பைசா - சினிமா விமர்சனம்

02-07-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

விஜய்யின் ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத் தயாரித்து இயக்கியிருக்கும் சின்ன பட்ஜெட் படம் இது.
‘கோலிசோடா’வில் நடித்த ஸ்ரீராம் இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக ஆரா என்னும் புதுமுகம் நடித்துள்ளார். மேலும் நாசர், மயில்சாமி, ராஜசிம்மன், சென்ட்ராயன், மதுசூதனன்ராவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜே.வி. இசையமைக்க.. கே.பி.வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.பி.அஹமது படத்தொகுப்பினை மேற்கொண்டுள்ளார். எழுதி, இயக்கியிருக்கிறார் அப்துல் மஜீத்.
சின்ன கதைக்கருதான். அதை சின்ன பட்ஜெட்டில், சின்ன நடிகர்களை வைத்து தன்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

‘நேர்மையான வழியில் உழைத்து சம்பாதிக்கும் பணமே நிம்மதியைக் கொடுக்கும்.. தவறான வழிகளில் சேர்க்கப்படும் பணம், நம் வாழ்க்கையை தினம் தினம் கொலை செய்யும்’ என்பதுதான் படத்தின் கரு. இதையே அழகான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஹீரோ ஸ்ரீராம் தெருவில் குப்பை பொறுக்குபவர். அதில் கிடைக்கும் பணத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இவருடன் சேர்த்து சுமாராக 6 அனாதைகளும் இருக்கிறார்கள். இதில் வயதான ஒருவரும், ஒரு பெண்ணும் அடக்கம்.
இதேபோல் ஹீரோயினும் குடிசைப் பகுதியில் வாழும் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் இருக்கும் குடும்பத்துப் பெண். பக்கத்தில் இருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்கிறார்.
ஹீரோயினுக்கு திருட்டு என்றாலே பிடிக்காது. அவள் ஒரு முறை மின்சாரக் கட்டணம் கட்டுவதற்காக செல்லும்போது பணமும், அட்டையும் தவறி கீழே விழுகிறது. இதனை ஹீரோ எடுத்துக் கொடுக்க.. அதிலிருந்து அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அதுவே கடைசியாக காதலில் போய் முடிகிறது.
மிகப் பெரிய தொழிலதிபரான மதுசூதனன் பல பெரிய புள்ளிகளின் கருப்புப் பணத்தை பத்திரப்படுத்தி வைக்கும் தொழிலைச் செய்கிறார். இவரிடத்தில் வேலை செய்யும் ராஜசிம்மன் மதுசூதனன் கொடுக்கும் பணத்தை வட்டிக்குவிடும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறான்.
ஒரு முறை 100 கோடி ரூபாய் பணத்தை மதுசூதனன் ராஜசிம்மனிடம் கொடுத்து பத்திரப்படுத்திவைக்கும்படி சொல்ல.. ராஜசிம்மன் அதனை ஒரு பெரிய கேரிபேக்கில் வைத்து கல்லைக் கட்டி ஆற்றில் வீசிவிட்டு வருகிறான்.
ஆற்றுக்குள் விழுந்த நேரத்தில் அந்தக் கல் இரண்டாக உடைந்து போக.. கேரிபேக் ஆற்றுக்குள்ளே இடம் மாறி செல்கிறது. அது கரையைத் தொட்டு நிற்கும் நேரம் நமது ஹீரோ ஸ்ரீராம் அதைப் பார்க்கிறார். அதனுள் பணம் இருப்பதை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி என்ன செய்வதென்றே தெரியாமல் பணத்தை தனது வீட்டுக்குக் கொண்டு வந்து அடை காக்கிறார்.
பணம் தன்னிடம் இருப்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல், தனது நண்பர்களிடமும் சொல்லிக் கொள்ளாமல் தனக்கு விருப்பப்பட்டதை சாப்பிட்டு.. விரும்பியதையெல்லாம் வாங்கி அனுபவிக்கிறான் ஹீரோ.  ஆனால் ஒரு நாள் சென்ட்ராயன் இந்தப் பணத்தைப் பார்த்துவிட்டு தனக்கும் பங்கு வேண்டும் என்று மறைமுகமாக மிரட்டு பணம் பறிக்கிறார்.
திரும்ப வந்து பணத்தைத் தேடும் ராஜசிம்மனின் ஆட்கள் கேரிபேக் கிடைக்காமல் தவிக்கிறார்கள். ராஜசிம்மன் கொதிக்கிறார். மதுசூதனன் ஒரு வாரம் நேரம் கொடுத்து அதற்குள் பணத்தை கொடுத்தால் நல்லது என்று ராஜசிம்மனை எச்சரிக்கிறார்.
ஒரு பக்கம் ராஜசிம்மனின் ஆட்கள் பணத்தைத் தேடி அலைய.. இன்னொரு பக்கம் தன் வீட்டில் திடீரென்று மாப்பிள்ளை பார்த்துவிட்டதால் நாம் எங்கயாவது ஓடிப் போய்விடலாம் என்று ஹீரோயின் வந்து நிற்க.. தவித்துப் போகிறார் ஹீரோ. அடுத்து என்ன செய்கிறார்..? பணத்தை வைத்துக் கொண்டாரா..? அல்லது காதலியுடன் ஓடிப் போனாரா என்பதுதான் திரைக்கதை.
ஹீரோ ஸ்ரீராம் முதல்முறையாக தனி ஹீரோவாக ஆவர்த்தனம் செய்திருக்கிறார். பொறுமையாக, அழகாக நடித்திருக்கிறார். அழ வேண்டிய காட்சிகளில் அழுது, ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். இயக்குநர் சொன்னால் செய்ய வேண்டியதுதான். அவரைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை.
ஹீரோயின் ஆரா.. அழகான வசீகரமான முகம்.. சினிமாவுக்கே ஏற்ற தோற்றம் இருப்பதால் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்து தன்னை நிரூபித்தால் ஒரு ரவுண்டு வரலாம். புதுமுக நடிகை போல் இல்லாமல் காட்சிகளில் உணர்ச்சிவயமாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.
மதுசூதனன் ராவும், ராஜசிம்மனும் ஒருவருக்கொருவர் யார் அதிகமாகப் பயமுறுத்துவது என்பது போலவே நடித்திருக்கிறார்கள். மயில்சாமி கேரக்டர் வேஸ்ட்டான ஒன்று.. சென்ட்ராயன் ஏதாவது புதிதாகச் செய்து சிரிக்க வைப்பார் என்று பார்த்தால் அதுவும் இல்லை. நாசர், ஹீரோ சந்திப்பு திரைக்கதைக்காக வலிந்து திணிக்கப்பட்ட காட்சியாக, ஆனால் பொருத்தமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
100 கோடி ரூபாய் பணம் கிடைத்தும் காதலியும் தன்னை விரட்டுகிறாள்.. நண்பர்களும் தன்னை ஒதுக்குகிறார்கள் என்பதை அறிந்து இந்தப் பணம் தனக்கு வேண்டாம் என்கிறார் ஹீரோ. இந்தப் பக்குவம் நாட்டில் எத்தனை பேருக்கு வரும் என்று தெரியவில்லை. வந்தால் சந்தோஷம்தான்.
கிளைமாக்ஸில் சட்டப்படி தனக்கு பரிசாக கிடைக்கும் பணத்தைக்கூட ஹீரோ வாங்க மறுத்து தான் இப்படியே குப்பை பொறுக்கி.. உழைத்து சம்பாதித்தே பிழைத்துக் கொள்வதாகச் சொல்லி விடைபெறுகிறார். இந்த அளவுக்கு உண்மையான மனிதர்கள் நாடு முழுக்க இருந்தால் இந்தியா நன்றாகத்தான் இருக்கும். இயக்குநரின் இந்த அபரிமிதமான நம்பிக்கையை நாமும் வாழ்த்துவோம்.
பாடல்கள் கேட்கும் ரகம்தான். ஆனால் மனதில் நிற்கவில்லை. மிக வேகமாக ஓடி மறைகின்றன பாடல் காட்சிகள். ஒளிப்பதிவில் குறைவில்லை. சண்டை பயிற்சியாளருக்கு ஒரு மிகப் பெரிய பாராட்டு. கிளைமாக்ஸில் நடக்கும் சண்டையை எப்படித்தான் படமாக்கினார்களோ தெரியவில்லை. ‘நச்’ என்று இருக்கிறது. அதேபோல் இந்தக் காட்சியை கத்திரி போட்டுக் கொடுத்த எடிட்டர் எஸ்.பி.அஹமதுவுக்கும் நமது பாராட்டுக்கள். சிறப்பாக தொகுத்திருக்கிறார்.
இயக்குதலில் இன்னும் கொஞ்சம் நேர்த்தியை கூட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் இயக்குநரே..! ராஜசிம்மனின் அடியாட்கள் பணத்தைத் தேடி அலைவதும், இதற்கான காட்சியமைப்புகளும் மகா காமெடியாக இருக்கிறது. அதில், லாஜிக் மிஸ்டேக் என்பதைவிடவும், சிச்சுவேஷனே மிஸ்டேக்காக இருக்கிறது என்பதுதான் உண்மை.
பிச்சையெடுப்பதைவிடவும், குப்பை பொறுக்கும் வேலையைச் செய்வது சாலச் சிறந்தது என்று ஹீரோ ஒரு காட்சியில் பிச்சைக்காரனிடம் சொல்கிறார். உண்மைதான். ஆனால் இப்படி குப்பை பொறுக்குவதையும் தாண்டி மேலே உயர வேண்டிய மனநிலை அந்த இளைஞர்களுக்கு இருக்க வேண்டியது மிக அவசியமானது. இதனை இயக்குநர் சொல்லாமல்விட்டது ஏன் என்று தெரியவில்லை. இப்போதைய நிம்மதியைவிடவும் எதிர்கால பாதுகாப்பும், வளர்ச்சியும்தான் இவர்களைப் போன்ற அடிமாட்டு நிலையில் இருப்பவர்களுக்கு நல்லது. மற்றபடி, பைசாவை பார்த்து ரசிக்கும்படிதான் எடுத்திருக்கிறார்கள்.

1 comments:

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html