குற்றம் கடிதல் - சினிமா விமர்சனம்

38-09-3025

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘உலகத் திருமறை’ என்று கொண்டாடப்படும் ‘திருக்குறள்’ தமிழ் மொழிக்குக் கிடைத்த மிகப் பெரிய கொடை. ஆனால் அதில் இருக்கும் ஒரு குறளைக்கூட உலக மக்கள் யாருமே பின்பற்ற முடியாது.. அதுதான் இந்த நூலூக்குக் கிடைத்திருக்கும் தனி சிறப்பு.
மனித வாழ்வியலை அக்கு அக்காகப் பிரித்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்வதெல்லாம் படிக்கின்றபோது மிக எளிதாகத்தான் இருக்கிறது. கருத்தும் பிரமிப்பாக தோன்றுகிறது. ஆனால் பின்பற்றத்தான் முடியவில்லை.
அந்த திருக்குறளில்  பொருட்பாலில் அரசியல் இயலில், குற்றங் கடிதல் அதிகாரத்தில் 434-வது குறளாக வருகிறது இக்குறள்..!
“குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை”
இதன் விளக்கம்.. ஒருவன் குற்றம் புரியாமல் இருப்பதையே தன்னுடைய நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், அவன் செய்கின்ற குற்றமே அவனுக்குப் பகையாக மாறும்.
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் யாரால் பின்பற்ற முடியும்..? இந்த இரண்டு வரிகளை வைத்து இன்றைய நாட்டு நடப்புக்கு ஏற்றாற்போல் ஒரு கதையை எழுதி அதனை தனது அழுத்தமான, அபாரமான இயக்கத்தினால் நேரம் போவது தெரியாமல் பார்க்கக் கூடிய ஒரு திரைப்படமாக உருவாக்கி கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜி.பிரம்மா.

பெற்றோர்களை எதிர்த்து காதல் திருமணம் செய்திருக்கிறார்கள் இந்துவான ராஜ்குமாரும், கிறித்துவரான ஆசிரியை ராதிகா பிரசித்தாவும்..! திருமணம் முடிந்து அதற்கான லீவும் முடிந்து முதல் நாள் பள்ளிக்குச் செல்கிறார். இன்னொரு ஆசிரியர் அவசரமாக பெர்மிஷனில் செல்வதால் அவருடைய வகுப்பை கவனித்துக் கொள்ள அந்த வகுப்பிற்குச் செல்கிறார்.
அங்கேயிருக்கும் ஒரு துடுக்குத்தனமான மாணவனின் செயலைக் கண்டு திடீர் கோபமாகி அந்தப் பையனின் கன்னத்தில் அறைகிறார் ராதிகா. பட்டென்று கீழே விழுகும் சிறுவன் மயக்கமாகிறான். மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றால், அங்கே கோமா நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
இது பெரிய பிரச்சினையாகும் என்பதை ஊகிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராதிகாவையும், அவரது கணவரையும் ஊரைவிட்டுப் போகும்படி சொல்லி அனுப்பி வைக்கிறார். பையனின் விதவை அம்மாவும், கம்யூனிஸ்டான மாமாவும் ஓடி வருகிறார்கள். தோழர் மாமா பெரும் கோபம் கொண்டு ராதிகாவைத் தேடுகிறார்.
இன்னொரு பக்கம் மீடியாக்களில் இது பெரிய விஷயமாக அலசப்பட ராதிகாவின் வீடு, தலைமை ஆசிரியரின் வீடு.. பள்ளி மாணவிகளின் வீடு இவற்றிலெல்லாம் மீடியாக்கள் உட்புகுர.. ஒரு பள்ளி பிரச்சினை தேசிய பிரச்சினையாகிறது..
குற்றவுணர்வோடு ஊரைவிட்டு ஓடும் ராதிகாவால் இதனையெல்லாம் எதிர்கொள்ள முடியவில்லை. இவரைச் சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கிறார் இவரது கணவர். இறுதியில் என்னதான் ஆனது என்பதை ஒரு சோக காவியமாக படைத்திருக்கிறார் இயக்குநர்.
மலையாள இயக்குநர் சிபிமலயில் படங்களில் மட்டுமே இது போன்ற சோகம் கப்பிய ஷாட்டுகளையும், காட்சிகளையும் தொடர்ச்சியாக பார்க்க முடியும். அப்படியொரு ஈர்ப்பை இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
அவசரத்தனமான குணமுடைய டீச்சர் ராதிகா.. இதற்கு நேர் எதிரான கணவன், பொறுப்பான தலைமை ஆசிரியர்.. இவருக்கு இணையான இவரது மனைவி.. பள்ளியில் செக்ஸ் கல்வி அவசியமா என்று விவாதிக்கும் அளவுக்கு வெளிப்படையாகப் பேசும் டீச்சர்கள். இதைத் தவறென்று சொல்லும் ஒரு அம்மாஞ்சி வாத்தியார்.. பெந்தகோஸ்தே இறைப் பணியில் இருக்கும் ராதிகாவின் அம்மா.. மகனுக்காகவே உயிர் வாழ்வதை சில காட்சிகளிலேயே காட்டிவிடும் அந்தத் தாய்.. கம்யூனிஸ்ட் தோழராக இருப்பதால் கேள்வி கேட்பதிலும், நியாயத்திற்கு போராடுவதிலும் சளைக்காத பையனின் மாமா.. அந்த துடுக்குத்தனமான பையன்.. ஒரு நிமிடத்தில் டீச்சரின் செயலை மாற்றிப் பேசும் சிறுமி..  நடித்தே காரியம் சாதிக்கத் துடிக்கும் பெண் போலீஸ் அதிகாரி.. மருத்துவர் என்கிற பெயரையே திமிரானது என்பதைக் காட்டத் துடிக்கும் தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர்.. இப்படி படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களின் குணாதிசயங்களையே தனி விமர்சனமாக எழுதலாம்.
இந்த அளவுக்கு நுணுக்கமாக.. மிகக் கவனமாக பார்த்து, பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குநர். பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் டீச்சரான ராதிகா தனது அழகான, ஈர்ப்பான நடிப்பால் படம் முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டார். அடித்துவிட்ட பதற்றத்துடன் தவித்து.. பின்பு கோபத்துடன் சிறுமியை அடிக்க கையை ஓங்கிய நிலையில் நின்று பார்க்கும் காட்சியிலேயே படத்தின் கதையை உணர்த்திவிட்டார்.
அவருடைய அவசரத்தனமான கேரக்டர் குணாதிசயங்களை தாலியை மறைக்க நினைத்து பின்பு மனம் மாறி வெளியில் எடுத்துவிடுவது.. லாரியில் பட்டென்று ஏறுவது.. காலையில் பூசிய பொட்டை சட்டென்று அழிப்பது.. மத துறப்புதான் தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியதோ என்று நினைப்பது.. திடீரென்று பஸ்ஸில் இருந்து காணாமல் போவது.. அந்தப் பையனோட அம்மாவை பார்க்க வேண்டும் என்று சொல்வது என்ற காட்சிகளிலெல்லாம் ஒரு தவியான தவிப்பை படம் பார்க்கும் ரசிகனுக்குள்ளும் திணித்திருக்கிறார் ராதிகா. வெல்டன் மேடம்..
இவருடைய கணவராக நடித்தவர் நிச்சயம் மேடை நாடகங்களில் நடித்தவராக இருப்பார் என்று நினைக்கிறோம். பேசுகின்ற பேச்சுக்கேற்றாற்போன்று உடல் மொழியையும் வெளிப்படுத்தியுள்ளார். ராதிகாவைக் கண்டித்து பேசுவதாகட்டும்.. ஹோட்டல் அறையில் தனக்குத்தானே பேசிக் கொண்டு நிற்கும் ராதிகை பார்த்து துணுக்குற்று அவரை அணைத்து ஆறுதல் சொல்வதாகட்டும்.. மனைவியைத் தேடியலைந்து கடைசியாக பார்த்தவுடன் கோபப்படாமல் அவர் பேச்சைக் கேட்டு நடப்பதாகட்டும்.. ஒரு பொறுப்பான கணவனாகவும், சந்தர்ப்பம் தெரிந்தவராகவும் தெரிகிறார்.
ஆட்டோவை எடுத்துக் கொண்டு தனியே ஓட்டும் மகனை விரட்டிப் பிடித்து நாலு சாத்து சாத்துவதில் தெரியும் அந்த தாயின் பாசம்.. மருத்துவமனையில் உம்மென்று அமர்ந்து தனது சோகத்தை பகிரக்கூட தெரியாமல் அந்தத் தாயாக நடித்தவருக்கு மிகப் பெரிய பாராட்டு கிடைக்கட்டும்.. கடைசியாக ராதிகா அவரைத் தேடி வந்து அணைத்துக் கொள்ளும்போது அவர் பேசும் வசனங்களும், நடிப்பும் மனதை பிசைய வைக்கிறது..!
இந்த்த் தாயின் சகோதரனாக கம்யூனிஸ்ட் தோழனாக வரும் நவநீதனின் கேரக்டர் இவர் வருகின்ற காட்சிகளிலெல்லாம் டென்ஷனை கூட்டியிருக்கிறது. ஓங்கிய குரலில் எப்போதும் பேசுபவர்.. கோபத்துடன் பிடி மாஸ்டரை அடிப்பவர்.. தலைமை ஆசிரியரிடம், “அந்த டீச்சர் எங்கே..?” என்று ஆக்ரோஷப்படுபவர்.. கொஞ்சம் கொஞ்சமாக சுதியிறங்கி கடைசியாக மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலை ராதிகாவுக்கு பரிசாக்க் கொடுக்கும் அளவுக்கு பக்குவப்பட்டுப் போகிறார். அங்கே ஒரு சிறப்பான கை தட்டலையும் வாங்கியிருக்கிறார் இயக்குநர்.  ஆனாலும் ஒரு கம்யூனிஸ இயக்கத் தோழராக இருந்து கொண்டும் எடுத்த எடுப்பிலேயே கோபப்படுவதும், பி.டி. மாஸ்டரை கை நீட்டி அடிப்பதும் நியாயம்தானா தோழர்..?
வேகமாகவும், கோபமாகவும் தலைமை ஆசிரியர் வீட்டுக்குள் வருபவரிடம் தலைமை ஆசிரியரும், அவரது மனைவியும் சமாளிக்கும்விதமும், இதே நவநீதன் ராதிகாவின் தாயின் வீட்டுக்குப் போய் அவர் ஜெபப் பாடல்களை பாடி முடிக்கும்வரையிலும் காத்திருந்து பின்பு அவரிடத்தில் கொதித்துப் பேசி ‘பிரதர்’.. ‘பிரதர்‘ என்ற அந்தம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு மனமிறங்கி திரும்பி வருவதெல்லாம் இயக்குநரின் அற்புதமான இயக்கத் திறமையைக் காட்டுகிறது.
அந்தத் துறுதுறு பையனை எங்கேயிருந்து பிடித்தார்களோ தெரியவில்லை. பட்டென்று சிரிக்க வைத்து சட்டென்று நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறான். டீச்சர்ஸ் ரூமில் செக்ஸ் கல்வி பற்றிப் பேசும் பயாலஜி ஆசிரியையின் கச்சிதமான பேச்சு.. டைமிங்கான வசன உச்சரிப்பு.. தெளிவான நடிப்பு அனைத்துமே அந்தக் காட்சியை ஒன்றிணைத்து பார்க்க வைக்கிறது.
செய்திகளுக்காக அகோரப் பசி கொண்டு அலையும் மீடியாக்களின் விளம்பர வெறியை நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்படியே உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஏன் அடித்தார் என்கிற விஷயத்தையே கவனத்தில் கொள்ளாமல் பள்ளியில் மாணவர்களை அடிக்கலாமா என்கிற ரீதியிலேயே பிரச்சினையைக் கொண்டு சென்று இதற்கு மனோதத்துவ நிபுணர்களிடம்கூட கருத்துரை கேட்டு தங்களது அறிவுப் புரட்சியை வெளிப்படுத்துகிறார்கள் மீடியாக்காரர்கள்.
ஒரு பெண் நிருபவர் தனது சக ஆண் நிருபரிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச பேச விஷயம் விபரீதமாக மீடியா, பப்ளிசிட்டி என்பதையும் தாண்டி ஆண், பெண் சமத்துவம் நோக்கில் போவதெல்லாம் சத்தியமான உண்மை. இப்படித்தான் பல விஷயங்களில் பெண்ணியவாதிகள் முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட்டு பேசுகிறார்கள்.
படத்தில் அதிகம் உறுத்தாமல் இருந்தது ஷங்கர் ரங்கராஜனின் பின்னணி இசைதான். பாடல் காட்சிகள் இரண்டிலுமே கதைகள் சொல்லப்பட்டிருப்பதால் அதிலேயே நமக்கு ஆர்வம் பொங்கி வழிகிறது.  மணிகண்டனின் ஒளிப்பதிவும், எடிட்டர் சி.எஸ்.பிரேமின் கச்சிதமான பிரேம் கட்டிங்கும் இயக்குநருக்குக் கிடைத்த மிகப் பெரிய உதவிகள்..!
ராதிகாவும், அவரது கணவரும் லாரியில் செல்லும் காட்சிகள், ஹோட்டல் அறை காட்சிகள்.. மருத்துவமனை காட்சிகளையெல்லாம் ரசித்துப் பார்த்ததற்கு படத்தின் ஒளிப்பதிவும் ஒரு காரணமாக இருந்தது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
எல்லாம் சரியாக இருந்தும் கிளைமாக்ஸில் மட்டும் ஏன் இப்படி பல்டியடித்தார் இயக்குநர் என்பது மில்லியன் டாலர் கேள்வி..?
வட்டார கல்வி அலுவலர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது இடைமறித்த டீச்சர் ராதிகா தான் மாணவியை அடித்த்து தவறு என்று திரும்பத் திரும்ப சொல்வதும்,, இதைக் கேட்ட பின்பு தோழர் நவநீதன் ‘தாய்’ நாவலை அவருக்குப் பரிசளிக்க முன் வருவதும் முரண்பாடான விஷயம்..!
முதலில் படத்தின் அடிப்படையான விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘ஒரு  ஆசிரியை மாணவனை தண்டிப்பதை குற்றம்’ என்கிறார் இயக்குநர் பிரம்மா. ‘இந்தக் குற்றத்தைச் செய்ததால்தான் டீச்சர் ராதிகா மீதான பகையே உண்டானது’ என்கிறார் இயக்குநர்.
ஆசிரியரும், மாணவரும் ஈருடல், ஓருடலாக அப்பா, மகன், தாய் மகள் போலவோ பழகினால் அந்தப் பிள்ளைகள் நிச்சயம் படிக்க மாட்டார்கள். அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை கண்டிக்கத்தான் செய்வார்கள். தண்டிக்கத்தான் செய்வார்கள். செய்துதான் தீர வேண்டாம். இது செய்யவே கூடாது என்றால் மாணவ, மாணவிகளுக்குள் நல்லொழுக்கத்தை புகுத்தவே முடியாது.. சில இடங்களில் பெற்றோர்களே தங்களது பிள்ளைகளை கண்டிக்கும்படியும், தண்டித்து சொல்லிக் கொடுக்கும்படியும் பள்ளிக்கே வந்து ஆசிரியர்களிடத்தில் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.
“உங்களுக்கும் முத்தம் கொடுப்பேன்” என்று ஒரு மாணவன் டீச்சரிடம் கூறினால் டீச்சர் அடிக்கத்தான் செய்வார். தண்டிக்கத்தான் செய்வார். அது தப்பு என்று கிளாஸ் எடுக்கவா முடியும்..? எத்தனை பேருக்கு இது சாத்தியமாகும்..?
தமிழ்நாட்டில் சமீப காலமாக பல பள்ளிகளில் இது போன்ற சண்டை, சச்சரவுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் டீச்சர்களை அதிகம் குறை சொல்லும் பள்ளிகளும் இருக்கின்றன. மாணவர்களை குறை சொல்லும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு பள்ளியில் பி.டி. மாஸ்டரின் உத்தரவினால் ஒரு சின்னப் பையன் தன்னைவிட எடை அதிகமான குண்டு பையனை தூக்கிக் கொண்டு ஓடியதில் அவனது முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு இப்போதும் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கிறான்.   இன்னொரு பள்ளியில் ஆசிரியர் அடித்த அடியில் ஒரு பையனுக்கு கால் விரலையே நீக்க வேண்டிய கட்டாயம்.. பல பள்ளிகளில் ஆசிரியர்கள் போலீஸார் வைத்திருக்கும் லத்தியைவிடவும் பெரிய கம்பாகத்தான் வைத்திருக்கிறார்கள். இதற்கொரு அளவுகோல் தேவைதான்.. இல்லையென்று மறுக்கவில்லை.
அதே சமயம்.. இந்தப் படத்தைப் பொறுத்தவரையிலும் ரசிகர்களுக்குள் பரிதாப உணர்வை ஏற்படுத்த வேண்டும்.. டீச்சருக்குள் ஒரு பரிதவிப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திலேயே திரைக்கதையை எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது..
அந்தப் பையனுக்கு ஏற்கெனவே ஒரு நோய் இருக்கிறது. இதனால் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருக்கிறது என்கிற உண்மையெல்லாம் கடைசியில்தான் சொல்கிறார்கள். இது முதலிலேயே தெரிந்திருந்தால் இதுவொரு சாதாரண விஷயமாகியிருக்கும். அடித்த விஷயம் பின்னால் போக.. படம் பார்க்கும் பார்வையாளனுக்குள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காது.
இந்த விஷயம் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கேஸ், மருத்துவமனை என்று போனால்கூட நிற்காது என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்..!  பள்ளி மாணவனை அடித்ததற்காக எந்தவொரு ஆசிரியரும் இதுவரையிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதில்லை என்பது இயக்குநருக்கும் தெரிந்த விஷயம்தான்..
டீச்சர் ராதிகா ஓடிப் போகாமலேயே மருத்துவமனையில் உடன் இருந்து பிரச்சனையை சமாளிப்பதுபோல் படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தால் இந்தப் படம் நிச்சயம் இந்த அளவுக்கு புகழ் பெற்றிருக்காது.. பெயர் வாங்கியிருக்காது. இயக்குநர் இந்த மாதிரி திரைக்கதை எழுதியதன் நோக்கமே, படம் பார்க்கும் ரசிகனை பதட்டப்படுத்தி டென்ஷனாகவே வைத்திருக்க வேண்டும் என்பதால்தான்..!
சிறந்த இயக்கம். சிறந்த திரைக்கதை, சிறந்த நடிப்பு என்கிற விதத்தில் இந்தப் படம் நிச்சயம் பேசப்படும். ஆனால் சிறந்த படம், சிறந்த கதை என்கிற ரீதியில் இந்தப் படம் நிச்சயம் விமர்சிக்கப்பட்டே தீரும். அதற்கான காரண, காரியங்களை இயக்குநரே இதில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
எப்படியிருந்தாலும் தன்னுடைய இயக்கத் திறமையைக் காட்ட விரும்பிய இயக்குநர் கச்சிதமாக தான் எழுதிய திரைக்கதைக்கு தனது கதாபாத்திரங்களை வளைத்து நடிக்க வைத்து அதில் முழு வெற்றியும் பெற்றிருக்கிறார். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் ஸார்..!
குற்றம் கடிதல் – ஒரு புதுமையான அனுபவம்..! நிச்சயம் பார்க்க வேண்டிய படம்..!

0 comments: