1992-கும்பகோணம்-மகாமகத்தில் நடந்த பயங்கரம்..!

09-09-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பதிவு செய்து வைக்கப்பட வேண்டிய லிஸ்ட்டில் அடுத்து வந்திருப்பது 1992-ம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமக தினத்தன்று நடந்த பயங்கரம்.  தொடர்ந்து இரு இதழ்களில் வந்த கட்டுரையுடன் கூடவே அப்போதைய ஜூனியர் விகடன் ரிப்போர்ட்டரும், தற்போது இணைய ஊடகங்களில் நமது உயிரையெடுக்கும் 'உத்தம நண்பர்' திரு.மாயவரத்தானின் நேரடி அனுபவத்தையும் இணைத்தே பதிவு செய்து வைக்கிறேன்..!

1992-கும்பகோணம் மகாமகம் பயங்கரம்-1

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 29: 26.2.92


தாமதமாகத் துவங்கப்ப பராமரிப்பு வேலைகள், அரசுத் துறைகளின் மெத்தனம், ஆகம விதிகள் மீறப்பட்டதாக எழுந்த புகார்... என்று பல்வேறு சர்ச்சைகளோடு இம்முறை கும்பகோண 'மகாமக நாள்’ நெருங்கியது. 'தமிழக முதல்வர் ஜெயலலிதா மகாமகக் குளத்துக்கு வந்து நீராடப்போகிறார்’ என்கிற செய்தி மேலும் பரபரப்பை உண்டாக்கியது. கட்டுக்கடங்காத கூட்டத்தில் கும்பகோணம் சென்று பத்திரமாகத் திரும்புகிற பயம், லட்சக்கணக்கான பக்தர்​களிடையே இருந்தது. முதல்வரின் நேரடி விசிட், அதனால் ஏற்படப் போகும் பாதுகாப்புக் கெடுபிடிகள், பக்தர்களை மேலும் பயமுறுத்திக்​கொண்டுதான் இருந்தன.

பக்தர்களின் பயத்தை உறுதி செய்வதுபோல், மகாமகத்துக்கு முதல் நாளான 17-ம் தேதியே நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்தன. 'முதல்வர் வந்து நீராடிவிட்டுப் போகும்வரை பக்தர்கள் குளத்தில் இறங்க அனுமதி இல்லை!’ என்று 17-ம் தேதி போலீஸ் செய்த அறிவிப்பு பக்தர்களைத் திகிலடையச் செய்தது. போலீஸ் அறிவிப்பை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர்கள் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பி.ஜே.பி. தொண்டர்கள். போலீஸ் அறிவிப்பை மீறி, பி.ஜேபி-யினர் முதல் நாளே குளத்தில் இறங்க ஆரம்பித்தனர். அதனால் போலீஸின் கெடுபிடிகள் அவ்வளவாக இல்லாமல் போனது. ஆகவே, முதல்வர் வருகைக்கு முன்பே பல்லாயிரம் பேர் நீராடிவிட்டுக் கிளம்பினர்.

மகாமகத்தன்று காலை 8.30 மணிக்கு, குளத்தில் மிதமான பக்தர்கள் கூட்டம் இருந்தது. அந்த நேரத்தில் காவல் துறையினர் கூட்டத்தை ஓரளவு கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர்.

இந்த ஒழுங்கு முறை காலை 9.30 மணி வரை நீடித்தது. ஆனால், குளத்தில் இருந்து வெளியேறாமல் அங்கேயே நின்ற கூட்டம், முதல்வர் ஜெயலலிதா நீராடும் காட்சியைக் காண வேண்டி அதற்கென அமைக்கப்பட்டு இருந்த பிரத்யேகமான குளியல் அறைப் பகுதியை நோக்கி நகர்ந்து அந்தப் பகுதியிலேயே தங்கி நின்றது.

குளத்தின் கொள்ளளவு 40 ஆயிரம் பேர் என்று கணக்கிடப்பட்டு இருந்தது. ஆனால், அதைவிடப் பல மடங்குக் கூட்டம் குளத்தில் நின்றது. குளத்தில் கால்வாசி பகுதிக்கு மேல் முதல்வரின் பாதுகாப்பு கருதி காவல் துறை வளைத்து நின்றது. இதனால் நேரம் ஆக ஆகக் குளத்தின் உள்ளே மக்கள் நெருக்கம் அதிகரித்தது. முதல்வர் நீராடும் இடத்தை நோக்கி நெருக்கியடித்தபடி நகர்ந்தது மக்கள் கூட்டம்... முதல்வர் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே வந்த தேவாரம் ஐ.ஜி., அடிக்கடி பைனாகுலர் மூலம் மக்கள் அவதிப்படுவதைப் பார்த்துக்​கொண்டு இருந்தார். ஆனால், குளத்துக்குக் கூட்டம் வருவதைத் தடுக்க முடிய​வில்லை.

சரியாகக் காலை மணி 11.32-க்கு பிரத்யேகமாக அமைக்கப்​பட்டிருந்த குளியல் அறைப் பகுதிக்கு வந்த முதல்வர், படிக்கட்டில் நின்று மக்களைப் பார்த்துக் கையை அசைத்தார். அவருக்கு நேர் எதிர்ப்புறம் வடக்கு வீதிப் பக்கம் நின்ற கூட்டத்தினர் முதல்வரைக் காண முடியாமல் குளக்கரையில் இருந்த கோயில் ஒன்று மறைத்தது. எனவே, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னுக்கு வந்து 'பாங்கூர் தர்மசாலா’ கட்டடத்தின் வெளிப்​புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது ஏற முயல, அதைத் தொடர்ந்துதான் இரும்பு கிரில் சுவரோடு சாய்ந்தது அங்கேயே சிலர் நசுங்கி இறந்தனர்.

பொதுமக்கள் மத்தியில் கிரில் விழுந்தபோது, அந்தப் பகுதி மக்கள் தங்களைக் காப்பாற்றிக் ​கொள்​வதற்காக நாலாபுறமும் திக்குத் தெரியாமல் ஓடினார்கள். அதனால் குளத்தில் இருந்து கரையேறிய மக்களும், சிதறி ஓடிய மக்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். அப்போது வீதிகளில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட நெருக்கடியில் ஆண்களும் பெண்களுமாகப் பல உயிர்கள் பலியாகின.

போலீஸ் தரப்பில் 'பலியானது 48 பேர்’ என்று புள்ளிவிவரம் கொடுத்தாலும், இன்​னும் பல உயிர்கள் பலியாகி இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். அந்த அள​வுக்குக் களேபரம், கூக்குரல்கள், துயர சம்​பவங்கள் முதல்வர் நீராடிய இடத்துக்குச் சில நூறு அடிகள் தள்ளி நடந்தன. நிகழ்ச்சியை வர்ணித்துக்கொண்டு இருந்தவர்களின் மைக் ஒலிக்கும், கூட்டத்தின் இரைச்​சலுக்கும் நடுவே, மனித உயிர்களின் மரண ஓலங்கள் கேட்கவே இல்லை.

''முதல்வர் மதியம் 2.30 மணிக்கு மேல்தான் கும்பகோணத்தில் இருந்து கிளம்பினார். அதுவரையில் அவருக்கு நடந்த சம்பவங்கள் எதுவும் தெரியாது. தெரிந்து இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு வந்திருப்பாரே...'' என்கிறார்கள் ஊர் மக்கள்.

இறந்தவர்களின் உடல்களை மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குடந்தை அரசு மருந்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் செஞ்சிலுவை சங்கத்தினர்.  நகரில் தொடர்ந்து ஆம்புலன்ஸ் 'சைரன்’ பரபரப்பாக ஒலித்துக்கொண்டே இருந்தது! மருத்துவமனையின் புதிய கட்டடமான அவசர மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவில் அவசர கேஸ்களும் இறந்தவர்களின் உடல்களும் சரிசமமாக வந்து குவிந்தன.

ஊரில் இந்த சம்பவம் காட்டுத் தீ போலப் பரவ ஆரம்பித்ததும்... பொதுமக்கள் 'இறந்தவர்களில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா?’ என்று மருத்துவமனைக்கு அருகில் உள்ள கோயில்களில் வேண்டிக்கொண்டு, பிணங்களை அடையாளம் காட்டுவதற்காக ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்து துக்கத்துடன் குழுமிவிட்டனர். இறந்துபோனவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றிய நிருபர்களை போலீஸ்காரர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியதோடு, ''நீங்க உள்ளுக்குள்ள நுழைஞ்சா பிரச்னை பெரிசாயிடும்!'' என்று மிரட்டினார்கள்.

குடந்தை மருத்து​வமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கடந்த 18.10.91 அன்றுதான் தொடங்கப்​பட்டதாம். அந்தக் கட்ட​டம் திறக்கப்பட்ட பிறகு நடந்திருக்கும் பெரிய விபத்து இது! ''12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மகாமக விழாவில், இது வரையிலும் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்ததே இல்லை...'' என்கிறார்கள்.

பிணங்களை அடையாளம் காட்டி உடல்களைப் பெற்றுச் செல்வதற்காக மருத்து​வமனைக்கு வந்திருந்த பலர், அடையாளம் காட்டிய பிறகும் அவற்றைப் பெற்றுக்கொள்ள மறுத்தார்கள். அவர்களில் ஒருவரிடம் காரணம் கேட்டபோது, ''இறந்துபோனது எங்க அம்மா. அவங்க 'மகாமகக் குளத்துக்குப் போறேன்’னு கிளம்பி​னப்ப, கிட்டத்தட்ட 25 பவுனுக்கு மேல நகைகள் போட்டுட்டுப் போனாங்க. அவங்க மூச்சுத் திணறி மயக்கமா இருக்காங்கனு சொல்லி ஆஸ்பத்திரில சேர்க்கிற வரைக்கும்கூட எல்லா நகைகளும் சரியாத்தான் இருந்திச்சு. அதுக்கப்புறம் அவங்க இறந்துட்டாங்கனு சொல்லிப் பிணத்தோட பிணமாக் கிடத்தினாங்க! அப்புறம் நாங்க போயி பாத்தா, எங்க அம்மா உடம்புல ஒரு துண்டு நகைகூட இல்லை. கேட்டா.... 'அந்தம்மாவே போயிடுச்சு... நகையா முக்கியம்’கிறாங்க. ஆனா, 'பிணத்தோட, நகைகளையும் பெற்றுக் கொண்டோம்’னு எழுதிக் கையெழுத்து போடச் சொல்றாங்க'' என்றார் அழுதபடியே!

தேவகோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இரண்டு போலீஸ்காரர்கள் கையைப் பிடித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து, ''இங்க பாரு... உன்னோட அப்பாவும் அம்மாவும் இறந்து போயிட்டாங்க! இப்ப அழுவறதுக்கு நேரம் இல்லை. தேவகோட்டைக்கு ஏற்கெனவே ஒரு பாடியை ஏத்தி ஆம்புலன்ஸ் புறப்படத் தயாரா நிக்குது. உங்க அப்பாவையும் அம்மாவையும் வண்டில ஏத்திரலாம் இல்லையா...'' என்று கேட்டதும் அந்த இளைஞர் அதிர்ந்து கதறி அழுத காட்சி நெஞ்சை உலுக்கியது.

இந்தத் துயரக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, அரசுத் தரப்பில் இருந்து பல முரண்பட்ட செய்திகள்...

இதுவரையில் இறந்தவர்கள் என்று அரசுத் தரப்பில் சொல்லப்படும் எண்ணிக்கை - 48 பேர். ஆனால்... ஆஸ்பத்திரியில் பிணங்களை அடுக்கி இருக்கும் பகுதிக்கு நிருபர்கள் சென்று பார்வையிட்டபோது... இறந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாகவே இருந்தது.

நம் கண் முன்னாலேயே வயதான பெண்மணி ஒருவர் கூட்டத்தில் மிதிபட்டுக் கொண்டு இருந்தார். அவரைக் காப்பாற்ற முற்பட்டபோது போலீஸாரால் பலவந்தமாக இடத்தைவிட்டு நாம் அப்புறப்படுத்தப்பட்டோம்! பிறகு அந்தப் பெண்மணி மயக்கமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, இறந்துபோனார்.

கூட்ட நெரிசலில் பலரது ஆடைகள் கிழிபட்டன. நகைகள் பறிபோயின. பணம் ஏராளமாகப் பறிபோனது. பலர் அரை நிர்வாணமாக போலீஸாரின் கெடுபிடிகளால் கூட்டத்தில் மூச்சுவிடக் கூட முடியாமல் முன்னேறினார்கள். அப்போது பொதுமக்கள் இழந்த பொருட்களின் மதிப்பு மட்டும் பல லட்ச ரூபாய்கள் இருக்கும்! ரோட்டில் ஏராளமான சட்டைகள், வேஷ்டிகள், புடவைகள், செருப்புகள்...

ஒரு சில மணி நேரத்தில், ஆன்மிக விழா ஒன்று, மரண பூமியாக மாறிப்போனதை நேரில் கண்ட அதிர்வில் இருந்து விலக முடியவில்லை!

- நமது நிருபர்கள்

படங்கள் : கே.ராஜசேகரன்

ஒரு பக்கம் சாவு... மறுபக்கம் குதூகலம்!

. ''கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பகுதி புதிய கட்டடத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதிதான் முதல்வர் திறந்துவைத்துவிட்டுப் போனார். சரியாக நான்கு மாதங்களுக்குப் பிறகு அதே 18-ம் தேதி பிணங்களால் நிரம்பி வழிந்தது!'' என்று மருத்துவமனை ஊழியர் ஒருவர் சொல்லி வருந்தினார்.

கண் இமைக்கும் பொழுதில் நிகழ்ந்துவிட்ட இந்தக் கோரச் சம்பவத்தால் அந்த இடத்தையே துக்கம் சூழ்ந்துகொண்டது. எங்கும் அழுகை மயம்... ஒரு புறம் இந்த சம்பவம் நடந்துகொண்டு இருக்க... இன்னொரு புறத்தில் முதல்வர் குளித்து முடித்து 'பந்தா’வாக காரில் ஏறிச் செல்ல, அவர் சென்றதும் காவல் துறை உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் அதே இடத்தில் குளித்தனர்.

குளத்தில் போடப்பட்ட காசுகளைப் பொறுக்குவதில் ஏகப்பட்ட போட்டா போட்டி. இதில் காசு எடுப்பதில் பலர் முட்டி மோதி விழுந்து எழுந்ததில் பலர் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர். சிலர் இறந்தனர்.

1992-கும்பகோணம் மகாமகம் பயங்கரம்-2

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 40: 4.3.92

கும்பகோணம் மகாமத் திருவிழாவில் நடந்து முடிந்த அந்த மாபெரும் சோகச் சம்பவத்தின் பாதிப்பு துளியும் மாறவில்லை. மீண்டும் ஒருமுறை, அந்த நகரைச் சுற்றி வந்தபோது, விபத்து பற்றி மேலும் பல புதிய தகவல்கள் தெரியவந்தன.

 விழா ஏற்பாடுகளைச் செய்வதற்கு நிறைய கால அவகாசம் இருந்தும் மிகத் தாமதமாக அரசு விழித்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்ததே, பல குளறு​படிகளுக்குக் காரணம் என்று தெரிய வருகிறது.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதே, மகாமகத்துக்கான முதல் கட்ட வேலைகள் துவங்கப்பட்டு, அதற்காக  40 லட்சம் ஒதுக்கப்பட்டது. அப்போதைய தொகுதி எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான கோ.சி.மணி அதற்கான பணியில் தீவிரமானபோதுதான் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.

அ.தி.மு.க. அரசு புதிதாகப் பதவி​யேற்​ற​வுடன், மகாமக வேலைகள் கண்டு​ கொள்ளப்​படவே இல்லை. அரசு ஒதுக்கிய  10 கோடி  மகாமகத்துக்கு ஒரு வாரம் முன்புதான் வந்து சேர்ந்ததாகத் தகவல்!

வழக்கமாக மகாமகப் பணிக்கு அரசு அதிகாரிகள் ஒரு குழுவாகவும், ஊர் முக்கிய பிரமுகர்களைக்கொண்ட ஒரு கமிட்டியும் அமைக்கப்படும். ஆனால், இந்த முறை மகாமகத்துக்குச் சில நாட்கள் முன்புதான், ஊர் முக்கியப் பிரமுகர்களைக்கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அதிலும், சம்பந்தமே இல்லாத வெளியூர் பிரமுகர்கள் சிலர் சேர்க்கப்பட்டதில் உள்ளூர்ப் பிரமுகர்கள் பலருக்கு வருத்தம்.

இது இப்படியிருக்க, மகாமகக் குளத்துக்கு வருகை தரும் பக்தர்கள் எப்படி வந்து, போக வேண்டும் என்று போலீஸ் தரப்பில் ஒரு ரூட் வரைபடம் பிரின்ட் செய்து விநியோகித்தார்கள். நாளிதழ்கள் வரைபடத்தைப் பிரசுரித்தன. வெளியூரில் இருந்து வந்திருந்த பலர் அந்த வரைபடைத்தை மறக்காமல் கையில் வைத்திருந்தனர். அதேபோல, மிகப் புனிதமான என்று சொல்லப்படும் 'தீர்த்தவாரி நேரம்’ பகல் 11.45 முதல் 12.30 என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
   
முதல்வர் அங்கே வரப்போகிறார் என்பதை மகாமகம் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பே அமைச்சர் அழகு திருநாவுக்கரசு அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார். அதுவரை மக்கள் வசதிக்காக ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த அதிகாரிகள், திடீரென்று முதல்வர் வருகைக்கான ஏற்பாட்டில் திசைதிரும்பிவிட்டார்கள்.

''ஏற்கெனவே வரைபட மேப், குளத்தில் நீராட வேண்டிய நேரம்... இப்படிப் பல விஷயங்களை விளம்பரப்படுத்தி விட்ட நிலையில், சி.எம். வந்தால் அந்த புரோகிராம்களை மாறுதல் செய்ய வேண்டிவரும். அப்படி மாறுதல் செய்தால்கூட, அதை மக்களுக்கு விளம்பரப்படுத்த அவகாசம் இல்லையே! என்ன செய்வது?'' என்று ஓர் அதிகாரி கருத்துச் சொல்ல... அவருக்கு ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவரிடம் இருந்து பயங்கர டோஸ்!

அதேபோல, மேற்குக் கரை வழியாக காரில் முதல்வர் நுழைந்தவுடன் ஓரப் பகுதியிலேயே ஓர் இடத்தில் முதல்வர் குளித்துவிட்டு, வந்தவழியே திரும்பிப் போகும்வகையில் ஓர் ஏற்பாட்டை அதிகாரிகள் செய்திருந்தார்கள். இதன்படி நடந்திருந்தால், மேற்குக் கரையின் ஒரு வழி மட்டுமே அடைபட்டிருக்கும். கரையின் மறுமுனை வழியாக மக்கள் போக்குவரத்து இருந்திருக்கும். ஆனால், இங்கேயும் ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் தலையிட்டு, மேற்குக் கரையின் நடுவில் ஓர் இடத்தில் முதல்வர் குளிக்க இடம் குறித்திருக்கிறார். அதிகாரிகள் வாயடைத்துப்போய் நின்றார்களாம்.

இப்படி இடம் மாறியதால்தான் மேற்குக் கரையின் இருமுனையும் முதல்வர் வருகைக்காக போலீஸாரால் தடை ஏற்பட்டுத்தப்பட்டது. இப்படித்தான் குழப்பம் ஆரம்பித்தது. இது ஒருபுறம் இருக்க... காசி விஸ்வநாதர் கோயிலின் கொடிக்கம்பம் முறிந்து விழுந்த தகவலை அப்போதைக்கு அதிகாரிகள் மூடி மறைக்கப் பார்த்திருக்கிறார்கள். இருந்தும், அந்தத் தகவல் மக்களிடத்தில் பரவிவிட்டது.

மகாமகப் பணிக்கான ஸ்பெஷல் டியூட்டிக்​காக டி.ஐ.ஜி-யான செல்வராஜைப் போடுவதாக முடிவாகி இருந்தது. இந்த நிலையில், டி.ஐ.ஜி. திடீரென்று மாரடைப்பால் காலமாகிவிட்டார். இதனால் போலீஸார் மத்தியிலும், 'அபசகுணமான பீதி’ பரவியிருந்தது. ஒரு கட்டத்தில், போலீஸ் டி.ஜி.பி-யான ஸ்ரீபால் கும்பகோணத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் டெலிபோனில் தொடர்புகொண்டு, ''அன்று எதுவும் அசம்பாவிதம் நடக்கக் கூடாது! எல்லாம் நல்ல​படியாக நடக்க வேண்டும் என்று நீங்கள் எல்லாம் கோயிலில் வேண்டிக்கொள்ளுங்கள்'' என்றாராம்!

ஆக மொத்தத்தில் மகாமகத் தினத்தன்று, 'நிச்சயம் ஏதோ ஒரு விபரீதம் நடக்கும்’ என்று போலீஸார் மத்தியில் ஒருவித பயம் இருந்தது! அதனால், முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் அவர்கள் மிகத் தீவிரமாக இருந்தனர்.

நீராட வருபவர்கள் குளத்தில் வடகரைப் பகுதியில் இறங்கி மேற்குக் கரையில் ஏறுவதாக முன்கூட்டி திட்டமிட்டு அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த வழியெல்லாம் கடைசி நிமிடத்தில் முதல்வர் வருகையால் தடை செய்யப்பட்டன. வடகரையில் இறங்கி தென்கரையில் ஏறவேண்டும் என்ற போலீஸார் திடீரென திட்டத்தை மாற்றினர். இந்த 'மாற்ற விவரம்’ பொதுமக்களுக்குப் போய்ச் சேராததுதான் பெரும் குழப்பம்!

காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் குளத்தில் இறங்கியவர்கள் மீண்டும் கரையேற வழி இல்லாமல் குளத்துக்குள்ளே நிற்கத் தொடங்கினர். குளத்தின் படிகளில் நின்றவர்கள் வெகுநேரம் நிற்க முடியாமல் அப்படியே நெருக்கமாக உட்கார்ந்துவிட்டனர். அவர்களுக்குப் பின்னால் லட்சக்கணக்கான மக்கள் குளத்தில் இறங்க வாய்ப்பு எதிர்பார்த்தபடி பதற்றத்துடன் முட்டிமோதி நின்றுகொண்டு இருந்தனர்.

இந்த நெருக்கடியான கூட்டத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் வேறு சத்தமிட்டபடி வானத்தில் சுற்றி வர... பக்தர்களிடம் சலசலப்பு!

நெட்டியடித்துக்கொண்டு முன்னேறத் தொடங்கினர். ''மேற்குக் கரையை ஒட்டிய குளத்துக்குள் நின்றவர்களிடம் குடந்தை போலீஸ் உதவிக் கண்காணிப்பாளர் கந்தசாமி லேசாக லத்திப் பிரயோகம் செய்தார். இதுதான், போலீஸின் முதல் அத்துமீறல் சம்பவம்... கூட்டம் மிரண்டு ஓடத் தொடங்கியது!'' என்கிறார்கள் நேரில் பார்த்த பிரமுகர்கள்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் சாமிநாதன் ஓடிப்போய், ''பக்தர்களை அடிக்காதீர்கள்!'' என்று கந்தசாமியிடம் கெஞ்சினார். ஆனால், சிதறிய கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.


சரியாக 11.45 மணிக்கு ஜெயலலிதா புனித நீராடத் தொடங்கியபோது ரெடியாக இருந்த தேவாரம் ஐ.ஜி., தீர்த்தவாரிக்கான நேரம் தொடங்கிவிட்டதை அறிவிப்பதற்காக மூன்று முறை துப்பாக்கியால் வானத்தில் சுட்டுக் காட்டினார்.

தேவாரம் துப்பாக்கி உயர்த்துவதைப் பார்த்ததுமே, 'ஏதோ அசம்பாவிதம்’ என்று தவறாக எண்ணி மக்கள் சிதறத் தொடங்கினர். மக்கள் பீதி அதிகமாகிறது. உடனே அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தியதில், கூட்டத்தில் சிக்கிப் பலர் மூர்ச்சையாகி இருக்கிறார்கள்.

12.00 மணிக்குப் புனித நீராடிவிட்டுக் கரையேறிய ஜெயலலிதா, பொதுமக்களைக் கவர்வதற்காக கையசைத்துக் காட்டும்போது ஏற்பட்ட திடீர் நெரிசலில், வடகரையில் உள்ள 'பாங்கூர் தர்மசாலா’ கிரில் கவர் தடுப்பு அருகே மக்கள் வெள்ளம் ஆரவாரித்தது. அப்போது கிரில் சுவர் சாய்ந்தது. இதைப் பார்த்ததும் கூட்டம் மேலும் சிதறி ஓடியது. அப்போது கட்டடம் இடித்துவிட்டதாக நினைத்த மக்கள் நாலா பக்கமும் ஓடியபோது அவர்களைத் தடுத்து நிறுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் லத்தியால் சுழற்றிச் சுழற்றி அடித்தார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ''அடிக்காதீர்கள்!'' என்று அந்த இன்ஸ்பெக்டரின் காலைப் பிடித்துக் கெஞ்சியதாகத் தெரிகிறது.

ஒரு கும்பல் குளத்தில் இருந்து கரையேறவும், மற்றொரு கும்பல் போலீஸ் தடியடி பொறுக்கமுடியாமல் குளத்தில் இறங்க முற்பட்டதும் இடையில் மக்கள் சிக்கி மூச்சுத் திணறினர்.

சிறிது நேரத்தில் ஜெயலலிதா அங்கு இருந்து புறப்பட்டு பெண்கள் கல்லூரி ஹாஸ்டலுக்கு ரெஸ்ட் எடுக்கச் சென்றதும், குளத்தில் இருந்து ஒட்டுமொத்த மக்களும் மேற்குக் கரையிலும், வடகரையிலும் கரையேறிப் போக முற்பட்டனர். போலீஸார் மீண்டும் ஒரு முறை தடியடிப் பிரயோகம் நடத்தினர்!

இப்படியாகப் பல தடவை குறுகிய ஏரியாவுக்​குள்ளே போலீஸ் தாக்குதல் நடத்தியிருக்கிறது. எல்லாம் முடிந்து கூட்டம் வடியத் தொடங்கியபோது, வடகரையில் பாங்கூர் தர்மசாலா அருகில் கிட்டத்தட்ட 200 அடி இடைவெளியில் நூற்றுக்​கணக்கானவர் விழுந்து கிடந்தனர். காயம்​பட்டுப் பலர் துடித்துக்கொண்டு இருந்தனர். இவர்களைத் தவிர, குளத்தின் மற்ற கரைகளில் நெரிசலில் சிக்கிக் காயம்பட்டவர்கள் பலர். இவர்கள் அனைவரையும் தர்மசாலா வாசலருகே தூக்கி வந்து தரையில் வரிசையாகப் படுக்க வைத்திருந்தனர்.

இத்தனை விபரீதம் நடந்து முடிந்ததும், போலீஸ் கொஞ்ச நேரம் ஸ்தம்பித்துப் போனது. உடனடியாக ஆம்புலன்ஸ், போலீஸ் கன்ட்ரோல், ஆஸ்பத்திரி ஆகியவற்றுக்கு எல்லாம் மின்னல் வேகத்தில் தகவல் சொல்லி உஷார்படுத்தியது ஹாம் (பிகிவி) ரேடியோ சங்கத்தினர்தான்!
 
எல்லாவற்றிலும் கொடுமையான ஒரு விஷயம்... குளத்தின் வடகரையில் இருமுனைகளிலும் நின்றிருந்த போலீஸார், நிலைமை தங்கள் கைமீறிப் போவதைப் பார்த்து பயந்து போய்விட்டனர். 

எப்படி மக்களைக் கட்டுக்குள் கொண்டுவருவது என்று புரியாமல், தங்கள் கைகளில் இருந்த வயர்லெஸ் மூலம் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டனர். ''முதல்வர் பத்திரமாகப் போகட்டும்... அப்புறம் பார்க்கலாம்!'' என்றே எல்லா முனைகளில் இருந்தும் பதில் வந்தது. அதோடு... கீழ்மட்ட போலீஸாரிடம் இருந்து வந்த வயர்லெஸ் அழைப்புகளைச் சட்டை செய்யாமல், முதல்வரையும் தங்கள் குடும்பத்தினரையும் பத்திரமாக காரில் அனுப்புவதில்தான் உயர் அதிகாரிகள் சிலர் கண்ணும் கருத்துமாய் இருந்து இருக்கிறார்கள்!

கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த பொதுமக்களிடம் அகப்பட்டத்தைப் பறிக்கவே ஒரு கூட்டமும், சில்மிஷம் செய்ய வந்திருந்த ஒரு கூட்டமும் போலீஸார் முன்னிலையிலேயே தங்கள் பணியை அரங்கேற்றியதுதான் அனைத்திலும் சோகமானது!

'தர்மசாலாவில் உணவுப் பொட்டலங்களை விஸ்வ ஹிந்து பரிஷத் விநியோகித்ததைப் பார்த்ததாக’ உள்ளூர்க்காரர்கள் சிலரைக் கட்டாயப்படுத்தி எழுதி வாங்கி இருக்கிறார்கள். அதனால்தான் பதற்றம் உண்டானது என்று காட்டப் பார்க்​கிறார்கள். அப்படி எழுதிக் கொடுத்தவர்கள் என்னிடம் வந்து முறையிட்டார்கள். உடனே, நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரித்து, அவர்கள் எழுதிக் கொடுத்ததை வாபஸ் பெறச் செய்தேன்!'' என்கிறார் சாமிநாதன்.

உண்மையில் மகாமகத்தை முன்னிட்டு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மருத்துவ முகாம், இலவச உணவு என்று சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டதை, கட்சி வித்தியாசம் இன்றி அரசியல் பிரமுகர்கள் பாராட்டி இருக்கிறார்கள். விழாவுக்கு வந்திருந்த மக்களும் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசு தரப்பில், இவர்கள் மீதுதான் ஒட்டுமொத்தமாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.

********
விருந்து நடந்தது..!

முதல்வரும் சசிகலாவும் குளத்துக்கு வந்தவுடனே - அங்கு அவருக்காக ஏற்பாடாகி இருந்த பாத்ரூமைப் பார்த்த முதல்வர் முகம் சுளித்திருக்கிறார். அந்த பாத்ரூமுக்குள் போய் குளிக்கலாமே என்று முதல்வரை சசிகலா அழைத்திருக்கிறார். ஆனால், முதல்வர் மறுத்துவிட்டு, குளத்தின் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து குளிக்க முடிவு செய்தார்.

முதல்வரின் இந்தத் திடீர் முடிவு, ''அடடா, இத்தனை ஏற்பாடுகளைச் செய்தும் வேஸ்ட்டா போச்சே!'' என்று அமைச்சர் ஒருவர் உட்பட ஆளும் கட்சிப் பிரமுகர்கள் கவலைப்பட்டனர். அவர்களுக்கு அருகில் இருந்து ஓர் அதிகாரி இப்படிச் சொன்னாராம்... ''மக்களோடு மக்களாக நின்று முதல்வர் குளிக்கும் வரையில் சிறு தடுப்பு அமைத்து ஏற்பாடு பண்ணி இருக்கலாம். அதைச் செய்யாமல், தனி பாத்ரூமே கட்டியது முதல்வருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது.''

முதல்வர் தனது அமைச்சரவை சகாக்களை ஒவ்வொருவராக அழைத்து, புனித நீரை அவர்கள் மீது தெளித்து வாழ்த்தினாராம். பிறகு, தொகுதி எம்.எல்.ஏ-வான ராமநாதன், தொகுதி எம்.பி-யான மணிசங்கர ஐயர் இருவருக்கும்கூடப் புனித நீரைத் தெளித்து வாழ்த்தியபோது மெய்சிலிர்த்துவிட்டார்களாம்.

முதல்வர் நீராடிய பிறகு முன்பே ஏற்பாடு செய்தவாறு பெண்கள் கல்லூரி ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டார். அங்கே, தஞ்சாவூர் பாணியில் மாபெரும் விருந்து காத்திருந்தது. முதல்வருக்கு ராசியான எண் 9. அதன் இரண்டு மடங்காக 18 வகை காய்கறிகளுடன் சாப்பாடு.  அமைச்சர்கள் உட்பட 300 பிரமுகர்கள் அந்த விருந்தில் கலந்துகொண்டார்கள். மகாமகக் குளத்தருகே நடந்து முடிந்த அந்தத் துயரச் சம்பவம் குறித்து அப்போது முதல்வரிடம் சொல்லத் தயங்கிய சில அதிகாரிகள் மட்டும் விருந்தில் கலந்துகொள்ளவில்லை!

அந்தச் சம்பவம் பற்றி சென்னை சென்ற பிறகுதான் முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ''இந்த விஷயத்தைக் கும்பகோணத்திலேயே தனக்கு ஏன் தெரிவிக்கவில்லை?'' என்று அதிகாரிகளிடம் முதல்வர் கோபப்பட்டாராம்.

_ நமது நிருபர்கள்

இது நம்ம 'நொச்சு பார்ட்டி' மாயவரத்தான் எழுதிய நேரடி வர்ணனை

சென்ற சனிக்கிழமை வெளியான ஜூ.வி.யில் ‘பழசு என்றும் புதுசு’ பகுதியில் இடம் பெற்றிருந்த ‘மகாமகம்’ கட்டுரை எனது நினைவலைகளை கொஞ்சம் தட்டிச் சென்று விட்டது.

1992-ம் ஆண்டு மகாமகத்தை யாராலும் மறக்க இயலுமா? ’உடன்பிறவாச் சகோதரிகள்’ ஜெ & சசிகலா கலந்து கொண்டு சிறப்பித்த மகாமகம் அது! அவர்கள் கிளம்பிச் சென்றபின் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்க எக்கச்சக்க பேர் இறந்து போனது நினைவிருக்கலாம்.

இப்போதெல்லாம் மகாமகம் என்றாலே அதுதான் எல்லாருக்கும் நியாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.

விகடனில் நிருபராக இருந்த காலம் அது. நான், விகேஷ், அறிவழகன் மற்றும் புகைப்படக் கலைஞர் கே. ராஜசேகர் ஆகிய நான்கு பேரும் விகடன் சார்பாக மகாமகத்தில் கலந்து கொள்ள முதல் நாளே கும்பகோணம் சென்று விட்டோம். 

"புகைப்படக்காரர் ஒருவர், ஆனந்த விகடன் நிருபர் ஒருவர் என இரண்டு பேருக்குதான் பாஸ் தர முடியும்.." என்று அரசு பி.ஆர்.ஓ. கூறிவிட்டார். எனவே நண்பர்கள் ராஜசேகர் மற்றும் விகேஷ் இருவருக்கும் பாஸ் வாங்கிவிட்டு கிளம்பி வந்தோம்.

சிறிது நேரம் கழித்து நான் மட்டும் தனியே மீண்டு சென்று பாஸ் கேட்டேன். “அதான் அப்பவே சொல்லியாச்சே” என்றார் அவர். “சார் நீங்க பாஸ் தந்தது ஆனந்த விகடனுக்கு. நான் ஜூ.வி. சார்” என்றேன். “ரெண்டும் ஒண்ணு இல்லையா?” என்று கேட்டார் அந்த அதிகாரி. “என்ன சார் கேட்கிறீங்க? ரெண்டும் வேற வேற நிர்வாகம் சார்” என்று அடித்துவிட்டேன். மறு பேச்சு இல்லாமல் பாஸ் வழங்கப்பட்டது. அந்த அளவிற்கு பிரஸ்ஸுக்கும், அரசுக்கும் தொடர்பாளர்களாக பி.ஆர்.ஓ.க்கள் இருந்த காலகட்டம் அது.

மறுநாள் அதிகாலையிலேயே வரச் சொல்லி அரசு செலவில் ஏதோ ஒரு நல்ல ஹோட்டலில் காலை சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து ஒரு வேனில் மகாமகக் குளக்கரைக்கு கூப்பிட்டுச் சென்றார்கள்.

பிரஸ்ஸுக்கு என்று தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 30 பேருக்கு மேல் அங்கே குழுமியிருந்தோம். குளத்திலும், குளக்கரையிலும் கும்பலோ கும்பல்! வால்டர் தேவாரம் கையில் பைனாகுலர் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் ‘லுக்’ விட்டுக் கொண்டிருந்தார்.

முதல்வர் ஹெலிகாப்டரில் வந்து குளத்துக்கு மேலே வட்டமடித்த போதே மக்கள் ஆரவாரம் களை கட்டியது.  வேத கோஷங்கள் முழங்க அவரும் சசிகலாவும் குளத்தில் இறங்கி மாறி மாறி தண்ணீர் எடுத்துக் குளித்துக் கொண்டிருந்த  போது கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் ஆர்ப்பரித்தது. அந்நேரத்தில் வானத்தை நோக்கி டுமீல் என்று சுட்டு ஒரு மினி ராக்கெட்டை விட்டார் வால்டர். மக்கள் என்னவோ ஏதோ என்று பயந்து போனார்கள். முதல்வர் குளித்துக் கொண்டிருந்த இடத்துக்கும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சாமியார் (வட மாநிலத்தில் ஏதோ ஒரு சங்கராச்சாரியார் என்று நினைவு) மற்றும் அவர் சிஷ்யர்கள் மீது போலீஸ் திடீர் தடியடி நடத்தியது. அடி பொறுக்க முடியாமல் அவர் குளக்கரைக்கு ஓடி வந்தார்.
பிரஸ் கேலரியில் எல்லோர் கவனமும் முதல்வர் & கோ பக்கம் இருக்கையில் இந்தப் பக்கத்தில் நடந்த கூத்தை கவனித்து விட்ட நான் அங்கிருந்து தாவிக் குதித்துச் சென்று அந்தச் சாமியாரை புகைப்படம் எடுத்து என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருந்தேன். இதை கவனித்து விட்டு வேகமாக எங்களிடம் வந்தார் வால்டர். “எந்த பிரஸ் நீங்க?” என்று கடுகடுத்த முகத்துடன் கேட்டுவிட்டு கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த பாஸைப் பார்த்தார். “ஜூ.வி” என்றேன். முகம் இன்னமும் கறுத்துப் போனது. “ஜூவிக்கு எவன் பாஸ் கொடுத்தான்” என்று முணுமுணுத்து விட்டு மேற்கொண்டு என்னிடம் எதுவும் பேசாமல் அந்த சாமியாரிடம் ”சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க” என்று எச்சரித்து வேறு பக்கம் அழைத்துச் சென்று விட்டார். முதல்வர் குளித்து விட்டு நகர்ந்த அடுத்த விநாடியில் சுற்றியிருந்த போலீஸாரும் எனக்கென்ன என்று கிளம்பிவிட்டார்கள்.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. வரும் போது ராஜமரியாதையுடன் அழைத்து வந்த பிரஸ் மக்களையும் அம்போவென விட்டுவிட்டு உடனடியாக கிளம்புங்கள் என்று துரத்தி விட்டார் வால்டர்! அதுவும் குறிப்பாக என்னையும், கூட இருந்த நண்பர்களையும் “சீக்கிரம், சீக்கிரம்” என்றார். மக்கள் கும்பலில் மாட்டிக் கொண்டோம். கொஞ்சம் தூரம் நடப்பதற்குள் எனக்கும் மூச்சு திணற ஆரம்பித்தது. இன்றைக்கு அவ்வளவு தான் நம்ம கதை என்று லேசாக பயம் எட்டிப் பார்த்தது.

பக்கத்தில் வந்து கொண்டிருந்த நண்பர் விகேஷ் கத்தினார். “காலை தரையிலே வெக்காதீங்க. ரெண்டு பக்கமும் வர ஆளுங்க தோளிலே கையை வெச்சுக்கிட்டு காலை மடக்கிக்கிடுங்க. இல்லைன்னா சாவ வேண்டியது தான்” என்றார். வேறு வழியில்லாமல் அதைச் செய்தேன். இரண்டு பக்கமும் இருந்த முகம் தெரியாத ஆட்கள் கண்டபடி திட்ட ஆரம்பித்தார்கள். 

கையைக் காலை அசைக்கக்கூட வழியில்லை. காலைக் கீழே வைத்து தப்பித்தவறி தடுக்கி விட்டால் அத்தோடு கதை முடிந்து விடும். மகாமகக் கும்பல் அத்தனையும் நம் மீது நடந்து போயிருப்பார்கள். வழியிலேயே ஓரிருவர் அப்படி கீழே விழுந்து பரிதாபக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.அவர்களை கீழே குனிந்து பார்க்கக்கூட முடியாமல் ஒட்டு மொத்த கும்பலும் அவர்கள் மீதேறி போய்க்கொண்டிருந்தது. சொல்லப் போனால் யாருமே தானாக நடக்கவில்லை. பின்னால் இருந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டருக்கும் மேலாக அப்படித்தான் வர வேண்டியிருந்தது. ஒரு குட்டிச் சுவர் பாதியில் வந்தது. அப்படியே அதில் ஏறி அந்தப் பக்கம் குதித்து மூச்சு விட ஆரம்பித்தேன். அதே போல விகேஷும் வந்தார். சுமார் அரை மணி நேரத்துக்கு அப்படியே அங்கேயே மண்ணிலேயே உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். அறிவழகனும், ராஜசேகரும் எந்தப் பக்கம் போனார்கள் என்றே தெரியவில்லை. அப்படியே தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்ல ஆரம்பித்தோம். வீதியெங்கும் செருப்புகள், துணிமணிகள், அது இதுவென போர்க்களம்! ஆம்புலனஸ் சப்தங்கள் ஊரெங்கிலும் அலறிக் கொண்டிருந்தது.


ஏதோ பிரச்னை என்பதும் புரிந்தது. நேரடியாக அரசு மருத்துவமனைக்கு ஓடினோம். அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவரும் அறிந்தது!

அன்றைய தேதியில் நான் உயிர் பிழைக்க தோள் கொடுத்த முகமறியா அந்த இருவருக்கு(ம்) நன்றி!

நன்றிகள் : ஜூனியர்விகடன், மாயவரத்தான், தமிழோவியம்.காம்

25 comments:

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

நான் அப்பொது 7ம்வகுப்பு படித்துக்கொண்டியிருந்தேன்.எங்கள் ஊரில் அவ்வளவு கும்பலை அப்பொழுது தான் முதன் முறையாக பார்த்தேன்...அந்த துயர சம்பவம் நடைபெறும் நேரத்தில் எங்கள் குடும்பமும் மற்றும் வெளிவூரிலிருந்து வந்திருந்த உறவினர்களும் குளத்தில் நின்றுக்கொண்டிருந்தோம்.ஜெயலலிதா ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமடிக்கும்போதே குளத்துக்குள் கொஞ்சம் கூட்டம் நெருக்க ஆரம்பித்தவுடன்,எங்க அப்பா மற்றும் மாமாவும் எங்கள் அனைவரையும் நடுகுளத்திற்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.அது வரை ஜெயலலிதா வந்து இறங்கும் இடத்திற்கு கொஞ்ச தொலைவில் தான் இருந்தோம்.அவர்கள் அழைத்து செல்லும் போது,எனக்கு அந்த இடத்தை விட்டி செல்ல மனமில்லை,ஆனால் எங்க அப்பா வலுகட்டாயமாக என் கையை பிடித்து அழைத்துச் சென்றார்.(அவர் சொன்ன காரணம் - முதல்வர் வந்தால் கூட்டம் அவர்களை பார்க்க முண்டியடிச்சி வரும்,கூட்ட நெரிசல் ஏற்படும்,அது நமக்கு பாதுகாப்பில்லைன்னு சொன்னார்).
சம்பவத்தின் பிறகு,ஆள் ஆளுக்கு ஓவ்வொரு திசையாக பிரிந்து தப்பித்தோம்,பிழைத்தோம் வீடு வந்து சேர்ந்தார்கள்.
நான் இன்னமும் மறக்க முடியாத நிகழ்ச்சி அது.எல்லோரும் வீட்டுக்கு வந்து விட்டார்கள்.நான் போகவில்லை ஆம்புலன்ஸ்கள் கதறிய படி போவதை பார்த்தவுடன்,நானும்,என் நண்பரும்(அவனும் கூட்டத்தில் அவங்க குடும்பத்தை தவற விட்டவன்) நேராக அரசு பொது மருத்துவமனைக்கு சென்றுவிட்டோம்.அங்கே கண்ட காட்சிகள்யெல்லாம்.ரொம்ப கொடுமையாக இருந்தது.வீட்டில் என்னை காணாமல் பரபரப்பு சோகம் அப்பிக்கொண்டது.என்னை காணாமல் வீபரீதம் எதுவும் நிகழ்த்துவிட்டதாக கருதி அப்பா மகாமக குளக்கரைக்கும்,மாமா அரசு பொது மருத்துவமனைக்கும் தேட போயிருந்தனர்.எனது மாமா கண்ணில் நான் மருத்துவமனையில் சிக்க,அப்படியே அள்ளிக்கொண்டு வந்தார்.வீட்டுக்குள் நுழைத்தவுடன் எனது அம்மா என்னை கட்டிவிடிச்சி அழுத காட்சி என் மனதில் இன்றும் அகலவில்லை....என்னை மாமா இரண்டு,மூன்று முறை அடித்ததோடு சரி...யாரும் அடிக்கவில்லை...ஆனாலும் எனக்கு நான் செய்த தவறு என்ன என புரித்தது....தனி பதிவே போட்டுவிட்டேன்..மன்னிக்கவும்...

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com>

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

பாலா said...

//இறந்தவர்களின் உடல்களை மருத்துவ சிகிச்சைக்காக //

என்ன எழவுண்ணே இது?

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

மகாமகம் - ஜெ அரசின் மறக்கமுடியாத மெகா அவலம்.

குண்டக்க மண்டக்க said...

சரி என்ன பண்ணலாம்?ஆட்சிய கலைக்க சொல்லி ரோசையாவுக்கு மனு போட்டுடுவோம?இல்லை கருணாநிதியே மோதல்வர் ஆகிட்டு நிலா அபகரிப்பை தொடர்வோமா?

குண்டக்க மண்டக்க said...

சூடா ஒரு ஆரிய திராவிட யுத்தம் ஸ்டார்ட் பண்ணிடுவோம்!!பெரியாரின் பிஞ்ச டவுசர் இருந்தா குடுங்க!

ஸ்ரீகாந்த் said...

எனகென்னமோ நீங்கள் மறக்க வேண்டிய விஷயங்களை தேவை இல்லாமல் கிளறுவது போல் தோன்றுகிறது....ஏன் இந்த வெட்டி வேலை ....உருப்படியாக வேறு நல்ல விஷயங்களை பதிவாக போட வேண்டும் என்பதே என் அவா !!!

monica said...

அம்மா அப்ப இருந்தே ஹெலிகாப்டர் அம்மா தானா ?அடேங்கப்பா.

Jafarullah Ismail said...

அந்த மகாமக அவலம் இனியொருமுறை நடக்காமல் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.

உண்மைத்தமிழன் said...

வெற்றி..

தப்பித்துவிட்டீர்கள்.. நிர்வாகங்களின் அலட்சியம்தான் இந்தப் படுகொலைக்கு மிக முக்கியக் காரணம்.. இது நிச்சயம் படுகொலைதான்..! மக்கள் ஆட்டு மந்தைகளாக இருக்கின்றவரையில் இது போன்ற கொடூரங்கள் நிகழத்தான் செய்யும்..! திரும்பவும் ஜெயலலிதாவை ஆட்சிக்கு அழைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா..?

உண்மைத்தமிழன் said...

ciniikons.. ஒரு தடவை உங்க விளம்பரத்தை போட்டா பத்தாதா..? பழசையெல்லாம் தோண்டியெடுத்து எல்லாத்துலயும் போடணுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[யோகி ஸ்ரீராமானந்த குரு said...

//இறந்தவர்களின் உடல்களை மருத்துவ சிகிச்சைக்காக //

என்ன எழவுண்ணே இது?]]]

ஹி.. ஹி.. டைப்பிங் மிஸ்ட்டேக்கு சாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

மகாமகம் - ஜெ அரசின் மறக்க முடியாத மெகா அவலம்.]]]

ம்.. நிச்சயமாக.. ஆனால் நமது மக்கள்தான் மிக எளிதாக மறந்துவி்ட்டார்களே..?

உண்மைத்தமிழன் said...

[[[குண்டக்க மண்டக்க said...

சரி என்ன பண்ணலாம்? ஆட்சிய கலைக்க சொல்லி ரோசையாவுக்கு மனு போட்டுடுவோம? இல்லை கருணாநிதியே மோதல்வர் ஆகிட்டு நிலா அபகரிப்பை தொடர்வோமா?]]]

நில அபகரிப்பு பெரிதா? உயிர் அபகரிப்பு பெரிதா ஸார்..?

உண்மைத்தமிழன் said...

[[[குண்டக்க மண்டக்க said...

சூடா ஒரு ஆரிய திராவிட யுத்தம் ஸ்டார்ட் பண்ணிடுவோம்!! பெரியாரின் பிஞ்ச டவுசர் இருந்தா குடுங்க!]]]

அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்..? ஆட்சி நிர்வாகத்தின் அலங்கோலத்தின் சாட்சிகள்தான் இந்தப் படுகொலைகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

எனகென்னமோ நீங்கள் மறக்க வேண்டிய விஷயங்களை தேவை இல்லாமல் கிளறுவது போல் தோன்றுகிறது.... ஏன் இந்த வெட்டி வேலை.... உருப்படியாக வேறு நல்ல விஷயங்களை பதிவாக போட வேண்டும் என்பதே என் அவா !!!]]]

தேவையில்லாமல் இல்லை.. வருங்கால சந்ததியினருக்காக பதிவு செய்து வைக்க வேண்டியது நமது கடமைகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[jinglibingli said...

அம்மா அப்ப இருந்தே ஹெலிகாப்டர் அம்மாதானா? அடேங்கப்பா.]]]

பின்ன.. பத்து ஸ்டெப் நடந்தாலே ஆத்தாவுக்கு உடம்பு வலிக்குமாம்.. இதையும் அவங்களே சட்டமன்றத்துல சொன்னாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.ஜபருல்லாஹ் said...

அந்த மகாமக அவலம் இனியொருமுறை நடக்காமல் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.]]]

நானும்தான்..!

ஸ்ரீகாந்த் said...

[[[ஸ்ரீகாந்த் said...

எனகென்னமோ நீங்கள் மறக்க வேண்டிய விஷயங்களை தேவை இல்லாமல் கிளறுவது போல் தோன்றுகிறது.... ஏன் இந்த வெட்டி வேலை.... உருப்படியாக வேறு நல்ல விஷயங்களை பதிவாக போட வேண்டும் என்பதே என் அவா !!!]]]

தேவையில்லாமல் இல்லை.. வருங்கால சந்ததியினருக்காக பதிவு செய்து வைக்க வேண்டியது நமது கடமைகள் ஸார்..!}}}}}

வருங்கால சந்ததிக்கு நாம் அன்பு , மனிதநேயம்,விட்டு கொடுக்கும் தன்மை , போன்ற விஷயங்களை சொல்லி தந்தால் நன்று.....அதை விட்டு இதை போன்ற வன்மம் வளர்க்கும் விஷயங்களை பதிவது மிகவும் பிற்போக்கான எண்ணம் என்பதே என் தாழ்மையான கருத்து

Ganpat said...

ஸ்ரீகாந்த்,
இன்று தமிழகத்தில் பலர் உண்மைத்தமிழன் நிலையில்தான் உள்ளனர்.கருணாநிதியும் வேண்டாம்;ஜெயாவும் வேண்டாம் என்ற ஒரு குழப்ப நிலை.பிரச்சினை என்னவென்றால் இவர்கள் வேண்டும் என சொல்லுவதற்கு யாரும் களத்தில் இல்லை.அப்படியே இருந்தாலும் அவர்கள் தேர்தலில் டெபாசிட் இழக்கின்றனர்.ஜனநாயகத்தின் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டோம்.
இன்னும் சில ஆண்டுகள் பொறுத்துக்கொள்ளுங்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

தேவையில்லாமல் இல்லை.. வருங்கால சந்ததியினருக்காக பதிவு செய்து வைக்க வேண்டியது நமது கடமைகள் ஸார்..!}}}}}

வருங்கால சந்ததிக்கு நாம் அன்பு, மனித நேயம், விட்டு கொடுக்கும் தன்மை, போன்ற விஷயங்களை சொல்லி தந்தால் நன்று. அதை விட்டு இதை போன்ற வன்மம் வளர்க்கும் விஷயங்களை பதிவது மிகவும் பிற்போக்கான எண்ணம் என்பதே என் தாழ்மையான கருத்து.]]]

எது வன்மம் வளர்க்கும் விஷயம்..? பிறகு எதற்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி 5-ம் வகுப்பில் இருந்தே பாடம் எடுக்கிறீர்கள். அதையும் நிறுத்திவிடலாமே..?

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

ஸ்ரீகாந்த், இன்று தமிழகத்தில் பலர் உண்மைத்தமிழன் நிலையில்தான் உள்ளனர். கருணாநிதியும் வேண்டாம்; ஜெயாவும் வேண்டாம் என்ற ஒரு குழப்ப நிலை. பிரச்சினை என்னவென்றால் இவர்கள் வேண்டும் என சொல்லுவதற்கு யாரும் களத்தில் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் தேர்தலில் டெபாசிட் இழக்கின்றனர். ஜனநாயகத்தின் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டோம்.
இன்னும் சில ஆண்டுகள் பொறுத்துக் கொள்ளுங்கள்.]]]

ஆஹா.. அண்ணன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நியூஸோட வந்து அசத்திட்டாரு.. நன்றிகள் அண்ணா..!

மனித புத்திரன் said...

நில அபகரிப்பு பெரிதா? உயிர் அபகரிப்பு பெரிதா ஸார்..?//
.
.
அய்யா அண்ணாமலை பல்கலை மாணவன் உதயகுமார் உயிர் தா கிருட்டிணன் உயிர் தினகரன் ஆபீஸ் மூணு பேர் உயிர் கீழ்வெண்மணி 20+ தலித்துகளின் உயிர் இதெல்லாம் என்ன அய்யா?

kiruba said...

Correct