24-04-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மிகச் சிறந்த கதை இல்லை. மிகச் சிறந்த நடிப்பு இல்லை.. மிகச் சிறந்த பாடல்கள் இல்லை.. மிகச் சிறந்த உழைப்பும் இல்லை.. ஆனால் ஒன்று மட்டும் இருக்கிறது. அது மிகச் சிறந்த திரைக்கதை.. படம் சூப்பர் ஹிட்..
எக்காலத்திற்கும் ஏற்ற காதல் கதை...! வாயைத் தொறந்தாலே எச்சிலாய் ஊறும் நகைச்சுவையைக் கொண்ட நடிகர்.. ஏன் எதற்கு என்று கேட்காமலேயே எவ்வளவு கேட்டாலும் அள்ளிக் கொடுக்கும் ஒரு தயாரிப்பாளர்(தானே உழைத்துச் சம்பாதித்த காசில்லையே..?) கைக்கு அடக்கமான ஹீரோ.. கொடுத்த காசுக்கு மேலேயே நடிப்பை காட்டத் துடிக்கும் ஹீரோயின்.. இது போதாதா ஒரு இயக்குநருக்கு..!? கூடுதலாக தனது இயக்கத் திறமையையும், எழுத்துத் திறமையையும் காட்டி படத்தை வெற்றி காண வைத்துவிட்டார். வாழ்த்துகள் ராஜேஷ்..!
உதயநிதி ஸ்டாலின் கனகச்சிதமாக நகைச்சுவையை தேர்ந்தெடுத்துதான் அறமுகமாகியுள்ளார். சிரிப்பது ரொம்ப ஈஸி. அழுவதுதான் கஷ்டம். அழுகும் நடிப்பை காட்டுவது என்பது ஒவ்வொரு நடிகருக்கும் ஆசிட் சோதனை.. இந்தச் சோதனையில் இருந்து இந்தப் படத்தில் தற்போதைக்கு தப்பித்திருக்கிறார் உதயநிதி.. அடுத்தப் படத்தில் எப்படியோ..?
பிரேமுக்கு பிரேம் ஒரே உச்சரிப்பில், ஒரே முகபாவனையில் நடித்திருக்கும் உதயநிதிக்கு தனது நடிப்பைக் காட்ட ஒரு வாய்ப்பும் கிடைத்த்து. ஆனால் அதனையும் புஸ்வாணமாக்கியிருக்கிறார். அழகம்பெருமாள் மனைவி சரண்யாவை தேடியலைந்து சோர்ந்து போய் வாசலில் அமர்ந்திருக்கும் நேரத்தில் உதயநிதிக்கு நல்ல ஸ்கோப் காத்திருந்த்து. அவரையும், ரசிகர்களையும் சோதிக்க்க் கூடாது என்பதால் அதனையும் ஒரு சாதாரண காட்சி போல் எடுத்து தயாரிப்பாளரை காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்.. பொழைக்கத் தெரிஞ்சவர்தான்..!
கவுண்டமணி, வடிவேலு வரிசையில் சந்தானம் இடம் பிடித்துவிட்டார். அவருடைய அறிமுகக் காட்சியில் அப்படியொரு கைதட்டல் தியேட்டரில்..! வாழ்க.. வஞ்சகமில்லாமல் தனது நகைச்சுவைத் துணுக்குகளை படம் முழுவதும் அள்ளி வீசியிருக்கிறார் சந்தானம்.. வசனமே இல்லாமல் வெறும் உடல்மொழியைக் காட்டியே கை தட்டலை வாங்கிவிடுவதில் கவுண்டரும், வடிவேலுவும் வித்தகர்கள். அதனை இந்தப் படத்தில் சந்தானமும் தொடர்ந்திருக்கிறார்..! சந்தானத்தை கட் செய்தால்தான் தங்களது காதல் பிழைக்கும் என்று ஹன்சிகா சொல்லும் காட்சியில், நொடியில் தன்னைக் கழட்டிவிடும் முடிவை உதயநிதியின் வாயாலேயே கேட்டவுடன் சந்தானம் ஒரு ஆக்சன் கொடுக்கிறார் பாருங்கள்.. ரசிகர்களின் அமோக கைதட்டல் இந்தக் காட்சிக்குத்தான்..!
பெண்கள் முகத்தை மூடிக் கொண்டு செல்வதை அடிக்கும் நக்கலில் துவங்கி, இறுதிக் காட்சியில் உதயநிதி பேசும் ஆங்கிலத்தை மொழி பெயர்க்கும் காட்சி வரையிலும் சந்தானத்தின் ராஜாங்கம்தான்..! மனிதர் எதுகை, மோனைகளை மிக அலட்சியமாக பவுன்ஸாக வீசுகிறார்..!
ஹீரோயின் ஹன்சிகாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த ஒரு புகைப்படமே போதும்..! அவர் அறிமுகமாகும் முதல் காட்சியே ரசனையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது..! இப்படி அழகை பார்த்துவிட்டு எவன் ஜொள்ளுவிடாமல் போவான்..? ஹன்சிகாவை பார்த்துவிட்டு சரண்யா உதயநிதியிடம் சொல்வதுகூட மிக யதார்த்தம்தான்..! ஒரு அப்பாவி அம்மாவின் பரம ரசனையான தேர்வு இது..! இது ஒன்றே உதயநிதிக்குள் காதலை தோற்றுவிக்கிறது என்றவுடன் இனி கேள்வி கேட்பாரே இல்லையே..? ராஜேஷ்.. ஜமாய்ச்சுட்டீங்க..!
இடைச்செருகல் கதையாக வரும் அழகம்பெருமாள்-சரண்யா கதை லாஜிக்காக ஏற்றுக் கொள்ள முடியவில்லையென்றாலும், அதையும் சென்டிமெண்ட்டுடன் கலந்து முடித்திருப்பதால் பெரிய தவறாகப் படவில்லை..!
பாடல்களில் வேணாம் மச்சான் வேணாம் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்..! தியேட்டரில் பெண்களும் ரசிக்கும்படியாக சத்தத்தைக் குறைத்து, சந்தத்தை அனைவரும் கேட்கும்விதமாக மெட்டசைத்து கொடுத்திருக்கும் ஹாரிஸுக்கு ஒரு நன்றி.. அகிலா, அகிலா பாடலும், அட்டா ஒரு காதல் தேவதை பாடல் காட்சியும் ரசனையாக படமாக்கப்பட்டுள்ளது..! உதயநிதியை காப்பாற்ற வேண்டியே ஹன்சிகாவை தமிழகத்து ரசிகர்கள் பார்க்கும்படியாக அப்படி, இப்படி ஓடவிட்டு, ஆடவிட்டு எடுத்திருக்கிறார் இயக்குநர்..! உதயநிதியின் ஸ்டெப்ஸ்களை பார்த்தபோது பழைய கே.பாக்யராஜ் படங்களை பார்த்தது ஞாபகத்திற்கு வந்து தொலைகிறது..! அடுத்தப் படத்திற்குள் நடனத்தைக் கற்றுக் கொள்வார் என்றே நினைக்கிறேன்..!
ஒரு காட்சிதான் என்றாலும் ஆர்யாவின் வருகை களை கட்டுகிறது.. அந்தத் தெனாவெட்டு ஸ்கிரீனுக்கு பிரெஷ்னஸ்ஸாக பிளஸண்ட்டாக அமைந்திருக்கிறது..! அதிலும் ஆண்ட்ரியாவை இடையிடையே கொஞ்சிக் கொண்டே வந்த வேலையை முடித்து வைக்கும் அந்த ஸ்டைலு.. செம கலக்கலு..!
தியேட்டருக்கு வரக் கூடிய இளையோர் கூட்டம்.. சென்ற 2 படங்களில் தமிழக ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்த ராஜேஷின் ரசிகர் படைகள்.. இருக்கின்ற ஹீரோயின்களில் தமிழர்களுக்குப் பிடித்த ஹன்சிகா.. சந்தேகமே இல்லாமல் இப்போதைய நகைச்சுவை கிங் சந்தானம்.. இளைய தலைமுறைக்கு என்றைக்கும் பிடித்த காதல் சோகத்தைப் பிழிந்தெடுக்கும் பாடல்களும், வசனங்களும் என்று ஒரு வெற்றிப் படத்திற்கு என்னென்ன தேவையோ அத்தனையையும் சம விகிதத்தில் கலந்தடித்து இதனை வெற்றியாக்கியிருக்கிறார் ராஜேஷ்..!
படம் வெளியான முதல் 2 வாரங்களிலேயே கிட்டத்தட்ட 40 கோடியை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் பேச்சு..! இந்தப் பணம் முழுவதும் தயாரிப்பு தரப்பிற்கும், விநியோகஸ்தர்களும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு செய்த சில்லுண்டி வேலையினால் இதில் 12 கோடி ரூபாய் அரசுத் தரப்புக்கு சென்றுவிட்டது..!
தமிழ் மொழியை சினிமாவில் வளர்த்தெடுக்க நினைத்து, தாத்தா சென்ற ஆட்சியில் கொண்டு வந்த ஒரு திட்டத்தை ஆத்தா இந்த ஆட்சியில் மேலும் சில விதிமுறைகளைத் திணித்து கடுமையாக்கியிருந்தாலும், இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி விஷயத்தில் ஜெயலலிதா அரசு செய்தது அயோக்கியத்தனம்..! வரிவிலக்கு பெற அனைத்து தகுதிகளும் இந்தப் படத்திற்கு உண்டு. அப்படியிருக்க இப்படத்திற்கு அதற்கான தகுதிகள் இல்லை என்று கூறி வரிவிலக்கிற்கு மறுப்பு தெரிவித்தது நயவஞ்சகத்தனம்..! முறைகெட்டத்தனம்..!
தனிப்பட்ட அரசியல் விருப்பு, வெறுப்புகளை அரசுத் திட்டங்களில் செயல்படுத்தக் கூடாது.. தாத்தாவுக்கு ஆத்தாவும சளைத்தவரில்லை என்பதை இதை வைத்தும் சொல்ல்லாம்..! சென்ற மாதம் வெளியான 3 படத்திற்கு வரிவிலக்கு. இப்படத்திற்கு இல்லை என்றால் இந்த மாநில அரசு ஆட்சி நடத்தத் தெரியாத ஒரு வெக்கம் கெட்ட அரசு என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டாம்..! இத்திட்டத்தின் மீது எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் இப்படியொரு திட்டம் அமலில் இருக்கின்றவரையில் அதனை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்..!
இந்தப் படத்தில் உதயநிதி, ஹன்சிகாவை மெரீனா பீச்சில் சந்திக்க வரும்போது அணிந்திருக்கும் பனியனில் இருக்கும் வார்த்தை மட்டுமே தேவையற்றதாக இருந்தது.. அந்த ஆங்கில வார்த்தையை ஆங்கில சினிமா சேனல்களே ஸ்டார் போட்டு மறைக்கும்போது இவ்வளவு வெளிப்படையாக அணிய வைத்திருக்க வேண்டாம்.
கூட்டம் தியேட்டர்களில் கூடிக் கொண்டே போக.. இங்கே அரசு தரப்பு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கடிதத்தை கண்டும் காணாததுபோல் இருக்கிறதே என்ற கோபத்தில் வேறு வழியில்லாமல்தான் நீதிமன்றத்திற்குச் சென்றார் உதயநிதி ஸ்டாலின். நீதிமன்றம் ஏன் இன்னும் பார்க்கவில்லை என்ற கேள்வியை எழுப்பிய பின்புதான் அவசரம், அவசரமாக கடந்த 16-ம் தேதியன்று படத்தை பார்த்தனர் தமிழ்நாடு அரசின் வரிவிலக்கு கமிட்டியினர்..!
சினிமா பிரபலங்கள் பழம் பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, குடியிருந்த கோவில் ஹீரோயின் ராஜஸ்ரீ ஆகியோருடன் அரசுத் தரப்பு அதிகாரிகள் 3 பேர், ஆக மொத்தம் 7 பேர் போர்பிரேம் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறார்கள். சினிமா பிரபலங்களுக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது..! வரி விலக்கு தரலாம் என்று முதலில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மேலிட உத்தரவு அதன் பின்புதான் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..! “கொடுக்கவே கூடாது” என்பது முதலமைச்சர் அலுவலக உத்தரவாம்..!
இதனை பிரபலங்களிடம் அதிகாரிகள் தெரிவிக்க.. அவர்களுக்குள் லேசான தயக்கம்.. முதலில் ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார்கள். பின்பு அதிகாரிகள் தங்களது நிலையைத் தெரிவித்தவுடன் வேறு வழியில்லாமல் கையெழுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இசையமைப்பாளர் சங்கர்கணேஷ் மட்டுமே கையெழுத்திடவில்லையாம்..!
இது பற்றித் தகவல் தெரிந்து செய்திகளுக்காக இந்த நான்கு பேரையும் தொடர்பு கொண்டபோது யாருமே பேட்டியளிக்க மறுத்துவிட்டார்கள். “இது விஷயமா பிரஸ்ல பேசுற அதிகாரமே எங்களுக்குக் கிடையாது..” என்றார் எல்.ஆர்.ஈஸ்வரி..!(இருங்கம்மா.. அடுத்தது தளபதி ஆட்சிதான்.. இருக்கு ஆப்பு உங்களுக்கு..!)
3 படத்தின் தலைப்பும், அப்படத்தில் இடம் பெற்ற பல காட்சிகளும் வரிவிலக்கு பெறும் தகுதியுடையவைகள்தானா என்பதை பலரும் சந்தித்துப் பார்க்க வேண்டும்..! ஆனாலும் படம் ரிலீஸாகும் முன்பாகவே அப்படத்திற்கு வரிவிலக்கு வழங்கப்பட்டதை நினைவு கூற வேண்டும். ஆக, ஆட்சி மேலிடத்திற்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாட்டை இந்த அரசு செய்து வருகிறது என்னும்போதே இது சர்வாதிகாரமான, தான்தோன்றித்தனமான அரசுதான் என்பது ஊர்ஜிதமாகிறது.
இது போன்ற அதிகாரத் துஷ்பிரயோகம் ஆத்தாவுக்கு புதிதல்ல என்றாலும், தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கு எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் தங்களது சண்டையையே சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதும் இன்னொரு பக்கம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது..!
சினிமாவும், அரசியலும் வேறு, வேறல்ல என்பதை போல இந்தச் சம்பவத்தையும் உதாரணமாக்குகிறார்கள் பத்திரிகையாளர்கள். வலிய வரவே மாட்டேன் என்பவரையும் கையைப் பிடித்திழுத்து அரசியலுக்கு கொண்டு வருகிறார்கள்.. இனி உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. இளைஞரணியில் ஒரு முக்கியப் பொறுப்பிற்கு வந்து ஆத்தாவுக்கு பஞ்ச் டயலாக் அறிக்கை விடும் காலமும் வெகுதொலைவில் இல்லை..! அதற்கு இந்த பட விவகாரமே முக்கியக் காரணமாக இருந்து தொலையும் என்பதிலும் ஐயமில்லை..!
கலைஞர் குடும்பத்து அடுத்த வாரிசையும் அரசியல் களத்தில் வலுக்கட்டாயமாகக் களமிறக்கியிருக்கும் ஜெயலலிதா வாழ்க..!