Showing posts with label மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு. Show all posts
Showing posts with label மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு. Show all posts

மும்பை நில ஊழல் - புதிய முதல்வர் பிரிதிவிராஜ் சவானும் திருடன்தானாம்..

27-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மும்பையின் கொலாபா பகுதியில் ஆதர்ஷ் சங்கம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்பில் ஊழல் என்று எழுந்த விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் அசோக்சவானின் தலையும் உருண்டது. புதிய முதலமைச்சராக அப்போது மத்திய அமைச்சராக இருந்த பிரிதிவிராஜ் சவான் இந்தியாவின் அன்னை சோனியாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரும் கர்ம சிரத்தையாக மும்பைக்கு ஓடோடி வந்து பதவியேற்ற உடனேயே அவர் மீதும் ஊழல் புகார்கள் எழுந்தன. அது தீப்பற்றி எரிவதற்குள் ஸ்பெக்ட்ரம் ஊழலின் புகை அனைவரின் கண்களையும் மறைத்துவிட்டதால் அப்போதைக்கு மட்டுமல்ல.. இப்போதுவரையிலும் தப்பித்த நிலையில்தான் உள்ளார் சவான்.

அது என்ன ஊழல்..? என்ன வகையானது..? என்பதை யோசித்துத் தேடியபோது விபரங்கள் சரிவர கிடைக்கவில்லை. ஆனால் இந்த வார துக்ளக் பத்திரிகையில் அதனைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


அதாகப்பட்டது என்னவெனில் மும்பையின் மத்திய கிழக்கு வடலாப் பகுதியில் - பிரிதிவிராஜ் சவான் 2003-ம் ஆண்டு சுமார் 1100 சதுர அடியில்,  ஒரு பிளாட் வீட்டை வாங்கியிருக்கிறார்.

இதிலென்ன முறைகேடு? ஊழல் என்கிறீர்களா..? சற்றுப் பொறுங்கள். இந்த வீட்டைக் கட்டியது அரசு கூட்டுறவு சங்கம். இது போன்ற வீடுகளை வாங்க வேண்டுமெனில் அதற்கான சில விதிமுறைகள் எல்லாம் இருக்கின்றன. அதில் ஒரு விதிமுறை சொல்வது என்னவென்றால் வாங்குபவரின் வருடாந்திர வருமானம் 1.50 லட்சத்தைவிட குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்பது.

ஆனால் இந்த வீட்டை வாங்கும்போது பிரிதிவராஜ் சவான் எம்.பி.யாக இருந்திருக்கிறார். அவரது மாத வருமானமே 76000 ரூபாய். ஆக நியாயப்படி பார்த்தால் அவருக்கு இந்த வீடு வாங்கக் கோரும் விண்ணப்பம் வாங்கும் தகுதிகூட இல்லை. ஆனாலும் வாங்கியிருக்கிறார்.. எப்படி அவரால் முடிந்தது..?

அடுத்த மெகா முறைகேடு.. அப்போதைய முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேயின் தனிப்பட்ட பிரத்யேகக் கோட்டாவில்தான் இதனை வாங்கியிருக்கிறார். முதல்வருக்கென்று தனி கோட்டா தருவதுகூட முறைகேடுதானே? ஊழல்தானே..? இதையெல்லாம் இந்த அரசியல்வியாதி நாய்கள் யோசிக்க மாட்டார்களா.? வாரி வழங்கிவிட்டார் ஷிண்டே.. சரி எத்தனை ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள்.. அங்கேயும் ஒரு மெகா ஊழல்..

2.25 கோடி மதிப்பு வாய்ந்த அந்த 1100 சதுர அடி அளவுள்ள வீட்டை வெறும் 4 லட்சம் ரூபாய்க்கு கிரயப் பத்திரம் செய்து கொடுத்திருக்கிறார்கள். என்ன கொடுமைடா இது..?

அரசியல்வாதிகளை திட்டிக்கிட்டே இருக்கீங்க.. வஞ்சிக்கிட்டே இருக்கீங்களே..? வேற வேலை வெட்டி இல்லையா உங்களுக்கு..? வாய் வலிக்கலையா..? ஏன் போரடிக்கிறீங்க..? என்றெல்லாம் பேசக்கூடிய அன்பர்கள் கொஞ்சம் இதற்கு ஒரு விளக்கத்தைச் சொல்லுங்களேன்..

இந்த விஷயத்தைக்கூட சமூக நல ஆர்வலர் ஒருவர் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் மூலம் தெரிந்து வைத்திருக்கிறார். சவான் பதவியேற்ற உடனேயே இந்தத் தகவலை வெளியிட்டு நியாயம் கேட்டிருக்கிறார். நியாயம் கேட்டா உடனே பதில் சொல்ல அவர் என்ன சாமான்யனா..? அரசியல்வியாதி இல்லையா..? அதுலேயும் மாநிலத்தையே ஆளும் முதல் அமைச்சர் இல்லையா..? சுலபத்துல பேசிருவாரா..? கொஞ்சம் லேட்டாகத்தான் ஆனால் அட்டகாசமா பதில் சொல்லியிருக்காரு..

“2003-ல் எனது தாய் பிரேமிலா பாய் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது புற்றுநோயால் அவதிப்பட்டு மும்பையில் சிகிச்சை பெற வசதியாக மேற்படி வீடு வாங்கப்பட்டிருந்தது உண்மைதான். ஆனால் அதில் குடி புகுவதற்குள் அவர் இயற்கை எய்திவிட்டார். நான் பாராளுமன்ற அங்கத்தினராக அப்போது முதல் இருந்து வருவதால் அவ்வீடு என் பெயரில் உள்ளது. இதில் தவறுகள் இருந்தால் வீட்டை அரசுக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்..” - எப்படி இருக்கு பதில்..?

64 வயசாயிருச்சுல்ல.. சுயபுத்தி இருக்குல்ல.. அறிவு இருக்குல்ல.. படிச்சாருக்குல்ல.. 2.25 கோடி மதிப்புள்ள அரசு சொத்தை வெறும் 4 லட்சத்துக்கு வாங்குறோமேன்னு ஒரு குற்றவுணர்ச்சியாவது இருக்கான்னு பாருங்க.. தப்புன்னா திருப்பிக் கொடுக்கிறேன்னு கூலா ஒரு பதில்.. மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையெல்லாம் இவங்ககளுக்கு இருக்கவே இருக்காதா..? பின்ன என்னதான் ஸ்கூல்ல படிச்சிட்டு வர்றாங்க இவங்க..? இந்த லட்சணத்துல எம்.பி.யாம்.. மத்திய அமைச்சராம்.. இருக்குற சில வெட்கக்கேடுகள்ள இதுவும் ஒரு வெட்கக் கேடு..

இப்படியொரு விளக்கம் சொன்ன இந்த மகாத்மா சில கேள்விகளுக்கு மட்டும் வேணும்னே பதில் சொல்லாம எஸ்கேப்பாயிட்டாரு..

1. அவருடைய மாத வருமானம் 76000 ரூபாயாக இருக்கும்போது வருடாந்திர வருமானம் 1.50 லட்சத்திற்கு குறைவுன்னு விண்ணப்பத்துல எழுதினது ஏன்..?

2. எந்த அடிப்படையில் 2.25 கோடி மதிப்புள்ள வீட்டை சலுகை விலையில் 4 லட்சத்திற்குப் பெற்றார்..?

3. அவரது அம்மாவுக்குத்தான் அந்த பிளாட் கொடுக்கப்பட்டது என்றால் அம்மா இறந்த பிறகு சவான் ஏன் அதன் மீது சொந்தம் கொண்டாடினார்..?

4. எந்த ஊழலும் இல்லைன்னா இப்போ வீட்டை திரும்பி ஒப்படைக்கிறேன்னு சொல்றது எதுக்கு..? ஏதேனும் விசேஷப் பிரார்த்தனைக்காகவா..?

இப்படியெல்லாம் பா.ஜ.க.-சிவசேனா கட்சிக்காரங்க கேள்வி மேல் கேள்வி கேட்டாலும், எருமை மாடு மேல மழை பேஞ்ச கதையா “எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் இப்போ சி.எம்.” அப்படீன்னு சொல்லி எஸ்கேப்பாயிட்டாரு சவான்.

ஆனால் அவருக்குப் பதிலா இப்போ துணை முதல்வரா பதவி வகிக்கிற சரத்பவாரின் அண்ணன் மகனான அஜீத்பவார்தான் பதில் சொல்லியிருக்காரு. அதுவும் எப்படின்னு பாருங்க..

“இப்படிப்பட்ட கேள்விகளை பிரிதிவிராஜ் சவான் ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் ஈவிரக்கமின்றி சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அபாண்டமாகக் கூறுகின்றன. அவர் மீது குற்றச்சாட்டுக்களை வெறும் அரசியல் காரணங்களுக்காகச் சுமத்தி தங்களது காழ்ப்புணர்ச்சியை மட்டுமே எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்துகின்றன. எப்படிப்பட்ட மாபெரும் ஊழலின் ஆணி வேரையே அகற்ற பிரிதிவிராஜ் சவான் வந்துள்ளார் என்பதையும், பதவியேற்ற 72 மணி நேரத்திற்குள் ஆதர்ஷ் கட்டிடத்தை ஏன் இடிக்கக் கூடாது என்று கேள்வி கேட்டு மத்திய சுற்றுப் புறச் சூழல் அமைச்சகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பக் காரணமாக இருந்த முதல்வரின் அதிரடிச் செயலில் இருந்தே அவரது நியாய, நாணய உணர்வின் வெளிப்பாட்டைப் புரிந்து கொள்ள முடியவில்லையே..?” இப்படி பக்காவான கூட்டணிக் கட்சிக்காரனா பேசியிருக்காரு அஜீத்பவாரு.

இனி என்னாகும்..? சட்டமன்றத்தில் இந்தப் பேச்சு எழுந்து கலாட்டா நடக்கும்போது வீட்டைத் திருப்பிக் கொடுத்துட்டு எனக்குக் கொடுத்தத் திருட்டுப் பட்டத்தை வாபஸ் வாங்கிருங்கன்னு நம்மளைப் பார்த்து வெக்கமில்லாம இளிக்கப் போறாரு முதலமைச்சரு..

இதேபோலத்தான் ஆதர்ஷ் ஊழலும் நடந்தது. உடனேயே அசோக் சவானை வீட்டுக்கு அனுப்பின சோனியாம்மா.. அதே மாதிரி இன்னொரு ஊழலை செஞ்ச இன்னொரு சவானுக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தது ஏனோ..?

எல்லாம் நடிப்புங்க.. பாருங்க.. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட்டோம்னு ஒரு பாவ்லா.. அப்படியே கட்சியையும் உடையாம பார்த்துக்கணும்.. கூட்டணியும் பிரியாம பார்த்துக்கணும். நமக்கும் தலையாட்டற ஆளாவும் இருக்கணும்.. அப்படீன்னு இன்னொரு ஊழல்வாதியைக் கொண்டாந்து உக்கார வைச்சிருக்காங்க..

இதோட இன்னொரு விஷயமும் இப்போ வெளில வந்திருக்கு. மத்திய ராணுவ அமைச்சர் அந்தோணி, ராணுவ இலாகாவில் எத்தனை இடங்களில் நிலம் ஆக்கிரமிப்பு அல்லது அபகரிப்பு மூலமாக ஊழல் நடந்துள்ளது என்பதை ஆராய ஆய்வு நடத்தும்படி உத்தரவு போட்டிருக்காராம்.

அப்போது, முதலில் வெளிப்பட்ட குட்டு, புனே நகரின் மையப் பகுதிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்கள் மலிவு விலையில் மறைந்த ஊழலும் ஒன்று.. அந்தப் பகுதி நமது இன்னுமொரு மாபெரும் ஊழல் விளையாட்டு அரசியல்வியாதி சுரேஷ் கல்மாடியின் பாராளுமன்றத் தொகுதிக்குள்தான் அடங்கியிருக்கிறதாம்.. அடடா என்ன பொருத்தம்.. என்ன பொருத்தம்..?

அத்தனை அரசியல்வியாதிகளும் சுருட்டறதுல மட்டும்தாங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கானுக.. நாம வழக்கம்போல அடுத்து  ஓசில என்ன கிடைக்கும்னு நாக்கைத் தொங்கப் போட்டுட்டு காத்துக்கிட்டிருப்போம்..!!!

மும்பை ஆதர்ஷ் அடுக்கு மாடி ஊழல்...! - முழுமையான ரிப்போர்ட்..!

15-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நானும் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்திய அரசியல்வியாதிகளைப் பற்றிப் படித்து வருகிறேன். தெரிந்து வைத்திருக்கிறேன். ஒரு அரசியல்வியாதியின் மகன்களோ, மகள்களோ, பேரப்பிள்ளைகளோ ராணுவத்தில் வேலை பார்ப்பதாகப் படித்தோ, தெரிந்தோ எனக்கு நினைவே இல்லை.

அது மாதிரியான ஒரு தேசபக்தி மிகுந்த, அடிபணிந்த வேலைக்கு தத்தமது பிள்ளைகளை அனுப்ப நம்மூர் அரசியல்வியாதிகளுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..? ஒரு வட்டச் செயலாளரின் மகன் என்றாலே போதும்.. சைக்கிளில் சென்றுகூட மாமூலை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு ஒயிட் காலர் ரவுடியைப் போல உலா வரலாம்.

எதுக்கு இப்படி துப்பாக்கியைத் தூக்கிக்கிட்டு இராணுவத்துல சேர்ந்து அல்லல்படணும்.. எவன், எவனுக்கோ சல்யூட் அடிச்சு ஓயணும்.. உள்ளூர்ல அத்தனை போலீஸ்காரனும்தான் எங்களைப் பார்த்து சல்யூட் அடிக்கிறாங்களே இது போதாதா என்பார்கள்.

ஏற்கெனவே தொட்டில் முதல் சுடுகாடுவரையிலும் ஊழலைப் பார்த்து, பார்த்து சலித்துப் போய்விட்டோம். என்ன..? ஒவ்வொரு முறையும் ஊழலின் தொகையும் கூடிக் கொண்டே போவதுதான் இந்தியாவின் நிலையைப் பார்த்து நமக்கு பகீரென்கிறது..! அரசியல்வியாதிகளுக்கோ அவங்களே அம்புட்டுக்கு கொள்ளையடிச்சாங்க. அவங்களைக் கேட்டீங்களா என்று நம்மையே திருப்பிக் கேட்கிறார்கள்..!

இராணுவ வேலைதான் வேண்டாம் என்றார்கள். ஆனால் அதிலும் முடிந்தால் காசை அள்ளலாம் என்று முடிவு செய்து இந்த உத்தம இந்திய அரசியல்வியாதிகளின் இந்த ஆதர்ஷ் அடுக்கு மாடி ஊழலால் ஏற்கெனவே கோவணத்தோடு நிற்கும் இந்தியாவின் மானத்தில் மேலும் ஒரு கிழிசல்.. இதனை கேவலமாக நினைத்துப் பார்ப்பது ஓட்டுப் போட்ட மக்களாகிய நாம்தான். அரசியல்வியாதிகள் இல்லை.

இது பற்றி இன்றைய 'தினமலர்' பத்திரிகையில் முழுப் பக்கத்திற்கு முழுமையான ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு படித்துத் தொலைத்தேன். நீங்களும் படித்துப் பாருங்கள். சிற்சில மாற்றங்களை நானும் செய்துள்ளேன்.

கடந்த 1999-ல் காஷ்மீர் மாநிலம் கார்கிலில் நடந்த போர் ஞாபகம் இருக்கிறதா..? அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கே தெரியாமல் அப்போதைய பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி முஷாரப்பே செட்டப் செய்ததுதான் இந்த கார்கில் போர்.
 
இறுதியில் இந்தியாதான் வெற்றி பெற்றது. இருந்தாலும், அந்த சண்டையில் இந்தியத் தரப்பில் 527 ராணுவ வீரர்கள் பலியாயினர்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்தச் சண்டையில் பலியான இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்துக்காகவும், இதில் சாகசம் செய்த ராணுவ வீரர்களுக்காகவும் மும்பை, கொலாபா பகுதியில் இலவசமாக வீடுகளை கட்டித் தர மகாராஷ்டிரா மாநில அரசு திட்டமிட்டது.

கடந்த 2000-ம் ஆண்டில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியின் விலாஸ்ராவ்  தேஸ்முக். வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்தவர் அசோக் சவான்.

முதலில் ஆறு மாடிகளைக் கொண்ட கட்டடத்தை கட்டுவதாகத்தான் முதலில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்பு ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

மும்பை கொலாபா பகுதி, கடற்கரையோர பகுதி என்பதால், அங்குள்ள பெரும்பாலான இடங்கள் கடற்படையின் கண்காணிப்பில் இருந்தன. கடற்படைக்கு தேவையான வெடிமருந்துகள் மற்றும் எரிபொருள்களை சேமித்து வைக்கும் டிப்போ அந்த பகுதியில்தான் இருந்தது.
 
இதனால் அந்தப் பகுதியில் எந்தப் பெரிய கட்டிடங்கள் கட்டினாலும் அதற்கு இந்தியக் கடலோரப் படையின் மேற்கு பிராந்தியத் தலைமையகத்தில் நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கியே தீர வேண்டும்.

இந்த விதிமுறை முன்பே இருந்தாலும் வழக்கம்போல நமது அரசியல்வியாதிகள் அரசியல் சட்டமே எங்க பாக்கெட்டில் என்பதைப் போல் மீறத்தான் செய்து வந்தார்கள். கசாப் பங்கு கொண்ட தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு மேற்குக் கரையோரம் தமது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியிருப்பதால் கடற்படை இப்போதுதான் இந்த விதிமுறையைப் பலப்படுத்த முனைந்தது. இதில்தான் இந்த மெகா ஊழலின் ஊற்றுக்கண் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆதர்ஷ் குடியிருபுக்காக அந்த பகுதியில் 3,824 ச.மீட்டர் பரப்பிலான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது வருவாய் துறை அமைச்சராக இருந்த சவானை, ஆதர்ஷ் கூட்டுறவு சங்க அதிகாரிகள் சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில்தான் அதுவரையில் கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்காக என்று மட்டுமே இருந்த விதிமுறைகள் நீக்கப்பட்டு அரசியல்வியாதிகளின் கை அரிப்புக்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கப்பட்டன.

ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் சார்பில் அசோக் சவானுக்கு 2000-ம் ஆண்டு ஜூன் 2-ல் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில், "உங்களுடன் நடந்த சந்திப்பின் அடிப்படையில், கொலாபா பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கார்கில் போர் வீரர்களுக்காக அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட முடிவு செய்துள்ளோம். மேலும், அந்த வீட்டு வசதி திட்டத்தில் ராணுவ வீரர்களை தவிர, பொதுமக்களையும் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொள்கிறோம்..' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தக் கடிதம்தான், தற்போது பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டது. இது குறித்த தகவல் மேற்கு பிராந்திய கடற்படைத் தளபதி அலுவலகத்தில் இருந்து ராணுவ மந்திரிக்கு அனுப்பப்பட்டது. இதன் பின்புதான் இந்த ஊழலே வெளிச்சத்துக்கு வந்தது.

இதற்குப் பின், அடுத்தடுத்து வெளியான தகவலில் ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் ஆதி முதல் அந்தம்வரை நடந்த முறைகேடுகளும், ஊழல்களும் அம்பலத்துக்கு வந்துள்ளன..

ஆறு மாடிகளை கொண்டதாக துவக்கப்பட்ட திட்டம், பல நூறு கோடி வசூலுக்காக 31 மாடிகளை கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
இடையில் மகாராஷ்டிராவின் முதல்வர் பதவி அசோக் சவானின் கைக்கு வந்தவுடன், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்துக்கு மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகளை அளிப்பதற்கு, அவசரம், அவசரமாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த உதவிக்கு பதில் உதவியாக ராணுவ வீரர்களுக்காக கட்டப்படுவதாகச் சொன்ன இந்தக் குடியிருப்பில் மாகாராஷ்டிரா மாநில முதல்வர் அசோக் சவானின் மாமியார் பகவதி சர்மா, அவரது உறவினர்கள் மதன்லால் சர்மா, சீமா சர்மா ஆகியோருக்கும் முறைகேடாக வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை  ரூ. 60 லட்சத்தில் இருந்து 80 லட்சம்வரை என்றும் தீர்மானித்துள்ளார்கள்.

இதில் இன்னும் ஒரு வேடிக்கை.. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமலேயே, இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாம்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமலேயே மும்பை மாநகராட்சி, அரசுத் துறை நிறுவனங்கள் தத்தமது கடமையைச் செய்திருக்கின்ற என்றால்.. இதில் எத்தனை பெரிய, பெரிய கைகள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்? சாதாரணமான துரைசாமியோ, ராமசாமியோ வீட்டின் பாத்ரூமை மாற்றியமைத்தால்கூட எத்தனை முறை கார்ப்பரேஷன் அலுவலர்களை தொங்க வேண்டும் என்பது நமக்குத்தானே தெரியும்..?

இந்த முறைகேட்டில் அசோக் சவானுக்கு மட்டுமல்லாமல், முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஸ்முக், சுஷில் குமார் ஷிண்டே, நாராயண் ரானே ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த பிரபலங்களையும் வாயடைக்க வேண்டுமெனில் இவர்களுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்தால்தான் ஆச்சு என்பதால் இவர்களால் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கும், இந்த குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த அரசியல் கூட்டணியில் சுலபமாக விதிமுறைகளை மீறவும், கடிதங்களைப் பெற்றதற்காகவும் இராணுவ உயரதிகாரிகளையும் இந்தக் கூட்டணி தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் என்.சி.விஜ், கவுல், தீபக்கபூர், மாதவேந்திரா சிங் ஆகியோரது பெயரும், இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளது,

மேஜர் ஜெனரல் டி.கே.கவுல், கடந்த 2005-ல் ஏரியா கமாண்டராக இருந்தபோதுதான், அடுக்கு மாடி குடியிருப்பு அமைந்துள்ள இடத்தால், ராணுவத்துக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டது. மேலே கூறப்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கும் இந்த குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தவிர, மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாநில உயரதிகாரிகளும், இந்த ஆதர்ஷ் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இப்படி இந்தக் குடியிருப்பில் இருக்கும் 104 வீடுகள் அரசு உயர் அதிகாரிகள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ராணுவ தளபதிகள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மாநில சமூக நீதித் துறை செயலர் உத்தம் கோப்ராகடே மகள் தேவ்யானி, முன்னாள் மாநகராட்சி கமிஷனர் ஜெய்ராஜ் பதக்கின் மகன் கனிஷ்கா, முன்னாள் போக்குவரத்து துறை செயலர் சங்கீத்ராவின் மகன் ரஞ்சித், முன்னாள் தலைமைச் செயலர் சங்கரனின் மகன் சஞ்சய் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்பில் இப்படி தங்களது அதிகார பலத்தை பயன்படுத்தி அரசியல்வாதிகள், அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் ஆகியோர், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வீடுகளை பெற்றுத் தந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, இந்த அடுக்கு மாடி குடியிருப்பு, கடலோர ஒழுங்குமுறை பிராந்தியத்தின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி, ராணுவ ரகசியங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக இப்போது ராணுவத்தினரே சொல்கிறார்கள்..

ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ள மும்பை கொலாபா பகுதியில், கடலோர காவல்படை பிராந்தியத்தின் விதிமுறைகள் அமலில் உள்ளன. இங்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமானால், இந்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுதான் கட்ட வேண்டும். ஆதர்ஷ் கூட்டுறவு சங்கம், இந்த விதிமுறைகளை எல்லாம் பொருட்படுத்தவில்லை.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், இங்கு 30 மீட்டர் உயரத்துக்கு மேல், கட்டடம் கட்டக் கூடாது. ஆனால், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பின் உயரம் 100 மீட்டர். இந்த சங்கத்தில் பல வி.ஐ.பி.க்கள் இடம் பெற்றுள்ளதால், அவர்கள் வசதிக்கேற்ப விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்னை கொழுந்துவிட்ட எரிந்த பின்புதான் தீயை அணைக்கத்தான் மத்திய அரசும், மாநில அரசும் முனைந்தது. உடனடியாக அவசரம், அவசரமாக தனியார் விமானத்தைப் பிடித்து டெல்லி வந்து சேர்ந்து அசோக்சவானை டெல்லியம்மா சந்திக்க மறுத்து கேட்டுக்கு வெளியவே நிறுத்தி வைத்துவிட்டார்.

வெளியில் நிற்கும் பத்திரிகையாளர்களின் கண்களில் படாமல் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் அறை வாசலில் நிற்கும் பதைபதைப்புடன் அசோக்சவான் நின்றதைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. அங்கிருந்து தற்போதைய பஞ்சாயத்து மாமேதை பிரணாப் முகர்ஜியின் ஆலமரத்தடி பஞ்சாயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அசோக் சவான்.

அங்கு வைத்து தங்களது கொள்ளையடித்த கதையை எல்லாம் சொல்லி முடித்த பின்பே தலைவியிடம் முகம் காட்டும் வாய்ப்பு சவானுக்குக் கிடைத்தது. உலகத்தின் ஒரே ஜனாதிபதியான ஒபாமா இரண்டு நாட்களில் வர வேண்டியிருப்பதால் அதுவரையில் தொடருங்கள் என்று மட்டும் தலைவி சொல்ல.. இரண்டு நாட்களாச்சும் கிடைச்சுச்சே என்ற நினைப்பில்தான் தப்பியோடி மும்பை வந்து சேர்ந்தார் சவான்.

இதற்கிடையில் முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை ராணுவ அமைச்சகத்திடம் கடற்படை கடந்த புதன்கிழமையன்று அளித்தது. விசாரணை அறிக்கையோடு, மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் கடற்படை அளித்துள்ளது.

அப்போதுதான் தூங்கியெழுந்ததாக பாவ்லா காட்டி சுற்றுச் சூழல் அமைச்சகம் தங்களின் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டப்பட்டதாகச் சொல்லி ஆதர்ஷ் கூட்டுறவு சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

சவான் மும்பை திரும்பியவுடன் அவருடைய ஆளுமையின் கீழ் உள்ள மும்பை மின்சார வாரியம் குடியிருப்பவர்களின் விவரங்களை தெரிவிக்காவிட்டால், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை துண்டிக்கப் போவதாக  கடும் எச்சரிக்கை விடுத்தது.

உலகத்தின் ஜனாதிபதி பாரக் ஒபாமா டெல்லிக்கு நம் அழைப்பின்பேரிலேயே வந்து நம் காசில் சுமார் 2700 கோடியை காலி செய்துவிட்டுப் போன சில மணி நேரத்திலேயே அசோக் சவானும் தனது பதவியை ராஜினமா செய்ய அடுத்தப் பலியாடாக மத்திய அமைச்சர் பிருத்விராஜ் சவுகான் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

காங்கிரஸ் மேலிடத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை ஒரு தரப்பினர் பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். அவர்கள் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பியவுடன்தான், காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் அமளியை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் தலைமை எடுத்துள்ளது' என்கின்றனர்.

நாட்டுக்காக தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கான நலத் திட்டத்தை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மெகா ஊழல் புரிந்த அரசியல்வாதிகளின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வந்தது, ஆறுதல் அளிக்கிறது.  ஆனால், இந்த ஊழலுக்கு ராணுவ அதிகாரிகளே உடந்தையாக இருந்தது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. தங்களுக்கு சலுகை என்றால், நாட்டின் பாதுகாப்பையே அலட்சியப்படுத்தும் போக்கு, அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது, எதிர்காலத்தில் சமுதாயத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

தற்போது இந்த ஊழலில் அசோக் சவானின் பதவி மட்டுமே பறிக்கப்பட்டுள்ளது. தங்களது உறவினர்களுக்கு வீடுகளை பெற்றுத் தந்த, மேலும் பல அரசியல்வாதிகள், இன்னும் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட கார்களில் சர்வ அதிகாரத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். இவர்களின் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவில்லை.

அசோக் சவானுடன் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கை கழுவி விடுமா என்பதும் தெரியவில்லை. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநில அதிகாரிகளுக்கு எதிராக, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான், மக்களின் எதிர்பார்ப்பு.

இவ்வளவுக்கும் பின்பும் தற்போதுதான் ராணுவ அமைச்சர் அந்தோணி, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில் நடந்த விதிமுறை மீறல், ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

குடியிருப்பு யார் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்களை விரைவில் அளிக்குமாறு ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்துக்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.

மேலும் விதிகளை மீறி கடற்கரை பகுதியில் இந்தக் குடியிருப்புகள் கட்டுப்பட்டுள்ளது குறித்து மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்ப மகாராஷ்டிர கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதில் இன்னுமொரு கொடுமையைக் கேளுங்கள் மக்களே..!

ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க குடியிருப்பு ஒதுக்கீடு தொடர்பாக கேட்கப்பட்ட தகவல்களை அளிக்க மகாராஷ்டிர மாநில தகவல் ஆணையர் ராமநாத் திவாரி முட்டுக்கட்டையாக இருந்ததாக புதிய புகார் எழுந்துள்ளது. பூனாவைச் சேர்ந்த விகார் துருவே என்பவர்தான் இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளார்.

“குடியிருப்பு ஒதுக்கீடு தொடர்பான விவரங்களை கேட்டு மாநில தகவல் ஆணையத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பேயே நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் தகவல் ஆணையரின் மகனுக்கு இதில் குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பான விவரங்களைக் கொடுப்பதற்கு அவர் முட்டுக்கட்டையாக இருந்தார்” என்று விகார் புகார் கூறியுள்ளார். வெவ்வேறு காரணங்களைக் கூறி இரண்டு ஆண்டுகளாக தாம் அலைக்கழிக்கப்பட்டதாகவும் விகார் புகார் கூறியுள்ளார்.

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கில் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான சுசில் குமார் ஷிண்டேயும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து அவர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்.

இது தொடர்பாக மும்பை வக்கீல் ஒய்.பி.சிங், சமூக சேவகர்கள் சிம்பரீத் சிங், சர்தோஷ் தவுங்கர் ஆகியோர் மும்பை ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். 71 பக்கங்களில் புகார் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளனவாம்.

அதில், "ஆதர்ஷ் வீடு கட்ட நில ஒதுக்கீடு மற்றும் அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தில் சுஷில் குமார் ஷிண்டே மராட்டிய முதல்வராக இருந்தார். 2003 ஜனவரி முதல் 2004 அக்டோபர்வரை அவர்தான் முதல்வர். அப்போது நடந்த அனைத்தும் விதிமுறைகளை மீறியே வழங்கப்பட்டு உள்ளது.

ஆதர்ஷ் குடியிருப்பில் 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி 51 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது மராட்டிய சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்தன. தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வீடுக்கான நிலம் மார்க்கெட் மதிப்பைவிட 20 சதவீதம் குறைவான விலையில் கொடுக்கப்பட்டது. இவற்றுக்கு சுஷில்குமார் ஷிண்டேதான் காரணம்.

வீடு கட்டும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமலேயே கட்டிடம் கட்ட உரிமம் வழங்கப்பட்டது. கடற்கரை மண்டல விதிகளின்படியும் உரிய அனுமதி பெறவில்லை.

வருவாய்த்துறை மற்றும் நிதித்துறைகளிடம் முறைப்படி அனுமதி பெறாமலேயே முதல்வராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே நேரடியாக தலையிட்டு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுமதி வழங்கியுள்ளார். ஆதர்ஷ் வீடு விவகாரத்தில் சுஷில்குமார் ஷிண்டே தனது பதவியை தவறாக பயன்படுத்தியதுடன் இதில் அதிக அக்கறை காட்டியுள்ளார்.

அவர் அரசு விதிமுறைகளை மீறியதுடன் இந்திய குற்றவியல் சட்டப்படி ஊழலும் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடு ஒதுக்கீட்டில் பல அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. சுஷில்குமார் ஷிண்டே முதல்வராக இருந்தபோது அவரது முதன்மை செயலாளராக இருந்தவர் சுபாஷ் வல்லா. இவரும் ஆதர்ஷ் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளார். சுபாஷ் வல்லாவின் தாயாருக்கும் இதில் வீடு ஒடுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் செயலாளர் ஜோஷி, காங்கிரஸ் தலைவர் கித்வானி, கட்டுமான தொழில் நிறுவன அதிபர் ஆர்.சி.தாகூர் ஆகியோருக்கும் ஊழலில் பங்கு இருக்கிறது. எனவே அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..." என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார்களுக்கான ஆதாரங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

சுஷில்குமார் ஷிண்டே மீது புகார் கூறப்பட்டு இருப்பதால் அவருடைய மத்திய அமைச்சர் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விடுங்கப்பா.. காங்கிரஸ்ல அமைச்சர் பதவிக்கா ஆளுக கிடைக்க மாட்டாங்க? அடுத்தது எவனோ ஒரு திருடன்..!

ஆதர்ஷ் குடியிருப்பு ஒரு பார்வை :

* அடுக்கு மாடி குடியிருப்பு அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு 3,824 ச.மீ.,
* மொத்தம் உள்ள மாடிகளின் எண்ணிக்கை: 31
* குடியிருப்புகளின் பரப்பளவு: 625 ச. அடி முதல் 1,000 ச.அடி. வரை
* மொத்த வீடுகள்: 104
* ஒவ்வொரு மாடியிலும் நான்கு வீடுகள் உள்ளன.

செலவு எவ்வளவு?

* கட்டுமானச் செலவு: 30 கோடி ரூபாய்
* நிலத்துக்காக, மாநில அரசுக்கு செலுத்தப்பட்டது: 16 கோடி ரூபாய்
* மேம்பாட்டு பணிகளுக்காக, மும்பை மேம்பாட்டு கழகத்துக்கு அளிக்கப்பட்டது: 8 கோடி ரூபாய்
* ஒரு வீட்டின் விலை : 60 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய்வரை
* வீட்டின் சந்தை மதிப்பு : 6 கோடி முதல் 8.5 கோடி ரூபாய் வரை.

எந்தெந்த வகையில் விதிமுறை மீறப்பட்டது?

* கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்காகத் தான் இந்த குடியிருப்பு கட்டப்பட்டது. ஆனால், தற்போது இதில் பிரபல அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
* சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமலேயே, இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
* கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிமுறைகளை மீறி, இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. முதலாவதாக, கடலோர காவல் படை மையங்கள் உள்ள கொலாபா பகுதியில் 30 மீட்டர் உயரத்துக்கு மேல், கட்டடம் கட்டக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், ஆதர்ஷ் குடியிருப்பின் உயரம் 100 மீட்டர்.
* ஆதர்ஷ் குடியிருப்பில் வர்த்தக மையங்கள் செயல்படுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
* கடலோர காவல்படைக்கு தேவையான வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்யும் இரண்டு டிப்போக்கள் இங்கு உள்ளன. இந்த டிப்போக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஆதர்ஷ் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

ஊழலில் சிக்கிய அரசியல் புள்ளிகள்

அசோக் சவான்: கடந்த 2000ல் இவர், மகாராஷ்டிர மாநில வருவாய் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் இவருக்கு எழுதிய கடிதம்தான், பிரச்னைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது.  ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்ட குடியிருப்பில், விதிமுறைகளை மீறி, சவானின் மாமியார் பகவதி சர்மா, உறவினர்கள் மதன் லால் சர்மா, சீமா சர்மா ஆகியோருக்கு வீடு ஒதுக்கி அனுமதி அளிக்கப்பட்டது.

விலாஸ்ராவ் தேஸ்முக்: இவர் முதல்வராக இருக்கும்போதுதான், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தனக்கு வேண்டிய மூன்று பேருக்கு வீடு ஒதுக்கும்படி இவர் பரிந்துரை செய்துள்ளார்.

சுஷில் குமார் ஷிண்டே: கடந்த 2004-ல் இவர் முதல்வராக இருந்தபோது தான், சம்பந்தபட்ட நிலத்தில் குடியிருப்பு கட்டுவதற்கு இறுதி அனுமதி அளிக்கப்பட்டது. இவர், தனது தந்தையின் நெருங்கிய நண்பருக்கு வீடு ஒதுக்கும்படி பரிந்துரை செய்துள்ளார்.

நாராயண் ரானே: கடந்த 2007-ல் இவர் வருவாய் துறை அமைச்சராக இருந்தபோதுதான், ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில், ராணுவ வீரர்கள் அல்லாதோருக்கு வீடு ஒதுக்க இறுதி அனுமதி அளிக்கப்பட்டது. இவரின் உறவினர் ஒருவருக்கு ஆதர்ஷ் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் யார் யாருக்கு தொடர்பு?

ஜெனரல் (ஓய்வு) தீபக் கபூர் : கடந்த 2008-ல் ராணுவ தளபதியாக இருந்தார். ஆதர்ஷ் குடியிருப்புக்கு ராணுவ தரப்பில் இறுதி அனுமதி அளிக்கப்பட்டது, இவரது பதவிக் காலத்தில். இவருக்கும் ஒரு வீடு வழங்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் டி.கே.கவுல்: கடந்த 2005-ல் சப் ஏரியா கமாண்டராக இருந்தார். அப்போது, கொலாபாவில் உள்ள இடம் ராணுவ எல்லைக்கு வெளியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்துக்கு குடியிருப்பு கட்ட ஒப்புதல் தரப்பட்டது.

ஜெனரல் (ஓய்வு) என்.சி.விஜ் : கடந்த 2004-ல் ராணுவ தளபதியாக இருந்தார். ராணுவ மையங்கள் செயல்படும் இடங்களுக்கு ஆதர்ஷ் குடியிருப்பால் எந்த ஆபத்தும் வராது என, அறிவிக்கப்பட்டது. குடியிருப்பில் இவருக்கும் ஒரு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

அட்மிரல் (ஓய்வு) மாதவேந்திரா சிங்: கடந்த 1998-2001 வரை, கடற்படையின் மேற்கு பிராந்திய பிரிவுக்கு தலைவராக இருந்தார். இவருக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.