பிசாசு - சினிமா விமர்சனம்

20-12-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என்ன எழுதுவதென்றே தெரியவில்லை..? இப்படியொரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறார் மிஷ்கின். ‘சிறந்த படம்’ என்று எழுதினால் அது பொய்யாகிவிடும். ‘படம் சரியில்லை’ என்று எழுதினால் எனது சினிமா ஆர்வமே கேள்விக்குறியாகிவிடும். இப்படியொரு இடியாப்பச் சிக்கல் இந்தப் படத்தினால்..!

சாலையில் ஒரு விபத்தொன்றில் சிக்கிய பெண்ணை பார்க்கிறார் ஹீரோ நாகா. அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை. நாகாவின் கையைப் பிடித்தபடியே ‘அப்பா’ என்ற ஒரு வார்த்தையுடன் உயிரைவிடுகிறாள் அந்தப் பெண். அந்தப் பெண்ணின் அழகு முகம் நாகாவைக் கவர, ஏதோவென்றால் ஈர்க்கப்பட்டு அவளுடைய வலது கால் செருப்பை மட்டும் எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வருகிறார் ஹீரோ.
அதற்கடுத்த நாளில் இருந்து அவருடைய வீட்டில் ஏதாவது அனாமதேய சம்பவங்கள்.. வீட்டுக்குள் யாரோ இருப்பது போன்ற திகில் உணர்வை ஹீரோ உணர்கிறார். துணைக்கு தனது நண்பனை அழைத்து தங்க வைத்து பார்க்கிறார். இருவருமே பேய் போன்ற ஒன்றை உணர்கிறார்கள். மூன்று மத சடங்குகளையும் செய்து பார்க்கிறார்கள். ஆவி அமுதாவை அழைத்து ஆவியுடன் உடன்படிக்கை செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். நிஜமான ஆவி, ஆவி அமுதாவையே அடித்து விரட்டுகிறது.
இருக்கிற சிக்கல் போதாதென்று அவனுடைய அம்மாவும் அங்கே வந்துவிட.. ஆவியின் அட்டகாசங்கள் இன்னமும் அதிமாகின்றன. ஆவியினால் நிம்மதியைத் தொலைக்கும் ஹீரோவுக்கு இது நிச்சயம் அந்த மருத்துவமனையில் இறந்து போன பெண்ணின் ஆவியாகத்தான் இருக்கும் என்று புலனாகிறது. அந்த ஆவியை தன் வீட்டில் இருந்து விரட்டுவதற்காக அந்தப் பெண்ணின் மரணத்திற்குக் காரணமானவனை கண்டறிய  முயல்கிறார். இதில் வெற்றி கண்டாரா இல்லையா என்பதுதான் மீதமான கதை.
ஹீரோ நாகா. புதுமுகம் என்றில்லை.. ஆனால் மிஷ்கினின் வழக்கமான ஹீரோவாக மாறியிருக்கிறார். குழப்பமே இல்லாமல் சீராக ஓடுகிறார். படபடக்கிறார். தட்டச்சு வேகத்தில் பேசுகிறார். உருகி மன்னிப்பு கேட்கிறார்.. மொத்தத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் ஹீரோ ஸ்ரீ என்ன செய்தாரோ அதையேதான் செய்திருக்கிறார். வித்தியாசமில்லை மிஷ்கினின் இயக்கத்தில். நாகாவின் முகத்தை மறைத்திருக்கும் அந்த முடிகூட அழகாகத்தான் இருக்கிறது..
ஹீரோயின் உண்மையிலேயே பிசாசு போன்ற அழகுடன் இருக்கிறார். முதல் காட்சியில் அழகு மிளிர இருப்பவர்.. அடுத்தடுத்து பேயாக உருவாகி பயமுறுத்துகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் கயிறு கட்டி அந்தரத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள். பாவம்.. எவ்வளவு கஷ்டப்பட்டாரோ..?
உண்மையில் ராதாரவிக்கு இது வித்தியாசமான கேரக்டர்தான். முதல் அறிமுகக் காட்சியில் அது ராதாரவிதான் என்பதை அறியவே முடியவில்லை. அந்த அளவுக்கு லாங் ஷாட்டிலேயே அதனை முடித்திருந்தார். இடைவேளைக்கு பின்புதான் அது ராதாரவி என்று தெரிந்து பேயைவிட அதிகமாக திக்கென்றானது மனது. ஆனால் நடிப்பில் குறை வைக்கவில்லை இளையவேள்..
தனது மகளை அரூபமாக பார்த்த நொடியில் இருந்து ‘என் தாயி’ என்ற கதறலுடன் தவழ்ந்தபடியே மகளைத் தேடியலையும் காட்சியில் ஒரு நிமிடம் திகைக்க வைத்துவிட்டார். வரும் காட்சிகளிலெல்லாம் அவருடைய நடிப்பை குறை சொல்லவே இயலாது.. இயக்கம் அப்படி..! எல்லாப் புகழும் மிஷ்கினுக்கே..!
இவர் மட்டுமல்லாமல் கீழ் வீட்டு போர்ஷனில் இருக்கும் தம்பதிகள், வினோதினி, அவருடைய ஊனமுற்ற மகன், கணவர், அபார்ட்மெண்ட்டில் வெட்டியாக பேசும் மூவர் டீம்.. ஆட்டோ டிரைவர்.. டீ குடித்தவர்களை எழுந்துபோகும்படி சொல்லிக் கொண்டேயிருக்கும் டீக்கடைக்கார பையன்.. என்று கேரக்டர்களை பார்த்து, பார்த்து தேர்வு செய்திருக்கிறார். அனைவரின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் ரசிக்க வைக்கிறது..
முதல் ஷாட்டில் இருந்து முடிவாக வானத்தில் நட்சத்திரங்களாக மாறி விண்ணுலகம் செல்லும்வரையிலும் இது மிஷ்கின் படம்தான் என்று சத்தியம் செய்து சொல்லும் அளவுக்கு இருக்கிறது மிஷ்கினின் படமாக்கல்..
முதல் ஷாட்டில் ஹீரோயின் பிரயாகாவின் அழகு முகத்தை குளோஸப்பில் காட்டி பின்பு அதிலிருந்து பின்னோக்கிச் செல்லும் கேமிராவின் மூலம் சொல்லும் விஷயமே ஒரு குறியீடுதான்.. இப்படி படம் முழுவதிலும் எதையோ, மறைமுகமாகவோ, நேராகவோ சொல்லியபடியே இருக்கிறார் மிஷ்கின்.
விபத்துக்கு பின் தெருவில் கிடக்கும் இடது கால் செருப்பு.. ஆட்டோவில் செல்லும்போது பச்சை-சிவப்பு சிக்னல் பிரச்சினை.. ‘அப்பா’ என்ற வார்த்தை.. மருத்துவமனையில் கிடைக்கும் வலது கால் ஒற்றை செருப்பு.. பாடல் ரிக்கார்டிங்கில் ஹீரோ எதையோ வாசிப்பது.. சிறுமி தனது கண் பார்வையற்ற குடும்பத்தினரை சாலையில் கொண்டுவிடும்படி கேட்பது. இதற்கான காரணத்தை அடுத்தக் காட்சியில் நமக்குச் சொல்லாமலேயே உணர்த்தியிருக்கிறார் இயக்குநர். வீட்டுக்குள் பேயின் இருப்பிடம்.. ஆவி அமுதாவின் அட்டாகசங்கள் என்று சொல்லும் அளவுக்கு இருக்கும் அவரது பேய் விரட்டல் காட்சிகள்.. இன்ஸ்பெக்டரிடம் கேஸ் பற்றி விசாரிக்கும்போது ஒரு அம்மா வந்து எரித்துவிடுவது போல பார்ப்பது.. பச்சை கலர் காரை ஓட்டிச் சென்றவனை ஒருவன் துப்பு சொல்லும்போது பக்கத்தில் ஒருவன் கையைக் கழுவுவது.. பச்சை கலர் காரை ஓட்டியவன் தனது கதையைச் சொல்லும்போது அவனது தங்கையின் பச்சை கலர் குடத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவது.. ஆரஞ்சு பழத்தையும், ஆப்பிள் பழத்தையும் கொண்டு வந்து ஆட்டோ டிரைவரிடம் காட்டி ‘இது என்ன கலர்’ என்று கேட்பது..? – இப்படி படம் முழுக்க விமர்சனம் எழுதுபவர்களுக்காகவே நிறைய குத்தூசிகளை சொருகி வைத்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். ஹாலிவுட் ஸ்டைலில் குறிப்பால் உணர்த்துகின்ற காட்சிகளை பல இடங்களில் வைத்திருப்பதால் சினிமா விமர்சகர்களுக்கு செம கொண்டாட்டம்தான்..!
இடைவேளைக்கு முன்பு பல காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். சில காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். இடைவேளைக்கு பின்பு மிஷ்கினின் வழக்கமான துப்பதறிதல் காட்சிகளாக படம் விரிவடைவதால் படம் தொய்வில்லாமல் செல்கிறது..! அதிலும் கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டும், யார் கொலையாளி என்பதும் செமத்தியான திரில்லிங் அனுபவம்..!
‘வைட்ஆங்கிள்’ ரவிசங்கரன் என்ற பெயரை ரவிராயாக மாற்றிக் கொண்ட ஒளிப்பதிவாளரின் வைட் ஆங்கிள் ஷாட்டுகள் கச்சிதம்.. கிளைமாக்ஸில் பேய்களுக்கு நிகரமாக ஒளிப்பதிவாளரும் உழைத்திருக்கிறார் போலும்.. எப்போதும் ஸ்கிரீன் முழுவதும் பளீச்சென்று சுத்தமாக இருப்பது மிஷ்கினின் யுக்தி. இதிலும் அப்படியே.. ஹீரோவின் வீடு அவ்வளவு கச்சிதமாக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மீனம்பாக்கம் பின்னி மில்லை இதுவரையிலும் யாரும் இவ்வளவு அழகாக காட்டியதில்லை. கலை இயக்குநருக்கு ஒரு பாராட்டு.
இசையமைப்பாளர் அரோல் கரோலியின் இசை கச்சிதம். துவக்கத்தில் வயலின் இசையில் கட்டிப் போடுபவர்.. அந்த ஒரேயொரு பாடல் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார். மிரட்டலுக்கும், திகிலுக்கும், திரிலுக்கும் இசை நிச்சயம் உதவியிருக்கிறது.. ராதாரவி அந்த வீட்டுக்குள் தனது மகளைத் தேடியபடியே வரும் காட்சியில் வசனத்திற்கூடே வரும் இசையும் ஒரு வசனம்தான்.. மனதைத் தொடும் இசை.. நீண்ட நாட்கள் கழித்து பாராட்டுதலான ஒரு பின்னணி இசை. இருக்கும் ஒரேயொரு பாடலையும் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியிருக்கிறார். மெல்லிய இசையில் பாடல் வரிகளை முன்னிறுத்தி அழகாக இருக்கிறது. ஆனால் தத்துவ முத்துக்கள் பொதிந்த இந்தப் பாடலை திரையில் பாடி நடித்திருப்பது 8 வயதுக்கும் குறைவான ஒரு சிறுமிதான் என்பது மிகப் பெரிய முரண்நகை. படம் மொத்தத்தையும் சீராக பார்க்கும் அளவுக்கு செதுக்கி ஒட்டியிருக்கும் எடிட்டர் கோபிநாத்துக்கும் ஒரு ஜே போடலாம்..!
பேய் படங்களில் லாஜிக்கெல்லாம் பார்க்காமல் ஒதுங்கி போய்விட வேண்டும் என்று அந்த பேய்களே வந்து சொல்லியிருப்பதால் ஒதுங்கிக் கொள்வோம்.
ஆனால் விமர்சனம் எழுதியவகையில் இது போதும்தான்.. ஆனால் மிஷ்கினுக்கு இதுவே போதுமா என்பது கேள்விக்குறிதான். அவருடைய வேறெந்த படங்களுடனும் இதனை ஒப்பிடாமல் பேசுங்கள் என்கிறார்கள். சரி.. இந்தப் படம் ‘பீட்சா’ தந்த மிரட்டலையும், ‘யாமிருக்க பயமே’, ‘அரண்மனை’ போன்ற படங்கள் கொடுத்த அதகளத்தையும் தரவில்லை என்பதும் உண்மைதானே..? ஆவி அமுதாவை விரட்டுவது.. ஆட்டோக்காரரிடம் ஹீரோ வந்து இது என்ன கலர் என்று கேட்கும்போது ஆட்டோக்கள் சாய்வதும்.. இழுக்கப்படுவதும்.. வீசும் காற்றுக்குள் சிக்கிக் கொள்வதுமான காட்சிகள் மட்டுமே இதில் பேய்த்தனம்.. மற்றவை திகிலை லேசாக கூட்டியிருக்கின்றன என்பது மட்டுமே உண்மை.
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ படங்களுக்கு பிறகு மிஷ்கின் தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்காக படம் எடுக்கவில்லை. மாறாக உலக சினிமா ரசிகர்களுக்காக மட்டுமே தனது படங்களை உருவாக்கி வருகிறார். ஆனால் அவைகளின் தோல்விக்கு ஒட்டு மொத்த ரசிகர்களையும் சேர்த்தே குற்றம் சொல்லி வருகிறார். ரசிகர்களுக்குப் பிடித்தமான படங்களைக் கொடுத்தால் நிச்சயம் அவர்கள் அதனைக் கொண்டாடுவார்கள். மிஷ்கினுக்கு மட்டுமே பிடித்த படத்தை எடுத்து, அவர்களிடத்தில் கொடுத்தால் அவர்களென்ன செய்வார்கள்..? அதனைப் புரிந்து கொள்ள மிஷ்கினுக்கு இருக்கும் மூளை, அவர்களுக்கும் இருக்க வேண்டுமல்லவா..?
இயக்கம் என்பதில் மிஷ்கின் எப்போதும் குறை வைப்பதில்லை. அதில் யாரும் குறையே சொல்லிவிட முடியாது.. படமாக்கல் என்பதிலும் அப்படியே.. ஆனால் எந்தக் கதையைக் கொடுக்கிறார்.. திரைக்கதையை எப்படி கொடுக்கிறார் என்பதில்தான் சிக்கல்.. அது வழக்கம்போல இந்தப் படத்திலும் இருக்கிறது..!
பேய்ப் பட சீஸன் என்பதால் நிச்சயம் அது போலவாவது எடுத்து நமது திறமையைக் காண்பிப்போம் என்றெண்ணி உருவாக்கிக் காட்டியிருக்கிறார். பேய்ப் பட வரலாற்றில் இந்தப் படம் நிச்சயம் ஒரு உதாரணப் படம்தான். அதில் சந்தேகமில்லை. இதுவரையிலான பேய்ப் படங்களில் ஆன்மா சாந்தியாகாத பேய்கள் எப்படி ‘மறுவீடு’ போய்ச் சேர்ந்தன என்பதை யாரும் சொல்லவில்லை.. இப்போதுதான் முதன்முறையாக மிஷ்கின் தனது பேய் எப்படி மேலுலகம் போய்ச் சேர்கிறது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார். இதுவும் ஒரு திரில்லிங், திகில் அனுபவம்தான்.. மறுப்பதற்கில்லை..
பிசாசு – பேயாக இல்லையென்றாலும் நிச்சயம் பிசாசுதான்..!

2 comments:

SANKAR said...

அபார்ட்மெண்ட்டில் வெட்டியாக பேசும் மூவர் டீம்-அதில் ஒருவர் அமெரிக்க கொடி போட்ட பனியனுடன் வருவது என்ன குறியீடோ?

Unknown said...

athenna pa yaru vimarsanam eluthinalum ethavathu kuriyeedu irukumo nu eluthuringa? athenna kuriyeedu athayum neengale solla vendiyathu thana.