Showing posts with label சிவசங்கரன். Show all posts
Showing posts with label சிவசங்கரன். Show all posts

டார்கெட் தயாநிதி மாறன்..!

16-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதன் முறையாக நாடாளுமன்ற எம்.பி-யானபோதே, மத்திய அரசின் கேபினெட் அமைச்சராகி... அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை போன்ற பொறுப்புகளைப் பெற்றவர்  தயாநிதி மாறன். இப்போது 2-ஜி ஸ்பெக்ட்ரம் சுழலில் இவரும் சிக்குகிறார்!

தயாநிதி குறித்த விவகாரங்களை ஏற்கெனவே வாக்குமூலமாகக் கொட்டி இருந்தார் - முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண் ஷோரி. இப்போது அவர் சொல்வது என்ன? அவரை நாம் சந்தித்தபோது...

''மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரணை அறிக்கையில் ஓர் அத்தியாயம் முழுக்க தயாநிதி மாறன் செய்த காரியங்கள் குறித்துச் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், மீடியாக்கள் அந்த அத்தியாயத்தை அப்போது கண்டுகொள்ளவில்லை.

ஆ.ராசா என்ன செய்தார்? ஒரு டெலிகாம் சர்க் கிளில், எத்தனை மொபைல் ஆபரேட்டர்களுக்கும் உரிமங்களைக் கொடுக்கலாம் என்கிற முறையைக் கொண்டுவந்தார். இந்த முறை தொலைத் தொடர்புத் துறை வழிகாட்டி நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்த வழிகாட்டி நெறிமுறைகளை மீறி 2005 டிசம்பர் மாதமே தயாநிதி மாறன் அனுமதி கொடுத்து உள்ளார். ஆக, மாறன்தான் விதிமுறைகளை மீறி முதலில் செயல்பட்டவர்.

இத்தகைய அனுமதிக்கு, தொலைத் தொடர்பு கமிஷனின் அனுமதி, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்(டிராய்) ஆலோசனை மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், இவற்றில் ஒன்றைக்கூட பெறாமல் தயாநிதி மாறன் உரிமங்களைக் கொடுத்தார். குறைந்தபட்சம் இதை டிராய் சிபாரிசின் அடிப்படையிலாவது செயல்படுத்தியிருக்க வேண்டும். டிராயின் சிபாரிசு 2007-ல்தான் வந்தது. அப்படியானால் மாறன் முன்கூட்டியே எப்படிச் செய்தார்?

பல ஆபரேட்டர்களை அனுமதிப்பதன் மூலம் ஆரோக்கியமான போட்டியையாவது தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தினார்களா? இல்லை என்பதே என் வாதம். பால்வா போன்ற - தொலைத் தொடர்புத் துறைக்கே சம்பந்தம் இல்லாத - ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களை இந்தத் துறைக்குள் கொண்டுவந்தது எப்படி?'' என்று கேள்விகளை வரிசையாக அடுக்கிய அருண்ஷோரி, மேலும் பல விஷயங்களையும் எடுத்து வைக்கிறார்.


''என்.டி.ஏ. ஆட்சியில் கேட்டுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகளை அடுத்து, டிராய் அமைப்பு ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமம் சம்பந்தப்பட்ட சிபாரிசுகளை 18 மாதங்களுக்குப் பின்னர் கொடுத்தது. அந்த சமயத்தில் என்.டி.ஏ. ஆட்சி இல்லை. இந்த இறுதி சிபாரிசு வந்த 2005 அக்டோபரில் தயாநிதி மாறன்தான் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சர். ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைக்கான உரிமங்களை வழங்குவது குறித்து அந்த சிபாரிசில் சொல்லப்பட்டது. ஆனால், மாறன் இந்த சிபாரிசுகளைக் கிடப்பில் போட்டார்.

இதனால், டிராய் சேர்மன் பிரதீப் பைஜாலுக்கும் மாறனுக்கும் மோதல் நடந்தது. பைஜால் இந்த சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால், மாறன் மறுத்தார். காரணம், ஒருங்கிணைந்த அணுகுமுறைச் சேவையில் டெலிகாம் ஆபரேட்டர்கள் தொலைக்காட்சி சேவையிலும் ஈடுபடலாம் என்று இருந்தது. ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக மாறன் இந்த சிபாரிசை முடக்கத் திட்டமிட்டார்.

மூன்று விதங்களில் தயாநிதி மாறன் பதவிக் காலத்தில் தவறுகள் நடந்து இருக்கின்றன. ஒன்று, டிராய் சிபாரிசு இல்லாமல் ஏராளமான தொலைபேசி ஆபரேட்டர்களுக்கு உரிமங்கள் வழங்கியது. இரண்டா வது, ஏர்செல் டிஷ்நெட் பங்குகளை அப்போலோ நிறுவனத்தையும் துணையாக்கி மாற்றியது. மூன்றாவது, 2003-ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவுப்படி, ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைக்கான உரிமங்கள் வழங்குவது குறித்து டிராய் கொடுத்த சிபாரிசை முடக்கியது. இதனை எல்லாம் முறையாக விசாரித்தால், உண்மைகள் வெளிவரும். இந்த வகையில் சி.பி.ஐ-யின் அடுத்த டார்கெட் மாறன்தான்!'' என்றார் அருண்ஷோரி.

இப்போது சி.பி.ஐ. முன்பு வாக்குமூலம் கொடுத்து, பழைய யுத்தத்தைப் புதுப்பித்து இருக்கிறார் சிவசங்கரன். ஒரு பக்கம் சி.பி.ஐ-யே சிவசங்கரனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து தகவல்களைக் கறப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம், தமிழக அரசியல் புள்ளிகளின் ஆதரவு கிடைக்கவும், அதையொட்டியே சி.பி.ஐ-க்கு சிவசங்கரன் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எப்படியோ சி.பி.ஐ-யின் புதிய அலுவலகத்தின் ஒன்பதாவது மாடிவரை சிவசங்கரன் படியேறிவிட்டார். ஆரம்பத்தில் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வெளியேயும்... பின்னர் அலுவலகத்தில் அதிகாரபூர்வமாகவும் தனது வாக்குமூலத்தை அவர் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், சி.பி.ஐ. 2007 முதல் 2010 வரையிலான விஷயங்களை மட்டும் உள்ளடக்கி விசாரணையை முடித்து மூன்றாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யப் போகிறது. அடுத்தக் கட்டமாக 2001 முதல் 2007 வரையிலான விசாரணையைத் தொடங்க வேண்டும். இதற்கான ஆரம்ப கட்ட விசாரணை தொடங்கிவிட்ட நிலையில், தயாநிதி மாறன் விவகாரம்தான் முன்னிலையில் இருக்கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

தயாநிதி மாறன் தன்னை நிர்ப்பந்தம் செய்து ஏர்செல் பங்குகளை விற்கவைத்தார் என்று சிவசங்கரன் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக சுமார் 10 சாட்சிகளை சி.பி.ஐ. முன் நிறுத்தத் தயாராவதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் இருப்பவர்களாம். வங்கி அதிகாரிகள், முதலீட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களும் இதில் அடக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த சாட்சிகளோடு, தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட விவகாரங்கள் தொடர்பான ஆவணங்களையும் சி.பி.ஐ. சேகரிக்கும் எனத் தெரிகிறது. ஏர்செல் பங்குகளை வாங்கிய 'மேக்ஸிஸ்' அனந்த கிருஷ்ணனின் மலேசியாவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ நிறுவனம், 'சன் டைரக்ட்'டில் முதலீடு செய்வதற்கு முன்பு, அந்த முதலீட்டுக்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்றுள்ளது. எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் முதலில் சம்பந்தப்பட்ட நாடுகளில் அனுமதியைப் பெறாமல் முடிவு எடுக்காது.

இதன்படி, மத்திய அரசின் எஃப்.ஐ.பி.பி. பிரிவுக்கு மனு வந்து, 2007 மார்ச் 2 மற்றும் 19-ம் தேதிகளில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. இறுதியாக, சன் டைரக்ட்டில் ஆஸ்ட்ரோ முதலீடு செய்ததை 2007 ஜூலை ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. மாறன் 2007 மே மாதம்வரை பதவி வகித்தார்.

''மேக்சிஸ் நிறுவனம் நான் அமைச்சராவதற்கு முன்பே எங்கள் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளது. 15 வருடங்களாகத் தொடர்பு உண்டு!'' என்பது தயாநிதி தரப்பு விளக்கமாக உள்ளது.

''தொலைத் தொடர்புத் துறையில் எந்த அந்நிய நாட்டு முதலீடும் 74 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது. இதன்படி ஏர்செல்லில் அனந்த கிருஷ்ணனின் 'மேக்சிஸ்' நிறுவனத்துக்கு அதிகபட்சமான 74 சதவிகிதம் போக, மீதி 26 சதவிகிதம் வேறு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை பிரபல அப்போலோ குழுமத்தின் பிரதாப் ரெட்டி குடும்பத்தினர் பெற்று உள்ளனர். இவர்கள் டெக்கான் டிஜிட்டல் நெட்ஒர்க் என்கிற நிறுவனத்தின் பேரில் அந்த 26 சதவிகிதப் பங்குகளைப் பெற்று உள்ளனர். இந்த டெக்கான் நிறுவனத்தில், ஆஸ்ட்ரோவின் 49 சதவிகிதப் பங்குகள் உள்ளன. அனந்த கிருஷ்ணனுக்காக மறைமுகமாக இந்தப் பங்குகள் வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் இதை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக ஊழல் விவகாரங்களில் சிக்கி காங்கிரஸ் அரசாங்கத்தின் பெயர் கெட்டு வருவதைத் தொடர்ந்து ஒரு தடுப்பணை போடுவதற்கு பிரதமர் முயற்சித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு செக் வைக்கும் விதத்தில், 'அனைத்து அமைச்சர்களும் தங்களது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் குடும்பத்தினரின்  சொத்து விவரங்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நடத்தை விதிகள் ஏற்கெனவே இருப்பவைதான். என்றாலும், இப்போது பிரதமர் அலுவலகமே அதிரடியாக இறங்கி இருப்பது, விவகாரத்தின் கடுமையைக் காட்டுகிறது!

- சரோஜ் கண்பத்

நன்றி : ஜூனியர்விகடன்-19-06-2011

சிக்க வைத்த சிவசங்கரன்... தவிக்கும் தயாநிதி மாறன்!

16-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 

சி.பி.ஐ.யின் துருப்புச் சீட்டுக்களில் ஒருவராக மாறி, இன்று தயாநிதி மாறனின் பதவிக்கு வேட்டு வைக்கும் மனிதராகி இருக்கிறார், ஏர்செல் சிவசங்கரன். ஒரு காலத்தில் கருணாநிதி, முரசொலி மாறன்... இருவரின் செல்லப் பிள்ளை. இன்று தயாநிதி மாறனுக்கு கடுமையான எதிரி!

'கடந்த 16 ஆண்டு காலப் பகையின் கதை’ என்று விவரம் அறிந்த வட்டாரங்களால் சொல்லப்படும் கரன்ஸி ஆட்டத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே...!

'என்னுடைய ஏர்செல் கம்பெனியை மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்!’ என்று சிவசங்கரன் சி.பி.ஐ-யிடம் புகார் சொன்னதாகத் தகவல் வெளியானது. மாறன் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்து, ''சிவசங்கரன் மில்லியனர் இல்லை, அவர் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. அப்படியே மிரட்டப்பட்டு இருந்தாலும் அவர் நீதிமன்றத்துக்கு அப்போதே சென்று இருக்கலாம்'' என்று பதில் கூறி இருந்தார். ஆனாலும் இந்த சர்ச்சை அடங்குவதாக இல்லை!

யார் இந்த சிவசங்கரன்?
 

சென்னையில் வசிக்கும் 54 வயதாகும் சிவசங்கரன், திருவண்ணாமலைக்காரர். பி.இ.(மெக்கானிக்கல்), எம்.பி.ஏ.(ஹார்வர்டு பல்கலைக் கழகம்) படித்தவர். ஸ்டெர்லிங் குரூப் மற்றும் சிவா வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஆரம்பித்து, பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்.

பின்லாந்து நாட்டில் காற்றாலை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று கடந்த 30 வருடங்களில் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டு வந்தாலும், உச்சகட்ட பெரிய டீல் என்றால், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனியிடம் 4,860 கோடிக்கு ஏர்செல் உள்ளிட்ட மூன்று  நிறுவனங்களை விற்று லாபம் பார்த்தது. 

பிறகு, நார்வே நாட்டில் ஷிப்பிங் கம்பெனி, மற்றொரு நாட்டில் மினரல் வாட்டர் பிசினஸிலும் இறங்கினார். மகாராஷ்டிர மாநிலத்தில் ரிசார்ட் பிசினஸ், சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்திலும், தனது பணத்தை முதலீடு செய்தார். லேட்டஸ்ட்டாக, வெளிநாட்டில் படிப்பு முடித்துத் திரும்பிய தனது மகனை ஷிப்பிங் பிசினஸைக் கவனிக்கும்படி பணித்திருக்கிறார்.

கம்ப்யூட்டர் உலகில் நுழைகிறார்!

அது 1983-ம் ஆண்டு. 'கம்ப்யூட்டர்’ என்ற வார்த்தையே பலரை மிரள வைக்கும். அது எப்படி இருக்கும் என்றுகூட அப்போது பலருக்குத் தெரியாது. இனி உலகத்தை இதுதான் ஆட்சி செய்யப் போகிறது என்று மற்ற அத்தனை பேரையும் முந்திக்கொண்டு இனம் கண்டுகொண்ட சிவசங்கரன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜின் அப்பா நடத்தி வந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை சகாயமான விலைக்கு வாங்கி, அதற்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்று புதிய பெயர் சூட்டினார்.

அந்தக் காலகட்டத்தில், கம்ப்யூட்டர் என்றாலே லட்சத்தில் விலை சொன்னார்கள். இவர் வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அதை வைத்து இங்கே கம்ப்யூட்டர் உருவாக்கி, ஒவ்வொன்றையும் சுமார் 33,000 என்று விற்பனை செய்தார்.

தொலைநோக்குப் பார்வை, கடுமையான உழைப்பு, தொழில் நுட்ப மூளை, வியாபார தகிடுதத்தங்கள் என்று அனைத்தையும் சரிவிகிதத்தில் பயன்படுத்தி, ஒரு சில ஆண்டுகளிலேயே மற்ற நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வளர்த்தார்.

அதன் பிறகு சென்னை டெலிபோன்ஸ் 'எல்லோ பேஜ்’ புத்தகத்தை பிரின்ட் பண்ணும்  டெண்டரைக் கைப்பற்றினார்.  கம்ப்யூட்டரை அடுத்து இன்டர்நெட் அறிமுகமானபோது... 'வந்துவிட்டது, அடுத்த புரட்சி’ என்பதை உணர்ந்து கொண்ட சிவசங்கரன், 'டிஷ்நெட் டி.எஸ்.எல்.’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன்களில் 'பாரீஸ்தா’ ரெஸ்டாரெண்டுகளை ஆரம்பித்தார். இன்னொரு பக்கத்தில் பிட்னெஸ் சென்டர்களும் நடத்தினார்.

செல்போன் அறிமுகமானதும், அதன் வீச்சு பலமாக இருக்கும் என்பதை எல்லோரையும்விட மிகமிக முன்னதாகவே மோப்பம் பிடித்த சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு துவக்கினார். வேகமாக வளர்ச்சியடைய ஏர்செல் என்ற ஒரு குதிரை போதாது என்பதை உணர்ந்த சிவசங்கரன், 210 கோடி கொடுத்து 'ஆர்.பி.ஜி. செல்லுலார்’ என்ற இன்னொரு செல்போன் நிறுவனத்தையும் வாங்கினார்.

சிவசங்கரனின் பாலிசி!

'வியாபாரத்தில் சென்டிமென்ட் பார்க்கக்கூடாது’ என்பது சிவசங்கரனின் தாரக மந்திரம். தான் ஆரம்பித்த டிஷ்நெட் நிறுவனம், எதிர்பார்த்த வளர்ச்சி அடையவில்லை என்றதும், சற்றும் தயங்காமல் 270 கோடிக்கு விற்றுவிட்டார்.

கோடிகளில் புரண்டாலும்... அவரின் எண்ண ஓட்டங்கள் எப்போதும் எளிமையானதுதான். தன் சகாக்களிடம் பேசும்போது விஷயத்தை எளிமையாக புரியவைக்க அவர் பல்வேறு உதாரணங்கள் சொல்வதுண்டு. ''என்னோட மனைவி, பிள்ளைகளைத் தவிர நான் போட்டிருக்கும் சட்டையைக்கூட விற்பேன்!'' என்று அடிக்கடி சொல்வார்.

''சரவணபவனுக்குப் போற எல்லோருமே இட்லியைத்தான் வாங்குறாங்க. சட்னி, சாம்பாரை வாங்குவதில்லை. ஆனால் சட்னியும் சாம்பாரும் கொடுக்கவில்லை என்றால் இட்லி விற்பனை ஆகாது. அதுபோல, நம்மிடம் கம்ப்யூட்டர் வாங்க வருபவர்களுக்கு நாம் பிரின்டரையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான் கம்ப்யூட்டர் விற்பனை அதிகமாகும்!'' என்பது அவரது பிரபலமான உதாரணம்.

''சிவசங்கரன் தொலைநோக்குப் பார்வை கொண்ட கலர்ஃபுல் தொழில் அதிபர்!'' என்று சொல்பவர்களும் உண்டு. ''ஒரு தொழில் இல்லாமல் பல்வேறு தொழில்களை ஆரம்பித்து நடத்தும் அவரை தொடர் தொழில் தொழிலதிபர்!'' என்றும் சொல்கிறார்கள்.

கம்ப்யூட்டரின் பயன்பாடு மெள்ளத் தொடங்க ஆரம்பித்ததுமே எழுத்தாளர் சுஜாதாவை தனக்கு ஆலோசகராக வைத்துக் கொண்டவர் சிவசங்கரன். அப்போது உடன் வேலை பார்க்க வந்தவர்தான் கனிமொழியின் கணவர் அரவிந்தன்!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் சிறு கட்டடத்தில் அலுவலகம் வைத்திருந்தவர், 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் தேனாம்பேட்டை பகுதியில் 24 கோடிகளைக் கொடுத்து, ஹரிகந்த் டவர் என்கிற கட்டத்தை விலைக்கு வாங்கி 'ஸ்டெர்லிங் டவர்’ என்று பெயர் மாற்றினார். அதில் இருந்து அவரை 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார்கள்.  

சிவசங்கரனைப் பற்றி அவரது பிசினஸ் நண்பர்களிடம் கேட்டபோது, ''கடந்த 30 வருடங்களில் அவர் சுமார் 25 தொழில்களில் ஈடுபட்டு இருந்தார். எந்த பிசினஸையும் அவர் தொடர்ந்து நடத்தியது இல்லை. ஒரு தொழிலைத் துவக்குவார்; அதை நன்றாக வளர்ப்பார்; ஒரு லெவலுக்கு வந்ததும், அதைப் பல மடங்கு லாபம் வைத்து வேறு யாரிடமாவது விற்றுவிட்டு வேறு பிசினஸுக்குத் தாவிவிடுவார்.

உதாரணத்துக்கு, ரயில்வே ஸ்டேஷன்களில் காபி ஷாப்-களை பிரமாண்டமாகத் துவங்கி, பிறகு அதை அடுத்தவருக்குக் கைமாற்றிவிட்டார். இதுதான் சிவசங்கரனின் ஸ்டைல். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு அடிக்கடி மாறியதால், பல தரப்பட்ட பிசினஸ் பிரமுகர்களுடன் மோதல், விரோதம் அதிகமானது. இதுவே அவருக்கு நிறைய தொழில்முறை எதிரிகளை உருவாக்கிவிட்டது!’' என்று சொல்கிறார்கள்.

கருணாநிதி, முரசொலி மாறன் அறிமுகம்!

1989-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, டிட்கோ நிறுவனம் சார்பாக பிரபல தொழிலதிபர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். திடீரென ஒரு பிரமுகர் எழுந்து, 'நான் ஒரு தொழில் அதிபர். பெயர் சிவசங்கரன். டிட்கோவில் போய்க் கடன் கேட்டால், முதலியாரா? ரெட்டியாரா? என்ன சாதி என்றுதான் கேட்கிறார்கள். தொழிற்சாலை துவங்குவது பற்றிக் கேட்காமல், இப்படிக் கேட்பது சரியா?’ என்று துணிச்சலாகக் கேட்க... முதல்வர் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தார். 'யாருப்பா நீ? உனக்கு என்ன உதவி வேணும்?’ என்று கேட்டு விசாரித்து, ஒன்றிரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழிவகை செய்தார்.

சென்னை டெலிபோன்ஸ் வெளியிடும் எல்லோ பேஜஸ் டெண்டரை பயங்கரப் போட்டியில் குதித்து வாங்கினார். சென்னையைச் சேர்ந்த பிசினஸ் நிருபர்கள் இதன் பிறகுதான், சிவசங்கரனை நெருக்கமாகக்  கவனிக்க ஆரம்பித்தார்கள்.

தமிழகம் முழுக்க சிவசங்கரன் பிரபலம் ஆனது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை வாங்கியபோதுதான். நாடார் சமூகத்தினர் மத்தியில் பலத்த கொந்தளிப்பைக் கிளப்பியது. 'முரசொலி மாறனின் நண்பரான சிவசங்கரன்தான் இதை வாங்கி இருக்கிறார்’ என்று சொல்லி தி.மு.க-வுக்கு எதிரான பிரச்னையாக மாற்றினார்கள். மெர்க்கன்டைல் வங்கி மீட்புக் குழுவினர் ஜெயலலிதாவைப் பார்த்து, அவரது ஆதரவைக் கோரினார். அதன் பிறகு, கணிசமான பங்குகளை மட்டும் நாடார் சமூகத்தவர்களுக்கு கொடுத்தார்.

1995-ம் ஆண்டு தமிழகத்தில் தொலைத் தொடர்புத் துறை லைசென்ஸ் பெற சிவசங்கரன் முயற்சித்தார். 97-98-ல் சென்னையைத் தலைமையகமாகச் கொண்டு ஏர்செல் தொடங்கினார். அப்போது முரசொலி மாறனுக்கும் இவருக்குமான நட்பு அதிகமானது. ஆர்.பி.ஜி. செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரன் வாங்க முரசொலி மாறன் உதவி செய்ததாகவும் சொல்கிறார்கள். இந்த நட்பு முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு தொடரவில்லை.

சிவசங்கரனை விரட்டிய சம்பவம்!

2006-ம் வருடம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ஏ.என்.சண்முகம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் (பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கின் எண் சி.சி. 191/2006) கொடுத்தார். அதில், ''சென்னை அய்யப்பன்தாங்கலில் எனக்கு 2.43 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகளைக் கட்டி விற்கும் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்று ஸ்டெர்லிங் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் என்னிடம் கேட்டார். அவர் பேச்சை நம்பி, 1.05 ஏக்கர் நிலத்தை மட்டும் பவர் எழுதித் தந்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் தெரிய வந்தது, அந்த நிலத்தை நான் சிவசங்கரனின் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்துவிட்டார்!'' என்று சொல்லப்பட்டது. 

இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார்,  ஸ்டெர்லிங் நிறுவன அலுவலர்கள் ஆறு பேர்களை கைது செய்தனர். நிறுவனத் தலைவர் சிவசங்கரனை விசாரணைக்காக போலீஸ் தேட... சிவசங்கரன் எங்கே போனார் என்று தெரியவில்லை. தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் படியேறினார் சிவசங்கரன். ஆனால், அங்கே இவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. ''இந்த வழக்கைப் பின்னணியில் இருந்து போட வைத்ததே தயாநிதி மாறன்தான்!'' என்று சிவசங்கரன் ஆட்கள் செய்தியைக் கிளப்பினார்கள்.

இரண்டு தனி மனிதர்களுக்கு மத்தியிலான மோதலாகத் தொடங்கி இன்று இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் போதுதான் இந்தப் பகை யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறது என்பதும் தெரியும்!

- ஆர்.பி., ஆரோக்கியவேல்

படம்: சு.குமரேசன்

தெஹல்காவும் தயாநிதியும்!

''ஏர்செல் கம்பெனியின் சார்பாக 14 சர்க்கிள்களில் செயல்பட, நாங்கள் கொடுத்த விண்ணப்பத்தை நொண்டிக் காரணங்களைக் காட்டி, தயாநிதி மாறனின் அமைச்சரகம் தாமதப்படுத்தியது. இது குறித்து, 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி, அமைச்சராக இருந்த தயாநிதிக்குக் கடிதம் எழுதினேன். பலன் எதுவும் இல்லை. அதன் பிறகு, என்னுடைய ஏர்செல் கம்பெனியை, தயாநிதி மாறனின் மலேசிய நண்பரான அனந்தகிருஷ்ணின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யச் சொல்லி, எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதனால் வேறு வழி இல்லாமல் ஏர்செல் கம்பெனியின் 74 சதவிகித பங்குகளை அனந்தகிருஷ்ணனின் மலேசிய(மேக்சிஸ் குழுமத்தின்) கம்பெனிக்குக் கைமாற்றினேன். என் கட்டுப்பாட்டில் ஏர்செல் இருந்தபோது வருடக்கணக்கில் முயன்றும் கிடைக்காத லைசென்ஸ், அனந்தகிருஷ்ணனின் கைகளுக்கு ஏர்செல் சென்ற ஆறே மாதங்களில் கிடைத்தது!

இந்த  உரிமங்களைக் கொடுத்த நான்கே மாதங்களில் சன் டைரக்ட் டி.வி-க்கு சவுத் ஆசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் என்ற மலேசிய கம்பெனியிடம் இருந்து 600 கோடிகள் முதலீடு வந்திருக்கிறது. இந்த நிறுவனமும் அனந்தகிருஷ்ணனின் நிறுவனம்தான்.
அதன் பிறகு (அதாவது, பிப்ரவரி 2008-ல் இருந்து ஜூலை 2009 வரை)  சவுத் ஆசியா எஃப்.எம். நிறுவனத்துக்கு அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் குரூப் மேலும் 100 கோடியை முதலீடு செய்து இருக்கிறது...'' என்று சிவசங்கரன் சொன்னதாக 'தெஹல்கா’ செய்தி வெளியிட்டுள்ளது! 

''சிவசங்கரன் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. தவிர, மேக்சிஸ் குழுமம் சன் டி.வி-யில் முதலீடு செய்த காலகட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை. தவிர சன் டி.வி-யிலும் நான் பங்குதாரர் இல்லை. ஆகையால், என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தியை தெஹல்கா வெளியிட்டு இருக்கிறது'' என்று சொல்லி தயாநிதி மாறன், தெஹல்காவுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்!

நன்றி : ஜூனியர்விகடன்-15-06-2011