என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சுஜாதா என்ற இந்த நடிகையின் திரையுலக வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்திருந்த திரையுலகம், மறு பக்கத்தை கடைசிவரையில் பார்க்கவே முடியவில்லை. அப்படியொரு இரும்புக் கோட்டைக்குள் சிக்கிக் கொண்டிருந்த புள்ளிமானாக இருந்தவர் சுஜாதா..!
கடந்த 5 ஆண்டு காலமாக மருத்துவமனைக்கும், வீட்டுக்குமாக அவர் அலைந்திருந்தபோதிலும் அது பற்றிய விஷயங்கள்கூட மீடியாக்களுக்கு பரவாமல் பார்த்துக் கொண்டனர் அவரது குடும்பத்தினர்..!
சுஜாதா தமிழில் அறிமுகமான அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதாவுக்கு மேக்கப் போட்டவர் சுந்தரமூர்த்தியின் அப்பாதான். அதன் பின்பு சுந்தரமூர்த்தி அத்தொழிலைக் கையில் எடுத்தபோது பாபாவரையிலும் ரஜினிக்கும், சுஜாதாவுக்கும் ஆஸ்தான மேக்கப்மேன் இவரே..! சுஜாதாவின் அஞ்சலியில் அவரது பெண் திவ்யாவின் கண்ணீருக்குப் பின்பு இந்த சுந்தரமூர்த்தியின் கதறல்தான் அதிகமாக இருந்தது..!
போலீஸ் ஸ்டேஷன் என்ற நாடகம்தான் அவர் முதன் முதலில் நடித்த நாடகம் என்கிறார்கள். இந்த நாடகம் அப்போது தமிழகத்தில்கூட பிரபலமாகப் பேசப்பட்டதாம்.
இதற்கிடையில் 1968-ல் டூ கல்யாண் என்ற இந்திப் படத்தில் ஒரு சில காட்சிகளில் வரக்கூடிய அளவுக்குத் தலையைக் காட்டியிருக்கிறார் சுஜாதா..!
அதே 1968-ல் மலையாளத்தில் தபஷ்வனி என்கிற திரைப்படத்தில் ஜோஸ் பிரகாஷ் என்னும் இயக்குநர்தான் சுஜாதாவை மலையாளத் திரையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இதன் பின்பு பல மலையாளப் படங்களில் சிற்சில வேடங்களிலும், குரூப் டான்ஸிலும் வந்து முகத்தைக் காட்டியிருக்கிறார் சுஜாதா.
1971-ம் ஆண்டு எர்ணாகுளம் ஜங்ஷன் என்னும் திரைப்படத்தில்தான் சுஜாதா என்ற தனித்த நடிகை மலையாளத் திரையுலகத்தினருக்குத் தெரிந்திருக்கிறது. காரணம், இத்திரைப்படத்தில்தான் மலையாளத்தில் அப்போதைய காலக்கட்டத்தில் வேறு எந்த புதுமுக நடிகையும் துணிந்து நடிக்க முன் வராத அளவுக்கு டூ பீஸ் உடையில் சுஜாதா நடித்திருந்தது மலையாள திரையுலகத்துக்கே அதிர்ச்சி..!
இந்தத் திரைப்படத்தின் பெயரும், புகழும் இதே காரணத்துக்காகவே சுஜாதாவின் பெயரை கேரளா தாண்டி இங்கேயும் கொண்டு வந்து சேர்த்தது. தமிழில் அப்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸார் அறிமுகப்படுத்திய டூ பீஸ் உடை அழகிகள் பட்டியலில் இன்னொருவராக இவரை அறிமுகப்படுத்திவிடலாம் என்று நினைத்து கோடம்பாக்கத்துக்கு சுஜாதாவை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.
1973-ல் அவள் ஒரு தொடர்கதை படத்திற்காக புதுமுகம் தேடிக் கொண்டிருந்த கே.பாலசந்தரிடம் வழக்கமான புதுமுகமாகத்தான் சுஜாதா அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார். நெடு நெடு என்ற உயரமும், அக்கா போன்ற தோற்றமும் கேரக்டருக்கு ஏற்றாற்போல் கிடைத்துவிட அவர்தான் அந்தக் கவிதா என்று முடிவு செய்துவிட்டார் கே.பி.
இளையராஜாவின் புதுமையான இசை.. கிராமந்தோறும் காதுகளில் கிசுகிசுக்கப்படும் செய்திகளின் தொகுப்பாக அன்னம் என்ற அந்த அபலையின் கதையை உரக்கச் சொன்ன அன்னக்கிளி, சுஜாதா என்றொரு பண்பட்ட நடிகையை தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு அடையாளம் காட்டியது..
இடையில் மீண்டும் தன் தாய்வீட்டுப் பக்கம் கவனத்தைத் திருப்பினாலும் தமிழ் திரைப்பட உலகம் அவருக்குக் காட்டிய வரவேற்பினால் இங்கேயே நிரந்தரமாகத் தங்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது சுஜாதாவின் குடும்பம்.
திரையுலகில் வெற்றி பெற்ற நடிகைகளின் பின்புலத்திலெல்லாம் யாரோ ஒருவரின் ஆசையும், வெறியும் கலந்திருக்கும் என்பது கோடம்பாக்கத்து விதி. இது சுஜாதாவுக்கும் பொருந்தும். தன்னை மேலும், மேலும் நடிக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்த தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்க வேண்டி வழக்கமாக எல்லா நடிகைகளும் செய்த அதே தவறைத்தான் சுஜாதாவும் செய்தார்.
மவுண்ட்ரோட்டில் பழைய ராஜகுமாரி தியேட்டர் அருகில் குடியிருந்த சுஜாதாவின் வீட்டு மாடியில் ஒண்டுக் குடித்தனத்தில் தங்கியிருந்தவர் ஜெயகர் என்பவர். சுஜாதாவின் வருத்தங்களுக்கும், சோகங்களுக்கும் ஆறுதல் சொல்ல படியிறங்கியவர் சுஜாதாவின் மனதுக்குள்ளும் புகுந்துவிட்டார். வழக்கம்போல தனது வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி ஜெயகரை திருமணம் செய்து கொண்டு தனது அடுத்தக் கட்ட வாழ்க்கையைத் துவக்கினார் சுஜாதா. இதுவரையில்தான் அவரது சினிமாவின் பொற்காலம் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
1977-ல் நடந்த அவரது திருமணத்திற்குப் பிறகும், இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும் அவரது திடீர் சினிமா பிரவேசங்களும், திடீர் தலைமறைவுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. பத்திரிகைகள் விரட்டிப் பிடித்துதான் அவரைப் பேச வேண்டிய கட்டாயம்..! எதையும் வெளிப்படையாகப் பேசும் சுஜாதாவுக்கு தனது கணவர் கட்டியிருந்த இரும்புக் கோட்டைக்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம்..!
சுஜாதாவின் இறப்புச் செய்தி கேட்டவுடன் அவருடன் அதிகப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் சொன்ன வார்த்தைகளை வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை என்கிறார் அவருக்குத் தகவல் கொடுத்த சினிமா பத்திரிகையாளர்..!
இடையில் தனது நடிப்பு கேரியரில் எந்தப் பங்கமும் வைக்காமல் நடிப்பு வேட்டையைத் தொடர்ந்துதான் வந்திருக்கிறார் சுஜாதா. அவர்கள் படத்தில் கே.பி.யின் இயக்குதல் பசிக்கு சுஜாதா நிறைய தீனி போட்டிருந்தாலும் சுஜாதாவுக்கே தன்னைப் பிடித்திருந்தது நூல்வேலியில்தான்..! இதையும்விட எனக்குப் பிடித்திருந்தது அவள் ஒரு தொடர்கதையின் நாயகி கவிதாதான்..!
இப்படியொரு சகோதரி வீட்டுக்கு வீடு இருக்கிறார்களே.. இவர்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை என்றெல்லாம் யோசிக்க வைத்தது இத்திரைப்படம். இதில் இவர் காட்டியிருந்த நடிப்பு நிச்சயம் ஒரு புதுமுகம் என்றே சொல்ல முடியவில்லை. வசன உச்சரிப்பில் சுஜாதா ஒரு ஸ்டைலிஸ்ட் என்றே சொல்ல வேண்டும்..!
“சம்பாத்தியத்துக்கு ஒரு தங்கச்சி.. சமைச்சுப் போட ஒரு அம்மா.. படுக்கைக்கு ஒரு பொண்டாட்டி.. த்தூ.. வெட்கங்கெட்ட ஜென்மம்..” என்று ஜெய்கணேஷை பார்த்து பொறுமித் தள்ளும் சுஜாதாவின் வசன உச்சரிப்பை கவனித்துக் கேட்டுப் பாருங்கள். நம்மையும் சேர்த்தே சொல்லியிருப்பார். அல்லது சொல்ல வைத்திருப்பார்..
இதற்குப் பிறகு சுஜாதாவின் பெயரை ஊரெல்லாம் கொண்டு போய் சேர்த்தது விதி திரைப்படம்தான்.. தன்னை கெடுத்து, பிள்ளையையும் கொடுத்தது “இதோ இந்த டைகர் தயாநிதிதான்..” என்று கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருக்கும் ஜெய்சங்கரை பார்த்து கையை நீட்டிச் சொல்கின்ற அந்தக் காட்சி.. மறக்க முடியுமா..? அதிலும் அந்த நீதிமன்றக் காட்சிகளின்போது அவ்வப்போது, “டைகர் தயாநிதி..” என்று அவர் உச்சரிக்கும்போதெல்லாம் வரும் வெறித்தனம், அந்த கேரக்டராகவே அவர் மாறியிருந்ததைக் காட்டியது.
தமிழ்ச் சினிமா தவிர்த்து தெலுங்கு, கன்னட உலகத்திலும் சுஜாதாவின் நடிப்புலகம் விரிந்தது.. தெலுங்கில் நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சோபன்பாபு என்ற மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் ஆடி முடித்தார் சுஜாதா.. தமிழைவிட தெலுங்கில்தான் மிக அதிகப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் சுஜாதா என்கிறார்கள் தெலுங்குக்காரர்கள்..! இதன் பின்பு இன்றுவரையிலும் தெலுங்கு ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் அம்மாவாக வேடம் போட்டு ஓய்ந்துவிட்டார்.
இதனால்தான் இவருடைய மரணத்திற்கு தமி்ழ்த் திரைப்படத் துறையின் வருத்தப்பட்டதைவிடவும், தெலுங்கு திரையுலகமும், ஆந்திராவும் அதிகமாகவே அஞ்சலி தெரிவித்தன.
நீலாங்கரை வீட்டில் முதல் நாளில் இருந்து மறுநாள் அவருடைய உடல் சவப்பெட்டியில் வைத்து கொண்டு செல்லப்படும்வரையிலும் இருந்தது தெலுங்கு சேனல்காரர்கள்தான். ஆந்திராவில் மிக அவசர செய்தியாகவே சுஜாதாவி்ன் மரணச் செய்தி அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது.
தெலுங்கு சேனல்களில் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக பல நடிகர், நடிகைகள் தங்களது சோகத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்..! ஆனால், தமிழ்ச் சேனல்கள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருந்ததினாலும் நீலாங்கரைவரைக்கும் போய் படம் எடு்க்க வேண்டுமா என்கிற சோம்பேறித்தனத்தினாலும் ஒரேயொரு முறை கடமைக்கு வந்து எடுத்துக் கொண்டு போனதாகச் சொல்கிறார்கள். அதையும்கூட சரிவர காட்டவில்லை. ஆனால் தெலுங்கு சேனல்கள் அனைத்திலும் அத்தனை செய்தி நேரங்களிலும் குறைந்தபட்சம் 3 நிமிடங்களாவது சுஜாதாவுக்காக ஒதுக்கியிருந்தார்கள்..!
சில வருடங்களுக்கு முன்பாக பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் பொன்விழாவையொட்டி சென்னையில் ராடன் மீடியாஸ் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்கு ஜானகியை வாழ்த்த சுஜாதாவை அழைக்க பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்..!
ஆனால் இதற்கு முன்பாகவும் ஒரு முறை அவர் பத்திரிகையாளர்களின் முன்னிலையில் தோன்றியிருந்தார். அது நடிகர் திலகம் சிவாஜியின் மரணத்தின்போது..
சிவாஜியின் உடல் தகனம் நடைபெற்ற நாளன்று காலையில் பாண்டிபஜார் அருகே இருந்து தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகைகள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சிவாஜியின் வீடு நோக்கி நடந்து வந்தார்கள். அந்த ஊர்வலத்தில் முன் வரிசையில் மனோரமாவுடன் கைகோர்த்து தலையைக் குனிந்த நிலையிலேயே சுஜாதா வந்து கொண்டிருந்தார்.
சிவாஜியின் வீட்டு முகப்பில் வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் உடலுக்கு மாலை அணிவித்த கையோடு பட்டென்று சிவாஜியின் வீட்டுக்குள் சென்று பதுங்கிவிட்டார் சுஜாதா. அவரிடத்தில் இரங்கல் செய்தி கேட்பதற்காக அனைத்து சேனல்காரர்களும் சிவாஜியின் வீட்டைச் சுற்றிச் சுற்றி தேடியலைந்ததை நேரில் கண்டேன்..!
சில நடிகர், நடிகைகள் லாரியில் சிவாஜியின் உடலுக்குப் பின்னால் சென்றபோதாவது வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள் பத்திரிகையாளர்கள். ஆனால் அவர் வெளியில் வரவே இல்லை..!
“கண்ணிலே என்னவென்று கண்கள்தான் அறியும்..!
கையிலே ஈரம் உண்டு கண்களா அறியும்..?
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்..?”
- இப்படி அவள் ஒரு தொடர்கதையில் தனக்கான கேரக்டரில் பாடிய சுஜாதா, நிஜத்திலும் அவர் யார் என்று அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத சூழலையே உருவாக்கி வைத்திருந்தார்..! ஆனால் இது அத்தனைக்கும் பத்திரிகையாளர்கள் குற்றம் சொல்வது அவரது கணவரைத்தான்.
சுஜாதா நடிக்கின்றவரையிலும் அவரது கால்ஷீட்டை அவரது கணவர் ஜெயகர்தான் கவனித்துக் கொண்டார். ஜெயகரையே போனில் பிடிப்பது மகா கஷ்டம். சுஜாதாதான் நடிக்க வேண்டும் என்றாலே தயாரிப்பு நிர்வாகிகள் அலுத்துக் கொள்வது அவரை நினைத்துத்தான்..!
மீறி சுஜாதாவைத் தேடி வீட்டிற்குச் சென்றவர்களைக்கூட ஜெயகரே வரவேற்று பத்திரிகையாளர்களின் தோளில் கை போட்டு “மேடம்.. இப்போ தூங்குறாங்க.. போன்ல பேசிட்டு வாங்க..” என்றோ, இல்லையெனில் ஏதாவது ஒரு பொய் சொல்லியோ வாசலிலேயே திருப்பியனுப்பிய கதை தமிழ்த் திரையுலகில் கி்ட்டத்தட்ட அத்தனை சினிமா பத்திரிகையாளர்களுக்கும் நேர்ந்திருக்கிறது..!
அப்படியிருந்தும் சிற்சில சமயங்களில் தேர்ந்தெடுத்த சில மூத்தப் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் பேட்டியளித்திருந்த சுஜாதா தனது கணவர், குழந்தைகள் குடும்பம் பற்றி மட்டும் மூச்சுவிட்டதில்லை.
அவருடைய இறப்பைக் கேள்விப்பட்டு வேகமாக விரைந்தோடிய சினிமா பத்திரிகையாளர்களுக்கு முதலிலேயே அனுமதி மறுக்கப்பட்டு, “வீட்டில் கரண்ட் இல்லை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..” என்று பொய் சொல்லி வாசலிலேயே நிறுத்தியிருக்கிறார்கள்..! பின்பு ஒரு மணி நேரம் கழித்துதான் பத்திரிகையாளர்களையே அனுமதித்திருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்..! சுஜாதாவின் நெஞ்சார்ந்த அன்புக்கும், பண்புக்கும் முதல் பாத்திரமான சினிமா பத்திரிகையாளர்களின் நெஞ்சத்தை கீறியிருக்கிறது இந்தச் சம்பவம்.. ஆனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை..!
ஒரு முறை டயலாக்கை வாசித்துக் காண்பித்துவிட்டாலே போதும்.. அதனை உள்வாங்கிக் கொண்டு ஏற்ற இறக்கத்துடன், மிகச் சரியான டைமிங்கில் கதாபாத்திரங்களை நோக்கி கை காட்டிப் பேசும் வித்தைக்காரரான சுஜாதாவுக்கு தனது திரையுலக வாழ்க்கையை தமிழ்த் திரையுலகத்தில் மிகச் சரியான விதத்தில் பதிந்துவைக்க முடியாமல் போனது நமது துரதிருஷ்டம்தான்..!
எனக்கு தமிழ்த் திரையுலகம் மீது ஒரு பிடிப்பையும், ஆர்வத்தையும், தூண்டுதலையும் ஏற்படுத்திய கேரக்டர் அவள் ஒரு தொடர்கதையின் நாயகியான கவிதாதான். இன்றைக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் சினிமா பார்த்திருந்த அம்மாக்கள், அக்காக்களுக்கு ஆதர்ச நாயகி கவிதாதான்.. யாரிடம் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்..!
கே.பி.யை பல்வேறு சந்திப்புகளிலும், பேட்டிகளிலும் அனைத்து பத்திரிகையாளர்களும் கேட்கின்ற கேள்விகளில், “அதுக்குப் பின்னாடி அந்தக் கவிதா என்ன ஸார் ஆனாங்க..? ஏன் அப்படியே அவங்களை நிறுத்திட்டீங்க..? அடுத்த பாகம் வருமா..?” என்ற கேள்வி கட்டாயம் இடம் பிடித்திருக்கும்..!
இன்றைக்கும் அதே கேள்விதான் எனக்குள்ளும் தோன்றுகிறது. அந்தக் கவிதா நிஜத்திலும் ஏன் இப்படியிருந்தார்..? ஏன் இப்படியே மறைந்தார்..? யார் சொல்வது..?
தகவல்கள மற்றும் புகைப்படங்கள் : பல்வேறு இணையத்தளங்கள்
|
|
Tweet |































.jpg)
.jpg)
