10-05-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
தமிழகத்தில் ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
பத்திரிகைகள் பக்கங்களைக் கூட்டுவதற்காக கள்ளக்காதல், கொலை செய்திகளை இரண்டு பக்கத்திற்கு எழுதும்போதெல்லாம் கோபமடையும் எனக்கு, இன்றைய செய்தித்தாள்கள் கரும்பாய் இனித்தன.
ப்ளஸ்டூ தேர்வு பற்றிய செய்திகளை பல பத்திரிகைகளும் பல பக்கங்களுக்கு எழுதியிருக்கிறார்கள். நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம்தான் இது..
வருடம் முழுக்கத்தான் தாக்குகிறோம்.. இந்த ஒரு விஷயத்திற்காக ஒரு நாளைக்கு பாராட்டுவோமே.
இனி ப்ளஸ்டூ தேர்வு பற்றிய பத்திரிகைச் செய்திகளிலிருந்து சில உங்களது பார்வைக்கு..
2007-2008 கல்வியாண்டில் நடைபெற்ற ப்ளஸ்டூ பொதுத் தேர்வில் வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே கூடுதலாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மொத்தம் 5 லட்சத்து 87 ஆயிரத்து 994 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.
இவர்களில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 25 பேர் மாணவர்கள்.
3 லட்சத்து எட்டாயிரத்து 969 பேர் மாணவிகள்.
இவர்களில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 84.4.
மாணவர்களில் 81.3 சதவிகிதம் பேரும், மாணவிகளில் 87.3 சதவிகிதம் பேரும் தேறியுள்ளனர்.
கடந்தாண்டு தேர்வில் 81 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் இந்தாண்டு கூடுதலாக 3.4 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களைவிட மாணவிகள் 6 சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
60 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று 3 லட்சத்து 60 ஆயிரத்து 722 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்தாண்டுகளில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் பெரும்பாலும் 80 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளன. அதிகபட்சமாக 2002-ம் ஆண்டு 84.55 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
2004-ல் 76.3 சதவிகிதம், 2005-ல் 76.8 சதவிகிதம், 2006 & 2007-ல் முறையே 81 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்த ஆண்டுதான் தேர்ச்சி விகிதம் மீண்டும் 84 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது.
தேர்வு எழுதுவதற்கு முன்னதாக வினாத்தாளை மாணவர்கள் நன்றாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தனியாக 10 நிமிடங்கள் தரப்பட்டன. தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளதற்கு இதுதான் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளாக மாணவிகளே ப்ளஸ்டூ தேர்வில் அதிக தேர்ச்சியடைந்து வருகின்றனர்.
2004-ல் மாணவர்கள்-73% மாணவிகள்-79%
2005-ல் மாணவர்கள்-74% மாணவிகள்-79%
2006-ல் மாணவர்கள்-72% மாணவிகள்-77%
2007-ல் மாணவர்கள்-77% மாணவிகள்-84%
2008-ல் மாணவர்கள்-81% மாணவிகள்-87%
தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்து, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவித் தொகைகள், மேற்படிப்புச் செலவுகள் என அனைத்தையும் அரசே ஏற்கிறது.
அந்த வகையில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்து இந்தாண்டு தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை ஐந்து மாணவர்கள் பிடித்துள்ளனர்.
திருச்செங்கோடு வித்யாவிகாஸ் பள்ளி மாணவி தாரிணி 1182 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
செங்கல்பட்டு செயிண்ட் ஜோஸப் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.ராஜேஸ்குமார் 1182 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார்.
ஈரோடு, கே.கே.என்.ஜி. மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.ரம்யா 1181 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.
திருச்செங்கோடு வித்யாவிகாஸ் பள்ளி மாணவர் தளபதி குமார்விக்ரம் 1181 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மகளிர் பள்ளி மாணவி தீபா 1180 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.
ராசிபுரம் வித்யாவிகாஸ் பள்ளி மாணவி நிஷாந்தினி தமிழ் பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் தமிழ் மொழியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
1179 மதிப்பெண்கள் பெற்ற ராசிபுரம் மாணவர் மனோஜ்குமார் உயிரியல் பாடத்தில் 200 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் அப்பாடத்தில் முதல் மாணவராக வந்துள்ளார்.
வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 200 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடத்தையும் இவரே பெற்றுள்ளார்.
கணிதத்தில் சென்டம் இரண்டு மடங்காக அதிகரிப்பு
கடந்தாண்டைவிட, இந்தாண்டு எல்லாப் பாடங்களிலும் அதிகமான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
இயற்பியல் 2007-ல் 217, 2008-ல் 282.
வேதியியல் 2007-ல் 145, 2008-ல் 306
உயிரியல் 2007-ல் 129, 2008-ல் 153
தாவரவியல் 2007-ல் 12, 2008-ல் 19
விலங்கியல் 2007-ல் 1, 2008-ல் 1
கணிதம் 2007-ல் 1568, 2008-3852
கம்ப்யூட்டர் சயின்ஸ் 2007-ல் 0, 2008-ல் 60
வணிகவியல் 2007-ல் 288, 2008-ல் 148
கணக்குப் பதிவியல் 2007-ல் 133, 2008-ல் 739
வணிக்கணிதம் 2007-ல் 156, 2008-ல் 291.
ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரின் மகளான ரம்யா கலைமகள் கல்வி நிலைய மாணவி.
இவர் ப்ளஸ்டூ தேர்வில் 1181 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் ஏற்கெனவே 2006-07ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருந்தார்.
முதன்மைப் பாடமாக தமிழ் இல்லாததால் கிரீடம் பறிபோனது
தமிழ் அல்லாத பிற மொழிப் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து அதில் முதலிடம் பிடித்த மாணவி ஆஷாகணேசன். இவர் மொத்தமாக 1191 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழை முதன்மைப் பாடமாக எடுக்காமல் பிரெஞ்ச் பாடத்தை எடுத்திருந்ததால் அரசின் சலுகைகள் இவருக்குக் கிடைக்கவில்லை. "IFS படித்து வெளிநாட்டிற்குப் போய் நம் நாட்டின் பெருமையை உயர்த்துவதே தனது லட்சியம்.." என்று இந்தப் பெண் பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதேபோல் சமஸ்கிருதத்தை முதன்மைப் பாடமாக எடுத்திருந்த சென்னை ஆதம்பாக்கம் டி.ஏ.வி.பள்ளி மாணவர் முரளிகிருஷ்ணன் என்னும் மாணவர் 1188 மதிப்பெண்களும், ஹரீஸ் ராம் என்ற சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி.மேல்நிலைப்பள்ளி மாணவர் 1187 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
கண்பார்வையற்ற மாணவரின் சாதனை
உடுமலையைச் சேர்ந்த கண் பார்வையற்ற ஆனந்தகுமார் என்ற மாணவர், கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்தவர்.
சாதாரணமாக பள்ளியில் சக மாணவர்களோடு அமர்ந்து படித்து வந்த இவர் இந்த ப்ளஸ்டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்வு பெற்றுள்ளார்.
கண் பார்வையற்ற மாணவர்களுக்காகத் தயாரிக்கப்படும் ப்ளஸ் டூ வகுப்பு பாடங்களை ப்ரெய்லி முறையில் இவர் கற்றுள்ளார். இவரது மதிப்பெண் விவரம் தமிழ் 173, ஆங்கிலம் 172, புள்ளியியல் 197, பொருளாதாரம் 184, கணக்குப் பதிவியல் 200, வணிகவியல் 190.
மாணவர் ஆனந்தகுமார் பத்தாம் வகுப்புத் தேர்விலும் இதே பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றவராம். இவருடைய தந்தை நடராஜ் உடுமலைப்பேட்டையில் விவசாயம் செய்து வருகிறார்.
நிஜமான சாதனைகள்
பொள்ளாச்சியை அடுத்த கொங்கநாட்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளி மாணவர். பண்ணை பொறியியல் மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பவியல் பாடத்தில் 396 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.
இவரது தந்தை திருமூர்த்தி தேங்காய் அறுத்துப் போடும் கூலி வேலை செய்து வருகிறார்.
விவசாயம் சார்ந்த அனைத்துத் தகவல்களும் அடிப்படையாகத் தெரிந்து வைத்திருந்ததால் இந்தப் பாடத்தைப் புரிந்து கொள்வதற்கும், தேர்வு எழுதுவதற்கும் எளிமையாக இருந்ததாகச் சொல்கிறார் சதீஷ்குமார். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இன்ஜீனியராவதே தன் லட்சியம் என்கிறார் இவர்.
வணிகவியலில் முதலிடம்
பஸ் வசதியில்லாத கிராமத்தில் இருந்து மூன்றரை கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று படித்த ரேவதி என்ற மாணவி வணிகவியல் பாடத்தில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்று தனது ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் அவிநாசி அருகே திம்மணையாம்பாளையத்தைச் சேர்ந்தவர். தெக்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பாடப் பிரிவில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல், செய்முறை-1, செய்முறை-2 ஆகிய பாடங்களிலும் சதமடித்துள்ளார். தமிழில் 163, ஆங்கிலத்தில் 128 என மொத்தம் 1,091 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி மகன்
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த அரியலூரைச் சேர்ந்தவர் சீராளன். இவர் ஒரு விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மகன் சந்தோஷ்குமார். சங்கராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ தேர்வில் ரேடியோ மற்றும் டிவி தொழில் பாடப்பிரிவில் 200-க்கு 187 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.
இதே போல் கவுந்தப்பாடி வளையக்காரன்பாளையத்தைச் சேர்ந்த மோகன்குமார் என்ற மாணவர் பால்பண்ணை அறிவியல் பாடத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது அப்பா போத்தநாயக்கர் விவசாயக் கூலித் தொழிலாளி.
சேலம் சமூக நலத்துறை சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி மாணவி சாந்தி, டெக்ஸ்டைல் டிஸைனிங் பாடத்தில் மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இவர் மொத்தமாக 1050 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் விவகாரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் இதே டெக்ஸ்டைல் டிஸைனிங் பாடத்தில் மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள மாணவி சித்ரகலா.
இவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளது. ஆறு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவரது கணவர் மாரடைப்பால் காலமானதால் சேவை இல்லத்தில் தங்கி படித்தராம். “தொடர்ந்து ஆசிரியர் பயிற்சி பெற விரும்புகிறேன்.. பெற்றோர் கூலி வேலை செய்வதால் வேறு மாதிரியான உதவிகள் கிடைத்தால் மட்டுமே தன்னால் மேற்கொண்டு படிக்கவியலும்..” என்கிறார் இவர்.
சாதனை படைத்த மாணவச் செல்வங்களை மனதாரப் பாராட்டுகிறேன்.
இன்னமும் மேற்கொண்டு அவர்களது கல்விப் பாதையில் ஜெயிப்பதற்கு என் அப்பன் முருகனின் அருள் அவர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.
|
Tweet |
10 comments:
புள்ளி விவரங்கள் அருமையாக உள்ளன!
பாராட்டுக்கள்.
ஒரே ஒரு கேள்வி (வாத்தியார் வந்தால் கேள்வி இல்லாமலா?)
நீங்கள் படிக்கும்போது +2 இருந்ததா?
அல்லது 11ம் வகுப்பு மட்டுமா?
வாங்கிய மார்க் எத்தனை?
புள்ளிவிவரம் நல்லாருக்குங்க.
/மாணவர்களில் 81.3 சதவிகிதம் பேரும், மாணவிகளில் 87.3 சதவிகிதம் பேரும் தேறியுள்ளனர்./
மாணவி என்பதற்கு ஆண்பால் மாணவனா அல்லது மாணவரா?
மாணவர் பொதுபால் கிடையாதா?
/கடந்தாண்டு தேர்வில் 81 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் இந்தாண்டு கூடுதலாக 3.4 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்./
இது என்ன கணக்கு? மாணவன்கள் என்றால்
81.3 - 81 = 3.4?
எங்கயோ உதைக்குதே?
- நந்து
புள்ளிவிவரங்கள் விஜய்காந்த் சொல்லறதுக்கு முன்னாடி நீங்க சொல்லிட்டீங்க. கேப்டன் கோவிச்சுக்கபோறாரு, ஜாக்கிரதை
உங்கள் சேவை தொடரட்டும்...
அன்பு நித்யகுமாரன்
//SP.VR. SUBBIAH said...
புள்ளி விவரங்கள் அருமையாக உள்ளன! பாராட்டுக்கள். ஒரே ஒரு கேள்வி (வாத்தியார் வந்தால் கேள்வி இல்லாமலா?) நீங்கள் படிக்கும்போது +2 இருந்ததா? அல்லது 11ம் வகுப்பு மட்டுமா? வாங்கிய மார்க் எத்தனை?//
வாத்தியாரே..
நான் உங்களுடைய மாணவன் என்பதனை சில சமயங்களில் நீங்கள் சுத்தமாக மறந்து போய்விடுகிறீர்கள்.. எனக்குச் சின்ன வயதுதான் வாத்தியாரே.. 37. என் அண்ணன்தான் பியூஸி லாஸ்ட் பேட்ச். அது மட்டும் நல்லாத் தெரியும்.. எனக்கும் எங்க அண்ணனுக்கும் 15 வயசு வித்தியாசம்.. அப்போ கணக்குப் போட்டுப் பாத்துக்குங்க. நான் பத்தாம் வகுப்புதான் வாத்தியாரே.. 1985-ல் முடித்தேன்.. மார்க் கொஞ்சம்தான்.. 384 அம்புட்டுத்தான்.. இதோட ஸ்கூல்ல இருந்து வெளில வந்தாச்சு.. அதான் இப்ப இப்படி பிச்சைக்காரனாட்டம் அலையறேன்..
//புள்ளி விவரம் நல்லாருக்குங்க.
/மாணவர்களில் 81.3 சதவிகிதம் பேரும், மாணவிகளில் 87.3 சதவிகிதம் பேரும் தேறியுள்ளனர்./
மாணவி என்பதற்கு ஆண்பால் மாணவனா அல்லது மாணவரா? மாணவர் பொதுபால் கிடையாதா?//
எனக்குத் தெரிந்து மாணவி என்பதற்கு எதிர்பால் மாணவர்தான்.. மாணவர் பொதுபாலா இல்லையா என்பதை படித்த அறிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.
///கடந்தாண்டு தேர்வில் 81 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் இந்தாண்டு கூடுதலாக 3.4 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.//
இது என்ன கணக்கு? மாணவன்கள் என்றால் 81.3 - 81 = 3.4? எங்கயோ உதைக்குதே? - நந்து///
தவறுதான்.. டைப்பிங் மிஸ்டேக்கு.. 'மாணவ, மாணவியர்' என்று இருந்திருக்க வேண்டும். 'மாணவர்கள்' என்று வந்துவிட்டது. மாற்றி விடுகிறேன்..
தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்..
//சின்ன அம்மிணி said...
புள்ளிவிவரங்கள் விஜய்காந்த் சொல்லறதுக்கு முன்னாடி நீங்க சொல்லிட்டீங்க. கேப்டன் கோவிச்சுக்க போறாரு, ஜாக்கிரதை.//
நல்லது சின்னஅம்மிணி..
விஜி அண்ணன் ஜெயிச்ச கதையையெல்லாம் சத்தியமா சொல்ல மாட்டாரு. தோக்குற கதையைத்தான் சொல்லணும்.. அப்பத்தான் ஆளுங்கட்சி மேல பழி போட முடியும்.. அதுதான் எதிர்க்கட்சிகளோட விதி.. என்ன நான் சொல்றது..?
ஸோ.. நான் தப்பிச்சேன்..
//நித்யகுமாரன் said...
உங்கள் சேவை தொடரட்டும்... அன்பு நித்யகுமாரன்.//
நன்றி நித்யா.. மறுபடியும் வூடு கட்டி அடிக்க வந்துவிட்டதாக கேள்விப்பட்டேன்.. நல்ல விஷயமா எழுதுங்க..
அருமையான பதிவு. சுப்பையா அண்ணாச்சியே பாராட்டியபிறகு நாங்கள் என்ன சொல்ல?
வாழ்க! வளர்க!
See who owns freedownloadscenter.com or any other website:
http://whois.domaintasks.com/freedownloadscenter.com
Post a Comment