தொட்டால் தொடரும் - சினிமா விமர்சனம்

27-01-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு தொலைபேசி அழைப்பைத் தொட்டு ஹீரோ அல்லல்படுகிறார். ஒரேயொரு ஏமாற்று வேலையைச் செய்து ஹீரோயினும் அல்லல்படுகிறார். ஏன் இருவரும் இதைத் தொட்டார்கள்..? தொடாமலேயே இருந்திருக்கலாமே என்பதற்கு பதிலாகத்தான் இந்தத் ‘தொட்டால் தொடரும்’ டைட்டில்..!

ஹீரோயின் வங்கியொன்றின் டெலிகாம் சென்டரில் வேலை செய்பவர். உடன் வேலை செய்யும் தோழியை கிண்டல் செய்த்தற்காக ஹீரோவுக்கு போன் செய்து பேசத் துவங்க.. இந்தப் பேச்சு நயமாகவும், அன்பாகவும், கிண்டலாகவும் உருமாறி ஹீரோவுக்குள் காதல் உணர்வைத் தூண்டிவிடுகிறது. இங்கே ஹீரோயினுக்கு அது இல்லை..
இந்த நேரத்தில் ஹீரோயினின் தம்பி விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார். அவரைக் காப்பாற்ற வேண்டுமெனில் முப்பது லட்சம் ரூபாய் தேவை. அதே முப்பது லட்சம் ரூபாய்க்கு தன்னை இன்ஸூரன்ஸ் செய்திருப்பது ஹீரோயினுக்கு அப்போதுதான் ஞாபகம் வருகிறது.
தான் இறந்தால் பணம் கிடைக்கும். அந்தப் பணத்தை வைத்து தம்பி பிழைத்துக் கொள்வானே என்று சொல்கிறது குறுக்கு புத்தி. வேண்டுமென்றே விபத்தில் சிக்கப் பார்க்கிறாள். தப்பித்தாலும், வேறொரு வழி கிடைக்கிறது.
ஒரு கொலை அஸைண்மெண்ட்டுக்காக அலையும் ஒரு கும்பலை பார்த்துவிட்டு அவர்கள் சிக்னலுக்காக வைத்திருந்த ஒரு பெண்ணின் போட்டோவை நீக்கிவிட்டு தன்னுடைய போட்டோவை அங்கே வைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு வருகிறாள்.
அதற்குள்ளாக ஹீரோ மின்னல் வேகத்தில் கிரவுண்ட் பண்டிங் முறையில் இணைய நண்பர்களிடத்தில் முப்பது லட்சம் ரூபாயை கலெக்சன் செய்து கொடுத்துவிட.. ஹீரோயின் முதலில் சந்தோஷப்பட்டாலும் பின்பு பகீரென்றாகிறது.
தன்னை கொலை செய்ய தானே ஐடியா கொடுத்துவிட்டு வந்திருப்பதை அடுத்து அங்கு ஓடிப் போய் பார்க்கிறாள். கொலையாளியின் கைகளுக்கு தன் புகைப்படம் சென்றுவிட்டதை அறிந்து அதிர்ச்சியாகிறாள். தன் காதலை சொல்லத் துடிக்கும் ஹீரோவிடம் ஹீரோயின் இதைச் சொல்ல.. இருவரும் இணைந்து காதலியை கொலை செய்யும் முயற்சியை எப்படி தடுக்கிறார்கள் என்பதுதான் மீதிக் கதை..!
சென்ற வருடம் வெளியான ‘தெகிடி’ படத்தின் அடிநாதமே இன்ஸூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்வதுதான். இதில் கொஞ்சம் மாறுபட்டு கொலையை திட்டமிட்டு செய்துவிட்டு, அதனை தற்கொலை என்று சொல்ல வைக்கும் ஒரு கும்பலின் கதையாக மாறியிருக்கிறது.
தமன்குமார் நன்கு நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. கொடுத்த வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஹீரோ ஹீரோயின்தான் என்று சொல்லும் அளவுக்கு அவருக்குத்தான் அதிக ஸ்கோப். இன்னமும் கொஞ்சம் உடம்பை குறைத்தால் நன்றாக இருக்கும். அருந்ததி முந்தைய படத்தில் ஆள் பாதி, ஆடை பாதியாக நடித்து நடிப்பென்றால் என்ன என்று கேட்டிருந்தார். இதில் முழுக்க மூடி நடித்தும் ‘என் நடிப்பு இதுதான்’ என்று காட்டியிருக்கிறார். வெல்டன் மேடம்..!
உடன் நடித்திருக்கும் பாலாஜியின் கடி ஜோக்குகள் கேட்க நன்றாக இருந்தும் போதுமான இயக்கமில்லாததால் வசனத்திற்கேற்ற சிரிப்பு வரவில்லை. பத்திரிகையாளர்கள் காட்சியில் 3 இடங்களில் கைதட்டல்கள் கிடைத்தன. அது எதற்கு என்று இயக்குநருக்கே தெரிந்திருக்கும். நிச்சயம் இது தியேட்டர்களில் கிடைத்திருக்காது.
படத்தின் துவக்கமே மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சைரன் வைத்த அரசு காரில் செல்லாமல், உடன் பாதுகாப்பு போலீஸார் இல்லாமல்… சொந்த டிரைவரை வைத்துக் கொண்டு ‘விளையாட செல்லும்’ ஒரு காட்சியுடன்தான் துவங்குகிறது.
டாஸ்மாக்கின் சதியால் பின்னால் திறந்த ஜீப்பில் வந்த இளைஞர்கள் அமைச்சருடன் ரகளை செய்ய.. இரண்டு வாகனங்களும் ஒன்றையொன்று விரட்ட.. விபத்து.. அமைச்சர் மரணம். ஆனால் இது கொலையாக இருக்கலாமோ என்று சந்தேகிக்கும் நேரத்தில்தான் துவங்குகிறது ஒரு எதிர்பார்ப்பு..! படம் முழுவதிலும் இந்த சஸ்பென்ஸை கச்சிதமாக்க் கொண்டு போயிருக்கிறார்.
படத்தின் முற்பாதியில் ஹீரோயினின் கேரக்டர் ஸ்கெட்ச், அவருடைய வீட்டுப் பிரச்சினை, சித்தியின் புலம்பல்.. இங்கே ஹீரோவின் ஜாலி டைப்.. அவருடைய ஜாலியான ஒரு பிரெண்ட்.. பின்பு போனில் பேசும் கடலை பேச்சுக்கள் என்று பெரும்பாலும் செல்போனின் மூலமாகவே கதை நகர்வதால் போரடிக்கத்தான் செய்கிறது..
பிற்பாதியில் எப்படி ஹீரோயின் கொல்லப்படப் போகிறாள் என்கிற எதிர்பார்ப்பிலேயே கதை நகர்வதால் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஆனால், சட், சட்டென்று நகரும் காட்சிகளால் எந்தக் காட்சியும் மனதில் பாரமாக இருக்கும் அளவுக்கோ, மனதைத் தொடும் அளவுக்கோ இல்லாமல் போனது இயக்குநரின் இயக்கத்தினால்தான்..!
அமைச்சரின் அடிவருடியான இன்ஸ்பெக்டர் தனது சொந்த முயற்சியில் இந்தக் கேஸை தொடர்கிறார். ஆட்களைப் பிடிக்கிறார். துப்பாக்கி முனையில் ஒருவனை மடக்கிப் பிடிக்கிறார். பின்பு அவனை அமைச்சரின் மகனே கொலை செய்கிறார். இப்போதைய அரசியல் உலகத்திலும் இது நடக்கத்தான் செய்கிறது.
இன்னொரு பக்கம் அரதப்பழசான காட்சியமைப்புகளும் சலிக்க வைக்கின்றன. செல்போனில்தான் ஹீரோயின் பேசியிருக்கிறார். அந்த நம்பரை பாலோ செய்தாலே ஹீரோயினை கண்டுபிடித்துவிட முடியாதா..? அதுக்கெதுக்கு ஹீரோயின் பேசின வசனத்தை அலுவலக பெண் ஊழியர்களை பேச வைத்து செக்கிங்..? அடுத்த காட்சியில் “அதான் நம்மகிட்ட நம்பர் இருக்கே..?” என்கிறார் பாலாஜி. இதை முதல்லேயே செஞ்சிருந்தா அந்தக் காட்சி தேவையில்லைதானே..?
இப்போதைய நிலைமையில் முப்பது லட்சம் ரூபாய்க்கு மாசாமாசம் எவ்வளவு பிரிமீயம் கட்டணும்ன்னு கணக்கு போட்டு பாருங்க. ஒரு சாதாரண டெலி கால் ஊழியராக இருக்கும் ஹீரோயினால் இதைக் கட்ட முடியுமா..?
ஒரு மரத்தின் பின்னால் புகைப்படத்தை வைத்துவிட்டுப் போக.. கொலையாளிகள் வந்து எடுத்துச் செல்வதெல்லாம் எந்தக் காலத்து டெக்னிக்.? அதுவும் நடுராத்திரில..?  
ஹீரோ-ஹீரோயினை லாரியில் துரத்தும் வின்சென்ட்  அசோகனிடமிருந்து தப்பிக்கும் காட்சியெல்லாம் டூ மச். லாரியில் வருவது வின்சென்ட் மட்டும்தானே.. ஹீரோ இறங்கி ஒத்தைக்கு ஒத்தை பார்த்திருந்தால் ஹீரோவுக்காச்சும் சண்டை போட்ட திருப்தியைக் கொடுத்திருக்கும்..
திடீரென்று ஹீரோவுக்குள் ஒரு சந்தேகம்.. மினி ஆள்காட்டும் கருவி ஹீரோயின் கையில் இருப்பது.. அதை ஹீரோ கண்டுபிடித்தெடுப்பது.. இதைத் தொடர்ந்து ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுக்க நினைக்கையில் ஹீரோயினுக்கு இவ்ளோ டென்ஷனிலும், பிரச்சினையிலும் ‘மூடு’ வந்து ‘அதற்கு’ முயல்வது.. என்று திரைக்கதை போக.. படத்தில் சீரியஸ்னெஸ் என்பதே இல்லாமல் போய்விட்டது. திரைக்கதைக்காக இன்னும் நிறைய உழைத்திருக்கலாம்..!
விபத்து காட்சிகளை அழகாக படமெடுத்தவர்கள், வின்சென்ட்டை ஹீரோ துரத்தும் காட்சியில் கோட்டைவிட்டுவிட்டார்கள். வின்சென்ட் மேலேயிருந்து கீழே குதிக்க முயல்வது போன்ற ஆக்சனைகூட அப்படியே காட்டினால் எப்படி..?
வின்சென்ட் ரோப் மூலம் கீழே இறங்குவதைகூட மில்லி, மில்லியாகக் காட்டி சண்டை பயிற்சி இயக்குநரின் மானத்தை வாங்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர். இப்படி யாராவது படமாக்குவார்களா..?
பாடல் காட்சிகளும், ஒளிப்பதிவும் மட்டுமே இந்தப் படத்தைப் பார்த்த சினிமாக்காரர்களுக்கு திருப்தியானது.  ஏரியல் வியூ ஷாட்டுகள் மற்றும் பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் சுதந்திரமான ஸ்டைல் புதிய அழகைக் காட்டியிருக்கிறது. ஹீரோயின் இவ்ளோ அழகா என்று நினைக்கவும் வைத்திருக்கிறது..!
 பி.சி.சிவனின் இசையில் ‘பாஸு பாஸு’ பாடல் ஏற்கெனவே இணையம் மூலமாக ஹிட்டடித்துவிட்டது. ‘யாருடா மச்சான்’ பாடல் அடுத்த ஹிட். அந்த பல்பு, லைட்டு செட்டிங்ஸ் செய்த கலை இயக்குநருக்கு ஒரு ஜே.  பின்னணி இசை பதட்டத்தைக் காட்டினாலும் சுமாரான இயக்கம் அதை முழுமையாக ரசிக்கவிடாமல் செய்துவிட்டது.
சில, பல இடங்களில் புத்திசாலித்தனமான வசனங்கள் மட்டும் இடம் பெற்றிருக்கின்றன. பாராட்டுக்கள். சீரியஸ் இல்லை.. காமெடியும் இல்லை.. ஆனாலும் படத்தின் இடைவேளைக்கு பின்பு எழுந்து போக எத்தனித்தவர்களையும் உட்கார வைத்திருக்கிறது படம்..!
எப்படியிருந்தாலும் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்றவர்களின் திரில்லர் கதைகளை ஆர்வத்துடன் வாசிக்கும் ஒரு பீலிங்கை இந்த படம் கொடுத்திருக்கிறது. ஆனால் படிக்க ஓகே. பார்ப்பதற்கு….!???
இயக்குநர் கேபிள் சங்கர் தன்னுடைய வலைத்தளத்தில் இதுவரையில் எழுதிய சினிமா விமர்சனங்களிலெல்லாம் “இது குப்பை.. இது மொக்கை.. இது தேறாது.. இது அசுர மொக்கை.. பாதியிலேயே எழுந்து வந்துவிட்டேன்..” என்று சொல்லிய சில படங்களெல்லாம் இந்தத் ‘தொட்டால் தொடரும்’ படத்தைவிடவும் நன்றாகவே இருந்தன; இருக்கின்றன என்பதை இயக்குநர் கேபிள் சங்கர் இப்போது உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறோம்.
நண்பர் கேபிள் சங்கர், அடுத்த படத்தில் இந்த விமர்சனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கும் அளவுக்கு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம். 

14 comments:

Unknown said...

படம் ரிலீசுக்கு முன்பே பிரிவ்யூ பார்த்துவிட்டு விமர்சனம், முதல் காட்சி இடைவேளையின் போதே விமர்சனம் என கலக்கிய இணையதள விமர்சகர்கள் யாரும் நான்கு நாட்கள் ஆகியும் விமர்சனம் எழுதவில்லை.

படத்துக்கு படம் விரிவாக விமர்சனம் எழுதும் செங்கோவி படம் பார்க்காமலேயே படம் நன்றாக இருப்பதாக எழுதி தப்பித்து விட்டார். ஏழை ஹீரோ சாப்பிடும் அரிசி சாதம் பொன்னி அரிசி சாதம் போல வெள்ளையாக பளப்பள கலரில் இருப்பது எப்படி என இயக்குனரை குடைந்த விமர்சகர் படம் நன்றாக உள்ளதாகவும், கேபிளார் இயக்குனராக ஒரு வெற்றி படத்தை கொடுத்திருப்பதாகவும் எழுதி உள்ளார்.

நான் அறிந்த வரையில் தங்களது விமர்சனமும், அந்தணன் அவர்களது விமர்சனமும் நேர்மையாக உள்ளதாக மனதுக்கு படுகிறது. வலைப்பூ விமர்சகர்களின் சாயம் கேபிளார் விசயத்தில் வெளுத்து விட்டது.

damildumil said...

உட்சபட்ச உழைப்பை கொட்டிய எடுத்த எத்தனையோ படங்களை கேபிளார், நக்கலாக விமர்சித்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்பொழுதாவது உணர்ந்திருப்பார் என்று எண்ணுகிறேன்.

ஷங்கர்,முருகதாஸ்,கௌதம் மேனனுக்கே திரைக்கதை பாடம் எடுத்தவர், இவ்வளவு மொண்ணையாக படம் எடுத்து தன் பெயரை கெடுத்திருக்க வேண்டாம்.

பல தரமான கமெர்சியல் படங்களை குப்பைன்னு எழுதிய போது அந்த இயக்குனர்கள் மனநிலையை இப்போதாவது நினைத்துப் பார்க்க வேண்டும்.

தொட்டால் தொடரும் படவேலை தொடங்கிய உடனே தமிழ்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதை ஏறக்குறைய நிறுத்தியதிலிருந்தே அவருடைய பயம் தெரிகிறது.

கேபிள் வேலை செய்த ஒரே காரணத்திற்காக “தில்லு முல்லு” படத்தை ஆஹா ஓஹோ என்று எழுதியும் ”தீயே வேலை செய்யனும் குமாரு” படத்தை தரக்குறையாக விமர்த்தது. குறைந்த பட்ஜட்டில் ( தொட்டால் தொடரும் பட்ஜடை விட கம்பி) எடுத்த களவாணி திரைப்படத்தை ஊரே கொண்டாடியே போது, இதெல்லாம் ஒரு படமே என்று எழுதியது, ரஜினி அடுத்து என்ன மாதிரி படம் எடுக்க வேண்டும் என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்தது, நடுவுல “மன்மதன் அம்பு” சூப்பர்ன்னு :) எழுதினது எல்லாம் கொசுவத்தி சுருளாக நியாபகம் வருகிறது.

christopher nolan, james cameron படத்தை இவருக்கு போட்டுக் காட்டினாலும். “ நல்ல நாட், ஆனா திரைக்கதையில சொதப்பிட்டாரு, பின்பகுதியில் க்ரிப் இல்லை, எடிட்டிங் சரியில்லை, கேமிரா சில இடங்களில் அவுட் ஆப் ஃபோகஸ் என்று எழுதும் கேபிளுக்கு ஒரே ஒரு அட்வைஸ் -

“சாப்பாட்டுக் கடையை” மட்டும் தொட்டு தொடருங்கள். தப்பித்தவறி எந்த படத்தையும் இயக்கம் இல்லை, விமர்சனம் கூட பண்ணாதீங்க, ஏற்கனவே எல்லாரும் உங்களை பார்த்து நமட்டுச் சிரிப்பு, சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

கேபிள் உங்களுக்கு நிறைய திறமை இருக்கு, சினிமா இயக்கம் மட்டும் தான் உங்களுக்கு தெரியவில்லை. மற்றபடி சாப்பாட்டுகடை, சினிமா வியாபாரம், கேட்டால் கிடைக்கும் கட்டுரைகள் சிறப்பானவை. அதை மட்டும் தொடருங்கள். சினிமா பாவம், அதுவே குத்துயிரும் குலையுராமா இருக்கு, நீங்க வேற உங்க பங்குக்கு எதாச்சும் செய்யாதீங்க.

எந்திரன்/கத்தி/ஆரம்பம் மாதிரி படமெல்லாம் பெரிய வெற்றி இல்லை, நிறைய விநியோகஸ்தர்கள் பணத்தை இழந்திருக்கிறார்கள், நானே நேரில் பார்திருக்கிறேன் என்று எழுதிவரும் நீங்கள் வரும் வாரங்களில் கொத்துப்பரோட்டாவில் “தொட்டால் தொடரும்” படம் வெற்றி, ரசிகர்களுக்கு நன்றி என்று எழுதி உங்கள் படத்தை பார்த்து, பாலாஜிக்காக சிரிக்காத ரசிகர்களை, உங்கள் பதிவில் சிரிக்க வைப்பிர்கள் என்று நம்புகிறேன் :)

நன்றி.

damildumil said...

உட்சபட்ச உழைப்பை கொட்டிய எடுத்த எத்தனையோ படங்களை கேபிளார், நக்கலாக விமர்சித்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்பொழுதாவது உணர்ந்திருப்பார் என்று எண்ணுகிறேன்.

ஷங்கர்,முருகதாஸ்,கௌதம் மேனனுக்கே திரைக்கதை பாடம் எடுத்தவர், இவ்வளவு மொண்ணையாக படம் எடுத்து தன் பெயரை கெடுத்திருக்க வேண்டாம்.

பல தரமான கமெர்சியல் படங்களை குப்பைன்னு எழுதிய போது அந்த இயக்குனர்கள் மனநிலையை இப்போதாவது நினைத்துப் பார்க்க வேண்டும்.

தொட்டால் தொடரும் படவேலை தொடங்கிய உடனே தமிழ்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதை ஏறக்குறைய நிறுத்தியதிலிருந்தே அவருடைய பயம் தெரிகிறது.

கேபிள் வேலை செய்த ஒரே காரணத்திற்காக “தில்லு முல்லு” படத்தை ஆஹா ஓஹோ என்று எழுதியும் ”தீயே வேலை செய்யனும் குமாரு” படத்தை தரக்குறையாக விமர்த்ததும், குறைந்த பட்ஜட்டில் ( தொட்டால் தொடரும் பட்ஜடை விட குறைவு) எடுத்த களவாணி திரைப்படத்தை ஊரே கொண்டாடியே போது, இதெல்லாம் ஒரு படமா என்று எழுதியது, ரஜினி அடுத்து என்ன மாதிரி படம் எடுக்க வேண்டும் என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்தது, நடுவுல “மன்மதன் அம்பு” சூப்பர்ன்னு :) எழுதினது எல்லாம் கொசுவத்தி சுருளாக நியாபகம் வருகிறது.

christopher nolan, james cameron படத்தை இவருக்கு போட்டுக் காட்டினாலும். “ நல்ல நாட், ஆனா திரைக்கதையில சொதப்பிட்டாரு, பின்பகுதியில் க்ரிப் இல்லை, எடிட்டிங் சரியில்லை, கேமிரா சில இடங்களில் அவுட் ஆப் ஃபோகஸ் என்று எழுதும் கேபிளுக்கு ஒரே ஒரு அட்வைஸ் -

“சாப்பாட்டுக் கடையை” மட்டும் தொட்டு தொடருங்கள். தப்பித்தவறி எந்த படத்தையும் இயக்கம் இல்லை, விமர்சனம் கூட பண்ணாதீங்க, ஏற்கனவே எல்லாரும் உங்களை பார்த்து நமட்டுச் சிரிப்பு, சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

கேபிள் உங்களுக்கு நிறைய திறமை இருக்கு, சினிமா இயக்கம் மட்டும் தான் உங்களுக்கு தெரியவில்லை. மற்றபடி சாப்பாட்டுகடை, சினிமா வியாபாரம், கேட்டால் கிடைக்கும் கட்டுரைகள் சிறப்பானவை. அதை மட்டும் தொடருங்கள். சினிமா பாவம், அதுவே குத்துயிரும் குலைஉயிருமா இருக்கு, நீங்க வேற உங்க பங்குக்கு எதாச்சும் செய்யாதீங்க.

எந்திரன்/கத்தி/ஆரம்பம் மாதிரி படமெல்லாம் பெரிய வெற்றி இல்லை, நிறைய விநியோகஸ்தர்கள் பணத்தை இழந்திருக்கிறார்கள், நானே நேரில் பார்திருக்கிறேன் என்று எழுதிவரும் நீங்கள் வரும் வாரம் கொத்துப்பரோட்டாவில் “தொட்டால் தொடரும்” படம் வெற்றி, ரசிகர்களுக்கு நன்றி என்று எழுதி உங்கள் படத்தில், பாலாஜியின் நகைச்சுவைக்கு சிரிக்காத ரசிகர்களை, உங்கள் பதிவில் சிரிக்க வைப்பீற்கள் என்று நம்புகிறேன் :)

நன்றி.

IlayaDhasan said...

நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். எங்கள் ஊரில் இன்னும் போடவில்லை. இனிமேல் பார்க்கும் தைரியம் இல்லை. தினமலரில் , 'தொடரவில்லை' என்ற விமரிசனத்தைப் பார்த்தவுடன் மைல்டா சந்தேகம் இர்ந்துச்சு , இப்ப தெளிவாக்கிடீங்க . நல்ல படங்களை எல்லாம் கண்டமேனிக்கு வம்புக்கு இழுக்கும் ஆ.மு சேனாக்கள் ஜல்லி அடிப்பதைப் பார்த்தால் இவர்களின் விமர்சனத்தை பார்த்து படம் பார்க்கும் ஆவல் அதிகரிக்கிறது என்று சொரிந்து விடும் அல்லக்கைகள் இனிமேலாவது திருந்துவார்களா என்பது சந்தேகமே.

கேபிள் அடிக்கடி கேட்பார் , 'படத்தை பொது வெளியில் வைத்துவிட்டு , விமர்சிக்க கூடாதென்றால் எப்படி?' .
கேபிள் நலம் விரும்பிகள் அவர் நலத்தை பார்த்து கமுக்கமாக இல்லாமல் , உண்மை விமரிசனத்தை வைக்க வேண்டும். அதுவே அவர் எதிர்கால முயற்சிகளுக்கு உண்மையான உதவியாக இருக்கும்.

bandhu said...

முதலில் உங்கள் விமர்சனத்தின் நடை மீது என் கருத்து. வெகு சாதாரணமான கதையையும் எந்த இடத்தில் எதை காட்டி சுவாரஸ்யப் படுத்துவது என்பது ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு விதமாக செய்வது. அதே சமயம் கதையையும் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்கும் போது சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்வது. அதுவே அந்த இயக்குனர்களை உயர்த்துவது. இல்லையேல் தாழ்த்துவது. மொத்த கதையையும் விமர்சனம் என்ற பெயரில் தட்டையாக எழுதியிருப்பது தவறு என நினைக்கிறேன். படம் பார்க்காத ஒருவர் இதை படித்தால் படம் பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது?

உங்கள் விமர்சனப்படியே பல இடங்களில் கேபிள் வென்றிருக்கிறார் என்று தோன்றுகிறது. வென்ற இடத்தில் அதிகமாக தட்டிக் கொடுத்திருக்க வேண்டாமா? அதே போன்ற தவறு செய்யும் இடங்களில் சுட்டிக் காட்டும்போது அடுத்த முறை இந்த தவறு நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற வகையில் சுட்டியிருக்க வேண்டாமா? (விமர்சனத்தின் கடைசியில் இதை செய்திருக்கிறீர்கள். நடுவில் காரத்தை குறைத்திருக்கலாமே என்பது என் ஆதங்கம்)

இத்தன நாள் எல்லா படத்தையும் விமர்சிச்சையே.. இப்போ மாட்ன என்ற தொனி இருப்பது போல தோன்றுகிறது.

ஆனாலும், உங்கள் விமர்சனத்தில் கேபிள் எடுத்துக் கொள்ளவேண்டிய நல்ல பல விஷயங்கள் உண்டு. அவற்றை மட்டும் கேபிள் கவனத்தில் கொண்டு அடுத்த படத்தில் எல்லா குறைகளையும் களைந்து பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Unknown said...

Very very bore film . tirupur oru nallel padam eduthu vitargal. Mudal nall poi mattikithen.

தமிழ்ப்பிரியன் said...

பல நல்ல திரைப்படங்களையும் அது நொட்டை இது நொள்ளை என தன்னை பெரிய ஜீனியஸ் என நினைத்துக் கொண்டு கமேண்டு எழுதும் கேபிள் சங்கர் அவர்கள், ஒரு கொரிய படத்தின் கதையைத் திருடி தன்னுடைய சொந்தக் கதை போல காட்சிப்படுத்தி விட்டார். ஆனால் அதில் எவ்வளவு நொட்டையும் நொள்ளையும் உள்ளது என படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். ஏண்டா இந்தப் படத்திற்கு வந்தோம் என மண்டையை பிய்த்துக் கொண்டு நிற்கும் நிலையில் தான் எங்கள் குழு இருந்தது. நாங்கள் எதையெல்லாம் வெறுத்தோமோ அதையெல்லாம் உண்மைத் தமிழன் சொல்லி விட்டார். ஆனால் நண்பர் என்பதால் விமர்சன காரம் குறைவாக இருப்பதாக கருதுகிறோம். கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம். அந்தக் கதைதான் கேபிளின் கதை. இனியாவது மற்ற சினிமாக்களை விமர்சனம் செய்வதை அடியோடு நிறுத்துங்க கேபிள். 'சொல்லுதல் யாருக்கும் எளியவாம்
அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.

damildumil said...

//அதே போன்ற தவறு செய்யும் இடங்களில் சுட்டிக் காட்டும்போது அடுத்த முறை இந்த தவறு நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற வகையில் சுட்டியிருக்க வேண்டாமா?//

இந்த அறிவுரையை கேபிள் சங்கருக்கு எப்பவாவது சொல்லியிருக்கீங்களா ??

damildumil said...

ஆறு மாதம் முன்பு வரை எந்த படம் வந்தாலும், மொத ஷோ பாத்துட்டு, அது சொத்தை இது சொள்ளைன்னு விமர்சனம் எழுத வேண்டியது. பின்னூட்டத்தில, நாலஞ்சு ஜால்ரா கோஷ்டிங்க வந்து “ தல என் 120 தப்பிச்சிதுன்னு” கமெண்ட் போடுங்க. அதுல அவருக்கு ஒரு சந்தோசம். அப்பாடா இவனுங்களை படத்துக்கு போக விடாம பாத்துக்கிட்டோம்னு

damildumil said...

cable facebook post : சிங்கப்பூர் ரெக்ஸ் திரை அரங்கில் மாலை 6 மணிக்கு, வெற்றி நடை போடுகிறது.

:))))))))))))))))

குறும்பன் said...

வழக்கம் போல விமர்சனம். படித்த வரை இயக்குநர் நமது கேபிள் பல இடங்களில் சொதப்பியுள்ளார் என்று தெரிகிறது. அடுத்த படத்தில் கவனமாக இருந்து இம்மாதிரியான சொதப்பல்களை தவிர்ப்பார் என்று நம்புகிறேன்.

கேபிளின் விமர்சனம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதற்கு இங்கு வந்துள்ள சிலரின் பின்னூட்டமே சாட்சி.

விமர்சனம் என்பது உங்களை பற்றி நீங்கள் தெரிந்து முன்னேற உதவுவது என்பதை எப்போது மக்கள் அறிவார்களோ? விமர்சனம் இல்லா படம் குப்பைக்கு சமம். எப்போதும் பாராட்டையே எதிர் நோக்கும் நம் உள்ளம் விமர்சனத்தை ஏற்க தயங்குகிறது.

இப்படத்தை விமர்சனம் செய்ய சொன்னாலும் கேபிளார் குறைகள் தெரிந்தால் அதை சொல்லத்தான் செய்வார். தான் பணியாற்றிய படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை என்பது கேபிளாரின் கொள்கை அதுவும் நல்லதே. சாய்வு உள்ளது என்று அப்போ குற்றம் சொல்ல முடியாது.

Unknown said...

அடுத்தவங்க படத்த நக்கலடிச்ச சங்கர் இப்போது என்ன செய்வார். உப்பு போட்டு சாப்பிடுகிறாரா?

நம்பள்கி said...

சில கருத்துக்கைளப் பார்க்கும் போது, இயக்குனர் கேபிள் சங்கர் தனி முறையில் வெறுப்பை சம்பாதித்து இருப்பது மாதிரி தெரிகிறது! எல்லோரரயும் யாரும் சந்தோஷப் படுத்தமுடியாது!

தன படம் வெளி வரப் போகிறது என்று தெரிந்தும் மற்ற படத்தை கிழிக்காமல் இருந்தால்--கேபிள் சங்கர் ஒரு ஜால்ரா என்று சொல்லலாம்! தன் படம் வரப் போகிறது என்று தெரிந்தும் மற்ற படங்களை கிழித்ததை நியாமான பார்வையில் தான் பார்க்கணும்!

தவறு செய்வது இயல்பு! முதல் படத்தில் இவ்வளவு தான் கொடுக்க முடியும்!

நான் ஒரு கேள்வி கேட்கிறேன்; இது ஆபாசம் இல்லை. "அதில் அனுபவம்" இல்லா ஆண்கள் எவ்வளவு பேர் முதல் இரவிலேயே..எல்லா கரைகளையும் கண்டீர்கள்!

அடுத்த படத்தில்..ஜெயிப்பார் என்று நான் நம்புகிறேன்!

வருண் said...

***bandhu said...

முதலில் உங்கள் விமர்சனத்தின் நடை மீது என் கருத்து. வெகு சாதாரணமான கதையையும் எந்த இடத்தில் எதை காட்டி சுவாரஸ்யப் படுத்துவது என்பது ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு விதமாக செய்வது. அதே சமயம் கதையையும் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்கும் போது சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்வது. அதுவே அந்த இயக்குனர்களை உயர்த்துவது. இல்லையேல் தாழ்த்துவது. மொத்த கதையையும் விமர்சனம் என்ற பெயரில் தட்டையாக எழுதியிருப்பது தவறு என நினைக்கிறேன். படம் பார்க்காத ஒருவர் இதை படித்தால் படம் பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது?

உங்கள் விமர்சனப்படியே பல இடங்களில் கேபிள் வென்றிருக்கிறார் என்று தோன்றுகிறது. வென்ற இடத்தில் அதிகமாக தட்டிக் கொடுத்திருக்க வேண்டாமா? அதே போன்ற தவறு செய்யும் இடங்களில் சுட்டிக் காட்டும்போது அடுத்த முறை இந்த தவறு நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற வகையில் சுட்டியிருக்க வேண்டாமா? (விமர்சனத்தின் கடைசியில் இதை செய்திருக்கிறீர்கள். நடுவில் காரத்தை குறைத்திருக்கலாமே என்பது என் ஆதங்கம்)

இத்தன நாள் எல்லா படத்தையும் விமர்சிச்சையே.. இப்போ மாட்ன என்ற தொனி இருப்பது போல தோன்றுகிறது.

ஆனாலும், உங்கள் விமர்சனத்தில் கேபிள் எடுத்துக் கொள்ளவேண்டிய நல்ல பல விஷயங்கள் உண்டு. அவற்றை மட்டும் கேபிள் கவனத்தில் கொண்டு அடுத்த படத்தில் எல்லா குறைகளையும் களைந்து பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.***

Bandhu: You do have a blog, right? You can share all your thoughts there. You can give 4 stars for the movie.

Why are you "misinterpreting" whatever Saravanan wrote?

Creativity and Criticism are two different things and they are two extremes. Most of the critics fuck up when they try create something. That's what happened here.

Saravanan can not do anything better than this. Yeah it is going to hurt the "creator". I think he deserves what he is getting now.