|
|
Tweet |
போலீஸ் கொலையாளிகளுக்கு ஒரு அட்வைஸ்..!
Posted by
உண்மைத்தமிழன்
at
69
comments
Labels: அரசியல், அனுபவம், ஆ.ராசா, என்கவுண்ட்டர், போலீஸ், வங்கிக் கொள்ளை
ஆ.ராசா, கனிமொழி, தயாநிதியை தப்ப விடும் சி.பி.ஐ..!
ஸ்பெக்ட்ரம் புயல் மீண்டும் டெல்லியில் மையம் கொண்டு, பெரும் அதிர்வுகளை உருவாக்கக் காத்திருக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி என அதற்குத் தேதியும் குறிக்கப்பட்டுள்ளது!
'இவர்களை வெளியில் விடாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு உள்ளேயே வைத்திருக்கப் போகிறீர்கள்..?’ என்று நீதிபதி ஷைனியே சி.பி.ஐ. தரப்பு வக்கீல்களிடம் கோபமாகக் கேட்டார். இதைத் தொடர்ந்து இதுவரை பதிவான இரண்டு குற்றப் பத்திரிகைகளை அடிப்படையாகவைத்துக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. சரத்குமார் உள்ளிட்ட அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை நீதிபதி ஷைனி முன்னால் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.
கடந்த 25-ம் தேதி ஆ.ராசா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில்குமார், சில அதிர்ச்சியான தகவல்களைச் சொல்லி நீதிமன்றத்தின் கவனத்தை முழுமையாகத் தங்கள் பக்கம் திருப்பினார்.
''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சதி மற்றும் மோசடி நடந்துள்ளதாக இந்த வழக்கு நடந்து வருகிறது. ஆனால், இதில் அரசுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகிய மூவரும் தெரிவித்து இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் பதிவாகி உள்ளது. எனவே, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில்சிபல் ஆகிய மூவரையும் இந்த நீதிமன்றத்துக்கு அழைத்து, சாட்சிகளாக விசாரிக்க வேண்டும். அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும்!'' என்று வழக்கறிஞர் சுஷில்குமார் சொன்ன தகவல், அங்கே இருந்த சி.பி.ஐ. தரப்பை மட்டும் அல்ல... செய்தி பரவியதும் பிரதமரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
''ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்ற உடனேயே அதை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததாகப் புகார் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், உரிமங்கள் விற்கப்படவில்லை. அதிகபட்ச உச்சவரம்பான 74 சதவிகிதத்துக்கு உட்பட்டு சில நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்றுள்ளன. அந்தப் பரிவர்த்தனைக்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தந்துள்ளது!'' என்று சொன்ன சுஷில்குமாரின் வாதங்கள், ப.சிதம்பரத்துக்கும் சிக்கலைக் கொடுத்துள்ளன.
அடுத்து தயாநிதி மாறன் மற்றும் அருண்ஷோரியையும் அவர் விட்டுவைக்கவில்லை. ''2003-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை நிறைவேற்றிய விதிமுறைகளைத்தான் ராசா பின்பற்றினார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் அமைச்சர்களாக இருந்த அருண்ஷோரி மற்றும் தயாநிதி மாறனை இதுவரை ஏன் கேள்வி கேட்கவில்லை? 2007-ம் ஆண்டு தயாநிதி மாறன் பதவி விலகும் முன்பு ஸ்வான் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கும் கோப்புகளில் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். அதை ராசா பதவிக்கு வந்ததும் வெளியில் சுட்டிக் காட்டி இருக்கிறார்!'' என்று சுஷில்குமார் சொல்வது, தயாநிதி மாறனை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது.
இதைத் தொடர்ந்து நீதிபதி ஷைனி முன் ஆஜரானார், சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால். ''இந்த வழக்கில் சி.பி.ஐ. தனது விசாரணையை முடித்துவிட்டது. தனது குற்றப் பத்திரிகையை செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்யும்!'' என்று அறிவித்து, புயல் சின்னத்தைக் காட்டி உள்ளார். அதற்கு முன்னதாக வருவாய்த் துறை மற்றும் அமலாக்கப் பிரிவினர் தங்களது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வார்கள் என்றும் வேணுகோபால் சொன்னார்.
''இந்தக் குற்றப் பத்திரிகையில் கைது செய்யப்பட்ட அனைவரும் என்ன குற்றம் செய்தார்கள் என்பதை முழுமையாகக் கொண்டுவருவோம். இந்த மொத்த சதியிலும் ஒவ்வொருவருக்கும் என்ன பங்கு என்பதையும் சொல்வோம். இதற்காகச் செய்யப்பட பணப் பரிவர்த்தனைகள், எங்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பதையும் கொண்டுவருவோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் குறித்த முழுமையான குற்றச்சாட்டுகள் வெளியில் வரலாம். மேலும், தயாநிதி மாறன் குறித்து ஏற்கெனவே தனது அறிக்கையில் சி.பி.ஐ. சில தகவல்களைச் சொல்லி இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தொழில் அதிபர் சிவசங்கரன் இது தொடர்பாக விரிவான வாக்குமூலத்தை சி.பி.ஐ-யின் முன்பு பதிவு செய்துள்ளார். ''என்னுடைய ஏர்செல் நிறுவனம், தயாநிதி மாறனின் வற்புறுத்தலால்தான் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது!'' என்பது இவரது குற்றச்சாட்டாக உள்ளது. இந்தப் புகாரை செப்டம்பர் 15-ம் தேதிய குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்போகிறார்களா அல்லது அது தனியாக வருமா என்பது தெரியவில்லை!
இப்படி மொத்தமும் தி.மு.க. பிரமுகர்களை மையம்கொண்டதாக அந்தக் குற்றப் பத்திரிகை இருக்கப் போகிறது. பொதுவாக தி.மு.க. செப்டம்பர் 15-ம் தேதியை முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடும். இந்த ஆண்டு சி.பி.ஐ-யும் சேர்ந்து 'கொண்டாடப்’ போகிறது?!
- சரோஜ் கண்பத்
தப்பியது கலைஞர் டி.வி.?
2-ஜி வழக்கின் விசாரணை குறித்து அவ்வப்போது சி.பி.ஐ. தரப்பிலும் அமலாக்கப் பிரிவு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணை நிலவர அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1-ம் தேதி மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அளித்த அறிக்கையில், '2-ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சுமார் 200 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை ஆய்வு செய்துவருகிறோம். இதில் சுமார் 7,800 கோடி முதல் 9,000 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்திருக்கலாம்’ என்று அமலாக்கப் பிரிவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சைப்ரஸ், சேனல் ஐலேண்ட் போன்ற தீவுகளில் இருந்து பெரும்பாலான ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு 2000 முதல் 2004-ம் ஆண்டு வரையிலான பி.ஜே.பி. ஆட்சியில் பிரமோத் மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்திலும் பின்னர் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் சி.பி.ஐ. சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதில், 'மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்தில் அரசின் கொள்கைக்கு மாறாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சில கம்பெனிகளுக்கு அதிகப்படியாக ஒதுக்கப்பட்டது. அதனால் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு கால தாமதம் செய்து ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம், அவர் கால தாமதம் செய்து ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்துள்ளாரே தவிர, ஏர்செல் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தி தனக்கு சாதகமான ஆதாயம் பெற்றதற்கான சாட்சியம் எங்களுக்கு கிடைக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.
கலைஞர் டி.வி. பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுத்ததாகக் கூறுவதை சி.பி.ஐ. தரப்பு ஏற்றுக் கொள்கிறது என்றும் அதனால் கலைஞர் டி.வி-க்கு உடனடியாக பிரச்னை ஏதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஷாகித் பால்வாவின் ஐந்து நிறுவனங்களின் சொத்துகளும், சில வீடுகள், நிலம், வணிகக் கட்டடங்கள் ஆகியவைகளோடு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு 2-ஜி வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், வரும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கும் குற்றப் பத்திரிகை மேலும் சில புயல்களைக் கிளப்பும் என்றே தெரிகிறது.
''200 கோடி வந்தது கனிமொழிக்குச் சொல்லப்படவில்லை!''
கடந்த மே 20-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆவேசம், அவரது வழக்கறிஞர் மூலமாக வெடித்தது. ஆ.ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார்தான் கனிமொழிக்கும் வழக்கறிஞர்.
'கனிமொழி மீது வழக்குத் தொடர்ந்து நடைபெறுமானால், பிரதமரையும் சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்துப் பேசினார் சுஷில்குமார்.
'கனிமொழியை இந்த வழக்கில் சேர்த்த சி.பி.ஐ., முறைப்படி அனுமதி பெறவில்லை. அவர் மாநிலங்களவை எம்.பி. ஆனால், அவரை சி.பி.ஐ. ஒரு தனிப்பட்ட நபராகவே கருதிக் கைது செய்துள்ளது. அவரைக் கைது செய்தது குறித்து முறைப்படி மாநிலங்களவைத் தலைவரிடம் அனுமதிகூட பெறவில்லை. கலைஞர் டி.வி-யில் 20 சதவிகிதப் பங்கு இருப்பது மட்டுமே அவர் செய்த குற்றம் தவிர, வேறு எந்தத் தவறும் அவர் செய்யவில்லை. ஆனால், அவர்தான் கலைஞர் டி.வி-க்கு மூளையாக இருந்தார் என்று சொல்லப்படுவது தவறு. அந்த டி.வி. 10 சதவிகித வட்டிக்கு 200 கோடியைக் கடன் வாங்கிய விவகாரத்துக்கும் கனிமொழிக்கும் சம்பந்தம் இல்லை. அந்த விஷயம் அவருடைய கவனத்துக்கும் கொண்டு வரப்படவில்லை. இரண்டு பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. ஆனால், ஆவண சாட்சியங்கள் எதுவும் கனிமொழிக்கு எதிராக இல்லை!'' என்று சுஷில்குமார் வாதிட்டார்.
இந்த வாதங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே இருந்தார் கனிமொழி!
நன்றி : ஜூனியர்விகடன்
|
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
13
comments
Labels: அரசியல், ஆ.ராசா, கனிமொழி, சமூகம், தயாநிதி மாறன், தி.மு.க. ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல்
தயாநிதியை அடுத்து உருளும் தலைகள்! - டெல்லி ரகசியங்கள்
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மாறன் குடும்பத்துக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கும் கொஞ்சமும் ஒட்டுதல் இல்லை போலும்!
முரசொலி மாறன் மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த போதும், பதவிக் காலமான ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட முழுமையாக நீடிக்கவில்லை. பிரதமராக இருந்த வி.பி.சிங் மற்றும் குஜ்ரால் ஆட்சிகள் கவிழ்ந்ததால், பதவியை இழக்க வேண்டி இருந்தது முரசொலி மாறனுக்கு. வாஜ்பாய் காலகட்டத்தில், உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மாறனால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியவில்லை.
அதேபோலத்தான் தயாநிதி மாறனும். கடந்த ஆட்சியின்போது 'தினகரன்’ இதழில் வெளியான கருத்துக் கணிப்புக் கோபத்தால், தயாநிதி ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி. இப்போது உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை காரணமாக, இரண்டாவது முறையாகவும் ராஜினாமா செய்துள்ளார்!
தயாநிதி பதவி விலகல் குறித்து கருணாநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவராலும் தயாநிதிக்கு வக்காலத்து வாங்க முடியவில்லை. ''உலகத்தில் குறிப்பாக, இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்கு தயாநிதியும் விதிவிலக்கு அல்ல'' என்று சொன்னார். ''பத்திரிகையாளர்கள் பூதாகாரமாகச் சொன்னதை சி.பி.ஐ. நம்பியது. அதை உறுதிப்படுத்திக் கொள்ள வழக்குப் போட்டுள்ளது'' என்று ஏற்கெனவே சொன்னவர்தான் கருணாநிதி. பத்திரிகைகள் சொன்ன பொய்யை கருணாநிதி ஏன் நம்பினார்? அப்பாவி ஆ.ராசாவை ஏன் பதவி விலகச் சொன்னார்? அதாவது, தி.மு.க. தலைவர் இன்னமும் தன்னுடைய சகாக்களின் தவறை உணரவோ, ஒப்புக் கொள்ளவோ, முன் வரவில்லை!
தயாநிதி மாறனின் பதவி விலகல் யாரும் எதிர்பாராத திடுக் சமாசாரம் அல்ல. என்றைக்கு ராசா மீது வழக்குப் பதிவு ஆனதோ... அன்றே இதுவும் தீர்மானிக்கப்பட்டது. ''ஆ.ராசா பதவி விலகியே ஆக வேண்டும்'' என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி-க்கள் குரல் கொடுத்தபோது, ''பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் இருந்தே இப்படித்தான் நடக்கிறது. அந்த சமாசாரங்களையும் விசாரிக்க வேண்டும்'' என்று காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள், தானே வலியப் போய் விவகாரத்தில் மாட்டிக்கொண்டன.
பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக இருந்தார். அடுத்து, அருண்ஷோரி வந்தார். வாஜ்பாய் ஆட்சியில் மூன்றாவதாக இந்தத் துறையைக் கைப்பற்றியவர் தயாநிதி மாறன். சி.பி.ஐ. தன்னுடைய அறிக்கையில் 'மூன்றாவது அமைச்சர்’ என்று சொல்வது, தயாநிதி மாறனைத்தான். அவரது பெயரை இந்த அறிக்கையில் நேரடியாகச் சொல்லாமல், இந்த கோட் வேர்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது.
தயாநிதி மாறன் குறித்த சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டு புரிந்துகொள்ள கஷ்டமான சுற்றி வளைப்புப் புகார் அல்ல. தமிழகத் தொழில் அதிபர்களில் ஒருவரான சிவசங்கரன், தன்னுடைய ஏர்செல் நிறுவனத்தை விற்பனை செய்தது தொடர்பான ஒரு புகாரை சி.பி.ஐ.யிடம் கொடுக்கிறார்.
''என்னுடைய நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக தொலைத் தொடர்புத் துறையிடம் விண்ணப்பம் கொடுத்தேன். அவர்கள் லைசென்ஸ் தர மறுத்தார்கள். தரக் கூடாது என்பதற்காகவே தேவை இல்லாத கண்டிஷன்களைப் போட்டார்கள். அதன் பிறகு, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்க தயாநிதி கட்டாயப்படுத்தினார். என்னை மிரட்டினார். அதன் பிறகு, குறைந்த விலைக்கு நான் அதை விற்றேன். நிறுவனம் கை மாறிய பிறகு, ஏர்செல்லுக்கு தொலைத் தொடர்பு லைசென்ஸ் கிடைத்தது. என்னை மிரட்டியதும், குறைந்த விலைக்கு நிறுவனத்தை விற்கக் கட்டாயப்படுத்தியதும், எனது தொழிலுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது'' என்று தனது வாக்குமூலத்தில் சிவசங்கரன் சொல்லி இருக்கிறார். இவரது பெயரைச் சொல்லாமல், 'ஜென்டில்மேன்’ என்று கோட் வேர்டைச் சொல்கிறது சி.பி.ஐ. தனது அறிக்கையில்!
அதாவது, கலைஞர் டி.வி. மீது என்ன மாதிரியான புகார்கள் கூறப்பட்டனவோ, அதேபோன்று இந்த விவகாரத்திலும் வரப் போகிறது. ''நான் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது, எந்த ஒரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்தபோது, நான் அமைச்சராக இல்லை!'' என்று தயாநிதி தரப்பு விளக்கம் வைத்துள்ளது.
''ஆஸ்ட்ரோ நிறுவனத்துக்கும் சன் குழுமத்துக்கும் 1998-ம் ஆண்டு முதலே தொடர்புகள் உண்டு'' என்றும் சொல்கிறார்கள். ஆனால், சி.பி.ஐ. இன்னும் என்ன மாதிரியான பூதங்களைக் கோர்ட்டில் கொண்டுவந்து கொட்டப் போகிறது என்று தெரியவில்லை.
''அடுத்து, யாரைக் குற்றப் பத்திரிகையில் கொண்டுவரப் போகிறீர்கள்?'' என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன் கிண்டலாகக் கேட்கும் அளவுக்கு, மத்திய அரசாங்கத்தின் முகம் சிதைந்து கொண்டிருக்கிறது. தயாநிதி தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிவசங்கரன் உள்ளிட்ட 10 பேரிடம் வாக்குமூலம் வாங்கி வைத்துள்ளது சி.பி.ஐ.
ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களுக்கு, தயக்கம் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் பல்வேறு வங்கிகள் மூலமாகக் கடனாகத் தரப்பட்டுள்ளன. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை, பி.ஜே.பி. குறி வைத்து தாக்கி வருகிறது. எந்தக் கேள்விகளும் கேட்காமல், நிதித் துறை அந்தக் காலகட்டத்தில் செயல்பட்டதன் பின்னணியில் அடங்கி உள்ள மர்மத்தை விசாரிக்க வேண்டும் என்கிறது பி.ஜே.பி.
''மத்திய மந்திரி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ராசா, இந்த ஊழலின் ஒரு பங்குதாரர்தான். இன்னொரு பங்குதாரர் சிதம்பரம்.'' என்கிறது பி.ஜே.பி. இவர்கள் அடுத்ததாக, கபில்சிபலையும் குறிவைத்து உள்ளார்கள். இப்போது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக கபில்சிபல் இருக்கிறார்.
''ரிலையன்ஸ் கம்பெனி தனது தொலைபேசிச் சேவையை கிராமப் பகுதிகளில் இருந்து திடீரென ரத்து செய்தது. இது விதிமுறையை மீறிய செயலாகும் என்று சொல்லி தொலைத் தொடர்புத் துறை 650 கோடியை அபராதமாக விதித்தது. அதாவது, 13 மண்டலத்துக்குத் தலா 50 கோடி என்று தொகை முடிவு செய்யப்பட்டது. இந்த 50 கோடியை 5 கோடியாகக் குறைத்து இருக்கிறார் கபில்சிபல். இந்தச் சலுகை மூலமாக அவர் அடைந்த லாபம் என்ன என்று விசாரிக்க வேண்டும்’ என்று பி.ஜே.பி. கேட்கிறது. ஏற்கெனவே, அமைச்சர் சரத்பவார் மீதான குற்றச்சாட்டு எழுந்து அடங்கி இருந்தது. அதையும் மீண்டும் கிளறப் போகிறார்கள்.
போகிற போக்கைப் பார்த்தால், மன்மோகன் சிங் அதிக நாட்கள் நீடிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது!
நன்றி : ஆனந்தவிகடன்
|
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
18
comments
Labels: அரசியல், ஆ.ராசா, ஊழல், கருணாநிதி, கனிமொழி, தயாநிதி மாறன், ஸ்பெக்ட்ரம் ஊழல்
சி.பி.ஐ. ஸ்கேனரில் சிங்கப்பூர் திக்திக்!
ஸ்பெக்ட்ரம் பூதம் தயாநிதி மாறனையும் கவ்விக் கொண்டது! ஆ.ராசா, கனிமொழி இருவருடன் இது முடிந்துவிடும்... என்று நினைத்து இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அதிர்ச்சியின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தயாநிதியின் பெயரை சி.பி.ஐ. தனது அறிக்கையில் தாக்கல் செய்ததுமே டெல்லி காங்கிரஸ் பிரமுகர் அடித்த கமென்ட், 'தி.மு.க-வின் கரன்சி ஆக்ஸிஜன் இதன் மூலம் அடைக்கப்பட்டுவிட்டது!’ என்பதுதான். அந்த அளவுக்கு, சென்னையையும் டெல்லியையும் அதிரவைத்துள்ளது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு, டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னால் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதில் ஆ.ராசா நீங்கலாகக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாருக்கும் கிடைக்கவில்லை என்பதால், திகார் சிறையிலேயே இருக்கிறார்கள்.
ஜூன் 3-ம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கி, ஜூலை 4-ம் தேதி மீண்டும் கோர்ட் நடவடிக்கைகள் தொடங்கியது. கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ-யைப் பார்த்து நீதிபதி சைனி சீறினார் - ''குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? தொடர்ந்து அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பது உங்களது விருப்பமா? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தர வேண்டிய ஆவணங்களை இதுவரை ஏன் தரவில்லை? இனியும் தாமதம் செய்தால், சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!'' என்றதும், சி.பி.ஐ. தரப்பு கொஞ்சம் ஆடிப்போனது.
ஆனால், மறு நாள் உச்ச நீதிமன்றத்தில் சிலிர்த்துக் கிளம்பியது சி.பி.ஐ. ''இந்த வழக்கு, இதுவரை கைதான 14 பேருடன் முடியப்போகும் சமாசாரம் அல்ல. இதோ வருகிறது அடுத்த அஸ்திரம்!'' என்று சி.பி.ஐ. வைத்த வெடிகுண்டுதான்... முதல்கட்டமாக தயாநிதி மாறனின் மந்திரி பதவிக்கு வேட்டுவைத்துள்ளது. ஆ.ராசா, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த விவகாரங்களை மட்டும் அல்ல... அதற்கு முன்னால் தயாநிதி மாறன் பதவியில் இருந்த காலத்தையும் சி.பி.ஐ. தோண்ட ஆரம்பித்து உள்ளது.
இதுதொடர்பான குற்றச்சாட்டை 'பொது நல வழக்கு தொடர்பான சமூக சேவை அமைப்பு’ உச்ச நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்தது. வக்கீல் பிரசாந்த் பூஷண் நடத்தி வரும் அமைப்பு இது.
சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தைக் கையில் எடுக்கும் என்று தெரிந்ததுமே, சிவசங்கரனை அதிகாரபூர்வமாக அழைத்து ஜூன் 6-ம் தேதி வாக்குமூலம் வாங்கியது சி.பி.ஐ. அவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்துதான், கடந்த 6-ம் தேதி சி.பி.ஐ. ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி இருவரும்தான், 2ஜி வழக்கை வைத்துக் கலக்கி வரும் நீதிபதிகள். இவர்களிடம் சி.பி.ஐ. சார்பில் மூடிய கவர் ஒன்றை சி.பி.ஐ. வக்கீல் கே.கே.வேணுகோபால் கொடுத்தார். மொத்தம் 71 பக்கங்களைக்கொண்ட அந்த அறிக்கையின் சாராம்சத்தை வேணுகோபால் சொல்லச் சொல்ல... அதிர்வலைகள் பலமாகின.
இந்த அறிக்கையில் தயாநிதி மாறனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்ததாக சில விஷயங்களை அவர் பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்டார் வேணுகோபால். ''2004 - 2007 காலகட்டத்தில் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை விரிவாக்கம் செய்ய முயற்சித்தது. ஆனால், கிடைக்கவில்லை. ஏர்செல் நிறுவனத்திடம் தேவை இல்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. அவசியமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. ஏர்செல்லைப் போலவே வேறு இரண்டு நிறுவனங்களும் இதே போன்று விண்ணப்பம் செய்திருந்தன. அந்த நிறுவனங்களிடம் இது மாதிரியான கெடுபிடிகள் காட்டப்படவில்லை. உடனடியாக அந்த இரண்டு நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கிடைத்தது.
தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் ஏதோ ஒரு நிர்பந்தத்தை ஏர்செல் நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறார் என்பது சி.பி.ஐ-யின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் அனந்தகிருஷ்ணன் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளைத் தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளார்கள். சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அதாவது, இந்த விவகாரத்தில் இறங்கி சி.பி.ஐ. விசாரிப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதிகளிடம் சொன்னார் வேணுகோபால். சிவசங்கரன் பற்றிக் குறிப்பிடும்போதும், 'திஸ் ஜென்டில்மேன்’ என்று மட்டும் சொன்னார். ''பணப் பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ. தனது விசாரணைகளை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூரில் இருக்கும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி மூலமாகத்தான் இதற்கான பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன என்று சந்தேகப்படுகிறோம். சிங்கப்பூரில் உள்ள அதன் அதிகாரியை ஜூலை 13-ம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைத்து உள்ளோம். மேக்சிஸ், ஆஸ்ட்ரோ, சன் டைரக்ட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மத்தியிலும் இந்தக் கால கட்டங்களில் நடந்துள்ள டீலிங்குகளை வைத்து, என்ன நடந்துள்ளது என்பதை முழுமையாக அறிய முடியும். அந்த அதிகாரி எங்கள் முன்பு ஆஜராகி விவரங்களை கூறியபிறகு எங்கள் விசாரணை வேகம் பிடிக்கும்!'' என்று சி.பி.ஐ. வட்டாரத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிந்துவிடும். 2001 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான லைசென்ஸ் முறைகேடுகள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிந்துவிடும்!'' என்று வக்கீல் கே.கே.வேணுகோபால் சொல்லியதை வைத்துப் பார்க்கும்போது, தயாநிதி மாறன் மீது முழுமையான குற்றப் பத்திரிகை செப்டம்பர் மாதத்துக்குள் தாக்கல் ஆகிவிடும் போலிருக்கிறது!'' என்கிறார்கள் டெல்லி நீதித் துறை வட்டாரங்களில்.
சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கை தொடர்பாக எந்தக் கருத்தையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொல்லவில்லை. ''இந்த அறிக்கை பற்றிய விசாரணை வரும் 11-ம் தேதி நடக்கும்!'' என்று மட்டும் கூறினார்கள். இதனால், 11-ம் தேதிக்குள் சி.பி.ஐ. தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ''தயாநிதி மாறனை 11-ம் தேதிக்குள் விசாரிக்க வாய்ப்பு இல்லை. 13-ம் தேதி சிங்கப்பூர் வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ. முன்னால் ஆஜராக இருக்கிறார்கள். அவர்களது வாக்குமூலங்களையும் வாங்கி வைத்துக்கொண்டுதான், சி.பி.ஐ. தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்கும்.
அதே சமயம், நீதிபதிகள் 11-ம் தேதி என்ன உத்தரவிடுகிறார்கள் என்பதையும் வைத்தே சி.பி.ஐ. செயல்படும்...'' என்று டெல்லியில் ஒரு தரப்பினர் சொல்ல... ''அதற்கு முன்பேகூட சி.பி.ஐ. தன் செயல்பாட்டை தொடங்கிவிடும். அதைப் புரிந்துகொண்டுதான், பிரதமர் தரப்பிலிருந்து தயாநிதி மாறனின் மந்திரி பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசினார்கள். 'ஆ.ராசா விஷயத்தில் நடந்ததுபோல் இதில் அடம் பிடிக்க வேண்டாம். ராஜினாமாவை ஒத்திப் போடுவது காங்கிரஸ் - தி.மு.க. ஆகிய இரு தரப்புகளுக்குமே மேலும் மேலும் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று எடுத்துச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்தே ராஜினாமா கடிதத்தை தயாநிதி மாறன் ஒப்படைத்தார். மந்திரி பதவியிலிருந்து விலகிய பிறகுதான் ஆ.ராசா தொடர்பாக சி.பி.ஐ-யின் நேரடி நடவடிக்கைகள் தொடங்கின. அதுபோலவே இதிலும் ஆக்ஷன்கள் வேகம் பெறும்'' என்றும் கூறப்படுகிறது.
''இந்த நிகழ்வுகள் சூடு பிடித்த சமயத்தில் டெல்லியில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 'பிரதமர் இனியும் சும்மா இருக்கக்கூடாது' என்ற பாணியில் உசுப்பிக் கொண்டே இருந்ததை சுட்டிக் காட்டும் சிலர், ''மந்திரி பதவியிலிருந்து தயாநிதி மாறன் விலகிய பிறகு தமிழக அரசு தரப்பிலிருந்து சில நடவடிக்கைகளை எடுப்பதே ஜெயலலிதாவின் நோக்கம்!'' என்றும் கூறத் தொடங்கியுள்ளனர்.
''தயாநிதி தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் சன் டைரக்ட்டில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம், சன் டைரக்டில் முதலீடு செய்தபோது தயாநிதி அமைச்சராகவே இல்லை. இந்த நிறுவனங்களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை!'' என்று தயாநிதிமாறன் தரப்பு தனது விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்துள்ளது.
ஜூலை 13-க்குப் பிறகு விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும்!
- சரோஜ் கண்பத்
நன்றி : ஜூனியர்விகடன்-10-07-2011
|
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
8
comments
Labels: அரசியல், ஆ.ராசா, ஊழல், கருணாநிதி, சி.பி.ஐ., தயாநிதி மாறன், ஸ்பெக்ட்ரம் ஊழல்
கொந்தளித்த ஆ.ராசாவின் மனைவி!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
டெல்லி திகார் சிறை வட்டாரத்தில் உலா வந்த ஆ.ராசாவின் உறவுக்காரர்களை, திருச்சி வருமானவரித் துறை விசாரணைக்காக அழைத்தது!
ஜூன் 24-ம் தேதி, காலை 10.35-க்கு ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆ.ராசாவின் சகோதரர் ராமச்சந்திரன், அக்கா மகள் வித்யா, அக்கா மகன்கள் பரமேஸ்வரன், வெங்கடேசன் ஆகியோர் இரண்டு கார்களில் வந்து இறங்கினர்.
அடுத்து வந்த ராமச்சந்திரனை சூழ்ந்து கொண்ட நிருபர்கள், ''எதற்காக ஆஜராகச் சொல்லி உத்தரவு வந்துள்ளது? யார் யார் ஆஜர் ஆகிறீர்கள்?'' என்று கேட்க, ''உங்களுக்கு யார் தகவல் சொன்னார்களோ, அவர்களிடமே போய் விசாரித்துக் கொள்ளுங்கள்!'' என்று முறைத்தார்.
சற்று நேரத்துக்குப் பின்னர் அவர்களுடன் வந்த ஆடிட்டர்கள், ''வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ததில் சில சந்தேகங்கள் என்று பரமேஸ்வரியையும் ராமச்சந்திரனையும் வரச் சொல்லி இருக்கிறார்கள். சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை வருமானவரித் துறையினர் வரச் சொல்லி விசாரிப்பது சாதாரண விஷயம்தான்...'' என்று விளக்கம் சொன்னார்கள்.
பரமேஸ்வரி விசாரணைக்காகச் சென்ற சிறிது நேரத்திலேயே, வித்யாவும் வெங்கடேசனும் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். பரமேஸ்வரியிடம் மதியம்வரையும், ராமச்சந்திரனிடம் மாலைவரையும் விசாரணை நடந்தது.
இது தொடர்பாக விவரம் அறிந்த வட்டாரத்தில் பேசியபோது, ''இருவரிடமும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் இருக்கின்றன. ஆகவே, அவர்களிடம் ஆரம்பத்தில் விசாரணை நடத்தப்பட்டது. ஆ.ராசா கைதுக்கு முன்னர், பெரம்பலூர் மற்றும் திருச்சியில் அவரது சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் புகுந்து ரெய்டு நடத்திய சி.பி.ஐ. டீம், பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றது. சொத்துகள் வாங்குவதற்கான வருமானம் எப்படிக் கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடந்தது. பரமேஸ்வரி மற்றும் ராமச்சந்திரன் சொன்ன பதில்களில் விசாரணை அதிகாரிகளுக்கு முழுத் திருப்தி ஏற்பட்டதாகத் தெரியவில்லை. விரைவில் மற்ற உறவுகளையும் அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பார்கள்!'' என்றனர்.
இது குறித்து நாம் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் செல்போனில் தொடர்பு கொண்டோம். அது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. திருச்சியில் இருக்கும் ராசாவின் சகோதரர் கலியபெருமாளிடம் பேசினோம். ''உங்களிடம் பரமேஸ்வரி எதுவும் பேச மாட்டார். எங்கள் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை!'' என்று கூறினார்.
வருமான வரித் துறை அலுவலகத்துக்கு வந்திருந்த ஆ.ராசாவின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி சிறு குறிப்புகள்.
பரமேஸ்வரி: ஆ.ராசாவின் மனைவி. சாதிக் பாட்சா நிர்வாக இயக்குநராக இருந்த க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், அதன் டைரக்டர் பொறுப்பில் இருந்தார். பின்னர் விலகிவிட்டார்.
ராமச்சந்திரன்: ஆ.ராசாவின் குடும்பத்தில் மூத்த ஆண். ஐ.எஃப்.எஸ். அதிகாரியான இவர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி இருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றத் துறையின் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
பரமேஸ்வரன்: ஆ.ராசாவின் மூத்த அக்காள் விஜயாவின் மகன். அம்மா விஜயா, அப்பா பச்சைமுத்து இருவரும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் சாதிக் பாட்சா எம்.டி-யாக இருந்தபோது, இவர் ஜே.எம்.டி. பொறுப்பில் இருந்தார். சாதிக் பாட்சாவின் மறைவுக்குப் பின்னர் இவர்தான் எம்.டி. சாதிக்பாட்சா தரப்பில் சுப்புடு என்கிற சுப்பிரமணியனுக்கும் முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. செக்கில் கையெழுத்துப் போடும் அதிகாரம் இந்த இருவருக்கும்தான். இது வரை 2-ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் பரமேஸ்வரன் விசாரிக்கப்படாமல் இருப்பது, விவரம் அறிந்தவர்கள் வட்டாரத்தில் ஆச்சர்யமாக விவாதிக்கப்படுகிறது.
வித்யா: ஆ.ராசாவின் சகோதரி கமலாவின் மகள். தந்தை அரங்கராஜன், கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் சி.டாக் என்ற ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். இது பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குத் தேவையான மென்பொருட்களை உற்பத்தி செய்து தருகிறது.
வெங்கடேசன்: ஆ.ராசாவின் சகோதரி சரோஜாவின் மகன். பி.எஸ்.என்.எல். நிறுவன திருச்சி மண்டல அலுவலகத்தில் அக்கவுன்ட் ஆபீஸராகப் பணியாற்றுகிறார். ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது, இரண்டு வருட காலமாக டெலிகாம் டிபார்ட்மென்டில் அசிஸ்டென்ட் பிரைவேட் செக்ரெட்டரியாக டெல்லியில் பணியாற்றினார்.
- ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
நன்றி : ஜூனியர்விகடன்-03-07-2011
|
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
11
comments
Labels: அரசியல், ஆ.ராசா, ஊழல், தி.மு.க., ஜூ.வி., ஸ்பெக்ட்ரம் ஊழல்
தவித்த கனிமொழி... தழுதழுத்த கருணாநிதி...!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஜூனியர்விகடனில் எப்போதும் தனியாக எழுதப்படும் கனிமொழியின் ஜெயில் வாசம் பற்றிய கட்டுரை, இந்த முறை அதிசயமாக கழுகாரின் வாயில் இருந்து வருவதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
விளம்பரத்திற்காகவா.. அல்லது வித்தியாசத்திற்காகவா என்று தெரியவில்லை..! ஆனாலும் இதுவும் நன்றாகத்தான் எழுதப்பட்டுள்ளது..
இனி படியுங்கள்..!
''அதனால்தான் டெல்லி சென்ற கருணாநிதியை காங்கிரஸ் ஆட்கள் யாருமே சந்திக்கவில்லையா?'' என்றோம்.
''கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் சென்னையில் இருந்து டெல்லிக்குச்சென்றார். அன்று மாலை திகார் சிறைக்குப் போய் கனிமொழியைச் சந்தித்தார். இரவு டெல்லியில் தங்கிவிட்டு, புதன்கிழமை மாலைதான் சென்னை திரும்பினார். இந்த ஒன்றரை நாள் பயணத்தில் அவரை டெல்லியில் சந்தித்த ஒரே காங்கிரஸ் வி.ஐ.பி., மத்திய அமைச்சர் வயலார் ரவி மட்டும்தான். அவரும் ரொம்ப கேஷூவலாக வந்து கருணாநிதியைச் சந்தித்தாராம். மற்றபடி, காங்கிரஸ்காரர்கள் யாரும் கருணாநிதியை சந்திக்க வரவும் இல்லை... இவர் முயற்சிக்கவும் இல்லை.''
''சொல்லும்!''
''ஆனால், தன்னுடைய கோபம் அனைத்தையும் தெரிவிக்க வேண்டிய இடத்தில் தி.மு.க. காட்டிவிட்டது என்பதுதான் உண்மை. கருணாநிதி டெல்லியில் இருந்தபோது, மத்தியக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அவர் பேசப் பேச, அங்கே இருந்த தலைவர்களுக்கு குப்பென்று வேர்த்துவிட்டது. 'லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும்’ என்று அண்ணா ஹஜாரே போன்றவர்கள் சொல்ல... அதை ஏற்காமல் மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், 'பிரதமரையும் உறுதியாகச் சேர்க்கவேண்டும்’ என்று டி.ஆர்.பாலு சொன்னால் எப்படி இருக்கும்? 'காங்கிரஸ் தன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்கு முன்னதாக, தானே போய்விட ஒரு காரணத்தை தி.மு.க. தேடியது. அதுதான் லோக்பால்!’ என்கிறார்கள். மன்மோகன் சிங்கையும் சோனியாவையும் சுரீர் எனத் தைக்கிறது, தி.மு.க-வின் கோரிக்கை. யார் முந்திக் கொள்கிறார்கள் என்று பார்ப்போம்!''
''அடுத்து திகார் காட்சிகளுக்கு வாரும்!''
''துன்பமும் துயரமும் வேதனையும் கலந்த காட்சி அது! 'இந்த வயதான மனிதர் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார், பார்த்தீர்களா?’ என்று கருணாநிதியை டெல்லி விமான நிலையத்தில் பார்த்த இந்திப் பத்திரிக்கையாளர் ஒருவர் வருத்தப்பட்டாராம். அந்த அளவுக்கு கருணாநிதி டெல்லியில் கஷ்டப்பட்டார். அவரது வழக்கமான வீல் சேரை டெல்லிக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை. அதை எடுத்துச் சென்றாலும், ஸ்லோப் உள்ள இடங்களில்தான் அதைப் பயன்படுத்த முடியும் என்பதால், அங்கேயே இருக்கும் வீல் சேரைப் பயன்படுத்திக்கொள்கிறார். திகாருக்கு அவர் சென்றபோது, ராஜாத்தி அம்மாளும் உடன் இருந்தார். கனிமொழியைப் பார்த்ததும் கதறிக் கதறி அழுதிருக்கிறார். கனிமொழியும் கண்ணீர் மல்க அப்பாவைத் தொட்டுச் சமாதானப்படுத்தினார். ஆற்றாமை மிகுதியால் தான் உட்கார்ந்து இருந்த வீல் சேரை இறுக்கமாக கருணாநிதி பிடிக்க... 'அவ்வளவு அழுத்திப் பிடிக்காதீங்கப்பா. கை வலிக்கப்போகுது’ என்று கனிமொழி சொல்லி இருக்கிறார். 'உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியலை... இங்கயே ரெண்டு வாரத்துக்குத் தங்கிடலாம்னு இருக்கேன்’ என்று கருணாநிதி சொல்ல... 'வேண்டாம்பா. நீங்க சென்னையிலயே இருங்க’ என்று கனிமொழி மறுத்தாராம். 'தயாளுவும் உன்னைப் பார்க்கணும்னு சொல்றா! அடுத்த தடவை வரும்போது அழைச்சுட்டு வர்றேன்’ என்ற கருணாநிதி, 'பேரன் ஆதியைப் பார்க்கறப்பதான் எனக்கு வருத்தம் அதிகமாயிடுது. அதனால, காலையில ஒரு தடவையும் ராத்திரி ஒரு தடவையும் அவன்ட்ட பேசுறேன்’ என்று சொன்னாராம். இவை அனைத்தையும் கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டு இருந்தாராம் ராஜாத்தி!''
''ம்!''
''அப்போது, கனிமொழி சில கோரிக்கைகளை வைத்துள்ளார். 'சரத் ரொம்ப வருத்தமா இருக்கார். அவரை நீங்க பார்த்து ஆறுதல் சொல்லணும். அதே மாதிரி, ராசாவோட மனைவி பரமேஸ்வரியிடமும் நீங்க பேசணும்’ என்று சொன்னாராம். 'நான் பேசுறேன்மா’ என்று கருணாநிதி சொல்லிவிட்டு வந்தார். கனிமொழியைச் சந்தித்துவிட்டு ஹோட்டலுக்கு வந்த கருணாநிதி, யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தாராம். அழகிரி வந்த பிறகுதான் கொஞ்சம் சமாதானம் ஆகி, சில வார்த்தைகள் பேசினாராம். தன்னுடைய உடல் நிலை, மனநிலை பற்றி அதிகம் பேசிய கருணாநிதி, 'மக்கள் என்னை சரியாப் புரிஞ்சுக்கலை. அதனால, இப்போ என் மக்களைக் காப்பாத்த முடியலை’ என்று அந்தச் சூழ்நிலையிலும் நயத்துடன் பேசி இருக்கிறார்.''
''சரத், பரமேஸ்வரியைப் பற்றி ஏன் கனிமொழி பேசினார்?''
''மிக மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கலைஞர் டி.வி. சரத்குமாரால் திகாருக்குள் பொழுதைக் கழிக்கவே முடியவில்லை. ஆ.ராசா மூன்று வேளையும் சிறை உணவு சாப்பிடப் பழகிவிட்டார். கனிமொழி ஒருவேளை மட்டும் சிறை உணவு சாப்பிடுகிறார். ஆனால், சரத்குமாருக்கு சிறை உணவு ஒப்புக்கொள்ளவே இல்லை. டெல்லியில் 42 டிகிரிக்கு மேல் அடிக்கும் அனலும் திகாருக்குள் வெம்மையை உண்டாக்கி இருக்கிறதாம். வேனல் கட்டிகள் உருவாக, அதன் எரிச்சல் தாங்க முடியாமல் தவிக்கிறாராம் சரத்.
டெல்லியின் மத்தியப் பகுதியில் வசிக்கும் சரத்குமாரின் சகோதரிதான் தினமும் தன் வீட்டுச் சாப்பாட்டை திகாருக்குக் கொண்டுவருகிறார். சமீபத்தில் அவர் சாப்பாடு கொண்டுவந்தபோது, தி.மு.க-வின் எம்.பி ஒருவர் திகாருக்கு வந்தாராம். 'சரத்துக்கும் கலைஞர் டி.வி-க்குக் கைமாறிய 200 கோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணம் கைமாறிய தேதியில் சரத் அதிகாரப்பூர்வமாக கலைஞர் டி.வி-யில் அங்கம் வகிக்கவே இல்லை. இதை எல்லாம் சொன்னால், கலைஞர் குடும்பத்துக்கு சிக்கலாகிவிடும் என்பதால்தான் சரத் அமைதியாக இருக்கிறார். ஆனால், உணவு, உடல் உபாதைகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செலவுக்குக்கூடப் பணம் இல்லாத அளவுக்குத் தவிக்கும் எங்களை, உங்கள் கட்சியும் கைவிட்டுவிட்டது. இனியும் சரத் அமைதியாக இருக்க மாட்டார்!’ என ஆவேசமாக வெடித்தாராம்.''
''அப்புறம்..?''
''சரத்தை எப்படியாவது அப்ரூவர் ஆக்கிவிட வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருக்கிறது. '200 கோடி கைமாறியதில் உங்களின் பங்களிப்பு இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அதே நேரம் உங்களை நிர்ப்பந்தித்த ஆட்களைப்பற்றி நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டும்!’ என வற்புறுத்தும் சி.பி.ஐ., அதற்கு கைம்மாறாக சரத்தின் ஜாமீன் கோரிக்கைக்கு உதவுவதாகச் சொல்கிறதாம். சிறையின் சூழ்நிலை பிடிக்காமல் தவிக்கும் சரத், எந்த நேரத்திலும் அப்ரூவர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அவர் வாய் திறந்தால், தி.மு.க-வின் மிக முக்கியத் தலையே திகாரை நோக்கி வரக்கூடிய இக்கட்டு உருவாகுமாம்!''
''சரத்தை சமாதானப்படுத்தும் படலம் தொடங்கி இருக்குமே?''
''யாருடைய சமாதானத்தையும் ஏற்கிற நிலையில் சரத் இல்லை. தயாநிதி மாறனையே 'பார்க்க மாட்டேன்’ எனச் சொல்லி திருப்பி அனுப்பிய சரத், கருணாநிதியின் சந்திப்பின்போதும் பெரிதாக ஏதும் பேசவில்லையாம். 'எனக்கும் 200 கோடிக்கும் என்ன சம்பந்தம்?’ என சரத் கேட்க, 'இதே கேள்வியைத்தான் என் மகளும் கேட்கிறார். உங்களுக்கே தெரியும்... சினியுக் கம்பெனியில் கடன் வாங்கிய விஷயமே கனிக்கு தெரியாது. அதனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் ஆலோசனை நடத்தியபோதுதான், கனிமொழிக்கு விஷயம் தெரியும். உங்க இரண்டு பேருடைய சூழ்நிலையும் ஒன்றுதான்!’ என உருகினாராம் கருணாநிதி. சிறையில் கனிமொழியுடன் மட்டுமே சரத் பேசுகிறாராம். ஆ.ராசாவின் முகத்தை அவர் திரும்பிக்கூட பார்ப்பது இல்லை. கனிமொழிக்குத் தேவையான உடைகள்கூட சரத்குமாரின் சகோதரி வீட்டில் இருந்துதான் வருகிறது. கனிமொழியின் சமாதானத்துக்கு மட்டுமே சரத் கட்டுப்படுகிறாராம். சரத் உடல்நிலை சரியில்லாமல் தவிக்கும் நிலையை கருணாநிதியிடம் சொன்ன கனிமொழி, 'அவரை சமாதானப்படுத்துவது சிரமம்’ எனச் சொன்னாராம்.''
''பரமேஸ்வரி விஷயம்?''
''ஆ.ராசாவின் மனைவியான பரமேஸ்வரி அதிகப் பயத்தில் இருக்கிறார். 'தன்னுடைய கணவர் சிக்கவைக்கப்பட்டுள்ளார்’ என்ற சந்தேகம் பலமாக இருக்கிறது. அதைத்தான் பேசி சமாதானப்படுத்தச் சொல்லி இருக்கிறாராம் கனிமொழி!'' என்ற கழுகார், அருகில் இருந்த ஐஸ் வாட்டரில் ஒரு 'சிப்’ பருகிவிட்டுத் தொடர்ந்தார்.
''கேபிள் டி.வி-க்களை மொத்தமாக அரசாங்கமே கையில் எடுக்கப்போகிறது என்று நான் உமக்குச் சொல்லி இருந்தேன். 'குறைந்தபட்சம் 30 ரூபாய்வரைக்கும் கொடுத்தால்கூட எனக்கு சந்தோஷம்தான்’ என்று ஜெயலலிதா சொன்னதையும் நான் உமக்கு சொன்னேன். அதன் தொடர்ச்சியாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை கோட்டைக்கு அழைத்துப் பேசினார் முதல்வர். இதில் கோவை யுவராஜ் தலைமையிலான சங்கத்தினரும் கரூர் ஆறுமுகம் தலைமையிலான சங்கத்தினரும் கலந்துகொண்டனர். ஆபரேட்டர்கள் தரப்பில், 'சென்னையில் இருப்பதுபோலவே எல்லா ஊர்களிலும் தமிழ் சேனல்கள் அனைத்தும் இலவசமாகத் தர ஏற்பாடு செய்யவேண்டும். கடந்த ஆட்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கேபிள் தொழிலைவிட்டே போகும் அளவுக்குத் தொல்லைகள் தரப்பட்டன. ஆளும் கட்சியால் தொழில் பாதுகாப்பு இல்லாமல் போனது. எங்களுக்குத் தொழில் பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அரசு கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு மையங்களை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்று கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்.
''என்னவாம்?''
''தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநிலத் தலைவரான சகிலன்தான் இதுவரை இந்தப் பிரச்னையை வைத்துப் புயல் கிளப்பி வந்தவராம். எஸ்.சி.வி-க்கு எதிரானவர்களை ஒன்று திரட்டுவார் இவர். ஜெயலலிதா புதிய குரூப் ஒன்றை சந்தித்து இருப்பதைப் பார்த்து, சகிலன் தரப்புக்கு அதிர்ச்சி. 'முதல்வரை சந்திக்கும் தகவல் எங்களுக்குச் சொல்லப்படவே இல்லை. அவர் சந்தித்தது எல்லாமே, புதிதாக உருவான சங்கங்கள். 'அரசு கேபிளைக் கொண்டு வரக் கூடாது’ என்பதற்காக செயல்படும் சிலர் இது போன்ற சங்கங்களைத் திடீரெனத் தொடங்கி, பின்னால் இருந்து இயக்குகிறார்கள். நாங்கள் முதல்வரை சந்தித்தால் இந்த உண்மை வெளிவந்துவிடும் என்பதால்தான் எங்களைத் தவிர்த்துவிட்டனர். கூடிய சீக்கிரமே முதல்வரை சந்தித்து எல்லா உண்மைகளையும் சொல்வோம்’ என்று சொல்லி வருகிறாராம்.''
''கேபிள் ஒயர்களைப் போலவே இவர்களும் செம சிக்கலில் இருப்பார்கள்போல!'' என்றோம். சிரிப்புச் சத்தம் வானத்தில் கேட்டது!
நன்றி : ஜூனியர்விகடன்-ஜூன்-29, 2011
|
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
13
comments
Labels: அரசியல், ஆ.ராசா, ஊழல், கலைஞர், கனிமொழி, திஹார் ஜெயில், ஸ்பெக்ட்ரம் ஊழல்












