Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

“ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம்...” – கவிஞர் வைரமுத்துவின் விளக்கம்

13-01-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் சமூக வெளியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருவது ‘தினமணி’ பத்திரிகையில் வெளிவந்த கவிஞர் வைரமுத்துவின் ‘ஆண்டாள்’ பற்றிய கட்டுரை.

ஆண்டாளை ‘தேவதாசி’ என்று சொல்லி அவமரியாதை செய்துவிட்டதாக கவிஞர் வைரமுத்து மீது பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். பா.ஜ.க.வின் தேசிய துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா ஒரு பொது மேடையில் கவிஞர் வைரமுத்துவை ‘வேசி மகன்’ என்று சொல்லி திட்டித் தீர்த்திருக்கிறார்.

இதனால் இந்தப் பிரச்சினை இப்போது பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதவர் இருவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினையாக மாறியிருக்கிறது.

இந்த நேரத்தில் துவக்கத்திலேயே ‘என் எழுத்தினால், யார் மனமாவது புண்பட்டிருந்தால் தான் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக’ கவிஞர் வைரமுத்து சொல்லியிருந்தார்.

இப்போது கூடுதல் விளக்கமாக ‘தேவதாசி’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைச் சொல்லும்விதமாக ஒரு விளக்கக் கடிதத்தை இன்றைக்கு வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

அது இங்கே :



“தமிழை ஆண்டாள்’ என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள்காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது; பரப்பப்பட்டும் இருக்கிறது.
அருள் கூர்ந்து அந்தக் கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும். அப்போது விளங்கும் என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது என்று.

குறிப்பாக என்னைத் தங்கள் வீட்டில் ஒரு சகோதரனாய் நினைக்கிற எத்தனையோ தாயுள்ளங்கள் அதைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்று என் மனம் துடிக்கிறது.

‘தேவதாசி’ என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வதற்காகத் தம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்துக் கொண்ட உயர்ந்த பெண்களுக்கே ‘தேவரடியார்’ அல்லது ‘தேவதாசி’ என்ற திருப்பெயர்கள் வழங்கப்பட்டு வந்தன.

அவர்கள் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவர்கள். பின்னாளில் ‘தேவதாசி’ என்ற உயர் பொருள் நிலவுடைமைச் சமூகத்தால் பொருள் மாற்றம் பெற்றது. பழங்காலத்தில் நறுமணத்தை மட்டுமே குறித்த ‘நாற்றம்’ என்ற சொல், பிற்காலத்தில் ‘துர்நாற்றம்’ என்றே திரிந்துவிட்டது.

அப்படித்தான் ஆண்டாள் காலத்தில் உயர் பொருளில் வழங்கப்பட்ட சொல் பிற்காலத்தில் பொருள் மாற்றம் பெற்றுவிட்டது. பிற்காலப் பொருளைக் கொண்டு அக்காலச் சொல்லைப் புரிந்து கொள்ளக் கூடாது.



கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த பேராளுமைகளை இலக்கிய முன்னோடிகள் என்ற வரிசையில் ‘தினமணி’யில் எழுதி வருகிறேன். திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், வள்ளலார், உ.வே. சாமிநாத ஐயர், பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், புதுமைப்பித்தன் என்ற வரிசையில் ஆண்டாளின் பெருமையும் எழுத நினைத்தேன்.

ஆண்டாளைப் பற்றி மூன்று மாதங்கள் அரிய நூல்களைப் படித்துத் தகவல் திரட்டிய நான் ‘Indian Movements : Some Aspects of Dissent, Protest and Reform’ என்ற சுபாஷ் ச ந்திர மாலிக் தொகுத்து அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு நூலையும் படித்தேன்.

அதில் ‘Bhakti Movement in South India’ என்ற கட்டுரையைக் கண்ணுற்றேன். அந்தக் கட்டுரை பேராசிரியர் நாராயணன், பேராசிரியர் கேசவன் என்ற அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்டது.

திரு.நாராயணன், இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்தின் தலைவராக இருந்தவர். இந்தியப் பண்டை வரலாற்றில் முத்திரை பதித்தவர் என்று போற்றப்படுபவர். அந்தக் கட்டுரையில் அவர் எழுதிய ஒரே ஒருவரியைத்தான் நான் மேற்கோளாக எடுத்தாண்டிருந்தேன்.

அவர்கள் ‘தேவதாசி’யை எப்படி உயர்ந்த பொருளில் கொண்டிருந்தார்களோ, நானும் அதே உயர்ந்த பொருளில்தான் கையாண்டிருக்கிறேன்.

இதைப் புரிந்து கொண்டால் எவர் மனமும் புண்பட வேண்டிய அவசியம் இல்லை. நாற்பத்தாறு ஆண்டுகளாகத் தமிழோடு வாழ்ந்து வருகிற நான், என்னை உயர்த்திய தமிழ்ச் சமூகத்தைப் புண்படுத்துவேனா?


எழுத்தின் பயன் அன்பும் இன்பமும் மேன்மையும் என்று கருதுபவன் நான். ஆண்டாள் தமிழை வணங்குபவன் நான். இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எல்லோருக்கும் என் அன்பான வேண்டுகோள்...” என்று தனது விளக்க அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளார் கவிஞர் வைரமுத்து..!

ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து பேசியது என்ன..?

11-01-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமீபத்தில் ராஜபாளையத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தவறாக பேசியும், தினமணியில் தவறாக எழுதியும்விட்டார் என்ற சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

பா.ஜ.க.வின் தேசிய துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் இதற்காக வைரமுத்துவுக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி நாளிதழில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் வைரமுத்து எழுதிய கட்டுரை இதுதான் :



“மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் - விலங்குகள் - பறவைகள் - தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புற ஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

மார்கழியின் அதிகாலை மனோகரமானது. தாயைத் தொட்டுக் கொண்டு குழந்தை உறங்குகிறது; தாய்ப் பறவையைத் தழுவிக் கொண்டு குஞ்சு உறங்குகிறது; இலைகளைப் போர்த்துக் கொண்டு மரம் உறங்குகிறது; கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது. தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது.

‘இன்னுமா உறக்கம்! எல்லே இளங்கிளியே! எழுந்து வா வெளியே’ என்று ஆண்டாளின் ஆசைக் குரல் அப்போது ஆணையிடுகிறது.

‘மார்கழி நீராட வாரீரோ மங்கையரே’  என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது. அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். இந்த நெடுங்குளிரில் நீராடுவது, உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் ‘பாவை நோன்பு’ என்பது சடங்கு; ‘கண்ணன்’ என்பதொரு காரணம்.

பாகவதத்தில் சொல்லப்படும் ‘கார்த்தியாயினி நோன்பு’க்கும், ஆண்டாளின் ‘திருப்பாவை நோன்பு’க்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. கண்ணனே கணவனாய் அமைய நோற்பது ‘கார்த்தியாயினி நோன்பு’. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே, ‘திருப்பாவை நோன்பு’.

‘எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’ என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம் காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம் காண வேண்டும் என்ற பொதுப் பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு.

‘நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால், திங்கள் மும்மாரி பெய்யும்; நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுக்கும்; வள்ளல் பெரும் பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும், ஆதலால் - மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்’ இப்படி உயிரியல் - வாழ்வியல் - சமூகவியல் என்ற மூன்றையும் முன்னிறுத்துவதாகப் ‘பாவை நோன்பு’ பார்க்கப்படுகிறது.

வைணவத்தின் வளர்ச்சியில் ‘திருப்பாவை’ செல்வாக்குற்றது அல்லது ‘திருப்பாவை’ செல்வாக்குற்றதில் வைணவம் வளர்ந்தது.

தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் ஆறாம் - ஏழாம் நூற்றாண்டுகளைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது. இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு அந்த நூற்றாண்டுகளில்தான் இறையோடு இழைந்தது. அறம் பற்றி நடந்த தமிழர் இறை பற்றி நடக்கத் தலைப்பட்டதும் இந்த நூற்றாண்டிலேதான்.

சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது. கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற மெய்ஞ்ஞானம் வாய்க்கப் பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டு மக்களை நோக்கி இறங்கி வந்தது.

யாகம் - யக்ஞம் - தவம் - வேள்வி - விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டுக் கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்பட்ட வாத்சல்யம் - காருண்யம் - சௌலப்பியம் முதலியவற்றை முன்னிறுத்தியே முக்தியுற முடியும் என்ற புதிய சலுகை மக்களிடம் போதிக்கப்பட்டது.

எல்லாச் சாதியார்க்கும் மதம் தேவைப்பட்டதோ இல்லையோ எல்லாச் சாதியரும் மதத்திற்குத் தேவைப்பட்டார்கள். எந்த மதம் சாதிய அடுக்குகளைக் கெட்டிப்படுத்தியதோ அதே மதம் கொண்டு அதை உடைத்தெறியவும் சிந்தித்தார்கள். ‘இறை நேயம் என்பதே சாதி என்னும் மம்மர் அறுக்கும் மருந்து;’ என்று நாயன்மார்களைப் போலவே ஆழ்வார்களும் நம்பினார்கள்.

‘இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்கள் ஆகின் தொழுமின் கொடுமின் கொண்மின்’ -என்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதி பேதம் ஒழிந்ததென்று சங்கூதினார். ‘வர்க்க பேதம் ஒழியாமல் சாதி பேதம் ஒழியாது’ என்ற பிற்காலப் பேரறிவை அவர்கள் அக்காலத்தில் பெற்றிருக்கவில்லை.

‘இறைவன் முன் எல்லாரும் சமம்’ என்னும் குறுகிய பரவசம் ஒன்றே அவர்களைக் கூட்டுவித்தது; கொண்டு செலுத்தியது. வைணவம் என்னும் திருமாலியம் தமிழர்க்குப் புதியதன்று. ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்ற வரையறை தொல்காப்பியத்திலே சுட்டப் பெறுகிறது. கண்ணன், பலராமன் என்ற தொன்மங்கள் புறநானூற்றிலேயே புழங்கி வந்திருக்கின்றன.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்த காட்சி கண்ட காரிக்கண்ணனார் ‘பால்நிற உருவிற் பனைக்கொடி யோனும் நீல்நிற உருவின் நேமியோனுமென்று இருபெருந் தெய்வமும் உடன்நின் றாங்கு உருகெழு தோற்றம்’  (புறம் 58) - என்று பாடுகிறார்.

கண்ணனும், பலராமனும் இணைந்திருந்த தோற்றம்போல் சோழனையும் பாண்டியனையும் காட்சிப்படுத்துகிற காரிக்கண்ணனார், தெளிந்த சொல்லாட்சியில்; ‘தெய்வம்’ என்கிறார்.

சங்க இலக்கியத்தில் ‘தெய்வமென்று’ கொண்டாடப்பட்டவர்கள் ஏழாம் நூற்றாண்டில் ‘கடவுள்’ உயரத்தில் காட்சி தருகிறார்கள். தெய்வம் - கடவுள் என்ற இரண்டுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடுண்டு. ‘தெய்வம்’ என்பது பழம் பொருள்; பழகிய பொருள். ‘கடவுள்’ என்பது பரம்பொருள்; பழகாத பொருள்.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் தெய்வத்துள் வைக்கப்படலாம் தெய்வம்’ என்பது வழித்துணைப் பொருள்; ‘கடவுள்’ என்பது வழிபடுபொருள். அது எட்ட முடியாதது. எல்லார்க்கும் வாய்க்காதது. அந்த எட்ட முடியாத கடவுளையும் எட்ட முடியும்; கணவனாகவே கைத்தலம் பற்ற முடியும். இடையறாது நினைந்து காதலுற்றுக் கனிவதொன்றே கடவுளை எட்டும் வழி என்று குறியீட்டு முறையில் சொன்ன கோட்பாடுதான் ஆண்டாள் என்று எண்ணத் தோன்றுகிறது.

பிறப்பு முதல் சீரங்கத்து மாயனோடு மாயமான நாள் வரையிலான ஆண்டாளின் வாழ்வில் உயிருள்ள சில கேள்விகள் ஊடாடுகின்றன.

ஆண்டாள் ஒன்றும் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள். திருவில்லிபுத்தூர் நந்தவனத்தில் திருத்துழாய்ப் பாத்தியில் கண்டெடுக்கப்பட்ட கனகம் அவள். ஆயின் அவள் பெற்றோர் யாவர்? அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்? அடுத்த வினா. ஆண்டாள் வாழ்ந்த காலம் என்பது யாது?

குரு பரம்பரைக் குறிப்புகள் கொண்டு கி.பி. 776 என்று கணிக்கிறார் சாமிக்கண்ணுப்பிள்ளை. ‘வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று’ என்ற திருப்பாவை வரி கொண்டு கி.பி. 731 டிசம்பர் 18 என்று கணிக்கிறார்கள் வானூல் அறிஞர்கள்.

ஆழ்வார்களின் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 8-ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை என்று வரையறுத்த மு.ராகவையங்காரின் கூற்று மெய்யாயின் ஆண்டாளின் காலம் 8-ம் நூற்றாண்டின் மையம் என்று கொள்வதில் ஐயம் இல்லை.

பெண், வீட்டுப் பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப் பொருளாகவும் கருதப்பட்ட 8-ம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி?

மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது. பெருமாள் திருப்பெயரைப் பெரியாழ்வார் பாடக் கேட்டுக் கேட்டு வளர்ந்த பெண் பிள்ளை பெருமானுக்குப் பிச்சி ஆகிறாள்; தெய்வக் காதலில் திளைக்கிறாள். தன் உடலென்ற அழகும் உயிரென்ற பொருளும் கண்ணனுக்கு மட்டுமே காணிக்கை என்று கருதுகிறாள்.

வடபெருங்கோயிலான் ஆகிய வடபத்ரசாயிக்குப் பெரியாழ்வார் தொடுத்து வைத்த துய்ய மலர் மாலைகளைத் தனக்குத்தானே சூடிச் சூடிச் சுகப்படுகிறாள். பெரியாழ்வார் திகைக்கிறார். அவர் தேகத் திசுக்கள் தனித்தனியே துடிக்கின்றன. எல்லை மீறிய செயல் இதுவென்று உள்ளம் உடைகிறார்.

அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணக் கடவுள் ‘அவள் சூடிக் கொடுத்த மாலைகளைச் சூடுவதே சுகம்’ என்று சொல்லி மறைகிறார். கோதையின் பெருமை கண்டு பித்துப் பிடித்து நிற்கிறார் பெரியாழ்வார். மகள் மங்கைப் பருவமுறுகிறாள். எடுத்து வளர்த்த பிறை பாற்கடல் குளித்தெழுந்து பௌர்ணமியாய் நிற்கிறது.

மகளுக்கு மணாளன் தேட எத்தனிக்கும்போதுதான் இன்னோர் எதிர்வினை நிகழ்கிறது. ‘மானிடன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுவதா? மாட்டேன் தந்தையே!’ என்று நீட்டோலை வாசிக்கிறாள் கிடந்த திருக்கோலத்தின் மீது படர்ந்த நெஞ்சினள்.

‘உன்னித்தெழுந்தவென் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’ என்கிறாள். ‘மாலிருஞ்சோலை, எம் மாயற்கல்லால் மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன்’ என்று உறுதி உரைக்கிறாள்.

தமிழ்ப் பரப்பில் முன்னெங்கும் கேளாத இப்பெண்மொழி முதன்முதலாய்ப் பெரியாழ்வார் பெண்ணால் பேசப்படுகிறது. இப்படி ஒரு விடுதலைக் குரல் எப்படிச் சாத்தியம்? இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்? ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வார்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார்.

ஆனால் மொழியின் குழைவிலும், தமிழின் அழகிலும், உணர்ச்சியின் நெகிழ்விலும், உரிமையின் தொனியிலும் ஆணாழ்வார்களை விடவும், பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே...! யாது காரணம்?

‘தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே’ என்ற குலசேகர ஆழ்வார் குரலில், ஒரு பக்தனின் முக்தி வேட்கை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது.

‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்’ என்ற பூதத்தாழ்வார் பாசுரத்தில் ஒரு தொண்டுள்ளத்தின் உருக்கமே தூக்கலாய் நிற்கிறது.

வண்டூர் உறையும் பெருமாளுக்குக் குருகினங்களைத் தூதுவிடும் நம்மாழ்வாரின் நாயகன் நாயகி பாவத்தில் உண்மையைத் தாண்டி உணர்ச்சி வினைப்படவில்லை. திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது.

ஆனால் ஆண்டாள் உணர்ச்சி என்பது வெள்ளம்; மலை உச்சியிலிருந்து பள்ளம் தேடித் தாவும் வெள்ளம். அது கட்டற்ற காட்டாறு. இதனால்தான் வைணவ ஆச்சாரியார்கள் ஆழ்வார்களின் பக்திநெறி மேட்டுமடை ஒக்கும்; ஆண்டாளுடையதோ பள்ளத்துமடை ஒக்கும் என்று திளைத்துத் தெளிந்து தெரிவிக்கிறார்கள்.

ஆழ்வார் பாசுரமோ பெரும்பாலும் ஆற்றுப்படுத்துவது. ஆண்டாளுடையதோ ஐக்கியப்படுவது. ஆழ்வார் பாசுரங்களோ அடிமையுறுவதில் ஆனந்தம் காண்பன. ஆண்டாள் பாசுரங்களோ விடுதலைக் குரலின் வீச்சுடையன.

ஒருத்தியால் பாடப் பெற்றதென்றாலும் ‘திருப்பாவை’க்கும், ‘நாச்சியார் திருமொழி’க்கும் அடிப்படை வேறுபாடு ஒன்றுண்டு. ‘நாச்சியார் திருமொழி’ காதல் லயத்தில் கனன்ற பாடல்கள். அவை பெரும்பாலும் தன்னுணர்ச்சியில் விளைந்தவை. ‘திருப்பாவை’யோ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பொது உணர்ச்சியில் பூத்தவை.

‘மல்லாண்ட திண்டோள் மணிவண்ணனுக்கென்றே சில்லாண்டு வளர்ந்த செல்வி கண்ணனையே கணவனாய் வரிப்பேன்’ என்று கனவு கண்டாள். ‘அவரைப் பிராயம் தொட்டு ஆர்த்தெழுந்த தடமுலைகள் துவரைப் பிரானுக்கே’ என்று காதல் வஞ்சினம் கண்டாள்.

‘அவன் தோள்சேர என்ன வழி’ என்று எண்ணிக் கிடந்தவள் ஆயர்மங்கையர் கைக் கொள்ளும் பாவை நோன்புற்றாள். அவளுக்குத் திருவில்லிபுத்தூரே ஆயர்பாடி ஆயிற்று. தன்னையும் தம் தோழியரையும் ஆயர் பாவையர் ஆக்கினள். வடபெருங்கோயிலான் திருக்கோயிலே நந்தகோபன் குடிலாயிற்று.

கல்லான கடவுளே கண்ணனாகினான். அகமும் புறமும் தம்மைத் தாமே தகவமைத்துக் கொள்ளக் கடவுளை ஓர் ஊடகமாய்க் கைக்கொள்கிறார்கள் ‘ஆயர்குலத்துத் தாயர்கொழுந்துகள். நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி மையிட்டெழுதோம்; மலரிட்டுநாம் முடியோம்; செய்யா தனசெய்யோம்; தீக்குறளை சென்றோதோம்’ - என்று பெண்மைக்கெல்லாம் பொதுவாகத் தன்மைப் பன்மையில் பாடிக் கொள்கிறாள்.

ஆனால் திருப்பாவையின் 19-ம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்?

கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது..? ‘குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்’ என்ற சொல் விடுதலை ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சியின் அத்து மீறலா?

உரைகாரர்கள் இதற்கு வேறுபொருள் கூட்டித் தம் தீராப் புலமையின் திமிர் காட்டுவார்கள். குத்துவிளக்கு என்பது குரு உபதேசம். கோட்டுக்கால் என்பன நான்கு புருஷார்த்தங்கள். மெத்தென்ற பஞ்சசயனமாவது தேவ, திர்யக், மனுஷ்ய, ஸ்தாவர, அப்ராண ரூபமான ஜீவர்கள். மேலேறி என்பது இவ்வுயிர்களுக்கு மேம்பட்டவன்; என்று பிரபந்த ரட்சையில் வைணவாச்சாரியார்கள் வலிந்து விதந்தோதினாலும், அதை நயம் பாராட்டல் என்று சொல்லவியலுமே தவிர நியாயம் பாராட்டல் என்று சொல்லவியலாது.

இதற்கு நேர்பொருளே ஏற்புடைத்து. கோட்டுக்கால் என்பது யானைத் தந்தத்தால் நிறுத்திய கட்டில்கால். பஞ்ச சயனம் என்பது அன்னத்தூவி, இலவம் பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயிற்றூவி என்ற ஐந்தும். தான் வாய் வைக்கும் இடம் இந்த ஐந்தும் கடந்த மேன்மை கொண்டதாய்த் திகழ வேண்டுமென்று அந்த ஆறாம் பொருளைக் கண்ணன் கண்டடைகிறான் என்று கொள்வது கவிதை நயம்.

‘மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றக் கனாக் காணும் கோதையாள்’ பாசுரத்தில் தமிழ் வெட்க மறுத்து விளையாடுகிறது.

கொழுந்தமிழும் - செழுந்தமிழும், பழந்தமிழும் - இளந்தமிழும் வசந்த காலக் கிளைகளில் கொழுந்தெழுந்து வருவதுபோல் குழைந்தெழுந்து வருகின்றன. மறுபடியும் ஒருபடி மேலேறுகிறாள் ஆண்டாள்.

கண்ணனின் வாய்ச்சுவையை அறிய விழைகிறாள். எவரிடம் கேட்பது? அவனோடு உறவாடிய உயர்திணைப் பெண்கள் உண்மை சொல்லார். ஆகவே அவன் இதழோடு உறவாடிய அஃறிணைப் பொருள் ஒன்றை அவாவுகிறாள். அதுதான் அவன் ஊதுகின்ற வெண்சங்காகிய பாஞ்ச சன்யம்.

‘கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன். சொல்லாழி வெண்சங்கே...’

ஆண்டாள் பாடல்களின் உச்சம் என்று சொல்லலாம் இந்தப் பரவசப் பாசுரத்தை. கண்ணன் வாய்வைத்த சங்கே சொல்! அவன் இதழில் கற்பூரம் மணக்குமா? தாமரையின் வாசம் வருமா? இனிக்குமா? அதன் சுவையென்ன? மணமென்ன? என்பது பொருள். சங்கே நீ உப்புக்கடலில் பிறந்தாய். இனிக்கும் இடம் கிட்டிற்று உனக்கு. திருத்துழாய்ப் பாத்தியில் மணத்தோடு பிறந்தவள் நான். எனக்கேன் இக்கண்ணீர் உப்பு? என்ற உள்ளார்ந்த தமிழ் நயம் இதில் ஊடாடிக் கிடக்கிறது.

ஆண்டாள் இறைத்த நீர் கண்ணன் என்ற கழனி சேர்வதற்கு முன்னால் தமிழ் என்ற வாழையைத் தழைக்க வைத்திருக்கிறது. காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை என்ற மரபு சங்க இலக்கியத்திலேயே மீறப்பட்டிருக்கிறது.

‘என் உயவு நோய் அறியாது இந்த ஊர் துஞ்சுகிறதே என் செய்குவேன்? முட்டிக் கொள்ளவோ எவரையேனும் தாக்கவோ வாய் விட்டுக் கதறவோ என்ற பொருளில் இயங்கும் முட்டுவேன்கொல், தாக்குவேன்கொல்’ என்ற ஒளவையார் பாடல் அந்த மரபை உடைத்ததுதான்.

‘கன்றும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் பசுவின்பால் நிலத்தினிழிந்து வீணாவதுபோல் எனக்கும் பயன்படாமல் என் தலைவனுக்கும் பயன்படாமல் என் அழகைப் பசலை உண்டு போகிறதே’ என்ற பொருளில் எழுதப்பட்ட ‘கன்று முண்ணாது கலத்தினும் படாது’ என்ற வெள்ளி வீதியார் பாடலும் மரபு மீறல்தான். ஆனால் மணமான பெண்களின் குரல்களாக அவை கேட்கின்றன.

ஆண்டாளுடையது கன்னிக் குரல். அப்போதுதான் பூத்தெழுந்த மலரின் புதுக் குரல். ‘கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்தொருநாள் தங்குமேல் என்னாவி தங்கும்’ என்று பாயிட்டுச் சொல்லும் தனிமொழியை வாய்விட்டுப் பாடிய குரல் ஆண்டாளின் அகக்குரல். கனவு காணும் வேளையிலும் கலவிகண்டு விண்டுரைக்கும் துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படியென்று ஆய்வுலகம் ஆச்சரியமுறுகிறது.

ஒரு மனிதனோடு எனக்கு மணவினை இல்லை என்று உறுதிப்பட்ட பெண்ணை என்செய்வது என்று பெரியாழ்வார் கலக்கமுற்றபோது, கண்ணன் அவர் கனவில் தோன்றியதாய்ச் சொல்லப்படுகிறது.

‘ஆழ்வீர்! நின்மகளை யாமே மணக்கிறோம்; உங்கள் திருச்செல்வியை திருவரங்கம் அழைத்து வாரும்’ என்று பெரியாழ்வார்க்கு ஆணையிட்ட பெருமாள், பாண்டிய மன்னன் வல்லப தேவன் கனவிலும் தோன்றித் ‘திருவில்லிப்புத்தூர் சென்று முத்துச் சிவிகை ஏற்றி ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்து வாரும்’ என்று ஆணையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பல்லியம் முழங்க மறையவர்கூடி வாழ்த்தொலி வழங்க, போகும் வழியெங்கும் பூச்சிதற, நாற்படையும் ஊர்ந்துவர, பேரங்கம் முழுக்க அழகுற்ற பெண்ணாள் சீரங்கம் வந்து சேருகிறாள்.

திருவரங்கக் கோயில் புகுந்து, வளர் தந்தையை வணங்கி வழிபட்டு, காதல் நடை நடந்து ஆதிசேடன் கடந்து, திருமால் திருவடி வருடி அவனோடு கலந்தாள்; ஐக்கியமுற்றாள்.

இங்கும் சில வினாக்கள் விளைகின்றன.. கடவுள் மனித வடிவில் வந்து மனிதப் பெண்ணை மணந்து போவது உண்டு; வள்ளியும் முருகனும் போல. மனித வடிவத்திலேயே கடவுள் காதல் உண்டு; கண்ணனும் ராதையும் போல. ஆனால் கடவுள் திருவுருவத்தோடு ஒரு மானிடச்சி கலந்தாள் என்பது பூமிதனில் யாங்கணுமே காணாதது.

ஆனால், அர்ச்சாவதாரமாகிய விக்கிரகத்தோடு குருதியும் இறைச்சியும் கொண்ட ஒரு மானிடப் பெண் கலந்ததுண்டா என்ற கேள்விக்கு விடை சொல்ல ஓர் ஆவணமும் இருக்கிறது.

குலசேகரப் பெருமாள் தமது புத்ரி சோழவல்லியை அழகிய மணவாளப் பெருமாளுக்குத் திருமணம் செய்வித்துத் தமது சொத்தை ஸ்ரீதனமாகக் கொடுத்துத் திருமண்டபம் கட்டிய செய்தியும் - என்ற குறிப்பு எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிப்பித்த கோயிலொழுகு நூலில் காணப்படுகிறது.

ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட Indian Movement: some aspects of dissent, protest and reform என்ற நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது. Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple. - பக்தர்கள் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்.

சமண - பௌத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறாய்த் துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மத நெறிகளின் குறியீடாகத்தான் ஆண்டாளைப் பார்க்கலாம்.

ஆண்டாளின் பிறப்பு மறைவு இரண்டின் மீதும் விடை அவிழாத வினாக்கள் இருந்தாலும் ஆண்டாளின் தமிழ் நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகின்றது.

எண்ணம் திண்ணியதாயின் எண்ணியதெய்துவாய்; என்ற நிபந்தனையற்ற நம்பிக்கையின் நிதர்சனமாக ஆண்டாளைப் புரிந்து கொள்ளலாம்.

கண்ணன் புரிந்து கொள்ள முடியாத ஒரு கடவுள் தத்துவம். தன் காலத்திற்கு முன் கூட்டியே பிறந்துவிட்டவன் கண்ணன். இன்னும் சொல்லப் போனால் மிக மிக முன் கூட்டி. அதனால் அவனைப் புரிந்து கொள்வது வருங்காலத்தின் சாத்தியமே தவிர நிகழ்காலத்தினதன்று  என்ற ஓஷோவின் கூற்று உண்மையாயின் கண்ணனைப் புரிந்து கொண்ட இறந்த காலத்தின் எதிர்காலம் என்றே ஆண்டாளைச் சொல்லத் தோன்றுகிறது.

ஒன்றையே நினை - ஒருமுகப்படு - ஒப்புக்கொடு - நம்பு - கருதியதில் உறுதி கொள் - வினைப்படு - வெற்றியுறு என்ற தத்துவம் ஆண்டாளுக்கும் கண்ணனுக்கும் மட்டும் உரியதன்று.

தலைவனுக்கும் தொண்டனுக்கும், நண்பனுக்கும் நண்பனுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், தந்தைக்கும் மகனுக்கும், சத்தியத்திற்கும் வாழ்வுக்கும் இதுவே உரியது.


எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும், மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான். இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும், கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் கழித்த பிறகும் ஆண்டாள் அருளிச் செல்லும் அருஞ்செய்தி இதுதான்! 

ஜல்லிக்கட்டுக்குத் தடை - வழக்கு கடந்து வந்த பாதை..!

20-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



கடந்த 2006-ல் இருந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். 

இந்த வழக்கு கடந்த வந்த பாதையை பார்ப்போம்.

2004-ம் ஆண்டு விலங்குகள் நல வாரியம், ரேக்ளா ரேஸை தடை செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த நீதியரசர் இப்ராஹிம் கலிபுல்லா, "அது பாரம்பரியமான விழா. அதைத் தடை செய்ய முடியாது..." என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்தார்.

2005-ல் ஜல்லிக்கட்டில் பலியான ஒருவரின் தந்தை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடுத்தார். 

2006-மார்ச் 29-ல் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து துணைத் தலைவரான கே.முனுசாமி தேவர் என்பவர் ரேக்ளா ரேஸ் நடத்த வேண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார். 

இந்த இரண்டு ரிட் மனுக்களும் நீதிபதி பானுமதி முன்பு விசாரணைக்கு வந்தன. கோரிக்கையோ ‘ரேக்ளா ரேஸை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்பது. ஆனால் நீதிபதி பானுமதியோ, சம்பந்தமே இல்லாமல் ‘ரேக்ளா ரேஸ் பந்தயங்களை எப்படி அனுமதிக்கலாம்...? இதில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. விலங்குகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டத்திற்கு எதிரானது இந்தப் போட்டிகள். எனவே ரேக்ளா ரேஸ், எருது ஓட்டப் பந்தயம் மற்றும் ஜல்லிக் கட்டு ஆகியவற்றை தடை செய்வதாக’ திடீரென்று அறிவித்தார்.

இது விலங்குகள் நல ஆர்வலர்களே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி. ஏனென்றால் விலங்கு நல அமைப்புகள் ஏற்கனவே எடுத்த பல்வேறு முயற்சிகள் பலனளிக்காதபோது, இது எதிர்பாராமல் அவர்களுக்கு கிடைத்த பரிசு.

2007-ஜனவரியில் இது தொடர்பாக நடைபெற்ற அப்பீல் மனுவில் நீதிபதிகள் எலிபி தர்மாராவ், ஜனார்த்தன ராஜா அடங்கிய அமர்வு, நீதிபதி பானுமதியின் தீர்ப்புக்கு தடை விதித்து அந்த ஆண்டு மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதித்தது. 

இந்த வழக்கின் மேல்முறையீட்டின்போதுதான் விலங்குகள் நல வாரியம்(AWBI ) இந்த வழக்கில் தலையிட்டு உள்ளே நுழைந்தது. 

2007-மார்ச் - இதே உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதி பானுமதியின் தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது. கிராம விளையாட்டுக்களை முழுமையாகத் தடை செய்ய முடியாது. ஆனால் நெறிமுறைப்படுத்தலாம் என்று கூறி இதற்காக ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் இயற்றுமாறு மாநில அரசுக்கு உத்தரவிடுகிறது.

2007 - ஜூலை - 9 - இந்தத் தீர்ப்பை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் ஜல்லிக்கட்டு பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

2007 - ஜூலை 27-ல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

2007-ல் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. 

2008 - ஜனவரி - காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் மேலும் பல நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.

2008-ல் மேனகா காந்தி தொடுத்த இன்னொரு பொது நலன் வழக்கினால் ஜல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது. ‘வேண்டுமானால் ரேக்ளா ரேஸ் நடத்திக் கொள்ளுங்கள்’ என்று பெருந்தன்மையுடன் அனுமதிக்கிறார்கள்.

2009-ல் தி.மு.க. அரசு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை இயற்றுகிறது.

2009-ல் தமிழக அரசு அளித்த உறுதிமொழி மற்றும் தமிழக சட்டசபையில் இயற்றிய ஒழுங்கு முறை சட்டத்தை ஏற்று ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தற்காலிகமாக அனுமதியளித்தது.

2010 - நவம்பர் 25-ல் உச்சநீதிமன்றம் மீண்டும் ஒரு இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது. இதன்படி, “காளைகள் இந்திய விலங்குகள் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். விலங்குகள் நல வாரியத்தின் இரண்டு பிரதிநிதிகள் ஜல்லிக்கட்டை கண்காணிக்க வேண்டும். கால்நடை மருத்துவர்கள் குழு காளைகளை பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் 2 லட்சம் முதல் 5 லட்சம்வரையிலும் வைப்புத் தொகை செலுத்த வேண்டும்...” என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

2011 ஜனவரியில் கூடுதல் நிபந்தனைகள் மற்றும் புதிய வரைமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2011 ஏப்ரல் மாதம் விலங்குகளை மையமாக வைத்து நடத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்தது.

2011 - ஜூலை - நடிகை ஹேமமாலினி ‘காளைகளை காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்’ என்று அப்போதைய சுற்றுச் சூழல் துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷுக்கு ஒரு கடிதம் எழுதினார். இதனை பல விலங்குரிமை பிரபலங்களும் ஆதரித்தார்கள்.

2011 - ஜூலை 11 - நடிகை ஹேமமாலினியின் கடிதத்தைத் தொடர்ந்து மிருக வதைச் சட்டம் 1960-ன் கீழ் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, குரங்கு போன்ற விலங்குகளோடு ஆறாவதாக காளையையும் காட்சிப் பொருளாக வைத்து, வித்தை காட்டுவதை மத்திய அரசு தடை செய்து அரசாணை பிறப்பித்தது.

(இதே ஆண்டுதான் நடிகை ஹேமமாலினிக்கு PETA PERSON OF THE YEAR விருதும் அளிக்கப்பட்டது. சென்ற ஆண்டு நடிகை சன்னி லியோனிக்கு இந்த விருது அளிக்கப்பட்டது என்பது உப தகவல்.)

2012 - ஜனவரி - ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

2012 - ஜனவரி - மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதி வழங்கியது. 

2013 - ஜனவரி - ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடையில்லை என்றும், போட்டிகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை உத்தரவிட்டது.

2013 -ஜனவரி - இந்த உத்தரவை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது. 

2014 பிப்ரவரி - ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தடை கோரி விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த இந்த ஜல்லிக்கட்டு வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றும்படி உச்சநீதிமன்றமே உத்தரவிட்டது.

2014 மே 7-ல் - சிவில் வழக்கு எண் 5387 2014, SLP எண் 11686 2007 ரிட் மனு 145, மற்றும் 2011 மனுதாரர்கள் விலங்கு நல வாரியம், மற்றும் நாகராஜா மற்றும் சிலர் மீதான வழக்கில் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பினாகி சந்திரகோஸ் அடங்கிய உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தி.மு.க. அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு முறைப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்து, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தடையும் விதித்து 102 பக்க தீர்ப்பினை வழங்கியது.

(அந்தாண்டு இறுதியில் நீதிபதி ராதாகிருஷ்ணனுக்கு பீட்டா அமைப்பு 2014-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற விருதினை  வழங்கியது என்பது வேறு விஷயம்.) 

அதில், 2011-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி  மத்திய சுற்று சூழல் துறை அமைச்சரான ஜெயராம் ரமேஷ் பீட்டா மற்றும் விலங்கு நல வாரிய அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து காளையை வன விலங்கு காட்சி பட்டியலில் சேர்த்து வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு, மேலும் 2013-ல் விலங்கு நல வாரிய அமைப்பை சேர்ந்த மணிலால், மற்றும் அபிஷேக், மாவட்ட ஆட்சியாளர் முன்னிலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டு காளைகளை துன்புறுத்திய புகைப்படம், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்பது உறுதியாகிறது. 

இதனை நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறி ஜல்லிக்கட்டு, ரேக்ளா ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுகள் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாகத அறிவித்தது. அது குற்றமாகவும் கருதப்பட்டு தீர்ப்பு வழங்கியது.

மேலும் இந்தக் காட்சிப்படுத்தும் பட்டியலில் மாற்றமோ, திருத்தமோ செய்ய விரும்பினால் மத்திய அரசும், விலங்குகள் நல வாரியமும் பீட்டா அமைப்பை கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2014 - மே 19 - ஜல்லிக்கட்டு மீதான இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசு மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

2016 - ஜனவரி 7 - தமிழக அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலால் தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு, காளையை காட்சிப்படுத்தப்பட்ட வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்கியதாக அறிவித்ததோடு, ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்றும் அறிவித்தது. மேலும், ஜல்லிக்கட்டு, மற்றும் காளை தொடர்புடைய விளையாட்டுகள் அனைத்தும் மாநில அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

2016 - ஜனவரி 12 - மத்திய அரசின் இந்த ஆணைக்கு, உடனடியாக பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியத்தின் தலைவரான என்.ஜி.ஜெயசிம்மா ஆகியோர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இடைக்கால தடை வாங்கினார்கள். 

மத்திய அரசு இந்த விஷயத்தில் விலங்குகள் நல வாரியத்தை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்பதால் இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல், “மத்திய அரசு காளையை நீக்க விரும்பினால் விலங்குகள் நல வாரியத்தோடு கலந்து பேசி அனுமதி பெற்ற பின்னர் அதனை நீக்கம் செய்யலாம்...” என்று தனது இடைக்காலத் தீர்ப்பில் கூறியது.

இந்த வழக்கு விசாரணைக்காக மத்திய அரசிடம் அனுமதி கோராமல், தன்னிச்சையாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதற்காக விலங்கு நல வாரியத்தின் தலைவர் ராம் மெஹர் கார்ப்பிற்கு 2016 மார்ச் 28-ம் தேதியன்று மத்திய அமைச்சரவையில் இருந்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் அவர் சென்ற 2016 டிசம்பர் மாதம் பதவி விலகிவிட்டார்.  ஆனாலும் மத்திய அரசு விளக்கம் கேட்ட கடிதத்தையும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டுத்தான் ஓடியிருக்கிறார்.

இந்த நீதிமன்றத் தடைக்கு சில நாட்களுக்கு முன்பாக 2015 டிசம்பர் 15-ம் தேதி  ஜல்லிக்கட்டை தடை செய்த விலங்குகள் வாரியத்தின் தலைவரான என்.ஜி.ஜெயசிம்மாவுக்கு தனது ஆதரவுக் கடிதத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதியனுப்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2016 - நவம்பர் 16 - தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

2017 - ஜனவரி 12 - விரைவில் தீர்ப்பு வழங்குமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

2017 - ஜனவரி 18 - இளைஞர்களின் போராட்டத்தைச் சுட்டிக் காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு குறிப்பிட்டபோது, இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் நாங்கள் தலையிட முடியாது என்று கை விரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

2017 - ஜனவரி - 19 -தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் குறித்து வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ராஜா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தபோது, “சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுங்கள்...” என்று கை காட்டியது உச்சநீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக ஜல்லிக்கட்டு என்பது இயல்பிலேயே “மிருக வதையுடன் கூடிய ஒரு விளையாட்டுதான்...” என்று தீர்ப்பளித்து விட்டது. ‘மிருக வதை’ என்கிற பெயரில்தான் முன்பு நீதிபதி பானுமதியும் இதைத் தடை செய்தார். 

எனவே இப்போது இதை எதிர்கொள்ள வேண்டுமென்றால் அவசர சட்டத்தின் வழியாகத்தான் செய்ய வேண்டும். 

சரி.., அதை யார் பிறப்பிக்க வேண்டும்..? 

மிருகவதை தடுப்பு சட்டம் மத்திய சட்டம் என்பதால் மத்திய அரசுதான் பிறப்பிக்க வேண்டும். அதுதான் உடனடியானதும் எளிதானதும்கூட. ஆனால், அது தனியாக ஒரு சட்டமாக அல்லாமல் (தமிழக அரசு இயற்றிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் போல அல்லாமல் ) மிருக வதை தடுப்பு சட்டத்தையே திருத்த வேண்டும். 
எப்படி செய்வது..? 

எது எல்லாம் வதை (Cruelty) என்று சொல்லும் மிருகவதை தடுப்புச் சட்டம், அதற்கு விதிவிலக்குகளும் கொடுத்துள்ளது.

11. (3) Nothing in this section shall apply to -
(a) the dehorning of cattle, or the castration or branding or nose roping of any animal in the prescribed manner, or
(b) the destruction of stray dogs in lethal chambers 20 [by such other methods as may be prescribed] or
(c) the extermination or destruction of any animal under the authority of any law for the time being in force; or
(d) any matter dealt with in Chapter I V ; or
(e) the commission or omission of any act in the course of the destruction or the preparation for destruction of any animal as food for mankind unless such destruction or preparation was accompanied by the infliction of unnecessary pain or suffering.
-----

28. Saving as respects manner of killing prescribed by religion : Nothing contained in this Act shall render it an offence to kill any animal in a manner required by the
religion of any community.

அதாவது காளைகளின் கொம்பை நீக்குவது, நாய்களைப் பிடித்து அவற்றுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வது, தெரு நாய்களை கொல்வது, உணவிற்காக கொல்வது, மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்துவது அல்லது மத நம்பிக்கைகளுக்காக பலியிடுவது இவையெல்லாம் மிருக வதையில் வராது. எனவே இந்த விதிவிலக்கு பட்டியலில் ஜல்லிக்கட்டையும் சேர்க்க வேண்டும். இதைத்தான் மத்திய அரசு போன வருடம் செய்திருக்க வேண்டும். 

ஆனால், அதை விட்டுவிட்டு தூக்கி எறியக் கூடிய ஒரு சொதப்பலான அறிவிக்கையை பா.ஜ.க. வெளியிட்டுவிட்டு, நாங்கள் நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்று சொல்லி தப்பித்தது. 

2014-ம் ஆண்டு வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் operative portion இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

....77 (1) We declare that the rights guaranteed to the Bulls under Sections 3 and 11 of PCA Act read with Articles 51A(g) & (h) are cannot be taken away or curtailed, except
under Sections 11(3) and 28 of PCA Act...

அதாவது மிருகங்களுக்கான உரிமைகள், சட்டப் பிரிவுகள் 11(3) மற்றும் 28-ஐ தவிர வேறு எந்த விதத்திலும் பறிக்கப்பட முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டது. எனவே ஜல்லிக்கட்டை இந்த பிரிவுகளில் சேர்ப்பதுதான் உடனடியாக நாம் செய்ய வேண்டிய செயல். 

சரி, அப்படியே சேர்த்தாலும் அது இந்த மிருகவதை சட்டத்தின் நோக்கத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது என்று விலங்கு நல ஆர்வலர்கள் நிதிமன்றதை அணுகலாம். ஆனால், இவ்வளவு பெரிய மக்கள் போராட்டத்திற்கு பிறகு நீதிமன்றம் அவ்வாறு சொல்லாது என்பதே நிதர்சனம்.

மத்திய அரசுக்கு இதைவிட எளிதான வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியவில்லை. 

கடைசியாக நடந்த விசாரணையில் தமிழக அரசு காளைகளை விலங்குகள் நலப் பட்டியலில் சேர்த்தது தவறு என்றும், அதை நீக்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது.

ஆனால் விலங்குகள் நல வாரியமும், பீட்டா அமைப்பும் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளன. “ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் காளைகளை இவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள். அதனால் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக் கூடாது...” என்று இந்த இரண்டு அமைப்பினரும் சொல்லியிருக்கிறார்கள்.

மத்திய அரசோ “காட்சிப்படுத்தப்பட வேண்டிய பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்களித்தது சரிதான். ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியமான, கலாச்சாரத் தொடர்புடைய விளையாட்டு. அது தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்...” என்றே சொல்லியிருக்கிறது..!

ஜல்லிக்கட்டை தடை செய்த பெருமை காங்கிரஸ் அரசையே சாரும். அதில் அங்கம் வகித்த கட்சிகள் தி.மு.க மற்றும் பா.ம.க , ஆதரவளித்தது விடுதலை சிறுத்தைகள்.

ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட முதல் காரணம், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஜெயராம் ரமேஷ்தான். அவர் அந்தப் பட்டியலில் காளையை சேர்க்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்த நிலைமை வந்திருக்காது.

அதே சமயம் 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டை தடை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என்கிற தமிழரும் ஒருவர் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதிசயத்திலும் அதிசயமாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சாமி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி இந்த வழக்கில் தானும் ஒரு மனுதாரராகச் சேர்ந்துள்ளார்.  

அவரது 72 பக்க மனுவில் ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் காலம், காலமாக நடந்ததற்கான தகுந்த ஆதாரங்கள், இலக்கிய ஆதாரங்கள், புராண ஆதாரங்கள், சரித்திர ஆதாரங்கள், மற்றும் கால்நடைகளுக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள கலாச்சார தொடர்பு, நாட்டு விலங்கின தொடர்பு போன்றவைகளை மிக கவனமாக தொகுத்து கொடுத்துள்ளார் என்று பீட்டா அமைப்பை சேந்த ஒருவர் தொலைக்காட்சி விவாதத்தில் குறிப்பிட்டார்.

இந்த ஜல்லிக்கட்டு விழா, சமயம் சார்ந்த விழா என்ற அடிப்படைவாதத்தை உச்சநீதிமன்றத்தில் இதுவரையிலும் யாரும் முன் வைக்கவில்லை என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள். இந்த வாதம் சட்டத்தின் முன் பலமான வாதம் என்று தெரிந்தும், இதை மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள் செய்யாததுதான் தீர்ப்பை தமிழகத்திற்கு எதிராக கொண்டு வந்திருக்கிறது என்கிறார்கள் சிலர்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம், பீட்டா மற்றும் சில விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்திருந்தனர். இதில் சிலரது சார்பாக அன்றைய காலகட்டத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர்தான் தற்போதைய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி. 

அதாவது தற்போதய மோடி அரசின் தலைமை வழக்கறிஞர். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜல்லிக்கட்டு கூடாது.. அதற்கு தடை வேண்டும்’ என்று கேட்டு உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆகவே அந்த முகுல் ரோத்தகி, எப்படி தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசின் சார்பாக ஆஜராகி வாதிட்டார் என்று தெரியவில்லை..

மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து நிச்சயம் பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்துக்குப் போகும். அப்போது மத்திய அரசும் நீதிமன்றத்தில் வந்து நிற்கும். அந்த கட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை ஆதரித்துதான் மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாட வேண்டியிருக்கும்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்த ஒரு வழக்கறிஞர், பின்னர் அதற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்து வாதாட முடியாது. அப்படியென்றால் வேறு மூத்த வழக்கறிஞர்களை வைத்து மத்திய அரசு, தற்போது தமிழக அரசு கொண்டு வந்திருக்கும்  அவசர சட்டத்தைக் காப்பாற்ற வாதாட வேண்டியிருக்கும். 

'கடந்த இரண்டு நாட்களாக ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கே அவசர சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது என்று திரும்ப, திரும்ப முகுல் ரோத்தகி கூறுவதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள் சில வழக்கறிஞர்கள்.

இப்போது தீர்ப்பு தயாராக இருக்கிறது. ஒரு வாரம் கழித்து சொல்லப் போகிறார்கள். அதற்குள்ளாக இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு முடிந்துவிடும்.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நமக்குச் சாதகமாக வந்தால் ‘வெற்றி நமதே’ என்று சொல்லி பெருமைப்படலாம்.

தீர்ப்பு நமக்கு பாதகமாக வந்தால், மறுபடியும் இதேபோல் தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை..!

அதற்குள்ளாக மாநில அரசு அறிவிக்கவுள்ள சட்டத்தை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கியும், வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டினை சேர்த்தும் நடைமுறைப்படுத்தினால் உச்சநீதிமன்றம் இதனை கேள்வி கேட்கவே முடியாது..!

இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கப் போகும், இந்த இரண்டு விஷயங்களும்தான் இந்தப் பிரச்சினையை நிரந்தரமான ஒரு முடிவுக்குக் கொண்டு வரும். 

காத்திருப்போம்..!

குறிப்பு : பல்வேறு தளங்களில் இருந்து தொகுத்து வழங்கப்பட்டது.


ஒரு மெல்லிய கோடு - சினிமா விமர்சனம்

02-07-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தேடப்பட்ட சிவராசன், சுபா பற்றிய ‘குப்பி’, சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாறாக ‘வனயுத்தம்’ என்று உள்நாட்டில் நடந்த கதைகளை படமாக்கிய கன்னட இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ், இப்போது வெளிநாட்டுக் கதையையே சுட்டும், சுடாமலும் படமாக்கியிருக்கிறார்.
2012-ம் ஆண்டு வெளியான ஸ்பெயின் மொழி படமான ‘தி பாடி’ என்கிற படத்தின் அதிகாரப்பூர்வமில்லாத காப்பி இது. கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி கன்னடத்தில் ‘கேம்’ என்கிற பெயரில் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது.  இந்த ‘கேம்’ படத்தின் தமிழ் டப்பிங் படம்தான் ‘ஒரு மெல்லிய கோடு’..
‘தி பாடி’ படத்தின் கதை கொஞ்சம் மாற்றப்பட்டு, மலையாளத்தில் ராஜேஷ் பிள்ளையின் இயக்கத்தில் ‘வேட்டா’ என்கிற பெயரில் ஒரு படம், இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி வெற்றியும் பெற்றது.
   
பிரபல பெண் தொழிலதிபரான மனிஷா கொய்ராலா மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார். அவருடைய உடல் ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்வதற்காக அரசு உடற்கூறு ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நள்ளிரவில் திடீரென மனீஷாவின் உடல் காணாமல் போய்விடுகிறது.
போலீஸ் உதவி கமிஷனரான அர்ஜூன் இந்தக் கேஸை விசாரிக்க அவசரமாக அங்கே வருகிறார். மனீஷாவின் கணவரான ஷாமையும் வரச் செய்கிறார். ஷாம் தனது மனைவியின் உடலைக் காணாமல் தவிக்கிறார். சண்டையிடுகிறார். போலீஸும் ஆய்வகம் முழுவதும் மும்முரமாக தேடுகிறது.
இடையில் அர்ஜூனின் விசாரணையின்போது ஷாம் தன் மீது சந்தேகம் வரும் அளவுக்கு நடந்து கொள்ள.. இவரிடம் ஏதோ உள்ளது என்று சொல்லி அவரை இரவு முழுவதும் அங்கேயே தங்க வைக்கிறார் அர்ஜூன்.
அந்தக் கட்டிடத்தில் திடீர், திடீரென்று ஷாமின் முன்பாக மனீஷா காட்சியளிக்க.. இறந்து போன மனீஷா எப்படி உயிருடன் வந்தார் என்று குழம்பிப் போய் அர்ஜூனிடம் இது பற்றிச் சொல்கிறார். அவரும் தேடுகிறார். கிடைக்கவில்லை. கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் இந்த திரில்லர் படத்தின் முடிவு.
போலீஸ் அதிகாரி வேடமென்றால் அர்ஜூனுக்கு மிக பொருத்தமாகத்தான் இருக்கும். இதில் கொஞ்சம் ஸ்டைலிஷான இயக்கத்தினாலும் அதிகமாக தமிழகத்து போலீஸையே காட்டாத அளவுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சில் நடித்திருக்கிறார் அர்ஜூன்.
அதிகப்படியான நடிப்பைக் காட்டாமல் போலீஸ் அதிகாரிக்கே உரித்தான கெத்தையும், கம்பீரத்தையும், கண்டிப்பையும் காட்டிவிட்டு இறுதியில் தான் யார் என்பதைச் சொல்லும்போது நிஜமாகவே நமது கண்களுக்கு வில்லனாகவே தெரிகிறார்.
மனிஷா கொய்ராலா கேன்சரில் இருந்து மீண்டு வந்தாலும், இந்த வயதிலும் ‘பம்பாய்’ படத்து துள்ளலோடு பல காட்சிகளில் வலம் வந்திருக்கிறார். தன்னைவிட வயது குறைந்த ஷாமை திருமணம் செய்திருந்தாலும் அவர் மீதான காதலில் உறுதியாக இருப்பதும்.. எப்போதும் ஷாமை விரும்பினாலும்,. ஷாம் விலகிப் போவதை உணர்ந்து தன்னைக் காத்துக் கொள்ள தயாராகிவிடுவதும்.. அவருடைய கேரக்டரை நன்கு ஸ்டெடி செய்து நடித்திருக்கிறார்.
இரட்டைத் தலை பாம்புபோல மனிஷாவிடமும், அக்சா பட்டிடமும் மாட்டிக் கொண்டு முழுக்கிறார் ஷாம். பணத்துக்காக கல்யாணம் செய்துவிட்டு, தனது விருப்பத்துக்காக அக்சாவை காதலிக்கும் கிரிமினல் கேரக்டர். ஏதோ தனக்குத் தெரிந்த அளவுக்கும், இயக்குநர் சொல்லிக் கொடுத்த அளவுக்கும் நடித்திருக்கிறார் ஷாம்.
அக்சா பட் கவர்ச்சிக்கு கொஞ்சம் பொருத்தமாகி பாடல் காட்சிகளில் ரகளையாக்கியிருக்கிறார். ஆனால் வில்லி நடிப்பெல்லாம் இவருக்கு ஒத்துவரவில்லை. படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஆட்களே இல்லை என்று நினைத்து இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷே நடித்திருக்கிறார். அடுத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமே ஸார்..?
படத்தின் அதிகமான காட்சிகள் ஆய்வக வளாகத்திற்குள் நடக்கிறது என்றாலும் அதையும் அழகுற படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ண ஸ்ரீராம். மழை காட்சிகளும், ஷாமின் வீட்டின் உட்புறக் காட்சிகளும் ஒளிப்பதிவாளரின் பெயரைச் சொல்கின்றன. அந்த உடற்கூறு ஆய்வகம் ‘செட்’ என்று சொன்னால் நம்பத்தான் முடியலை. இதற்காக கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
பாடல்தான் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய ஸ்பீடு பிரேக்கர். அது இல்லாமலேயே இருந்திருக்கலாம். இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை மட்டும் இந்தப் படத்துக்கு பெரிய  டானிக் என்பது உண்மையே.
கள்ளக் காதல் விவகாரம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இப்போது சர்வசாதாரணமான விஷயமாகிவிட்டது. இங்கே தினத்துக்கு ஒரு கொலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனாலேயே இந்தக் கதை சாதாரணமான ஒரு கதையாகிவிட்டது.
இதனால் இதனை இன்னும் அதிகமான சுவராசியம் கலந்த திரைக்கதை மற்றும் அழுத்தமான இயக்கத்தினால் மெருகேற்றியிருக்க வேண்டும். அது இல்லாததால் படம் சில நேரங்களில் போரடிக்கிறது.
உண்மையில் மனீஷா ஷாமின் விஷம் கலந்த ஒயினை குடிக்காமல் உயிர் தப்பினாரா..? அல்லது செத்தே போனாரா..? கிருஷ்ண பிரசாத் அவளை மார்ச்சுவரியில் காப்பாற்றுவது உண்மைதானா..? உயிருடன்தான் இருக்கிறார் என்றால் கடைசியில் அவரை கொலை செய்தது யார்..? இதையெல்லாம் புரியாதவர்களுக்கு புரியும்வகையில் சொல்லியிருக்கலாம்..!
மர்ம மரணம் என்றால் இறந்து போனவரின் உடலை அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்வார்கள். அங்கே போஸ்ட் மார்ட்டம் செய்து, அதிலும் சந்தேகம் இருந்தால் மட்டுமே உடல் உறுப்புகள் சிலவற்றை வெட்டியெடுத்து அதனை ‘பாரன்ஸிக் லேபரட்டரி’ எனப்படும் ‘உடற்கூறு ஆய்வக’த்திற்கு அனுப்பி வைப்பார்கள். உடலையே கொண்டு போகச் சொல்ல மாட்டார்கள். இதில் அப்படியே நேர்மாறாக.. மனீஷாவின் உடல், ‘உடற்கூறு ஆய்வக’த்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.  ஸ்பெயின் படத்தை காப்பியடித்ததில் அப்படியே இதுவும் காப்பியாகிவிட்டதுபோலும்..!
பிரமாதமாக திட்டம் போடுகிறார் டாக்டரான கணவர். விஞ்ஞானபூர்வமாகக் கூட கண்டுபிடிக்க முடியாத லெவலில் ஒரு கொலைத் திட்டம்.. பணமும் கிடைக்கும். காதலியும் கிடைப்பாள் என்று காத்திருப்பவன், போலீஸ் விசாரணையை எதிர்கொண்டவுடன் திடீர் பதட்டத்துடன் அல்லாடுவது அவரது கேரக்டரையே சிதைத்துவிட்டது.
ஷாமின் இந்தப் பதட்டமான காட்சிகளின் உச்சக்கட்டமாக டாய்லெட்டில் போட்ட பேப்பரை எடுத்து வாயில் போட்டு முழுங்குகிறாராம்.. கொடுமைதான்.. வெளிநாட்டு படத்திற்கு இது ஓகேதான். தமிழுக்கு இதெல்லாம் தேவையில்லாதது என்பது இயக்குநருக்கு ஏன் புரியவில்லை. இங்கேதான் பணம் என்று ஒன்று இருந்தால், நீதியையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்பது இயக்குநருக்குத் தெரியாதா என்ன..?
கிளைமாக்ஸில் வரும் டிவிஸ்ட் யாரும் எதிர்பாராததுதான். அதே சமயம் இப்படியொரு தண்டனையை அரசு ஊழியரே.. அதுவும் காக்கிச் சட்டை அணிந்த ஒருவரே கொடுப்பது ஏற்புடையதல்ல. தவறான வழிகாட்டுதலுக்கு அல்லவா இந்தப் படம் சொல்லிக் கொடுக்கிறது..?
எது எப்படியிருந்தாலும், 2 மணி நேரத்தில் ஒரு துப்பறியும் நாவலை படித்த உணர்வை இந்தப் படம் கொடுக்கிறது என்பது மட்டும் உண்மை. பார்க்கலாம்..!