Showing posts with label ஹன்ஸிகா மோத்வானி. Show all posts
Showing posts with label ஹன்ஸிகா மோத்வானி. Show all posts

மான் கராத்தே - சினிமா விமர்சனம்

05-04-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வரிசையாக 3 மெகா ஹிட்டுகளை கொடுத்த ஹீரோ.. சிறுவர் முதல் பெரியவர்வரையிலும் அனைவராலும் விரும்பப்படும் இப்போதையே ஒரே ஹீரோ. இளசுகளையும், பெரிசுகளையும் ஒரே சமயத்தில் அலைபாய வைத்திருக்கும் ஹீரோயின்.. கேட்டதும் கொடுக்கும் தயாரிப்பாளர்.. 3-வது வரிசை ஹீரோவாக இருந்தும், தியேட்டர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது இவருக்காகத்தான்..! பெரிய இயக்குநரின் சொந்தக் கதை.. அதே இயக்குநரிடம் பல படங்களுக்கு இணை இயக்குநராக இருந்து இயக்குநராக பிரமோஷன் பெற்றவர் இயக்கிய முதல் படம்.. பட ரிலீஸுக்கு முன்பேயே தயாரிப்பாளருக்கு 2 மடங்கு லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கும் படம். எல்லாம் இருந்தும்… எல்லாம் இருந்தும்..!?



பாக்ஸிங் என்றாலே என்னவென்று தெரியாத ஒரு இளைஞன், காதல் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக.. காதலியை அடைய வேண்டும் என்பதற்காக.. முறையான பயிற்சி பெற்ற சாம்பியனான பாக்ஸரை போட்டியில் ஜெயிக்க எண்ணுகிறார்.. அது நடந்ததா? இல்லையா? என்பதுதான் இதன் சுருக்கப்பட்ட கதை..!

நம்ப முடியாத கதையை நம்பும்விதமாகச் சொல்வதில்தான் இயக்குநரின் திறமை இருக்கிறது.. இதற்குச் சுவையான திரைக்கதையும் லாஜிக் மீறல் இல்லாத தன்மையும் வேண்டும்.. இது இரண்டுமே இல்லையெனில் படத்தை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது என்றே நமக்கு குழப்பந்தான் வரும்.. இதிலும் அந்தக் குழப்பம்தான் வந்திருக்கிறது..!

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாகவே எடுத்திருக்க வேண்டிய படத்தை இடைவேளைக்கு பின்பு அநியாயத்திற்கு சீரியஸாக்கியதால் படத்தின் நம்பகத்தன்மை கெட்டு.. இப்படியெல்லாம் நடக்குற காரியமா..? எடுக்கலாமா..? என்கிற கேள்விக்குறியை தானாகவே எழுப்பிவிட்டது இந்தப் படம்..!

குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் காலில் ஷூ அணிந்து, கையில் ஒரு கிளவுஸை மட்டும் எடுத்துக் கொண்டு உடனேயே போட்டிக்காக கியூவில் போய் நிற்க முடியாது.. இதற்கெல்லாம் முறையான சங்கங்கள் உண்டு. அதில் சேர்ந்து குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற்று.. பயிற்சியாளரின் ஒப்புதல் பெற்ற பின்பு.. திறமைச் சான்றுக்கான முதற்கட்ட போட்டியில் வெற்றி பெற்ற பின்புதான் குத்துச்சண்டை போட்டியாளர் என்ற பெயரே,  அடையாள அட்டையுடன் கிடைக்கும்.

இந்தப் பெயர் கிடைத்த பின்பும் நகர அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் என்று போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தால் மட்டுமே தேசிய அளவுக்கே செல்ல முடியும்.. குரும்பப்பட்டியில் நடக்கும் பொங்கல் விழாவில் ஓட்டப் பந்தயம் நடத்தப்படுவது போல, எங்கேயும் குத்துச்சண்டை போட்டியை நடத்திவிட முடியாது.. 

இதற்கான ஆட்களும் குறைவு.. சங்க அமைப்புகளும் குறைவு.. நடுவர்களும் குறைவு.. விதிமுறைகளை மிகச் சரியாகப் பயன்படுத்தவில்லையெனில் உயிருக்கே அபாயம் என்பதால் இந்த விளையாட்டை வெளியிடங்களில் நடத்துவதற்கு ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ்களை வைத்திருக்கிறது அகில இந்திய குத்துச்சண்டை சம்மேளனம்..!

எல்லாவற்றையும் பரணில் தூக்கிப் போட்டுவிட்டு லாஜிக்கை காலில் மிதித்தபடியே சிவகார்த்திகேயன் என்னும் ஹீரோவுக்காக ஒரே நாளில் பயிற்சி எடுத்து.. வீர வசனங்களை பேசியவுடன்.. கேட்டவுடன்.. ரத்த நாளங்கள் துடிக்க மேடையேறி தேசிய சேம்பியனை அடித்து வீழ்த்துவது என்பதெல்லாம் காமெடியாக செய்திருந்தால் ஓகே.. ஆனால் இங்கே சீரியஸாக எடுத்துத் தொலைத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்படியெல்லாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது..!

சிவகார்த்திகேயன் குத்துச் சண்டை போட்டியில் பெயர் பதிவு செய்ய வந்தவுடன்  எதுவுமே கேட்காமல் பட்டென ஒரு பக்க அப்ளிகேஷனை நீட்டி கையெழுத்து போடச் சொல்கிறார்கள். போடுகிறார். “வந்து கலந்துக்குங்க...” என்கிறார்கள். சரி என்று திரும்பிச் செல்கிறார்.. ஏதோ கட்சியில் தொண்டராக சேர்வதற்கு வந்து செல்வதைப் போல..! ம்.. படத்தின் மீதான ஈர்ப்பு கொஞ்சம், கொஞ்சமாக குறையத் தொடங்கியது இரண்டாம் பகுதியில்தான்..!

படத்தின் முன்னுரையான அந்த சித்தர்.. அவரிடம் வரம் கேட்பது.. வேண்டுமென்றே அடுத்த வருட ஆயுத பூஜைக்கு அடுத்த நாளுக்கான தினத்தந்தி பேப்பரை கேட்பது. அவர் அதனை கிரியேட் செய்து தருவது.. அதில் அவர்கள் சம்பந்தப்பட்ட அந்த பீட்டர் பாக்ஸர் விஷயம் இருப்பது.. இதுவொரு அருமையான கான்செப்ட்.. இதனை வைத்து முதற்பாதியை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நகைச்சுவை குறைவு..!

ஐடி மக்கள்ஸ் சிவகார்த்திகேயனை சட்டென அடையாளம் காண்பது.. அவர்தான் தாம் தேடி வந்த பாக்ஸர் பீட்டர் என கண்டறிவது.. அவரை வைத்து தங்களது 2 கோடி கனவை அடைய வேலைகளைச் செய்வது.. சிவகார்த்திகேயன் செய்யும் டார்ச்சர்களை தாங்கிக் கொள்வது.. இடையில் சிவகார்த்திகேயன் பார்த்தவுடன் காதல் என்ற தோரணையில் ஹன்ஸிகா என்னும் லூஸு பெண்ணை காதலிக்கத் தொடங்குவது.. ஹன்ஸிகாவைவிட பெரிய லூஸான அவரது அப்பா... 10 திருக்குறளை மனப்பாடமா ஒப்பித்தால்தான் பொண்ணைத் தருவாராம்.. எங்கே இருக்கிறார்கள் இப்படியொரு அப்பனும் மகளும்..? காமெடிக்குத்தானே என்றால்.. சரி.. சிரித்துக் கொண்டும், சகித்தும் கொண்டும் கடந்துவிட்டோம்..! 

இரண்டாம் பாதியில் இறுதிப் போட்டிக்கு முன்பு நடக்கும் பிரிமியர் போட்டிகளில் குத்துச்சண்டை என்கிற ஒரு விஷயமே இல்லாமல் சிவகார்த்திகேயன் ஜெயிக்கும் காட்சிகளை பார்த்தபோதும்.. சரி படம் முழுவதும் இப்படித்தான் என்று நினைத்தோம்.. கொஞ்ச நேரத்தில் இறுதிப் போட்டிக்கு முன்பாக வம்சி கிருஷ்ணாவின் வீட்டிற்குச் சென்று சிவகார்த்திகேயன் தன்னிடம் தோற்கும்படி கெஞ்ச ஆரம்பித்தவுடன் இதுவரையில் பார்த்த காட்சிகளையெல்லாம் சீரியஸாக நினைக்கும்படியாகிவிட்டது..!

காதலிக்காகத்தான் பாக்ஸிங் என்பது கதையின் கருவல்ல.. இந்த ஐடி மக்களுக்காகத்தான் பாக்ஸிங்.. காதலி அதை பார்க்க விரும்புகிறார்.. அவ்வளவே.. “ஹன்ஸிகாவிடம் எனக்கு பாக்ஸிங் தெரியாது.. ஏதோ இவர்களுக்காக அப்படி நடிக்கிறேன்...” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே..? கதை முடிந்து போயிருக்கும்.. காதலிக்காக உருகுவதாகச் சொல்லி அழுது, புரண்டு கடையியில்  ஹீரோவுக்காக குத்துச்சண்டையை கொலையே செய்துவிட்டார் இயக்குநர்.

இந்தப் படத்தைப் பார்க்கும் இன்றைய இளைய தலைமுறையினர் குத்துச்சண்டை போட்டியினைப் பற்றி என்ன நினைப்பார்கள்..? அது பற்றிய ஒரு எதிர்மறையான எண்ணத்தை அவர்களிடத்தில் தோற்றுவித்துவிடாதா..? அதிலும் குத்துச்சண்டையில் ஒரு லெவலுக்கு மேல் உடம்பில் குத்தக் கூடாது. முகம், நெஞ்சகம் மட்டுமே தாக்குதலுக்கு உட்பட்ட பகுதிகள். இதையெல்லாம் விட்டுவிட்டு சினிமா சண்டை போல குத்தித் தீர்த்துவிட்டார்கள். சூரி நடுவராம்.. இப்படி ஒரு நடுவர் ஓட்டப் பந்தயப் போட்டியில்கூட இருக்க முடியாது.. ஒரு தேசிய அளவு போட்டியில் இப்படியா ஒரு மொக்கையான நடுவரை வைத்து, விதிமுறைகளை பின்பற்றாத அளவுக்கு நடத்துவார்கள்..? 

நடிப்பு என்று பார்த்தால் சிவகார்த்திகேயன் இதற்கு முந்தைய படங்களைவிடவும் இதில் கொஞ்சம் கூடுதல் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக வம்சி கிருஷ்ணாவின் வீட்டில் வந்து கெஞ்சும்போதும், அழுகும்போதும்.. பாவம் என்கிற உணர்வை ஆடியன்ஸிடம் இருந்து சம்பாதித்துவிட்டார்..  ஆனால் அவருடைய படங்களில் எப்போதும் இருக்கும் நகைச்சுவைத் துணுக்குகள் இப்படத்தில் மிக மிக குறைவாகவே இருக்கிறது.. முற்பாதியில் அரைமணி நேரம் கழித்துத்தான் சிரிப்பே வந்தது. இவருடைய டயலாக் டெலிவரியில் எதிரணி நடிகர்களும் குப்புற விழுந்துவிடுவார்கள்.. உதாரணம் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் கிளைமாக்ஸில் சத்யராஜிடம் இவர் பேசும் பேச்சு.. இதில் என்ன ஆச்சுன்னு தெரியலை.. அது போன்ற காட்சிகளும், வசனங்களும் இல்லாமல்.. எல்லாமே ரொம்ப ரொம்பச் சாதாரணமாகவே உள்ளன.

ஹன்ஸிகா.. லூஸு பெண் கேரக்டருக்கு மிகப் பொருத்தம்.. கச்சிதம்.. சிவகார்த்திகேயன் என்ன படித்திருக்கிறார் என்பதுகூட தெரியாமல் டூவீலருக்கு பஞ்சர் பார்த்துக் கொடுத்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். அப்பாவின் இண்டர்வியூவில் ஜெயிக்க வைக்கிறார். பாக்ஸிங் வீரர் என்று தெரிந்து   மிகவும் உறுதியாக காதலிக்கிறார். இறுதியில் மனம் உருக வைக்கிறார். உண்மை தெரிந்தவுடன் கண்ணீரும், கம்பலையுமாய் “பீட்டர் நீ பாக்ஸர் இல்லைன்னாலும் ஐ வல் யூ..” என்கிறார். அதற்குள்ளாக ஹீரோ இமேஜ் சிவகார்த்திகேயனுக்குள் விஸ்வரூபமெடுத்துவிட்டதால் அதற்கு பலனில்லாமல் போகிறது..  பாடல் காட்சிகளில் அழகு மிளிர ஒய்யாரமாக நடந்து வருகிறார். ‘டார்லிங் டம்பக்கு’ பாடலில் தூக்கிக் கட்டிய சட்டையுடன் இடுப்பையும், தொப்புளையும், மத்தியப் பிரதேசத்தையும் காட்டியபடியே இவர் ஆடியிருக்கும் ஆட்டம்.. இன்றைய இளசுகளை ரகசியமாக மனம் குளிர வைத்திருக்கும்..!

வம்சி கிருஷ்ணா சில நிமிடங்களே வந்தாலும் அசத்தல் நடிப்பு.. அழுத்தமான நடிப்பு.. தான் வில்லன் என்பதை உணர்ந்தாலும், மனைவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு பேசும் பேச்சும்.. வீட்டிற்கு வெளியே சிவகார்த்திகேயனிடம் குத்துச்சண்டை பற்றி எடுத்துச் சொல்லி கோபப்படும் காட்சிகளிலும் மனிதர் நிஜமான வீரரை போலவே தெரிகிறார்..  வாழ்க..!

சூரி பெஸ்ட் அண்ட் பெஸ்ட்.. கேணத்தனமான நடுவர் பொறுப்பு என்பதாலும், காமெடி என்பதாலும் இவர் செய்யும் சேட்டைகளையும், அந்த காமெடி போட்டிகளையும் ரசிக்க முடிந்தது. காமெடியாக போட்டியை நடத்திவிட்டு தன்னைத் தாக்கியவருக்கு 6 மாதம் போட்டியில் பங்கேற்க தடை என்று ஸ்டிரெச்சரில் படுத்தபடியே சொல்லிவிட்டுப் போகிறார் சூரி.. இதை எங்கே போய்ச் சொல்வது..? 

படத்தில் குறிப்பிடத்தக்க 2 விஷயங்கள் ஒளிப்பதிவும், இசையும்.. முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் மைனா சுகுமாரின் ஒளிப்பதிவு பம்பரமாக சுற்றியிருக்கிறது.. அந்தக் கொல்லிமலையை பக்குவமாக படம் பிடித்துக் காண்பித்ததில் துவங்கி.. இறுதிப் போட்டியின்போது ஏரியல் வியூவில் மொத்தக் கூட்டத்தையும் காண்பித்து டென்ஷனை ஏற்றும்வரையிலும் ஒளிப்பதிவாளர் படம் நெடுகிலும் கூடவே வந்திருக்கிறார். வெல்டன் ஸார்..

அனிருத்தின் இசையில் இருந்த 3 பாடல்களுமே காதைக் கிழித்தன. அதிலும் ‘டார்லிங் டம்பக்கு’ பாடலின் வரிகளை யாராவது முழுமையாகச் சொல்லிவிட்டால் அவருக்கு இதே படத்திற்கு இன்னொரு முறை டிக்கெட் எடுத்துக் கொடுக்கலாம். அந்த அளவுக்கு டமாரத்தை அடித்துத் தூள் கிளப்பியிருக்கிறார். ஆனால் அதற்காக இசையைக் குறிப்பிடவில்லை. பல இடங்களில்.. சிவகார்த்திகேயன் வரும் இடங்களிலெல்லாம் ஒரு மிருதங்கத்தையும், தபேலாவையும் வைத்து நட்டுவாங்கம் வாசித்திருக்கிறார் பாருங்க.. மிக மிக வித்தியாசமான அனுபவம் இது..! அவ்வளவுதான் இந்த அண்ணனின் இசையைப் பற்றிச் சொல்ல முடியும்.

கதை ஏ.ஆர்.முருகதாஸ். மிகப் பெரிய இயக்குநர். இவர் செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்று ஆரம்பித்துவிட்டார்கள். இவரிடம் இணை இயக்குநராக இருந்த திருக்குமரன்தான் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். முன்பே சொன்னதுபோல முழுக்க முழுக்க நகைச்சுவை படமாகவே இருந்திருந்தால் படம் முற்றிலும் பொழுது போக்குச் சித்திரம் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போயிருப்போம். கடைசிக்கு முந்தின ரீலில் இருந்து இது சீரியஸ் படமாக உருவெடுத்துவிட்டதால் ரசிக்க முடியாமல் போனதற்கு இயக்குநர்தான் பொறுப்பேற்க வேண்டும்..!

எனக்குள் நெருடலான 3 விஷயங்கள்.. 

1 - லிப்டில் யாரோ ஒருவர் விட்டுச் சென்ற ‘வாயு’வை சுவாசிக்க முடியாமல் ஹன்ஸிகாவும், சிவகார்த்திகேயனும் தவிப்பது போன்ற காட்சிகளெல்லாம் குழந்தைகள் வரத் துடிக்கும் இது போன்ற டாப் ஸ்டார் நடிக்கும் காமெடி படங்களுக்குத் தேவையா..? வேறு காமெடியே கிடைக்கவில்லையா..?

2 - என்னதான் காதலியாக இருந்தாலும், குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்கும் காதலனுக்கு பரிசளிக்க எத்தனையோ இருந்தும், ஜட்டிக்குள் அணியும் கவசத்தைத்தான் வாங்கித் தர வேண்டுமா..? என்ன கொடுமை இது..?

3. சில நாட்களுக்கு முன்பாக நடந்த இந்தப் படத்தின் பிரஸ் மீட்டில் டாஸ்மாக் சரக்கு.. தண்ணியடிப்பது பற்றியெல்லாம் பேசி.. “இனி இது போன்ற காட்சிகளெல்லாம் என் படங்களில் வராமல் பார்த்துக் கொள்வேன்..” என்றார். “நான் நிஜத்தில் தண்ணியடிக்க மாட்டேன். தம் அடிக்க மாட்டேன்..” என்றார். இந்தப் படத்தில் இப்படியொரு காட்சி இருப்பதை அன்றைக்கும் அவர் சொல்லவில்லை.. நைஸாக தப்பித்திருப்பது இப்போது புரிகிறது.  இந்த டாஸ்மாக் சரக்குக்காகவே ஒரு பாடலும் படத்தில் இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் இதை இப்படியே வளர்த்தால் எப்படி..?

முந்தைய சிவகார்த்திகேயன் படங்களுக்கும் இதற்கும் 18 வித்தியாசங்களுக்கும் மேலாகவே குறிப்பிட முடியும்.. படம் பார்த்த பின்பு என்ன சொல்வது என்பதே தெரியாமல் எழுந்து வருவது மிகக் கொடுமையான விஷயம்.. அதிகப்பட்சம் நகைச்சுவையை அதிகமாக கொடுத்திருக்க வேண்டும். திரைக்கதையை இன்னமும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம்.. இடைவேளைக்கு பின்பு கதையின் போக்கு மாறி மாறி போக நமக்குத்தான் காண்டாகிறது. இது இப்போது சிவகார்த்திகேயனுக்கே புரிந்திருக்கும்.. அடுத்தடுத்த படங்களிலாவது இதனை மாற்றிக் கொண்டு வந்தால் அவருக்கும் நல்லது. அவரது தயாரிப்பாளர்களுக்கும் நல்லது..!  

ஒரு முறை பார்க்கலாம்..!  

பிரியாணி - சினிமா விமர்சனம்

20-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கு முன்பாகவே இதனைக் கொண்டு வந்திருக்கலாம்..! கார்த்தியின் மார்க்கெட்டுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும்..! இப்போது திரும்பவும் ஒரு வெற்றியைக் கொடுத்திருக்கிறார் என்கிற சின்னப் பெயர்தான் கிடைத்திருக்கிறது.. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து சொந்தமாகவே ரிலீஸ் செய்திருக்கும் ஞானவேல்ராஜாவின் திறமைக்கு ஒரு பாராட்டு..!

வெங்கட்பிரபுவின் மங்காத்தா எப்படி சூப்பர் டூப்பர் ஹிட்டோ அதில் 60 சதவிகிதத்தை இந்தப் படம் பூர்த்தி செய்திருக்கிறது..! இப்போதைய ரசிகர்களுக்குப் பிடித்தளவில் காக்டெயிலுடன் கொஞ்சம் லெமன் சோடாவையும் கலந்து கொடுத்து பித்தத்தையும் சமாளித்திருக்கிறார் இயக்குநர்.


அலுவலக வேலையாக ஆம்பூர் செல்லும் கார்த்தியும் பிரேம்ஜியும் சரக்கடித்தவுடன் பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வத்துடன் கதை தேடி அலைகிறார்கள்.. கிடைத்த கடையில் கூடவே ஒரு பெண்ணும் கிடைக்கிறார்.. அந்த பெண்ணுடன் கெஸ்ட் ஹவுஸுக்கு உடன் செல்கிறார்கள். அது தங்களைச் சுற்றிப் பின்னப்பட்ட ஒரு சதி என்பதை அறியாமலேயே மேலும், மேலும் போதையில் இறங்க.. விழித்துப் பார்க்கும்போது ஒரு கொலை குற்றவாளியாக இருக்கிறார்கள் இருவரும்.. தாங்கள் கொலை செய்திருக்க மாட்டோம் என்று அவர்கள் நம்பினாலும் சந்தர்ப்பமும், சூழ்நிலையும், சாட்சிகளும் அவர்களுக்கெதிராக இருக்க.. போலீஸாரிடமிருந்து தப்பித்து கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள்..! இதுதான் கதை..!

திரைக்கதையில்தான் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் வெங்கட்பிரபு.. முதல் காட்சியில் இருந்தே பிரேம்ஜியை வாரி விடுவதிலும், ஹன்ஸிகாவின் காதலுடனேயே படத்தைத் துவக்கியிருப்பதும்.. காதலின் மோதல்,, ஊடல்.. பின்பு கூடல்.. என்று பாடல் காட்சிகளுக்கும், திரைக்கதைகளுக்கும் வேலையே வைக்காமல் அப்படியே நூல் பிடித்ததுபோல சென்று இடைவேளையில் வரும் அந்த டிவிஸ்ட்டுடன் நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டார்..!

சின்ன வயதில் இருந்தே பிரேம்ஜிக்கு செட்டாகும் பெண்களையெல்லாம் தன்வசப்படுத்தும் கார்த்தியின் ஜாலித்தனம் ஹன்ஸிகாவரையிலும் வந்து நிற்க.. மேலும் மேலும் பிரேம்ஜியை நோகடிக்கும் காட்சிகளெல்லாம் சிரிப்பாய் சிரிக்கிறது..! அதிலும் ஆம்பூரில் மாயாவை காரில் பிக்கப் செய்து போகும்போது பேசும் வசனங்கள் ஷார்ப்னெஸ்..! நீங்க காரை பத்திதான பேசுறீங்க என்ற பிரேம்ஜியின் சந்தேகமும்.. அதே வசனம் அப்படியே உல்டாவாக மாறி கார்த்தி கேட்பதுபோல வருவதும் வெங்கட்பிரபுவின் ஸ்பெஷலாட்டி..!

இடைவேளைக்குப் பின் செத்துப் போனவரை உயிருடன் இருப்பதாக காட்டி.. இவர்களை யாரோ கடத்திச் சென்றுள்ளதாக பிளானை மாற்றுவதும் சூப்பர் திரைக்கதை.. வெறும் காட்சிகளுக்காக மட்டுமில்லாமல் திரைக்கதைக்காகவே கைதட்டல் இந்த இடத்தில் கிடைத்தது..! உமா ரியாஸை ஆட்டுவிப்பது ராம்கிதான் என்பதுபோலவே கதையைக் கொண்டு சென்று, கடைசியில் அதுவும் இல்லை என்று இன்னொரு கிளைமாக்ஸை திணித்ததில்கூட விறுவிறு சுவாரஸ்யம்..!

அக்காவுக்குக் கல்யாணம்.. அது நிற்கப் போகிறது.. மாமா கத்திக்குத்தில் ஆஸ்பத்திரியில் வாசம்.. குடும்பத்தினர் மீது தாக்குதல்.. என்று சென்டிமெண்ட்டைகூட ஒரு அளவாக வைத்துக் கொண்டு ஆக்சன் படலத்தை பிற்பாதியில் நச் என்று கொடுத்திருக்கிறார் இயக்குநர்.. மாயாவை டிரெயினில் தள்ளிவிடும் காட்சி எதிர்பாராதது..! உமா ரியாஸின் என்ட்ரியும், அவரது காட்சிகளுமே படத்தின் டெம்போவை இன்னும் கொஞ்சம் உயர்த்தியிருக்கிறது..! 

லாஜிக் மிஸ்டேக்கெல்லாம் பார்க்கவே கூடாது என்றாலும் சம்பத்தின் வருகைதான் கொஞ்சம் மொக்கைத்தனமாக இருந்துவிட்டது.. இவ்ளோ பெரிய கேஸ்ல சர்வ சாதாரணமா “ஒரு கேஸ் விஷயமா விசாரிக்க வந்தேன்..” என்று சொல்லி சம்பத் என்ட்ரி ஆவது கேலிக்கூத்தாகிவிட்டது..! சி.பி.ஐ. சோதனை மற்றும் விசாரணையையும் சேர்த்திருந்தால் படம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாகியிருக்கும்..! சம்பத்துக்கும் கூடுதல் வேலை கிடைத்திருக்கும்..! பிரேமின் ஊடுறுவலை சம்பத் கண்டுபிடிப்பதெல்லாம் பட், பட்டென்று கதையை முடிக்கும்விதமாகவே முடிந்துவிட்டது..!

கார்த்திக்கு ஒரே மாதிரியான கேரக்டரில் இது 5-வது படமென்று நினைக்கிறேன்..! இப்படியே போனால் மோகனுக்கு ‘மைக்’ போன்று கார்த்திக்கு ‘பேக்கு’ என்றாகிவிடும்.. அடுத்தப் படத்திலாவது கெட்டப்பை மாற்றியாவது அல்லது பாலா போன்ற இயக்குநர்களிடம் சிக்கிவிட்டு திரும்ப வருவது அவரது நடிப்பு கேரியருக்கு நல்லது..! இந்தக் கேரக்டருக்கு கார்த்தி கச்சிதம் என்பதும் உண்மைதான்..! வழியல்.. அவியல்.. பொங்குதல்.. எல்லாமே அவங்கப்பா மாதிரியேதான் இருக்கு..! 

ஹின்ஸிகாவுக்கு அதிகம் வேலையில்லை என்றாலும் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்.. டப்பிங் வாய்ஸ் கொடுத்த அம்மணிக்கு ஒரு ‘ஓ’ போடணும்..! பாடல் காட்சிகளில் கொஞ்சம் ரம்மியமாகத் தெரிகிறார்.. இவர் போன்ற நடிகைகளை ஹீரோக்களின் பெருமைக்காகவே நடிக்க வைக்கிறார்கள். மற்றபடி ஹன்ஸிகாவால் எந்தப் படமும் ஓடவில்லை என்பதும் உண்மை..! சம்பளம் பல லட்சங்களில் ஏன் அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை..!

பிரேம்ஜிதான் படத்தின் டாக் ஆஃப் தி மேன்..! கார்த்திக்கு அத்தனை ஈடு கொடுத்திருக்கிறார்.. ஆம்பூருக்கு வரும் 3 பொண்ணுகளை பார்த்து வழியத் துவங்கி.. அந்த மூன்று பேரையுமே கார்த்தி உஷார் செய்துவிட்டார் என்பதையறிந்து கொதிக்கும் காட்சியில் மனுஷன் பாவம்.. உண்மையான கேரக்டர் போலும்..! அனுபவித்து நடித்திருக்கிறார்..! சரவெடி டயலாக்குகளை சர்வசாதரணமாக பேசிவிட்டு கைதட்டலை வாங்கிச் செல்கிறார்..! இப்படியே கொஞ்சம் மோல்டு செய்தால் வேறு பாணியிலான நகைச்சுவைக்கும் இவர் தேறலாம்..!

யுவனுக்கு இது 100-வது படமாம்.. சொல்லிக்கலாம்.. பட்.. வேறு எதுவும் சொல்வதற்கில்லை..! பின்னணி இசையில் மட்டுமே ரீங்காரம்.. இப்போதெல்லாம் அதிக டூயட் காட்சிகளை மாண்டேஜ் ஷாட்ஸ்களாகவே எடுப்பதன் அர்த்தம் இசை போணியாகவில்லை என்பதுதான்..! இக்கால ரசிகர்கள் புரிந்து கொண்டால் நல்லது..!

அவ்வளவு பெரிய கோடீஸ்வரர் ஒரே நாளில் ஒரேயொரு கேள்வி கேட்டதற்காகவே கார்த்தியை தன்னுடைய மருமகனாக்க விரும்புவது.. சம்பத்தின் சி.பி.ஐ. என்ட்ரி.. அத்தனை போலீஸ்காரர்களையும் அடித்து வீழ்த்திவிட்டு கார்த்தி தப்பிப்பது.. திரும்பவும் அதே கெஸ்ட் ஹவுஸுக்கு வந்திறங்கும் கார்த்தி, எந்தப் பிரச்சினையுமில்லாமல் அறைக்குள் செல்வது.. காரில் தப்பித்துச் செல்லும் சில காட்சிகள்.. செல்போனை டிரேஸ் செய்தாலே பிடித்திருக்கும் சூழல் உண்டு என்றாலும், அதனைத் தவிர்த்திருப்பது.. இவ்வளவு பெரிய கேஸாகியும் கார்த்தியின் நண்பர்களைவிட்டுவைத்து வேடிக்கை பார்ப்பது.. ஜெயபிரகாஷுக்கு கீழே வேலை பார்க்கும் பிரேம், சி.பி.ஐ.க்கு உளவு வேலை செய்வது.. இவரே மெயின் வில்லனாக பின்னால் மாறுவது.. என்று பல பல பிரச்சினைகளும், கேள்விகளும் படம் முடிந்த பின்பு கிளம்பினாலும் படம் பார்க்கும்போது ஒரு இனம் புரியாத என்ட்டெர்டெயிண்ட்மெண்ட் சூழலுக்குள் சிக்கியிருப்பதாகவே தோன்றியதால் படத்தின் ஓட்டம் மிகவும் ரசிக்க வைத்தது..!

டாஸ்மாக் கடை.. தண்ணி, சரக்கு.. பெண்களை லெக் பீஸ் என்றே அழைப்பது.. காமம் வழிந்தோடிய பாடல் காட்சிகள்.. இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் என்று பலவும்  இருப்பதால் உண்மையில் இந்தப் படத்திற்கு A சர்டிபிகேட்டுதான் கிடைச்சிருக்கணும்.. இத்தனை போராடியும், எதிர்த்தும் U/A-வாவது கொடுத்தார்களே என்கிறபோது சென்சார் போர்டையும் பாராட்டியே தீர வேண்டும்..! 

ம்.. அவசியம் பார்க்க வேண்டிய படமில்லை. பட்.. ச்சும்மா ஒரு ஜாலிக்கு வேணும்ன்னா பார்த்துக்கலாம்..!