தங்க மகன் - சினிமா விமர்சனம்

19-12-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘வேலையில்லா பட்டதாரி’ போன்ற கதையம்சத்துடன் அதன் உடையை அணிந்து கொண்டு புதிதாக வந்திருக்கும் ஒரு திரைப்படம்.
இதுவும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் அனைத்துவித சந்தோஷங்களையும், துக்கங்களையும் உள்ளடக்கிய கதைதான்.

தமிழ் என்னும் தனுஷ்.. அப்பா கே.எஸ்.ரவிக்குமார், வருமான வரித்துறையில் பணியாற்றும் சாதாரண ஒரு கிளார்க். அம்மா ராதிகா. வீட்டுக்கு ஒரே பிள்ளை. கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்களில் சதீஷ் மற்றும் அரவிந்த்துடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார் தனுஷ். இதில் அரவிந்த், தனுஷின் சொந்த அத்தை மகன்.  
தற்செயலாக கோவிலில் பார்க்கும் எமி ஜாக்சனை காதலிக்கத் துவங்குகிறார் தனுஷ். அவரும் இவரைக் காதலிக்கிறார். காதலருடன் சேர்ந்து பீர் குடிக்கும் அளவுக்கு முற்போக்கான பெண்ணாக இருக்கிறார் எமி. டார்ஜிலிங்கிற்கு இன்பச் சுற்றுலால்லாம் செல்கிறார்கள் காதலர்கள். அந்த அளவுக்கான அவர்களது சுதந்திரம் இருக்கும்போது திருமணத்திற்கு பின்பான வாழ்க்கை பற்றிய விஷயத்தில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு எழுகிறது.
தனது சின்ன வயது ஆசையினால் திருமணத்திற்கு பின்பு தனது கணவருடன் தனிக்குடித்தனமாக வாழ பிரியப்படுகிறார் எமி. ஆனால் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருக்கும் தனுஷ் இதை ஏற்க மறுக்கிறார். தனது பெற்றோரைவிட்டு வெளியில் வரவே முடியாது என்கிறார். இந்த சர்ச்சையில் இருவரும் அவரவர் பாதையில் பிரிந்து செல்கிறார்கள்.
எமி, அரவிந்தை திருமணம் செய்து கொண்டு போக.. தனுஷ் சமந்தாவை திருமணம் செய்கிறார். அப்பாவின் அலுவலகத்திலேயே தனுஷிற்கும் வேலை கிடைக்கிறது. வாழ்க்கை குதூகலமாக போய்க் கொண்டிருக்கும் சூழலில் திடீரென்று தனுஷின் அப்பா தற்கொலை செய்து கொள்கிறார். அலுவலகத்தில் ஏதோ திருட்டு என்று அவர் மீது புகார் சுமத்தப்படுகிறது. இதனாலேயே தனுஷின் வேலையும் பறி போகிறது. குடும்பம் நிலை குலைகிறது.
இனி என்ன செய்ய என்பது தெரியாமல் கிடைத்த வேலைக்குச் செல்கிறார் தனுஷ். ஆனாலும் அவர் மனதுக்குள் ஒரு போராட்டம். தனது தந்தையின் சாவு எதனால்..? யாரால்..? என்கிற கேள்வி அவரைக் குடைந்தெடுக்க.. அதைத் தேடி அலைகிறார். இறுதியில் கண்டறிந்தாரா இல்லையா..? என்பதுதான் இடைவேளைக்கு பின்னான சுவையான திரைக்கதை.
கல்லூரி மாணவர், மகன், கணவர்.. பெரும் ரசிகக் கூட்டத்தின் தலைவன்.. என்று எந்தக் கேரக்டராக இருந்தாலும் அது தனுஷுக்கு கச்சிதம் என்பதுதான் அவருடைய மிகப் பெரிய பலம். இதிலும் அப்படியே.. மீசையை எடுத்துவிட்டு.. ‘காதல் கொண்டேன்’ ஹீரோவை போல அரை மணி நேரம் வருகிறார். திருமணமாகி பக்குவமான கணவனாக அடுத்த அரை மணி நேரம்.. கடைசி ஒரு மணி நேரம் ஒரு மிடில் கிளாஸ் மாதவனாக பொங்குகிறார்.. தேசிய விருது பெற்ற நடிகரை, நடிப்பு விஷயத்தில் விமர்சிப்பது முடியவில்லை.. அனைத்து காட்சிகளிலும் நல்ல நடிப்புதான்..!
எமியைவிடவும் சமந்தாதான் அழுத்தமாக நடித்திருக்கிறார். என்னதான் ஆங்கிலத்தில் எழுதி வைத்து அதனை ஒப்பித்தாலும், உதட்டசைவு இன்னமும் எமி ஒரு அந்நியர் என்பதையே காட்டுகிறது. ஆனால் சமந்தா அப்படியல்ல. நம்ம வீட்டுப் பொண்ணு என்பதுபோல அவர் காட்டும் அதீதமான கணவர் பாசம்.. இன்றைய இளம் பெண்களை நிச்சயம் ‘அசடு’ என்றுதான் சொல்ல வைக்கும். ஆனாலும் கடைசிவரையிலும் ஒரு மாதிரியான மேக்கப்பில், அவரை விட்டுவைத்திருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.
சமந்தாவுக்கு அடுத்து பெயரெடுத்திருப்பது கே.எஸ்.ரவிக்குமார். ஒரு மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக.. மறதி குணமுள்ள ஒரு அப்பாவாக.. அலுவலகத்தில் பேக்கு மாதிரி இருக்கும் ஊழியனாக.. அனைத்திலும் ஒரு வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். அவருடைய மரணமும் அதைத் தொடர்ந்த காட்சிகளும் காட்டியிருக்கும் உருக்கமும், ஏற்படுத்தியிருக்கும் அச்சச்சோ உணர்வுக்கும் இவரே காரணம் என்பதால் பாஸாகிவிட்டார்.
சமையலறையில் தனுஷுடன் செல்லமாக சண்டை போடும் அந்த ஒரேயொரு காட்சியில் ராதிகா தான் யார் என்பதைக் காட்டிவிட்டார். சின்ன கேரக்டர்தான் என்றாலும் ராதிகாவின் அந்தக் கதாபாத்திரத்திற்கு உணர்வுப்பூர்வாக அம்மாவுக்கான மரியாதையை கொடுக்கலாம்.
சதீஷ் வழக்கம்போல காதலுக்கு உதவுவது.. கொஞ்சம் ஜோக்கராக இருப்பது. நடிப்பது என்று தன் வேலையில் ஓகே.. அரவிந்தாக நடித்திருப்பவரின் ஒன் மேன் ஷோ படத்தின் மிகப் பெரிய காமெடி அலை..  அந்த பையை தூக்கி வைத்துக் கொண்டு அந்த அறைக்குள் அவர் பாடும்பாட்டை பார்த்து தியேட்டரே அதிர்கிறது. ஆனாலும் கடைசியில் திடீரென்று நடக்கும் சரண்டர் டிவி சீரியலின் இறுதி முடிவைப் போல சப்பென்றாகிவிட்டது.
குடும்பமே முக்கியம்.. பணம் முக்கியமல்ல என்பதை பல காட்சிகளில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். “பணம் ஒருத்தனை பணக்காரனாகவும் ஆக்கும்.. பைத்தியக்காரனாகவும் ஆக்கும்…” என்கிறார் தனுஷ். ஓரிடத்தில் அரவிந்திடம் “மொத்தப் பணத்தையும் நீயே வைச்சுக்க…” என்கிறார் தனுஷ். இது போன்ற சில காட்சிகளில் டிவி சீரியல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவுக்கு சென்டிமெண்ட்டை பிழிந்தெடுத்திருக்கிறார் இயக்குநர்.
இப்போது தியேட்டருக்கு ஓடி வரும் இளைஞர்களுக்கு பிடித்ததுபோல இளைஞிகளின் சைக்காலஜி மேட்டர்களை அள்ளி வீசியிருக்கிறார்கள். படத்தின் முற்பாதியை கொண்டாடுகிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.  பிற்பாதியில் அரவிந்தின் காமெடி காட்சியிலும், தனுஷின் ஒரு சில ஆக்சன்களுக்கும் காது கிழிகிறது.
அனிருத் இசையென்றாலும், பாடலாசிரியர் தனுஷ் என்றாலும், பாடல்கள் விட்டுவிட்டு தொடர்வதால் எந்த ஈர்ப்பும் இல்லைதான்.. அறிமுக ஒளிப்பதிவாளர் குமரனுக்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
நாயகிகளை துளிக்கூட ஆபாசமாகக் காட்டாமல் இருந்தமைக்கும், குத்துப் பாடல்களை வைத்து காதைக் கிழிக்காமல் விட்டதற்கும்,  நாரசார வசனங்களை வைக்காமல் இருந்தமைக்காகவும், டாஸ்மாக் காட்சிகளை காட்டாமல் இருந்ததற்காகவும், சரியாக 2 மணி நேரத்தில் படத்தை முடித்து அனுப்பி வைத்தமைக்காகவும் இயக்குநருக்கு நமது நன்றிகள்.
இருந்தாலும் ஒரேயொரு நெருடல்.. எமி ஜாக்சனும், அவரது நண்பியும் பீர் குடிக்கும்  காட்சியை சுத்தமாக நீக்கியிருக்கலாம். தேவையற்ற காட்சி அது. ஏற்கெனவே ‘பசங்க குடிக்கிறதையே காட்டாதீங்கப்பா’ என்று தமிழகமே கதறி வரும் வேளையில் இது போன்று செய்தால் எப்படிங்க இயக்குநரே..?
தந்தை பாசம்.. குடும்ப நலன்.. பொறுப்பான மகன்.. அன்பான மனைவி..  என்று இந்தக் காலத்திற்கேற்றார் போல் ஒரு குடும்பப் படமாக எடுத்திருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.  லஞ்சமும், ஊழலும் எந்த அளவுக்கு மிடில் கிளாஸ் பேமிலியை ஆக்கிரமித்திருக்கிறது என்பதையும் அதன் விளைவுகளையும் இந்தப் படம் அழுத்தமாகச் சொல்லாதது ஒரு குறைதான். ஹீரோயிஸ கதை என்பதால் அதை ஆழமாகத் தொடாமல் ஹீரோவே கதையை முடித்துவைப்பதுபோலவே முடித்திருக்கிறார்கள்..!
தங்க மகன் உண்மையில் திரையில் காட்டிய அந்தக் குடும்பத்திற்கான தங்க மகன்தான்..! 

0 comments: