யாக்கை - சினிமா விமர்சனம்

04-03-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பிரிம் பிக்சர்ஸ் சார்பில் முத்துக்குமரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இதில் கிருஷ்ணாவும், ஸ்வாதி ரெட்டியும் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.
மேலும் ஹரிகிருஷ்ணன், மெல்வின், பிரகாஷ்ராஜ், சிங்கம்புலி, குரு சோமசுந்தரம், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சத்யா பொன்மார், இசை – யுவன்சங்கர்ராஜா, படத் தொகுப்பு – சாபு ஜோஸப், கலை – எட்வர்ட் கலைமணி, தயாரிப்பு – முத்துக்குமரன், எழுத்து, இயக்கம் – குழந்தை வேலப்பன்.

மருத்துவ முறைகேடுகளை வைத்து சமீப காலமாக பல சினிமாக்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த வாரம் வந்திருக்கும் இரண்டாவது படம் இது.
கோவையின் மிகப் பெரிய மருத்துவமனையின் எம்.டி.யான கிருஷ்ணமூர்த்தி என்னும் ராதாரவி, ஒரு நாள் இரவில் தன்னுடைய மருத்துவமனையின் 14-வது மாடியில் இருந்து காரில் வைத்து கீழே தள்ளப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.
இதனை விசாரிக்க வருகிறார் போலீஸ் துணை ஆணையர் பிரகாஷ்ராஜ். விசாரணையில் ராதாரவியின் மகனான குரு சோமசுந்தரத்திற்கு இந்தக் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.
விசாரணை தொடர்ந்து வரும் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் கோவையின் பிரபலமான கல்லூரியில் விஸ்காம் படித்து வரும் மாணவனான கிருஷ்ணா, தற்போதைய சினிமாவின் வழக்கப்படி ரோட்டில் பார்க்கும் ஸ்வாதி ரெட்டியை லவ்வுகிறார். இருவரும் கல்லூரியில் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க.. கிருஷ்ணா தனது காதலைச் சொல்லி ஸ்வாதியை சம்மதிக்க வைக்கிறார்.
விசாரணை துரித வேகத்தில் போய்க் கொண்டிருக்கும்போது வேறொரு வடிவத்தில் ஒரு துப்புக் கிடைக்க அந்த இடத்திற்கு ஓடி வருகிறார் பிரகாஷ்ராஜ். அங்கே மூன்று பேர் இறந்து கிடக்கிறார்கள். அவர்களுக்கும் ராதாரவியின் கொலைகளுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்பதை கண்டறிகிறார் பிரகாஷ்ராஜ்.
ராதாரவியின் கொலைக்கு முன்பாகவே இந்த மூன்று கொலைகளும் நடந்திருப்பதையும் அவர் அறிகிறார். விசாரணையின் அடுத்த ஸ்டெப்பில் கிருஷ்ணா சிக்குகிறார். இறுதியில் என்னாகிறது..? யார் கொலையாளி..? இதில் கிருஷ்ணாவும், ஸ்வாதியும் எப்படி சிக்கிக் கொண்டார்கள் என்பதுதான் படமே.
இதே பார்மெட்டில் சில படங்கள் முன்பு வெளிவந்தது நினைவிருக்கலாம். அரிதிலும், அரிதான ரத்த வகையைச் சேர்ந்தவர்களை திட்டமிட்டு கொலை செய்து அவர்களது ரத்த்த்தை சேகரித்து வெளிநாட்டுக்கு அனுப்பும் சில கொலைகார மருத்துவர்களையும், மருத்துவமனைகளைப் பற்றியும் ஏற்கெனவே திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். இதையேதான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் முதல் பாராட்டுக்குரியவர் பிரகாஷ்ராஜ்தான்.. எத்தனை, எத்தனை கசப்பு வார்த்தைகள் அவரைப் பற்றி வெளிப்பட்டாலும் நடிப்பென்று வந்துவிட்டால் அவருக்கு நிகர் அவரே..
இதில் துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் அவர் இருக்கின்ற ஷாட்டுகளில் அதிகம் கவனத்தை ஈர்த்திருப்பதும் அவர்தான். சுகர் மாத்திரை சாப்பிடும் பேஷண்ட்டாகவும் அறிமுகமாகி கடைசியில் அதையே திரைக்கதையில் ஒரு யுக்தியாக பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்தான்..!
கிருஷ்ணாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் மிக பின் தங்கிய காலத்தைக் காட்டுகிறது. இப்போதுதான் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர் காதல் வயப்படுவதும்.. அதற்குள்ளாக காதலியின் அப்பாவிடம் போய் காதலைப் பற்றிப் பேசுவதும்.. இனிமேலும் தொடர்ந்தால் அது தமிழ்ச் சினிமாவுக்கு நல்லதல்ல.
கிருஷ்ணா பல காட்சிகளில் பைத்தியக்காரத்தனமாகவும், சில காட்சிகளில் தேமே என்றும் நடித்திருக்கிறார். இதுதான் ஏன் என்று தெரியவில்லை. கிருஷ்ணாவின் நண்பனே ஒரு காட்சியில் சொல்கிறார் “காதலிச்சாலே எல்லாரும் லூஸாயிருவாங்கடா” என்று..! அதுபோலத்தான் இருந்தது சில காட்சிகளில் கிருஷ்ணாவின் நடிப்பு..!
படத்தின் இறுதி கணத்தில் மட்டுமே தனது கேரக்டர் உணர்ந்து அந்தச் சோகத்தை முகத்தில் நிறுத்தி வைத்து ஒரு துக்கக் காவியத்தை உணர்த்த முனைந்திருக்கிறார் கிருஷ்ணா.
ஸ்வாதி ரெட்டிக்கு பெயர் சொல்லும் படம் இது. இதுவரையிலும் அவர் நடித்த படங்களில் அவருக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரைவிடவும் இதில் முக்கியத்துவமான கேரக்டர். காது கேளாத, வாய் பேசாதவர்களின் பாஷையை இந்தப் படத்திற்காகவே கற்றுக் கொண்டு அற்புதமாக அதனை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்வாதி. பல காட்சிகளில் இயக்குநரின் அழகான இயக்கத்தால் ஸ்பீடு டெலிவரி டயலாக்கால் இன்னமும் அழகுபடுத்தியிருக்கிறார் ஸ்வாதி. வெல்டன்..
குரு சோமசுந்தரம் வில்லன் கேரக்டரில் முதல்முறையாக களமிறங்கியிருக்கிறார். கூத்துப் பட்டறை பயிற்சியின் விளைவை இந்தப் படத்தில் பார்க்கலாம். எந்த வில்லன் மாதிரியும் இல்லாமல் அதிகமாக ஆங்கில வசனங்களுடன் பேசி நடித்திருக்கிறார். இதையே தொடர்ந்தால் நம்ம மக்கள் ஜனாதிபதி குருவை நாம் பார்க்க முடியாமல் போய்விடும்.
ஒரு சில காட்சிகளே வந்தாலும் மனதைத் தொடுகிறார் எம்.எஸ்.பாஸ்கர். ஏட்டுவாக நடித்திருக்கும் சிங்கம்புலியும் கொஞ்சம் ரிலாக்ஸை நமக்குக் கொடுத்திருக்கிறார்.
சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவு நிறைவானது. இரவு காட்சிகளிலும், துவக்கக் காட்சியிலும் ஒரு மிரட்டலை கொடுத்திருக்கிறது கேமிரா. படத் தொகுப்பாளர் சாபு ஜோஸப் இன்னும் கொஞ்சம் கத்திரியை கல்லூரி வாழ்க்கையில் போட்டிருக்கலாம்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் என்றால் அதைவிட சுமாராக உள்ளது பின்னணி இசை. தூர்தர்ஷனில் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சிக்கு போடக் கூடிய இசையை பல இடங்களில் பின்னணி இசையாக கேட்ட கொடுமை, இனிமேலும் நிகழக் கூடாது என்றே விரும்புகிறோம்.
கிருஷ்ணாவையும், ஸ்வாதி ரெட்டியையும் கல்லூரி மாணவர்களாக நம்மால் பார்க்கவே முடியவில்லை. அப்புறம் எப்படி கதையோடு ஒன்றிப் போய் படத்தைப் பார்க்க முடியும்..? Flashback காட்சிகளை எப்போது திறப்பது என்கிற சிறு குழப்பத்தில் படத் தொகுப்பாளர் கத்திரியை தவறான இடத்தில் பயன்படுத்தியிருப்பதால், இடைவேளைக்கு பின்பு சின்ன குழப்பம் வருகிறது. இதனாலேயே படத்தில் லயிக்க முடியாமல் போய்விட்டது.
பிரகாஷ்ராஜ், குரு சோமசுந்தரம் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஒரு சான்று. அதேபோல் கிளைமாக்ஸும்.
கதையும், நடித்தவர்களும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் ஒரு திரில்லர் கதைக்கான திரைக்கதை, வசனத்துடன் இறுக்கமான இயக்கத்தை அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குநர். இதை மறுப்பதற்கில்லை..!
யாக்கை – ஒரு முறை பார்க்கலாம்..!

0 comments: