எலி - சினிமா விமர்சனம்

24-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாவம் அண்ணன் வடிவேலு. தான் என்ன செய்தாலும், என்ன பேசினாலும், என்ன சொன்னாலும் ரசிகர்கள் கைதட்டுவார்கள். சிரிப்பார்கள் என்று நினைத்துவிட்டார். ‘தெனாலிராமன்’ போலவே இந்த ‘எலி’யும் அவரை ஏமாற்றியிருக்கிறது. அவரும் தன்னையே இன்னொரு முறை ஏமாற்றிக் கொண்டுள்ளார் என்பது வருத்தமான செய்தி.

1960-ம் காலத்திய கதைக்களம். 1970-களில் ஜெய்சங்கர் நடித்த ஜேம்ஸ்பாண்ட் டைப் படங்களின் கதை. நகைச்சுவை என்பது கிஞ்சித்தும் இன்றி வெற்று வசனங்களாலேயே தோரணம் கட்ட முயன்று தோல்வியடைந்திருக்கிறார் வடிவேலு.
1960-களில் தமிழகத்தில் சிகரெட்டுகளுக்கு தடை. அவைகளை வாங்குவதோ, விற்பதோ தடை செய்யப்பட்ட நிலையில் கள்ள மார்க்கெட்டில் சிகரெட்டின் விற்பனையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதைத் தடுக்க சென்னை போலீஸ் பெரும் பிரயத்தனம் செய்கிறது.
பிரதீப் ராவத்துதான் இந்த சிகரெட் கடத்தல் தொழிலின் மன்ன்ன். இவரை பொறி வைத்துப் பிடிக்க போலீஸ் திட்டமிடுகிறது. ஆனால் போலீஸுக்குள்ளேயே இருக்கும் கருப்பு ஆடான இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட், சம்திங் பெற்றுக் கொண்டு பிரதீப்புக்கு தகவல்களை பாஸ் செய்வதால் ஒவ்வொரு முறையும் சிகரெட் கடத்தலை தடுக்கவே முடியவில்லை.
இந்த நேரத்தில்தான் நம்ம ஹீரோ எலிச்சாமி எண்ட்ரியாகிறார். நெஞ்சுக்கூட்டில் அரை இன்ச்சு அகலம் கூடுதலாக இல்லாததால்  போலீஸ் வேலைக்கு தேர்வாகாமல் கோட்டைவிட்டவர். இதனால் கோபமாகி இப்போது திருடனாகிவிட்டார். கைத்தடிகள் இருவரை வைத்துக் கொண்டு நகைக்கடையில் போலீஸ் போல கொள்ளையடிக்கிறார். பூட்டிக் கிடக்கும் வீடு என்று நினைத்து முன்னாள் ஐ.ஜி. கிட்டியின் வீட்டையும் கொள்ளையடித்துவிட்டுச் செல்கிறார்.
கடத்தல் பார்ட்டிகளை பிடிக்க வேண்டுமானால் அந்தக் கூட்டத்தில் நமது ஆள் ஒருவரை உளவாளியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார் போலீஸ் உயரதிகாரி. யாரை அனுப்பலாம் என்று யோசிக்கும்போது கிட்டியின் தயவால் எலிச்சாமியின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது.
இன்னொரு திருட்டு அஸைண்மெண்ட்டில் இருந்த எலிச்சாமி கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டு போலீஸில் பிடிபடுகிறார். அவரிடம் பேரம் பேசி கடத்தல்காரர்களுடன் இணைந்து தங்களுக்கு உளவு பார்த்து சொல்லி அவர்களைப் பிடித்துக் கொடுத்தால் போலீஸ் வேலை கிடைக்கும் என்று ஆசை காட்டப்படுகிறது. இந்த எலி போலீஸ் வேலை என்கிற வடைக்கு ஆசைப்பட்டு இதற்கு ஒத்துக் கொண்டு திருட்டுக் கூட்டத்துக்குள் நுழைகிறது. அடுத்து என்ன நடந்தது என்பதுதான் மிச்சமான படத்தின் கதை.
அரதப்பழசான கதை. பீரியட் படம் என்றாலே அந்த நிகழ்வுகளின் பின்னணி இடங்களுக்கு நிறைய மெனக்கெட வேண்டும். அது எப்படி சாத்தியம்..? இதெல்லாம் தேவைதானா..? இப்போதைய காலக்கட்டத்திலேயே எடுக்கப்பட வேண்டிய கதைகள் நிறைய இருக்கே..? இயக்குநர் எப்படி இதனை தேர்வு செய்தார் என்றே தெரியவில்லை.
கலை இயக்குநர் தோட்டா தரணி மிக கஷ்டப்பட்டு பல இடங்களில் பெயிண்ட் அடித்து சுத்தம் செய்து புதிய இடங்களை பழைய இடம் போல காட்ட பிரயத்தனப்பட்டிருக்கிறார். இத்தனை செய்தும் அது செயற்கை என்பது தெளிவாகவே தெரிகிறது. மனதில் ஒட்டலையே..? வில்லனின் இருப்பிட செட்டுக்காக கலை இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.
வடிவேலு வழக்கம்போல பக்கம், பக்கமாக வசனம் பேசியிருக்கிறார். உடல் சேஷ்டைகளை காட்டியிருக்கிறார். சின்னப் புள்ளைகளை கவர்வதற்காக அவர்களுக்குப் பிடித்தமான வசனங்களும், சேட்டைகளும் இருக்கின்றன. ஆனாலும் என்ன ஒரு காட்சியில்கூட சிரிப்பு வரலியே..?
‘வேணாம்.. அழுதிருவேன்’ என்கிற ஒரு வரியில் வந்த சிரிப்பை இத்தனை பக்க வசனங்களால் கொண்டு வரவே முடியவில்லை என்பதை வடிவேலு இந்தப் படத்தில் இருந்தாவது புரிந்து கொள்ள வேண்டும்.
இடைவேளைக்கு பின்பு தலையைக் காட்டும் ஒரு ஹீரோயினாக சதா. இரண்டு பாடல்களுக்கு ஆடியிருக்கிறார். சில வசனங்களை பேசியிருக்கிறார். அவ்வளவுதான்.. வடிவேலு படத்தில் இது கிடைத்ததே பெரிய விஷயம்தான்..!
வில்லன் பிரதீப் ராவத், கிட்டி, கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் அதிகாரி அஜய், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என்று அவரவர் கேரக்டரில் சொல்லிக் கொடுத்த வசனங்களை பேசிவிட்டு போயிருக்கிறார்கள். ம்ஹூம்.. யாராவது ஒருவராவது சிரிக்க வைத்துவிடுவார்கள் என்று கடைசிவரையிலும் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். வங்கிக் கொள்ளை, நகைக் கொள்ளையில் எத்தனையோ சிரிப்புகளை பூக்க வைத்திருக்கலாம். இயக்குநரின் இயக்கம் அதைச் செய்யாததால் வீணாகிவிட்டது.
‘கொள்ளை அழகு கொட்டிக் கிடக்கு’ பாடலும், ஹிந்தி பாடலும்தான் படத்தில் கிடைத்த இரண்டு ரிலீப் டைம். பால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவில் குறைவில்லை என்றாலும் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை. பின்னணி இசை என்று சொல்லி காதுக்குள் கம்பியைவிட்டுக் குத்துவதை போல இசையமைத்திருப்பது ஏனோ..?
தன்னை திரையில் பார்த்து எத்தனை நாட்களாயிருச்சு என்று சொல்லி தியேட்டருக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் போவதை, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வடிவேலு அண்ணன் பார்த்துக் கொண்டிருப்பார் என்று தெரியவில்லை.
சிறந்த கதை, சிறந்த இயக்குநர் என்று அமைப்பியல் இருந்ததால்தான் அவருடைய பல காமெடிகள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. அடுத்து இது போன்ற கொடுமையான முயற்சிகளைக் கையாளாமல் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலேயே ஹீரோக்களுக்கு இணையாக புதிய கதைக்களத்தில் புதிய இயக்கத்தில் வடிவேலு அண்ணன் வலம் வந்தால் அவருடைய பழைய டிரேட் மார்க் சிரிப்பலையை தியேட்டரில் காணலாம்..!
இனி எல்லாம் அவர் கையில்..!