Showing posts with label தினமணி. Show all posts
Showing posts with label தினமணி. Show all posts

தயாநிதி மாறன் இப்போது செய்ய வேண்டியவைகள்..!

04-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 2-ம் தேதியன்று 'தினமணி' மற்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகள் வெளியிட்ட தயாநிதியின் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஊழல் பற்றிய செய்திக்கு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணி புரியும் மீனலோசனி என்ற உயரதிகாரி ஒருவர் மறுப்பு அறிக்கை வெளியிட்டார்..!

தயாநிதி மாறனின் வீட்டில் ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பு இருந்தது என்றும், அந்த இணைப்பின் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உச்சக்கட்ட அளவை விடவும் குறைவாகத்தான் தயாநிதி மாறன் பேசியிருப்பதாகச் சான்றிதழ் வழங்கியிருந்தார்.

இச்செய்தி வெளியான பின்பு 2-ம் தேதி காலையில் இருந்தே தயாநிதியை விரட்டிப் பிடிக்க முயற்சி செய்த டெல்லிவாலா டிவிக்கள் அவர் கையில் சிக்காததால் "தயாநிதி தலைமறைவு" என்றெல்லாம் நியூஸ் போட ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் அன்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது 'தினமணி'யில் வந்த செய்தி முற்றிலும் தவறு என்று மறுத்தார் தயாநிதி.

“என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் வீண் பழி சுமத்துவதற்காக பொய்யான குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தி இருக்கிறார்கள். 2008-ம் ஆண்டு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி பதவியை நான் ராஜினாமா செய்த பிறகு, அப்போது விசாரணை நடத்தி இருக்க முடியும். அந்த சமயத்தில் நான் அரசியலில் தீண்டத்தகாதவனாக இருந்தேன். நான் மந்திரி பதவியில் இல்லாத அந்த சமயத்தில், யாரும் என்னுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை.

யாருக்கும் நான் ஒரு போதும் எந்த உதவியும் செய்தது கிடையாது, எந்த சலுகையும் பெற்றது கிடையாது. அரசியல் வட்டாரத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டு இருந்தேன். நான் ஏதாவது தவறு செய்து இருப்பதாக கருதினால் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்.

எனது குடும்ப தொழில் சம்பந்தமாக எனது சென்னை இல்லத்துக்கு 300-க்கும் அதிகமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது ஆகும். இது தொடர்பாக எழுப்பும் கேள்விகள் மூலம் எனது நேர்மையை மட்டு-ன்றி எனது குடும்பம் மற்றும் எனது கட்சியின் நேர்மையையும் பற்றி சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

எனது இல்லத்துக்கு ஒரேயொரு தொலைபேசி இணைப்புதான் இருந்தது. எனக்குள்ள குறிப்பிட்ட தொகையை காட்டிலும் குறைவான தொகைக்குத்தான் நான் பேசினேன். இதை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து எனக்கு வந்துள்ள கடிதம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எனது போட் கிளப் இல்லத்தில் எத்தனை தொலைபேசி இணைப்புகள் உள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளருக்கு நான் கடிதம் எழுதினேன். மந்திரி என்ற முறையில் எனது இல்லத்துக்கு ஒரேயொரு தொலைபேசி இணைப்புதான் (எண் 24375100) வழங்கப்பட்டு இருந்தது.

நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் எந்த தண்டனையையும் ஏற்க தயாராக இருக்கிறேன். யாருடைய தயவையும் நான் எதிர்பார்க்கவில்லை. என் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன். நான் ஒரு அப்பாவி. என்னையும் எனது நேர்மையையும் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையும் எனக்கு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.

இந்த விளக்கத்தை அளித்துவிட்டு கூடவே 'தினமணி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பியிருக்கிறார் தயாநிதி மாறன்..!

ஏற்கெனவே 'ஏர்செல்' கம்பெனி சன் டி.டி.ஹெ.ச்சில் முதலீடு செய்தது சம்பந்தமாக செய்தியை வெளியிட்ட தெஹல்கா மீது மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். (கவனிக்க : வெறும் நோட்டீஸ்தான். கோர்ட்டில் வழக்குத் தொடரவில்லை)

தயாநிதி அளித்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கும்விதமாக இன்றைய 'தினமணி' மற்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். அது இங்கே பாலோ அப்புக்காக..!

"தூங்குகிறது சிபிஐ அறிக்கை'  (தினமணி, ஜூன் 2, 2011) என்ற செய்தி முழுக்க முழுக்க தயாநிதி மாறனின் வீட்டு தொலைபேசி இணைப்பகம் குறித்த சிபிஐ-யின் ரகசிய அறிக்கையை பிரதானமாகக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில் முக்கியமானது சுமார் ரூ. 440 கோடி இழப்பானது திருட்டுத்தனமாக பயன்படுத்தப்பட்ட 323 ஐ.எஸ்.டி.என். இணைப்புகளால் ஏற்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் மீது தயாநிதி மாறன் வெளிப்படுத்தியுள்ள கோபம் நகைப்புக்குரிய கேலிக்கூத்தாகும்.

தயாநிதி மாறனின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சி.பி.ஐ. அளித்த அறிக்கையை யாருமே மறுக்க முடியாது. ஏனென்றால் சி.பி.ஐ.-யும் அரசு அமைப்புதான். இரண்டாவதாக இந்த விசாரணையை சி.பி.ஐ. தானாகவே மேற்கொண்டு நடத்தியுள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தயாநிதி மாறனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று இதைக் கூற முடியாது.

மூன்றாவதாக, மத்திய அரசின் சி.பி.ஐ. அறிக்கைக்கு பதில் அளிக்காமல், அறிக்கையை பட்டவர்த்தனமாக வெளியிட்ட 'தினமணி' மீது குற்றம் காண்கிறார் தயாநிதி மாறன்.

தான் குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி பொதுமேலாளர் வி. மீனலோசனி 6-4-2009-ல் அளித்த கடிதத்தைக் காட்டுகிறார் தயாநிதி மாறன்.

இந்தக் கடிதம் தயாநிதி மாறன் எழுதி அனுப்பி பெறப்பட்ட பதில் கடிதமாகும். பி.எஸ்.என்.எல். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்பு மட்டும் தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது; அந்த தொலைபேசி எண் 24371500 ஐ.எஸ்.டி.என்.-பி.ஆர்.ஏ. என்றும், வேறு எந்த பி.எஸ்.என்.எல். இணைப்பும் இதுவரை அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 4,50,000 அலகுகள்வரை மூன்று ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கே அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அவர் பயன்படுத்திய கோடிக்கணக்கான அழைப்புகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவானது. இந்த கடிதத்தின்படி ஒரு எம்.பி.-க்கு அனுமதிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளின் அளவுக்குக் குறைவாக அவர் பயன்படுத்தியுள்ளார் என்பதே அது. மீனலோசனியின் கடிதத்தின் அடிப்படையில் 'தினமணி'யில் குறிப்பிட்டபடி அவரது வீட்டில் நிறுவப்பட்ட 323 பி.எஸ்.என்.எல். இணைப்புகளும் தவறு என்பதாகும். அது தவறா, சரியா என்பதை இப்போது பார்க்கலாம்.

சி.பி.ஐ. அறிக்கையின்படி குறிப்பிட்ட 323 பி.எஸ்.என்.எல்., ஐ.எஸ்.டி.என். இணைப்புகளும் தயாநிதி மாறனின் போட்கிளப் வீட்டில் நிறுவப்பட்டது. ஆனால் மீனலோசனியின் கடிதத்தில் ஒரே ஒரு இணைப்பு அதாவது 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. வேறெந்த இணைப்பும் வழங்கப்படவில்லை என அவர் கூறுவது உண்மையல்ல. இதைக் காட்டி தப்பிக்க நினைக்கும் தயாநிதி மாறனின் திட்டமும் இதனால் தகர்ந்துவிட்டது. மீனலோசனியின் கடிதமும் தவறானது.

சென்னை தொலைபேசி டைரக்டரியில் விவரம் அறிய அதன் இணையதளத்திற்குச் சென்று தயாநிதி மாறன் எம்.பி. என்று டைப் செய்தாலே உங்களுக்கு பின்வரும் விவரங்கள் கிடைக்கும். தொலைபேசி எண் 24371515, தயாநிதி மாறன் எம்.பி., 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028 என்ற முகவரி கிடைக்கும். தொலைபேசி டைரக்டரியில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் 24371515 என்றிருப்பதைக் காணலாம்.

ஆனால் மீனலோசனி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது 24371500 என்ற தொலைபேசி எண்ணைப் பற்றிய விவரம்தான். ஆனால் அவர் 24371515 என்ற மாறன் வீட்டு தொலைபேசி எண்ணைப் பற்றி குறிப்பிடவில்லை.

இதே இணைய பக்கத்தில் சி.ஜி.எம். சென்னை டெலிபோன்ஸ் என்ற எண்ணுடன் தயாநிதி மாறனின் போட் கிளப் முகவரியைப் பதிவு செய்தால் உங்களுக்கு தொலைபேசி எண் 24371500, சி.ஜி.எம். சென்னை டெலிபோன்ஸ், வீட்டு முகவரி 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணமலைபுரம், சென்னை - 600 028 என்ற விவரம் இருக்கும். இதிலிருந்தே ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்புதான் மாறன் வீட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல் என்று தெரிய வருகிறது.

24371500 என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறனின் வீட்டில் இல்லை, அது சி.ஜி.எம். சென்னை டெலிபோன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இதன்படி தயாநிதி மாறனின் வீட்டில் இன்று வரை செயல்படும் தொலைபேசி எண் 24371515. இதுவே மீனலோசனி கடிதத்தில் குறிப்பிடும் 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டுமே தயாநிதி மாறனின் வீட்டில் செயல்படுவதாகக் குறிப்பிடும் கடிதத் தகவல் தவறு என்பதை நிரூபிக்க போதுமானது.

24371515 என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளை சி.பி.ஐ. பட்டியலிட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் சி.பி.ஐ. மேற்கொண்ட ஆய்வில் 48,72,027 அலகு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24371515 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை அலகுகள் கொண்ட தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்தே எந்த அளவுக்கு மல்டி-மீடியா தகவல் பரிமாற்றம் இந்த இணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது  என்பதை உணரலாம்.

48 மணி நேரத்திற்குள் தயாநிதி மாறனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக கடிதம் தயாரித்த மீனலோசனி, தொலைபேசி எண் 24371515 என்ற எண்ணை முற்றிலுமாக மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த எண்ணை சி.பி.ஐ. ஆய்வுக்குள்படுத்தியுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டு அதை விட்டிருக்கலாம்.

மேலும் இந்த எண் புழக்கத்தில் உள்ளது என்ற விவரம் சென்னை டெலிபோன்ஸ் இணையத்தளத்தில் இன்றளவும் உள்ளது. இருப்பினும் இது விடுபட்டு போனது எப்படி..? ஏனெனில் இந்த எண் குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதாலா..? மேலும் பார்க்கலாம்.

"2437' என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணில் தொடங்கும் தொலைபேசி இணைப்பகத்தை சி.பி.ஐ. முதலில் கண்டறிந்து, 323 லைன்களைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகமே தயாநிதி மாறனின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தது.

சென்னை டெலிபோன்ஸில் உள்ள மொத்த 323 இணைப்புகளும் மொத்தம் 2437 என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவேளை மீனலோசனியின் வாதம் சரி என்று ஏற்றுக் கொண்டால், சென்னை வட்டார தொலைபேசி எண்கள் அனைத்துமே 2437 என்ற எண்ணில் தொடங்குவதாக இருக்கும். தயாநிதி மாறனுக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேக, தனிப்பட்ட எண் வழங்கப்பட்டது…? அதற்கான காரணத்தை மீனலோசனிதான் விளக்க வேண்டும்.

அல்லது அவரது கடிதத்தை தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் தயாநிதி மாறன்தான் விளக்கி, தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.

மேலும் மீனலோசனி இப்போது நிர்வாகப் பிரிவு பொதுமேலாளர் அல்ல, ஆனால் அவர் இன்னமும் சென்னை டெலிபோன்ஸில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தயாநிதி மாறனின் ஆலோசனையால் ஈடேறவில்லை. குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வீணாகிப்போனது.

மேலும் சி.பி.ஐ. அறிக்கையில் 2437 எனத் தொடங்குவதில் 23 இணைப்புகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு இலக்கங்கள் பின்வரும் எண்களில் அதாவது 2211 முதல் 2213 வரை (3 இணைப்புகள்); 2222; 2233; 2244 முதல் 2246 வரை (3 லைன்); 2255 முதல் 2257 வரை (3 லைன்); 2266 முதல் 2268 வரை (3 லைன்); 2277 முதல் 2279 வரை (3 லைன்); 2288 முதல் 2290 வரை (3 லைன்); 2290; 2299; 2300; 2301; இதன்படி மொத்தம் 300 தொலைபேசி எண்கள் 2437 என்ற முதல் நான்கு இலக்கங்களில் தொடங்கும். மேலும் இந்த நான்கு இலக்கங்களில் தொடரும் பிற எண்கள் 1500-ல் தொடங்கி 1799-ல் 300 இணைப்புகள் முடியும். இந்த எண்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தவில்லை. காரணம் அவை ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.

ஆனால் அவை எங்கே இருக்கின்றன..? தயாநிதி மாறன் 24371515 என்ற தொலைபேசி எண்ணை மறந்தது எப்படி..? அது தயாநிதி மாறன் எம்.பி. பெயரில்தானே போட்கிளப் வீட்டு முகவரியில் மார்ச் 2007 முதல் உள்ளது.

இந்த இணைப்பு மூலம் 48 லட்சம் அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை அவர் பயன்படுத்தியிருக்க முடியாது. அதை சன் டிவி பயன்படுத்தியிருக்கிறது என சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. இதை மாறன் கவனிக்கவும்.

இனி, தயாநிதி மாறன் தாராளமாக "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் அது அவரது பதவிக்கு சரியான படிப்பினையை அளிக்கும். உண்மையை மறைக்க முற்படாமல் மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது.

நன்றி:  எஸ். குருமூர்த்தி. , தினமணி-04-06-2011

இதற்கிடையில்  அன்றைய தினமே தி.மு.க. தலைமையில் இருந்து ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ளது.

அதில், “நேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக, அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி, சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகாவிட்டால் பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

ஜெயலலிதா இன்றும் அவர் மீது பெங்களூர் நீதிமன்றத்தில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் சொத்துக் குவிப்பு, ஊழல் வழக்குகளின் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், இவர் தன்னுடைய முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டுத்தான் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்தாரா? என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்காக, அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க மாட்டார்.

ஆனால் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்திக்க வேண்டுமா? மக்கள் இந்த விதண்டாவாதத்தை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். தமிழகத்தில் ஒரு பழமையான முதுமொழி உண்டு. அதுதான் ‘தன்னைப் பார்த்து பின்னே பேசு...’ என்பதாகும். ஜெயலலிதா இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கும் முன், தன்னை பற்றியும் தன் மீது உள்ள ஊழல் வழக்குகள் பற்றியும் சிந்திக்காமல் பேட்டியளிப்பது அறிவுடைமையாகாது..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக.. வழக்கம்போல இந்தப் பிரச்சினை தீர்வு வேண்டி கோர்ட்டுக்கு போவதற்கு முன்பாகவே அவதூறு வழக்குகளுக்காக கோர்ட் படியேறும்போல தோன்றுகிறது..!

மீனலோசனி என்ற அந்த ஜெனரல் மேனேஜர் வெளியிட்ட தகவலே பாதி பொய்யாக இருக்கிறதே..! டெலிபோன் டைரக்டரியிலும், இணையத்தளத்திலும் பொய்யான எண்களையா வைத்திருப்பார்கள்...? இப்போதும் பொதுமக்கள் அதைத்தானே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. பின்பு எப்படி இது பொய்யாகும்..?

இந்த ஒரேயொரு நம்பர்தான் தயாநிதி மாறனின் வீட்டில் உள்ளது திரும்பத் திரும்ப மீனலோசனி பொய்யை உரைத்திருக்கிறாரே..? அவரை இப்படி பொய் சொல்ல வைத்திருப்பது யார்? எது..? ஏன்..? எதனால்..?

ஒரே மாதத்தில் 48 லட்சம் யூனிட் பேசியிருக்கிறார்கள் என்றால் இதனை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது. அதுவும் வீட்டில்.. அந்த வீட்டில் இருப்பதே 4 பேர். ஒரு யூனிட் என்பது 3 நிமிடங்கள். 48 லட்சம் யூனிட்டுகள் என்றால் 1 கோடியே 44 லட்சம் நிமிடங்கள் வருகின்றன. இவைகளை நேரக் கணக்கில், நாள் கணக்கில் வகுத்தால்..?  ம்ஹும்.. தலை சுற்றுகிறது..!

இந்த ஒரு துப்பை வைத்துதான் சி.பி.ஐ., தோண்டித் துருவி சன் டிவி தனது ஒளிபரப்புகளுக்காக தயாநிதியின் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த இந்த தனி டெலிபோன் எக்சேஞ்சின் உயர்தர கேபிள் கனெக்ஷனை பயன்படுத்தியிருக்கிறது என்று கண்டறிந்து அறிக்கையாக சமர்ப்பித்திருக்கிறது..!

தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டுவிட்டார்கள் என்று இன்று கதறும் தயாநிதி மாறன் 'தினமணி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மீது கோபப்படும் முன் வேறு சில வேலைகளை அவர் செய்தாக வேண்டும்..!

1. தன் மீது இந்தப் புகாரை எழுப்பி சி.பி.ஐ. மூலமாக விசாரிக்கச் சொன்ன தனது சக அமைச்சர்களில் ஒருவராக இருந்த ஆ.ராசா மீதுதான் முதலில் வழக்குத் தொடர வேண்டும்..!

2. அடுத்து சி.பி.ஐ. தன்னைப் பற்றி அவதூறாக, தப்புத் தப்பாக அறிக்கையைத் தயார் செய்து கொடுத்திருக்கிறது என்று சி.பி.ஐ. மீதுதான் தயாநிதி மாறன் வழக்குத் தொடர வேண்டும்..! இந்த  அறிக்கையை மையமாக வைத்துதான் இப்போது  தினமணியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன..!

3. மூன்றாவது, 2009-ம் ஆண்டே இச்செய்தியை தனது கட்சிப் பத்திரிகையான நமது எம்.ஜி.ஆரிலும், ஜெயா டிவியிலும் ஒளிபரப்பி, வெளியாகச் செய்து பல கூட்டங்களில் இது பற்றிப் பேசிய ஜெயலலிதா மீதுதான் மான நஷ்ட வழக்கு போட வேண்டும்..!

4. சி.பி.ஐ. பதில் அளிக்கவில்லையெனில் அதற்குப் பொறுப்பான பிரதமர் மீதுதான் தயாநிதி மாறன் குற்றம் சுமத்த வேண்டும்..!

5. தனது ஆதரவை வைத்துக் கொண்டு ஆட்சியில் அமர்ந்திருந்தும் தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்திய சி.பி.ஐ.யை கண்டிக்கத் தவறிய பிரதமர் மன்னமோகனசிங்கை தயாநிதி மாறன் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்..!

6. தங்களது கட்சியின் ஆதரவினால் வாழ்ந்து கொண்டு லீகலாக நீங்களே கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எகத்தாளத்துடன் கூறியிருக்கும் பிரதமர், இந்தியாவின் அன்னை சோனியா ஆகிய இருவரையும் தனது கட்சி ஏன் கண்டிக்கவில்லை என்று தனது கட்சித் தலைவரான தாத்தாவின் சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும்..!

7. தனது கூட்டணி கட்சியை இப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் சர்வாதிகார காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து தி.மு.க. கழகம் விலக வேண்டும் என்று தயாநிதி மாறன் அக்கட்சித் தலைவர்களிடம் போராட வேண்டும்..!

8. தாத்தாவும் கண்டு கொள்ளவில்லையெனில் தன்னை தேர்ந்தெடுத்த கட்சியே தன்னை கைவிட்டுவிட்டது. தாத்தாவே புறந்தள்ளுகிறார். தனக்கு மரியாதை இல்லை. தான் திருடன் என்று தனது கட்சியை மறைமுகமாக ஒத்துக் கொள்கிறது என்று பத்திரிகைகளிடம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்..!

இவைகளைச் செய்து முடித்துவிட்டு பின்பு கடைசியாக 'தினமணி,' 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மீது பாய்வதுதான், தயாநிதி மாறனின் நேர்மையான செயலாக இருக்கும்..!

எல்லோரும் ஜோரா கை தட்டுங்க-இறுதி பாகம்

05-07-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி பாகம் இது..

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ரஜனி பாட்டீல் தில்லி செல்கிறார். சோனியாகாந்தியை 2006 ஜனவரியில் சந்திக்கிறார். தனது கணவர் எப்படி கொல்லப்பட்டார்? யாரால் கொல்லப்பட்டார்? ஏன் கொல்லப்பட்டார்..? என்ற தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கிறார். கூடவே அகமது படேல், சுஷில்குமார் ஷிண்டே, மார்கரெட் ஆல்வா போன்ற காங்கிரஸ் உயர் தலைவர்களையும் சந்திக்கிறார்.

அவர்கள் யாரும் சுட்டுவிரலைக்கூட ரஜினிக்காக அசைக்கவில்லை. மாறாக, இந்தக் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 2 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இந்தக் கொலை வழக்கு விசாரணையை முதலில் உள்ளூர் போலீஸாரிடமிருந்து எடுத்து மாநில சி.ஐ.டி. போலீஸாரிடம் ஒப்படைத்து, பின்பு அவர்களிடமிருந்து எடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை ஏற்பது குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கவே 3 மாதங்கள் ஆனது.

"எங்களுக்கு வேலைப்பளு அதிகம். இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அல்ல. சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை. எனவே எங்களுடைய விசாரணை இதற்குத் தேவையில்லை.." என்று சி.பி.ஐ. பதில் அளித்தது.

வழக்கு விசாரணையை ஊனப்படுத்தவும், தொடர்புடையவர்களைத் தப்ப வைக்கவும் நடந்ததே இந்த நாடகம். ரஜினி பாட்டீல் உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் பெஞ்சில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.

"இந்த வழக்கில் விஷ்ராம் பாட்டீலின் அரசியல் எதிரிகள்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.." என்று சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ரஜினி பாட்டீலின் குற்றச்சாட்டே அதுதான். 'முக்கிய எதிரிகள்' என்று குறிப்பிடப்படுகிறவர்களைப் போலீஸார் அழைத்து விசாரிக்கவே இல்லை. கைது செய்யப்பட்டவர்களிடமும் இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை.

ராஜுமாலி, ராஜுசோனாவானே ஆகியோர் 03.01.2006-ல் எழுதிய கடிதத்துக்கும் அந்த அதிகாரி பதில் சொல்லவில்லை. "எங்களை நிர்ப்பந்திக்கிறார்கள். குற்றங்களை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளியுங்கள். இல்லாவிட்டால் விஷ்ராம் பாட்டீலுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்.." என்று அந்தக் கடிதத்தில் மராத்தியில் இருவரும் எழுதியிருந்தனர்.

"இந்த வழக்கை விசாரிக்க முடியாது' என்று சி.பி.ஐ. அளித்த பதிலை ஏற்க முடியாது.." என்று நீதிமன்றம் 2007 பிப்ரவரி 23-ல் நிராகரித்தது. "உங்களுடைய பணிப்பளுவும், இந்த வழக்கின் தன்மையும் எங்களுக்குத் தெரியும். இரு தரப்பு வழக்கறிஞர்களின் உதவியோடு ஆவணங்களைப் பரிசீலித்ததில் இது வித்தியாசமான வழக்கு என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே சி.பி.ஐ. இதை விசாரிப்பதே சரியானது.." என்று நீதிமன்றம் ஆணையிட்டது.

2007 மார்ச் 5-ம் தேதி ரஜினிபாட்டீல் மீண்டும் ஒரு முறை வழக்கு பற்றிய குறிப்புகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதினார். "எனது குடும்பமே கொல்லப்படும் என்று அஞ்சுகிறேன்.." என்றுகூட அதில் குறிப்பிட்டிருந்தார். சோனியாவிடமிருந்து பதிலே வரவில்லை.

பிறகு இதையெல்லாம் மீண்டும் ஒரு முறை தொகுத்து குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கும் மனு செய்தார். அப்படியும் எதுவும் நடைபெறாததால், "பிரதிபா பாட்டீல்தான் மும்பை, தில்லியில் உள்ள தனது அரசியல் செல்வாக்கு காரணமாக தனது அண்ணன் டாக்டர் ஜி.என்.பாட்டீலை கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி வருகிறார்.." என்று குற்றம்சாட்டினார்.

எதிர் குற்றச்சாட்டு :

"பிரதிபா பாட்டீலுக்கு இணையான தகுதி படைத்த வேட்பாளர் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பாரதீய ஜனதா தவறானப் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது.." என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

பிரதிபா பாட்டீல் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய கட்சிக்காரர்கள் அளித்த பேட்டிகள், வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்திலும், போலீஸாரிடமும், தில்லியிலும், மும்பையிலும் அவர்கள் அளித்த புகார் மனுக்கள் அம்பலப்படுத்துகின்றன. இவை பாரதீய ஜனதாவின் மூளையில் உதித்த கட்டுக்கதைகள் அல்ல. இது பொய்ப் பிரச்சாரம் என்றால், 'ஆஜ்தக்' தொலைக்காட்சி ஒளிபரப்பிய பேட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

"இத்தனை நாட்கள் விட்டுவிட்டு பிரதிபாவை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த பிறகு ஏன் இதையெல்லாம் சொல்கிறீர்கள்..?" என்பது அவர்களின் அடுத்த கேள்வி.

எல்லா மாநிலங்களிலும் இதைப் போல ஆணவத்தோடு நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களில் எவரும் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறவரோ அல்லது அவருடைய உறவினரோ அல்ல.

எனவே, நாட்டின் உயர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவரின் தகுதியை ஆராய்வதிலும், ஆட்சேபணை தெரிவிப்பதிலும் என்ன தவறு? இந்த மோசடிகளை இப்போது அம்பலப்படுத்தாவிட்டால் பிறகு எப்போதுதான் இவை வெளியே வரும்? அதனால் என்ன பலன் இருக்கும்?

சோனியாவுக்கு எதுவுமே தெரியாதா..?

"சோனியாவுக்கு பிரதிபா குறித்து எதுவுமே தெரியாது. அதனால் தேர்வு செய்துவிட்டார்.." என்று மட்டும் கூறாதீர்கள்.

மகாராஷ்டிரத்தில் ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அல்ல.. மூன்று முறை இருந்தவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அது பற்றி அவருடைய மனைவியும், கட்சித் தலைவர்களும் அலையலையாகத் தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பேட்டி தருகிறார்கள். உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது எதுவுமே தெரியாது என்று சொல்லும் அளவுக்கு இது சகஜமான விஷயமா?

அப்படியானால் சோனியாவுக்கு பிரதிபா குறித்து எல்லாம் தெரிந்துதான் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாரா? ஆமாம்.. அதில் சந்தேகமே வேண்டாம்.

அரசியல் செல்வாக்கு இல்லாத மன்மோகன்சிங்கை பிரதமர் பதவியில் அமர்த்தினார். அவருக்கு அரசியல் சாதூர்யம் இல்லாவிட்டாலும், இன்னும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராகவே இருக்கிறார். நாளையே அவர், சோனியா சொன்னபடி கேட்காமல், சுதந்திரமாகச் செயல்படத் துவங்கிவிட்டால் பிரச்சினையாகிவிடும்.

எனவே காங்கிரஸ் கட்சித் தலைவரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், குடியரசுத் தலைவராக வருகிறவரும், சொந்தச் செல்வாக்கு இல்லாதவராக இருக்க வேண்டும். அது மட்டும் போதாது.. 'தலைமையின் தயவில்'தான் அவருடைய பதவியே நீடிக்க வேண்டும். இதற்குப் பிரதிபாவைவிட வேறு நல்ல வேட்பாளர் கிடைப்பாரா?

முற்றும்

எல்லோரும் ஜோரா கை தட்டுங்க-பாகம்-4

04-07-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் நான்காம் பாகம் இது..

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

ஒரு கொலை, அதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை!

பிரதிபா முகத்திரையை விலக்கினால்-4


மகளிருக்கு அதிகாரம் வழங்குவதற்காக ஜலகாமில் தொடங்கப்பட்ட கூட்டுறவு வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி மூடப்பட்டது.

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ரூ.20 கோடியை விழுங்கி ஏப்பம் விட்டதால், சர்க்கரை ஆலை நலிவடைந்து மூடப்பட்டது.

அடுத்த குடியரசுத் தலைவராக வரவிருக்கும் பிரதிபா பாட்டீல் தனது தங்கக் கரங்களில் தொட்டது எல்லாவற்றுக்கும் இதே கதிதான்.

அடுத்து நாம் காணவிருப்பது நாட்டு நலனில், அக்கறை கொண்டு அவர் தொடங்கிய 'ஷ்ரம் சாதனா டிரஸ்ட்' என்பதைப் பற்றியது. இது எதற்காக என்கிறீர்களா? கிராமப்புற இளைஞர்கள் பொறியியல் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டாமா? அதற்காகத்தான்..

இதன் சிறப்புகள் என்னவென்று பார்ப்போம்.

மாணவர்கள் நலனுக்காக ஒரு மருத்துவக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் போடப்பட்ட தொகை ஒரு டாக்டருக்குச் சென்றது. இதுவரையில் சரி.. அந்த டாக்டர் யார் தெரியுமா? பிரதிபாவின் சகோதரர் ஜி.என்.பாட்டீல்தான். அந்தக் கணக்கை பிரதிபாவே கையாண்டிருக்கிறார்.

அந்தப் பொறியியல் கல்லூரியின் ஊழியர்கள், அறக்கட்டளையின் இயக்குநர்களுடைய வீடுகளில் வேலை செய்தனர். ஒருவர் மும்பையில் பிரதிபாவின் வீட்டில் வேலை செய்தார்.

கல்லூரிக்காக ஒரு விருந்தினர் இல்லம் கட்டப்பட்டது. பல்கலைக்கழக பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் வந்து தங்குவதற்காக அல்ல. பிரதிபா பாட்டீலின் உறவினர்கள் வந்தால் தங்கி ஓய்வெடுப்பதற்காகத்தான்.

மாணவர்களிடமிருந்து வசூலித்த பணம் விரைவிலேயே மூழ்கப் போகும் சர்க்கரை ஆலைக்குப் போனது.

ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து கட்டாயமாகப் பிடிக்கப்பட்டத் தொகை மூடப்படவிருக்கும் கூட்டுறவு வங்கியில் டெபாசிட்டாகப் போடப்பட்டது. இந்த டெபாஸிட்டுகளைக் கொண்டு பங்கு முதலீட்டாளர்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள் பிரதிபா குடும்பத்தினரே திரும்பத் திரும்ப நிர்வாகிகளாக இயக்குநர்கள் தேர்தலில் வெற்றி பெற உதவியாகச் செயல்பட்டனர். ஒன்றை வைத்து ஒன்று.. ஒன்றிலிருந்து மற்றொன்று. அற்புதமான 'சிருஷ்டி ரகசியம்' பிரதிபா குடும்பத்தாருடையது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி எனது கட்டுரைகளால் நிலைகுலைந்து போயிருக்கிறார். "பிரதிபாவின் புகழைக் கெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்வதாகக்" குற்றம் சாட்டியிருக்கிறார். "எல்லா அரசியல்வாதிகளுக்குமே உறவினர்களால் இப்படி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.." என்று உதாரணங்களையும் அடுக்கியிருக்கிறார். "தொலைக்காட்சி நிறுவனங்கள் மட்டும் யோக்கியமா..?" என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். அதற்காக குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமா? "எல்லோர் மீதும் நடவடிக்கை எடுங்கள் என்றுதானே கேட்கிறோம். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் விட்டுவைக்காதீர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே.."

இப்போது ஒரு கொலை தொடர்பான சில பெயர்களையும் தேதிகளையும் பார்ப்போம்.

விஷ்ராம் ஜி.பாட்டீல்

வடக்கு மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஜலகாம் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர். 30 ஆண்டுகளாக காங்கிரஸ்காரர். மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒரு முறை அல்ல.. மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005 செப்டம்பர் 21-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

ரஜினி பாட்டீல்

அதே கல்லூரியில் மராட்டி மொழி பேராசிரியராகப் பணி புரிகிறார். விஷ்ராம் பாட்டீலின் மனைவி. ஜி.என்.பாட்டீல், உல்லாஸ் பாட்டீல் ஆகியோர்தான் தனது கணவர் கொலையில் சதிகாரர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.

ஜி.என்.பாட்டீல்

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரதிபா பாட்டீலின் அண்ணன். விஷ்ராம் பாட்டீலை எதிர்த்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றவர்.

உல்லாஸ் பாட்டீல்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஜி.என்.பாட்டீலின் நெருங்கிய சகா. விஷ்ராம் பாட்டீலை போட்டியாளராகக் கருதுகிறவர். சுற்று வட்டாரத்தில் 'நன்கு பிரபலமான' பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

ராஜு மாலி, ராஜு சோனேவானே

விஷ்ராம் பாட்டீல் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள். "உண்மையான சதிகாரர்கள் வேறு நபர்கள்.." என்று ஆஜ்தக் தொலைக்காட்சி நிருபரிடம் கேமராவுக்கு முன்னால் சாட்சியம் கூறியவர்கள். "அவர்கள் யார்..?" என்று கேட்டபோது, "ரஜினி யாரைக் குற்றம் சாட்டுகிறாரோ, அவர்கள்தான்.." என்கின்றனர்.

பிறகு 2007, ஏப்ரல் 7-ல் போலீஸ் 'காவலில்' ராஜூமாலி இறந்து விடுகிறார். 2007 ஏப்ரல் 4-ல் ஜலகாமுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வருகின்றனர். இந்த வழக்குத் தொடர்பாக அவர்கள் வந்தது இதுவே முதல் முறை. ஏப்ரல் 7-ம் தேதி ரஜனியிடம் விசாரிக்கின்றனர்.

லீலாதர் நர்கடே, தாமோதர் லோகாண்டோ

விஷ்ராம் பாட்டீல் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறவர்கள். கொலைக்கு முதல் நாள், கொலை நடந்த நாள், கொலைக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களிலும் இவர்களும் ஜி.என்.பாட்டீலும் தொலைபேசியில் பேசியதாக பதிவாகியிருக்கிறது. இருவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களைப் பற்றிய முதல் தகவல் அறிக்கை(FIR) திரும்பப் பெறப்படுகிறது.

மோதல் ஏன்?

மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஜி.என்.பாட்டீல் இருந்தபோது, சுனாமி நிவாரணமாக பொதுமக்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி திரட்டப்பட்டது. அந்தப் பணம் கட்சியிடமும் தரப்படவில்லை. மக்களுக்கும் சென்று சேரவில்லை.

ராஜஸ்தான் ஆளுநராக பிரதிபா பாட்டீல் நியமிக்கப்பட்டதும் அவருக்குப் பாராட்ட விழா நடத்த கட்சித் தொண்டர்கள் மீண்டும் நிதி திரட்டினர். இந்தப் பணமும் எங்கே போனது என்று யாருக்கும் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்குமாறு மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரபாராவுக்கு கட்சித் தொண்டர்கள் புகார் மனுக்களை அனுப்பினர். இந்தத் தொகைகள் குறித்து விசாரிக்குமாறு கோரினர்.

2005 ஆகஸ்ட் 15

மாவட்ட காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த 9 பேர் பத்திரிகைகளுக்கு அறிக்கை தருகின்றனர். ஜி.என்.பாட்டீல் திரட்டிய நிதிக்கு கணக்கும் இல்லை. அது கட்சிக்கும் தரப்படவில்லை என்கின்றனர்.

இந்நிலையில் கட்சியின் மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷ்ராம் பாட்டீல் இந்த நிதி முறைகேடுகள் குறித்தும், உல்லாஸ் பட்டீலின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் விசாரணையைத் தொடங்குகிறார். இந்த இருவரின் முறைகேடுகள் குறித்து கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார்.

அப்போது அவருக்கு 3 மொட்டைக் கடிதங்கள் வருகின்றன. விஷ்ராமைக் கொல்ல சுபாரி(கூலிப்படை) ஏவப்பட்டிருப்பதாகவும் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் அவை எச்சரிக்கின்றன. ஆனால் விஷ்ராம் பாட்டீல் அதை லட்சியம் செய்யாமல் விசாரணையைத் தொடர்கிறார். பிறகு கொல்லப்படுகிறார். உடனே உள்ளூர் பத்திரிகைகளில் இந்தக் கொலைச் செய்தி குறித்து பக்கம் பக்கமாக அலசப்படுகின்றது. "மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் உள்ள கோஷ்டிப் பூசலே இதற்குக் காரணம்.." என்று எழுதப்படுகிறது.

திடீர் திருப்பம்

பிறகு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். "90 சதவிகித விசாரணை முடிந்துவிட்டது. விரைவிலேயே சதிகாரர்களைப் பிடித்துவிடுவோம்" என்று ரஜினியிடமே போலீஸார் தெரிவிக்கின்றனர். திடீரென்று இதில் திருப்பம் நேரிடுகிறது. விஷ்ராம் பாட்டீலிடம் ராஜு மாலி ரூ.4.5 லட்சம் வாங்கியதாகவும், அதை விஷ்ராம் திருப்பிக் கேட்டதால் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதை ரஜினி பாட்டீல் வன்மையாக மறுக்கிறார். பத்திரிகைகளும் இதில் உள்ள முரண்களைச் சுட்டிக் காட்டுகின்றன. உடனே வழக்கு விசாரணை ஜலகாம் போலீஸிடமிருந்து மாநில சி.ஐ.டி. போலீஸ் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

2005 செப்டம்பர் 27

விசாரணை போகும் திசையைப் பார்த்து அதிர்ச்சியடையும் ரஜினி பாட்டீல் காங்கிஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதுகிறார். "எனது கணவரின் கொலைக்குக் காரணமாக இருந்தவர்கள், போலீஸ் விசாரணையை நடத்தவிடாமல் நெருக்குதல் தருகின்றனர்.." என்று தெரிவிக்கிறார்.

'தேசத்தூது', 'தேசநாடி' ஆகிய உள்ளூர் பத்திரிகைகளும் இந்தக் கொலை பற்றி விசாரித்து ஜி.என்.பாட்டீல் மீது சந்தேகம் தெரிவித்து சில புகைப்பட ஆதாரங்களுடன் எழுதின. பிறகு ரஜினி பாட்டீலும் பல்வேறு ஆதாரங்களுடன் உள்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் ஆகியோருக்குக் கடிதங்கள் எழுதினார். ஆனால் எதற்கும் பலனில்லை.

கட்சிக்காரர் கொலை செய்யப்படுகிறார். அதில் சம்பந்தப்பட்டுள்ளவர் யார் என்று தெரிய வருகிறது. அந்த ஆதாரங்களைத் தீர விசாரித்து குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டிய போலீஸார் தயக்கம் காட்டி, வழக்கை மந்த கதியில் நடத்தி திசை திருப்புகின்றனர். இத்தோடு முடியவில்லை.

(இறுதிப் பகுதி விரைவில்)

எல்லோரும் ஜோரா கை தட்டுங்க-பாகம்-3

03-07-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் மூன்றாம் பாகம் இது..

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், "அதிகாரம் பெறும் மகளிருக்கு கணவர் உண்டு.." என்பதை எல்லோருமே மறந்து விடுவதுதான்.

இணையதளத்தில் பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில், 'பிரதிபா, மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்' என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி அனைவரும் எழுத ஆரம்பித்ததும், "அவருக்கு 1994 முதல் அந்த வங்கியிடுன் தொடர்பு ஏதும் கிடையாது.." என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.

'ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர்' என்று அவருடைய வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலை பற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது, "அவருக்கும், சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தமே இல்லை.." என்று..

கூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலை இரண்டிலிருந்தும் விலகிய பிரதிபா தனது நேரம், உழைப்பு அனைத்தையும் கல்விப் பணிகளிலேயே செலவிட்டிருப்பார் என்று நம்பலாம்.

பிரதிபா பாட்டீலும் அவருடைய குடும்பத்தாரும் சங்கம் வைத்து சில பள்ளிக்கூடங்களை நடத்தினர். அதில் பணியாற்றுகிறவர்கள் நிர்வாகத்தின் மீது மிகுந்த கசப்புணர்வோடு இருக்கின்றனர். அவர்களோடு பணியாற்றிய கிசான்தாகே என்ற ஆசிரியர் எப்படி நடத்தப்பட்டார். அவர் எப்படித் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை ஆவணங்களோடு அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கெல்லாம் பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும், அவருடைய சகாக்களும்தான் காரணம் என்கின்றனர்.


ஷெகாவத்துகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 1977-ல் கிசான் தாகே பணிக்குச் சேர்ந்தார். உதவி ஆசிரியர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். ஊதியம் தராமலும், உரிய மரியாதை கொடுக்காமலும் அவமதிக்கப்பட்ட அவர் 1998-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதுவன்றி ஒரு பத்திரமும் அவரிடம் இருந்தது. போலீஸார் அவற்றையெல்லாம் கைப்பற்றிக் கொண்டு பிரேதபரிசோதனை நடத்தினர். தேவிசிங்கும் அவருடைய நண்பர்களும் எப்படித் தன்னைச் சிறுமைப்படுத்தினார்கள்? ஊதியம் தராமலும், பள்ளிக்கூடச் சங்கத்துக்குச் சொந்தமான கடன் சங்கத்திலிருந்து, கடன்கூட வாங்க முடியாமலும் எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்றெல்லாம் விவரமாக அதில் எழுதியிருந்தார்.

கிசான்தாகே உயிரோடு இருந்தபோது பட்டத் துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவருடைய மகன், கல்வி உதவித் தொகை பெறுவதற்காக தேர்வெழுத விண்ணப்ப மனுகூட கிடைக்கவொட்டாமல் தடுத்தனர். வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாகக்கூறி தொலைதூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்திற்கு அவரை மாற்றினர். அங்கு ஆசிரியர் வேலையே இல்லை என்றதும், விடுதி மேலாளராக வேலை பார்க்குமாறு கூறினர்.

அமராவதி நகரில் உள்ள சமூக நலத்துறை அதிகாரிக்கு இது பற்றி கடிதம் எழுதினார் தாகே. "ஆசிரியர் பணியிடமே இல்லாத இடத்துக்கு ஒருவரை மாற்றுவது சட்டவிரோதமான செயல்.." என்று சமூக நலத்துறை அதிகாரி 1998, ஜனவரி 27-ல் பள்ளிக்கூட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார். அந்த மாறுதலுக்கு தன்னுடைய ஒப்புதலைத் தர முடியாது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஊதியம் தருவதை முற்றாக நிறுத்திவிட்டது நிர்வாகம்.

இதற்கிடையே மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் 1998, ஜனவரி 19-ல் மனு தாக்கல் செய்தார் தாகே. தன்னைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றியது குறித்து அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறும் ஊதியம் தருமாறும் 1998 அக்டோபர் 8-ம் தேதி நாகபுரி உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. 1997 ஆகஸ்ட் 25 முதல் அவருக்கு நிலுவை ஊதியத்தையும் தருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டது.

அதன் பிறகும் ஊதியம் பெற அவர் நிர்வாகத்திடம் நடையாய் நடந்தார். இந்தக் கட்டத்தில் அவருடைய உடல் நலிவடைய ஆரம்பித்தது. டாக்டர் அளித்தச் சான்றுடன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. தாகேயின் பரிதாப நிலை கண்டு சக ஆசிரியர்கள் மிகவும் வருந்தினர். அவர்களால் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.

இதற்கிடையே வீட்டில் உள்ள பண்டம், பாத்திரங்களையும், மனைவியின் நகைகளையும் விற்றுத் தீர்த்துவிட்டதால் இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில் தற்கொலை முடிவை எடுத்து நிறைவேற்றிவிட்டார் தாகே. தாகேவின் மனைவி மங்கள்பாய் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் பாராமுகமாக இருந்துவிட்டனர்.

மங்கள்பாயின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், தாகேவைச் சிறுமைப்படுத்தியது.. வேலையே இல்லாத இடத்துக்கு மாற்றியது. பிறகு ஊதியம் தராமல் நிறுத்தியது. மருத்துவ விடுப்பைத் தர மறுத்தது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை எதிர்மனுக்கள் மூலம் தாமதம் செய்தது என எல்லாவற்றையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

"இதில் முதல் நோக்கில் தவறு யார் மீது என்று தெரிகிறது. போலீஸார் உரிய வகையில் வழக்கைப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.." என்று நீதிமன்றம் ஆணையிட்டது. 2000 அக்டோபர் 6-ம் தேதி அந்த ஆணை வெளியானது. அதற்குள் ஊதியமே இல்லாமல் 3 ஆண்டுகள் தாகேவே இல்லாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆணையையும் எதிர்த்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ.நந்தகாவோன்கர் அளித்த தீர்ப்பு பள்ளிக்கூட நிர்வாகத்தை கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. "தேவிசிங் மீதும் அவருடைய சகாக்கள் மீதும் மனுதாரர் செய்த புகார்கள் உண்மையானவை என்பது நடந்த சம்பவங்களிலிருந்தும் கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்தும் தெரிகிறது. எனவே இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.." என்று தீர்ப்பளித்தார். அது 2005, ஜூலை 22-ல் வெளியானது.

அதன் பிறகாவது சட்டம் தன் வேலையைச் செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? குடியரசுத்தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் வருங்கால முதல் குடிமகளின் கணவர், அவ்வளவு லேசுப்பட்ட ஆளா? அந்த ஆணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

சமூக நலத்துறை அதிகாரி, உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதியும், கன்னத்தில் அறைந்தாற்போல் ஒரு தீர்ப்பை அளித்தார்.

"இந்தத் தற்கொலை வழக்கில் சந்தர்ப்பச் சாட்சியங்களும், ஆவணங்களும் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பதை சந்தேகமற தெரிவிக்கின்றன. அப்படியிருக்க அவர்களுடைய மனுக்கள் பரிசீலனைக்கே ஏற்றவை அல்ல.." என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த ஆணை 2007 பிப்ரவரி 7ம் தேதி வெளியானது. தாகே 1998 நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இன்னும் இந்த வழக்கில் விசாரணையே ஆரம்பமாகவில்லை.

ஆதரவற்ற அப்பாவியான தாகே இறந்துவிட்டார்; அநாதையாகிவிட்ட அவருடைய மனைவி மங்கள்பாய் இனி அங்குமிங்கும் அலைய முடியாதபடிக்குச் சோர்ந்துவிட்டார்.

இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தேவிசிங் ஷெகாவத் குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டீர்களா?


நான்காம் பாகம்

எல்லாரும் ஜோரா கை தட்டுங்க-பாகம்-2

02-07-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபாட்டீலின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் இரண்டாம் பாகம் இது..

முதல் பாகம்

"பிரதிபா பாட்டீல் முகத்திரையை விலக்கினால்..."

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியில் சமூக நீதியை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை ஊழியர்கள் சங்கம் சொல்லியிருப்பது தனிக்கதை.

வங்கியில் ஊழியர்களைச் சேர்ப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நியதிகளைக்கூட வங்கியின் நிர்வாகிகள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு உரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. நிர்வாக இயக்குநர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே அந்த வேலைகளை வழங்கினார்கள்.

"கடனில் வங்கி மூழ்குவதைத் தடுக்க பிரதிபா பாட்டீல் அவருடைய அண்ணன் திலீப்சிங் பாட்டில் மற்றும் பிற உறவினர்களின் சொத்துக்களை அரசு கையகப்படுத்தவேண்டும்..." என்று ஊழியர்கள் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தது. அவர்களுக்கு எப்படி அவ்வளவு சொத்த குறுகிய காலத்தில் சேர்ந்தது என்று விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தது. மகாராஷ்டிர மாநில அரசின் கூட்டுறவுத் துறையும் இந்த நோக்கில் விசாரணையைத் தொடங்கியது.

அதே சமயத்தில் அந்த வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனந்த்சிங் பாட்டீல் என்பவர், சங்க லெட்டர் பேடில் பிரதிபா பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். வங்கியின் முறைகேடுகளில் உங்களுக்குப் பங்கு ஏதுமில்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய், சங்கத்தின் சார்பில் பிரதிபாவிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.

பிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்பட்டதை ரிசர்வ் வங்கியும் இதே காலத்தில் விசாரிக்க ஆரம்பித்தது. "பிரதிபாவின் நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள் முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டது உண்மைதான்.." என்று தனது ரகசிய அறிக்கையில் 2002 ஜூன்-18-ல் அது குறிப்பிட்டது.

"பிரதிபாவின் 3 உறவினர்களின் கடன் ரத்து தொடர்பான குறிப்பிட குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க உண்மைதான்..." என்று அது தனது அறிக்கையில் பதிவு செய்தது. கடன்களை ரத்து செய்வதை பரிசீலிப்பதற்கென்றே ரிசர்வ் வங்கியில் இருக்கும் உதவி துணை மேலாளரை, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி அணுகி ஒப்புதல் பெறவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஊழியர் சங்கங்களின் புகார் மனுக்கள் கூட்டுறவுத் துறை, ரிசர்வ் வங்கி, மத்திய மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் பிரதிபாவுக்கே அனுப்பப்பட்டுள்ளன.

ஊழியர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் 2002 மார்ச் 13-ல் அனுப்பியுள்ள கடிதத்தில் பிரதிபாவின் அண்ணன் திலீப்சிங் பாட்டீல் வங்கியின் தொலைபேசியை சொந்தப் பயன்பாட்டுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

வங்கியின் 224672 என்ற எண்ணுள்ள தொலைபேசியை அவர் தன்னுடைய வீட்டில் வைத்துக் கொண்டு பங்கு பரிவர்த்தனை தொடர்பான வியாபார விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றுக்கான டெலிபோன் கட்டணம் ரூ.20 லட்சம். அந்த தொலைபேசியிலிருந்து மும்பையில் உள்ள பங்குத் தரகர்களுடன் பேசியிருப்பதை தொலைபேசி பில் தெரிவிக்கிறது.

இந்த ஆவணங்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஆனால் தொலைபேசியைத் தவறாகப் பயன்படுத்தியதை மறைக்க முடியவில்லை. வங்கியின் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட அமோல் கைர்னார் இந்த தொலைபேசி பில்லுக்கு விளக்கம் தருமாறு வங்கி மேலாளர் பி.டி.பாட்டீலுக்கு 2003 பிப்ரவரி 1-ம் தேதி எழுதிய கடிதத்தில் கோரியிருக்கிறார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கி, சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவ்வப்போது முறைகேடாக கடன் வழங்கியிருப்பதையும் ரிசர்வ் வங்கியின் நோட்டீஸ் சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்தச் சர்க்கரை ஆலைதான் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பிரதிபா பாட்டீல் நிறுவியது. 1999-ல் சோனியா காந்தி இதைத் தொடங்கி வைத்தார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியைப் போலவே இந்த சர்க்கரை ஆலையும் மூடப்பட்டுவிட்டது. ரூ.20 கோடி மதிப்புக்கு கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால் அந்த 20 கோடி ரூபாய் மதிப்புக்கு அது எந்த நாளிலும் சர்க்கரையை உற்பத்தி செய்யவே இல்லை என்பதுதான் அதன் சிறப்பு.

சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பங்குகளை வாங்க பிரதிபா மகிளா சஹகாரி வங்கி தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடன் வழங்கியிருக்கிரது. சர்க்கரை ஆலையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக பிரதிபாவின் சகோதரர்கள் இப்படி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடனை அள்ளி வழங்கினார்கள்.

"பொதுமக்கள் தங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்து கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தால், உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் அதில் புகுந்து கொண்டு ஊழல் செய்யும்பட்சத்தில் மக்கள் யாரைத்தான் நம்புவது.." என்று ஊழியர் சங்கம் கேட்டுள்ளது.

"நீங்கள்தான் இந்தக் கூட்டுறவு வங்கியின் நிறுவனத் தலைவர். ஆனால் சுயலாபத்துக்காக நீங்களே இந்த வங்கியை அழித்துவிட முயற்சிகளைச் செய்து வருகிறீர்கள். 2002 மார்ச்சுக்குள் வங்கியின் நிலைமை மேம்படாவிட்டால் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.

உங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக வங்கியில் நிகழ்ந்துள்ள ஊழல்களையும், முறைகேட்டையும் வெளியே தெரிய விடாமல் தடுத்துவிட முடியும். உங்களால் எங்களுக்கும், எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே உங்களை நாங்கள் சந்திக்கும்போதே இதைக் குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள்.

உண்மை வெளி வர வேண்டும் என்பதற்காக எங்களுடைய உயிரை விடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்செயலாகவோ, வேறு வகையிலோ எங்களுக்கோ, எங்கள் குடும்பத்தவருக்கோ ஏதேனும் நேர்ந்துவிட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு..." என்று வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

கடன் வாங்கிய பெண்கள் யார் என்பதைச் சொல்லிவிட்டோம். பணம் போட்டவர்கள் யார்? அதை அவர்களே பின்வருமாறு வங்கி நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்...
"காய்கறி, பழங்கள் விற்பது, குப்பை பொறுக்குவது போன்ற சிறு வேலைகளைச் செய்யும் ஏழைகளான நாங்கள்தான் நல்ல சேமிப்பாக இருக்கட்டும் என்று உங்கள் வங்கியில் முதலீடு செய்தோம். இப்போது நாங்கள் கேள்விப்படும் விஷயம் எங்களுக்குக் கவலை தருவதாக இருக்கின்றன. ஏழைகளுக்கு உதவத்தான் இந்த வங்கியைத் திறந்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தையெல்லாம் இதில் முதலீடு செய்துள்ளோம். எனவே நமது வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததவர்களின் முகவரிகளை வெளியிடுங்கள்.." என்று வங்கியில் பணம் போட்டவர்கள் கோரியுள்ளனர்.

மகளிர் முன்னேற்றத்திற்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவுமே 24 மணி நேரம் உழைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பிரதிபா பாட்டீல் வகையறா சமூகச் சேவகர்கள் இதற்கு அளித்த பதில்தான் என்ன..?


மூன்றாம் பாகம்

எல்லாரும் ஜோரா கை தட்டுங்க! - பாகம்-1

30-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


எல்லாரும் ஜோரா கை தட்டுங்க.. தட்டிட்டீங்களா.. இன்னும் கொஞ்சம் நல்லாத் தட்டுங்க.. டெல்லிவரைக்கும் கேக்க வேணாம்..

வார்டு கவுன்சிலர் தேர்தல்ல நிக்குறதுக்கே ஆள் பலம், படை பலம், இதோட புஜ, கஜ பலம்.. கடைசியா போலீஸ் ஸ்டேஷன் ரெக்கார்டு எல்லாமே ஒரு வேட்பாளருக்குத் தேவைப்படுது. இதுல ஜனாதிபதி தேர்தல்ன்னா.. சும்மாவா..

யாரோ ஒரு அம்மாவைத் தேர்ந்தெடுத்து பெண்களுக்கு வாழ்க்கையில்தான் சம உரிமை கொடுக்க முடியவில்லை.. பாராளுமன்றத்தில்தான் 33 சதவிகிதம் கொடுக்க முடியவில்லை. இதிலாவது 12 ஆண்களுக்குப் பிறகு ஒரு பெண்ணிற்கு வாய்ப்புக் கொடுத்துள்ளோம் என்ற ரீதியில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள்.

அந்தம்மா முக்காடு அணிந்து கேமிராக்கள் முன்னிலையில், முக்காலியில் அமர்ந்தபோதே தெரிந்துவிட்டது, ரப்பர் ஸ்டாம்ப்பை கையில் எடுத்தால் ஒரு பத்து இடத்திலாவது குத்தாமல் விட மாட்டார் என்று..

"அந்தம்மா யாரு? அரசியல்வாதியா? என்ன அரசியல் பண்ணிருக்காங்க..? அரசியல்ன்னா என்னன்னாவது தெரியுமா? இந்திய அரசியல்வாதிகளுக்குன்னே உலகத்துல ஒரு தனி மரியாதை இருக்கு.. அது அந்தம்மாவுக்கு இருக்கா..? இல்லையே..? பின்ன எதுக்கு 'பிரதிபா..' 'பிரதிபா..' 'பிரதிபா'ன்னுட்டு ஒப்பாரி வைக்குறானுக எல்லா சேனல்காரனும்..?" என்று சொக்கலால் பீடி குடித்தபடியே நம்ம கபாலி அண்ணேன், கபாலி தியேட்டர் வாசல்ல, ஓசில சரக்கடிச்சு புலம்பிக்கிட்டிருந்தாருங்கோ..

இது எப்படியோ நம்ம அரசியல்வாதிகளின் பாசக்காரப் பயல்களுக்கு.. அதாங்க... பத்திரிகைகாரங்களுக்குத் தெரிஞ்சு போய் "அந்தம்மா யாரு? எவரு? குலம் என்ன? கோத்திரம் என்ன?"ன்னு நோண்ட ஆரம்பிச்சிட்டாங்க.. ஒண்ணொண்ணா வெளில வந்துக்கிட்டிருக்கு..

அதுல இதுவும் ஒண்ணு சாமி.. படிச்சுப் பாருங்க.. இன்னிக்கு 'தினமணி' பேப்பர்ல பத்திரிகையாளர் திரு.அருண்செளரி எழுதிருக்கார்.. இதுக்கும் ஜாதி சாயம் பூசிராதிங்க சாமிகளா.. 'மேட்டர்' என்னன்னு மட்டும் பாருங்க..

"என்னைத் தேர்வு செய்திருப்பது மற்றப் பெண்களுக்கு ஊக்குவிப்பாக இருந்து அவர்களும் அதிகாரம் பெற வழிவகுக்கும்" - இது குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதிபா பாட்டீலின் அடக்கமான ஏற்புரையாகும்.

மகளிர் முன்னேற்றத்திலும், பெண் கல்வியிலும் ஆர்வம் உள்ள சமூகத் தொண்டர், கிராமப்புற பொருளாதார வளர்ச்சி, மகளிர் நலன் ஆகியவற்றுக்காக அயராது பாடுபடுகிறார் என்று பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் கூறப்படுகிறது.

மகிளாவிகாஸ் மகா மண்டல் ஆதரவில், "பிரதிபா மகிளா சஹகாரி வங்கி, மகாராஷ்டிரம்" என்ற பெயரில் கூட்டுறவு வங்கியை ஜலகாமில் அவர் தொடங்கியது இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. ஷரம் சாதனா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், ஜலகாம் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர், ஏழை கிராமப்புற இளைஞர்களின் நலனுக்காக பொறியியல் கல்லூரியை நிறுவியவர் என்ற பட்டங்களும் பிரதிபாவுக்கு உண்டு.

மற்றப் பெண்களுக்கு உதவ, தன்னுடைய பெயரிலேயே அவர் தொடங்கிய பிரதிபா மகிளா சஹகாரி கூட்டுறவு வங்கியின் கதையை முதலில் பார்ப்போம்.

அவருடைய வாழ்க்கைக் குறிப்பிலும் பத்திரிகைகளின் செய்திகளும் இந்த வங்கி குறித்து இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த வங்கி தொடர்ந்து செயல்பட்டால், முதலீட்டாளர்களின் நலன் முற்றிலும் பாழ்பட்டுவிடும் என்ற எச்சரிக்கையோடு ரிசர்வ் வங்கி அதை இழுத்து மூடிவிட்டது என்ற தகவல் எதிலும் இல்லை.

தன்னைத் தலைவராகவும், தன்னுடைய உறவினர்கள் சிலரை இயக்குநர்களாகவும் கொண்டு 1973-ல் இந்த கூட்டுறவு வங்கியை பிரதிபா பாட்டில் தொடங்கினார். அவர் இயக்குநராகப் பல முறை தொடர்ந்திருக்கிறார். அவருடைய உறவினர்கள் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் மாறி, மாறி வங்கியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். அந்த வங்கி தொடங்கியது முதல் இழுத்து மூடப்படும்வரை அதன் நிறுவனம், தலைவர் என்ற அந்தஸ்திலேயே பிரதிபா தொடர்ந்து செயல்பட்டார்.

அந்த வங்கி முறையாக நிர்வகிக்கப்படாததால் 1995-ல் ரிசர்வ் வங்கி அதை நலிவடைந்த வங்கிகளின் பட்டியலில் சேர்த்தது. 1994-மார்ச்சில் கிடைத்த ஆய்வறிக்கையின்படி அதன் மூலதன ஆதாரம் வெகுவாகச் சிதைந்துவிட்டதால், அதை மறுசீரமைப்புக்கான வங்கிகளின் பட்டியலில் ரிசர்வ் வங்கி சேர்த்தது.

2002-ல் மீண்டும் அந்த வங்கியின் நிதி இருப்பு, இதர செயல்பாடுகள் குறித்து ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டது ரிசர்வ் வங்கி. அதன் நிர்வாக இயக்குநர் பி.பி.மாத்தூர் அந்த ஆய்வுக்குப் பிறகு பின்வரும் நிதி முறைகேடுகளைப் பட்டியலிட்டுள்ளார்.

1. வங்கியின் உண்மையான அல்லது மாற்றத்தக்க செலுத்தப்பட்ட மூலதனம், ரொக்கக் கையிருப்பு ஆகியவற்றின் மதிப்பு மைனஸ் ரூ.197.67 லட்சமாக இருக்கிறது. இந்த வங்கியின் சொத்து மதிப்பு அது செலுத்த வேண்டிய கடனை முழுமையாக அடைப்பதற்கு பற்றாத நிலையில் இருக்கிறது. ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் குறைந்தபட்ச மூலனதப் பங்கு அதன் வசம் இல்லை. இது மொத்த டெபாசிட் தொகையின் மதிப்பில் 26% சதவீதம்.

2. வங்கியின் மொத்தச் சொத்து மதிப்புக்கும் அது செலுத்த வேண்டிய கடனுக்கும் உள்ள விகிதாச்சாரத்தைக் கணக்கிட்டால் சொத்தைப் போலவே கடன் 312.4% இருக்கிறது. அதாவது கடனை அடைக்க முற்பட்டால் வங்கியின் மூலதனம் முழுக்கத் தீர்ந்து அது திரட்டியுள்ள டெபாசிட்டுகளிலிருந்தும் ரூ.197.67 லட்சம் தேவைப்படும். அதாவது கால்பங்கு டெபாசிட்டுகளைத் தியாகம் செய்தால்தான், கடனே அடையும் என்ற நிலைமை.

3. அந்த வங்கி அளித்தக் கடனில் 65.8% அளவு வாராக்கடன்களாக, அதாவது திரும்ப வசூலிக்க முடியாத கடனாகப் போய்விட்டது.

4. வங்கி நிர்வாகம் இந்தக் கடன்களைத் திரும்ப வசூலிக்கவோ, அதன் நிதியாதாரத்தை வலுப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இந்த வங்கியைத் தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் இப்போதுள்ள டெபாசிட்தாரர்கள் மட்டுமல்ல. இனி எதிர்காலத்தில் விவரம் தெரியாமல் இதில் முதலீடு செய்யும் டெபாசிட்தாரர்களின் நலனும் பாதிக்கப்படும் என்பதால் வங்கியை உடனடியாக மூடிவிடுமாறு உத்தரவிடப்படுகிறது. வங்கி நடத்துவதற்கு அளித்த உரிமமும் ரத்து செய்யப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தனது உத்தரவில் கூறியிருக்கிறது.

இந்தக் கூட்டுறவு வங்கியில் பிரதிபாவைத் தவிர, இதர இயக்குநர்கள் அனைவரும் அவருடைய சகோதரர்கள் அல்லது உறவுக்காரர்கள். அதாவது அனைவருமே ஆண்கள். மகளிருக்கு அதிகாரம் வழங்க மூடு திரைக்குள் ஆண்கள் என்று இதை கருதலாம்.

ஒரு குடும்பத்தாரால் நிர்வகிக்கப்படும் இந்த வங்கி தொடர்ந்து மக்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி வங்கியை போண்டியாக்கிக் கொண்டிருக்கிறது. இதன் உயர் நிர்வாக அமைப்பைக் கலைக்க வேண்டும் என்று மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கை மாநில கூட்டுறவுத் துறை, மாநில அரசு, மத்திய அரசு, உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு அனுப்பி கொண்டேயிருந்தது.

பிரதிபா பாட்டீலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுகூட தனது மனுவில் வலியுறுத்தியிருந்தது. மகாராஷ்டிரத்தில் உரிய அரசு அமைப்புகளுக்கும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அப்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கும்கூட புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தது.

03.12.2002-ல் அனுப்பியிருந்த விரிவான புகாரில் வங்கியின் நிர்வாகியும், தலைவருமான பிரதிபா பாட்டீல், வங்கியின் பணத்தைத் திட்டமிட்டு சுயலாபத்துக்குப் பயன்படுத்த, எந்தவித ஜாமீனும் இல்லாமல் தனது உறவினர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு லட்சணக்கணக்கில் எப்படி கடன் அளித்து வருகிறார் என்று தொழிலாளர்கள் சங்கம் பட்டியல் இட்டிருந்தது.

வங்கியின் நிதி நிலைமை படு மோசமாக இருந்த நிலையிலும் தனது உறவினர்கள் வாங்கிய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடன்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டி, மற்றும் அபராத வட்டி போன்றவற்றை பிரதிபா பாட்டீல் தள்ளுபடி செய்ததையும் சங்கம் தனது புகாரில் சுட்டிக் காட்டியிருந்தது.

பிரதிபாவின் உறவினர்களான அஞ்சலி திலீப் சிங் பாட்டீலுக்கு ரூ.21.86 லட்சமும், கவிதா அரவிந்த்பாட்டீலுக்கு ரூ.8.59 லட்சமும், ராஜ்கெளர் திலீப்சிங் பாட்டீலுக்கு ரூ.2.47 லட்சமும் கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த வங்கிக் கணக்குகளை அவருடைய உறவினர்கள் மூடி விட்டனர். இவ்வாறாக இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரூ.32.93 லட்சம் மக்களுடைய பணம் ஏப்பம் விடப்பட்டது என்று சங்கம் சுட்டிக் காட்டுகிறது.

ஊழியர் சங்கங்களின் புகார்கள் குறித்து வங்கியில் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வங்கியின் சட்ட ஆலோசகர் பிரதிபாவின் அண்ணன் திலீப்சிங் பாட்டீல்தான். இந்தக் கடன் தள்ளுபடியில் பலன் அடைந்ததே திலீப்சிங்கின் மனைவிதான். இந்த வகையில் மட்டும் பிரதீபாவும் அவருடைய உறவினர்களும் ரூ.2 கோடி பணத்தை ஏப்பம் விட்டுவிட்டதாக ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

கடன் பெற்ற பிரதிபாவின் உறவினர்கள்

1. திலீப்சிங் என்.பாட்டீல் - அண்ணன் - ரூ.3,09,562

2. திலீப்சிங் என்.பாட்டீல் - அண்ணன் - ரூ.5,62,840

3. ராஜேஸ்வரி கிஷோரி சிங் பாட்டீல் - சகோதரரின் மருமகள்-ரூ.45,82,670

4. கிஷோர் திலீப்சிங் பாட்டீல் - அண்ணன் மகன் - ரூ.51,02,183

5. கிஷோர் திலீப்சிங் பாட்டீல் - அண்ணன் மகன்
உதவ்சிங் தக்டு ராஜ்புத் - உறவினர் - ரூ.43,87,680

6. உதவ்சிங் தக்டு ராஜ்புத்
ஜெயஸ்ரீ உதவ்சிங் தக்டு ராஜ்புத் - உறவினர்கள் - ரூ.42,89,602

7. ரந்தீர்சிங் திலீப்சிங் ராஜ்புத்
உதவ்சிங் தக்டு ராஜ்புத் - உறவினர் - ரூ.21,44,800

8. ஜோதி விஜயசிங் பாட்டீல்
கிஷோர் திலீப்சிங் பாட்டீல் - உறவினர் - ரூ.10,69,893


இப்பச் சொல்லுங்க.. திருமதி பிரதிபா பாட்டீல் அரசியல்வாதியா..? இல்லையா..? ஜனாதிபதி பதவிக்குப் பொருத்தமானவரா..? இல்லையா? யோசிங்க.. யோசிச்சுக்கிட்டே இருங்க..

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்