ஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்

18-04-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இந்தியாவின் இயக்குநர் மணிரத்னம்.  
‘தில்ஸே’, ‘குரு’, ‘ராவணன்’, ‘கடல்’  என்று வரிசையான தோல்விகளுக்குப் பின்னர் இனி தனக்கான கதைகளைத் தயார் செய்யாமல் சமூகத்திடமிருந்தே பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஒரு நல்ல கதையைத் தேர்வு செய்திருக்கிறார். இதுதான் இந்தப் படத்தின் மூலம் அவருக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி..!

சென்னை மேற்கு மாம்பலத்தில் இருந்து மும்பை வந்திருக்கும் வீடியோ கேம் புரோகிராம் எழுதும் பொறியாளர் ஆதி என்னும் துல்கர் சல்மான். கோவையின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்து பெற்றோர்களின் பிரிவினால் பாதிக்கப்பட்டு திருமணம் செய்யவே கூடாது என்று கொள்கையுடனும், பாரிஸில் போய் செட்டிலாகணும் என்கிற ஆசையுடனும் இருக்கும் தாரா என்னும் நித்யா மேன்னும் தற்செயலாக சந்தித்துப் பேசுகிறார்கள்.
பார்த்தவுடன் இருவருக்கும் பிடித்துப் போகிறது. சேர்ந்து வாழ நினைக்கிறார்கள். அதன்படியே வாழ்கிறார்கள். ஒரு கட்டத்தில் இரு வீட்டாருக்கும் இது தெரிந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்ய..  இருவர் மனதிலும் ஊசலாட்டம். கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்று..?
இந்த நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாள தம்பதிகளான பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் அன்னியோன்யத்தையும், அன்பையும், பாசத்தையும் பார்த்த பின்பு இவர்களது மனதிலும் ஒரு மாற்றம்.. அது என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்..!
கொஞ்சம் ‘மெளன ராகம்’.. கொஞ்சம் ‘அலை பாயுதே’.. இது இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் வருவது இந்த ஓ காதல் கண்மணிதான்..!
‘லிவிங் டூ கெதர்’ என்ற ‘திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்தல்’ என்கிற விஷயத்தை அடிப்படையாக்க் கொண்டதுதான். ஆனால் கடைசியில் அதை நியாயப்படுத்தவில்லை இயக்குநர். முற்றிலுமாக மறுக்கவும் இல்லை.
இன்றைய இளைய சமுதாயம் கொஞ்ச நாள் சேர்ந்து வாழ்ந்து பார்ப்போம். பிடித்தால் திருமணம் செய்து கொண்டு தொடர்வோம். இல்லையேல் தொடர்பை முறித்துக் கொண்டு வேறு ஆள் தேடுவோம் என்ற முற்போக்கு சிந்தனையோடு வலம் வந்து கொண்டிருப்பதை நாடே அறியும். இது தவறா சரியா என்கிற கேள்விக்கு அனைவருமே, இது தனி நபர்களின் சுதந்திரம் என்கிற எண்ணத்திலேயே பதில் சொல்கிறார்கள். இது அவரவர் விருப்பம் என்கிறார்கள்.
இந்தியா போன்ற குடும்பமே முக்கியம் என்று சொல்லிப் பழக்கப்பட்ட நாட்டில் உலகமயமாக்கல் என்கிற ஒரேயொரு அந்நிய ஆதிக்கத்தினால் முதலில் தகர்க்கப்பட்டது நமது பொருளாதாரமல்ல.. நமது குடும்பம் என்கிற சமூக அமைப்புதான். எவரும், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிற சுதந்திரத்தை இந்த கட்டற்ற கருத்துச் சுதந்திரம்தான் கொடுத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படப் போவது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நமது மக்கள்தான் என்பதை மட்டும் அனைவருமே வசதியாக மறந்து போய்விடுகிறார்கள்.
படத்தின் திரைக்கதையைப் பொறுத்தமட்டில் படத்தின் கதையில் இருந்து ஒரு நொடிகூட வழுவாமல் ஒரே நேர்க்கோட்டில் செல்கிறது.
நித்யா மேனனை பின் தொடர்ந்து வந்து காதலிப்பதாக சொல்லும் ஒருவனை அவன் தன்னை டார்ச்சர் செய்வதாகச் சொல்லி விரட்டியடிக்கிறாள். ஆனால் இந்தச் சம்பவத்தைப் பார்த்து பயந்து போய் நித்யா மேன்னிடம் டிரெயின் வருகிறது என்று சொல்லி எச்சரிக்கை செய்யும் துல்கர் சல்மானை சுமாரான 100 அடி தூரத்தில் இருந்து பார்த்தவுடனேயே நித்யாவுக்கு துல்கர் மீது ஒரு கவன ஈர்ப்பு வந்துவிடுகிறது.
சில நாட்கள் கழித்து ஒரு சர்ச்சில் இருவரின் பொதுவான நண்பர்களின் திருமணத்தில் சந்திக்கும்போது சட்டென்று ஈர்க்கப்பட்டு பேசி, செல்போன் நம்பரை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டு பேசத் துவங்கிவிடுகிறார்கள்.
இது இருவரது தரப்பிலும் காதலின் செயல்பாடாகவே சொல்லப்படுகிறது. அது டூயட்டுடன் சில இளமை துள்ளல் காட்சிகளுக்குப் பின்னர் மெல்ல மெல்ல நகர்ந்து காமத்திற்கு சென்று நிற்கும்போது அதையும் இருவருமே மிக எளிதாக எடுத்துக் கொண்டு ‘கல்யாணத்திற்கு முன்னால பிடிச்சவரோட உடலுறவு வைச்சுக்குறதுல்ல தப்பில்லை’ என்று மிக எளிதாக சொல்லிவிட்டு அந்த உடன்படிக்கைக்கு உடன்படுகிறார்கள்.
ஆனால் இதற்கான களம் எங்கே என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கரு. பிரகாஷ்ராஜின் மனைவியான லீலா சாம்சன் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர். வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது சில நேரங்களில் வீடு எங்கேயிருக்கிறது என்பது தெரியாமல் மறந்துபோய் அல்லல்படுவார்.  மனைவிக்காக வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யும் பிரகாஷ்ராஜின் செயல்கள் இவர்களுக்கு தியாகமாக தெரியவில்லை. அதே சமயம் கேலியாகவும் தெரியவில்லை. அவர் விருப்பம் அவருக்கு. அதனால் செய்கிறார் என்றுதான் நினைக்கிறார்கள்.
பிரகாஷ்ராஜின் திருமணமும் காதல் திருமணம்தான். வேறொருவன் கொடுத்த காதல் கடித்த்தை லீலாவிடம் பிரகாஷ்ராஜ் கொடுக்க.. அதில் கையெழுத்து இல்லாததால் பிரகாஷ்ராஜ்தான் தன்னை காதலிப்பதாக நினைத்து சரியென்று தலையாட்டி.. பின்பு குழப்பம் தெளிந்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்கிறார். இதில் முன்னெடுத்திருப்பது காதல்தான். பின்புதான் திருமணம்..
இதைக் கேட்ட பின்பும் இளம் காதலர்களுக்கு திருமணம் என்ற பந்த்த்தின் மீதான ஈர்ப்பு வரவில்லை. திடீரென்று மும்பை வரும் அண்ணன், அண்ணியை சமாளிக்க வேண்டி இரவு முழுவதுமான ‘கலவி’யினால் டயர்டாகி தூங்கிக் கொண்டிருக்கும் நித்யாவை வம்படியாக எழுப்பி வீட்டைவிட்டு அனுப்புகிறார் துல்கர். ஆனால் இதனைக் கண்டுபிடிக்கும் அவரது அண்ணி ‘கல்யாணத்தைப் பண்ணிட்டு அப்புறமா என்ன வேண்ணாலும் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டுப் போவதும் படத்தில் இருக்கிறது.  இதனையும் காதலர்கள் எப்பவும்போல ஈஸியாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள்.
கர்ப்பம் தரித்துவிட்டோமோ என்கிற பயத்தில் நித்யா பயப்படுவதைக் காட்டிலும் துல்கர்தான் அதிகம் பயப்படுகிறார். இதில் சிக்கிவிடுவோமோ.. வீட்டாருக்குத் தெரிந்து விடுமோ என்கிறார். சேர்ந்தும் வாழலாம். ஆனால் ஊருக்கும் சொல்லக் கூடாது என்றால் எப்படி..? இதில் எங்கேயிருக்கிறது சுதந்திரம்..? இது முழுக்க முழுக்க ஏமாற்றுத்தனம். இதையும் அழகாகப் பதிவாக்கியிருக்கிறார் மணிரத்னம். மருத்துவமனையில் துல்கர் படும் பதட்டமும், அதிர்ச்சியும், ஓட்டமும் பரபரப்பை ஏற்படுத்துவதைவிடவும் சிரிப்பலையைத்தான் ஏற்படுத்தியது.
லீலா தொலைந்து போகுதல்.. அதைத் தொடர்ந்து இருவரும் இணைந்து தேடுவது.. அந்தத் தேடுதலில் இவர்கள் இருவரும் மட்டுமே ஈடுபட்டிருக்க.. எங்கேயிருந்து திருமண பந்தத்தின் மீதான ஒரு ஆர்வமும், பாதுகாப்புணர்வும் இந்த இளம் காதலர்களுக்கு ஏற்பட்டது என்பதை இயக்குநர்தான் ‘விம்’ போட்டு நமக்கு விளக்க வேண்டும்..!
பிரகாஷ்ராஜின் கஷ்டத்தையும் இவர்களின் அன்பையும் பார்த்து மனம் மாறிவிட்டார்கள் என்றால் அதுதான் இல்லை.. இந்த அலைச்சலே இவர்களுக்கு ஒருவித பயத்தைக் கொடுக்கிறது. ‘நான் தொலைந்து போனால் நீயும் இதேபோல தேடுவியா?’ என்கிறார்கள். ‘கண்டிப்பாக தேடுவேன். என் கூடவே இருந்திரேன்’ என்கிறார் துல்கர். கிட்டத்தட்ட ‘மெளனராகம்’ படத்தின் கிளைமாக்ஸில் டிரெயினுக்குள் நின்றபடியே ரேவதி சொல்லும் மைண்ட் வாய்ஸ்தான் இது..
சர்ச்சுக்குள் நடக்கும் திருமணத்தின்போது நன்கு படித்த மேன்மக்கள் இப்படி முதன் முறையாக சைகையாலேயே அறிமுகப்படுத்திக் கொண்டு செல் நம்பர்வரையிலும் பரிமாறிக் கொள்வதெல்லாம் மணிரத்னம் படங்களில் மட்டுமே நடக்கும்.. பார்த்தவுடன் நம்பரைக் கொடுத்துவிடும் அளவுக்கு நித்யாவுக்கு துல்கர் மீதிருந்த ஈர்ப்புதான் காதல் என்பதை அவர் கடைசியிலாவது சொல்லியிருக்கலாம். 
அலுவலகம் வந்தவுடன் புராஜெக்ட் என்னாச்சு என்ற அதிகாரியின் கேள்விக்குப் பதிலாக துல்கர் செய்து காட்டும் அந்த மோனோ ஆக்டிங் ரசனையானது. ரசிக்கும்படியாக இயக்கம் செய்யப்பட்டுள்ளது. அதைவிட அந்தக் காட்சியில் எடிட்டிங் மிக பிரமாதம்.. ஒரு சிறிய சிராய்ப்புகூட இல்லாமல் கோர்த்திருக்கிறார் எடிட்டர். ஆனால் இது நிஜமான அளவில் சாத்தியம்தானா என்று தியேட்டரைவிட்டு வெளியில் வந்துதான் யோசிக்க முடிந்தது. இதுதான் இயக்குநரின் சாமர்த்தியம்..!
தமிழ்ச் சினிமாவுக்கே உரித்தான சில சில சென்டிமெண்ட் காட்சிகள் எல்லா காலங்களிலும் உண்டு. அதில் மணிரத்னமும் தப்பிக்கவில்லை. பிரகாஷ்ராஜ் லிவிங் டூ கெதருக்கு சம்மதிக்கவில்லை. முடியாது என்று மறுக்கிறார். ஆனால் நித்யா மேன்ன் பிரகாஷின் மனைவி லீலாவுடன் அமர்ந்து கர்நாடக சங்கீத்த்தை பாடியவுடன் பட்டென்று மனம் மாறி ஒத்துக் கொள்கிறார்.
ஒருவிதத்தில் பார்த்தால் எப்படி என்பீர்கள்..? ஆனால் பிரகாஷ்ராஜ் பார்வையில் பார்த்தால் தான் இதுவரையில் ஒரு கணவனாகவே பராமரித்து வந்த தன் மனைவிக்கு அவளுக்குப் பிடித்தமான வகையில் இன்னொரு பெண்ணும் வீட்டில் இருந்தால் தன் மனைவிக்கு வசதியாக இருக்குமே என்று எண்ணியிருக்கலாம். ஆனால் இந்த வசதிக்காகவே கடைசியில் லீலாவை பார்ப்பதும், கண்டுபிடிப்பதும் நித்யா என்றே திரைக்கதையில் காட்சிகள் அமைந்திருக்கின்றன. நல்ல முறையில் பேலன்ஸ் செய்திருக்கிறார் இயக்குநர்.
இறுதிக் காட்சியில் இவர்களுடைய தேடுதல் வேட்டையின்போது ஏற்படும் சின்னச் சின்ன சண்டைகள்.. என்கிட்ட வேணும்னே சண்டை போடுற..? நாளைக்கு நான் கிளம்பறதா வேண்டாமா..? என்னை போன்னு சொல்றியா..? இல்ல வேணாம்ன்னு சொல்றியா..? என்ற சின்னச் சின்ன வசனங்களாலும், அந்த மழைக் காட்சி.. படபடக்கும் அவர்களுடைய தேடுதல் பார்வைகள்.. இவைகளுடே பம்பரமாக இயக்கியிருக்கும் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத் திறம் நிச்சயமாக பெருமைக்குரியது.. இயக்கத்தில் தான் இன்னமும் சளைத்தவனில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் மணிரத்னம்.
எப்பாடுபட்டாலும் திருமண ஒப்பந்தத்தை முறிக்காதே என்பதற்கு அடையாளமாக வாழ்கிறார் பிரகாஷ்ராஜ். தன்னை காதலித்த மனைவி இப்போது தனக்கு மிகப் பெரும் தொந்தரவாக இருக்கிறார் என்றாலும், அவரை விட்டு பிரிய மனமில்லாமல் இப்போது தான் மனைவியாகி அந்த வீட்டில் அவர் வளைய வரும் காட்சிகளும், பேசும் உணர்ச்சிமிக்க நெஞ்சைத் தொடும் வசனங்களும் அருமை. இப்படியொரு காதலுடன் வாழும் தம்பதிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றாலும், இவர்களைப் பார்க்கும் தம்பதிகள் ஒரு நிமிடமாவது தங்களை பரிசோதித்துக் கொள்வார்கள் என்று உறுதியுடன் நம்பலாம்.
பிரகாஷ்ராஜின் நடிப்பை பற்றிச் சொல்லவே தேவையில்லை. மற்ற படங்களில் காட்டும் மிகையுணர்ச்சி நடிப்பையும், அலங்கார, ஆர்ப்பாட்டமான தோற்றத்தையும் இதில் விட்டொழித்துவிட்டு சாதாரண மிடில் கிளாஸ் கணபதியாக ஆர்ப்பரித்திருக்கிறார். நன்று..
இவருக்கு ஜோடியான லீலா சாம்சன். கச்சிதமான பொருத்தம். “ஒரு நாள் உன்னையும் மறந்திருவனா கணபதி..?” என்று வருத்தமும் இல்லாமல் சோகமும் இல்லாமல் அந்த நோயாளி போன்று கேட்கும்போது உச்சுக் கொட்ட வைத்துவிட்டார். இவருக்குக் கிடைத்திருக்கும் நறுக், நறுக் வசனங்களும் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை சுவாரசியப்படுத்துகின்றன.
‘வாயை மூடிப் பேசவும்’ படத்தில் அறிமுகமான துல்கர் சல்மான் துள்ளலான நடிகராக இருக்கிறார். கார்த்திக்கை ஞாபகப்படுத்துகிறார். அவரது அப்பாவின் குரல். ஆனால் கொஞ்சம் மென்மையானதாக இருக்கிறது. முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் அவருடைய பரபரப்பு, முக அழகு, ஷாட் பை ஷாட் காட்டியிருக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் அனைத்துமே ஒரு யூத்தின் அட்டகாசமாகவே இருக்கிறது..!
சர்ச்சுக்குள் உட்கார்ந்து கொண்டு பேசத் துவங்கி, நித்யாவுடனான உறவுக்கு ஓகே வாங்கும் கட்டம்வரையிலும் இவருடைய அராஜகத்திற்கு ரசிகைகள் நிச்சயம் திரண்டிருப்பார்கள். நித்யா போன்ற நடிப்பு ராட்சஸிக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.
முன்பு நேரம படத்தில்தான் ஒரு ஹீரோயினின் சின்னச் சின்ன முக பாவனைகள்கூட மிக அழகாக்க் காட்சிப்படுத்தப்பட்டிருந்த்து. இதில் நித்யா மேன்னும் அந்த வகைதான். லைவ் ரிக்கார்டிங் என்றாலும்கூட சின்னச் சின்ன வசனங்களை அலட்சியமாக போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகும்போதுகூட அவருடைய முகத்தில் தெரியும் நடிப்பு ரசிக்க்க்கூடியதாகவே இருந்த்து.
ஹீரோயினை டூயட்டுக்கும், குத்துப்பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்தி வரும் தமிழ்ச் சினிமாவில் மணிரத்னம் போன்ற இந்த படைப்புகள் மூலம்தான் ஹீரோயினையும் கொஞ்சம் நடிக்க வைங்கப்பா என்று மற்ற இயக்குநர்களுக்கு நாம் உரிமையோடு சொல்ல்லாம்.
மிக இயல்பான கச்சிதமான நடிப்பு. தன்னிடம் பொய் சொல்லிவிட்டு தன்னுடைய அம்மாவை பார்த்து அவருடைய மிரட்டலை எதிர்கொண்டு வந்திருக்கும் துல்கரின் மேல் கோபம் கொண்டு படபடவென்று கோபத்தில் வார்த்தைகளை கொட்டியபடியே சாலைகளில் நடந்தபடியே ஓடியபடியே பேசுகின்ற பேச்சுக்களும், நடிப்பும் ஏ ஒன். சிறிது நேரத்தில் சுற்றுப்புறத்தை மறந்துபோய் படத்தில் லயிக்க வைத்துவிட்டது இந்தக் காட்சியில் ஹீரோ, ஹீரோயின் இருவரின் நடிப்பும்..!
அக்னி நட்சத்திரம் படத்தில் பாடல் காட்சிகளில் வெரைட்டியாக ஒளிப்பதிவு செய்து கைதட்டல் வாங்கிய பி.சி.ஸ்ரீராம் இதிலும் அப்படியேதான் செய்திருக்கிறார். மும்பையின் அழகை அழகாகவே படமாக்கியிருக்கிறார். எத்தனை கோணங்கள்.. எத்தனை பார்வைகள்.. எத்தனைவிதமான சிச்சுவேஷன்கள்.. மழை, காற்று, வெயில், மாலை நேர வெயில்.. காலை நேர உதயம் என்று விதம்விதமாக ஒவ்வொரு காட்சியின் தன்மைக்கும் ஏற்றவகையில் காட்சிப்படுத்தி படமாக்கியதால் படத்தில் கேமிராமேனின் பங்களிப்பும் கணிசமானதாக இருக்கிறது..
இயக்குநரே அதிகமாக ஸ்கோர் வாங்கிக் கொண்டு போகிறார் என்றாலும் சூப்பரான இயக்கம் என்றால் அதில் கணிசமாக எடிட்டரின் பங்களிப்பும் இருந்தாக வேண்டும். இதில் இருக்கிறது.  பாடல் காட்சிகளில் குறிப்பாக பறந்து செல்ல வா பாடல் காட்சியில் ஒளிப்பதிவாளருடன் போட்டியிட்டிருப்பவர் எடிட்டரும்கூடத்தான். சின்னச் சின்ன ஷாட்டுகளை மிக அழகாகத் தொகுத்து நீண்ட நெடிய ஷாட்டுகளை இணைத்து கச்சிதமாக ரசிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர். கிளைமாக்ஸிலும் எடிட்டரின் கைவண்ணம் அதிகம்.
வேறெந்தப் படத்திலும் இல்லாத அளவிற்கு இப்படத்தில்தான் பின்னணி இசையை  குறிப்பிடத்தக்கவகையில் கவனப்படுத்தி இசையமைத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அதை மறுப்பதற்கில்லை. முற்பாதியில் துல்கர்-நித்யா சந்திப்பின்போதெல்லாம் இடையிடையே வரும் பின்னணி இசை ரசனையானது. கேட்பதற்கும், அந்தச் சிச்சுவேஷனுக்கும் இனிமையாக இருந்தது.. ரஹ்மானின் பாடல்களெல்லாம் வழக்கொழிந்துபோய் காலமாகிவிட்டதால் இந்தப் படத்தின் பாடல்களையும் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. எல்லாம் ஒரு காலம் என்று பெருமூச்சு விட வேண்டியதுதான்..!
முதற்பாதி மின்னல் வேகத்தில் பறந்து சென்றாலும், பிற்பாதி மட்டுமே சில நேரங்களில் ஜவ்வாக இழுத்து நின்று தேங்குவதுதான் ஒரேயொரு குறை. சில இடங்களில் வசனம் புரியாத அளவிற்கு ஒலிக்கலவை செய்திருப்பதும் இதற்குக் காரணம். உதாரணம், நித்யாவின் அம்மா துல்கரின் அண்ணன் வீட்டிற்குச் சென்று பெண் கேட்கும்போது அண்ணன் போனில் துல்கரையும், பிரகாஷ்ராஜையும் அழைத்து பேசுகின்ற காட்சி.. பல வசனங்கள் காதுகளில் நுழையாமலேயே போய்விட்டது..!
சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்தப் படத்தில் லிவிங் டூ கெதர் என்னும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரத்தை இயக்குநர் மணிரத்னம் ஆதரிக்கவில்லை; ஊக்கப்படுத்தவில்லை. மாறாக அது இன்றைய சமூக வாழ்க்கைக்கு பாதுகாப்பில்லாதது. இதனால் இரு தரப்பினருமே பாதிக்கப்படுவார்கள். அதில் அன்பு இருக்காது. பாசம் இருக்காது. நேசம் இருக்காது. பரிவு இருக்காது.. மாறாக உடல் இன்பம் மட்டுமே முதன்மையான தேடலாக இருக்கும் என்பதை தன்னுடைய பாணியில் ரத்தினச் சுருக்கமாக எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாத்தும் அவரவர் விருப்பம். ஆனால் தன்னுடைய கொள்கையை வெள்ளித்திரையில் மட்டுமே வெளிப்படுத்துவேன் என்று சொல்லும் மணிரத்னம் இந்தப் படத்தின் மூலம் இது தொடர்பான தனது கொள்கையை தனது தனி மனித உரிமையைப் பயன்படுத்திச் சொல்லியிருக்கிறார்.
மணிரத்னம் இதற்கு முன் இயக்கி தோல்வி கண்ட படங்களின் கதைகளெல்லாம் பல்வேறு இடங்களில், கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவை. அவைகளின் படமாக்கலில் செய்நேர்த்தி இருந்தாலும் மக்களிடமிருந்து அன்னியப்பட்ட கதையாக இருந்த்தினால் மணிரத்னம் அவ்ளோதானா என்றுகூட கேள்விகள் எழுந்தன. ஆனால் இந்த முறை இந்த மண்ணில் இருந்தே.. இப்போதைய மக்களின் வாழ்க்கை முறையில் இருந்தே ஒரு கதையைச் சுரண்டி எடுத்துக் கொடுத்ததினால் படம் வெற்றியாகி இயக்குநர் மணிரத்னம் மீண்டும் கவனிப்பிற்கு உள்ளாகியுள்ளார்.
மற்ற இயக்குநர்களும் இதனைக் கவனத்தில் கொண்டால் நல்லது. ஏனெனில் இந்த மண்ணில் இதுபோல் எடுக்கப்படாத கதைகள் லட்சணக்கணக்கில் உள்ளன. ஒரு உண்மையான படைப்பாளிக்குத்தான் அந்தக் கதை கண்ணில் தெரியும். எடுத்துக் கொடுங்கள். பார்க்கத் தயாராக இருக்கிறோம்..!
ஓ காதல் கண்மணி – டபுள் ஓகே கண்மணி..!

0 comments: