06-05-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு காதல் கதை.. 4 டூயட்டுகள்.. ஒரு குத்துப் பாட்டு.. ஒரு சோகப் பாட்டு.. 3 பைட்டுகள்.. மொக்கை நடிகர்களை வைத்து மொக்கை நகைச்சுவை பிளாக்.. இப்படி ஒரு டெம்ப்ளேட் கதையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாவில் வெற்றி பெறுவது என்னவோ வித்தியாசமான கதைக்களன் கொண்ட சிறந்த இயக்கத்துடன் கூடிய படங்கள்தான்.. மற்றவைகளெல்லாம் தினசரிகளில் மட்டுமே வெற்றி என்று அவர்களே எழுதிய வாசகங்களுடன் விளம்பரமாக வந்து கொண்டிருக்கிறது..!
சமீப காலமாக புதிய இளம் இயக்குநர்களின் வருகை தமிழ்ச் சினிமாவுக்கு புத்துயிர் தந்து கொண்டேயிருக்கிறது.. மிகக் குறுகியக் காலக்கட்டத்தில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் வித்தியாசமாக, இன்றைய இளைஞர்களைக் கவருகின்றவகையில் இவர்கள் தரும் படைப்புகள் தியேட்டர்களில் கொண்டாடப்படுகின்றன..!
இனி தமிழ்ச் சினிமா இயக்குநர்களின் பாடு பெரிதும் திண்டாட்டம்தான்.. எந்த மாதிரி படமெடுத்தால் ஓடும் என்பதற்கு ஒரேயொரு வழிதான் உள்ளது. அது முற்றிலும் புதுமையாக இருந்தாக வேண்டும். பார்வையாளனுக்கு அவன் அதுவரையில் பார்த்திராத வகையில் காட்சிகளைத் தர வேண்டும்.. இது இருந்தால்தான் வசூல் கல்லா கட்டும். இல்லையெனில் எத்தனை பெரிய இயக்குநர் என்றாலும் பெப்பேதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது இந்தப் படம்..!
சற்றே மனம் பிறழ்ந்த நிலையில் இருக்கும் விஜய் சேதுபதி, ஒரு சின்ன டைப் கிரிமினல்.. ஆள் கடத்தல் தொழில் செய்யும் இவருடன் சந்தர்ப்பவசத்துடன் கூட்டணி சேரும் 3 இளைஞர்களும் ஒரு அமைச்சரின் மகனைக் கடத்துகிறார்கள். அமைச்சரின் மகனோ இவர்களுடனேயே கூட்டணி சேர்ந்து பணத்தை பங்கீட்டுக் கொள்ள விரும்ப.. அதற்கும் தலையசைக்கிறார்கள். வேன் விபத்துக்குள்ளானதில் அந்தத் திட்டம் பணால் ஆனாலும், நேர்மையான அமைச்சரின் தீவிர முனைப்பினால் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்ஸ்பெக்டர் பிரம்மா சென்னைக்கு மாற்றலாகி வந்து இவர்களைத் தேட.. இவர்கள் தப்பித்து ஓட.. கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் கதை..!
வழக்கம்போல யதார்த்தத்தைக் காட்டுகிறேன் என்று படம் நெடுகிலும் தண்ணியடிக்கும் காட்சிகளும், சிகரெட் பிடிக்கும் காட்சிகளும் வலம் வருகின்றன.. கிரிமினல்களில் சின்ன, பெரிய என்றெல்லாம் வித்தியாசமில்லை.. அனைவருமே ஒன்றுதான் என்பதுபோல் காட்டியிருக்கிறார்கள்..!
படத்தில் பெரிய ரசிப்பே படத்தில் நடித்தவர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான்..! நயன்தாராவுக்கு கோவில் கட்டிவிட்டு சென்னைக்கு ஓடி வரும் இளைஞன்.. குளித்து முடித்து பவ்யமாக காலையிலேயே கட்டிங் போட அமரும் இன்னொரு இளைஞன்.. ஐடியில் பணியாற்றியும் வேலை கிடைக்காத தருணத்தில் இவர்களோடு கூட்டணி வைக்கும் ஒரு இளைஞன்.. இவர்களையும் தாண்டி மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி.!
இவரது காதலி உயிருடன் இருப்பதுபோலவும், இவரது கண்ணுக்கு மட்டுமே தெரிவதும், பேசுவதும் GHOST படத்தின் கதை, திரைக்கதைதான்..! ஆனால் சுவாரசியம் பேசுகின்ற வசனத்தில் இருக்கிறது.. சொதப்பிட்டியே மாமா என்ற வசனத்தை ஹீரோயின் உச்சரிக்கும் பாணியே பிடித்துப் போய்விடுகிறது.. நல்லவேளை இந்தக் கதையை அடுத்த ரீலிலேயே உடைத்து நம் மண்டை உடைந்துவிடாமல் காப்பாற்றிய இயக்குநருக்கு நன்றி..!
அசட்டுத்தனமான காமிக்ஸ் காட்சிகள் படம் முழுவதும் நிரவியிருக்கிறது..! புட்பால் பிளேயாரான ஒரு பெண்ணை கடத்த முயற்சித்து.. அது முடியாமல் போவது.. மூன்று இளைஞர்களும் முதன்முதலில் விஜய்யுடன் இணைவது.. அமைச்சரின் மகனைக் கடத்தச் சொல்லி ஆர்டர் கொடுக்கும் ஆளைக் கண்ணைக் கட்டி அழைத்து வருவது.. அந்தாள் வரும் வழியை தெரிந்து கொண்டு பேச்சுவார்த்தையின் முடிவில் அதனைச் சொல்வது.. கடத்தலை செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை விஜய் சேதுபதிக்கு உண்டாக்குவது.. வேறொரு டீம் கடத்திய பின்பு போலீஸ் டிரெஸ்ஸில் மந்திரி மகனை இவர்கள் கடத்துவது.. இந்தக் காட்சிகளிலெல்லாம் வசனமே தேவையில்லாத அளவுக்கு காமெடியாகவே படமாக்கியிருக்கிறார்கள்..!
இதற்கு முன்னதாகவே விஜய் சேதுபதி கடத்தல் தொழிலுக்கு தான் கடைப்பிடிக்கும் கொள்கைகளை விளக்கும் காட்சியும் சூப்பர். பெரிய ஆளுகளகிட்ட கை வைக்கக் கூடாது என்ற அந்த ஒரு கொள்கையே அவருடைய ஸ்மால் டைப் கிரிமினல் மைண்ட்டை காட்டுகிறது. பணத்தைக் கைப்பற்ற இவர்கள் பயன்படுத்தும் ரோபா ஹெலிகாப்டர் காட்சி வித்தியாசமானது.. அசட்டுத்தனம் நிறைய இருந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்..!
பிரம்மா இவர்களை ஜீப்பில் துரத்தி ஒரு முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டவுடன் இவர்களைத் தப்பிக்க வைக்க துப்பாக்கி பயன்படுத்தும் ஒரு காட்சி மட்டுமே இவர்களின் புரொபஷனல் ஆக்ட்டிங்கை தெரிய வைத்திருக்கிறார் இயக்குநர்..! இறுதிக் காட்சியிலும் தப்பித்துப் போக அத்தனை வாய்ப்புகள் இருந்தும் அமைதியாக இவர்கள் எதிர்கொள்வதுகூட படம் பார்க்கும்போது நமக்குத் தோன்றாமல் இருக்கிறது..!
மந்திரி மகனின் ஐடியாவும், அப்பா எஸ்.எம்.பாஸ்கரின் கோபமும், ராதாரவியின் விறைப்பான பேச்சும் அந்த பிளாக்கிற்கே ஒரு சுவாரசியத்தைக் கூட்டுகிறது..! உட்கார்ந்த இடத்தில் இருந்தே தனது வாய்ஸின் மூலமாகவே அழுத்தமாக நடிப்பைப் பதிவு செய்யும் திறமை ராதாரவி போன்ற ஒரு சிலருக்கே உண்டு..! கடைசியாக மந்திரி மகனையே தேர்தலில் நிற்க வைக்கச் சொல்லும் அந்த ஐடியாவைச் சொல்லும்போது தியேட்டரே குலுங்கிவிட்டது கைதட்டலில்..!
இதேபோல் இருட்டு அறையில் சாத்து சாத்துவென்று சாத்துகின்ற காட்சியில் “இதைத்தான் இருட்டறையில் முரட்டுக் குத்துன்னு சொல்றாய்ங்களா..” என்று கேட்கும் வசனம் பெறும் கைதட்டலை பார்த்தால் ரசிகர்கள் நகைச்சுவைக்காக எத்தனை ஏக்கமாக இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது..
இது போன்ற இண்ட்ரஸ்ட்டிங்கான கதைகளுக்கு பெரும் தடையே பாடல் காட்சிகள்தான். இந்தப் படத்திலும் அதுதான் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.. காசு, பணம், துட்டு பாடல் காட்சி எடுக்கப்பட்டவிதம் அருமை என்றாலும், படத்தின் வேகத்தை அது சற்றே குறைக்கத்தான் செய்திருக்கிறது..! காமிக்ஸ் படம் போல எடுத்திருப்பதாலோ என்னவோ, இசையும் சற்று அடங்கிப் போய்த்தான் இருக்கிறது..! பின்னணி இசை யூ டியூபில் வலம் வரும் பல காமிக்ஸ் கதைகளோடுதான் ஒத்துக் போகிறது.. இதுக்கு இதுவே போதுமென்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது..!
பிரம்மா வரும்வரையிலும் எப்படி முடிப்பார்கள் என்ற ஏக்கமும், பிரம்மா வந்த பிறகு சீக்கிரமா முடிய்யா என்ற பரிதவிப்பையும் ஏற்படுத்தும் அளவுக்கு நடித்திருக்கிறார். மனிதர் பேசாமலேயே தனது இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு செய்யும் போலீஸ் சேட்டைகள்தான் அசத்தல்.. கோளாறான துப்பாக்கியால் குண்டடிபட்டு சிக்கிக் கொள்ளும் பிரம்மா, அதே இறுகிப் போன முகத்துடன் புதிய மந்திரியின் பதவிப் பிரமாண காட்சியைப் பார்க்கும் அந்தக் காட்சி செம நரேஷன்..!
அறிமுக இயக்குநர் நலன் குமரசாமியின் குறும்படங்களில் இயக்கத்தைவிடவும் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளையே அதிகம் அலட்டலாக வடிவமைத்திருந்தார்.. அதுபோலவே இதிலும்.. தனது முதல் படத்திலேயே ஹிட்டடித்திருக்கும் இவரது அடுத்தடுத்த படைப்புகளும் ஜெயிக்க வேண்டுமாய் வாழ்த்துகிறேன்..!
(படம் வெளியாகி ஆறு நாட்கள் கழித்து விமர்சனம் எழுதும் பாக்கியத்தைக் கொடுத்த தமிழக மின்சார வாரியத்திற்கும், என் அப்பன் முருகனுக்கும் நன்றி..!)
|
|
Tweet |
