Showing posts with label மிஷ்கின். Show all posts
Showing posts with label மிஷ்கின். Show all posts

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

27-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அண்ணன் இயக்குநர் மிஷ்கினின் கலைத்தாகம் படத்துக்குப் படம் கூடிக் கொண்டே செல்கிறது..! மற்றவர்களெல்லாம் சினிமாவை மக்களுடையதாக நினைக்க.. இவர் மட்டுமே இதனை ஒரு கலை சார்ந்த படைப்பாக நிறுவ பெரும் முயற்சி செய்து வருகிறார்..!

'சித்திரம் பேசுதடி'யில் ஒரு காதல் கதையை சொன்னவிதம் அனைவருக்கும் பிடித்துப் போக.. அதையே 'அஞ்சாதே'யில் போலீஸ்-ரவுடி-சமூகம் சார்ந்த கதையாகவும் மாற்றி திரில்லராகவும் செய்து காண்பித்தார்.. மூன்றாவதாக 'யுத்தம் செய்'யிலும் இதே திரில்லர் டைப்.. 'நந்தலாலா'வில் கலைப்படைப்பின் உச்சத்தைத் தொட்டார்.. 'முகமூடி'யில் ஹீரோவுக்கான கதையாகவும் மாற்றி எடுத்துப் பார்த்தார்.. 

ஆனாலும் அவரது மேக்கிங் ஸ்டைல் பாமர ரசிகனிடமிருந்து கொஞ்சம் தள்ளிப் போய்விட.. மூன்றிலும் வணிக ரீதியாக தோல்வியைத் தொட்டாலும் சினிமா விமர்சகர்கள் அவரை பாராட்டத்தான் செய்தார்கள்.. இந்த ஒரு பிரிவினரின் பாராட்டே போதுமென்று நினைத்துவிட்டார் போலும்.. இப்போதும் அதே கதைதான்..! 

இந்தப் படத்தைப் பற்றி பாராட்டி பேச வேண்டுமென்றால் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு ரூம் போட்டு பேசிக் கொண்டேயிருக்கலாம்.. அந்த அளவுக்கு உலக சினிமா பிரியர்களுக்கு பிடித்தமான படமாக இது இருக்கும்..!  மிஷ்கினின் ஸ்பெஷலான நைட் எபெக்ட்.. எம்ட்டி பீல்டு.. வைட் ஷாட்.. சிங்கிள் கேரக்டர்.. இப்படித்தான் இதிலும் முதல் காட்சி அறிமுகமாகிறது..! அடுத்தடுத்து பரபரப்பாக துவங்கும் திரைக்கதையை, இறுதிவரையிலும் அந்த டெம்போவை கொஞ்சமும் இறங்கவிடாமல் கொண்டு போயிருக்கிறார்..!


மருத்துவக் கல்லூரி மாணவரான ஸ்ரீ, வீடு திரும்பும்போது ரோட்டில் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் கிடக்கும் மிஷ்கின் என்னும் எட்வர்டை பார்க்கிறார். அவரது உயிரைக் காப்பாற்ற அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்கிறார் ஸ்ரீ. துப்பாக்கிக் குண்டு என்பதால் கிரைம் என்று சொல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரம் போவதற்குள் உயிர் போய்விடும் என்பதால் தன் வீட்டிற்கு கொண்டு வந்து தனது கல்லூரி பேராசிரியரான டாக்டரிடம் கேட்டு ஆபரேஷன் செய்து மிஷ்கினின் உயிரைக் காப்பாற்றுகிறார். காலையில் மிஷ்கின் அந்த வீட்டில் இருந்து எஸ்கேப்பாகிவிட.. இதில் இருந்து இவருக்கு வில்லங்கம் துவங்குகிறது.. மிஷ்கின் போலீஸால் துரத்தப்பட்ட கிரிமினல் என்று கூறி ஸ்ரீ-யை ரவுண்டு கட்டுகிறது வீட்டுக்கு வரும் போலீஸ்.. மிஷ்கினின் கதை என்ன..? ஸ்ரீ என்ன ஆகிறார் என்பதுதான் மிச்ச மீதிக் கதை.. இதற்கு மேல் சொல்ல முடியாது.. தியேட்டருக்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்..!

மிஷ்கினின் இயக்கம் டச் படம் முழுவதும் நிரவியிருப்பதால் படத்தில் ஆங்காங்கே இருக்கும் சின்னச் சின்ன ஷாட்டுகளில்கூட குபீர் சிரிப்பு எழும்புகிறது..!  காரில் வந்த தம்பதிகளை கடத்திச் செல்லும்போது ஸ்ரீ தைரியமாக துப்பாக்கியை காட்ட.. மிஷ்கின் அலட்டிக் கொள்ளாமல் துப்பாக்கியை அந்தப் பெண்மணியின் தலையில் வைக்கும் காட்சி.. நடு இரவு சோதனையில் இருக்கும் ஒரு போலீஸிடம் துப்பாக்கி முனையில் சல்யூட் செய்தபடியே நிற்க வைத்திருக்கும் காட்சி.. வில்லனின் அடியாட்கள் போலீஸிடம் வாயாடுவது.. தாக்கிவிட்டுப் பறப்பது.. என்று பலவும் திரைக்கதையுடன்கூடிய நகைச்சுவயாக மனதைத் தொட்டுச் செல்கிறது..!

இயக்கத்திற்கு என்னதான் விளக்கம் சொன்னாலும் யாராலும் இதுதான் சரி என்று சொல்லிவிட முடியாது.. இந்தப் படத்தின் ஒரு காட்சியில்கூட இயக்கத்தில் பிழை இல்லை.. அந்தத் திரைக்கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை நடிக்க வைத்திருக்கும் அழகை பார்த்தால் மிஷ்கினை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை..! 

எந்தவொரு நடிகராக இருந்தாலும் இயக்கம் தெரிந்த இயக்குநரின் கையில் சிக்கினால் அவரிடமிருந்து நடிப்பு கண்டிப்பாக வெளிக்கொண்டு வரப்படும்.. இதில் வழக்கு எண் படத்தில் நடித்த ஸ்ரீ-தான் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. முதல் அறிமுகக் காட்சியில் இருந்து இறுதிவரையில் பல படங்களில் நடித்த அனுபவத்துடன் இவரை பார்க்க முடிகிறது..! ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.. இன்னமும் மென்மேலும் வளரட்டும்..! போலீஸ் பூத்தில் இருக்கும் போலீஸாருடன் வாக்குவாதம் செய்யும் காட்சியில் ஒரு நிமிடம் நம்மை உள்ளே இழுத்து விடுகிறார்..! வெல்டன் ஸ்ரீ..

நமது இசை விமர்சகர் ஷாஜி சிபிசிஐடி போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கிறார்.. அவரைவிடவும் முந்திக் கொண்டு நமக்குப் பிடிக்கிறது அவரது குரல்.. டாக்டரை வைத்துக் கொண்டு தனது உயரதிகாரியிடம் அவர் பேசும்முறையும், ஆக்சனும் ஒரு படபடப்பான அதிகாரியை காட்டுகிறது.. இவரையும் அவ்வப்போது கொஞ்சம் புலம்ப விட்டு அஞ்சாதே போல் பரபரப்புடன் தேட வைத்திருக்கிறார் மிஷ்கின்..!

மிஷ்கின் இந்தப் படத்தின் கதையை ஓரிடத்தில் சொல்கிறார்.. அந்த டைட் குளோஸப் ஷாட் ஒன்றே போதும் இவருக்கு..! அந்த இடத்தில் மட்டும் நாம் திரையைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்பு கதை சுத்தமாக நமக்குப் புரியாது.. ஆகவே அந்த நேரத்தில் செல்போனை நோண்டாமல் அவர் பேசுவதை கவனித்துப் பார்க்கும்படி ரசிகப் பெருமக்களை கேட்டுக் கொள்கிறேன்...! மார்ஷியல் ஆர்ட்ஸ் மேல் மிஷ்கினுக்கு முதல் படத்தில் இருந்து பெரிய கிரேஸ் போல.. இதிலும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி அப்படித்தான் தத்ரூபமாக இருக்கிறது..! லாஜிக்கையெல்லாம் இங்கேயும் பார்க்கக் கூடாது..! 

இதில் ஒரு கேரக்டராகவும் நடித்திருக்கிறது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை.. மயிலாப்பூர் ஸ்டேஷனுக்குள் ஸ்ரீ ஓடுகின்ற கட்டத்தில் துவங்கி.. இறுதியில் வடபழனி விஜயா மாலில் நடக்கும் கிளைமாக்ஸ்வரையிலும் ஓட்டம்.. ஓட்டம்.. ஓட்டம்.. அப்படியொரு ஓட்டம் ஓடுகிறது இசைஞானியின் இசை..! நந்தநாலாவுக்கு பின்பு பின்னணி இசைக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றே சொல்லலாம்..!  

தனது குடும்பத்திற்கு ஆபத்து என்றவுடன் மிஷ்கினை கொல்ல நினைக்கும் ஸ்ரீ, பின்பு மனசு மாறினாலும் அதையும் அரைகுறையாகச் செய்வதும்.. மிஷ்கின் சொல்லும் ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி கதையைக் கேட்டு மனசு மாறுவதும் தமிழ்ச் சினிமாத்தனம்தான்.. அந்த அரவாணி மென்மையாக நம் மனசுக்குள் நுழைகிறார்.. அவரை பார்த்தவுடன் தலைமுடியை பிடித்திழுத்து வரும் போலீஸை தமிழ்நாட்டு போலீஸ்தான் என்று பட்டென்று ஒத்துக் கொள்ளலாம்..!  கண் பார்வை இல்லாத அந்தப் பெண்ணும், குழந்தையும் இப்போதும் கண்ணுக்குள் இருக்கிறார்கள்..

எதற்காக இத்தனை படுகொலைகள்.. எதுக்காக இந்த நீண்ட தேடுதல் வேட்டை என்பதற்கெல்லாம் மிஷ்கின் விடை சொன்னாலும், அதையும் சின்னப் புள்ளைக்கு கதை சொல்லும் பாணியில் சொல்லியிருப்பதால் மெட்ரோபாலிட்டன் சிட்டியைத் தவிர மற்ற இடங்களில் புரிந்து கொள்ளப்படுமா என்ற சந்தேகம் எனக்குள் இப்போதும் இருக்கிறது..! புரிந்தால் சந்தோஷம்தான்..!

இப்போதைய மருத்துவ உலகத்தில் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நோயாளிக்கு முதலில் சிகிச்சையளித்துவிட்டு பின்புதான் காயம் ஏற்பட்டதன் தன்மை பற்றி பேசப்பட வேண்டும் என்று அரசு ஆணையே உள்ளது.. முதல் ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்க முடியாது என்று சொல்வதே பெரும் லாஜிக் மீறல்.. அடுத்து அப்பலோ ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து இன்ஜெக்சனை வாங்குபவர் அங்கேயாவது இவரை சேர்ப்பதற்கு முயற்சி செய்திருக்கலாம்.. ஆனாலும் அவசரத்தனமாக இப்போதைக்கு அவரை காப்பாற்ற ஊசி போடுகிறார்..! பேராசிரியர் போனில் சொல்லச் சொல்ல.. ஆபரேஷன் செய்து மிஷ்கினை காப்பாற்றுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.. வயிற்றுப் பகுதியில் பாய்ந்த குண்ட எடுக்க அப்படியொரு ஸ்கெட்ச் செய்துவிட்டு குடலையெல்லாம் வெளியே எடுப்பதை போல் காட்டிவிட்டு பின்பு அதனை தைத்து சிகிச்சையை முடிப்பதாகக் காட்டுவதெல்லாம் சினிமாத்தனம்.. ஆனால் மிஷ்கினின் இயக்கம் அப்படி இப்படி யோசிக்கவிடாமல் தடை செய்கிறது..!

அன்றைய ஒரு நாள் இரவில் நடக்கின்ற கதை என்பதால் இத்தனை கொலைகள்.. போலீஸாரே 6 பேர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.. காவல்துறை அதனைப் பற்றி பேசாமல் ராத்திரியோட ராத்திரியா சுட்டுக் கொல்லுங்க என்று மட்டும் சொல்கிறது..! இந்தக் கூத்தில் வில்லனின் ஆட்கள் மட்டும் தனியாக பைக்கில் சிட்டியை வலம் வருகிறார்கள்.. போலீஸ் டீமில் இருக்கும் பலரையும் விட்டுவிட்டு பிச்சை என்ற கயவாளி இன்ஸ்பெக்டர் மீது மட்டும் ஷாஜிக்கு எப்படி திடீர் சந்தேகம் வருகிறது என்பதற்கான காரணம் இல்லை.. ஆனாலும் ஸ்பீடு திரைக்கதையில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதுபோல் கதை அந்த இடத்தில் பறக்கிறது..! 

வெறுமனே எட்வர்டு என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பக்கத்தில் சர்ச் எங்கயாவது இருக்கா என்று விசாரித்து ஊகிப்பதும் இதே பாலிஸிதான்..! இருந்தாலும் இந்த அளவுக்கு ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வேண்டாம்.. இது போன்ற படங்கள் கொட்டாம்பட்டியின் சி கிரேடு தியேட்டரில்கூட ஓட வேண்டும்.. அதற்கு முதலில் பாமரனுக்கும் கதை புரிய வேண்டும்.. துவக்கத்தில் போலீஸ் பேசுகின்ற அனைத்துமே ஆங்கிலம் கலந்த வார்த்தைகளாக இருக்க புரியாதவர்களுக்கு கஷ்டம்தான்.. கல்லறையைக்கூட ஆங்கில வார்த்தையில் சொல்லித்தான் தெளிய வைக்க வேண்டுமா என்ன..? கல்லறை என்று சொல்லியிருந்தாலே போதுமே..?

படத்தின் ஷாட் பை ஷாட் தேவையில்லாமல் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை வைத்திருக்காமல் முழுக்க முழுக்க இரவு நேரத்திலேயே ஷூட் செய்து அசத்தியிருக்கிறார் மிஷ்கின்.. ஒளிப்பதிவாளர் பெரும் பாராட்டுக்குரியவர்.. மிஷ்கின் மாதிரியான சிறந்த படைப்பாளிகள் கையில் சிக்கினால் எப்படி நடக்க முடியுமோ அதையேதான் செய்திருக்கிறார்..!  கார் சேஸிங் காட்சியும், மிஷ்கின் காரில் இருந்து தப்பிக்கும் அந்தக் காட்சியும் பரபர.. அதேபோல் கல்லறையில் நடக்கும் துப்பாக்கிச் சண்டையும் கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் படத்தின் மிகப் பெரிய பிளஸ்..

ஹாலிவுட் பாணியில் வேகமான திரைக்கதையுடன் நேர்த்தியான இயக்கத்துடன் ஒரு கலைப் படைப்பாகவும், திரில்லராகவும் கொடுத்திருக்கிறார் மிஷ்கின்..! சட்டம் கண்மூடித்தனமாக குற்றம் சாட்டப்பட்டவர்களை அணுகுகிறது என்பதைத்தான் மிஷ்கின் இதில் சொல்ல வந்திருக்கிறார் என்பதாக நானாகவே நினைத்துக் கொள்கிறேன்.. இதுதான் உண்மை எனில் இன்னமும் பெட்டராக இதனை எடுத்திருக்கலாமோ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது..! 

படத்தில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகளை பற்றிக் குறிப்பிட வேண்டுமெனில் மீண்டும் ஒரு முறை படத்தைப் பார்த்துவிட்டுத்தான் பேச வேண்டும்.. எப்படியும் நமது வலையுலக மக்கள் அவைகளைப் பற்றி விலாவாரியாகப் பட்டியலிடுவார்கள் என்பதால் காத்திருந்து அதைப் படித்துக் கொள்கிறேன்.. 

அவசியம் பார்க்க வேண்டிய படம்தான்.. பாருங்கள்..!

நன்றி..

வணக்கம்..! 

முகமூடி - சினிமா விமர்சனம்

02-09-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான மிஷ்கினின் படம்தான்..! நடிகர், நடிகையர்கள், கதை, திரைக்கதை மட்டுமே மாற்றம்..! எடுத்தவிதம் ஒன்றுதான்.. முதல் ஷாட்டிலேயே மிஷ்கின் தெரிகிறார்..! அவ்வப்போது அவரது ஸ்டைலில் கேமிரா, ஸ்கிரீன் முழுவதும் பரவிச் செல்கிறது..! சின்னச் சின்ன யதார்த்த நகைச்சுவைகளும், அசரடிக்கும் ஒரு சில காட்சிகளும், மயங்க வைக்கும் நடிப்பும் இதிலும் தொடர்கிறது..!


இதன் கதையை 2 விதமாகவும் சொல்ல்லாம்..! தொடர் கொள்ளை, கொலைகளைக் கண்டுபிடிக்க புதிய அப்பாயிண்ட்மெண்ட்டில் துணை கமிஷனர் நாசர் நியமிக்கப்படுகிறார். கொலைகாரர்களைப் பிடித்தாரா..? இல்லையா..?

காதலிக்காக பேட்மேன் வேடம் பூண்ட ஹீரோ, ஒரு கொலைச் சதியில் சிக்கிக் கொள்ள.. அதில் இருந்து மீண்டாரா..? இல்லையா..?

ஜீவாதான் ஹீரோ என்றாலும், முழுமையாக பாராட்டைப் பெறுவது நரேன்தான்.. “அஞ்சாதே” பிரசன்னாவை போன்று இந்த வில்லத்தனத்தை கேட்டுப் பெற்ற நரேனின் புத்திசாலினத்தை மிகவும் பாராட்ட வேண்டும்..! அவருடைய அறிமுகக் காட்சியில் துவங்கி, அஸ்தமிக்கும் காட்சிவரையிலும் அவர் இருக்கின்ற ஸ்கிரீனில் அவர் மட்டுமே தனித்து தெரிகிறார்..!

மருத்துவமனையில் மாஸ்க்கை எடுத்துவிட்டு தனது ஒரு புற முகத்தை மட்டும் காட்டிவிட்டு ஓடத் துவங்கும் நரேனின் அந்த ஸ்டைல் ஸ்கிரீனுக்கே அழகு சேர்க்கிறது.. செல்வாவை தேடி கொலைவெறியுடன் ஆனால் எந்தவித அலட்டலும் இல்லாமல் கையில் சுத்தியலுடன் படியேறி வரும் அந்த அலட்சிய நரேனை யாருக்கும் பிடிக்காமல் போகாது.. தியேட்டரில் முழு கைதட்டலையும் இந்தக் காட்சி பெறும் என்றே நினைக்கிறேன்..! 

இதே வேகத்தோடு இறுதியில் “சூப்பர்மேன்.. பேட்மேன்.. ஸ்பைடர்மேன்..” என்று ஜீவாவை கிண்டலடித்து பேசும் காட்சியில் நரேனைவிடவும் வேறொரு சிறப்பான வில்லன் மிஷ்கினுக்கு கிடைத்திருக்க மாட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது..!

மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் குங்பூ, கராத்தேயில் தானும் ஒரு கில்லிதான் என்பதை நிரூபிக்கும்வகையில் சண்டைக் காட்சிகளில் மிக பிரயத்தனம் செய்து நடித்திருக்கிறார் ஜீவா.. தமிழ்ச் சினிமாவில் இந்த குங்பூ கலை இந்த அளவுக்கு வியாபித்திருப்பது இந்தப் படத்தில் மட்டுமே என்று நினைக்கிறேன்..!

இந்த பேட்மேன் ஜீவாவைவிடவும், சாக்லேட் பாய் ஜீவாதான் அசத்தியிருக்கிறார்..! மீன் மார்க்கெட்டில் “என் கையை வெட்றா” என்று வம்புச் சண்டைக்கு இழுக்கும் அந்த ஸ்டைல்.. ஹீரோயினை பார்த்தவுடன் சொக்கிப் போய் நிற்பது.. அவள் அடிப்பதையும், செருப்பை எடுத்து வீசுவதையும்கூட அலட்சியமாக ஒதுக்குவது.. ஸ்பிரே செய்வதைக்கூட மாலை, மரியாதை லெவலுக்கு ஏற்றுக் கொண்டு சரிவதுமான அந்தக் காட்சியில் அனைத்து காதலர்களுக்கும் ஜீவாவை பிடிக்கும் என்று நினைக்கிறேன்..!

ஹீரோயினைத் தேடி கோபத்துடன் கிளம்பி வரும் காட்சியில் வரும் வசனங்களும், நண்பர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சியும் செம கலகலப்பு..! ஹீரோயினிடம் பேசுவதற்காக வந்து தன்னைப் பற்றி பீலாவிட்டுக் கொண்டிருக்கும்போது அவரது அப்பா வந்து குட்டையை உடைப்பதும் இயல்பான நகைச்சுவையில் ஒன்று..! 

மாஸ்டருக்கு ஒரு அவமானம் என்றால் அதனை தாங்கிக் கொள்ள முடியாத சிஷ்யர்களை வைத்திருக்கும் கேரக்டர் செல்வாவிற்கு.. அநியாயமாய் பரமபதம் அடையும்வரையிலும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருந்த ஒரு மர்மக் கதை சூப்பர்.. அதன் திருப்பம் திரைக்கதைக்கு அந்த இடத்தில் மேலும் ஒரு வேகத்தைக் கூட்டியிருந்தது..! செல்வா,. நரேன் மோதலில் சந்தேகமில்லாமல் நரேன் ஜெயித்தார் என்றாலும், செல்வாவின் அந்த ஈடு கொடுத்தலும் நிஜமான பைட்டுதான்..

ஹீரோயின் பூஜா ஹெக்டே புதுமுகம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.. இன்னும் 2 படங்களிலாவது நடிக்கட்டும். பின்பு பேசலாம்..! 

முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் இது மிஷ்கினின் படம் என்பதை பல காட்சிகளும், பல ஷாட்டுகளும் சொல்லிக் கொண்டே வருவதுதான் இப்படத்தின் சிறப்பு.. மக்களுக்கான சினிமா என்பதைவிட  கலைக்கான சினிமாவில் இதுவும் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..! 

ஜீவா சாப்பிடும்போது அங்கேயிருந்து கேமிரா நகர்ந்து படுக்கையில் படுத்திருக்கும் அவர் அப்பாவிடம் வருவதும். தொடர்ச்சியான வசனக் காட்சிகள் எடுக்கப்பட்டவிதம் கவர்கிறது..! கையில் சிக்கிவிட்ட ஒரு கொலையாளியிடம் உண்மையை வரவழைக்க நாசர், செல்போனில் போலீஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் பேசும்காட்சி உம்மணா மூஞ்சிகளைகூட சிரிக்க வைத்துவிடும்..! 

அதேபோல் மருத்துவமனையில் தன்னைக் கொல்ல வரும் பத்ரியை பிடிக்கும் இடத்தில் நடிப்பும் டைரக்ஷனும் ஏ ஒன்..! ஆனால் அதற்கடுத்து நரேன் கும்பலை பிடிக்க துவங்கும் நேரத்தில்தான் ஆயிரம் அனர்த்தங்கள்.. இதற்கு பின்புதான் முந்தைய மிஷ்கினின் படங்களைவிட இப்படம் திரைக்கதையில் அநியாயத்திற்கு நொண்டியடித்திருக்கிறது..!

நரேன் பணயக் கைதிகளை விடுவிக்க அரசுடன் பேரம் பேசும் திரைக்கதை இது மிஷ்கினின் படம்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவிட்டது.. லாஜிக் பார்க்க முடியாதவைகள் நகைச்சுவை படங்களும் சிலவகை கமர்ஷியல் படங்களிலும். ஆனால் தமிழ்ச் சினிமாவில் முதல் சூப்பர் ஹீரோ படம்.. இதுதான் இந்த வரிசையில் முதல் படம் என்றெல்லாம் பூதாகரமாக பிரச்சாரம் செய்யப்பட்ட படத்தில் சொத்தையான லாஜிக் ஓட்டைகள் என்றால் எப்படி..?

கிரீஷ் கர்நாட் மற்றும் அவரது குரூப்பின் செயல்பாடுகள் என்ன..? கிரீஷ் கர்நாட்டின் அந்த ரோபோ மனிதன் தயாரிப்பு எதற்காக..? பேட்மேன் உடையை போன்று பல உடைகள் அங்கே எதற்காக இருக்கின்றன..? அவர்களுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சில் கோட்டைவிட்டுவிட்டு, அவர்களை வைத்தே குழந்தைகள் தப்பிக்கிறார்கள் என்றெல்லாம் கொண்டு சென்றது சூப்பர் மொக்கைத்தனம்..!

ஒரு துணை கமிஷனர் சுடப்பட்டிருக்கிறார். ஒரு இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டிருக்கிறார்.. பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டாமா..? தமிழ்நாடு போலீஸை சப்பையாக்க் காட்டி அந்த மருத்துவமனை சண்டைக்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதிலும் கொலை செய்ய ஆட்கள் வருவதை பார்த்தவுடன் ஒரு இன்ஸ்பெக்டர் "ஹலோ" என்று செல்போனில் பேசியபடியே விலகி ஓடுவது ஒன்றுதான் இதில் இருக்கும் யதார்த்தம்..!

கடலோர காவல் படையின் அதிகாரியைக் கடத்திச் சென்றால், மாநில அரசுதான் விடலாம். மத்திய அரசுமா சும்மா இருக்கும்..? சாதாரண செயின் திருடர்களுக்கே ஸ்கெட்ச் போடும் போலீஸ் இதுக்கெல்லாம் பயப்படுவார்கள்.? இந்திய எல்லைக்கு அப்பால போயிட்டா இவங்களை கண்டுபிடிக்க முடியாதாக்கும்..? சோமாலிய கடற் கொள்ளையர்களை அவர்களது கடற் பிரதேசத்திற்கே நமது இந்திய விமானப் படையை அனுப்பி குண்டு போட்டு பரலோகம அனுப்பியவர்கள் இவர்கள்.. இதெல்லாம் பிளஸ்டூ கிளாஸ்ல ஆத்திச்சூடி சொல்லித் தர்ற மாதிரி இருக்கு..! இன்னொரு மிகப் பெரிய முரண்பாடு.. அதுவரையிலும் பேட்மேன் தமிழகத்து மக்களுக்கு அப்படியென்ன நல்லது செஞ்சுட்டாருன்னு தெரியலை.. ஆனா நாசர் பேட்டி கொடுக்குறாரு.. “தமிழகமே கொண்டாடும் பேட்மேன்..” அப்படீன்னு..! என்னத்த சொல்றது..? 

படத்தில் மொத்தமுள்ள 3 பாடல்களில் இடைவேளைக்கு முன்பே  2 பாடல்களை வைத்து நிரப்பிவிட்டார். துவக்கத்தில் வரும் அந்த நீண்ட ஷாட்.. அதைத் தொடர்ந்த ஈர்ப்பான நடனம்.. கண்ணதாசன் காரைக்குடி டைப்பில் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது..! வாயை மூடிக்கிட்டு சும்மா இருடா பாடல் துவங்கும் காட்சியும் ரசனையானது.. யாருமே எதிர்பார்க்கவில்லை.. அக்காட்சியை படமாக்கியவிதமும் சூப்பர்தான்.. ஆனால் இதற்காக சுவிட்சர்லாந்து போயிருக்க வேண்டுமா என்றும் கேட்கத் தோன்றுகிறது.. 

3-வது பாடலான "மாயாவி", மருத்துவமனையில் நாசரை கொல்ல வரும் ஆட்களை ஜீவா தாக்கி திருப்பியனுப்பிய பின்பு பூஜாவின் லீட் காட்சியோடு வரும்.. அது அந்த இடத்தில் படத்தின் வேகத்தைக் குறைக்கிறது என்று சொல்லி நீக்கிவிட்டார்களாம்.. இது மட்டுமல்ல மொத்தம் 3 மணி நேர படமாக திட்டமிடப்பட்டு கடைசி நேரத்தில் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.. அந்த பாடல் காட்சியை வைத்திருந்தால் நிச்சயம் அந்த இடத்தில் டொக்குதான்..!

"இந்தப் படத்துக்கு யு சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.. அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்.. ஒரு பாட்டியோட கதையைத்தான் இப்போதைய ஜெனரேஷனுக்கு ஏற்றாற்போல் கொடுத்திருக்கேன்.. இதில் எந்தக் காட்சியிலும் விரசமில்லை.. ஆபாசமில்லை.. தாராளமாக என்னை நம்பி வரலாம்..” என்று குரல் கொடுத்தார் மிஷ்கின்.. இப்படிச் சொல்லிவிட்டு, ஹீரோ ஒண்ணுக்கு போவதை ஹீரோயின் பார்த்து வெட்கப்பட்டு “பார்த்துட்டேன்” என்று குழந்தைகளிடம் சொல்லும் காட்சி ரொம்ப ஓவர்.. இதை நீக்கிவிட்டுத்தான் யு சர்டிபிகேட் கொடுத்திருக்க வேண்டும்.. சரி போகுது விடுங்க.. ‘கந்தசாமி’யையும், ‘சிவாஜி’யையுமே ‘யு’ சர்டிபிகேட்ல பார்த்த ஜனங்க நாம..! 

தமிழ்ச் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியவர்களில் மிஷ்கினும் ஒருவர் என்ற முறையில் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், பக்தியும் உண்டு. இது அவரது படைப்பின் மீது எழுந்த விமர்சனம் மட்டுமே.. அந்த வகையில் இப்படம் எனக்கு சற்று அதிருப்தியை தந்திருக்கிறது என்பதை மட்டுமே பதிவு செய்ய விரும்புகிறேன்.. 

இந்த ‘முகமூடி’ தொடர்ச்சியான படங்களாக வரப் போகிறது என்று மிஷ்கினும், தயாரிக்க நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என்று ‘யு டிவியும்’ சொல்லியிருக்கிறார்கள். வரவேற்கிறேன்.. ஆனால் அடுத்த பாகத்திலாவ்து இந்த ‘பேட்மேன்’ ரசிகர்களைக் கவரும்வகையில் இருக்கட்டும்..!

முகமூடி - நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..!   

யுத்தம் செய் - சினிமா விமர்சனம்

05-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மிஷ்கினின் மற்றுமொரு சிறந்த படைப்பு. மனதைக் கொள்ளை கொள்ளும் இயக்கம் என்றால் என்னவென்பதை உதவி, துணை, இணை இயக்குநர்களுக்காக மிஷ்கின் எடுத்திருக்கும் 4-வது திரைப்பாடம்.

உலகத்தின் புராதனத் தொழிலான பாலியல் துறையின் நவீனமயமாக்கலில் Bizarre என்றழைக்கப்படும் காம சேடிஸத்தையும், அதனை ரசித்து அனுபவிக்கும் மேட்டுக்குடி மக்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுயிருக்கிறது இந்தப் படம். நிச்சயமாக தமிழ்ச் சூழலுக்கு இதன் கதை புதிதுதான்.

தினவெடுத்த பணம் கொழுத்த முதலாளிகள் தங்களது ஆற்றாமையை போக்கிக் கொள்ள அப்பாவி இளம்பெண்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சூழலில் சிக்கிக் கொண்டு ஒரு அபலைப் பெண் உயிரைவிடுகிறாள். அவளது உயிருக்காக அதுவரை சமையலறையில் மட்டுமே கத்தியைப் பிடித்திருந்த அந்தப் பெண்ணின் தாயும், தந்தையும், தம்பியும் போஸ்ட்மார்ட்டம் ஸ்பெஷலிஸ்ட்டுகளை போல பதிலுக்குப் பதில் கொடுப்பதுதான் கதை.

முதல் காட்சியில் இருந்து இறுதிவரையில் மிஷ்கினின் சாம்ராஜ்யம்தான். அதே Wide Angle Shots. Long Shots.. கிடைத்த இடங்களில் மட்டுமே பின்னணி இசை.. அந்த இசையிலும் ஓட வைப்பவை.. மனதை லயிக்க வைப்பவை.. அழுக வைப்பவை என்று வெரைட்டியாக வயலினும், பியானோவும் கலந்து கட்டி அடித்து கதைக்குள் நம்மை தள்ளி விடுகின்றன.

சேரன் இதுவரையில் நடித்த படங்களிலேயே சிறந்த படம் இது. அவர் தனது படங்களை விட்டுக் கொடுக்க முடியாமல் இல்லை என்று கூறினாலும் இதுதான் உண்மை. அவர் தானே நடித்து தன்னை இயக்கிய திரைப்படங்களில் காட்டியது தமிழ்ச் சினிமாவின் ரசிகனை சமாதானப்படுத்த அவர் செய்து கொண்ட சமரசமான ஒரு நடுத்தர வர்க்க அடையாளம்தான் தெரிந்திருந்தது. ஆனால் இதில் வெறும் சேரன் மட்டுமே..


ஹீரோ இருக்கிறார். ஹீரோயின் இல்லை. காமெடியன் இல்லை.. ஆனால் வில்லன்களுக்கு பஞ்சமில்லை. இதில் யார் நிஜ வில்லன்..? யார் நிஜமில்லாத வில்லன் என்பதை படத்தின் முக்கால் பாகம் வரையிலும் சஸ்பென்ஸாகவே கொண்டு போயிருப்பதுதான் படத்தின் பலமே..

ஊரின் பல இடங்களில் வைக்கப்படும் அட்டைப் பெட்டியில் கிடக்கும் கைகளைப் பார்த்து விசாரணையைத் துவக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரான சேரனுக்கு ஏற்கெனவே இருக்கும் ஒரு பிரச்சனையைத் தெளிவாக்கிவிட்டுத்தான் காட்சியையே துவக்கியிருக்கிறார் இயக்குநர். இதனால் இயக்குநருக்குக் கிடைத்த பலம் சேரனின் இறுக்கமான முகம். உடல்வாகு போலீஸ்போல் இல்லாவிட்டாலும் நடை, உடை, பாவனை மூலம் சேரனை போலீஸ்காரனாகக் காட்டிவிட்டார் மிஷ்கின்.


காட்சியமைப்புகளை இப்படித்தான் மிஷ்கின் வைத்திருப்பார் என்ற ஊகத்தில் அவரது பெரும் ரசிகர்களான என்னைப் போன்றவர்கள் பலர் இருந்தாலும், எதுவுமில்லாமல் திரையரங்கிற்கு வந்தவர்களும் பிரமித்துத்தான் போனார்கள்.

போஸ்ட்மார்ட்டம் அறையை இவ்வளவு துல்லியமாக அலசியது இந்தத் தமிழ்ப் படமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஜெயப்பிரகாஷின் அந்த வேடம், இறுதியில் பேசப்படப் போகிறது என்பதை முதலில் யூகிக்கவே முடியவில்லை.


சேரன், தனது சக அதிகாரிகளின் ரிக்கார்ட் பைலை குப்பைத் தொட்டியில் போடுவதில் ஆரம்பித்து பல காட்சிகளுக்கு அரங்கத்தில் கை தட்டல்கள் தூள் பறத்தியது ஆச்சரியம். சேரன் பாலத்தின் மீது சண்டையிடும் காட்சியின் மூலம் அஞ்சாதேயில் பார்த்திருந்தாலும், இதுவும் ஈர்க்கப்படும் அளவுக்கு படமாக்கப்பட்டிருந்தது. சேரனின் நடிப்புல வாழ்க்கையின் அடையாளத்திற்கு  ஒரு சிறிய கிளிப்பிங்க்ஸ் இந்தச் சண்டைக் காட்சியில் இருந்து நிச்சயம் உருவப்படும். கண்ணைச் சிமிட்டாமல், இறுக்கமான முகத்துடன் ரவுடியின் நெஞ்சில் சேரன் தனது சிறிய கத்தியால் குத்திக் கொண்டே செல்லும் காட்சியில் தியேட்டரிலும் கை தட்டல்கள் பறந்தன.. அஹிம்சை எதிர்த்து ஹிம்சை வந்தால் அதனை அதன் வழியிலேயே எதிர்கொள் என்பதுதான்  இன்றைய தலைமுறையின் அறிவுரை போலும்.

தனக்குச் சரியாக பதில் சொல்லாத ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் “ஹெட்குவார்ட்டர்ஸ் போயி பேசிக்கலாமா..?” என்று அமைதியாகச் சீறுகிற காட்சியிலும், சேரனைத் திட்டும் அந்தப் பெண்ணிடம் கான்ஸ்டபிள் ஈ.ராமதாஸ் “பிரார்த்தல் கேஸ்ல உள்ள தூக்கிப் போட்டிருவேன்.. வாயை மூடு..” என்று மிரட்டும் காட்சியிலும் அடுத்தடுத்து கை தட்டல்கள்.. மிச்சம், மீதியை இறுதிக் காட்சியே அள்ளிக் கொண்டுவிட்டது.

சித்திரம் பேசுதடியிலும், அஞ்சாதேயிலும் நரேன் காட்டியிருந்த அதே உடல் மொழியினை இங்கேயும் சேரன் காட்டுகிறார். தலையைக் குனிந்திருப்பது, சண்டைக்குத் தயாராக நிற்பது.. கை முஷ்டிகளை எப்பவுமே விறைத்த நிலையில் வைத்திருப்பது என்று மிஷ்கின் அடியாள் போலவே ஆகியிருக்கிறார் சேரன். உடல் மொழியும் மிஷ்கினுக்கு ஒரு ஆயுதம்தான். இதில் சேரனின் தனது தங்கையிடமிருந்து வந்த போனை அட்டெண்ட் செய்யும் காட்சியும் ஒன்று. ஆனால் இத்தனை தூரம் கஷ்டப்பட்டவர் அந்த ஒரு நொடியில் தங்கைக்காக பிடிபட்டவனை பண்ட மாற்றம் செய்ய நினைக்கும் அந்த ஒரு செகண்ட்டில் திரைக்கதையாசிரியர் தோற்றுவிட்டாலும் சேரன் ஜெயித்துவிட்டார்.

இன்னுமொரு உதாரணம், ஒய்.ஜி.யின் மகள் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியுடன் அவளது அம்மா கண்கள் நிலை குத்தி நிற்க நிலைகுலைந்து போய் விழுவது. இறுதிக் காட்சியில்  தனது கணவனைத் தாக்குபவனின் தலையில் லஷ்மி கத்தியை இறக்குவது என்று பிரமிக்க வைத்திருக்கிறார் மிஷ்கின். இன்னும் ஆழமாக எழுதினால் இனி பார்க்கவிருப்போருக்கு எதிர்பார்ப்பில்லாமல் போய்விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

திருவல்லிக்கேணி தெருவில் சேரனும், அவரது குழுவினரும் ஓடுகின்ற காட்சியிலும், இன்ஸ்பெக்டரை தூக்க வந்த குவாலிஸ் காரை சேரனின் கார் துரத்துகின்ற காட்சியிலும் பின்னணி இசையைச் சொல்லி மாளவில்லை. இசையமைப்பாளர் பெயர் கே என்று மட்டுமே போட்டிருக்கிறார்கள். யார் என்று தெரியவில்லை.. அவருக்கு எனது பாராட்டுக்கள்.. படத்தில் எங்கே தேவையோ அங்கே மட்டும் இசையை வைத்து நிரப்பியிருக்கிறார். அதிலும் அத்தனையும் சோகம் ததும்பும் இசைக் குறியீடுகள்.. பல இடங்களில் மெளனம்தான்.. மெளனம்தான் எத்தனை எத்தனை கதைகளைச் சொல்கிறது படத்தில்..?

சேரன் சண்டையிடுவதற்காக இடம் தேடி நடக்கின்ற காட்சியில் தொடர்ச்சியாக இசையும், இசை இல்லாமலுமாக நம்மையும் தடக், தடக் நிலைமைக்கு கொண்டு போயிருக்கிறார். இயக்குதல் என்பது பயங்காட்டுதலும்கூடத்தான். ரொம்பவே காட்டியிருக்கிறார் மிஷ்கின்.

கைகள் துண்டாக்கப்படுவது. டிரில்லிங் மிஷினில் துளையிடுவது, விதவிதமாக கத்திகளைக் காண்பிப்பது என்று அடிவயிற்றில் சிலீர் உணர்வைத் தூண்டுகிறது. ஏ சர்டிபிகேட் கொடுத்தது சரியானதுதான். அதே சமயம் மனசாட்சிப்படி ஏ சர்டிபிகேட்டை நீக்க சமரசம் செய்து கொள்ளாமல் அதனைப் பெற்றுக் கொண்டு வெளியிட்டிருக்கும் மிஷ்கினுக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்.


சிறிய குழந்தைகள் நிச்சயமாக இதனைப் பார்க்கக் கூடாது. மிகவும் டிஸ்டர்பன்ஸாக இருக்கும். பல காட்சிகள் பெரியவர்களையே பயமுறுத்துகின்றன. ஒய்.ஜி.எம்.மின் மகன் ரோட்டோரமாக அமர்ந்திருக்கும் காட்சி, மனைவி நிற்கின்ற காட்சி, கார் அசுர வேகத்தில் வந்து மோதுவது, இறுதிக் காட்சியில் கடத்தப்பட்டவர்களைக் காட்டுவது.. என்று தொழில் நுட்பத்தில் குறை சொல்ல முடியாத அளவுக்கு பயம் காட்டுதல் தொடர்ந்திருக்கிறது.

இரவு நேரக் காட்சிகளின் படிமத்தை நிழல் பிடித்தாற்போன்று காட்டியிருப்பதும், கேமிரா எங்கு திரும்பினாலும் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சூழல்களும், இருப்பிடத்தை இப்படியும் காட்ட முடியுமா என்று யோசிக்க வைக்கும் கோணங்களுமாக புதிய ஒளிப்பதிவாளர் சத்யாவின் பங்களிப்பு இத்திரைப்படத்திற்கு இன்னொரு பலம். இவர் ஆனந்தவிகடனில் புகைப்படக்காரராக பணியாற்றியவர். விகடன் தயாரிப்பு. இவருக்கும் எனது பாராட்டுக்கள்.

மிஷ்கின் என்றாலே குத்துப்பாட்டு என்கிற அசிங்கமான ஒரு அடையாளத்தை தன்னையறியாமலேயே மிஷ்கினே திணித்துக் கொண்டிருக்கிறார். இதிலும் ஒரேயொரு பாடல். கன்னித்தீவு. அந்தப் பாடல் இல்லாமல் இருந்திருந்தால்கூட படத்திற்கு எவ்வித தொய்வும் ஏற்பட்டிருக்காது. இடைச்செருகலாகத்தான் இப்போதும் தெரிகிறது. பட விழாக்களுக்கு அனுப்பும்போது இதனை நீக்கிவிட்டு அனுப்பினால் நல்லது.


ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தப் பாடல் காட்சி மிஷ்கினின் வழக்கமான வித்தியாசமான நடன அசைவுகளாலும், பாடல் வரிகளாலும் கவனப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு முழுமைக்கும் ஈசன் படத்தின் ஜில்லா விட்டு ஜில்லா வந்த பாடலுடன்,  இப்பாடலும் மியூஸிக் சேனல்களில் போட்டியிடும் என்றே கருதுகிறேன்.

சாரு நிவேதிதா என்கிற மனிதரை என்னைத் தவிர வேறு யாருக்கும் அன்றைக்கு தியேட்டரில் தெரியாததால் அவர் தோன்றுகின்ற அரை நொடி காட்சியில் யாரும் பரவசமடைந்து கை தட்டவில்லை. ஒருவேளை அவர்களது காதல் இப்போதும் நீடித்திருந்தால் சாரு கொஞ்சம் வினாடிகள் அதிகமாகத் தெரிந்திருப்பாரோ என்னவோ.. ஆனால் இதுபோல் குரூப் டான்ஸரைப் போல் வருவதற்குப் பதிலாக ஒரு வில்லன் கேரக்டரையே சாருவுக்குக் கொடுத்திருக்கலாம். பின்னியிருப்பார். இப்போதைய சிச்சுவேஷனுக்கும் ஏற்றாற்போல் இருந்திருக்கும். கூடவே, தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் எழுத்தாளரை வசனம் பேசி, நடிக்க வைத்த பெருமையும் மிஷ்கினுக்குக் கிடைத்திருக்கும். வடை போச்சு மிஷ்கினுக்கு.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. சேரன் பணியாற்றுவது சிபிசிஐடி பிரிவு என்று சொல்கிறார்கள். இந்தப் பிரிவில் பணியாற்றும், கான்ஸ்டபிள்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், கண்காணிப்பாளர்கள் சீருடை அணிந்துதான் பணியாற்ற வேண்டும் என்பதில்லை. பெரும்பாலும் மப்டியில்தான் இருப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கான அதிகார அத்தாரிட்டி தனி டி.ஜி.பி. தலைமையில் இயங்குகிறது.. தனி ஹெட்குவார்ட்டர்ஸும் இருக்கிறது.. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தனிப் பிரிவு அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் அந்தந்த மாநகர காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள். சி.பி.சி.ஐ.டி.யின் மாநிலத் தலைமைக்கு மட்டுமே கட்டுப்படக் கூடியவர்கள்.


படத்தில் சிட்டி கமிஷனரின் உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், மூடப்பட்ட ஒரு வழக்கை நகர போலீஸ் கமிஷனரே சேரனிடம் விசாரிக்கச் சொல்வதுமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

லோக்கல் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள் வழக்கை சரிவர விசாரிக்கவில்லையெனில்தான் அதனை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றுவார்கள். அதுவும் மாநகர ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் சிபாரிசின் பேரில் மாநில சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.தான் இதற்கு உத்தரவிடுவார்.

சி.பி.சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் நேரடியாக யாருடனும் தொடர்பில் இருக்க முடியாது என்பதால் நேர்மையாக வழக்கை நடத்துவார்கள் என்பது அனுமானம். சமீபத்தில் சேலத்தில் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டரின் குடும்பமே கொலை செய்யப்பட்ட வழக்கு இப்படித்தான் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்களது விசாரணையின் கீழ்தான் சேலத்து தி.மு.க. புள்ளி பாரப்பட்டி சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.(லோக்கல் போலீஸ் இவரை விசாரிக்கக்கூட இல்லை.)  இந்தக் குழப்பத்தைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

அதேபோல் விசாரிக்கப் போகும்போது இதே மூன்று பேருடன்தான் போக வேண்டுமா..? கூடுதல் போலீஸாருடன்தான் போவார்கள். இதுபோல் போயிருந்தாலே படத்தில் பல முடிச்சுக்களை முன் பாதியிலேயே அவிழ்த்துவிட்டிருக்கலாம். ஆனால் சினிமாவுக்கு இறுதிக் காட்சிவரை கொண்டு போக வேண்டியிருந்ததால் அதையே மெயின்டெயின் செய்துவிட்டார் இயக்குநர். சரி.. பரவாயில்லை..

வெளியில் சத்தம்போடக்கூட தெரியாத ஒரு அப்பாவியின் குடும்பம் ஒரு கண கோபத்தில் எடுக்கின்ற முடிவு எந்த அளவுக்கு சமூகத்தைப் பாதிக்கிறது என்பதைத்தான் இந்தப் படம் உணர்த்துகிறது. சமூக விரோதிகளின் செயல்களைவிடவும், அடக்கி வைக்கப்பட்டவர்கள் திமிறி எழும்போது ஏற்படும் உணர்வுகள்தான் அதிக விளைவை ஏற்படுத்தும். இதைத்தான் இப்படமும் உணர்த்துகிறது. இப்படியும் ஒன்று நடந்தால் எப்படியிருக்கும் என்றும் சில கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது. நினைத்துப் பார்க்கத்தான் பயமாக இருக்கிறது.

இந்தியன் படம் வந்தபோது ஊருக்கு ஒரு இந்தியன் இது மாதிரியிருந்தால் என்ன என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குள்ளும் எழுந்ததே.. அது போன்ற பயம் கலந்த உணர்வை இது தெரியப்படுத்தியிருக்கிறது.

பணக்கார வர்க்கம், அதிகார வர்க்கம், அரசியல் வர்க்கம் மூன்றும் சேர்ந்து அப்பாவிகளை பலிகடா ஆக்கினால் அவர்களை எதிர்த்து யுத்தம் செய்துதான் ஜெயிக்க முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் மிஷ்கின். இறுதிக் காட்சியில் ஒய்.ஜி.எம்.மும், அவர் மனைவியும் செய்வது இதைத்தான். யுத்தத்தில் யார் ஜெயித்தார்கள்..? யார் தோற்றார்கள் என்பது விஷயமில்லை. ஒரு சாமான்யன் இவர்களை எதிர்த்து யுத்தம் செய்தான் என்பதுதான் வருங்காலத்திற்கு தரப்பட்டிருக்கும் செய்தி. அதைத்தான் இத்திரைப்படத்தில் பதிவு செய்திருக்கிறார் மிஷ்கின்.

எப்படி பார்த்தாலும் தமிழ்ச் சினிமா கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம் இது. சந்தேகமில்லை. குழந்தைகள் இல்லாமல் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.. பாருங்கள்.. 

புகைப்படங்களுக்கு நன்றி : www.indiaglitz.com

அலட்டல் பேட்டியால் மிஷ்கின் அவஸ்தை..!

11-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த மேட்டர் எப்படியென் கண்ணுக்குப் படாமல் போனது என்று தெரியவில்லை. ஜஸ்ட் மிஸ்ஸிங்..

தமிழ்த் திரையுலகின் சமீபத்திய சலசலப்பு, இயக்குநரான மிஷ்கின் சென்ற வார ஆனந்த விகடன் இதழில் உதவி இயக்குநர்களைப் பற்றிக் குறிப்பிட்ட சில வார்த்தைகள் அவர்களை மனவருத்தமடைய செய்துவிட்டது.


அந்தப் பேட்டியில் மிஷ்கின் சொல்லியிருப்பது இதுதான்..

“தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதறவங்க குறைஞ்சுட்டாங்களே..?” என்ற கேள்விக்கு இப்படி பதில் சொல்லியிருக்கிறார் மிஷ்கின் :

“அதுதான் சார் என் கோபமும். இப்ப புத்தகம் படிக்கிற பழக்கம் குறைஞ்சிருச்சு. இன்னைக்கு வர்ற உதவி இயக்குனர்களை நினைச்சா எனக்கு கோபம் வருது. இப்ப என்ன புத்தகம் படிச்சுட்டு இருக்கீங்கன்னு கேட்டா, பாரதிராஜா, இளையராஜாவெல்லாம் படிச்சுட்டா சினிமாவுக்கு வந்தாங்கன்னு கேட்கிறான் ஒருத்தன். கெட்ட வார்த்தையிலேயே திட்டி அனுப்பிச்சுட்டேன்.

அவங்க வாழ்க்கையை, கிராமங்களை, மனிதர்களை படிச்சவங்க. படிக்காம படைப்பாளி ஆக முடியாது. சினிமா எடுக்கணும்னு சென்னைக்கு வர்ற சராசரி 21 வயது இந்திய இளைஞனுக்கு என்ன அனுபவம் இருக்கும்? வீட்டுக்கு பக்கத்தில் யாராச்சும் ஓடிப் போயிருப்பாங்க. அப்பா அம்மாவை போட்டு அடிச்சிருப்பாரு. இரண்டு கொலை தற்கொலை பார்த்திருப்பாங்க. ஒரு காதல் பண்ணியிருப்பான். ஆயிரம் தடவை சுய இன்பம் அனுபவிச்சிருப்பான். இதை தாண்டி என்ன வாழ்க்கை அனுபவம் இருக்கும்..? ஒரு சினிமா கோடிப் பேர் அண்ணாந்து பார்க்கும் விஷயம். நீங்க எல்லோரையும் பாதிக்கணும். அப்போ எவ்வளவு அனுபவம் வேணும். அதற்குப் புத்தகம் படிக்கணும். கத்துகிற ஆர்வம் இல்லாததால்தான் டிவிடி  பார்த்து சினிமா எடுக்க வேண்டியிருக்கு. சினிமான்னு இல்லை. தன்னைப் புதுப்பிக்காத கற்றுக் கொள்ளாத எந்தத் துறையும் விளங்காது.”

இதை படித்துவிட்டுதான் பெரும் கோபத்தில் கொந்தளித்துவிட்டார்கள் உதவி இயக்குநர்கள்.

இரண்டு, மூன்று நாட்களாக தங்களுக்குள்ளேயே கூடிப் பேசிக் கொண்டிருந்த உதவி இயக்குநர்கள் 70 பேர் கொண்ட குழுவாக உருமாறி நேற்று மாலை வடபழனி, குமரன் காலனியில் உள்ள தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை முற்றுகையிட்டு மிஷ்கின் தங்களை அவமரியாதை செய்து பேட்டியளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனுவைக் கொடுத்து அங்கேயே அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டுவிட்டார்கள்.

இந்தப் பேட்டியை முன்பே படித்திருந்த இயக்குநர் சங்கத்தின் முக்கியஸ்தர்களெல்லாம் ஏற்கெனவே மிஷ்கின் மீது காண்டுவில்தான் இருந்தார்கள். சமீபத்தில் நடந்த இயக்குநர்கள் சங்கத்தின் ஆண்டு விழாவுக்குக்கூட மிஷ்கின் தனது சார்பாக ஒரு சின்ன பங்களிப்பைக்கூட வழங்க முன் வராத கோபமும் அவர்களுக்கு இருந்தது.

நேற்றைய போராட்டத்திற்கு முன்பாகவே இயக்குநர்களின் கோபத்தையும், மற்றும் உதவி இயக்குநர்களின் ஆவேசத்தையும் கேள்விப்பட்ட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே.செல்வமணி மிஷ்கினிடம் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தாராம்.

சங்க செயற்குழுவில் இது பற்றி பேசப்படும் கட்டாயம் இருப்பதாகச் சொன்னதால். வேறு வழியில்லாமல் மிஷ்கின் ஒரு மன்னிப்பு கடிதத்தை இயக்குநர்கள் சங்கத்தில் ஒப்படைத்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் இருந்த வாசகங்கள் மறுபடியும் மிஷ்கின் சொல்லியிருப்பதை பிரதிபலிப்பதைப் போல் இருந்ததால் இதனை ஏற்க மறுத்த, உதவி இயக்குநர்கள் “மிஷ்கின் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.. விளக்கமளிக்க வேண்டும்” என்றெல்லாம் கொந்தளித்திருக்கிறார்கள். “மிஷ்கின் மூணாறில் இருக்கிறார். வந்தவுடன் பேசுவோம்” என்றெல்லாம் ஒரு வழியாகச் சொல்லி தற்போதைக்கு இந்தப் பிரச்சினைக்கு ஒரு புள்ளிஸ்டாப் போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் மிஷ்கினை சங்கத்திற்கு இழுத்து மன்னிப்பு கேட்க வைக்காமல் விடப் போவதில்லை என்று உதவி இயக்குநர்களில் ஒரு சாரார் முனைப்புடனேயே உள்ளார்கள்.

இந்த நிலையில் தமிழ்ச் சினிமாவில் இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் இனிய நண்பர் பாலமுரளிவர்மன் தனது பேஸ்புக் பக்கத்தில் மிக அருமையாக மிஷ்கினுக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார். அது உங்களுக்காக இங்கே :

மிஷ்கின் எனப்படும் மனநோயாளிக்கு...- பாலமுரளிவர்மன்.

“இந்த உலகின் மிக முக்கியமான பிரச்னையாக இருப்பது எதுவென்றால், முட்டாள்கள் அதீத தன்னம்பிக்கையோடும் அறிவாளிகள் அவநம்பிக்கையோடும் தம்மீதே கொண்டிருக்கும் சந்தேகங்களோடும் வாழ்வதுதான்.”-ஷேக்ஸ்பியர்.

இதே சிக்கல் திரையுலகிலும் நீடிக்கிறது. தமிழ்த் திரையுலகில் ஒருவன் வெற்றியாளனாக உருவாகும் முன் சந்திக்கின்ற எண்ணற்ற போராட்டங்களுக்குள் முதன்மையானது, புத்திசாலிகளுக்கும் தன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்பவர்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

உடம்பெல்லாம் வாயாக, வாயெல்லாம் கொழுப்போடு திரியும் இந்த மிஷ்கின் சாதித்தது என்ன? இந்த சமூகத்தில் எதை மாற்றியமைத்துவிட்டார்? மாபெரும் படைப்பாளியான ரித்விக் கடாக் ஒரு முறை சொன்னார். “மக்கள்தாம் எப்போதுமே மகத்தானவர்கள் என நான் நம்புகிறேன். அவர்கள்தாம் தங்களை தாங்களே மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். நான் எதையும் மாற்றியமைப்பதில்லை.”
 
இதுதான் தன்னுடைய கலையையும், மக்களையும் மதித்து நேசிக்கும் உயரிய கலைஞனின் பண்பு. மகத்துவமிக்க படைப்புகள் மக்களிடமிருந்துதான் உருவாகின்றன. வாழ்க்கையை விட்டுவிட்டு வேறு எதை உன்னதமாக படைத்துவிட முடியும். இத்தகைய உயர்வான குணங்களை மனநோயாளியான உன்னிடம் எதிர்பார்க்கக் கூடாது என்பது எமக்குப் புரிகிறது. ஆனால் திரைப்பட இயக்குனர் என்பவன் இந்திய நாட்டின் பிரதமர் அல்ல என்கிற எதார்த்தத்தை நீ புரிந்து கொள்ளவேண்டும்.

உன்னைப் போன்றவர்களும் உண்டுக் கொழுப்பதற்காக தன் உயிர் உருக்கி, உடல் வருத்தி உழைக்கின்ற ஏழை விவசாயியைவிட நீ ஒன்றும் கிழித்துவிடவில்லை என்பதை தினமும் கொழுத்த வாயை திறப்பதற்கு முன் நீ எண்ணிப் பார்க்க வேண்டும்.

அத்தகைய உயர்வான விவசாய குடும்பங்களிலிருந்தும் உழைக்கும் மக்களிடமிருந்தும் உருவாகி தங்களது வாழ்க்கையை படைப்பாக்க வேண்டுமென்கிற லட்சிய வேட்கையுடன் உதவி இயக்குனர்களாக வந்திருக்கிற எளிய குடும்பத்து இளைஞர்களை நீ இழிவான குடிபிறப்பிலிருந்து வந்தவன் என்பதற்காக உனக்கு சமமாக கருதி இளக்காரமாக பேசுவதை எங்களால் அனுமதிக்க முடியாது.

நீ நிமாய்கோஷ் போலவோ, எழுத்தாளர் ஜெயகாந்தன், அவள் அப்படித்தான் ருத்ரய்யா மாதிரியோ தமிழ்த் திரைப்படத்திற்கான புதிய பரிணாமத்தை கொடுத்தவனா? அல்லது பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா மற்றும் பாலா போல திரைப்படத்தின் போக்கை திசை திருப்பிவிட்டவனா? புடோவ்கின், ஐசன்ஸ்டீன் போல திரைப்படத்திற்கென கோட்பாடுகளை உருவாக்கி தந்தவனா? உனக்கேன் இவ்வளவு நீளமான நாக்கு?

பெண் சுகத்துக்காகவும், பெட்டி நிறைய பணம் சம்பாதிக்கவும் உன்னைப் போன்றவர்கள் சினிமாவை தேர்ந்தெடுத்திருக்கலாம். என் போன்றவர்கள் சமூக மாற்றத்திற்கான களமாக திரைப்படத்தை கையில் எடுத்திருக்கிறோம். எனக்கு சினிமா ஒரு ஆயுதம். நான் திரைத்துறைக்கு வராமல் போயிருந்தால் ஆயுதம் தூக்கியிருப்பேன். அடக்கி ஒடுக்கப்படும் எம்மக்களுக்கான கருவியாக சினிமாவை கருதும் என் போன்ற இளைஞர்களும் இருபத்தியொரு வயதுள்ள எல்லா சராசரி இந்திய இளைஞர்களும் நீ சொன்ன இலக்கணத்திற்கு பொருந்த மாட்டார்கள்.

என்னை உனக்கு தெரியுமா? எங்களோடு கைகோர்த்து களமாடுகிற தம்பிகளை நீ அறிவாயா? உன்னைப் போல சுயநலமாக ஒரு நாளும் நாங்கள் இருந்ததில்லை. மக்கள் பிரச்னைகளுக்காக எந்த நிலையிலும் தெருவில் இறங்கி போராடுகிறோம். நீ என்றைக்காவது முன் வந்திருக்கிறாயா? உன் தலைக்கொழுப்பு உன்னை தரையில் இறங்க அனுமதித்திருக்கிறதா?

இயக்குனர் சங்கத்தின் 40-வது ஆண்டுவிழா நடந்தபோதே இறுமாப்புடன் விலகி இருந்தவன்தானே நீ! உன்னைப் பற்றிய உனது மதிப்பீடுதான் எவ்வளவு மடத்தனமானது? இரண்டு லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன் என்று சொல்லிக் கொள்கிறாயே அந்த புத்தகங்கள் உனக்கு கற்றுக் கொடுத்தது என்ன?

படிப்பு மனிதனை பண்படுத்ததானே செய்யும். தன் அகங்காரத்தை ஒடுக்கி உனக்குள் உன்னை தேடச் செய்யவில்லையெனில் நீ ஏதோ தவறான புத்தகங்களை படிக்கிறாய் என்பது புரிகிறது. அதிகம் படிக்க படிக்க மனம் விழிப்பு கொள்ளும். வாய் தானாக மூடிக் கொள்ளும் ஆனால் நீ ஒவ்வொரு முறையும் திருவாய் திறப்பதில் ஒன்று புரிகிறது. வாங்கிய புத்தகங்களை நீ படிப்பதே இல்லை. மேசை மீது பரப்பி வைத்துக் கொண்டு வருகிறவர்களிடம் எல்லாம் நடைபாதை வியாபாரி போல விரித்துக் காட்டுவதிலேயே நிறைவு பெற்று விடுகிறாய்.

இதுவரை உனக்கு இரண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன. மூன்றாவதில் பெரும் சிக்கல். இடைவெளிக்குப் பின் நான்காவதாக ஒரு படம். இதைத் தவிர வேறென்ன செய்து விட்டாய்? உன்னுடைய படங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பது பற்றி திரையுலகில் பெரிய பட்டிமன்றமே நடக்கிறது. நீ ஒரு கை தேர்ந்த திருடன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பிறகு எதற்காக இவ்வளவு ஆணவம்?

உனக்கு நினைவிருக்கிறதா? நாங்கள் ஐந்துபேர் உன்னை ஒரு நாள் சந்தித்தோம். இயக்குனர் திரு.சேரன் குறித்து எவ்வளவு கேவலமான தொனியோடு நீ பேசினாய் ? “சேரனுக்கே ஒண்ணும் தெரியலங்க . யுத்தம் செய் ஷூட்டிங்ல மொத அஞ்சுநாள் ரொம்ப தடுமாறி போயிட்டாரு, எதுவுமே அவருக்கு புரியல, எம் பேட்டனையே அவரால புரிஞ்சுக்க முடியல. என்னடா இந்த மனுசன் இப்படி இருக்காரேனு நெனச்சேன், அப்பறந்தான் கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டு செட்டானாரு”

சொன்னியா இல்லியா...? நல்ல தாய் தகப்பனுக்கு பொறந்திருந்தா உன்னால இத மறுக்க முடியாது. தமிழ்த் திரையில் அண்ணன் சேரன் ஆழமான தடம் பதித்தவர். அவருடைய எல்லா படைப்புகளுமே தமிழர் வாழ்வை உணர்வுப்பூர்வமாக எங்கள் நெஞ்சில் விதைத்தவை. அவரைப் பற்றியே ஏளனமாக பேசிய போதுதான் உன்னுடைய மனவிகாரத்தை நாங்கள் புரிந்து கொண்டோம்.

இங்கே இருக்கிற உதவி இயக்குனர்களுக்கு வாழ்க்கை அனுபவம் இல்லை என்கிறாய்! அமெரிக்காவில் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இளைஞன் தன் வேலையை விட்டுவிட்டு உன்னிடம் உதவி இயக்குனராக வரப் போவதை சொன்ன நீ, “அவன் பேசுறத கேக்குறப்பவே தெரியுது. நிச்சயமா நான் சொல்றேன் அவன் டைரக்டராயிடுவாங்க” என்றாய். “எத வெச்சு சொல்றீங்க?” நான் கேட்டதும் ஒருகணம் என்னை உற்றுப் பார்த்துவிட்டு “எனக்கு தெரியும்” என்றாய்.

இங்கிருக்கிறவர்களுக்கே வாழ்க்கை அனுபவம் இல்லை எனும்போது, இவர்களே மனிதர்களை படிக்காதவர்களாக உன் பார்வைக்கு படும்போது, அமெரிக்காவில் இருப்பவனுக்கு மட்டும் என்ன அனுபவ அறிவு  இருந்துவிட முடியும் ?

யாராவது ஒரு உதவி இயக்குனர் தனியாகச் சிக்கிவிட்டால், மேதாவித்தனத்தை காட்டுவதுதான் ஒரு இயக்குனருக்கு பெருமையா?
“தம் அடிப்பியா? சரக்கடிப்பியா? இதெல்லாங்கூட செய்யாம நீ என்னடா அஸிஸ்டென்ட் டைரக்டர்? எதுக்கு சினிமாவுக்கு வந்த?” என்று கலங்கடித்திருக்கிறாயே..? உன்னளவில் வாழ்க்கை அனுபவம் என்பது குடிப்பதும் புகைப்பதும்தானா?

நீ முதலில் ஒன்றை புரிந்து கொள். பாட்டும் இசையும், கூத்தும் கலையும் எம் தமிழர் மரபில் உயிரோடு கலந்தவை. எங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஆதார காரணிகளாக இருப்பதும் கலைகள்தான். உதவி இயக்குனர்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழனுக்கும் அவனது வாழ்க்கை அனுபவச் செறிவோடுதான் நிறைவடைகிறது. எல்லோரிடமும் ஓராயிரம் கதைகள் நிறைந்து கிடக்கின்றன. சொல்லவும், எழுதவும், திரைப்படமாக உருமாற்றுவதற்குமான வாய்ப்பு எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.

நீ என்னோடு புறப்பட்டு வர முடியுமானால் சொல். தஞ்சை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் கடைக்கோடி சிற்றூர்களுக்கும் செல்வோம். எங்கள் மனிதர்களை பார். எம்மக்களின் வாஞ்சை மிகுந்த நேசத்தை உணர். இவர்களை பற்றியா இந்த வெள்ளந்தியான மனிதர்களின் குடும்பப் பின்னணி பற்றியா கொச்சைப்படுத்தினோமென்று குறுகிப் போவாய்- நீ மனிதனுக்குப் பிறந்திருந்தால்!.

தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் மீது நீ ஏன் வார்த்தைகளை அமிலமாக அள்ளி வீசுகிறாய்? உன்னுடைய உள்மனதில் இருப்பது என்ன? நீ யார்? எவ்விடத்திலிருந்து புறப்பட்டவன்? உன்னுடைய வேர் எங்கிருக்கிறது? எல்லாம் எங்களுக்கு தெரியும். உன்னுடைய திரைப்படங்களில் நீ ஏன் பெரும்பாலும் மலையாளிகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறாய் என்கிற உண்மையும் எங்களுக்கு தெரியாமல் இல்லை.

இங்கே பிழைக்க வருபவர்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல. மாறாக எங்களை எதிரியாக கருதுகிற எவனுக்கும் இங்கு இடம் தர முடியாது. இனியும் உன் தடித்த நாக்கும் எங்களுக்கு எதிராக நீளுமானால் நீ தமிழ்நாட்டிலிருந்து இருப்பிடத்தை மாற்றிக் கொள்ள நேரிடும் என்பதை மனதில் கொள்.

முந்தைய தலைமுறை போல இன்றைய இளம் தலைமுறை பெருந்தன்மை என்ற பெயரில் உறங்கிக் கிடக்காது என்பதை சூடு சொரணை உள்ள தமிழனாகவும், உருப்படியான உதவி இயக்குனராகவும் உனக்கு சொல்லிக் கொள்கிறேன். அரையிருட்டு அறைக்குள்ளும் கருப்புக் கண்ணாடி அணிந்து கொள்ளும் உனக்கு எல்லாமே இருட்டாகத்தான் தெரியும்.

கண்களை விரி ! காதுகள் திற ! வாயை மூடு !
 
நன்றி பாலமுரளிவர்மன்..!

'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' படங்களுக்குப் பின்புகூட கொஞ்சம் தன்மையுடன் பேசி வந்த மிஷ்கின், 'நந்தலாலா' படத்திற்குப் பின்புதான் இப்படி தடாலடியாகப் பேசி வருகிறார் என்று நினைக்கிறேன்.

புத்தகம் படி என்பது நல்ல அட்வைஸ்தான். ஆனால் முழுக்க, முழுக்க புத்தகமே திரையுலகத்திற்கு வழிகாட்டியாக இருந்துவிடாது. அவரவர்க்குள்ளும் ஒரு மேக்கிங் திறமை இருந்தாக வேண்டும்..! மிஷ்கினுக்கு அதுவும் இருக்கிறது.. படிப்புத் திறனும் இருக்கிறது.. தன்னைப் போலவே அத்தனை பேரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நல்ல விஷயந்தான் என்றாலும் அதனை தன்மையாகச் சொல்ல வேண்டும்.

வடிவேலு என்னும் மனிதன் எத்தனையோ தமிழர்களையும், தமிழ் தெரிந்த மக்களையும் தியேட்டர்களில் சிரிக்க வைத்தபடியேதான் உள்ளார். ஆனால் அவர் பேசுகின்ற பேச்சை வைத்துப் பார்த்தால் அவர் எவ்வளவு படித்திருக்க வேண்டும்..? இல்லையே.. இங்கே அவருக்கு கிடைத்திருப்பது நடிப்பு அனுபவமும், கதை சொல்லியின் திறமையும்தான். அதனைக் கச்சிதமாகப் பயன்படுத்தி வருகிறார்.

இப்போது இருக்கின்ற உதவி இயக்குநர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதைப் போல இருக்கும் அவரது பேட்டி நகைச்சுவையானது. தமிழ்ச் சினிமா இயக்குநர்களுக்கு என்ன தேவையோ அது 80 சதவிகித உதவி இயக்குநர்களுக்கு நிச்சயம் இருக்கிறது. மிச்சமிருக்கும் 20 சதவிகித இயக்குநர்களுக்கு தமிழையும் தாண்டி அனைத்து மொழிகளிலும் மக்களை ரசிக்க வைக்கும் திறமையும் இருக்கிறது. இதில் மிஷ்கினும் ஒருவர்.

கதையாடலுக்காக புத்தகங்கள் மிக அவசியம். ஆனால் திரைக்கதையாடலுக்கு புத்தகங்கள் தேவையில்லை. வெற்றி பெற்ற, புகழ் பெற்ற, காவியப் படங்களின் திரைக்கதைகள்தான் அதற்குத் தேவை. ஒரு வெற்றி பெற்ற படத்தின் கதை என்பது இரண்டு வரிதான். ஆனால் அதனை விரிவாக்கம் செய்து கொண்டு செல்லும் சினிமா மொழியான திரைக்கதையை எந்தப் புத்தகத்திலும் சொல்லிக் கொடுத்துவிட முடியாது.

சினிமா என்னும் கனவுத் தொழிற்சாலையில் 21 வயதிலேயே  நுழைந்துவிட வேண்டும். கிளாப் அடிப்பவனாக, கன்ட்டினியூட்டி எழுதுபவனாக.. பிராப்பர்ட்டீஸ் பார்ப்பவராக, சீன்களை பிரிக்கும் திறன் படைத்தவராக, ஷூட்டிங் ஷெட்யூஸ் போடுபவராக, பிராம்ட் இயக்குநராக, இணை இயக்குநராக.. இப்படி ஸ்டெப் பை ஸ்டெப்பாக அவன் அடியெடுத்து வைப்பதற்கு வயதும், அனுபவம் ஒருசேர கிடைத்தால் நிச்சயம் அவன் சிறப்பான இயக்குநராக வர முடியும்.

இதனால்தான் இந்த வயதிலேயே மிக அதிகம் பேர் இணைந்துவிடுகிறார்கள். ஒரு டிகிரியை முடித்துவிட்டு வருபவர்களும், பிளஸ்டூவை மட்டும் முடித்துவிட்டு நேராக வருபவர்களும் உண்டு. அத்தனை பேருமா இயக்குநர்களாக முடியும்..? அவர்களுக்கே தெரியும்.. அது முடியாது என்று..! அவர்களிடத்தில் அந்தத் திறமை இல்லையெனில் மேற்கொண்டு ஒரு ஸ்டெப்பும் வைக்க முடியாது. இதுவும் அவர்களுக்கே தெரியும்.

மூத்த உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், போன்ற மிகப் பெரிய அனுபவசாலிகளை வைத்துத்தான் பெரிய இயக்குநர்களே இப்போது திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் 24 அல்லது 25 வயதில் சினிமாவுலகத்திற்குள் வந்தவர்கள்தான்..! புத்தக அறிவோடு, அவர்களுடைய பீல்டு அனுபவமும்தான் அவர்களுக்கு இப்போது சோறு போடுகிறது.

21 வயதில் வராதே என்றால் வேறு எந்த வயதில் உதவி இயக்குநராகப் பணிக்கு வருவது? 30 வயதில் பீல்டுக்குள் வரும் ஒரு உதவி இயக்குநர், 25 வயது இணை இயக்குநருக்குக் கீழ் வேலை செய்வாரா..? முதலில் யார் புதிய உதவி இயக்குநராக பணியில் சேர்ந்தாலும் அவனது முதல் வேலை நட்சத்திரங்கள் அணியும் உடைகளை காட்சிக்கு, காட்சி குறித்து வைத்துக் கொள்ளும் கன்ட்டினியூட்டி பார்ப்பதுதான்.

இதன் பின்புதான் படிப்படியாக அடுத்த வேலைக்குப் போக முடியும்.. எடுத்த எடுப்பிலேயே யாரும் இணை இயக்குநராக இங்கே சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம். தற்போது அதுதான் நடந்து வருகிறது. குறும்படங்கள், ஆவணப் படங்கள், விளம்பரப் படங்கள் எடுத்து வரும் இயக்குநர்கள்தான் இப்படி அவதாரமெடுத்து வருகிறார்கள். ஆனால் இவர்களிடம் சினிமா மேக்கிங் பற்றிய அனுபவம் உண்டு. 

மிஷ்கினே சொல்லியிருப்பதுபோல் அமெரிக்காவில் வேலை பார்த்தவன் இங்கே வந்து நிமிடத்தில் இயக்குநராகிவிட முடியும் என்றால், வாய்ப்பு கிடைத்தால் இங்கேயிருப்பவனும் அதேபோல் ஆகலாம். பண பலமும், ஆள் பலமும், விளம்பரத் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இங்கே இயக்குநராகலாம்.! ஆனால் இங்கேயிருப்பவனுக்கு ஒன்றுமே தெரியாது. அமெரிக்காவில் இருந்து வருபவனுக்கு எல்லாமே தெரியும் என்று மிஷ்கின் சொல்வது மேல்தட்டு வர்க்க பூர்ஷ்வாத்தனம்!

இந்த வயதில் இணைந்து கொண்டு மேலும், மேலும் படங்களில் வேலை செய்யும்போது உலக அறிவோடு நிச்சயம் சினிமா அனுபவமும் சேர்ந்தே அவனுக்குக் கிடைக்கத்தான் போகிறது. எதுவுமே இல்லாமல் எவனும் இங்கே அடுத்த ஸ்டெப்பை எடுத்து வைக்க முடியாது.

இனிமேற்கொண்டும் தமிழ்ச் சினிமாவில் கதையில் புதுமையையும், திரைக்கதையும் புத்தம் புதுசையும் ஒரேசேர கொடுப்பவனே ஜெயிக்க முடியும். உதாரணம் 'மைனா' படம். நான்கு படங்களை இயக்கிய பிரபுசாலமனுக்கு ஐந்தாவது படமே மிகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்திருக்கிறது. எத்தனை ஆண்டு கால உழைப்பு..!? இதை முதல் முறையிலேயே அனுபவித்தவர்களும் உண்டு. பாலாவைப் போல, சசியைப் போல.. பாண்டிராஜை போல.. சசிகுமாரை போல.. ஆனால் இவர்களெல்லாம் திரையுலக அனுபவத்தில் தோய்த்தெடுத்தவர்கள்.

“1000 தடவை சுய இன்பம் அனுபவிச்சு இருப்பான்” என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.. சாருநிவேதிதாவுடன் இணைந்த பின்பு இப்படியெல்லாம் மிஷ்கின் பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதனால் எனக்கு இது ஆச்சரியமில்லை. ஆனால் உதவி இயக்குநர்களிடத்தில் இந்த ஒரு வார்த்தைக்கு தீக்குளித்ததைப் போன்ற வெறுப்பு.. முற்றிலுமாகத் தவிர்த்திருக்க வேண்டிய வார்த்தைகள் இது..!

மிஷ்கினின் இந்த பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது...!