31-08-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வெற்றிகரமாக 2-வது வாரமாக அரங்குகள் முழுவதும் நிறையாவிட்டாலும், முக்கால்வாசி இருக்கைகள் நிரம்பியிருக்கும் வகையில், முக்கியப் படமாக அமைந்துவிட்டது அட்டக்கத்தி..!
முதல் 3 நாட்கள் “நான்” திரைப்படம் இதற்கு ஈடு கொடுத்தாலும், பின்பு குறைந்து போனது.. அந்தக் குறைச்சலை அட்டக்கத்தியே வசூல் செய்து கொண்டதாக விநியோகஸ்தர்கள் தரப்பினர் சந்தோஷமாகச் சொல்கிறார்கள். அதே நேரம் “நான்” திரைப்படமும் கொஞ்சமாகத்தான் கையைக் கடித்திருப்பதாக மீரான் சாகிபு தெருவினர் தெரிவிக்கிறார்கள்..! அதனால் என்ன “நான்” படத்தின் அதே யூனிட்டோடு விஜய் ஆண்ட்டனி அடுத்தப் படத்திற்குத் தயாராகிவிட்டார். படத்தின் டைட்டில் “திருடன்..” வாழ்க.. வளமுடன்.. !!!
இனி நாம் அட்டக்கத்திக்குச் செல்வோம்..! சென்னை என்றாலே மயிலாப்பூரையும், வட சென்னையையும், ராயப்பேட்டையின் நெரிசலான சந்துகளையுமே காட்டி வந்தவர்கள் தற்போது சென்னையின் புறநகர் பேருந்துகளை மட்டும் வைத்துக் கொண்டு, கொஞ்சம் அவுட்டருக்கு நம்மைத் தள்ளிக் கொண்டு போயிருக்கிறார்கள்..!
ஒரு இளைஞனின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலையும், பெண்களையும் வைத்து சுவாரஸ்யமாக ரம்மியாட்டம் ஆடியிருக்கிறார் இயக்குநர்..! முதல் பாராட்டு ஹீரோ தினகரன் என்னும் தினாவாக நடித்த தினேஷிற்கு.. பொருத்தமான தேர்வு...! முதல் காதலைச் சொல்ல நினைத்து முயன்று, முயன்று இறுதியில் ஜெயிக்கும்போது கிடைக்கும் பதிலை கேட்டு திகைப்பதில்தான் இவரது நடிப்பு துவங்குகிறது.. அதே சோகத்தோடு நண்பர்களுடன் கடைக்குப் போய் போண்டா சாப்பிடும்போது பேசுகின்ற பேச்சும் நடிப்பும் அட்டகாசம்.. இதே வேகத்தோடு அடுத்தடுத்த பெண்களுடன் பேசுவதற்கு முயன்று.. வேண்டுமென்றே அடிதடிக்குள் நுழையும் அந்தக் காட்சியிலும் மிக யதார்த்தமான நடிப்பு..!
எழுதி வைத்த கடிதத்தை பூர்ணிமாவிடம் கொடுக்க நினைத்து தவிப்பது.. கல்லூரியில் சண்டியர்தனத்தைக் காட்டும் நேரத்தில் பூர்ணிமாவை பார்த்தவுடன் சட்டென இயல்புக்கு மாறுவது.. பேருந்தில் செய்யும் கலாட்டாக்கள்.. ஒரு உணர்ச்சி வேகத்தில் தப்பிக்க முடியாத உணர்வில் பேருந்தில் அந்தப் பெண்ணைத் தடவும் காட்சி.. “அமுதா வர்றாடா..” என்ற நண்பனின் வாய்ஸை கேட்டவுடன் சட்டென கண்ணைத் துடைத்துக் கொண்டு பரபரவென தலையைச் சிலுப்பிக் கொண்டு தயாராகி நிற்கும் அந்த வேகம்.. ஸ்டைல்.. எல்லாவற்றுக்கும் மேலாக இறுதியில் பூர்ணிமாவை அவள் கணவரோடு பார்த்துவிட்டு அதிரும் காட்சியில் இவரது நடிப்பு ஏ ஒன்.. “இன்னிக்கு ஒரு நாள் இருந்திட்டு போலாம்ல.. நீயும் வாயேன்..” என்று ஹீரோயின் அழைக்க அதற்கு மறுதலிக்க முயன்று சொல்ல முடியாமல் தவிக்கும் அந்தக் காட்சியும் ஹீரோவுக்கு பெத்த பெயர் கொடுக்கும் காட்சிகள்.. நிச்சயமாக அடுத்த வருடம் சிறந்த புதுமுகத்திற்கான அனைத்து விருதுகளும் இவருக்குத்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்..!
ஹீரோயின் பூர்ணிமாவாக நடித்த நந்திதாவின் சில சில எக்ஸ்பிரஷன்கள் கவர்ச்சியாக இருக்கிறது..! இறுதிவரையிலும் தான் யார் என்பதை அவர் காட்டாமலேயே இருப்பதுபோல திரைக்கதை என்பதால் எப்போதும் போலவே இருப்பது கொஞ்சம் ஈர்க்காமல் விட்டுவிட்டது.. பொண்ணுக்கு சிரிப்புதான் மூலதனம்.. இவருக்கு அடுத்து மனதைக் கவர்பவர் பக்கத்து வீட்டு அத்தைப் பொண்ணான அமுதா. முதல் அறிமுகத்திலேயே டிவியை பார்த்தபடியே பேசும் அந்த அரைவெட்டு முகமும், வாசலில் கோலம் போடும் அழகும், யாரை விரும்புகிறாள் என்பதையே வெளிப்படுத்திக் காட்டாத அந்த வயதுக்கே உரித்தான இன்னொசன்ட் நடிப்பும் ஓஹோ..
இதுபோலவே அடுத்த காதலிகளாக வந்து மாட்டும் அந்த இரட்டையர் நாயகிகள்.. இவர்கள் போர்ஷனில் இயக்குநரின் கலைத்திறமையும், காட்சிப்படுத்தும் திறனும் ரொம்பவே வெளிப்பட்டிருக்கிறது..! இதை எதுக்கு எங்ககிட்ட கொடுக்குறீங்க என்ற கேள்வியிலேயே அவர்களது இத்தனை நாள் கொண்டாட்ட நிகழ்வைக் குறிப்பாகச் சொல்லிவிடுகிறார் இயக்குநர்..
ஆடி போனா ஆவணி பாடலும், ஆசை ஒரு புல்வெளி பாடலும் ஹிட்ட்டித்திருக்கின்றன.. இதில் ஆடி போனா ஆவணி கானா டைப்பாக இருந்தாலும், எடுக்கப்பட்ட காட்சிகளால் மேலும், மேலும் மெருகூட்டப்பட்டிருக்கிறது.. இதேபோல் ஆசை ஒரு புல்வெளி பாடல் மாண்டேஜ் காட்சிகள்தான் என்றாலும் இன்னும் சிரத்தையாக செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..!
பாடல்களைவிட பின்னணி இசை அற்புதம் என்றே சொல்ல வேண்டும்..! எந்தவிடத்திலும் தற்போதைய சினிமா இசை தென்பட்டுவிடாமல் கவனத்துடன் பார்த்திருந்து நாடக மேடைகளில் ஒலிக்கப்படும் மென்மையான இசையையே படம் முழுவதும் தவழ விட்டிருக்கிறார்.. அதிலும் ஒரு காட்சியில் வாழை மட்டையை சுவற்றில் அடித்தால் என்ன சப்தம் வருமோ, அதையே தடதட காட்சிக்கு பயன்படுத்தியிருப்பது சாலப் பொருத்தம்..! கச்சிதமாக பணியாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்..!
இரட்டை மகளிரை சைட் அடிக்கும் காட்சியில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு டிரெஸ்ஸில் வருவதையும், அடுத்தடுத்த நாட்களில் தினா பேசுகின்ற பேச்சு கூடிக் கொண்டே போவதையும் அந்த ஒற்றைக் காட்சியில் அழகுடன் விளக்கியிருக்கும் இயக்குநருக்கும், அதற்கு பெருந்துணையாக இருந்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் ஒரு சபாஷ்..!
ஒரு காட்சியில் பேருந்து படிகளில் பயணம் செய்யும் தினா-பூர்ணிமாவையும், அவ்வப்போது வந்து செல்லும் காட்சிகளில் லைட்டிங்ஸே இல்லாமல் இருப்பதை வைத்து அழகுற செய்திருக்கும் ஒளிப்பதிவாளரின் பணியை புதிய ஒளிப்பதிவாளர்கள் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது..!
கேரக்டர் ஸ்கெட்ச்சிலும் இயக்குநர் அடித்து ஆடியிருக்கிறார். தினாவின் குடிகார அப்பா.. குடித்துவிட்டு அவர் பேசுகின்ற பேச்சும்.. செய்யும் செயலும் மிக நயமான நகைச்சுவை.. அமுதாவை வைத்துக் கொண்டு தினாவின் அம்மா அவனைத் திட்டுவதும், குடித்துவிட்டு மப்பில் இருக்கும் கணவனை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி ஊட்டுவதும்.. என் ஜட்டி எங்க என்று கேட்கும் கேள்விக்கு அம்மாவின் அந்த வெறுப்பான பதிலுமாக.. அந்தக் குடும்பத்தை தேடிப் பார்க்க வேண்டுமே என்ற ஆசையைத் தூண்டிவிட்டது..!
உண்மையான கத்தி ரத்தம் சிந்த வைக்கும். ஆனால் அதுவே அட்டக் கத்தியாக இருந்தால் உண்மை தெரியாதவரையில் மிரள வைக்கும்.. உண்மை தெரிந்தால்..! இதற்கான பதிலைத்தான் ஹீரோவின் கல்யாண வாழ்க்கையில் இறுதிக் காட்சியில் காட்டுகிறார்..! எத்தனையோ முயன்றும், கடைசியில் பிக்கப்பாகி முடிவது எதிர்பாராத வேறொன்றாகிவிடுகிறது..!
எல்லா காதலுமே ஜெயிப்பதில்லை.. ஆனால் காதல் முயற்சிகள் ஒரு போதும் நின்று போவதில்லை என்பதை இப்படத்தின் மூலம் உணர்த்தியிருப்பதாக பேட்டியளித்தார் இயக்குநர் ரஞ்சித்.. இப்படம் பெரிய ஹீரோ ஹீரோயின்களை வைத்து இன்னும் கொஞ்சம் நகைச்சுவை கதாநாயகர்களோடு வலம் வந்திருந்தால் நிச்சயம் ஓகே ஓகே, கலகலப்பு ரேஞ்சுக்கு பேசப்பட்டிருக்கும்.. இப்போதும் பரவாயில்லை. இயக்குநர் ரஞ்சித்திற்கு நல்ல பெயரையும், அடுத்த படத்திற்கான வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
முதல் பார்வையிலேயே இந்தப் படத்தை வாங்கி, கூடுதலாக 1 கோடிக்கும் மேல் செலவழித்து படத்தை ரிலீஸ் செய்திருக்கும் ஞானவேல்ராஜா நிச்சயம் பாராட்டுக்குரியவர். இவர்களை போன்ற பெரும்தனக்காரர்கள் இது போன்ற சின்ன பட்ஜெட்டில் தயாராகும் தரமான திரைப்படங்களை ஊக்குவித்தால் நிச்சயம் தமிழ்ச் சினிமாவில் இது போன்ற சினிமாக்கள் நிறையவே வெளிவரும்..!