22-10-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையக் கருவாக வைத்து 'அங்குசம்' என்ற பெயரில் படமெடுத்திருக்கிறார் இயக்குநர் மனுக்கண்ணன். இந்தப் படம் வெளியாகும் தயார் நிலையில் இருக்க.. சென்சார் சர்டிபிகேட் பெற்ற பின்பு, வரிச் சலுகைக்காக விண்ணப்பிக்கும்போது அதற்காக லஞ்சப் பணம் வேண்டும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ரமணாவின் பி.ஏ. சரத்பாபு கேட்டதாக இயக்குநர் மனுக்கண்ணன் குற்றம் சாட்டியிருக்கிறார். இவரது பேட்டி சென்ற வார நக்கீரனில் வெளிவந்துள்ளது.. அந்தச் செய்தி இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது..!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு இயந்திரங்களில் ஊற்றாகப் பெருக்கெடுத்திருக்கும் லஞ்ச ஊழல் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு ஊட்டும் விதமாக 'அங்குசம்' என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார், மனுக்கண்ணன். சமீபத்தில் தணிக்கை அதிகாரிகளால் U சான்றிதழ் வழங்கப்பட்டு, படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க தணிக்கைக் குழு உற்சாகமாகப் பரிந்துரைத்தபோதும் அந்தப் படத்திற்கு வரிச்சலுகை கிடைக்கவில்லை. என்ன நடந்தது ..? தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவங்களை உள்ளது உள்ளபடியே விவரிக்கின்றார் இயக்குநர் மனுக்கண்ணன்.
"என் சொந்த ஊர் வேலூர். நான் எம்.எட்., எம்.பி.ஏ. படித்த பட்டதாரி. மும்பைல, திரைப்பட இயக்கத்திற்கான படிப்பையும் முடிச்சேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே போராட்ட குணம் அதிகம். கண்முன் நடக்குற தவறுகளை தட்டிக் கேட்பேன். பேனா முனையால் எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை உள்ளவன் நான். இந்த நிலையில் துபாயில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளரா வேலை பார்த்தேன். அப்ப 'நக்கீரன்' இதழில் வந்த திருச்சி மாவட்டம் பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சீனிவாசன், ஊழலுக்கு எதிரா கடுமையா போராடிவரும் தகவல்களைப் படிச்சேன். தகவல் அறியும் உரிமை சட்டத்தையே அவர் அங்குசமா வச்சிக்கிட்டு, அரசாங்க எந்திரம் என்கிற யானையை அவர் எதிர்த்து நிற்பது எனக்குப் பெரிய விஷயமாகப்பட்டது.
உடனே தமிழகம் திரும்பிய நான் அந்த சீனிவாசனின் கேரக்டரை மையமா வச்சி ஒரு திரைக்கதையை உருவாக்கி, பாடல்கள், ஃபைட்டுன்னு சில சினிமா சமாச்சாரங்களையும் சேர்த்து 'அங்குசம்' என்ற பெயரிலேயே திரைப்படத்தை எடுத்தேன். அந்தத் திரைப்படத்தைப் பார்த்தால் சமூகநீதிக்கு எதிரா குரல் கொடுக்கும் உணர்ச்சி இளைஞர்களுக்கு ஏற்படும். லஞ்சம் வாங்கும் ஆட்களுக்கு கூச்ச உணர்ச்சியை உண்டாக்கி, அவர்களை இந்தப் படம் திருந்த வைக்கும். பாமர மக்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், நம்ம உரிமையைப் பெற நாம எதற்குக் காசு கொடுக்கணும் என்கிற வேகம் அவர்களுக்குள் தீயா பெருக ஆரம்பிக்கும்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், படத்தின் நிஜ ஹீரோவான சீனிவாசனைப் பேச வைத்தேன். அவர் திருச்சி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் முகத் திரையைக் கிழித்துத் தொங்க விட்டார். அந்த விழாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பத்தின நூலை அத்தனை பேருக்கும் இலவசமா விநியோகிச்சோம். அந்த விழாவில் சீமான் போன்றோர் கலந்து கொண்டு சீனிவாசனையும் அங்குசம் படத்தையும் மனதாரப் பாராட்டினார்கள். அந்த விழாவில் சீனிவாசன் பேசியது உலகம் முழுவதும் இணையத்தளத்தில் அன்றே பரவ, சம்பந்தப் பட்ட மாவட்ட கலெக்டரே சீனிவாசனை அழைத்து அவரது புகாரை நேர்மையான முறையில் விசாரிப்பதாக உறுதியளித்திருக்கிறார் என்பது தனிக்கதை.
அடுத்து படம் முடிந்து தணிக்கைக்கு அனுப்பினோம். செப்டம்பர் 2-வது வாரம் அந்தப் படத்தை தணிக்கைக் குழு உறுப்பினர்களான நல்லி குப்புசாமி செட்டியார், சங்கரவள்ளி, நிருத்தியா, சதீஷ்குமார் மற்றும் சென்சார் போர்டு அதிகாரி பக்கிரிசாமி ஆகியோர் பார்த்தார்கள். படம் முடிந்ததும்… அதிகாரி பக்கிரிசாமி, "அபாரமா எடுத்திருக்கீங்க. இந்தப் படத்தை ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் மாணவர்களுக்குப் போட்டுக் காட்டணும். இதுக்கு ரெண்டு “யு’ சர்டிபிகேட் கொடுக்க வாய்ப்பிருந்தால் கூட கொடுப்பேன். உடனே வரிவிலக்கு கேட்டு அரசுக்கு அப்ளை பண்ணுங்க"ன்னு பாராட்டினார். நல்லியோ "எங்களுக்குத் தெரியாத பல விஷயங்களை படத்தில் கொண்டு வந்திருக்கீங்க" என மனதாரப் பாராட்டினார். இப்படி தணிக்கைக் குழுவில் இருந்த அத்தனைபேரும் பாராட்டினாங்க. 20-09-2013-ல் தணிக்கை சான்றிதழ் வாங்கினேன்.
சென்சார் போர்டு அதிகாரி சொன்ன மாதிரி அடுத்த நாளே வரிவிலக்குக்கான அப்ளிகேஷனை 10 ஆயிரம் ரூபாய் டி.டி.யோடு போட்டேன். இதைப் பரிசீலித்த வரிவிலக்கு அதிகாரிகள் படம் பார்க்கணும்னு சொல்ல அவங்களுக்கும் படத்தைப் போட்டுக் காட்டினேன். நான்கு அதிகாரிகளுடன் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜேஸ்வரி, பி.வாசு ஆகியோரும் படத்தைப் பார்த்தாங்க.
படம் முடிந்ததும் சங்கர் கணேஷ் ஓடி வந்து என்னைக் கட்டித் தழுவி, "இப்படிப்பட்ட படம்தான் வரணும். நீங்க பெரிய இயக்குநரா, தயாரிப்பாளரா வளர என் ஆசிர்வாதம்"னு வாழ்த்தினார். எல்.ஆர்.ஈஸ்வரி, ராஜேஸ்வரின்னு எல்லோருமே வாழ்த்தினாங்க. அதிகாரிகளும் கை கொடுத்துப் பாராட்டு தெரிவிச்சிட்டு… "நீங்க பாடல் காட்சியில் காட்டிய தேசத் தலைவர்களில் அம்பேத்கரையும் சேர்த்திருக்கலாமே"ன்னு சொன்னாங்க. "கண்டிப்பா அதையும் சேர்த்துருவேன்"னு உறுதியா சொன்னேன். அடுத்து, அவங்க துறை அமைச்சரான ரமணாவைப் பார்க்கச் சொன்னாங்க. அப்பதான் எனக்கு அந்த அதிர்ச்சியான அனுபவம் கிடைக்க ஆரம்பிச்சது" என ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவர், மேலும் தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து எனது நண்பரான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தாமோதரனோடு, அமைச்சர் ரமணாவின் கிரீன்வேஸ் சாலை அலுவலகத்துக்கு செப்டம்பர் கடைசி வாரம் போனேன். அமைச்சர் ரமணாவின் அப்பா இரண்டு நாட்களுக்கு முன்புதான் இறந்திருந்தார். துக்க விசாரிப்புக்குப்பின், எக்ஸ் மினிஸ்டர் தாமோதரன் அமைச்சரிடம் என்னை அறிமுகப்படுத்தி, என் படத்துக்கு வரிவிலக்கு தேவைன்னு சொன்னார். அமைச்சரோ, செகரட்டரியேட்ல தன் அஃபிஸியல் பி.ஏ. சரத்பாபுவைப் பார்க்கச் சொன்னார்.
மறுநாள் காலைல, நான் மட்டும் செகரட்டரியேட் போனேன். அமைச்சர் ரமணா உள் அறையில் இருக்க… முகப்பு அறையில் பி.ஏ. சரத்பாபு இருந்தார். நாலஞ்சு பேர் அங்கே இருந்தாங்க. என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு, அமைச்சர் பார்க்கச் சொன்னது பற்றி அவரிடம் சொன்னேன். "வரி விலக்கா? உங்க படத்துக்கு பட்ஜெட் என்ன...?" என்றார். நான் சுதாரித்துக்கொண்டு "மினி பட்ஜெட் படம் சார்.." என்றேன். சரத்பாபுவோ, "சரி சில ஃபார்மாலிட்டிஸை முடிக்கணும்.." என்றார். "என்ன சார் பார்மாலிட்டிஸ்?" என்றேன். "பெரிய பட்ஜெட் படம்னா 50 லட்சம், சின்ன பட்ஜெட் படம்னா 5 லட்சம் கொடுக்கணும்..." என்றார். நானோ, "சார், நான் லஞ்சம் தவறுங்கிற கான்செப்ட்ல படம் எடுத்திருக்கேன். அப்படியிருக்க நானே பணம் கொடுத்தா சரியா இருக்காது. அதோட தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் இது.." என்றேன். பி.ஏ.வோ, "அதெல்லாம் இருக்கட்டும்… இங்க ஃபார்மாலிட்டிஸை முடிச்சாதான் வரிவிலக்கு கிடைக்கும். நீங்க சி.எம்.கிட்டயே போனாலும் அவங்க என்னைத்தான் பார்க்கச் சொல்வாங்க. இங்க ஆட்சி வேற, அரசாங்கம் வேற. ஆட்சிக்கு அ.தி.மு.க., தி.மு.க.ன்னு மாறி மாறி யார் வேணும்னாலும் வரலாம். ஆனா அரசாங்கத்தை நடத்துற நாங்க அப்படியே இருப்போம். ஒண்ணு தெரியுமா? இந்தப் பணத்தில் ஒரு பகுதி சி.எம்.மு.க்குப் போகுது. பிறகு துறை மந்திரிக்கும் கொடுத்தாகணும். மந்திரி பரம்பரை பணக்காரர் இல்லை. அவர் ஒரு தடவை தொகுதிக்குப் போனா, ஒரு கோடி வரை அவர் செலவு பண்ணியாகணும். அந்தப் பணத்தை நாங்கதான் கலெக்ட் பண்ணிக் கொடுத்தாகணும். புரிஞ்சுதா..?" என்று பாடமே எடுத்தார்.
நானோ, "என் படத்தில் முதல்வர் கேரக்டரை உயர்த்திச் சொல்லியிருக்கேன். முதல்வரிடம் புகார் போனதும் அவர் நேர்மையா எம்.எல்.ஏ. மேல் நடவடிக்கை எடுக்கிற மாதிரி காட்சிகளை வச்சிருக்கேன். அந்தப் படம் முதல்வர் என்ற கேரக்டரின் இமேஜை பல மடங்கு உயர்த்தும். முதல்வரை உயர்த்தும் ஒரு படத்துக்கு நான் லஞ்சம் தரவேண்டிய அவசியமில்லை. லஞ்சத்தை எதிர்க்கும் படத்துக்கு, லஞ்சம் கொடுத்தா அது எனக்கு அவமானம். வேண்டுமானால் சி.எம். நிதிக்கு 3 லட்சம் தர்றேன்..." என்றேன். சரத்பாபுவோ, "நோ காம்ப்ரமைஸ்..." என்றார். நான் கும்பிடு போட்டு விட்டு வெளியே வந்துவிட் டேன்.
அடுத்து ஒரு ஆளுங்கட்சி பிரமுகர், "இதை கார்டன் கவனத்துக் கொண்டு போகலாம்.." என்றபடி… கார்டனில் வேலை செய்யும் ரவிச்சந்திரனுடன் என்னைப் பேச வைத்தார். அந்த ரவிச்சந்திரனோ, "இதையெல்லாம் நாங்க எப்படி மேடத்தின் கவனத்துக்கு கொண்டு போக முடியும்? அதிகாரிகள் கேட்டதைக் கொடுத்துவிட்டுப் போங்க சார்.." என்றார். அந்த நிமிடமே வரி விலக்கே வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன்.
மக்களுக்கு விழிப்புணர்வைப் போதிக்கும் படத்தை எடுத்ததுக்கு தண்டனையா நான் வரியையும் கட்டிட்டு படத்தை ரிலீஸ் பண்ணப் போறேன். என் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்க லைங்கிற தகவல் பல திரைப்புள்ளிகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவர்கள் என்னிடம் துக்கம் விசாரிக்கிறார்கள். இன்னும் என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம், "லஞ்சத்தை எதிர்க்கவே லஞ்சம் கொடுத்தாகணும் என்பதுதான்..." என்றார் ஆவேசமும் ஆதங்கமுமாக.
"முடிவாக என்னதான் செய்யப் போகிறீர்கள்...?" என்று மனுக்கண்ணனிடம் கேட்டதற்கு, " நான் வரி செலுத்தத் தயாராக இருக்கிறேன்… எந்த சமரசத்திற்கும் உட்பட மாட்டேன்… லஞ்ச லாவண்யங்களைத் தட்டிக் கேட்பது போல் திரைக்கதை அமைத்து விட்டு நானே லஞ்சம் கொடுத்து வரிச்சலுகை பெற்றால், அந்த திரைப்படத்தின் நோக்கமும் அது சமுதாயத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கமும் அடிபட்டுப் போகும்.." என்றார் தீர்க்கமாக.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரைத் தொடர்பு கொண்டபோது, ”அங்குசம் திரைப்பட விஷயம் இன்னும் எனது கவனத்திற்கு வரவில்லை, அது குறித்து விசாரித்துச் சொல்கிறேன்..” என்றார்.
நன்றி : நக்கீரன் வார இதழ்
|
|
Tweet |

