தப்பாட்டம் - சினிமா விமர்சனம்

30-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தில் அறிமுக நாயகன் துரை சுதாகர் ஹீரோவாகவும், அறிமுக நாயகி டோனா ரொசாரியா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
மேலும், கோவை ஜெயக்குமார், பேனா மணி, கூத்துப் பட்டறை துளசி,  பேராசிரியை லட்சுமி,  ரூபி,  பொள்ளாச்சி M.K.ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – பழநி பாலு, ஒளிப்பதிவு – ராஜன், படத் தொகுப்பு – ஆர். சரண் சண்முகம், கலை -பவானி ஈஸ்வரன், நடனம் – ராதிகா, பாடலாசிரியர் – விக்டர் தாஸ்,  கார்த்திக்  &  பாலு, சண்டை பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், எழுத்து, இயக்கம் – முஜிபூர் ரஹ்மான், தயாரிப்பு -ஆதம் பாவா.
உண்மை அறியாமல் மனைவியை சந்தேகப்பட்டால் என்ன ஆகும் என்பதை கதைக் கருவாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நாயகன் தப்பாட்டம் ஆடும் கலைஞன். இவருடைய சொந்த அக்காள் மகளை காதலிக்கிறார். அவரும் அப்படியே..! இவருடைய தாயாரும் அதே ஊரில்தான் இருக்கிறார்.
அந்த ஊர்ப் பண்ணையாரின் ஒரே மகன் ஸ்த்ரீ லோலன். ஊருக்குள் ஒரு பெண்ணை விடுவதாக இல்லையாம். பட்டப் பகலில் வயக்காட்டுக்குள் விரட்டி, விரட்டி கற்பழிக்கிறார். எப்பா.. எத்தனை நாளாச்சு இது மாதிரியான கற்பழிப்பு காட்சிகளை பார்த்து..?
இதே ஜூனியர் பண்ணையார் நாயகனின் அக்கா மகளான ஹீரோயினையும் ஒரு நாள் கையைப் பிடித்திழுத்து அடிவாங்கிக் கொண்டு போகிறார். இந்தச் செய்தியை அறியும் ஹீரோயினின் அம்மா அவசரம், அவசரமாக நாயகனுக்கும், நாயகிக்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
இதை எதிர்பார்க்காத ஜூனியர் பண்ணையார் தனது கெத்தை காட்ட வேண்டும் என்பதற்காக சாராயக் கடைக்கு வந்த இடத்தில் நாயகியை தான் ஏற்கெனவே ‘கை’ வைத்துவிட்டதாகச் சொல்கிறார். இதனைக் கேட்டு ஆவேசப்படும் நாயகன் ஜூனியர் பண்ணையாரை அங்கேயே ஒரு ‘கை’ பார்க்கிறார்.
ஆனால் அங்கே நாயகியோ கர்ப்பமாக இருக்கிறாள். தன் மனைவியின் கர்ப்பத்துக்குத் தான் காரணம் இல்லை என்று நினைக்கிறார் ஹீரோ. இதனால் மனைவியிடமிருந்து ஒதுங்குகிறார். அக்காவும், அம்மாவும் சொல்லியும் கேட்காமல் சதா குடியிலேயே மிதக்கிறார்.
நாயகியோ கணவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். நாயகன் திரும்பி வந்தாரா.. இல்லையா.. என்பதுதான் படத்தின் திரைக்கதை.
படத்தின் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு படம் 1980-களில் நடப்பதாக மாற்றியிருக்கிறார்கள். அப்போதுதானே தென்னந்தோப்புக்குள் சாராயக் கடை வைத்திருப்பதாக காட்சி வைக்க முடியும்..?!
புதுமுகங்களின் நடிப்பைப் பற்றிச்  சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிலும் ‘ப்ப்ளிக் ஸ்டார்’ என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ள தலைப்பட்டிருக்கும் ஹீரோ துரை சுதாகர், தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அதைச் செய்திருக்கிறார்.
‘என் ராசாவின் மனசிலே’ ராஜ்கிரணை மனதில் நினைத்துக் கொண்டு அவர் போலவே படம் நெடுகிலும் ஆக்சனை காட்டியிருக்கிறார் ஹீரோ. தப்பில்லைதான். ஆனால் இது நடிப்பில்லையே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
ஹீரோயின் இதைவிட மோசம்.. படு செயற்கையான நடிப்பு. வலுக்கட்டாயமாக வலிந்து வரவழைக்கப்பட்ட நடிப்பாகவும் இருக்கிறது. அவர் குழந்தைத்தனத்துடன் பேசுவதை கேட்டால் நமக்கே பாவமாக இருக்கிறது. அப்படியொரு அப்பிராணி நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.
இவருடைய அம்மா, பாட்டி இருவருமே வயதுக்கு மீறிய கேரக்டரில்… பாட்டி ஓவரான மேக்கப்பிலும், ஓவரான நடிப்பிலும் சொதப்பியிருக்கிறார்.
பண்ணையார், மற்றும் பாவா லட்சுமணன் இருவர் மட்டுமே நடித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
1980-களில் நடக்கும் கதையை இப்போது ஏன் எடுக்க வேண்டும் என்பதற்கான நியாயமான ஒரு காரணத்தைக்கூட படத்தில் சொல்லவில்லை. பின்பு ஏன் இப்போது இதனை இப்படி எடுத்தார்கள் என்றும் தெரியவில்லை.
வசனங்கள் பலவும் அரதப் பழசாக இருக்கின்றன. “ஆடி மாசத்துல கல்யாணம் செஞ்சா தப்பில்லையே..?” என்று பாட்டியே சொல்கிறார். அதுவும் கிராமத்தில்.. நம்பத்தான் முடியவில்லை. பல வசனங்கள் காமெடியாகவே பேசப்பட்டிருக்கின்றன.
இயக்குநரின் திறமையினால் ஒட்டு மொத்தமாய் படம், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை மாரத்தான் ஓட்டம் போல மெதுவாய் ஓடிய கதையாய் தெரிகிறது.
ஒளிப்பதிவு, சண்டை பயிற்சி இதையெல்லாம் கணக்கில்கூட சேர்க்காதீர்கள். பாடல்களை ஒரு முறை கேட்கலாம் என்கிற அளவுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். பாராட்டுக்கள்.
அந்தக் காலத்திய மரத்தடி பஞ்சாயத்து போல கற்பழிப்புக்கு தண்டனையாக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் அந்த நிகழ்வு, தமிழ்ச் சினிமா இன்னமும் சாகவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது.
அதீதமான குடிக்கும் காட்சிகள், மற்றும் லாஜிக்கே இல்லாத திரைக்கதை இவையிரண்டும் படத்திற்கு வில்லன்களாக அமைந்துவிட்டன.
இந்தக் கதைக்கு ஹீரோவின் தப்பாட்டம் ஆடும் கேரக்டர் ஸ்கெட்ச் எதற்கு என்று தெரியவில்லை. தேவையற்ற இந்த ஹீரோயிஸத்தால் படம் மக்களையும் அதிகம் கவரவில்லை.
‘மனைவியை சந்தேகப்படாதே’ என்பது சரியான கருத்துதான். ‘உண்மையை ஆராய்ந்து பார்த்து அறிந்து தெரிந்து கொள்’ என்பதையும் கிளைமாக்ஸில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் அந்தக் காட்சியில் நடிப்பென்று எதுவும் இல்லாததால் அதுவும் காற்றோடு காற்றாய் போய்விட்டது..!
தப்பாட்டம் – உண்மையாகவே தப்பாட்டம்தான்..!

0 comments: