புலிவால் - சினிமா விமர்சனம்

8-2-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



சினிமாவில் சொல்லப்படும் கதையாடல் என்பது உலகம் தழுவியது. இதனால்தான் உலக சினிமா என்று ஒரு சில திரைப்படங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அப்படத்தின் கதைகள் உலகத்தின் எந்தப் பகுதி மக்களாலும் ரசிக்கப்படக் கூடியவை என்கிற அர்த்தத்தில் உலக சினிமா அர்த்தமுள்ளதாகிறது..!

2009-ம் வருடம் பிப்ரவரி 19-ம் தேதி Handphone என்ற தென்கொரிய திரைப்படம் வெளிவந்தது. இதிலிருக்கும் கதை, உலகம் தழுவிய கதை என்பதால் இதுவும் ஒரு உலக சினிமாவாகிவிட்டது.. ரொம்பச் சின்ன கதைதான்..

ஒரு செல்போனின் அதன் உரிமையாளர் சம்பந்தப்பட்ட செக்ஸ் காட்சிகள் பதிவாகியிருக்கிறது. ஒரு நாள், ஒரு சந்தர்ப்பத்தில் அது தொலைந்து போகிறது. இப்போது அது வேறொருவனின் கையில் உள்ளது என்பது உரிமையாளருக்குத் தெரிய வருகிறது. அதனை எடுத்தவனிடம், செல்போனின் உரிமையாளர் திருப்பிக் கொடுக்கும்படி கெஞ்சுகிறான். ஆனால் அந்த செல்போனை இப்போது வைத்திருப்பவன் அதனைத் திருப்பித் தர மறுக்கிறான். செல்போனை தொலைத்தவன் எப்படி தனிப்பட்ட முறையில் துப்பறிந்து தன்னுடைய செல்போனை திரும்பப் பெறுகிறான் என்பதுதான் கதை..!

இது உலக சினிமாவுக்கான கதைதானே..?

நம்மூர்க்காரர்கள் விட்டு வைப்பார்களா..? மலையாளத்தில் முதல் படம் தயாரானது. ‘டிராபிக்’ படத்தின் 100-வது நாள் விழாவின்போது இப்படத்தின் பூஜையும் போடப்பட்டது. படத்தின் பெயர் ‘சப்பா குருஸு’.. இதற்கு தமிழில் ‘தலையும், வாலும்’ என்று அர்த்தம். படத்தைத் துவக்கி வைத்தவர் பத்மபூஷன் கமல்ஹாசன். மலையாள ‘டிராபிக்’ படத்தின் 100வது நாள் விழாவன்று இந்தப் படத்துக்கும் பூஜை போடப்பட்டது. ‘டிராபிக்’ படத்தின் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன்தான் இந்தப் படத்துக்கும் தயாரிப்பாளர் என்பதால்தான் அன்றைக்கு பூஜை.

பகத்பாசில், வினீத் சீனிவாசன், ரம்யா நம்பீசன், ரோமா அஸ்ரானி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். சமீர் தாஹீர் இயக்கியிருந்தார். 2011 ஜூலை 11-ல் படம் ரிலீஸானது.. வசூலில் பெரிய அளவுக்கு போகவில்லையென்றாலும், பல்வேறு விருதுகளை பெற்றுக் குவித்தது இப்படம்.

Kerala State Film Awards 2011 – Second Best Actor – Fahadh Faasil

Ramu Kariat Memorial Cultural Forum Awards – Best Second Film – Chaappa Kurish

Film Guidance Society of Kerala Film Awards – Best Supporting Actress – Remya Nambeesan

Vayalar Ramavarma Chalachitra Television Award – Best Actress – Remya Nambeesan

Asianet Film Awards Best Character Actress – Nominated – Remya Nambeesan

Asiavision Movie Awards – Trendsetter Award – Won – Listin Stephen

Vanitha Film Awards – Best supporting Actress – Won – Remya Nambeesan

Mathrubhumi Kalyan Silks Film Awards – Best Path Breaking Movie of the Year – Nominated – Chaappa Kurish

Amrita Film Awards – Best Film – Won – Chaappa Kurish

Kochi Times Film Awards – Best Youth Film – Won – Chaappa Kurish

அடுத்தது கன்னடம் நோக்கிய பயணம். ‘வீர விஷ்ணுவர்த்தன்’ என்ற பெயரில் பி.குமார் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் இப்படம் துவங்கியது. சுதீப், சோனு சூட், பாவனா, பிரியாமணி நடித்திருந்தனர். 2011 டிசம்பர் 8-ம் தேதி படம் ரிலீஸானது. வெறும் 7 கோடியில் தயாரான இப்படம் 20 கோடி அளவுக்கு வசூலை குவித்திருந்தது. படத்தின் துவக்கத்தில் இப்படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தனின் மனைவி பாரதி, கன்னட பிலிம் சேம்பரிடமும், கன்னட சினிமா அமைப்புகளிடமும் கோரிக்கை வைத்தார். கன்னட திரையுலகின் மூத்த தயாரிப்பாளரான துவாரகீஷ்தான் படத்தைத் தயாரித்தார். பெயர் மாற்றத்திற்கு முதலில் மறுக்க.. பலவித பஞ்சாயத்துக்களுக்கு பிறகு ‘ஒன்லி விஷ்ணுவர்த்தனா’ என்று பெயர் மாற்றப்பட்டது. கன்னடத்திலும் இப்படம் பெரிய அளவுக்கு விருதுகளை வாங்கியிருக்கிறது.

Filmfare Award for Best Director – Kannada – Nominated – P. Kumar

1-st South Indian International Movie Awards 
Best Debut Director – Kannada – Winner – P. Kumar 
Best Film – Kannada – Nominated – B.S. Dwarakish 
Best Actor (Female) – Kannada – Nominated – Bhavana 
Best Actor in a Supporting Role – Kannada – Nominted – Arun Sagar 
Best Actor in a Negetive Role – Kannada – Nominated – Sonu Sood 
Best Cinematographer – Kannada – Nominated – Rajarathnam 
Best Playback Singer (Female) – Kannada – Nominated – Sowmya Raoh

4-th Suvarna Film Awards 
Suvarna Film Awards Best Actor – Winner – Sudeep

Bangalore Times Film Awards
Best Actor – Winner – Sudeep 
Best Film – Nominated – Only Vishnuvardhana
Best Actor in a Negetive Role Male – Nominated – Sonu Sood 
Best Actor in a Negetive Role Female – Nominated – Priyamani

அடுத்ததுதான் இந்த ‘புலிவால்’ என்ற தமிழ் ரீமேக். மலையாளத்தில் தயாரித்த லிஸ்டின் ஸ்டீபனே, ராதிகா சரத்குமாருடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கிறார்.

பகத் பாசில் கேரக்டரில் பிரசன்னா.. வினீத் சீனிவாசன் கேரக்டரில் விமல். ரம்யா நம்பீசன் கேரக்டரில் ஓவியா. நிவேதா தாமஸ் கேரக்டரில் அனன்யா, ரோமா கேரக்டரில் இனியா.. என்று ‘நச்’ என்று பொறுக்கியெடுத்த நட்சத்திரங்கள்… கதை மேலே சொன்னதுதான். அதில் எந்த மாற்றமுமில்லை..

‘புலிவால்’ சரியான டைட்டில்தான். ‘புலிவாலை பிடிச்ச கதை’ என்பார்களே.. அது இந்தக் கதைக்கு மிகப் பொருத்தமானது. படத்தில் பெரிய ஆர்ட்டிஸ்ட் இருக்க வேண்டும். அப்போதுதான் தியேட்டருக்கு கூட்டம் சட்டென்று வரும்.. அதேபோல் அந்தக் கேரக்டருக்கு பொருத்தமானவராகவும் இருக்க வேண்டும். தமிழில் வேறு ஆட்கள் இல்லை என்பதால் விமலை தவிர வேறு யாரையும் சொல்ல முடியாது.. பிரசன்னா குட் சாய்ஸ்.. ஓவியா, அனன்யாவும் குட் சாய்ஸ்தான்.. நல்ல கதை, சிறந்த திரைக்கதை, முற்பாதியைவிடவும் பிற்பாதியில் செம விறுவிறுப்பு..!

மலையாளத்தில் மசாலா படங்களையும் ரசிக்கிறார்கள். இது போன்ற சீரியஸான கிரைம் படங்களையும் ரசிக்கிறார்கள். ஆனால் நம்ம தமிழ் ரசிகர்கள்தான் காமெடியும் வேணும்.. பாடல்களும் வேணும்.. என்று பிடிவாதம் பிடிப்பதால் தமிழுக்காக மெனக்கெட்டு சூரி கேரக்டரையும், சூப்பர் மார்க்கெட் மேனேஜராக தம்பி ராமையாவையும் வைத்து முடிந்த அளவுக்கு நகைச்சுவையில் திருப்திபடுத்தியிருக்கிறார்கள்..! சூரி.. இந்தப் படத்துக்காக எஸ்.எம்.எஸ். ஜோக்குகளை மனப்பாடம் செய்திருக்கிறார் போலிருக்கிறது. பலவைகளை ரசிக்க முடிந்தாலும், கொஞ்சம் ஓவர் டோஸாகிவிட்டது.. தம்பி ராமையாவின் டயலாக் டெலிவரியைச் சொல்லவே வேண்டாம்.. பண்பட்ட வில்லன் நடிகராகவும் பிரமிக்க வைப்பவர்.. இதிலும் அப்படியே.. சுந்தரியுடன் மைண்ட் வாய்ஸில் அவர் பேசும் டயலாக்குகள் அனைத்துமே ஜிலீர் ரகம்.. இவர்களின் போர்ஷனுக்கு ஒரு ஷொட்டு..

முற்பாதியில் இரண்டு மாறுபட்ட கலாச்சாரத்தைக் காட்டுவதிலும், ஹீரோ, செகண்ட் ஹீரோக்களின் வாழ்க்கை முறையைக் காட்டுவதிலும் பெரும்பாலான நேரம் செலவானதால், படம் எதை நோக்கிச் செல்கிறது என்பதே தெரியாமல் கொஞ்சம் நெளிய வேண்டியிருந்தது.. 

விமலுக்குள் இருக்கும் ஊசலாட்டத்தை காட்சிகளின் மூலமாகச் சொல்லியும், திருடாதே பாடல் மூலமாக அவரது குணத்தைக் காட்டியும்.. திருப்பிக் கொடுக்க முனைவதைச் சொல்லியிருந்தாலும் அதனை திரைமொழியில் புரிவது போல அழுத்தமாகச் சொல்லாததினால் சில இடங்களில் ஜிவ்வென்று போயிருக்க வேண்டிய முற்பாதி திரைக்கதை சவசவ என்று ஆகிவிட்டது..!

விமலின் நடிப்பை வினீத் சீனிவாசனுடன் ஒப்பிட்டுப் பார்த்து குறை சொல்வதெல்லாம் தேவையில்லாதது..! தமிழில் இவ்வளவுதான் முடியும்.. இல்லாவிடில் புதுமுக நடிகரை நடிக்க வைத்திருக்க வேண்டும். அப்படியெனில் படத்தின் விற்பனைக்கு யார் பொறுப்பேற்பது..? சிறந்த முறையில் விளம்பரம் செய்து.. சிறந்த கதையை பரப்புரை செய்வதுதான் மிகச் சிறந்த வர்த்தக அணுகுமுறை..!

செல்போனை திருப்பிக்கொடுக்க முன் வந்தும், பிரசன்னா அடியாளுடன் வருவது.. சம்பந்தமில்லாமல் தன்னை தாக்கியது.. இதையெல்லாம் மனதில் வைத்து இரண்டு முறை செல்போனை கொடுக்க மறுத்து விமல் திரும்புவது ஓகேதான்.. அதையே தன்னுடைய சொந்த லாபத்துக்காக பிரசன்னாவை திசை திருப்புவது என்பதுதான் சினிமாட்டிக்.. இங்கேதான் செமத்தியான டிவிஸ்ட்டு.. இயக்குநர் மாரிமுத்து மூலத்தை சிதைக்காமல் கொண்டு சென்றிருக்கிறார்..

பிரசன்னா ஐடி கம்பெனி ஓனராக அதற்கேற்றாற்போலவே நடித்திருக்கிறார்.. பெண்களை கவர்வது ஒன்றே தனது தொழிலாக இருப்பதை அவ்வப்போது சைலண்ட்டான ஆக்சன்களில் காட்டியிருக்கிறார்.. ஒரு பக்கம் ஓவியாவுக்கு கனெக்சன் கொடுத்துக் கொண்டே, இன்னொரு பக்கம் இனியாவிடம் கோபம் காட்டாமல் பேசிவிட்டு வழிவதெல்லாம்…. இது போன்ற பால்வடியும் முகங்களில் மட்டுமே செய்ய முடியும்..!

அதே துள்ளல்.. அதே குதூலகம்.. அனன்யாவின் அத்தனை நடிப்பும் ‘நீலாங்கரை’ பாடல் காட்சியில் தெரிகிறது.. ‘கிச்சு கிச்சு’ பாடலில் ஓவியாவின் அத்தனை திறமைகளும் தெரிகிறது.. ரெண்டுக்கும்தான் எத்தனை வித்தியாசம்.. ?ஒண்ணு போர்த்திக் கொண்டு.!. இன்னொன்னு முடிந்த அளவுக்கு..?? இந்த இரண்டு பாடல்களைத் தவிர ‘வாழ்க்கை உன்னை’ பாடலும் அந்த சிச்சுவேஷனில் நிறையவே மனப்பாரத்தை ஏற்றியிருக்கிறது.. இசையமைப்பாளர் ரகுநந்தனுக்கு ஒரு ஷொட்டு..

எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் சரி.. சென்றாலும் சரி.. காலத்தால் அழியாத இசை என்றாலே இன்றைய தலைமுறைக்கும் இளையராஜாவின் இசைதான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.. இந்தப் படத்தில் தம்பி ராமையா மற்றும், அவரது காதலிக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் ராஜாவின் டியூன்கள் அனைத்தும் சிச்சுவேஷனுக்கேற்ற டியூன்கள். ரகுநந்தனே முடியாமல் ஒதுங்கியிருக்கிறார் என்றால் இசைஞானிதான் யார்..? புரிந்து கொள்ளட்டும் புதியவர்கள்..!

முடிந்த அளவுக்கு படத்தின் தன்மை கெடக்கூடாது என்பதால் மலையாள மூலத்தில் இருந்தே காட்சிகளை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.. அதற்காக மலையாளத்தில் நடித்த பெண் போலவே இருக்கும் சொர்ணமால்யாவைத் தேடிப் பிடித்திருக்க வேண்டுமா..? அம்மணி எப்படி அந்த கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டார்ன்னு தெரியலை.. நடிப்புக்காக என்றாலும் அதற்காகவேணும் அவரைத் தனியாகப் பாராட்ட வேண்டும்..!

இத்தனை போராட்டத்திற்குப் பிறகு விமலை தேடிப் பிடித்த பின்பும், அவர் சொன்ன ஒரே வார்த்தைக்கு பிறகு உண்மையைத் தெரிந்து கொண்டு செல்போன் கடைக்காரனை போட்டு புரட்டியெடுப்பதும்… கடைசியில் மனம் மாறி ஓவியாவை கைப்பிடிப்பதாகவும் சென்றிருப்பது இந்திய மொழிகளுக்கேற்ற சினிமாட்டிக் திரைக்கதை..

முற்பாதியில் தம்பி ராமையா-சூரியின் நகைச்சுவையாலும், ஓவியா மற்றும் அனன்யாவின் ஜில்லென்ற ஸ்கிரீன் பிரசென்ஸினாலும் படம் நகர்ந்து பிற்பாதியில் தேடுதல் வேட்டையின் பரபர ஸ்கிரீன்பிளேயில் படத்தை வெகுவாக ரசிக்கவே முடிகிறது..!

கொரியன் படத்தையும், மலையாளப் படத்தையும் பார்த்துவிட்டதினால் படத்தின் பாதிப்பை அவ்வளவாக எழுத்தில் கொண்டு வர முடியவில்லை. ஆனால் எதையும் பார்க்காமல் முதல் படமாக பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு புதுவித அனுபவத்தைத் தரும் என்றே நம்புகிறேன்..!

மலையாளம், கன்னடம், தமிழ் என்று முடித்த பிறகு இப்போது தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் இதே கதையில் படம் தயாராகி வருகிறதாம். கூடவே மராத்தி மொழியிலும் படத்தை எடுத்துவிட்டார்களாம்.. ஹிந்திக்கு, மலையாள தயாரிப்பாளர் முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம்.. கதையின் ஒரிஜினல் உரிமையாளரான Kim Mi-hyeon-க்கு இது தெரியாமலேயே இருக்கட்டும்.. ஒருவேளை அவருக்குத் தெரிந்து போய் ரீமேக்கான அனைத்து படங்களையும் பார்த்துவிட்டு “ஐயையோ.. சுட்டாலும் சுட்டீங்க..? இப்படியா என் கதையை எடு்க்கணும்..?” என்று கதறி அழுதுவிட்டாரென்றால்..? பாவமில்லையா..?

மலையாள, கன்னட சினிமாக்கள் பெற்ற விருதுகளை இங்கே குறிப்பிட்டதன் காரணம்.. அடுத்த வருடம் இதே போன்று இந்தத் தமிழ் வடிவமும், ஏதாவது சில வழிகளில் விருதுகளைப் பெற்றாக வேண்டும்.(அதற்கான தகுதியுள்ள படம்தான் இது.) ஆனால் பெறுமா என்பதை யோசித்துப் பார்க்கத்தான்..!

புலிவால் – நிச்சயம் பார்க்க வேண்டிய படம்தான். பாருங்க..!

5 comments:

Yaathoramani.blogspot.com said...

நல்ல விமர்சனம்
நேற்றுதான் இந்தப் படம் பார்த்தேன்
இடைவேளைக்குப் பின் இவ்வளவு
ஜவ் இழுப்பு இழுத்திருக்க வேண்டாமோ
எனப்பட்டது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

Anonymous said...

சப்பா குருசு என்ற மிக அற்புதமான படத்தை தமிழில் மசாலா தடவி அதன் ஆத்மாவை கொன்றுள்ளார்கள் என்றே சொல்லலாம். புலிவால் என்ற தலைப்பை தவிர வேறு ஒன்றும் பிரமாதமாக இல்லை. அந்தரங்கங்களை படமாக்கி கொண்டால் நல்லவர்கள் கையில் அது சிக்கினால் கூட ஆபத்து தான் உண்டாக்கும் என இந்தியாவில் தினம் தினம் வலையேறி கொண்டிருக்கும் பல பாலியல் அந்தரங்கங்களின் ஆபத்தை படம் பிடித்துக் காட்டியது சப்பா குருசு.

பகத் பாசில், ரம்யா நம்பீசன் ஆகியோரின் நடிப்பு உயிரூட்டுவதாய் இருந்தது.

சொல்லப் போனால் சப்பா குருசை அனேக தமிழர்கள் பார்த்தே விட்டார்கள் ( இணையத்துக்கு நன்றிகள் ).

ஆனால் அதை தமிழ் படுத்துகின்றேன் என்ற பெயரில் உண்மையில் கெடுத்துள்ளார்கள் என்றே சொல்லுவேன்.

புலிவால் மீது தடவப்பட்ட மசாலாத்தனமும் உயிர்ப்பற்ற நடிப்பும் சொல்ல வேண்டிய விடயத்தை அழுத்தமாக சொல்லி இருக்கவில்லை.

சப்பா குருசையே தமிழில் மொழி மாற்றி இருக்கலாமோ. நல்ல மலையாள படங்களை தமிழில் கெடுப்பதை தடுக்க, இனிமேல் மலையாள படங்கள் எடுக்கும் போது இருமொழி படங்களாக இரு மக்களுக்கும் இசையுமாறு எடுத்து விடுவது நல்லது என நினைக்கின்றேன்.

அந்த வகையில் வெளிவந்த -நேரம் - வெற்றி பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

கார்த்திகேயன் said...

//சப்பா குருசையே தமிழில் மொழி மாற்றி இருக்கலாமோ. நல்ல மலையாள படங்களை தமிழில் கெடுப்பதை தடுக்க, இனிமேல் மலையாள படங்கள் எடுக்கும் போது இருமொழி படங்களாக இரு மக்களுக்கும் இசையுமாறு எடுத்து விடுவது நல்லது என நினைக்கின்றேன் //
உண்மை...

கேரளாக்காரன் said...

//‘சப்பா குருஸு’.. இதற்கு தமிழில் ‘தலையும், வாலும்’ //


Poova Thalaiyaa is the right word..

Head or Tail