அடங்காமல் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கும் ஜெயலலிதா..!

14-05-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது.

 கடந்த 9-ம் தேதி அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும், அவரது ஜூனியர் மராடியும் நீதிபதி முன்பு ஜெயலலிதாவின் 306 சொத்துகளின் பட்டியலை மாறி மாறி வாசித்து முடித்தபோது, அத்தனை பரபரப்பு.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பின் இறுதி வாதம் 15-வது நாளாக கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. சரியாக 10.30 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இருக்கையில் அமர்ந்தார். ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், அசோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் ஆஜரானார்கள். தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர்கள் சரவணன், நடேசன், பாலாஜி சிங், குமரேசன் ஆகியோர் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வழக்கம்போல் ஆஜராகவில்லை.

அரசு வழக்கறிஞர் பவானி சிங், ''1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, முறைகேடாக யார் யாரிடம் எப்படியெல்லாம் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார் என்பதை இங்கு 2,500 பக்க சாட்சியங்கள் அடங்கிய ஆவணத்தோடு தெரிவிக்கிறேன். 

இந்த வழக்கு தொடங்குவதற்கு முன்பு குற்றவாளிகள் தரப்பில் 17 சொத்துகள் மட்டுமே இருந்தன. இந்த வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் 306 சொத்துகள் அதிகரித்துள்ளன. அதில் 286 சொத்துகள் பல வழிகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை. இந்த வழக்கு காலத்துக்கு முன்பு இவர்களின் பொருளாதார நிலையும், வழக்கு நடைபெற்ற காலத்தில் இவர்களின் பொருளாதார நிலையும் சம்பந்தம் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது'' என்று கூறி ஜெயலலிதா தரப்பின் சொத்துப் பட்டியலை காலை 10.30-க்கு வாசிக்கத் தொடங்கினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாசிக்கத் தொடங்கியவர்கள், மாலை 4.15 மணிக்கு முடித்தனர். மேலும் சில ஆவணங்களை 15-ம் தேதி அறிவிப்பதாகச் சொல்லி முடித்தார் பவானி சிங்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாசித்த ஜெயலலிதாவின் 306 சொத்துப் பட்டியல் இதுதான்....

''இந்த வழக்கின் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயர்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் பங்குதாரர்களாக இருந்து தொடங்கிய ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ்.ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகள் பெயரிலும் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

போயஸ் கார்டன் நிலம் மற்றும் கட்டடம் 10 கிரவுண்ட் 330 சதுர அடி விலை ரூ.1,32,009.

ஹைதராபாத் சிட்டியில் பிளாட் நம்பர் 36-ல் விரிவாக்கப்பட்ட 651.18 சதுர அடி கட்டடம் ரூ.50,000.

ஹைதராபாத் பஷீராபாத் என்ற கிராமத்தில் திராட்சைத் தோட்டம் மற்றும் இரண்டு பண்ணை வீடுகள், வேலையாட்களுக்கான குவாட்டர்ஸ் உள்ளிட்ட 11.35 ஏக்கர் நிலம் ரூ.1,65,058.

மேலும் அதே பகுதியில் 93/3 சர்வே எண்ணில் 3.15 ஏக்கர் ரூ.13,254 ஆகியவை சந்தியா மற்றும் ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்டுள்ளன.  

தஞ்சாவூர் மானம்புசாவடியில் 2,400 சதுர அடியில் நிலம் மற்றும் வீடு ரூ.1,57,125.

அதே பகுதியில் 51,000 சதுர அடி காலி நிலம் ரூ.1,15,315.

மீண்டும் அதே பகுதியில் காலி நிலம் ரூ.2,02,778 ஆகியவை சசி என்டர்பிரைசஸ் வாங்கியது. 

சசிகலா பெயரில் திருச்சி அபிராமிபுரத்தில் நிலம் மற்றும் வீடு 3,525 சதுர அடி ரூ.5,85,420. 

ஜெயா பப்ளிகேஷன் பெயரில் கிண்டி தொழிற்பேட்டை நிலம் மற்றும் ஷெட் ரூ.5,28,039.

புதுக்கோட்டையில் 1 கிரவுண்ட் 1,407 சதுர அடி நிலம் மற்றும் கட்டடம் ரூ.10,20,371.

டான்சி நிலம் 55 கிரவுண்ட் ரூ.2,13,68,152.

சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயரில் 900 ஏக்கரில் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் ஃபேக்டரி ரூ.7,60,00,000.

வெலகாபுரம் கிராமத்தில் மெடோ ஆக்ரோ ஃபார்ம்ஸுக்கு 210.33 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பெயரில் வட சென்னையில் சேயார் கிராமத்தில் விவசாய நிலம் வேதாசல முதலியார் மகன் நடேச முதலியாரிடம் 3.43 ஏக்கர் நிலம் ரூ.17,060.

ஜெயலலிதா சசிகலா பெயரில் சென்னை-28, சீனிவாச அவின்யூ நிலம் மற்றும் வீடு 1,897 சதுர அடி வெங்கடசுப்பனிடம் இருந்து ரூ.5,70,039 வாங்கியது. 

சசிகலா பெயரில் சாந்தோம் ஆர்.ஆர். ஃப்ளாட் ரூ.3,13,530.

சசி என்டர்பிரைசஸ் பெயரில் சென்னை 4, அப்பாஸ் அலிகான் ரோட்டில் ரூ.98.904-க்கு ஷாப்பிங் மால்

நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோட்டில் 11 கிரவுண்ட் 736 சதுர அடி நிலம் ரூ.22,10,919

மவுண்ட் ரோடு, மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் வாங்கிய நிலம் மற்றும் கடை ரூ.1,05409.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,200 ஏக்கர்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, பையனூர், சிறுதாவூர், சோழிங்கநல்லூர் செய்யூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மன்னார்குடி என தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலி நிலம், கட்டடம், கடைகள் மற்றும் விளைநிலங்களும் வாங்கப்பட்டுள்ளன. 

சென்னையில் கிண்டி, டி.டி.கே ரோடு, மவுண்ட் ரோடு, லஸ் பகுதிகளில் இடங்கள், கட்டடங்கள் வாங்கப்பட்டுள்ளன.

பையனூர் பங்களா ரூ.1,25,90,261.

ஹைதராபாத் திராட்சைத் தோட்டப் பண்ணை வீடு ரூ.6,40,33,901.

போயஸ் கார்டன் வீடு விரிவாக்கம் ரூ.7,24,98,000.

சிறுதாவூர் பங்களா ரூ.5,40,52,298 உட்பட பல இடங்களில் உள்ள பண்ணை வீடுகள், புதிய கட்டடங்களின் மராமத்துப் பணிகளின் செலவுகள் பட்டியலிடப்பட்டன.

இளவரசி அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.2,42,211.

ஜெயலலிதா அக்கவுன்டில் மயிலாப்பூர் கனரா வங்கியில் ரூ.19,29,561.

மயிலாப்பூர் ஸ்டேட் பேங்க்கில் ரூ.1,70,570.

சசிகலா பெயரில் கிண்டி கனரா வங்கியில் ரூ.3,17,242

சுதாகரன் அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.5,46,577 

என, பல பெயர்களில் பல வங்கிகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட கார்கள் டாடா சியரா - ரூ.4,01,131, மாருதி 800 ரூ.60,435, மாருதி ஜிப்ஸி, ட்ராக்ஸ் ஜீப். 

ஜெயா பப்ளிகேஷன் டாடா எஸ்டேட் கார், டாடா மொபைல் வேன் என பல மாடல்களில் 30-க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கியிருக்கிறார்கள்.

போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட 389 ஜோடி செருப்புகள் ரூ.2,00,902, 914

பட்டுப் புடவைகள் ரூ.61,13,700 

மற்ற புடவைகள் ரூ.27,08,720 மற்றும் பழைய புடவைகள் ரூ.4,21,870. 

28 கிலோ தங்க நகைகள் 

1,000-க்கும் மேற்பட்ட வைரக்கற்கள் 

என 306 சொத்துகளின் அப்போதைய மதிப்பு ரூ.66,44,73,573 ஆகும்'' என்று விடாமல் வாசித்து முடித்தார்.

நீதிமன்றம் முடிந்து வெளியே வந்த பெங்களூரு தி.மு.க வழக்கறிஞர் நடேசன், ''ஜெயலலிதா வாங்கியிருக்கும் இந்த 306 சொத்துகளின் இப்போதைய மதிப்பு பல நூறு கோடியைத் தாண்டும். அரசுத் தரப்பு இறுதி வாதம் 15-ம் தேதியோடு நிறைவு பெறும். அதன் பிறகு ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் தொடங்கும். அது முடிந்ததும் இன்னும் ஓரிரு மாதங்களில் தீர்ப்பு கிடைக்கும். தீர்ப்புக்குப் பிறகு ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும்'' என்றார்.

அ.தி.மு.க வழக்கறிஞரும் சேலம் மாவட்ட கவுன்சிலருமான வக்கீல் மணிகண்டன், ''இந்தச் சொத்துகள் அனைத்தும் 20 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டவை. அதில் பலர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் நிலத்தின் மதிப்பு குறைவு. ஆனால், இன்று நிலத்தின் வேல்யூ அதிகரித்துள்ளது. நான் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டை மூன்று லட்சத்துக்குக் கட்டினேன் என்றால், அதன் மதிப்பு இப்போது 30 லட்சமாக அதிகரித்து இருக்கும். நான் 30 லட்சத்துக்கு வீடு கட்டினேன் என்று சொல்லுவது எவ்வளவு அபத்தமோ, அதைப் போன்றதுதான் இந்த வழக்கும். இதைச் சொத்துக் குவிப்பு என்று சொல்வதே அடிப்படையற்ற வாதம். கருணாநிதியைப் போல வெறும் கையை வீசிக்கொண்டு அம்மா அரசியலுக்கு வரவில்லை. அவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் இருந்து அம்மா கூடிய சீக்கிரத்தில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு வெளியே வருவார்'' என்றார்.

நன்றி : ஜூனியர்விகடன் - மே-14

8 comments:

bandhu said...

நமக்கு வாய்த்த அரசியல் வாதிகளெல்லாம் மிகத் திறமை வாய்ந்தவர்கள்.. ஆனால் வாய் தான் காது வரை கிழியும்!

டிபிஆர்.ஜோசப் said...

எதுக்குங்க இவ்வளவு சிரமப்பட்டு இதையெல்லாம் எழுதறீங்க? இப்ப தமிழ்நாட்டுல இருக்கற யாருக்கும் இந்த தகவல்கள் தேவையில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஓட்டுப்போட ஒரு ஐந்நூறு அப்புறம் மிக்சி, கிரைன்டர், ஆடு, மாடு, கோழி இப்படீன்னு ஏதாச்சும் கிடைச்சா போறும்னு நினைக்கறப்போ அம்மா என்ன வாங்கி குவிச்சா நமக்கென்னன்னு இருந்துட்டு போங்க. டென்ஷன் இல்லாமயவாது இருக்கலாம். நாளைக்கி பாருங்க நாப்பதுல முப்பது அம்மாவுக்குத்தான் :)

வில்லவன் கோதை said...

திரு ஜோசப் சொல்வது உண்மை.
ஆரம்ப காலங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய காப்புத்தொகை கட்ட கைவளையலை அடகு வைத்தவர் ஜெயல்லிதா.20 அதிமுக வழக்கறிஞர் கவனிக்கவேண்டும்.பதவிக்குவரும் முன்பே சென்னையில் காரும் வீடும் வைத்திருந்த ஒரே தலைவர் கலைஞர்

வில்லவன் கோதை

சூனிய விகடன் said...

மாற்றுத்திறனாளி ( செவிடன் என்று சொன்னால் சமூக ஆர்வலர்னு சொல்லிகிட்டு சண்டை போட வந்துர்ராங்க...எல்லாத்துக்கும் இப்போ வேற பேரு வச்சு கூப்பிடறதுதானே இப்போ டிரெண்டு .)...காதில் ஊதிய ஓட்டைச்சங்கு.

அவுசாரியைப்பாத்து நல்ல பொம்பளை " அவளுக்கென்ன தெனத்துக்கு ஒருத்தன்னு சந்தோஷமா இருக்குறா...நானும் இருக்கேனே..." அப்ப்டின்னு நெனக்கத்துணியற மாதிரி ஒரு கலிகாலத்துல இதேல்லாம் எவன் காதிலயும் ஏறாது

Vetrivendan said...

ஜெயலலிதா பற்றியவை உலகறிந்தவை என்பது உண்மை,ஆனால் கருணாநிதி விஷயத்தில் திரு பாண்டியன் அவர்கள் கண்களை மூடிக் கொண்டு விட்டாரா?இதே பகுதியில் வெளியிடப் பட்ட கருணாநிதியின் சொத்து விபரத்தை படிக்க வில்லையா?

ராஜ நடராஜன் said...

சொத்துக்குவிப்பு வழக்குக்கே இவ்வளவு காலம் வாய்தா வாங்கியவர் இப்பொழுதுள்ள சாதகமான சூழலில் நாட்டாமை தீர்ப்பை மாற்றி எழுது என்ற சொல்ல எத்தனை உள்குத்து வேலை நடக்குமோ?

கேசு தேறும்ன்னு நம்பிக்கையில்லை.

குறும்பன் said...

என்ன பவானி சிங் ஆத்தாளுக்கு எதிராக தகவல்களை நீதிமன்றத்தில் தருகிறாரா? அதெல்லாம் எதிர்கட்சி வழக்கறிஞர் தன் வாதத்தில் வெல்லும்படியாக இருக்குமோ?

வில்லவன் கோதை said...

வெற்றி வேந்தனுக்கு ,

நீதிமன்றத்தில் வழக்கு நடப்பது

முதலமைச்சர் மீதுதான்.கலைஞர்

மீதல்ல.உலகறிந்ததென்று

முற்றுப்புள்ளியிடவேண்டாம்.

பாண்டியன் ஜி