24-06-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இட்லி
'குமுதம்' - பங்கு பிரிச்சாச்சு
'குமுதம்' - பங்கு பிரிச்சாச்சு
அந்தக் காலம் வேற.. இந்தக் காலம் வேறன்னு பெரியவங்க வீட்ல முக்காலில உக்காந்து பெருமூச்சுவிட்டுப் பேசுவாங்க. அது 'குமுதம்' குடும்பத்துலேயும் நடந்திருச்சு..!
பெரியவர் எஸ்.ஏ.பி.யும், பி.வி.பார்த்தசாரதியும் நட்புடன் இருந்த காலம் போய்.. அவர்களுடைய வாரிசுகள் எதிரிகளாக உருமாறி கைது, கோர்ட், கேஸ் என்றாகி படபடத்துவிட்டது பத்திரிகை உலகம்.
ஆனாலும் நம்ம பத்திரிகையாச்சே என்ற பாசத்தில் மெகா மெகா ஆட்களெல்லாம் இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள்..!
முடிவாக 'குமுதம்' பத்திரிகைகளை இரண்டாகப் பிரித்து பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று 'தினத்தந்தி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளில் நடந்ததைப் போல் முடிவெடுத்திருக்கிறார்களாம்..
இதன்படி 'குமுதம் ரிப்போர்ட்டர்', 'குமுதம் சிநேகிதி' என்ற இரண்டு இதழ்கள் மற்றும் 'ஆஹா எஃப்.எம்.', 'குமுதம்.காம்' ஆகிய இரண்டு பிரிவுகளுடன் கூடவே, கணிசமான ரொக்கப் பணத்துடன் வரதராஜன் தனியாகப் பிரிகிறாராம்.
அவர் கைக்கு அனைத்தும் வந்தவுடன் அவற்றில் இருக்கும் 'குமுதம்' என்கிற பெயர் மட்டும் நீக்கப்பட்டுவிடுமாம். 'குமுதம்' என்ற பிராண்ட் நேம், ஜவஹர் பழனியப்பனுக்கு மட்டுமே என்பதுதான் பெரியவர்களின் தீர்ப்பாம்..!
இதற்கிடையில் அந்த பிராண்ட் நேம் சாம்ராஜ்யத்தையே விலைக்குக் கேட்டு தென் மண்டல தளபதியின் சொந்த பந்தங்கள் மருத்துவரை நெருக்குவதாகவும் பத்திரிகையுலகில் பேச்சு..!
ம்.. கத்திரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்.. வரட்டும் பார்ப்போம்..!
தோசை
தடம் புரண்ட இயக்குநர்
தடம் புரண்ட இயக்குநர்
தங்களது துறையில் வளர்ந்த பலர் வாழ்க்கையில் சறுக்கி விடுகிறார்கள். வாழ்க்கையில் சிறந்து விளங்கும் சிலர் தங்களது துறையில் சறுக்கி விடுகிறார்கள். இரண்டிலுமே சிறந்து விளங்குபவர்கள் ரொம்ப ரொம்பச் சிலர்தான்.
மிகுந்த கஷ்டத்திற்குப் பிறகு புகழ் உச்சிக்கு வருபவர்கள் திடீரென்று வருகின்ற புகழையும், கவர்ச்சியையும் உண்மை என்று நம்பி அலட்டுகின்ற அலட்டலில் இருக்கின்ற வாழ்க்கையையும் தொலைக்கத்தான் செய்கிறார்கள்.
நமக்குத் தெரிந்த இயக்குநர் ஒருவரும் அவர்களில் ஒருவர்தான். முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.. ஒரு பாட்டுக்காகவே ஓடிய படம். அடுத்த படம் ஹீரோவுக்காகவும், கதைக்காகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்தவர் இப்போது அந்த முடிவெடுக்க நினைத்து அவரசத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டார். இயக்குநரிடம் முதலில் சிக்கியவர் ஒரு துணை நடிகை. இவரிடம் வாய்ப்பு கேட்டு வந்தவரை வாழ்க்கைத் துணையாக்கும் அளவுக்குத் துணிந்துவிட்டார் இயக்குநர். இதில் ஒரு விசேஷம். இந்த துணை நடிகையான பெண்ணிற்கு கல்லூரி செல்லும் வயதில் ஒரு பெண் இருக்கிறார்.
இன்னொரு பெண் சினிமாவில் இருக்கும் நடனப் பெண்மணி. அந்தப் பெண்மணியின் வயிற்றில் இயக்குநரின் குழந்தை வேறு.. இந்த இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் வீடு தேடி வந்து சண்டையிட்டுக் கொண்டு அந்த இயக்குநரின் பெயர் கோடம்பாக்கத்தில் கெட்டதுதான் மிச்சம்..!
இரண்டாவது படத்தின் ஹீரோவான பெரிய இயக்குநரே இடையில் தலையிட்டு நடனப் பெண்மணியை பஞ்சாயத்து செய்து விலக்கி வைக்க.. இயக்குநர் இதுவரையில் சம்பாதித்து வைத்திருந்ததெல்லாம் இதற்கான நஷ்ட ஈடாகவே போய்விட்டதாம்.
“அவதான் போயிட்டாள்ள.. நம்ம கல்யாணம் எப்போ..?” என்று துணை நடிகை அனத்தத் தொடங்க.. நம்ம இயக்குநருக்கு இப்போதுதான் நிஜ சூழல் புரிந்திருக்கிறது. தனது வயதான தாய், தந்தையரின் பேச்சைக் கேட்டு துணை நடிகையை அவாய்ட் செய்ய ஆரம்பித்தார் இயக்குநர்.. கோபமான துணை நடிகை வீடு தேடி வந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டாராம்..!
இப்போது இந்தப் பிரச்சினைக்கென்று தனியாக பஞ்சாயத்து செய்ய ஆள் தேடிக் கொண்டிருக்கிறார் இயக்குநர்..! சிறந்த திறமையோடு கனவுலகத்திற்குள் நுழையும் சிலர் ஏன் இப்படி தங்களது சொந்த வாழ்க்கையும் அழித்து, கேரியரையும் அழித்துக் கொள்கிறார்களோ என்று தெரியவில்லை..!
அவர்களுடைய இடத்தை அடைய முடியாமல் எத்தனை பேர் தவியாய்த் தவிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா..?
பொங்கல்
இளமைக் காலங்கள் - சசிகலா
இளமைக் காலங்கள் - சசிகலா
தற்செயலாகத்தான் பார்த்தேன்.. இத்தனை நாள் எங்கிருந்தாய் என்று கேட்கத் தோன்றுவதைப் போல இருந்தது அம்மணியை பார்த்தவுடன்..!
இளமைக் காலங்களில் அறிமுகமான சசிகலா என்னும் இந்தத் தாரகை, தமிழிலும், தெலுங்கில் 1993 வரையிலும் தனது திறமையைக் காட்டிவிட்டு அதன் பின்பு சப்தமில்லாமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டாராம்..! இப்போது அதே சப்தமில்லாமல் டைவர்ஸும் வாங்கிக் கொண்டு மீண்டும் திரையுலகத்திற்குள் நுழைந்திருக்கிறார்..
தெலுங்கில் டிவி சீரியலில்தான் முதலில் கால் வைத்திருக்கிறார்.. 'டாக்டர் இந்திரா' என்பது சீரியலின் பெயராம்..! பலருக்கும் தெரியாத ஒன்று.. அம்மணிக்கு தமிழில் மட்டும்தான் 'சசிகலா' என்ற பெயர்.. தெலுங்கில் 'ரஜ்னி' என்ற பெயராம்..!
ஸ்பெஷல் தோசை
பாலகிருஷ்ணா - சிவபார்வதி
பாலகிருஷ்ணா - சிவபார்வதி
நந்தமூரி தாரக ராமாராவ் என்னும் என்.டி.ராமராவின் குடும்பத்து கதை உலகம் முழுக்கவே பேமஸ்தான்..! பத்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தும் வயதான காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என்ற கோபத்தில் தன்னிடம் பேட்டியெடுக்க வந்த கல்லூரி பேராசிரியை சிவபார்வதியை வயதான காலத்தில் திருமணம் செய்து கொண்டார் ஆந்திராவின் கிருஷ்ணன்.
இந்தத் திருமணத்தால் ராமராவின் வாரிசுகள் அத்தனை பேரின் கடும் எதிரியானார் சிவபார்வதி. ராமராவ்வின் மரணத்தன்று வீடு தேடி வந்த வாரிசுகள் எல்லாம் வீட்டில் இருப்பதையெல்லாம் எடுத்துப் போக பார்க்கிறார்கள் என்று ராமராவின் சடலத்தை வைத்துக் கொண்டே பெரும் ரகளை செய்தார் சிவபார்வதி.
அப்போது ஏற்பட்ட மனக்கசப்பினாலும் ராமராவ் தனியாக நடத்தி வந்த தெலுங்கு தேசக் கட்சியை சிவபார்வதி தொடர்ந்து நடத்தி வந்ததாலும் இத்தனை நாட்கள் மனக்கசப்போடு இருந்த ராமராவ் குடும்பத்தினர் சிவபார்வதியின் கட்சி கடலில் கரைந்த பெருங்காயமாக கரைந்த பின்புதான் மனதை ஆற்றிக் கொண்டது.
ஆனாலும் ராமராவ் கடைசி காலத்தில் வசித்து வந்த வீடும், அவர் பயன்படுத்திய பொருட்களும், சில சொத்துக்களும் இன்னமும் சிவபார்வதியின் வசமே உள்ளன. போதாக்குறைக்கு ராமாராவ்வின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருந்ததாகவும் பின்பு அது தானாகவே கலைந்துவிட்டதாகவும் சிவபார்வதி ஒரு செய்தியை எடுத்துவிட.. கடுப்பாகிவிட்டார்கள் மொத்தக் குடும்பத்தினரும்..!
இப்படி ராமாராவின் பத்துக் குடும்பங்களும் சிவபார்வதியை முறைத்தபடியே இருந்த நிலையில் அதில் ஒருவரான நடிகர் பாலகிருஷ்ணா திடீரென்று தனது சித்தியை நேரில் சென்று பார்த்து குசலம் விசாரித்திருக்கிறார். எதிர்பாராத இந்த அதிர்ச்சியில் சித்தி பட்ட பரவசத்தை வீடியோவில் பார்க்கவும்..!
சந்திப்பிற்கான காரணத்தை அப்போது பாலகிருஷ்ணா வெளிப்படையாகச் சொல்லவில்லையென்றாலும், என்.டி.ஆர். பெயரில் கட்டப்படும் மியூஸியத்திற்குத் தேவையான பொருட்களை பெறுவதற்காகவே பாலகிருஷ்ணா வந்ததாகச் சொல்கிறார்கள். இதையடுத்து ஒரு டிவி நிகழ்ச்சியிலும் பாலகிருஷ்ணா தனக்குப் பிடித்தமான மகன் என்று சொல்லி அவருடைய புகைப்படத்திற்கு முத்தமும் கொடுத்து அசத்தியிருந்தார் சிவபார்வதி.
எல்லாம் ஒரே மாசம்தான்.. கடந்த மாதம் நடந்த ஜூனியர் என்.டி.ஆரின் திருமண நிச்சயத்தார்த்தத்திற்கு சிவபார்வதியை கூப்பிடாமல் போக.. “என் மகனே இப்படிச் செய்யலாமா..? நான் ஒருத்தி குடும்பத்துல பெரியவ உசிரோட இருக்கும்போது என்னைக் கூப்பிடாம எப்படி நடத்தலாம்?”னு கேட்டு கண்ணு கலங்கிட்டாங்க சித்தி..!
ஆனாலும் “பாலய்யா என்ற பாலகிருஷ்ணாதான் எத்தனை சினிமால நடிச்சிருப்பாரு.. அவருக்கா தெரியாது..? வேண்டியதையெல்லாம் வசூல் பண்ணியாச்சு. அதான் மறுபடியும் சிவபார்வதியை ஒதுக்கிட்டாங்க..” என்கிறார்கள் ஆந்திர மணவாடுகள்..!
வடை
மட்டக்களப்பு நகரில் ராவணன் வெளியீடு..!
மட்டக்களப்பு நகரில் ராவணன் வெளியீடு..!
ஐஃபா விழாவுக்கு எதிர்ப்பு..! இலங்கையில் ஷூட்டிங் நடத்த எதிர்ப்பு.. இலங்கை ஆளும் தலைவர்களைச் சந்தித்தால் எதிர்ப்பு என்று சகல வழிகளிலும் அவர்களைப் புறக்கணிக்கச் சொல்லும் தமிழ்த் திரையுலகம் தன்னுடைய படங்களை மட்டும் ஏன் அங்கே அனுப்புகிறது என்றுதான் எனக்குப் புரியவில்லை..!
வருடாவருடம் சென்னையில் ஐ.சி.ஏ.எஃப். சார்பில் நடக்கும் சிங்களத் திரைப்பட விழா இரண்டு வருடங்களாக இங்கே நடக்கவில்லை. ஆனால் புதியத் தமிழ்த் திரைப்படங்கள் மட்டும் தொடர்ந்து இலங்கையில் திரையிடப்பட்டு வருகிறது. புறக்கணிப்பு என்பது ஒரு வழிப் பாதையா..?
நாம் நடத்திய போராட்டத்தைப் போலவே ஈழத்திலும் அவர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். மட்டக்களப்பு நகரில் ராவணன் படம் திரையிட இருந்த சாந்தி தியேட்டரை முதல் நாள் இரவு அடித்து நொறுக்கி திரையை எரித்துவிட்டார்கள்..!
இப்போது ஒரு வாரத்திலேயே தியேட்டரைச் செப்பனிட்டுவிட்டு இப்போது ராவணன் படத்தினை திரையிட்டுவிட்டார்கள். ராவணன் படத்தை யாராவது எதிர்த்து ரகளை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்கிறது இலங்கை அரசு. இதுவே ஒரு விதத்தில் அவர்களுக்கு உதவுவதைப் போலத்தானே..? நாம் ஏன் இதனைச் செய்ய வேண்டும்..?
நமது சொந்தங்கள் அங்கே போகக் கூடாது.. படப்பிடிப்புகள் நடத்தக் கூடாது.. நம்மால் அவர்களுக்கு எந்த பண வரவு ஆதாயங்களும் வரக்கூடாது என்றால் சரிதான்.. அதேபோல் நாம் நமது படங்களையும் அங்கே ரிலீஸ் செய்யாமல் இருக்கலாமே..? இது மட்டும் எதற்காகவாம்..?
சில லட்சங்கள் கிடைக்கிறது என்பதற்காக நாமே நமது கொள்கையை அடகு வைக்கலாமா..? திரையுலகம் யோசிக்கட்டும்..!
காரச்சட்னி
ராதாரவியின் அடங்காத கோபம்
ராதாரவியின் அடங்காத கோபம்
சென்ற வாரம் பத்திரிகைகளில் வந்திருந்த ஒரு செய்தி பரவலாக கோடம்பாக்கத்திலேயே ரீச் ஆகவில்லை..!
பல போராட்டங்கள் நடத்திப் பார்த்தும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாத வருத்தத்தில் இருக்கும் 'இந்து மக்கள் கட்சி'யினர் கடைசியாக நடிகர் சங்கத்தில் போய் நின்றிருக்கிறார்கள்.
'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்கிற பெயரை 'தமிழ்நாடு நடிகர் சங்கம் ' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவியிடம் மனு கொடுத்துள்ளார்கள்.
எப்போதும் கட் அண்ட் ரைட்டாக பேசும் ராதாரவி மனுவை வாங்கிக் கொண்டு அங்கேயே அவர்களுக்கு தடாலடியாக பதிலை அள்ளி வீசியிருக்கிறார். அவர் வீசியிருக்கும் பவுன்ஸரில் வழக்கம்போல இயக்குநர் இமயம் பாரதிராஜா மாட்டியிருக்கிறார். கூடவே கலைஞரும்..! இதுதான் பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது..!
ராதாரவி தனது பதிலாக, “ஒரு பிரபல இயக்குநர்கூட(பாரதிராஜா) சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே கோரிக்கையை எங்கள் முன் வைத்தார். 'தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் வைத்த பின்புதான் எனது மகனை திரையுலகில் களமிறக்குவேன்' என்று எங்களிடம் வீராப்பு பேசினார். ஆனால் சமீபத்தில் அவர் இயக்கிய படத்தில்(பொம்மலாட்டம்) நானாபடேகரைத்தான் நடிக்க வைத்தார். ஏன் அந்த கேரக்டரை பண்ண தமிழ் நடிகர் யாருக்குமே தகுதியில்லையா..?” என்று கேட்டிருக்கிறார்..
”கலைஞர் ஆயுட்கால உறுப்பினராக இருக்கும் 'தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க'த்தின் பெயரை 'தமிழ் எழுத்தாளர் சங்கம் ' என்று மாற்ற அவரிடம் போய்ச் சொல்லுங்களேன். அப்படியே 'பெப்சி' அமைப்பை, 'தமிழ்த் திரைப்படத் தொழிலாளர் சங்கம்' என்று பெயர் மாற்றச் சொல்லுங்கள். எல்லாம் நல்லபடியா முடிஞ்சா, நாங்களும் பெயர் மாற்றம் செய்கிறோம்.” என்று சுடச்சுடப் பதில் சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதா மீதான கோபத்தில் கலைஞருடன் சமீப காலமாக இணக்கமாக இருந்து வரும் ராதாரவி இப்போது திடீரென்று இப்படி கலைஞர் மீது காட்டத்தைக் காட்டிய விவகாரம் என்னவெனில், அது எஸ்.வி.சேகரை எம்.ஆர்.ராதாவின் வாரிசு என்று கலைஞர் சொன்னதுதானாம்..
“எங்கப்பாவோட பெருமை என்ன..? புகழ் என்ன..? அவருக்கு நானே வாரிசா இருக்க முடியாது.. இதுல இந்த காமெடியன்தான் வாரிசா..? கலைஞருக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருந்தா இப்படியெல்லாம் பேசியிருப்பாரா..?” என்று தனக்கு நெருக்கமான சினிமா புள்ளிகளிடம் புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார் ராதாரவி..!
தக்காளி சட்னி
பார்த்திபனின் குத்திக் காட்டல்..!
பார்த்திபனின் குத்திக் காட்டல்..!
சினிமாவை தயாரித்தால் மட்டும் போதாது..! அதனை விளம்பரப்படுத்த வேண்டும்.. அதற்கு தயாரிப்புச் செலவில் பாதியையாவது செலவழித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்த் திரையுலகம் வந்துவிட்டது. இதற்காக சினிமாக்காரர்கள் சொல்கின்ற காரணம் 'மூன்று நிதி'களின் திரையுலக ஊடுறுவலைத்தான்..!
அவர்கள் வாங்குகின்ற படங்களை மட்டுமே அவர்கள் பிரமோட் செய்து கொண்டேயிருப்பதால் மற்ற படங்களெல்லாம் ரிலீஸாகவில்லையோ என்கிற பிரமையை மக்களிடத்தில் ஏற்படுத்தி மற்ற படங்களுக்கு கூட்டத்தையும், வசூலையும் வர விடாமல் மறைமுகமாகத் தடுக்கிறார்கள் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டு..!
அதேபோல் இன்னுமொரு குற்றச்சாட்டுத்தான் மிக முக்கியமானது. இந்த மூன்று நிதிகள் வெளியிடும் படங்களின் வி.சி.டி.க்கள் மட்டும் தமிழ்நாட்டில் வெளியாவதே இல்லை.. அந்த அளவுக்கு போலீஸ் கெடுபிடியாகிறது. ஆனால் மற்ற படங்களெனில் அடுத்த நாளே வந்துவிடுகிறது. காவல்துறை அதனை மட்டும் கண்டு கொள்ளாமல் விடுவது ஏன் என்பதுதான் திரையுலகத்தினரின் கேள்வி. ஆனால் யாருக்கும் இங்கே முதுகெலும்பு இல்லாததால் வெளிப்படையாக பேச மறுக்கிறார்கள்.
ஆனால் மேடைக்கு மேடை ஜொள்ளுவிட்டே பேசும் பார்த்திபன் 'காதல் சொல்ல வந்தேன்' படத்தின் கேஸட் வெளியீட்டு விழாவில் இதனைப் பற்றி வெளிப்படையாக கேட்டது வந்திருந்தவர்களுக்கு இனிய அதிர்ச்சியை அளித்துவிட்டது. அன்று இரவு முழுவதும் பார்த்திபனின் செல்போனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டேயிருந்ததாம்..
இது பற்றி பார்த்திபன் சொன்னது இதுதான்.. “குறிப்பிட்ட ஒரு சில படங்களுக்குத் திருட்டி விசிடி வருவதில்லை. இவர்களது பட விசிடிகள் வருவதை இவர்கள் தடுப்பது போல மற்ற பட விசிடிகளையும் இவர்கள் தடுக்கலாமே..? ஏன் தடுப்பதில்லை..? இப்படி எல்லா திருட்டு விசிடிகளையும் தடுத்தால் திரைப்பட உலகம் நன்றாக இருக்குமே..”
சாம்பார்
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்
மறுபடியும் ஒரு பஞ்சாயத்து துவங்கியிருக்கிறது திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு பொறுப்பாளராக இருந்த ஏவி.எம்.முருகனே இந்த முறையும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சங்கத் தலைவர் நாற்காலியைக் கைப்பற்ற கடும் போட்டியே நிலவுகிறது. சென்ற ஆண்டு சன் டிவிக்கும், கலைஞருக்குமிடையே கபடியாட்டம் நடந்து கொண்டிருந்ததால் கலைஞரின் ஆசியோடு இராம.நாராயணன் தனி அணி அமைத்து போட்டியிட்டார். எதிரணியில் சன் டிவிக்காக ராதிகாவும், பஞ்சு அருணாச்சலமும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் நின்றார்கள். இதில் ராதிகாவை நிற்கவிடாமல் செய்வதற்காக 'அவர் தெலுங்குப் பெண்.. தமிழச்சி அல்ல..' என்றெல்லாம்கூட கடைசி நேரத்தில் பிரச்சாரம் செய்யும் நிலைமைக்குச் சென்றது திரையுலகத்தைக் கலவரப்படுத்தியது.
ஆனால் இந்த முறை அப்படியிருக்காது என்கிறார்கள். தங்களது டிவிக்காக படங்களை வாங்கிப் போடுவதற்கு தங்களது விரலசைவில் நடப்பவரே சங்கப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று ஆளும்கட்சி டிவி நினைப்பதால் 'போதுமடா சாமி.. ஆளை விடுங்கப்பா..' என்று கைகூப்பி வணங்கிவிட்டு வீட்டுக்கு போக நினைத்த இராம.நாராயணனை, கலைஞரே அழைத்து தட்டிக் கொடுத்து களத்தில் குதிக்கும்படி சொல்லியனுப்பியிருக்கிறாராம்.. அவருடைய அணியில் இருப்பவர்கள் யார், யார் என்பதுதான் இன்னமும் முடிவாகவில்லை.
பிலிம் சேம்பர் தலைவராக சமீப காலம்வரையிலும் இருந்த கே.ஆர்.ஜி., தைரியமாக இராம.நாராயணனை எதிர்த்து களமிறங்கியுள்ளார். இடையில் தயாரிப்பாளர்களுடன் சரிக்கு சமமாக மோதிக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் சங்கம் தங்களது தலைவர் பாரதிராஜாவை நிறுத்தலாமா என்றுகூட யோசித்தது. ஆனால் சங்கத்தின் பை-லா ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள்.
எனவே சென்ற தேர்தலில் மனு செய்துவிட்டு பின்பு பஞ்சாயத்து செய்து கழட்டிவிடப்பட்ட அமீரை செயலாளர் பதவிக்கு நிறுத்தலாமா என்று யோசித்து வருகிறார்கள்.
இடையில் இராம.நாராயணனுக்கு முன்பாக தலைவராக இருந்த சத்யஜோதி தியாகராஜன் தான் நிற்கலாம் என்று நினைத்து காய்களை நகர்த்தி வந்தார். ஆனால் கோபாலபுரத்தின் ஆசி இராம.நாராயணன் மீது இருப்பதை அறிந்து கப்சிப்பாகிவிட்டார்.
அடுத்த மாதத் துவக்கத்தில் களத்தில் நிற்பவர்கள் யார் என்பது தெரிந்துவிடும்..!
துவையல்
சூர்யாவின் அதிரடிப் பேச்சு
சூர்யாவின் அதிரடிப் பேச்சு
"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்துவிடாது” என்று தைரியமாகச் சொல்லியுள்ளார் சூர்யா.
சம்பந்தமேயில்லாத அமிதாப்பச்சன், அனில்கபூர், ஷாரூக்கான் வீடுகளின் முன்பெல்லாம் உண்ணாவிரதம் இருந்த தொண்டர்களும், தோழர்களும் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை..!
ஆளுக்கொரு நீதியாக போராட்டம் திரும்பும்போதே அது நீர்த்துப் போய்விடுகிறது..! இதில் “தம்பிக்காக இந்த ஒரு முறை மட்டும் விட்டுவிடுகிறேன்” என்று 'ரத்த சரித்திரம்' படத்தை வெளியிட ஆட்சேபணையில்லை என்று சொல்லியிருக்கும் சீமானின் அரசியல் நேர்மையும் கேள்விக்குறியாகிவிட்டது..!
பாவம் ஈழத் தமிழர்கள்..! அவர்களுடைய ஒவ்வொரு நம்பிக்கையையும், சிங்களவனைவிட தமிழர்களாகிய நாமே முந்திக் கொண்டு உடைத்தெறிந்து வருகிறோம்..!
கேசரி
இரண்டு வலைத்தளங்கள்..!
இரண்டு வலைத்தளங்கள்..!
1. அனிதா ரத்னம்
தற்செயலாகத்தான் இந்த பிளாக்கை பார்த்தேன். படித்தேன். ஆங்கிலத்தில்தான் உள்ளது. பிரபல பரத நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னத்தின் சொந்த வலைத்தளம்..!
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மார்க்கோஸ் குடும்பத்தினரைப் பற்றி எழுதியிருக்கும் ஒரு கட்டுரை செம காமெடி..!
http://anita-ratnam.blogspot.com/2010/05/sisters-of-imelda.html
2. சார்லஸ் அண்ணன்
முன்னாதாகவே இந்த வலைத்தளம் பற்றி நான் எழுதியிருக்க வேண்டும். சற்றுத் தாமதமாகிவிட்டது. எனக்கு முன்பாக நண்பர் சுரேஷ்கண்ணன் எழுதிவிட்டார்..!
http://vaarthaikal.wordpress.com/
'ருத்ரவீணை', 'சிவமயம்', 'காத்து கருப்பு', 'என் தோழி, என் காதலி, என் மனைவி', 'ரோஜாக்கூட்டம்' என்ற சீரியல்களையும், 'ஜில்லுன்னு ஒரு சேலஞ்ச்', 'இசைக்குடும்பம்', 'சவால்', 'மென்பொருள்' என்ற ஷோக்களையும் இயக்கியிருக்கும் 'சார்லஸ்' என்ற அண்ணனின் தளம் இது.. இவர் தற்போது 'நஞ்சுபுரம்' என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
தளத்தின் வடிவமைப்பு மிகக் கச்சிதமாக கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. அதேபோல் உள்ளடக்கமும்..! கொஞ்சமும் சுய விளம்பரம் இல்லாமல் முழுக்க, முழுக்க சினிமாவுக்காகவே தளத்தை இயக்கி வருகிறார்.. முழுவதையும் படித்துப் பாருங்கள்.. கிறுகிறுத்துப் போய்விடுவீர்கள்..! எளிமையான எழுத்து நடை..!
பார்த்ததில் பிடித்தது
என்ன கொடுமை பாருங்கள்..!?
இதையெல்லாம் பார்க்கும்போது நம்மை இப்படியாவது விட்டு வைத்திருக்கும் அப்பன் முருகனுக்கு இன்னொரு கோவில் கட்டலாம் போலத்தான் தோன்றுகிறது..!
|
|
Tweet |









