11-02-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தப் படத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்..? இதில் எந்த இடத்திலும் இந்திய முஸ்லீம் சமுதாயத்தைப் பற்றி தவறாக எதுவும் சொல்லப்படவில்லை..! படத்தைப் பார்த்த பின்பும் முழு படத்தையும் தடை செய்ய வேண்டும் என்று கோரியவர்களை நினைத்து சிரிக்கத்தான் தோன்றுகிறது..! படத்தில் முதல் 30 நிமிடங்களைத் தவிர மற்றவைகள் அனைத்துமே நகைச்சுவைதான்..! இது ஏன் இவர்களுக்கு புரியவில்லை..? எவ்வித எதிர்ப்பும் இல்லாமலேயே இப்படம் வெளி வந்திருந்தால், கண்டிப்பாக சுமாராகத்தான் போயிருக்கும். இன்றுவரையிலான ஹவுஸ்புல் காட்சிகளுக்காக கமல், முதலில் எதிர்ப்புத் தெரிவித்து போராடிய 24 முஸ்லீம் அமைப்பினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்..!
துவக்கத்தில் கதக் நடனக் கலைஞராக கமல் காண்பிக்கும் நடிப்பும், நடனமும் இன்னமும் அவரை நடிப்பில் வீழ்த்திவிட எந்த நடிகரும் இங்கே இல்லை என்பதை உணர்த்துகிறது..! அந்த பாடல் காட்சியில் அவர் காட்டும் அபிநயம்.. ஒவ்வொரு வார்த்தைக்கும் அந்த நடனத்துடன் இணைந்து அவர் காட்டும் பாவமும்.. வாவ்.. வாவ்.. எத்தனை முறை பார்த்தாலும் அந்தப் பாடல் காட்சி நம்மை கண்களைவிட்டுப் போகாது என்பது நிஜம்..! இப்படியொரு கலைஞனை நாம் அடைந்ததற்கு பெருமைப்பட்டாக வேண்டும் என்பதையே சொல்கிறது..! இந்தியாவிலேயே இந்தக் கலையில் கமலை மிஞ்ச வேறு யாருமில்லை..!
இதற்குப் பின்னர் பொதுப்படையாக பார்த்தால், கதை போகும்போக்கு இடைவேளைவரையிலும் ஜெட் வேகம்தான். ஆனால் அதற்குப் பின்பு நொண்டிக் குதிரையாகிவிட்டது..! ஆப்கானிஸ்தான், தாலிபான்கள், முல்லா ஓமர், பின்லேடன் போன்றோரை வைத்துக் கொண்டு இதுவொரு கற்பனை கதை என்று சொல்லி, ஊடுறுவியிருக்கும் திரைக்கதையை நம்பத் தகுந்தவகையில் அமைக்காததுதான் பிற்பாதியின் தோல்விக்கு காரணம்..!
அலெக்ஸ் பாண்டியனில்தான் கடைசியாக இந்த மொக்கை வசனத்தைக் கேட்டிருந்தோம். “கையை அவுத்து விட்டு அப்புறம் அவர்கிட்ட பேசிப் பாரு..” என்ற டயலாக்கை..! நல்லவேளை இந்தப் படத்தில் அந்த சீனில் இருந்த இறுக்கம் மாறாமல், வேகம் குறையாமல் பூஜாகுமாரின் நடிப்பு சிறிதும் சிதறாமல் சீரியஸாகவே அவர் சொல்லும் வசனமும், அப்பாவியான கமல்ஹாசனின் வேண்டுகோளும் இந்தக் காட்சியை ரசிக்க வைக்கிறது..! அந்த அதிரடி துவக்கம் நன்றாகத்தான் இருந்தது..! அதற்குப் பின்புதான் அனர்த்தமே..!
இத்தனை நாள் மனைவியாக இருந்தவளால் கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மத்தை தெரிந்து கொண்டவுடன், மிகச் சாதாரணமாக அதை எடுத்துக் கொண்டு உடன் ஓடுவதும்.. நெற்றியில் ஒரு பிளாஸ்டரை மட்டும் ஒட்டிக் கொண்டு போர்வீரன் தோற்றத்தில் கமல் களத்தில் குதிப்பதும் அதுவரையில் கமல் காட்டியிருந்த நடிப்பு விஸ்வரூபத்தை பொசுக்கென்றாக்கிவிட்டது..!
ஆப்கன் மலைப்பாதையில் முல்லாவுடனான கார் பயணத்தின்போது நேட்டோ கூட்டுப் படைகளின் ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேலாகச் செல்கிறது. இவர்கள் அவர்களையும் தாண்டி வந்து கொண்டேயிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்பதை கமல்தான் சொல்ல வேண்டும்..! அடுத்தக் காட்சியில் வேறொரு இடத்தில் நேட்டோ படைகளினால் சிறு கிராமங்கள் அழிக்கப்பட்டிருக்க, உடனேயே அங்கே அதே ஜீப்பில் பறக்கிறார்கள்..! இது முடிகிற விஷயமா..? சுற்றுப்புறத்தில் ஒரு சிறிய அசைவுகள் இருந்தால்கூட அதைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு சக்தி படைத்த நேட்டோ படையினருக்கு இவர்களது ஜீப் மட்டுமே கண்ணுக்குத் தெரியவில்லை என்கிறார்கள்..!
இதுதான் இப்படியென்றால் அமெரிக்காவில் நடந்ததாகச் சொல்லப்படுவது முற்றிலும் லாஜிக்கின் எல்லை மீறல்..! அமெரிக்காவில்.. பட்டப் பகலில்.. கார் சேஸிங்கில் தப்பித்து ஏர்போர்ட்வரைக்கும் போய் விமானத்தைப் பிடிக்க முடியும் என்று கமல் காட்டியிருப்பதை ஆங்கிலப் படங்களில்கூட பார்த்திருக்க முடியாது..! எஃப்.பி.ஐ.க்கே தெரியாமல் அங்கே அல்கொய்தா தீவிரவாதியினரின் கொலைக் கூடமும்.. தற்கொலைப் படையினரின் நடமாட்டமும் இருக்கிறது என்பதைக் காட்டியிருப்பதும் நகைச்சுவைதான்..!
பூஜாகுமாரின் ஏற்பாட்டில் கமலை பின் தொடரும் ஒற்றன் மிகச் சரியாக அல்கொய்தா டீமின் வாசலைப் போய் தொடுவதுதான் இப்படத்தின் மிகப் பெரிய திரைக்கதை முடிச்சு.. திரைக்கதைக்காக ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் என்று நினைத்து அப்படியே காட்சிகளை தொடர வைத்திருக்கிறார் போலும்..! அமெரிக்காவில் இருப்பவர்களெல்லாம் கேணையன்கள் போலவும், சீசியத்தின் மகிமையை அவர்களுக்கே உணர்த்தும் பூஜாகுமாரின் கேரக்டரெல்லாம் பயங்கர காமெடி..! ஒரு மிகப் பெரிய அழிவுப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர் கள்ளக்காதலியிடம் பாஸ்வேர்டை கொடுப்பார் என்பதெல்லாம் நமது தமிழ்ச் சினிமாவில் மட்டுமே வரும்..!
அமெரிக்காவில் வெடிக்கப் போகும் பயங்கரத்தைத் தடுக்க இந்தியாவில் இருந்து வந்திருக்கும் ரகசிய ஏஜெண்ட்டுதான் நம்ம கமல் என்ற உண்மை வெளிப்படும்போது ரொம்பவே கை தட்டினேன்.. அப்பாடா.. இப்படியாச்சும் நாம ஜேம்ஸ்பாண்ட்டை அடிச்சு காலி பண்ணிட்டோம் என்று பெருமை கொள்ளலாம்.. இதோடு சொந்த நாட்டு மக்களிடையேகூட இதுவரையிலும் பேசாத நமது பிரதமர், கமலுக்கு போன் செய்து பேசி அவரைப் பாராட்டுகிறாராம்..! ரொம்பத்தான் பில்டப்பை அள்ளி விட்டிருக்கிறார்கள்..!
ஆப்கனில் இவர்கள் தங்கியிருக்கும் இடத்தை படையினர் முற்றுகையிட்டு அழிக்கும் காட்சிகளெல்லாம் தமிழ்ச் சினிமாவுக்கு நிச்சயம் பிரமாண்டம்தான்..! இது போன்று பணம் செலவழிக்க தயாரிப்பாளர் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் இது போன்று எடுத்துக் காட்ட முடியும். இதில்கூட ஹெலிகாப்டரில் இருந்து சுடுபவர்களிடமிருந்து தப்பித்து ஓடும் காட்சிகளையெல்லாம் எடுக்காமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.. அந்த அளவுக்கு பிஸ்கோத்து தப்பித்தல்கள்..!
ஆப்கனில் எடுப்பதாக பிளான் செய்து, பின்பு ஜோர்டானில் சில காட்சிகளை ஷூட் செய்து கடைசியாக சென்னையில் சத்யபாமா கல்லூரிக்கு பின்புறம் நிஜமான செட் போட்டுத்தான் ஹெலிகாப்டர் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள் என்று கிராபிக்ஸ் செய்தவர்களே வெளியில் சொல்லிவிட்டார்கள். அத்தோடு துரோகியொருவர் தூக்கிலிடப்படும் காட்சியில் கிராபிக்ஸ் வித்தையில் 10 பேர் நின்றிருந்ததை 100 பேராக ஆக்கி நம்மை மறக்கடித்திருக்கிறார்கள்..! இன்னும் சொல்ல வேண்டாததையெல்லாம் சொல்லிவிட்டார் அந்த கிராபிக்ஸ் இயக்குநர்.. அவருக்கு எனது நன்றி..!
கமல்ஹாசனின் ஜிகாதி கேரக்டரும் சில சமயங்களில் காமெடியாக இருக்கிறது.. காஷ்மீரி முஸ்லீம்.. அவருடைய அப்பா ஒரு ஜிகாதி.. அவர் வழியில் இவரும் களத்தில் இறங்குகிறார்.. அல்கொய்தாவுக்கு டிரெயினிங் கொடுக்க வந்திருக்கிறார்.. என்றெல்லாம் கமலின் கேரக்டரை விஸ்வரூபமாக்கினாலும், அவரே ஏதும் தெரியாதவராகத்தான் அங்கே வருகிறார்..!
முல்லாவின் மனைவியை பரிசோதிக்க வரும் மருத்துவரை முல்லா ஓமர் வெளியே போகச் சொல்லும்போது கமல் காட்டும் முக பாவனை ஐயோ பாவம் என்கிறது..! முல்லாவின் மனைவியை புகைப்படம் எடுக்க கமல் செய்யும் முனைப்புகளும், இதை முல்லா பார்த்த பின்பு அவர் மகனை காப்பாற்றுவதுபோலான கமலின் நடிப்பும் அவர் உண்மையிலேயே ஜிகாதிதானா என்கிற சந்தேகத்தை இப்படத்தை அல்ஜஸீரா டிவியில் போட்டுக் காட்டித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா..?
முல்லா அனுப்பும் தற்கொலைப் படை வீரன் எதற்காக செல்கிறான் என்பதையும் தெரிந்து கொள்ளாதவராக கமல் இருக்கிறார்..! காட்டிக் கொடுத்தவரை தாலிபான் படைகள் தூக்கலிடும்போது தனது கூட்டாளியின் மரணத்தை எதிர்நோக்க முடியாமல் தவிக்கிறார். அந்த அப்பாவி தாயார், “உன் சகோதரனின் நிலைமையை பார்த்தாயா.?” என்ற கமலை பார்த்து கேட்கும் கேள்வியைக் கேட்டவுடன் தமிழ்ச் சினிமாவின் பார்மாலிட்டிக்காக சோகத்தைக் கவ்விக் கொண்டு ஓடி ஒளிகிறார் கமல்.. எதிரில் வரும் முல்லாவின் கேள்விக்கு பரிதாபமான முகத்தையே பதிலாகத் தருகிறார்.. இதெல்லாம் எதுக்கு..?
ஆப்கனில் தற்போதைய நிலைமையில் ஊர், ஊருக்கு எந்தந்த வீடுகளில் யார், யார் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஆப்கன் அரசுகளைவிடவும் நேட்டோ படையினர்தான் முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பதாக ஆப்கன் அரசே சொல்கிறது..! அதையும் மீறி தற்கொலைப் படையினருக்கு வெடிமருந்துகள் வரும் வழி எது என்பதைத்தான் நேட்டோ படையினர் வலைவீசித் தேடி வருகிறார்கள். அவைகளெல்லாம் பாகிஸ்தானில் இருந்து.. அதன் உளவுத் துறை மூலமாக வருகிறது என்பது உலகத்துக்கே தெரிந்தாலும், பூகோள ரீதியாக ஆப்கனுடன் இணைந்திருக்கும் பாகிஸ்தானின் அனைத்து வழிகளையும் அடைத்து வைத்து தாலிபான்களை தனிமைப்படுத்த இப்போதுகூட நேட்டோவாலும், அமெரிக்கவாலும் முடியவில்லை..! நிலைமை அங்கே அப்படி இருக்க… முல்லா மாதிரியான தீவிரவாதிகள் சர்வசாதரணமாக விவசாயி ஒருவரின் வீட்டில் நடக்கும் விருந்தில் கலந்து கொள்வது போலவும், அவர் அபினை கமலுக்கு பரிசளிக்க முன் வருவதும்.. அதை கமல் தனது ஆள் மூலமாக மாற்றுவதுமான காட்சிகளெல்லாம் சுத்த ஜல்லிதான்.
கமலையும் அழைத்துக் கொண்டு பின்லேடனை பார்க்கப் போகும் காட்சியும், அங்கே ஆப்கன் அரசுகளைச் சேர்ந்தவர்களே அவரைப் பார்க்க வருவதாகவும் காட்டிவிட்டு, அவரை பார்த்தபடியே கமல் வெளியேறுவது போலவும் வைத்து பின்லேடனை கமலின் ஆதர்ச நாயகனாக சித்தரிக்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள்..! இது போன்ற சிற்சில இடங்களில் கூர்ந்து கவனித்தால் கமலின் தனது கேரக்டரின் பில்டப்புகள் வேறு யாருக்கும் கிடைக்காத அளவுக்குக் கொடுத்திருப்பது தெரிகிறது..!
தன்னுடைய பாத்திரப் படைப்பை தனக்குக் கிடைத்திருக்கும் அட்சயப் பாத்திரமாக பாவித்திருக்கும் கமல், மற்றவர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் செய்திருக்கும் வண்டி, வண்டியான ஓட்டைகள்தான் இப்படத்தை ரொம்பவும் சிலாகிக்க முடியாமல் செய்கிறது..! இப்படத்தில் மிகவும் வீணடிக்கப்பட்டிருப்பவர் நாசர்தான்..! கமல் எப்போதும் தன்னுடைய படங்களில் நாசருக்கு நல்ல கேரக்டர்கள் கொடுத்து மகிழ்விப்பார். இதில் நாசருக்குக் கிடைத்திருப்பது வெறும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கேரக்டர்தான்..!
முல்லா ஓமராக நடித்திருக்கும் ராகுல்போஸ் அமெரிக்காவில் இருந்து நடத்தும் புனிதப்போர் ஒப்பனைகளெல்லாம் ரொம்பவே ஓவர்.. நமது தமிழ் ரசிகர்கள் எதைக் கொடுத்தாலும் எப்படி கொடுத்தாலும் கொடுப்பது கமல்ஹாசன் என்றவுடனயே தாராளமாக ஏற்றுக் கொள்வார்கள் என்று அவர் நினைத்துவிட்டார்..! அவருடைய ஒரு கண் குறைபாடு.. எந்தவிதத்தில் யார் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது என்று கமலே சொன்னால் தேவலை..!
தாலிபான்களை அடையாளம் காட்டும் தமிழ்ப் படமாக இது வெளிவந்திருக்கும் சூழலில், இதைத் தடை செய்ய கூப்பாடுபோட்டு தங்களுடைய ஒட்டு மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார்கள் தமிழக முஸ்லீம்கள்.. இஸ்லாமிய பெருமக்களில் யாரோ ஒரு சில தீவிரவாத கூட்டத்தினர் செய்வதற்கு அனைவருமே பொறுப்பேற்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் இப்படத்திற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்க வேண்டுமெனில் அதனை பிராமண சமூகத்தினர்தான் செய்திருக்க வேண்டும்..!
தமிழ்ச் சினிமாவில் மிக அதிகமாகக் கேவலப்படுத்தப்பட்ட, படும் ஜாதியினர் பிராமணர்கள்தான்..! அதே ஜாதியில் பிறந்த கமல், தன்னுடைய திறமையாலேயே உயர்ந்ததாக இப்போதுவரையிலும் சொல்லிக் கொள்கிறார்..! ஆனால் அந்த பிறவித் திறமையை உள்ளடக்கிய அவருடைய ஜீன், பிராமண வாசம் கொண்டதுதான் என்பதை மட்டும் ஒப்புக் கொள்ளவே மறுக்கிறார்..!
கேலி, கிண்டல் செய்வதற்கு பிராமணர்களை மட்டுமே குத்தகைக்கு எடுத்திருக்கும் தமிழ்ச் சினிமாக்காரர்கள் மாமிகளை மட்டுமே கிண்டல் செய்வார்களே தவிர, ஒரு போதும் உசிலம்பட்டி மதினிமார்களை ‘டச்’ செய்யவே மாட்டார்கள். காதலுக்கும், மாமாக்களை தயிர் சாதம் என்பார்கள்.. ஆனால் இவர்கள் தாங்கள் மட்டுமே ஹீரோக்கள் என்பார்கள்..! இதில் இடம் பெற்றுள்ள ‘பாப்பாத்தி’ என்ற வசனம் முற்றிலும் தேவையில்லாதது..! பொருத்தமில்லாதது..!
கமலுக்கு மாறுவேடம் போட வேறு ஜாதியினரே கிடைக்கவில்லை போலும்.. பூஜாகுமார் பிராமணாள் என்பதால் தானும் பிராமணனாகி வேஷம் போட வேண்டியதாகிவிட்டது என்று கமல் சொல்லலாம்.. கதாசிரியர், இயக்குநர் என்ற முறையில் அவரின் உரிமைதான் இது..! அதில் ஆண்ட்ரியாவையும் பிராமணப் பெண்ணாகக் காண்பித்து ‘பாப்பாத்தி’ என்று அழைத்து சிக்கனை ருசித்துப் பார்க்கும்படி சொல்லி அந்தக் காட்சியின் மூலமாக மனைவி மீது தான் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டுகிறாராம்..!
இடையிடையே பிராமண துவேஷம், தனது நாத்திகக் கொள்கை.. வெளிப்படையான பேச்சாக பூஜாவிடம், “பிராவுக்குக் கீழே வைச்சுக்க..” என்று போகிறபோக்கில் ஏதோ தண்ணியெடுத்துட்டு வா என்பதுபோல சொல்கிறார் கமல்.. இதாவது பரவாயில்லை.. கமல்ஹாசனின் மாமாவாக ஆக்ட் கொடுத்திருக்கும் சேகர் கபூரும், பூஜாவிடம் இதையேதான் திருப்பிச் சொல்கிறார்.. இதில் என்ன சினிமாத்தனம் இருக்கிறது..?
தனது கடவுள் மறுப்புக் கொள்கையை கிடைக்கும் இடங்களிலெல்லாம் திணித்து வரும் கமல்ஹாசன் இதிலும் அப்படியே.. “எந்தக் கடவுள்..?” என்று சீனுக்கு தேவையில்லாத வசனத்தைக் கேட்டுவிட்டு அடுத்து தொடர்ந்து பூஜாவின் அலுவலகத்துக்குள் நுழைவது. பூஜாவை எஃப்.பி.ஐ. விசாரிக்கையில் தனது பிள்ளையாரை மனதில் வைத்து பேசுவது.. “கடலுக்குள் மூழ்கடிப்போம்..” என்று சொல்வது மூலம் பூஜாவின் கேரக்டரையும் ஒரு சின்னப்புள்ளத்தனமாகக் காட்டியிருக்கிறார்கள். கதை இந்த இடத்தில் மிக சீரியஸாக இருக்கிறது.. புறாக்கள் மூலமாக அமெரிக்காவுக்குள் சீசியத்தை கொண்டு வருகிறார்கள் என்கிற கதையும், அதன் சூத்திரதாரி இன்னமும் அமெரிக்காவுக்குள்தான் இருக்கிறான்.. அவனைப் பிடிக்க வேண்டும் என்கிற வேகமும் இருக்க வேண்டிய இடத்தில் இது போன்ற தேவையற்ற வசனங்கள் மூலமாக நம்மை வெளியில் தள்ளி, பின்பு மீண்டும் கதைக்குள் நம்மை இழுத்து, பின்பு மீண்டும் வெளியில் தள்ளுவதுமாக வசனங்கள் மூலமாகவே பாதியிடங்களில் நாம் அல்லல்படுகிறோம்..!
பூஜாகுமார் சிறப்பாகவே நடித்திருக்கிறார். சில டைட் குளோஸப் ஷாட்டுகளில் அழகு மிளிர்கிறது.. ஆண்ட்ரியாவைவிடவும்..! தனது முதல் படத்துக்கு பின்பு இப்படி தமிழ்ச் சினிமாவைவிட்டு வெளியேறியிருக்க வேண்டாம்.. இவருடனான காதல் காட்சிகள், கட்டில் காட்சிகள் கொண்ட பாடல்களை தூக்கிவிட்டுத்தான் சென்சார் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பாடல் காட்சி நிச்சயமாக இரண்டாம் பாகத்தில் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். டிரெயிலரில்கூட வருகிறது.. அவருடைய ரசிகர்களின் பெரும் ஏமாற்றம் இதுதான்.. ஒண்ணுக்கு, ரெண்டு ஹீரோயின்ஸ் இருந்தும் நமக்கு ஒண்ணுமில்லையே என்பதுதான்..!
மிகச் சிறப்பான விஷயம் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும்தான்..! புதிய ஆரோ 3டி-யில் படம் பார்க்கும்போது மிக அசத்தலாக இருக்கிறது என்கிறார்கள் பார்வையாளர்கள்..! இதுதான் இப்படம் பற்றி இப்போதைக்கு பரவியிருக்கும் ஹாட் டாபிக்.. ஆரோவில் படம் பார்க்காதவர்கள் மீண்டும் ஒரு முறை அந்தத் தியேட்டருக்கு சென்று பாருங்கள்.. நிச்சயம் படம் பிடிக்கும் என்கிறார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு கதையையும் தாண்டி ஒரு விட்டலாச்சார்யாவின் மந்திர வேலையை இந்தத் தொழில் நுட்பம் செய்திருக்கிறது..!
எதிர்ப்புகள்.. சலசலப்புகள்.. கமலின் கண் கலங்கல்.. வேறு நாடு போகிறேன் என்ற ஆவேசம்.. ஜெயலலிதாவின் குள்ளநரித்தனம்.. அரசியல் கட்சிகளின் ஆதரவு, எதிர்ப்புகள்.. ஊடகங்களின் அளவுக்கதிகமான பப்ளிசிட்டி - இத்தனையும் ஏற்படுத்திய தாக்கத்தினால் படத்தின் வசூல் இன்றைய நிலைமையில் 100 கோடியைத் தாண்டிவிட்டது என்று கமல்ஹாசனே சொல்லிவிட்டார். ஆகவே, அவர் இனிமேல் இந்த நாட்டைவிட்டு போக வேண்டிய அவசியமோ, தனது வீட்டை விற்க வேண்டிய தேவையோ இருக்காது என்று நினைக்கிறேன்..!
இந்த அளவுக்கு அவர் மீது நம்பிக்கையும், பாசமும், அன்பும் வைத்திருக்கும் ரசிகர்களிடத்தில் தான் 2-ம் பாகத்தையும் எடுத்து வைத்திருக்கிறேன் என்கிற உண்மையையும் அவர் சொல்லியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். முல்லா ஓமரை ஆப்கனில் போய் சந்தித்து அங்கேயே அவரை அழிப்பது என்ற அந்த 2-ம் பாகம் இன்னும் என்னென்ன எதிர்ப்புகளை சம்பாதிக்கப் போகிறதோ தெரியவில்லை.. இதையே ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அந்த 2-ம் பாகத்தை சென்சார் போர்டுகாரர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு பார்ப்பார்கள் என்றே கருதுகிறேன்..!
சென்சார் போர்டு என்றவுடன் இன்னொரு விஷயமும் நியாபகத்திற்கு வருகிறது..! இந்தப் படத்தில் தாலிபான்கள் பயிற்சியெடுக்கும் காட்சியில் ஜார்ஜ் புஷ்ஷின் முக வரைபடத்தை வைத்து அதனை துப்பாக்கியால் சல்லடையாகத் துளைத்தெடுக்கிறார்கள்.. இந்த அளவுக்கு தாலிபான்களுக்கு அவர் மீது கோபமிருக்க நியாயமுண்டு.. ஆப்கனின் தற்போதைய சீரழிவுக்கும் மிக முக்கிய காரணம் ஜார்ஜ் புஷ்தான் என்பதில் சந்தேகமேயில்லை..!
என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால்.. சென்சார் போர்டின் இந்த ஓர வஞ்சனையை நினைத்துத்தான்..! கருணாநிதி, ஜெயலலிதா, ராம்தாஸ், ஸ்டாலின், வைகோ, அழகிரி போன்று கட்சித் தலைவர்களின் பெயர்களைக்கூட ஒரு தமிழ்ச் சினிமாவின் கேரக்டர்களின் பெயர்களுக்கு சூட்டக் கூடி முடியாத அளவுக்கு தமிழகத்தில் ஜனநாயகம் வாழுகிறது.. இந்தச் சூழலில் அமெரிக்காவில் 2 முறை ஜனாதிபதியாக இருந்தவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் நம்பிக்கை கொண்ட காட்சிக்கு பெர்மிஷன் கொடுத்திருக்கிறார்களே என்றால் இவர்களது சென்சார்ஷிப்பை என்னவென்று சொல்ல..!? ஜார்ஜ் புஷ்ஷுக்கென்று ஆதரவாளர்கள் யாரும் இங்கே இல்லை என்பதாலா..?
எனக்கும் ஒரேயொரு கேள்விதான் :
இது போன்று தமிழக, இந்தியத் தலைவர்களின் போஸ்டர்களையும் தமிழ்ச் சினிமாவில் பயன்படுத்த சென்சார்போர்டு அனுமதி தருமா..? நாளைய பொழுதுகளில் வாச்சாத்தி கொடுமை, வீரப்பன் தேடுதல் வேட்டையில் போலீஸாரால் அப்பாவி மலைவாசிப் பெண்கள் கற்பழிக்கப்பட்டது, கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம்.. கோவை வேளாண்மை கல்லூரி மாணவிகள் வந்த பேருந்து எரிப்பு. ஜெயல்லிதாவின் ஊழல் வழக்குகள், கும்பகோணம் மகாமக பரிதாபம்.. போன்றவைகளை படமாக்கினால் ஜெயலலிதா படத்தையும்.. தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்த தடியடி, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரின் கதை, ஸ்பெக்ட்ரம் ஊழல், மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவம், அழகிரி-ஸ்டாலின் மோதலால் மதுரையில் நடைபெற்ற பஸ் எரிப்புச் சம்பவங்கள்.. போன்றவைகளை படமாக்கும்போது கருணாநிதி படத்தையும்.. தமிழ் ஈழப் விடுதலைப் போராட்டம் பற்றிய படங்களில் சோனியா, ராகுல், மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி படங்களையும்.. இன்னும் பல்வேறு விஷயங்களுக்காக பல தலைவர்களையும் இதுபோல் கேரக்டர்களாக்கி சல்லடையாக்கலாம்..! அத்தனை கொடுமைகள் இங்கே நடந்திருக்கிறது.. ஜார்ஜ் புஷ்ஷை துளைத்தெடுத்த துப்பாக்கி ரவைகள் இவர்களின் புகைப்படங்களையும் நிச்சயமாக துளைக்கலாம்..! அதற்கான முழுத் தகுதியும் அந்தக் கதைகளுக்கு உண்டு..! சென்சார் போர்டுகாரர்கள் அப்போது இதேபோல் அனுமதி தருவார்களா..? யாராச்சும் கேட்டுச் சொல்லுங்கப்பா..!
|
|
Tweet |
