.." என்ற மதுமிதாவின் அறிவுரைக்கு "எங்க இருக்காங்க..?" என்ற யோகியின் கேள்வி நச் பதில்..
ஒருவகையில் இந்தக் கேள்விக்கு விடை தேடுவதுதான் இத்திரைப்படம். தேடினால் கிடைக்கும். ஆனால் எப்படி தேடுவது என்றுதான் இந்த யோகிக்கும், அவனைப் போன்ற ஆட்களுக்கும் தெரியவில்லை.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வன்முறையின் உச்சக்கட்டம். சண்டைக் காட்சியில் தென்படும் உக்கிரத்தை சற்றுக் குறைத்திருக்கலாம். ஒரிஜினல் திரைப்படத்தில் இது போன்று இல்லை.. குழந்தையை மீண்டும் அவர்கள் வீட்டிலேயே ஒப்படைக்க வருவதுதான் ஒரிஜினல் கிளைமாக்ஸ். இதை மட்டும் தமிழுக்காக கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றே நினைக்கிறேன்..
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று..
வனவிலங்குகள் வாரியம், சுகாதாரத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்று குழந்தைகள் வாரியமும் திரைப்படங்களின் மீது ஏதாவது கட்டுப்பாடுகளை விதித்தால் நல்லதோ என்று இத்திரைப்படத்தை பார்த்த பின்பு தோன்றுகிறது.
ஒரு கைக்குழந்தையின் அழுகையையும், அதனை காட்சிகளுக்காக படுத்தியிருப்பதை பார்த்தால் கொடூரமாக இருக்கிறது. கதைக்குத் தேவையானது என்றாலும் அந்த எறும்பு காட்சியையும் பாம்பு குழந்தையின் மீது ஊர்கின்ற காட்சியிலும் நமக்கு மனம் பகீரென்கிறது.. விலங்களுக்காகவாவது ஒரு வாரியம் இருக்கிறது.. குழந்தைகளுக்கு..? யார் இதையெல்லாம் கேட்பது..?
'கத்திக்குக் கத்தி..' 'பல்லுக்குப் பல்..' என்பதை விளக்கித்தான் மாதந்தோறும் 10 திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று என்பதுபோல் ஆனது மிகப் பெரிய சோகம்..
நல்லதொரு திருப்புமுனையைத் தர வேண்டிய கிளைமாக்ஸ் சீனை, 'சினிமாட்டிக்காக' முடித்ததினால், 'யோகி'யின் மீதான பரிதாப உணர்வை பார்வையாளனுக்குள் ஏற்படுத்தவேயில்லை. ஆனாலும்..
யோகி - அமீருக்கு ஒரு யோகம்தான்..!!!
|
Tweet |
73 comments:
அருமையாக இருக்கிறது. ஆழமாக.... அட்டகாசமாக எழுதியிருக்கீங்கண்ணே. ரசிக்கும் படி இருக்கிறது. நன்றி.
இந்திய ப்ளாகர் உலகிலே முதன் முறையாக அண்ணன் உ.த.வின் திரைவிமர்சனம். நல்லாயிருக்குனே.
சின்ன கேள்விண்னே! நல்லவரு பாக்கற படமா அது?
யோகி.. தமிழர்கள் கொண்டாட மறந்துவிட்ட போகி..’ அப்டின்னு கேபிள் காரு... சாரி... கேபிளாரு விமர்சனம் பண்ணுவாரோ...?
அப்ப யோகிக்கு யோகம் இருக்குன்றீங்க..
சொல்ல நினைச்சதை தெளிவா சொல்லியிருக்கீங்க உண்மைத்தமிழன்...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
படம் ஓடுமா ஓடாத? ஒரு வார்த்தை -இல் சொல்லுங்கள்.
படம் தியேட்டரில் ஓடுமா?? தியேட்டரை விட்டு சீக்கிரம் ஓடுமா??
படம் சூப்பர்ன்னு படம் பார்த்த நண்பர்கள் சொல்லிட்டார்கள்
ரசிகர்கள் கைத்தட்டும் இடங்களைப் பற்றி சொல்லி நீங்கள் கவலைப் பட்டுள்ள எதிர்காலம் பற்றி நினைக்கும்போது கவலையாகவே இருக்கிறது. வன்முறை வெறியாட்டங்களுக்கு வேலை இல்லாத திண்டாட்டம்தான் காரணம் என்று 'அறிஞர்'கள் கண்டு பிடிப்பது போல செய்யும் தவறுகளுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டே போனால் உலகில் உள்ள எல்லோருக்கும் அடுத்தவரைக் கொலை செய்ய ஒரு காரணம், நியாயம் இருந்து கொண்டே இருக்கும்.
நாளைக்கு படம் பார்த்துட்டு உங்க விமர்சனம் எப்படின்னு சொல்லுறேன்
தலைவரே என்ன கதை நடக்கும் தளம் திருவற்றியூர் சொல்றிங்க...
இன்னொரு தடவை முடிஞ்சா படத்தை பார்க்கவும்,,, அந்த கஞ்சா கருப்பு ஸ்டுடியோவை காட்டும் போது திருவான்மியூர் என்று அட்ரஸ் போட்டிருக்கும் பாருங்கள்... .. ஜெயந்தி தியேட்டரில் இருந்தோம் என்பார்கள் அதில் தான் நான் படமே பார்த்தேன்.
படம் நல்லாருக்கோ இல்லையோ உங்க விமர்சனம் சூப்பர் ...
ஆமா படம் பாக்கலாமா ...
ரொம்ப எதிர்பார்த்தேன். சின்ன விமர்சனம் எழுதிடீங்க..அதுக்கு உங்களை பாராட்டணும்..
ஆனா டூட்ஸின்னு சொல்லீடீங்க..
அண்ணே.. இன்னிக்கு காலைல தான் படத்துக்கு போகணும்... போய்ட்டு வந்து விமர்சனம் படிக்கிறேன்... :)
நீங்க சொல்றதைப் பார்த்தா படம் பார்க்கிற மாதிரி இருக்குன்னு நினைக்கிறேன்...:0)))
///////யோகி - அமீருக்கு ஒரு யோகம்தான்..!!!////////
இந்த லைன் சூப்பருங்கண்ணே...!!! இங்கதான் நீங்க நிக்கறீங்க!!!
(நான் அந்த லைனை மட்டும்தான் படிச்சேன்! ஹி.. ஹி. ஹி)
படம் பாக்கலாமா வேண்டாமா????????
அண்ணே கவிதை போட்டிக்கு ரெடி ஆகிட்டீங்களா........இந்த திரைவிமர்சனம் மாதிரி சுருக்கமா நச்னு இருந்தா போதும்ணே
சுப்ரமணிய சிவா - இந்திய சுதந்திரத்திற்காக தன் வாழ்வையே சிறைச்சாலையில் கழித்த மாவீரன்.
உண்மைத் தமிழனின் விமர்சனம் நடு நிலைமையற்று விசிலடிச்சான் குஞ்சு கணக்காக இருக்கிறது.
குப்பைக் கூடைக்குச் செல்ல குப்பைக்கும் ஒரு தகுதி இருக்கிறது. அந்தத் தகுதி எதுவும் இல்லாதது இப்படம்.
நன்றி.
நல்ல விமர்சனம்.
ம்
சுட்ட படமா??
நல்லா இருங்கய்யா!
இந்தப் படம் "யோகி" அல்ல. குப்பையை கொளுத்த வேண்டிய "போகி". அமீர் போன்ற இயக்குநர்களுக்கு ஏன் இந்த கற்பனை வறட்சி என்று தெரியவில்லை. இப்படியா 2006ல் சிறந்த வேற்று மொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற ஒரு திரைப்படத்தை சீன் மாறாமல் அப்படியே காப்பியடிப்பது. இவர்களுக்கெல்லாம், திருட்டு டிவிடி பற்றி புகார் சொல்ல என்ன அருகதை இருக்கிறது.
தெளிவான விளக்கம் நன்றி.
அப்ப படத்த பாக்கலாம் :-)
இன்றைய இளைய சமுதாயத்தினரின் எண்ணவோட்டங்கள் வெறுமையான கொண்டாட்டங்கள் மட்டுமே என்பதற்கு இத்திரைப்படத்தில் கைதட்டல்கள் கிடைத்த காட்சிகளை வரிசைப்படுத்தினால் தெளிவாகிறது.//
சமூகப் பொறுப்புடன் அருமையாக விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள்,சரவணன்.
பாராட்டுக்கள்.
விமர்சனம் அருமை. பாராட்டுக்கள்.
Neenga tutsi-oda remake nu sollirukeenga...
movie name s TSOTSI...pronounciation s T silent So "SAATSI"
குழந்தைகள் வாரியம் பற்றி நீங்கள் கூறிய கருத்தை சுஜாதா கூட விளம்பர படத்தில் நடிக்கும் குழந்தைகள் பற்றி எழுதியுள்ளார். பாண்டியில் ஒரு விளம்பர படம் ஒரு சிறுவன் சைக்கள் ஓட்டி வந்து நிறுத்துவது போல் பிரஞ்சு துதரகம் தெருவில் எடுத்தார்கள். கிட்டதட்ட 100 டேக் இருககும். என் மனைவி அவர்களிடம் எத்தனை தடவை அந்த சின்ன குழந்தையை ஓட்ட சொல்வீகள் என்று கோபமாக கேட்டார்கள். அத்தனைக்கும் அச்சிறுவனின் தாய் ஒரு உணர்ச்சியும் இன்றி பார்த்து கெண்டிருந்தார்கள். பெற்றோர்களின் பேராசை தான் இதற்கு காரணம்.
அப்ப படம் பார்க்கலாம்னு சொல்லறிங்க...? அப்படித்தானே..
appa padaththa paaththura vendiyathuthaan, thoo kilambitten, inoxla oru ticket pottura vendiathuthaan aennaa naan ippo en thaai madiyil irukkiren (at hom)
[[[கடையம் ஆனந்த் said...
அருமையாக இருக்கிறது. ஆழமாக.... அட்டகாசமாக எழுதியிருக்கீங்கண்ணே. ரசிக்கும்படி இருக்கிறது. நன்றி.]]]
நன்றிங்கோ கடையம் ஆனந்த்..!
[[[D.R.Ashok said...
இந்திய ப்ளாகர் உலகிலே முதன் முறையாக அண்ணன் உ.த.வின் திரைவிமர்சனம். நல்லாயிருக்குனே.]]]
நிறைய எழுதியிருக்கனே..? எதற்கு முதன் முறையாக ஆசோக்ஜி..?
[[[சின்ன கேள்விண்னே! நல்லவரு பாக்கற படமா அது?]]]
யார் நல்லவரு.. நானா..? அய்யய்யோ.. நான் ரொம்ப கெட்டவன் சாமி..!
[[[D.R.Ashok said...
யோகி.. தமிழர்கள் கொண்டாட மறந்துவிட்ட போகி..’ அப்டின்னு கேபிள் காரு... சாரி... கேபிளாரு விமர்சனம் பண்ணுவாரோ...?]]]
நானும் இதைத்தான் எதிர்பார்த்தேன். ஆனா மாத்தி எழுதிட்டாரு..
[[[அகல்விளக்கு said...
அப்ப யோகிக்கு யோகம் இருக்குன்றீங்க..]]]
நிச்சயமா..!!!
[[[பைத்தியக்காரன் said...
சொல்ல நினைச்சதை தெளிவா சொல்லியிருக்கீங்க உண்மைத்தமிழன்...
தோழமையுடன்
பைத்தியக்காரன்]]]
தங்களுடைய திடீர் வருகைக்கு நன்றிங்கோ பைத்தியக்காரன் ஸார்..
தோழமையுடன்
உண்மைத்தமிழன்
[[[PREMKUMAR C said...
படம் ஓடுமா ஓடாத? ஒரு வார்த்தை -இல் சொல்லுங்கள்.]]]
நிச்சயமா ஓடும் பிரேம்.. ஓடிக் கொண்டுதான் இருக்கிறது..!
[[[gulf-tamilan said...
படம் தியேட்டரில் ஓடுமா?? தியேட்டரை விட்டு சீக்கிரம் ஓடுமா??]]]
கல்ப் அந்த சந்தேகம் வேண்டாம்.. தியேட்டரிலேயே நிச்சயமாக ஓடும்..!
[[[D.R.Ashok said...
படம் சூப்பர்ன்னு படம் பார்த்த நண்பர்கள் சொல்லிட்டார்கள்.]]]
அப்புறமென்ன..?
[[[ஸ்ரீராம். said...
ரசிகர்கள் கைத்தட்டும் இடங்களைப் பற்றி சொல்லி நீங்கள் கவலைப்பட்டுள்ள எதிர்காலம் பற்றி நினைக்கும்போது கவலையாகவே இருக்கிறது. வன்முறை வெறியாட்டங்களுக்கு வேலை இல்லாத திண்டாட்டம்தான் காரணம் என்று 'அறிஞர்'கள் கண்டு பிடிப்பது போல செய்யும் தவறுகளுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டே போனால் உலகில் உள்ள எல்லோருக்கும் அடுத்தவரைக் கொலை செய்ய ஒரு காரணம், நியாயம் இருந்து கொண்டே இருக்கும்.]]]
உண்மையான கருத்து ஸ்ரீராம்..!
யாரோ ஒருவர் விட்டுக் கொடுத்தால்தான் மனித குலம் தழைக்கும். பழிக்குப் பழி மனித வாழ்க்கைக்கு எதிரானது..!
[[[Romeoboy said...
நாளைக்கு படம் பார்த்துட்டு உங்க விமர்சனம் எப்படின்னு சொல்லுறேன்.]]]
மூணு நாளாச்சு.. கமெண்ட்டு வரல்லியே..!
[[[ஜெட்லி said...
தலைவரே என்ன கதை நடக்கும் தளம் திருவற்றியூர் சொல்றிங்க...
இன்னொரு தடவை முடிஞ்சா படத்தை பார்க்கவும்,,, அந்த கஞ்சா கருப்பு ஸ்டுடியோவை காட்டும் போது திருவான்மியூர் என்று அட்ரஸ் போட்டிருக்கும் பாருங்கள். ஜெயந்தி தியேட்டரில் இருந்தோம் என்பார்கள் அதில்தான் நான் படமே பார்த்தேன்.]]]
தப்புதான் ஜெட்லி.. மன்னிச்சுக்குங்க..!
திருத்திட்டேன்.. கவனப்படுத்தியமைக்கு நன்றிகள்..!
[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
படம் நல்லாருக்கோ இல்லையோ உங்க விமர்சனம் சூப்பர். ஆமா படம் பாக்கலாமா.]]]
கண்டிப்பா பார்க்கலாம்..!
[[[butterfly Surya said...
ரொம்ப எதிர்பார்த்தேன். சின்ன விமர்சனம் எழுதிடீங்க.. அதுக்கு உங்களை பாராட்டணும்.. ஆனா டூட்ஸின்னு சொல்லீடீங்க..]]]
உண்மை அதுதானே..!
[[[kanagu said...
அண்ணே.. இன்னிக்கு காலைலதான் படத்துக்கு போகணும்... போய்ட்டு வந்து விமர்சனம் படிக்கிறேன்... :)]]]
என்னாச்சு கனகு..?
[[[அது சரி said...
நீங்க சொல்றதைப் பார்த்தா படம் பார்க்கிற மாதிரி இருக்குன்னு நினைக்கிறேன்...:0)))]]]
யெஸ்..!
[[[ஹாலிவுட் பாலா said...
///////யோகி - அமீருக்கு ஒரு யோகம்தான்..!!!////////
இந்த லைன் சூப்பருங்கண்ணே...!!! இங்கதான் நீங்க நிக்கறீங்க!!!
(நான் அந்த லைனை மட்டும்தான் படிச்சேன்! ஹி.. ஹி. ஹி)]]]
ஊர்ப்பட்ட குசும்பு..!
[[[அத்திரி said...
படம் பாக்கலாமா வேண்டாமா????????]]]
கண்டிப்பா பார்க்கணும்..!
[[[KaveriGanesh said...
படித்ததில் பிடித்தது--இப்படியும் ஒரு கலெக்டர்.
பதிவை பார்க்கவும்.
http://kaveriganesh.blogspot.com/]]]
தகவலுக்கு நன்றி காவேரி..!
[[[அத்திரி said...
அண்ணே கவிதை போட்டிக்கு ரெடி ஆகிட்டீங்களா. இந்த திரைவிமர்சனம் மாதிரி சுருக்கமா நச்னு இருந்தா போதும்ணே]]]
வேணாம்பா.. நம்ம தண்டோரா அண்ணனும், நையாண்டி நைனாவும் பாவம்.. பொழைச்சுப் போகட்டும்னு விட்டுட்டேன்..!
[[[பாலகிருஷ்ணா said...
சுப்ரமணிய சிவா - இந்திய சுதந்திரத்திற்காக தன் வாழ்வையே சிறைச்சாலையில் கழித்த மாவீரன்.
உண்மைத் தமிழனின் விமர்சனம் நடுநிலைமையற்று விசிலடிச்சான் குஞ்சு கணக்காக இருக்கிறது.
குப்பைக் கூடைக்குச் செல்ல குப்பைக்கும் ஒரு தகுதி இருக்கிறது. அந்தத் தகுதி எதுவும் இல்லாதது இப்படம்.]]]
தங்களுடைய புரிதலுக்கும், கருத்துக்கும் நன்றி பாலகிருஷ்ணா..!
[[[அதி பிரதாபன் said...
நன்றி.]]]
ம்..!
[[[ஸ்ரீ said...
நல்ல விமர்சனம்.]]]
நன்றி..!
[[[மங்களூர் சிவா said...
ம்.. சுட்ட படமா?? நல்லா இருங்கய்யா!]]]
நல்லாத்தான் இருக்கோம் சிவா..!
[[[சவுக்கு said...
இந்தப் படம் "யோகி" அல்ல. குப்பையை கொளுத்த வேண்டிய "போகி". அமீர் போன்ற இயக்குநர்களுக்கு ஏன் இந்த கற்பனை வறட்சி என்று தெரியவில்லை. இப்படியா 2006ல் சிறந்த வேற்று மொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற ஒரு திரைப்படத்தை சீன் மாறாமல் அப்படியே காப்பியடிப்பது. இவர்களுக்கெல்லாம், திருட்டு டிவிடி பற்றி புகார் சொல்ல என்ன அருகதை இருக்கிறது.]]]
காப்பியடித்ததை மட்டுமே குற்றம், குறையாகச் சொல்ல முடியும்..
மற்றபடிக்கு திரைப்படத்தின் கதையும், படமாக்கிய விதமும், தமிழுக்காக மாற்றியிருக்கும் வித்தையும் அருமைதான்..!
[[[சிங்கக்குட்டி said...
தெளிவான விளக்கம் நன்றி.
அப்ப படத்த பாக்கலாம் :-)]]]
நிச்சயமா சிங்கம்..!
[[[ஷண்முகப்ரியன் said...
இன்றைய இளைய சமுதாயத்தினரின் எண்ணவோட்டங்கள் வெறுமையான கொண்டாட்டங்கள் மட்டுமே என்பதற்கு இத்திரைப்படத்தில் கைதட்டல்கள் கிடைத்த காட்சிகளை வரிசைப்படுத்தினால் தெளிவாகிறது.//
சமூகப் பொறுப்புடன் அருமையாக விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள், சரவணன். பாராட்டுக்கள்.]]]
நன்றிகள் ஸார்..!
என்னதான் திரையுலகத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் அந்த எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை..!
[[[PNS PANDIAN said...
விமர்சனம் அருமை. பாராட்டுக்கள்.]]]
நன்றி பாண்டியன் ஸார்..!
[[[bharathnryn said...
Neenga tutsi-oda remake nu sollirukeenga... movie name s TSOTSI... pronounciation s T silent So "SAATSI"]]]
இந்த அளவுக்கெல்லாம் நமக்கு அறிவு இல்லீங்கோ..!
[[[krish said...
குழந்தைகள் வாரியம் பற்றி நீங்கள் கூறிய கருத்தை சுஜாதாகூட விளம்பர படத்தில் நடிக்கும் குழந்தைகள் பற்றி எழுதியுள்ளார். பாண்டியில் ஒரு விளம்பர படம் ஒரு சிறுவன் சைக்கள் ஓட்டி வந்து நிறுத்துவது போல் பிரஞ்சு துதரகம் தெருவில் எடுத்தார்கள். கிட்டதட்ட 100 டேக் இருககும். என் மனைவி அவர்களிடம் எத்தனை தடவை அந்த சின்ன குழந்தையை ஓட்ட சொல்வீகள் என்று கோபமாக கேட்டார்கள். அத்தனைக்கும் அச்சிறுவனின் தாய் ஒரு உணர்ச்சியும் இன்றி பார்த்து கெண்டிருந்தார்கள். பெற்றோர்களின் பேராசைதான் இதற்கு காரணம்.]]]
மிகச் சரியான உதாரணம் ஸார்..!
எப்படியாச்சும் கஷ்டப்பட்டாவது பணம் சம்பாதிக்கட்டுமே என்கிற பெற்றோர்களின் ஆர்வத்திற்கு பிள்ளைகள்தான் பலிகடா ஆகுகிறார்கள்..!
[[[jackiesekar said...
அப்ப படம் பார்க்கலாம்னு சொல்லறிங்க...? அப்படித்தானே..]]]
யெஸ்.. யெஸ்.. ஜாக்கி..!
[[[பித்தன் said...
appa padaththa paaththura vendiyathuthaan, thoo kilambitten, inoxla oru ticket pottura vendiathuthaan aennaa naan ippo en thaai madiyil irukkiren (at hom]]]
என்ன லொள்ளா..?
நேத்து மாலை தான் படம் பார்த்தேன். கண்டிப்பாக படம் ஓடிடும் பாஸ் . படத்தில் சில குறைகள் இருந்தாலும் ஒரிஜினல் படத்தை பார்க்காததால் எனக்கு இந்த படம் புடிச்சிருக்கு.
\\வனவிலங்குகள் வாரியம், சுகாதாரத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்று குழந்தைகள் வாரியமும் திரைப்படங்களின் மீது ஏதாவது கட்டுப்பாடுகளை விதித்தால் நல்லதோ என்று இத்திரைப்படத்தை பார்த்த பின்பு தோன்றுகிறது.//
இதை நான் வழிமொழிகிறேன்
[[[Romeoboy said...
நேத்து மாலைதான் படம் பார்த்தேன். கண்டிப்பாக படம் ஓடிடும் பாஸ். படத்தில் சில குறைகள் இருந்தாலும் ஒரிஜினல் படத்தை பார்க்காததால் எனக்கு இந்த படம் புடிச்சிருக்கு.]]]
இதைத்தான் யோகம் என்று குறிப்பிட்டேன்..!
[[[Romeoboy said...
\\வனவிலங்குகள் வாரியம், சுகாதாரத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்று குழந்தைகள் வாரியமும் திரைப்படங்களின் மீது ஏதாவது கட்டுப்பாடுகளை விதித்தால் நல்லதோ என்று இத்திரைப்படத்தை பார்த்த பின்பு தோன்றுகிறது.//
இதை நான் வழிமொழிகிறேன்.]]]
நன்றி ரோமியோபாய்..!
did you mean this movie? http://www.imdb.com/title/tt0111579/
[[[the Dreamer said...
did you mean this movie? http://www.imdb.com/title/tt0111579/]]]
இல்லை.. படத்தின் பெயர் tsotsi.
இப்படி ஒரு ரஷ்ய மொழிக் கதையை தமிழில் படித்ததாக ஞாபகம். யாரை யாரோ சுட்ட்டுட்டாங்கள்.
என்ன எல்லோரும் பின்னூட்டத்துல அரைச்ச மாவையே அரைக்கிராய்ங்க. அப்டியே காப்பி பண்ணிட்டாங்க..ன்னு எப்பிடி சொல்றாங்க..ன்னு தெரியல.. தமிழ்ல தான எடுத்துருக்காங்க. அதை கூட கவனிக்காம லா? படம் பாக்குறாங்க .... என்ன விமர்சனமோ? தெரியல்ல ...
[[[pukalini said...
இப்படி ஒரு ரஷ்ய மொழிக் கதையை தமிழில் படித்ததாக ஞாபகம். யாரை யாரோ சுட்ட்டுட்டாங்கள்.]]]
அப்படியா..? புது விஷயமா இருக்கு..!
[[[பொற்கோ said...
என்ன எல்லோரும் பின்னூட்டத்துல அரைச்ச மாவையே அரைக்கிராய்ங்க. அப்டியே காப்பி பண்ணிட்டாங்கன்னு எப்பிடி சொல்றாங்கன்னு தெரியல.. தமிழ்லதான எடுத்துருக்காங்க. அதை கூட கவனிக்காமலா படம் பாக்குறாங்க. என்ன விமர்சனமோ? தெரியல்ல.]]]
நக்கலுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்படி பார்த்ததில்லை..!
See who owns nosymbolrequired.co.uk or any other website:
http://whois.domaintasks.com/nosymbolrequired.co.uk
See who owns sagate.com or any other website.
Post a Comment