சரோஜா - கை தவறிய "புகழ்!"

19.09.2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

3 நாட்கள் முன்னதாக “சரோஜா” திரைப்படத்தை மிக, மிகத் தாமதமாகப் பார்த்தேன். எவ்வளவு சீரியஸான திரைப்படத்தையும் வெற்றிகரமான காமெடிப் படமாகத் தன்னால் மாற்ற முடியும் என்பதனை வெங்கட் பிரபு மறுபடியும் நிருபித்திருக்கிறார்.

இதற்கு முந்தைய படமான சென்னை-600028 திரைப்படமே “லகான்” திரைப்படத்தின் கதைக்கருவோடு ஒத்துப் போயிருந்தாலும், அதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியைத் தன் வயதையொத்த, தன் சக நண்பர்களின் கொண்டாட்டத்திற்காக என்று திட்டமிட்டு வெற்றி பெற்ற அவருடைய செயல் ஒரு துணிச்சல்கார புதிய இயக்குநரைத் தமிழ்த் திரையுலகத்திற்குக் கொடுத்தது.

“சரோஜா” அந்த யூனிட்டின் இரண்டாவது திரைப்படம். முதல் படத்தின் வெற்றியைத் தொட்டுப் பார்த்து அதே போல் மிக எளிமையாக, இன்றைய ஜீன்ஸ், மச்சி ஸ்டைல் இளைஞர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே அதே மாடலில் கலந்து கொடுத்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

படத்தின் கதையை முன்பே முழுமையாகத் தெரிந்த பின்புதான் படம் பார்க்கச் சென்றேன். இருந்தாலும் making என்கிற வார்த்தைதான் தமிழ்ச் சினிமாவில் இன்றைக்கு யாருக்கும் புரியாத ஒரு வார்த்தை. இந்த மந்திர வார்த்தையை யாரால் புரிந்து கொள்ள முடிகிறதோ அவர்தான் ஜெயிக்கும் இயக்குநர்.
அந்த making எப்படியிருக்கிறது என்பதற்காகவே காணச் சென்றேன்..

படம் பிரமாதம் என்று சொல்வதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும், முழுக்க, முழுக்க காமெடியைக் கலந்துவிட்டதனால் அந்த வார்த்தையைச் சொல்ல முடியாமல் தடுமாற்றம் ஏற்படுகிறது.

ஆனால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம்.. பேப்பர் வொர்க்.. இந்தப் படத்திற்கு பேப்பர் வொர்க் என்கிற வேலைக்காகத்தான் வெங்கட்பிரபு நிச்சயம் மல்லுக் கட்டியிருக்க வேண்டும். இதனைத்தான் நான் பிரமிப்பாக பார்க்கிறேன்.

திரைக்கதை அமைப்புகள் அவ்வளவு அழகான ஒரு நேர்க்கோட்டில் கச்சிதமாக வளைந்து, நெளிந்து செல்கின்ற பாங்கில் எந்தவொரு குழப்பமும் நிகழாமல் சென்றிருப்பது பாராட்டுக்குரியது..

பொதுவாகவே தமிழ்ச் சினிமாவில் பெரிய இயக்குநர்களைத் தவிர மற்றவர்கள் ஸ்பாட்டிற்கு வந்துதான் வசனத்தை எழுதுவார்கள். அப்போதுதான் மூட் வரும் என்பார்கள். அதிலும் 99 சதவிகிதம் காமெடித் திரைப்படங்கள் இப்படித்தான் நடக்கும்.

ஆனால் இதில் அது சாத்தியமில்லாததுபோல் எனக்குத் தோன்றுகிறது. நிச்சயம் அது போல் செய்யாமல் மனப்பாடம் செய்த பின்பே களத்தில் இறங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதிலும் அந்த குடோன் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் முன்பே கச்சிதமாகத் திட்டமிட்டே செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வெங்கட்பிரபு தனது யூனிட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் மிகத் துல்லியமாகப் புரிந்து வைத்து அவர்களுக்கேற்ற ஒரு வேடத்தைக் கொடுத்து வேலை வாங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

பிரம்மானந்தம் கேரக்டரை அவர் பயன்படுத்தியிருக்கிறவிதத்தில் இருந்து திரைக்கதை யுக்தியில் வெங்கட்பிரபுவின் திறமையை கண்டு கொள்ள முடிகிறது.

சரணின் தொணத்தொண மனைவி கேரக்டரும், அதனை நினைத்துப் பார்த்து அல்லல்படும் சரணின் மெதுவான நடிப்பும் கச்சிதம்தான்.. அவருக்கேற்ற வேடத்தை அவரே தேர்ந்தெடுத்து செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

வெங்கட்பிரபு, சரண், பிரேம்ஜி, யுவன்சங்கர்ராஜா என்கிற கூட்டணி ஏதோ இந்த ஒரு திரைப்படத்திற்காக உருவானதல்ல..

இவர்களுடைய தகப்பன்மார்கள் முதல் தலைமுறையாய் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒன்றினைந்து உழைத்த போது, அவர்களுக்குள் இருந்த குடும்ப நெருக்கமே இந்த இளைஞர்களையும் இன்றுவரையிலும் நெருக்கமானதாகவே வைத்திருக்கிறது எனலாம்.

10 ஆண்டுகளுக்கு முன்பாக நான் சென்னை வந்து வேலைக்காக நடிகை ‘குட்டி பத்மினி’யின் அலுவலகத்திற்கு நடையாய், நடை நடந்து கொண்டிருந்தபோது எஸ்.பி.பி.யின் வீடு வழியாகச் செல்ல வேண்டி வரும். அப்போதெல்லாம் இப்போது இருப்பது போன்ற போக்குவரத்து கிடையாது. தெரு வெறிச்சோடிக் கிடக்கும்.

அந்த வெறிச்சோடிய நடுத்தெருவில் எஸ்.பி.பி.யின் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்கள் பிரேம்ஜியும், பிரபவும், சரணும்..

அந்தப் பழக்கம் அவரவர் வேலை அவரவர்க்கு என்ற ரீதியில் இன்றைக்கும் தொடர்ந்து வந்து தமிழ்த் திரையுலகத்திற்கு ஒரு டிரெண்ட் செட்டரான கிரியேட்டிவ் டீமை காட்டியிருக்கிறது எனில், இவர்களின் பெற்றோர்களுக்குத்தான் நாம் ஒரு ‘ஜே’ போட வேண்டும்.

இத்திரைப்படத்தில் என்னதான் பிடித்தமானவைகள் நிறைய இருந்தாலும், பொதுப்புத்தி என்ற ஒன்று நமக்குள் உண்டு. அதன்படி பார்த்தால் இப்படத்திற்கு நிச்சயமாக A சர்டிபிகேட்தான் தந்திருக்க வேண்டும். ஆனால் எப்படி U கொடுத்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

குழந்தைகள் பார்க்கக் கூடாத வன்முறைக் காட்சிகளெல்லாம், பாலியல் நோக்கில் அமைந்த காட்சிகளெல்லாம் இப்படத்தில் மலிந்து இருந்தும், சென்சார் அதிகாரிகள் கண்ணை மூடியிருந்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.

பிரகாஷ்ராஜின் மகளைக் கட்டிப் போட்டிருக்கும் காட்சியிலும், அவளை அணுகும் ஒரு ரவுடியின் செயலிலும் இருக்கும் பாலியல் நோக்கு சார்ந்த வன்முறை, நிச்சயம் குழந்தைகள் மனதில் பதியக்கூடாத விஷயம். பதியும்படி எடுத்திருந்ததினால்தான் நான் இதனைச் சொல்கிறேன்.

அதே போல் நிகிதா ஆடும் அந்த குடோன் டான்ஸ்.. சென்சார் போர்டு பாடல் காட்சியில் மெய்மறந்துவிட்டார்களோ என்றுதான் தோன்றுகிறது.

சிலத் திரைப்படங்களில் கூட்டமாக ஆடுகின்ற டான்ஸர்களின் முந்தானை விலகியிருந்தாலும் அதனை குளோஸப்பில் காட்டக் கூடாது என்பார்கள். காட்டினால் வெட்டுவார்கள். “இல்லை. நிச்சயம் வேண்டும்” என்று இயக்குநர் சொன்னால் “A-தான் தருவேன்” என்பார்கள். வாதிட்டுப் பார்த்தும் முடியாமல் போகும்பட்சத்தில் கத்திரி வெட்டுக்குப் பலியாகும் அந்தக் காட்சி.

இப்போதெல்லாம் வரக்கூடியத் திரைப்படங்களில் அனைத்துப் பாடல் காட்சிகளுமே கண்ணை கூச வைக்கக் கூடியதாகத்தான் அமைகின்றன. சென்சார் போர்டு தனது விதிமுறைகளை பீரோவுக்குள் பூட்டி வைத்துவிட்டது என்று நினைக்கிறேன்.

இதே கதையைத்தான் “அஞ்சாதே” திரைப்படத்திலும் செய்தார்கள். இப்போது இந்தப் படத்திலும்.

“அஞ்சாதே” திரைப்படத்திற்கும் இத்திரைப்படத்திற்குமான ஒற்றுமையும் உண்டு. கதையின் களம் இது போன்ற காமெடி களமாக இல்லாமல் சீரியஸாக இருந்திருந்தால், நிச்சயம் “அஞ்சாதே” படத்தைப் போல அமைந்திருக்கும் திரைப்படம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லியிருக்கலாம்.

வாய்ப்பைக் கெடுத்தது இயக்குநர் வெங்கட்பிரபுதான்..

ஒரு திரைப்படம் பார்த்து முடித்ததும் மனதில் எதையோ தோற்றுவிக்க வேண்டும் என்று நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். "அஞ்சாதே"; "சுப்பிரமணியபுரம்" போல..!

ஆனால் இத்திரைப்படத்தின் முடிவில் நகைச்சுவைக்காக எடுத்திருந்த டைட்டில் காட்சிகளும் சேர்ந்து மனதை கூல் செய்துவிட்டதால், எழுதுவதற்கு வேறு ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

பரவாயில்லை.. ஆற, அமர, சிரிக்க வைத்து மனசை லேசாக்கி அனுப்பி வைத்த அந்தக் குழுவுக்கு எனது நன்றிகள்..

படம் உதவி : indiaglitz.com

15 comments:

Cable சங்கர் said...

எனக்கென்னவோ.. அவர்களுக்கு புகழ் ஓண்ணும் தவறின மாதிரி தெரியல..உண்மைத்தமிழன்.

அருண்மொழி said...

டுபாக்கூர் தமிழரே,

இவ்வளவு சின்ன பதிவா:-(((.

கணினி பிரச்சனையா அல்லது கை பிரச்சனையா?

யோசிப்பவர் said...

என்ன, பதிவு சட்டுனு முடிஞ்சிருச்சு!!;-)

FunScribbler said...

அந்த கோடான கோடி பாடலில் வருமே ஒரு step, முன்னாடி பின்னாடி ஏதோ செய்வார்களே, அந்த ஸ்டேப் தான்ங்கோ.... 'சூப்பர்' ஸ்டேப்!

குசும்பன் said...

//இப்போதெல்லாம் வரக்கூடியத் திரைப்படங்களில் அனைத்துப் பாடல் காட்சிகளுமே கண்ணை கூச வைக்கக் கூடியதாகத்தான் //

ஏன் அண்ணா அங்கு ஏதும் பல்பு பொருத்தி இருப்பார்களோ?
கண்ணு கூசுதுன்னு சொல்றீங்களே அதான் கேட்டேன்.

குசும்பன் said...

அண்ணே உடம்பு ஏதும் சரி இல்லையா?

2 மணி நேரம் ஓடும் படத்துக்கு 3 மணி நேரமாவது படிக்கும் படி விமர்சனம் எழுதுவதுதானே உங்க ஸ்டைல் ஏன் என்ன ஆச்சு!!!

உண்மைத்தமிழன் said...

//cable sankar said...
எனக்கென்னவோ.. அவர்களுக்கு புகழ் ஓண்ணும் தவறின மாதிரி தெரியல..உண்மைத்தமிழன்.//

அவர்களுக்குரிய அங்கீகாரம் "காமெடியா படம் பண்ணுவாங்க; கேரண்டியா இருக்கும்.." என்கிற ஒரு வரியே போதுமென்று நினைக்கிறீர்களா கேபிள் ஸார்..

முரளிகண்ணன் said...

நல்ல பதிவு

உண்மைத்தமிழன் said...

//அருண்மொழி said...
டுபாக்கூர் தமிழரே, இவ்வளவு சின்ன பதிவா:-(((. கணினி பிரச்சனையா அல்லது கை பிரச்சனையா?//

அதான் எழுதியிருக்கனே.. மனதில் எதையும் தோற்றவிக்கவில்லை என்று..

ஆமாம்.. அதென்ன எப்போது எனது வீட்டிற்குள் வந்தாலும் "டுபாக்கூர்" என்றே அழைக்கிறீர்கள்..? ஏதும் மறதி நோயா..?

உண்மைத்தமிழன் said...

//யோசிப்பவர் said...
என்ன, பதிவு சட்டுனு முடிஞ்சிருச்சு!!;-)//

போதும் ஸார்.. சிரிக்க வைச்சாங்க.. ஜாலியா என்ஜாய் பண்ணினோம்.. அவ்வளவுதான்.. யோசிக்க வைக்கலையே யோசிப்பவரே..?

உண்மைத்தமிழன் said...

//Thamizhmaangani said...
அந்த கோடான கோடி பாடலில் வருமே ஒரு step, முன்னாடி பின்னாடி ஏதோ செய்வார்களே, அந்த ஸ்டேப் தான்ங்கோ.... 'சூப்பர்' ஸ்டேப்!//

சரி.. சரி.. ஒத்துக்குறேன் எனக்கு வயசாயிருச்சுன்னு..

உண்மைத்தமிழன் said...

///குசும்பன் said...
//இப்போதெல்லாம் வரக்கூடியத் திரைப்படங்களில் அனைத்துப் பாடல் காட்சிகளுமே கண்ணை கூச வைக்கக் கூடியதாகத்தான் //
ஏன் அண்ணா அங்கு ஏதும் பல்பு பொருத்தி இருப்பார்களோ? கண்ணு கூசுதுன்னு சொல்றீங்களே அதான் கேட்டேன்.///

கேப்பலே.. கேப்ப.. உன்னை மாதிரி விடலைப் பசங்களாலதான் அந்த மாதிரி படமெல்லாம் ஓடுது.. மொதல்ல உங்கூர் மாதிரி சென்சார் கொண்டு வரணும்.. அப்பத்தான் உங்களையெல்லாம் மேய்க்க முடியும்..

உண்மைத்தமிழன் said...

//குசும்பன் said...
அண்ணே உடம்பு ஏதும் சரி இல்லையா? 2 மணி நேரம் ஓடும் படத்துக்கு 3 மணி நேரமாவது படிக்கும் படி விமர்சனம் எழுதுவதுதானே உங்க ஸ்டைல் ஏன் என்ன ஆச்சு!!!//

எலேய் வயித்தெரிச்சலை வாங்காதேல்ல.. அதான் அல்லாரும் பிட்டுப் பிட்டா படத்தை முழுசா ஓட்டி முடிச்சிட்டாங்களே.. பின்னால நான் செப்புறதுக்கு என்ன இருக்குன்றேன்..

உண்மைத்தமிழன் said...

//முரளிகண்ணன் said...
நல்ல பதிவு//

நல்ல, அருமையான, வித்தியாசமான, அழகான, புல்லரிக்க வைக்கும் கமெண்ட்டு))))))))))))))))))

நன்றிங்கோ முரளி ஸார்..

abeer ahmed said...

See who owns warriorforum.com or any other website:
http://whois.domaintasks.com/warriorforum.com