Pages

Wednesday, February 09, 2011

எந்த முகமது நமக்காகத் தீக்குளிக்கப் போகிறார்..?

08-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 20 நாட்களில் உலகத்தின் இரண்டு நாடுகளில் நடந்த புரட்சிகள், மக்களின் எழுச்சிக்கு முன் அரசியல் அதிகாரமெல்லாம் தூள் தூளாகிவிடும் என்கிற நிஜத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

டூனிசியாவில் கடந்த 26 வருடங்களாக கோலோச்சிக் கொண்டிருந்த சர்வாதிகாரி பென்அலி தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு ஓடியிருக்கும் நிலைமை தற்போது எஞ்சியிருக்கும் உலக சர்வாதிகாரிகளின் வயிற்றில் நிச்சயம் புளியைக் கரைத்திருக்கும்..

தனது நாட்டை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகவும், நாகரிகமான நாடாகவும், முஸ்லீம்கள் அதிகம் இருந்தாலும் மதச்சார்பற்ற சுதந்திரமான நாடாகவும் ஆக்கியிருக்கிறேன் என்று தம்பட்டம் அடித்திருந்த பென்அலி இன்று போய்த் தஞ்சமடைந்திருப்பது சவூதி அரேபியாவில்.

டுனீசிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதால் மட்டுமே முஸ்லீமாக இருந்துவிடுவதில்லை. விருப்பம் இருந்தால் அணியலாம். இல்லாதவர்கள் சுதந்திரமாக இருக்கலாம் என்றெல்லாம் சுதந்திரம் கொடுப்பதைப் போல கதவைத் திறந்துவிட்டு காலில் கயிற்றைக் கட்டி வைத்திருந்த தந்திரக்காரரான பென்அலியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது ஒரு சாதாரணமான காய்கறிக் கடை வைத்திருந்த முகமது என்னும் இளைஞன் என்பதுதான் வரலாற்றின் சுவாரசியம்.

படித்தது பட்டம் என்றாலும் அதற்கேற்ற வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையைச் செய்வோம் என்றெண்ணி நடைபாதையில் காய்கறிக் கடை வைத்து வியாபாரம் செய்வதனை “லைசென்ஸ் எடுக்க வேண்டும்.. இல்லாவிட்டால் கடையை நடத்தக் கூடாது..” என்று சொல்லி முகமதுவின் கடையை அப்புறப்படுத்தியிருக்கிறது போலீஸ்.

இருந்த ஒரு வேலையும் போன ஒரு விரக்தியில் முகமது செய்த அந்த தீக்குளிப்பில் வெந்து போய்விட்டது டுனீசியா மக்களின் மனம். ஒரேயொரு தீக்குளிப்புதான். அந்த நாட்டையே ஒன்றிணைத்து ஒரு மகத்தான மக்கள் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.. டுனீசியாவின் வரலாற்றில் முகமதுவின் பெயர் புதிய சரித்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது..

இது நடந்து சில நாட்களுக்குள் மிகச் சரியாக ஜனவரி 28-ம் தேதியன்று எகிப்தில் வெடித்த மற்றுமொரு புரட்சி இன்னமும் இறுதிக் கட்டத்தை அடையவில்லை. அதனை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக அங்கு ஆட்சி செய்து வந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தாலும், எந்த வழியிலாவது ஆட்சியில் அமர்ந்திருக்க வேண்டும் என்றே முபாரக் எண்ணிக் கொண்டிருக்கிறார். புரட்சியாளர்களாக கொந்தளித்துப் போயிருக்கும் மக்கள், அதற்கு ஒருபோதும் வாய்ப்பு தர மாட்டோம் என்றெண்ணி அடுத்தடுத்த போராட்டங்களுக்குத் தயார் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் எதிர்க்கட்சியினரை கூண்டோடு பிடித்து சிறையில் தள்ளுவார் முபாரக். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய உண்மையான எஜமானன் அமெரிக்காவிற்கு பயணம் செய்து நான் இப்போதும் உங்களது விசுவாசமிக்க வேலைக்காரன் என்பதை பறை சாற்றிவிட்டு வருவார்.

தேர்தலில் வாக்குச்சீட்டுக்களை திருடுவது, கள்ள ஓட்டுப் போடுவது என்று நம்மூருக்கு சற்றும் குறையாமல் கில்லாடித்தனங்களைச் செய்து ஜெயித்துவிடுவார். அடுத்த ஒரு மாதத்தில் எதிர்க்கட்சியினரை விடுதலை செய்வார். இதுதான் சமீபத்திய 15 ஆண்டு காலத்தில் முபாரக் செய்து வந்த ஜனநாயக நடவடிக்கை.. ஒவ்வொரு முறையும் அவரை எதிர்த்து சரியான ஒத்துழைப்பு இல்லாமல் தோல்வியடைந்த புரட்சி, இந்த முறை உலகம் தழுவிய இணையம் மூலமாக வெற்றி கண்டுள்ளது.

உலகத்திலேயே அதிக அளவிலான அரசியல் கைதிகள் சிறையில் இருப்பது எகிப்தில்தான் என்கிறார்கள். மதச்சட்டம் கட்டாயமானது இல்லை என்றாலும் மதத்தின் பெயரால் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் தனியிடம் எகிப்திற்கு எப்போதுமே உண்டு.

அரபு நாடுகளில் பொது எதிரியான இஸ்ரேலை ஒட்டிக் கொண்டிருந்துவிட்டு பாலஸ்தீன மக்களுக்கு விரோதமாக இஸ்ரேலுடன் பரிவுணர்வுடன் நட்புடன் இருந்து வருகிறது எகிப்து. பின்னணியில் அமெரிக்க அண்ணன் இருப்பது உலகமறிந்த விஷயம். ஆனாலும் எகிப்து மக்கள் கொடுத்து வரும் உதவிகளால்தான் இப்போதைக்கு பாலஸ்தீன காஸா பகுதி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

எகிப்தின் இளைய தலைமுறை இன்றைக்கு தனது நாட்டைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறது என்பதே மிகப் பெரிய விஷயம். வேலையில்லா திண்டாட்டம் என்பது உலகம் தழுவியது. இது இல்லாத நாடே கிடையாது என்றாலும், ஏதோ ஒரு வேலை கிடைத்துவிடுகிறதே என்ற நிலையில் வளர்ந்த நாடுகளும், வளர்ந்து வரும் நாடுகளின் நிலைமையும் இருந்து வருகிறது.

வேலையில்லா திண்டாட்டமும், ஏழ்மையும், அடக்குமுறையும்தான் இந்த நாடுகளில் புரட்சிக்கு காரணமாக இருந்திருக்கின்றன என்றாலும் அடிப்படையான காரணம் விழிப்புணர்வு. ஒரு இளைஞனின் மரணத்திற்கு அரசாங்கத்தின் ஜனநாயக விரோதமான விதிமுறைகளும், சர்வாதிகாரமும்தான் காரணம் என்று ஒரு சமுதாயமே பொங்கியிருக்கிறது. பாராட்டுக்கள்..

ஆனால் நமது நாட்டில் நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தால் நமக்குத்தான் கேவலமாக இருக்கிறது...

முத்துக்குமார் என்னும் இளைஞன் தீக்குளித்தபோது நமக்குள் இந்த புரட்சிகர உணர்வு எழவில்லை. போராட்ட உணர்வு வலுப்பெறவில்லை. தூண்டிவிட வேண்டியவர்களே அணைத்துவிடவும் செய்தார்கள். அந்த அரசியல் சாக்கடையில் மீண்டும், மீண்டும் நம்மை நாமே திணித்துக் கொண்டு அசிங்கப்பட்டு போனோம்..

முகமது எந்த நோக்கத்திற்காக தீக்குளித்தானோ, அதே நோக்கம்தான் முத்துக்குமாருக்கும்.. ஆனால் புரிந்து கொண்டு அந்தத் தீக்குளிப்புக்கு உரிய மரியாதையைச் செய்தவர்கள் டுனீசியா மக்கள்.. புரிந்து கொள்ளவே விரும்பாமல் அதனை அவமானப்படுத்தியது நாம்தான்..

அவ்வளவு தூரம் போக வேண்டாம்.. சென்னையில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஹைதராபாத்தில் உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் தெலுங்கானா கோரி போராட்டத்தில் குதித்தபோது அந்த மாநிலமே எரிந்து கொண்டிருந்தது..

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்கள் அஞ்சையாவும், சென்னா ரெட்டியும், விஜயபாஸ்கர ரெட்டியும்கூட கை வைக்கத் தயங்கிய தெலுங்கு சினிமாவுலகத்தை ஒரே நாளில் தரைக்குக் கொண்டு வந்த பெருமைக்குரியவர்கள் அந்த மாணவர்கள்..

எந்த முதலமைச்சரும், செய்தித் தொடர்புத் துறை அமைச்சரும் பதவியேற்றதும் மறுநாளே சினிமாவின் அதிபதிகளை சந்திப்பதை ஒரு மரியாதைக்குரிய விஷயமாக்கி வைத்திருந்தது தெலுங்குலகம். விடியற்காலை 3 மணிக்கெல்லாம் அரசு அனுமதி இல்லாமலேயே தியேட்டர்களில் சினிமா காட்சியை ஓட்டி மாநிலம் முழுவதையும் சினிமா மயமாக்கி வைத்திருந்த அந்த சினிமா பிரபலங்களையே 24 மணி நேரத்திற்குள் ஹைதராபாத்தைவிட்டு வெளியேறுங்கள் என்று அவர்கள் வீட்டு முன்பாகவே கோஷம் போட வைத்து வெற்றி கண்டது அந்த மக்களின் ஒற்றுமை..

ஆடிப் போனார்கள் அல்லவா..? போராட்டக் காலத்தில் வெளி வந்த அத்தனை படங்களும் ஓட முடியாமல் தவித்தன. சினிமா தியேட்டர்கள் கட்டாயமாக இழுத்து மூடப்பட்டன. என்.டி.ராமராவை எதிர்த்து சந்திரபாபு நாயுடு கலகம் செய்தபோது என்.டி.ஆரின் தொண்டர்கள்கூட சினிமா தியேட்டர்களை மூட முயற்சி செய்தும் முடியாமல் போயிருந்த சாதனையை இந்த தெலுங்கானா மாணவர்களும், மக்களும் செய்து காட்டியிருந்தார்கள். இவர்களது ஒருங்கிணைந்த போராட்டத்தினால் தெலுங்கானா மாநிலம் உருவாகத்தான் போகிறது. இதைத் தடுக்க மத்திய அரசால் நிச்சயம் முடியாது.

அப்படியொன்று நிகழும்பட்சத்தில் இந்திய அரசியல் சரித்திரத்தில் இந்திய விடுதலைக்குப் பின்னான புரட்சியில் முக்கிய இடத்தை தெலுங்கானா மக்கள் உறுதியாகப் பெறுவார்கள்..

இத்தனையையும் தமிழ்நாட்டில் அத்தனை பேரும் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இருந்தோம். முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோதும் அதே நிலைமையில்தான் இருந்தோம். இப்போதும் அப்படியேதான் இருக்கிறோம். ஈழம் என்கிற சொல்லையே அந்த உணர்வுள்ள ஊருக்கு நூறு பேர் மட்டுமே உச்சரித்து வருகிறார்கள். அந்த அளவுக்குத்தான் நிலைமை.

முத்துக்குமாரின் மரணத்தின்போது முகமதுவுக்கு எழுந்ததுபோன்ற ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருந்தால் முள்ளிவாய்க்காலில் படுகொலையான அப்பாவி மக்களையாவது காப்பாற்றியிருக்கலாம். மிச்சம், மீதியிருந்த விடுதலைப்புலிகளை சமாதானத்திற்கு தயார் செய்திருக்கலாம். தனி ஈழம் என்பதை உலகம் தழுவிய அரசியலுக்கு நம்மால் முடிந்த அளவுக்காவாவது கொண்டு போயிருக்கலாம். ஆட்டு மந்தைகளைப் போல் மேய்ச்சல் முடிந்ததும் கொட்டடிக்கு போய்ச் சேர்ந்தவர்களாய் மறுநாள் பேப்பரில் படித்துவிட்டு அமைதியாகிவிட்டோம். காரணம் சுயநலம்.. பச்சையான சுயநலம்.

சுயநலம் என்பது மக்களின் பொதுநலத்திற்கு எதிரானது. மக்களின் பொதுநலனுக்கு விரோதமானது சுயநலம் என்பதை நாம் நமது வாரிசுகளுக்குச் சொல்லித் தருவதில்லை.. அடுத்த வீட்டில் சாவு நிகழ்ந்தால்கூட வீட்டுக்கு ஒருவர் போனால் போதும் என்று கதவைச் சாத்திக் கொண்டு டிவி பார்க்கின்ற அளவுக்கு நமது வாரிசுகளுக்குள் சுயநலத்தை வளர்த்துவிட்டோம். நமக்கே ஒரு சோதனை ஏற்படுகின்றபோதுதான் அதனை பொதுவாக்கி அப்போதுதான் நான்கு பேரிடம் ஆலோசனையையும், உதவியையும் கேட்கின்ற அளவுக்கு கண் இருந்தும் குருடர்களாக இருக்கிறோம்.

எத்தனை கோடி ரூபாய் ஊழல்கள் நடந்தாலும் நமக்கென்ன அதைப் பற்றி..? நம்ம காசு இல்லையே..? நம்ம அக்கவுண்ட்ல இருந்து டைரக்டா எடுக்கலையே..? என் பாக்கெட்டுல இருந்து உருவலையே..? அப்புறம் என்ன என்கிற அளவுக்குத்தான் நமது சுயநலப் பண்பாடு பயன்பாட்டில் உள்ளது.

அது நமது பணம்.. கொள்ளையடித்திருப்பது நமது வாரிசுகளின் பணம்.. நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வியாதிகள் கொள்ளைக்காரர்கள். நம் கண் முன்பாகவே திருடுகிறார்கள் என்பதெல்லாம் நமக்கே தெரிந்தும் நாம் அலட்சியமாக இருக்கிறோம். காரணம் நாம் நேரடியாக இதில் பாதிக்கப்படவில்லை. அவ்வளவுதான்.. இந்த ஒரு அலட்சியம்தான் அரசியல்வியாதிகளுக்கும், அந்தப் போர்வையில் இருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது..

அவன் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கட்டும். அதில் கொஞ்சத்தை நமக்கு தேர்தலின்போது தரட்டும். வாங்கிக் கொள்வோம். போதும்.. என்ற இந்த பிச்சைக்காரத்தனம் நம்மை என்றாவது ஒரு நாள் டுனீசியா, எகிப்தில் போராடிய மக்களைப் போல் பிச்சையெடுக்க வைக்கத்தான் போகிறது.. அப்போது முத்துக்குமார், அல்லது முகமது என்ற பெயருடன் எவர் வந்து நமக்காக தீக்குளிக்கப் போகிறாரோ? பார்ப்போம்.

73 comments:

  1. நீங்கள் சொல்ல வரும் கருத்து சரியானது தான். அனால், இதில் இரண்டு விஷயங்களை யோசிக்க வேண்டும்!

    1 நீங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், வேறு ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ஒரு அளவுக்கு மேல் மற்ற நாடு தலையிட முடியாது. அங்கு உயிரை விட்டுகொண்டிருப்பவர்கள் தமிழர்கள் என்ற உணர்ச்சி நிச்சயமாக இருக்கிறது அனால் பக்கத்துக்கு வீட்டில் சண்டை என்றால், பாதிக்க படுபவர் நமக்கு வேண்டியவர்களாக இருந்தாலம் பஞ்சாயத்து பண்ண முடியாது!
    2 இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்று இங்கு கூறும் யாரும் பொது மக்களான தமிழர்களுக்கு குரல் கொடுக்கவில்லை. மாறாக அந்த தமிழர்களை கேடயமாக பயன் படுத்திய விடுதலை புலிகள் என்னும் சர்வதிகார கும்பலை தான் ஆதரித்தன. இதற்க்கு மாறாக உண்மையாக மக்களுக்காக ஆதரவு கொடுத்திருந்தால் ஒரு வேளை நம் நாட்டுக்கு இலங்கை அரசை நிர்பந்திக்கும் பலம் இருந்திருக்கலாம். முதலில் சர்வாதிகார கும்பலை ஆதரித்ததால் அந்த வாய்ப்பும் இப்போது இல்லை.

    இதனால் இப்போது இலங்கை அரசு கடைபிடிக்கும் பார பட்சமான போக்கை ஒன்றும் செய்ய முடியாமல் முழிக்கிறார்கள் அறிவு ஜீவிகள்! பிரபாகரனுக்கும் ராஜபக்ஷேவுக்கும் இப்போது எந்த வித்தியாசமும் இல்லை!

    ReplyDelete
  2. // அந்த தமிழர்களை கேடயமாக பயன் படுத்திய விடுதலை புலிகள் என்னும் சர்வதிகார கும்பலை தான் ஆதரித்தன.//

    RAM சொன்ன மிக முக்கியமான உண்மையை நீங்களும் மற்றய பலரும் கவனிப்பதில்லை.

    ReplyDelete
  3. Immature comments by chandran and RAM
    pirabakaran never kill any srilankan people (singla)

    ReplyDelete
  4. //1 நீங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், வேறு ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ஒரு அளவுக்கு மேல் மற்ற நாடு தலையிட முடியாது. அங்கு உயிரை விட்டுகொண்டிருப்பவர்கள் தமிழர்கள் என்ற உணர்ச்சி நிச்சயமாக இருக்கிறது அனால் பக்கத்துக்கு வீட்டில் சண்டை என்றால், பாதிக்க படுபவர் நமக்கு வேண்டியவர்களாக இருந்தாலம் பஞ்சாயத்து பண்ண முடியாது!//

    தமிழர்களின் அழிவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவும்போது மட்டும்,
    வேறு ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்ற சொல் மறந்துவிடும்,
    அல்லது மறக்கப்பட்டுவிடும்... அப்படித்தானே???

    ReplyDelete
  5. >>> வரும் தலைமுறையை நீங்கள் தைரியமாக நம்பலாம்! இது வெறும் பேச்சு அல்ல சரண் சார். என் வயது ஒத்த பல இளைஞர்களிடம் நான் பார்த்த உணர்வு. அடுத்த தலைமுறை சரித்திரம் படைத்தே தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ReplyDelete
  6. தெலுங்கானா: உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் என்று
    கூறாதீர்கள்.... அவர்கள் மாணவர்கள் என்ற போர்வையில்
    பல்கலையில் நுழைந்த நக்சலைட்டுகள். மீடியா உலகம் "அவர்கள்" சார்பாகத் தான் எப்போதும் எழுதுவதால் இவ்வாறான மாயை ஏற்படுகிறது.
    மேலும் 1980களில் தெலுங்கானா மாநிலம் அமைக்கும் எண்ணத்தை அரசிடம் அளித்தனர், அங்கு அதிகாரத்தில் உள்ளவர்கள். ஆனால் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள்
    பிரிந்தால் பயன் இருக்காது என்று கூறி அதைத் தடுத்து நிறுத்தினர்.

    தற்போது, ஹைதராபாத் ஒரு பணம் கொழிக்கும் நகரம். மிகவும்
    வளர்ந்து விட்டது. மேலும் டீஆர்எஸ் போன்ற கட்சித் தலைமைகளின் முதல்வர் கனவால் இப்பிரச்னையில் எண்ணெய் ஊற்றப்படுகிறது.
    மற்றபடி உங்கள் கட்டுரை சிறந்த "EYE OPENER".

    ReplyDelete
  7. சி.வேல் said
    pirabakaran never kill any srilankan people (singla)
    தவறு. புலிகள் கொன்ற தமிழர்களின் தொகையுடன் ஒப்பிடும் போது குறைவு தான்.

    ஒரு இளைஞனின் மரணத்திற்கு அரசாங்கத்தின் ஜனநாயக விரோதமான விதிமுறைகளும், சர்வாதிகாரமும்தான் காரணம் என்று ஒரு சமுதாயமே பொங்கியிருக்கிறது. பாராட்டுக்கள்.- உண்மைத்தமிழன்
    டுனீசியாவில் Mohamed Bouazizi அரசு பொலிஸ் கொடுமைகளுக்கு எதிராக தீக்குளித்தார். மக்கள் எழுச்சி பெற்றனர்.முத்துக்குமார் அயல் நாட்டில் உள்ள பயங்கரவாத புலி இயக்கத்தை காப்பாற்றும் படி கேட்டு தனது உயிரை அநியாயமாக பலி கொடுத்தார்.

    ReplyDelete
  8. appuram eppadi unnaviratham iruntha mathiri, Sonia Rajapakshe kiita pesina mathiri, porai nirutha muyarchi pannar?

    App mattum engay irunthu vanthatu ulnaattu vivgarathil thalaiyidum urimai?

    ReplyDelete
  9. அண்ணே! தமிழனுக்கு எழுச்சி இல்லேன்னு நிறைய பேரு எழுதுறா மாதிரியே நீங்களும் பொதுப்படையா சொல்லிட்டீங்க! அப்பாலே பேசுறதுக்கு என்னண்ணே இருக்கு? ரைட்டு! :-)

    ReplyDelete
  10. தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளை வாசிக்கிறவன் என்கிற வகையில் சொல்கிறேன், மிகக் கடுமையான மன அழுத்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது.

    ReplyDelete
  11. [[[jegan said...

    I got ur point.]]]

    நன்றி ஜெகன்..!

    ReplyDelete
  12. [[[Ram said...

    நீங்கள் சொல்ல வரும் கருத்து சரியானதுதான். அனால், இதில் இரண்டு விஷயங்களை யோசிக்க வேண்டும்!

    1 நீங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், வேறு ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ஒரு அளவுக்கு மேல் மற்ற நாடு தலையிட முடியாது. அங்கு உயிரை விட்டுகொண்டிருப்பவர்கள் தமிழர்கள் என்ற உணர்ச்சி நிச்சயமாக இருக்கிறது. அனால் பக்கத்துக்கு வீட்டில் சண்டை என்றால், பாதிக்க படுபவர் நமக்கு வேண்டியவர்களாக இருந்தாலம் பஞ்சாயத்து பண்ண முடியாது!]]]


    2 இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்று இங்கு கூறும் யாரும் பொது மக்களான தமிழர்களுக்கு குரல் கொடுக்கவில்லை. மாறாக அந்த தமிழர்களை கேடயமாக பயன்படுத்திய விடுதலைபுலிகள் என்னும் சர்வதிகார கும்பலைதான் ஆதரித்தன. இதற்க்கு மாறாக உண்மையாக மக்களுக்காக ஆதரவு கொடுத்திருந்தால் ஒரு வேளை நம் நாட்டுக்கு இலங்கை அரசை நிர்பந்திக்கும் பலம் இருந்திருக்கலாம். முதலில் சர்வாதிகார கும்பலை ஆதரித்ததால் அந்த வாய்ப்பும் இப்போது இல்லை.

    இதனால் இப்போது இலங்கை அரசு கடைபிடிக்கும் பாரபட்சமான போக்கை ஒன்றும் செய்ய முடியாமல் முழிக்கிறார்கள் அறிவுஜீவிகள்! பிரபாகரனுக்கும் ராஜபக்ஷேவுக்கும் இப்போது எந்த வித்தியாசமும் இல்லை!]]]

    இப்படித்தான் நானும் சில காலம் நினைத்து இந்திய தேசியம் பேசிக் கொண்டிருந்தேன். இணையத்தில் இருக்கும் பல விஷயங்களைத் தோண்டியெடுத்து படித்த பின்புதான் உண்மையான ஈழம் விஷயமே தெரிந்தது.. முத்துக்குமாரின் மரணமும் சேர்ந்தே இந்தியத் தேசிய ஆதரவாளனாக என்னை ஒரு சுயமரியாதையுள்ள தமிழனாக மாற்றியது..

    ராம் ஸார்.. ஈழம் தொடர்பான கட்டுரைகள் அனைத்தையும் தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்கள். பின்பு பேசுங்கள்..!

    ReplyDelete
  13. [[[Chandran said...

    //அந்த தமிழர்களை கேடயமாக பயன்படுத்திய விடுதலைபுலிகள் என்னும் சர்வதிகார கும்பலை தான் ஆதரித்தன.//

    RAM சொன்ன மிக முக்கியமான உண்மையை நீங்களும் மற்றய பலரும் கவனிப்பதில்லை.]]]

    நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன்.. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியில்லை..!

    சுதந்திரம் கோரியவர்களும், மறைமுகமாக ஆதரவு தந்தவர்களும் புலிகளின் பக்கம் நின்றார்கள். ஏறக்குறைய ஈழத்து மக்கள் அனைவரும்.

    ReplyDelete
  14. [[[சி.வேல் said...

    Immature comments by chandran and RAM.

    pirabakaran never kill any srilankan people (singla)]]]

    இந்திய தேசியம் அவ்வாறு எங்களை மயக்கி வைத்திருக்கிறது வேல்..!

    ReplyDelete
  15. [[[தமிழன்பன் said...

    //1 நீங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், வேறு ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ஒரு அளவுக்கு மேல் மற்ற நாடு தலையிட முடியாது. அங்கு உயிரை விட்டுகொண்டிருப்பவர்கள் தமிழர்கள் என்ற உணர்ச்சி நிச்சயமாக இருக்கிறது அனால் பக்கத்துக்கு வீட்டில் சண்டை என்றால், பாதிக்க படுபவர் நமக்கு வேண்டியவர்களாக இருந்தாலம் பஞ்சாயத்து பண்ண முடியாது!//

    தமிழர்களின் அழிவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவும்போது மட்டும், வேறு ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்ற சொல் மறந்துவிடும். அல்லது மறக்கப்பட்டுவிடும். அப்படித்தானே?]]]

    வளைகுடா நாடுகளில் சிக்கலில் மாட்டிய கேரளாக்காரர்களை மீட்க மின்னல் வேகத்தில் செயல்படும் அரசு இலங்கை என்றாலே கண்டுகொள்ளாமல் போவதற்கு அங்கே இருப்பவன் தமிழன் என்பதும் ஒரு காரணம்தானே..! அப்போதெல்லாம் அடுத்த நாட்டு உள் விவகாரம் என்ற பேச்சு எழுவதில்லையே..?

    ReplyDelete
  16. [[[! சிவகுமார் ! said...

    >>> வரும் தலைமுறையை நீங்கள் தைரியமாக நம்பலாம்! இது வெறும் பேச்சு அல்ல சரண் சார். என் வயது ஒத்த பல இளைஞர்களிடம் நான் பார்த்த உணர்வு. அடுத்த தலைமுறை சரித்திரம் படைத்தே தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.]]]

    ம்.. பார்ப்போம்.. அப்படியொன்று நடந்தால் இந்திய துணைக் கண்டத்துக்கே நல்லது..!

    ReplyDelete
  17. [[[Sivakumar said...

    தெலுங்கானா: உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் என்று
    கூறாதீர்கள். அவர்கள் மாணவர்கள் என்ற போர்வையில்
    பல்கலையில் நுழைந்த நக்சலைட்டுகள். மீடியா உலகம் "அவர்கள்" சார்பாகத்தான் எப்போதும் எழுதுவதால் இவ்வாறான மாயை ஏற்படுகிறது.]]]

    நான் அப்படி நினைக்கவில்லை.. மாணவர்கள் சமுதாயமே இப்படி போராட முனைந்திருப்பது தற்போதைய இந்தியாவில் அரசியல்வியாதிகளுக்கு மாற்றாகவே இருக்கட்டும். அவர்கள் நக்ஸலைட்டுகளாகவே இருந்தாலும் பாதகமில்லை..!

    [[[மேலும் 1980களில் தெலுங்கானா மாநிலம் அமைக்கும் எண்ணத்தை அரசிடம் அளித்தனர், அங்கு அதிகாரத்தில் உள்ளவர்கள். ஆனால் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள்
    பிரிந்தால் பயன் இருக்காது என்று கூறி அதைத் தடுத்து நிறுத்தினர்.
    தற்போது, ஹைதராபாத் ஒரு பணம் கொழிக்கும் நகரம். மிகவும்
    வளர்ந்து விட்டது. மேலும் டீஆர்எஸ் போன்ற கட்சித் தலைமைகளின் முதல்வர் கனவால் இப்பிரச்னையில் எண்ணெய் ஊற்றப்படுகிறது.
    மற்றபடி உங்கள் கட்டுரை சிறந்த "EYE OPENER".]]]

    காலம் கடந்தாலும் தற்போது தெலுங்கானா உருவாகத்தான் வேண்டும். இது தற்போதைய காலத்தின் கட்டாயம்..!

    ReplyDelete
  18. [[[Chandran said...

    சி.வேல் said
    pirabakaran never kill any srilankan people (singla)
    தவறு. புலிகள் கொன்ற தமிழர்களின் தொகையுடன் ஒப்பிடும்போது குறைவுதான்.

    ஒரு இளைஞனின் மரணத்திற்கு அரசாங்கத்தின் ஜனநாயக விரோதமான விதிமுறைகளும், சர்வாதிகாரமும்தான் காரணம் என்று ஒரு சமுதாயமே பொங்கியிருக்கிறது. பாராட்டுக்கள்.- உண்மைத்தமிழன்

    டுனீசியாவில் Mohamed Bouazizi அரசு பொலிஸ் கொடுமைகளுக்கு எதிராக தீக்குளித்தார். மக்கள் எழுச்சி பெற்றனர்.முத்துக்குமார் அயல் நாட்டில் உள்ள பயங்கரவாத புலி இயக்கத்தை காப்பாற்றும்படி கேட்டு தனது உயிரை அநியாயமாக பலி கொடுத்தார்.]]]

    சந்திரன், முத்துக்குமாரின் மரண சாசனத்தை ஒரு முறை மறுபடியும் படித்துப் பாருங்கள்.. புலிகள் இயக்கத்தைக் காப்பாற்றுங்கள் என்றா அதில் சொல்லியுள்ளார்..!

    உங்களை மாதிரியானவர்கள் இப்படி சிந்திக்க ஆரம்பிப்பதே மிகப் பெரும் ஆபத்தாக இருக்கிறது..!

    ReplyDelete
  19. [[[Kalee J said...

    appuram eppadi unnaviratham iruntha mathiri, Sonia Rajapakshe kiita pesina mathiri, porai nirutha muyarchi pannar? App mattum engay irunthu vanthatu ulnaattu vivgarathil thalaiyidum urimai?]]]

    எதிர்காலத்தில் தமிழர்களின் வரலாற்றில் தன்னுடைய பெயர் மழுங்கிப் போய்விடக் கூடாதே என்பதற்காக தாத்தா செய்த செட்டப்பு உண்ணாவிரதம்..!

    வெளிநாட்டு விவகாரமாக இருந்தாலும் பாதிக்கப்படுபவர் தமிழன் என்கிற உணர்வு இங்கேயுள்ள தமிழர்களுக்கே இல்லையே..? என்ன செய்வது..? என்ன சொல்வது..?

    ReplyDelete
  20. [[[சேட்டைக்காரன் said...

    அண்ணே! தமிழனுக்கு எழுச்சி இல்லேன்னு நிறைய பேரு எழுதுறா மாதிரியே நீங்களும் பொதுப்படையா சொல்லிட்டீங்க! அப்பாலே பேசுறதுக்கு என்னண்ணே இருக்கு? ரைட்டு! :-)]]]

    உண்மையைத்தான சொல்றேன்.. சாதாரணமான ரேஷன் கடை ஊழலை எதிர்த்தே பேச மாட்டேன்றான்.. ஆனால் இவனுக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு என்றால் அத்தனை பேர்கிட்டேயும் போய் ஆதரவு கேக்குறான்.. இதுதான் தமிழனின் பொது புத்தி..

    ReplyDelete
  21. [[[மு.சரவணக்குமார் said...
    தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளை வாசிக்கிறவன் என்கிற வகையில் சொல்கிறேன், மிகக் கடுமையான மன அழுத்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது.]]]

    -))))))))))))

    ReplyDelete
  22. எகிப்தில் நடப்பதை கண்முன்னே நிறுத்துவதை போல அமைந்துள்ள இந்த கட்டுரை அருமை. உங்களுடன் சேர்ந்து எகிப்தியனை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    ReplyDelete
  23. வளைகுடா நாடுகளில் சிக்கலில் மாட்டிய கேரளாக்காரர்களை மீட்க மின்னல் வேகத்தில் செயல்படும் அரசு இலங்கை என்றாலே கண்டுகொள்ளாமல் போவதற்கு அங்கே இருப்பவன் தமிழன் என்பதும் ஒரு காரணம்தானே..! அப்போதெல்லாம் அடுத்த நாட்டு உள் விவகாரம் என்ற பேச்சு எழுவதில்லையே..?

    This is a wrong concept. Keralites are Indians. So the Indian Government can speak for them. But Srilankan Tamils are not Indians. They are not citizens of India. Dont come to a conclusion that I am supporting Srilankan Govt.

    ReplyDelete
  24. //எத்தனை கோடி ரூபாய் ஊழல்கள் நடந்தாலும் நமக்கென்ன அதைப் பற்றி..? நம்ம காசு இல்லையே..? நம்ம அக்கவுண்ட்ல இருந்து டைரக்டா எடுக்கலையே..? என் பாக்கெட்டுல இருந்து உருவலையே..? அப்புறம் என்ன என்கிற அளவுக்குத்தான் நமது சுயநலப் பண்பாடு பயன்பாட்டில் உள்ளது.

    அது நமது பணம்.. கொள்ளையடித்திருப்பது நமது வாரிசுகளின் பணம்.. நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வியாதிகள் கொள்ளைக்காரர்கள். நம் கண் முன்பாகவே திருடுகிறார்கள் என்பதெல்லாம் நமக்கே தெரிந்தும் நாம் அலட்சியமாக இருக்கிறோம். காரணம் நாம் நேரடியாக இதில் பாதிக்கப்படவில்லை. அவ்வளவுதான்.. இந்த ஒரு அலட்சியம்தான் அரசியல்வியாதிகளுக்கும், அந்தப் போர்வையில் இருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது..//

    Sathyamaana unmai Mr.Unmaitamizhan. Ellarum appadithaan irukkanga (including me!!!) Enakku inda visayathil miga periya koobam undu.. Aanal adai kaatta ellaraiyum pool enakkum bayam!!!!!!
    AAnal onnu... Enn kobathai katta vendiya idathil kaatuveen.. adhudaan innum 4 madathil. Oru togudiyil congress jeithalum Thamizhargal ellarum ..............!!!!!!!!!!!!! Neengaley fill panikonga!!!

    ReplyDelete
  25. Naan meley solli irupadhu Ezham todarbana ennudaiya koobam!!!

    ReplyDelete
  26. Ram,

    //1 நீங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், வேறு ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ஒரு அளவுக்கு மேல் மற்ற நாடு தலையிட முடியாது. அங்கு உயிரை விட்டுகொண்டிருப்பவர்கள் தமிழர்கள் என்ற உணர்ச்சி நிச்சயமாக இருக்கிறது அனால் பக்கத்துக்கு வீட்டில் சண்டை என்றால், பாதிக்க படுபவர் நமக்கு வேண்டியவர்களாக இருந்தாலம் பஞ்சாயத்து பண்ண முடியாது!//

    பாஸு. ஐ.நா.வின் கொள்கைப்படி பக்கத்து நாட்டில் மனித உரிமை மீரல் இருக்கும் போது, நமக்கு அந்த நாட்டின் பிரச்தினையில் தலையிட கட்டாயம் உரிமை இருக்கிறது. இதை எந்த நாடும் கண்டிக்காது. இலங்கையில் நடந்த மனித உரிமை மீரல் தெரிந்ததே. ஆனால், ஏன் இந்தியா அவ்வளாவாக கண்டுகொள்ளவில்லை? பங்களா தேஷ் மக்கள் அகதிகளாக கல்கத்தா வந்தபோது மட்டும் எப்படி இந்தியாவால், "A war in Pakistan becomes a war in India" என்று சொல்ல முடிந்தது?

    நம் பக்கம் தவறு இல்லையா? இருக்கிறது. ஆனால், அதற்காக இத்தனை அப்பாவிகளை பலி கொடுக்க வேண்டுமா?

    ReplyDelete
  27. @Ram @Chandren
    எப்படித்தான் இப்படியெல்லாம் உங்களுக்கு யோசிக்க தோன்றுகிறதோ! ஈழப்பிரச்சினையை அடுத்தநாட்டு பிரச்சினையாக பார்க்கும் நீங்கள் வங்கதேச பிரச்சினையை ஏன் அப்படி பார்க்கவில்லை? சக வங்காளி கிழக்கு பாகிஸ்தானில் கொல்லப்படுகிறான் என்றவுடன் இந்திய மத்திய அரசு இராணுவத்தை அனுப்பாவிட்டால் மேற்கு வங்கப் காவற்துறையினர் கிழக்கு பாகிஸ்தானுக்குச் செல்வார்கள் என எச்சரித்தார் அன்றைய மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கரரே. அதைத்தொடர்ந்துதான் ரானுவத்தை அனுப்பி வங்கதேசத்தை உருவாக்கியது இந்திராகாந்தி தலைமையிலான் இந்திய அரசு. இலங்கை போராளிகளுக்கு பயிற்சி தந்தபோது வராத இறையாண்மை குறித்த எண்ணம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும்போது மட்டும் உங்களுக்கு வருகிறதே இதற்குப்பேர்தான் பச்சை சந்தர்ப்பவாதம். வெட்கமாய் இருக்கிறது. பக்கத்து வீடு பற்றியெரியும் போது ஆகா! அடுப்பில்லாமலே நெய்காய்ச்சலாமே என்றாளாம் பக்கத்து வீட்டு மாமி. அப்படித்தான் இருக்கிறது உங்கள் கருத்து. காலம் உங்களையெல்லாம் இப்படியே விட்டுவிடாது. மனிதன் கற்க விரும்பாத பாடத்தையெல்லாம் காலம்தான் அவனுக்கு கற்றுத்தருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் இலங்கை சீன பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வரத்தான் போகிறது. காஷ்மீர் போல அங்கும் பயங்கரவாத முகாம்கள் பரவத்தான் போகின்றன. அதற்கப்பிறகு தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆப்பு. பார்க்கத்தானே போகிறீர்கள் அப்போது பார்ப்போம் இறையான்மை பேசுபவர்களை.

    ReplyDelete
  28. ///சீனு said...

    Ram,

    //1 நீங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், வேறு ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ஒரு அளவுக்கு மேல் மற்ற நாடு தலையிட முடியாது. அங்கு உயிரை விட்டுகொண்டிருப்பவர்கள் தமிழர்கள் என்ற உணர்ச்சி நிச்சயமாக இருக்கிறது அனால் பக்கத்துக்கு வீட்டில் சண்டை என்றால், பாதிக்க படுபவர் நமக்கு வேண்டியவர்களாக இருந்தாலம் பஞ்சாயத்து பண்ண முடியாது!//

    பாஸு. ஐ.நா.வின் கொள்கைப்படி பக்கத்து நாட்டில் மனித உரிமை மீரல் இருக்கும் போது, நமக்கு அந்த நாட்டின் பிரச்தினையில் தலையிட கட்டாயம் உரிமை இருக்கிறது. இதை எந்த நாடும் கண்டிக்காது. இலங்கையில் நடந்த மனித உரிமை மீரல் தெரிந்ததே. ஆனால், ஏன் இந்தியா அவ்வளாவாக கண்டுகொள்ளவில்லை? பங்களா தேஷ் மக்கள் அகதிகளாக கல்கத்தா வந்தபோது மட்டும் எப்படி இந்தியாவால், "A war in Pakistan becomes a war in India" என்று சொல்ல முடிந்தது?

    நம் பக்கம் தவறு இல்லையா? இருக்கிறது. ஆனால், அதற்காக இத்தனை அப்பாவிகளை பலி கொடுக்க வேண்டுமா?///

    ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அருமையான வாதம்!

    ReplyDelete
  29. ///தமிழ் நாடன் said...
    இன்னும் கொஞ்ச நாளில் இலங்கை சீன பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வரத்தான் போகிறது. காஷ்மீர் போல அங்கும் பயங்கரவாத முகாம்கள் பரவத்தான் போகின்றன. அதற்கப்பிறகு தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆப்பு. பார்க்கத்தானே போகிறீர்கள் அப்போது பார்ப்போம் இறையான்மை பேசுபவர்களை.///

    மறுக்க முடியாத உண்மை!! அவ்வளவு ஏன்! நம் அருணாச்சலப் பிரதேசத்தையே வளைத்து சீனக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!!

    ReplyDelete
  30. //உண்மைத்தமிழன் said...

    [[[மு.சரவணக்குமார் said...
    தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளை வாசிக்கிறவன் என்கிற வகையில் சொல்கிறேன், மிகக் கடுமையான மன அழுத்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது.]]]

    -))))))))))))
    //

    வழிமொழிகிறேன்! அண்ணே! நீங்களும் உணர்ச்சிவசப்பட்டு முத்துக்குமார் மாதிரி முடிவெடுத்துடாதீங்க. எங்களுக்கு நீங்க வேணும்!

    ReplyDelete
  31. ரணில் விக்கிரமசிங்கே அதிபராய் இருந்தபோது தமிழர்களிடம் அவருக்கு பரிவு இருந்ததென நினைக்கிறேன். அப்படி இருந்தபோது அதை ஏன் பிரபாகரன் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை?? ஆயுதங்கள் தாண்டி அந்நேரம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம் இல்லையா..??

    யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்கிறதா?

    ReplyDelete
  32. உண்மைத்தமிழா,

    உங்கள் சொற்கள் அம்புகளாய்ப் பாய்கின்றன.
    என்ன செய்ய....சுய நல அரசியல்வாதிகளினால் தான்
    நாம் வீழ்ந்தோம்.

    முத்துக்குமார் என்ற போராளி தமிழினத்தின் எழுச்சி
    வேண்டி தான் உயிரை விட்டான்.

    என்றாவது ஒருநாள் தமிழன் எழுவான்?அது விரைவில்
    நடக்க உங்களை மாதிரி " உண்மையான தமிழன்" நிறைய
    தேவை.

    ReplyDelete
  33. நிதர்சனமான உண்மை - இந்த உண்மை தமிழனுக்கு எப்ப தெரிய வரும்??

    ReplyDelete
  34. //என்ற இந்த பிச்சைக்காரத்தனம் நம்மை என்றாவது ஒரு நாள் டுனீசியா, எகிப்தில் போராடிய மக்களைப் போல் பிச்சையெடுக்க வைக்கத்தான் போகிறது.//
    இதில் எனக்கு உடன்பாடு இல்லை.காரணம் அவர்கள் அனைவரும் பிச்சையெடுக்கும் முன் அதற்கு காரணமானவர்களை அச்சுறுத்தி விட்டார்கள்.மேலும் கிள்ளினால் வலிக்கும் உணர்வு பிச்சைக்காரர்களுக்கும் உண்டு.ஆனால் பிணங்களுக்கு இருக்காது.உணர்வே இல்லாத பிணங்களிடம் சிந்தனையை பற்றிய விவாதம் சிரிப்பைதான் வரவழைக்கிறது.சில நாட்களாய் வலைப்பூக்களில் பற்றியெரிந்த மீனவர்களின் பிரச்னை இப்போது என்ன ஆனது?.அதன் தொடர்ச்சியாக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?.வலைப்பூவில் ஒருபதிவை எழுதியோ அல்லது விட்ஜெட்டை இணைத்தோ நாமும் ஈனத்தமிழன் என்பதை அடையாளப் படுத்தி விட்டு ராசாவுக்கும்-கனிமொழிக்கும் என்ன உறவு,இது பற்றி நாம் கேள்வி பட்டது எந்தளவிற்கு நம்பகமானது என்று ஆராய தொடங்கி விட்டோம்.சரி சரி முத்துக்குமாரின் நினைவு தினத்திற்கு அரசு விடுமுறை அளித்தால் நமக்கெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும்?.அது பற்றி அரசிடம் கோரிக்கை வைக்கலாமா?,அல்லது அதை வரும் தேர்தலில் வாக்குறுதியாக வழங்குபவர்களுக்கு வாக்களிக்கலாமா?.

    ReplyDelete
  35. /எந்த முகமது நமக்காக "தீ" குளிக்கப் போகிறார்//
    அங்கே மதம் அவர்களை இணத்திருக்கிறது,இணைக்கிறது.இங்கே அது நம்மை பிரித்திருக்கிறது,பிரிக்கிறது.

    ReplyDelete
  36. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால் சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.

    இந்திய பிரதமரின் படுகொலைக்கு பிறகு சட்டரீதியாகவும், சூடுசொரணை உள்ள ஒரு குடிமகனாகவும் நம்மால் அங்கே தலையிட முடியாது. எனவே இந்தியாவின் ஆதரவு இல்லாத நிலையில், பலமாக இருந்தபோதே பிரபாகரன் ஏதாவது ஒரு பேரத்துக்கு உடன்பட்டிருக்க வேண்டும்.

    ReplyDelete
  37. //வேறு ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ஒரு அளவுக்கு மேல் மற்ற நாடு தலையிட முடியாது//.
    அப்புறம் நமக்கு அங்கென்ன வேலை.அவன் பிரச்னைய அவன் பாத்துட்டு நாம வேடிக்கை மட்டுந்தான பாக்கணும்.

    ReplyDelete
  38. நம் நாட்டில் யாராவுது 1 லட்சம் கோடி ஊழல் நடந்ததுக்கு புரட்சி, போராட்டம் நடத்துறாங்களா.emotional issues க்கு தானே சார் போராட்டம் நடக்குது

    ReplyDelete
  39. //இதனால் இப்போது இலங்கை அரசு கடைபிடிக்கும் பார பட்சமான போக்கை ஒன்றும் செய்ய முடியாமல் முழிக்கிறார்கள் அறிவு ஜீவிகள்! பிரபாகரனுக்கும் ராஜபக்ஷேவுக்கும் இப்போது எந்த வித்தியாசமும் இல்லை!//

    ஒரு போராட்டத்தின் பரிணாமம் தெரியாத பின்னூட்டம்.பிரபாகரனின் எதிர்வினைகளைக்கூட வேறு கோணத்தில் சிந்திக்க தெரியாமல் ராஜபக்‌ஷேவுடன் ஒப்பிடுவது வரலாறு கூர்ந்து நோக்காத எதிர்வினை என்பேன்.

    ReplyDelete
  40. அண்ணே கிட்டத்தட்ட ஒரு புரட்சியை நெருங்குகிறோம் என நினைக்கிறேன் ..

    ReplyDelete
  41. //இந்திய பிரதமரின் படுகொலைக்கு பிறகு சட்டரீதியாகவும், சூடுசொரணை உள்ள ஒரு குடிமகனாகவும் நம்மால் அங்கே தலையிட முடியாது. எனவே இந்தியாவின் ஆதரவு இல்லாத நிலையில், பலமாக இருந்தபோதே பிரபாகரன் ஏதாவது ஒரு பேரத்துக்கு உடன்பட்டிருக்க வேண்டும்.//

    கரடு முரடான ஒரு போராட்டத்தின் விமர்சனங்களோடு விட்டால் சூடு சொரணை குடிமகன் போர்வையில் விட்டால் ராஜபக்சேவுக்கு கொடி பிடிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்கிற மாதிரி பின்னூட்டவாதிகளும் இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.

    தொடரும் பயணத்தில் ஈழமக்களின் துயரம் தீரவும்,அவர்களின் சம உரிமை வாழ்வுக்கு தீர்வுகள் நோக்கிய பயணமாக சிந்தனை பின்னூட்டவாதிகளை வரவேற்கிறேன்.

    இது மண் சார்ந்த மக்களின் வாழ்வியல் போராட்டம்.தேர்ந்தெடுத்த வழி எதுவாயினும் பிரபாகரன் மண்ணுக்கான உரிமைக்கான விதையை விதைத்திருக்கிறான் சகவாழ் மனிதர்களின் துணையுடனும் துயரங்களுடனும்.

    சமவாழ்வுக்கான தீர்வுகள் கிட்டும் வரை உரிமைக்கான உணர்வுகள் நீரு பூத்த நெருப்பாகவே இருக்கும்.

    ReplyDelete
  42. சிவா said...
    //இந்திய பிரதமரின் படுகொலைக்கு பிறகு சட்டரீதியாகவும், சூடுசொரணை உள்ள ஒரு குடிமகனாகவும் நம்மால் அங்கே தலையிட முடியாது.//

    ஆமாம், அப்பாவிப் பொது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படும்போது தலையிட முடியாது.
    ஆனால் அவர்களைக் கொல்வதற்கு வேண்டிய சகல வசதிகளையும் தங்கு தடையில்லாமல் செய்து தர முடியும்.

    ReplyDelete
  43. என்னப்பூ இப்படி கோவபடறீங்க. ஆனா ஒரு அறிவுஜீவி(?) ஸ்பெக்ட்ரம் பத்தி தப்பா எழுதறார்னு சொன்னா உடனே எனக்கு அட்வைஸ் பண்றீங்க. அவர் வேறு கோணத்தில் எழுதியாதாக ஜல்லியடிக்கீறீகள். அந்த பதிவை பற்றீ நீங்கள் எங்காவது விமர்சித்தீரா? உங்களுக்கு அவர் சொம்படித்தால் அது வேறு கோணம். மற்றவங்க தப்பு பண்ணா அது அவரோகணாமா? முதல்ல நீங்க நேர்மையா எல்லாரையும் விமர்சியுங்கள். அப்புறம் மத்தவங்களை பார்க்கலாம்.

    ReplyDelete
  44. அன்புள்ளம் கொண்டோர்களே...
    தங்கள் அனைவர் மீது இறைவனின் சாந்தி நிலவட்டுமாக...

    //எந்த முகமது நமக்காகத் தீக்குளிக்கப் போகிறார்..?//

    ஏன்..? இப்படி ஒரு தலைப்பு வைத்தீர்கள்? கட்டுரைக்கு முற்றிலும் பொருந்தா தலைப்பாக... இது ஒரு கடைந்தெடுத்த சுயநலமாக தெரியவில்லையா?

    இதை படிப்பவர்களுக்கு நிச்சயமாக இப்படித்தான் கேட்கத்தோன்றுகிறது... ஆனால், முகதாட்சணியத்திற்காக யாரும் கேட்பதில்லை. ஆனால், நான் உண்மையை சுடும் என்றாலும் உரத்துக்கூற தயக்கபடுவதில்லை.

    "இது(தற்கொலை)தான் உயர்வான போற்றத்தக்க அத்தியாவசியமான புரட்சிக்கு வித்திடும் செயல் என்றால்... அதை ஏன், சொல்லும் நீங்கள் முதலில் செய்து ஆரம்பித்துவைத்து அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகக்கூடாது..?" ---என்று கேட்டுவிடக்கூடுமே... சகோ.உண்மைத்தமிழன்?

    இன்னும் புரியவில்லை என்றால்...

    ஒருவனுக்கு குண்டும் குழியும் நிறைந்த வீதியை பார்த்து... நகராட்சி ஏன் இதை சரி செய்ய வில்லை என்ற நியாயமான கோபம்... "எவனாவது இந்த குழியில விழுந்து சாகுங்கடா... அப்பத்தான் ஆக்ஷன் எடுப்பானுங்க" என்று சொல்வது நியாயமான அவன் பொதுநல கோபத்தை பின்னுக்குத்தள்ளி அந்த சுயநல சாடிஸ்ட் மனதை அல்லவா வெளிக்காட்டுகிறது..?

    பல இன்னல்களுக்கு ஆட்பட்ட முஹம்மது நபி மக்காவிலேயே தற்கொலை செய்து கொண்டிருந்தால்..?

    தென் ஆபிரிக்காவிலேயே வெள்ளையனை எதிர்த்து காந்தி தற்கொலை செய்து கொண்டிருந்தால்...?

    பலநாடுகளில் புரட்சி செய்த சே குவாரா, முதலில் அர்ஜென்டினாவிலேயே தற்கொலை செய்து கொண்டிருந்தால்..?

    1980-ல் ஈழத்துக்காக பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டிருந்தால்..?

    தற்கொலைதான் புரட்சிக்கு சரியான வித்தாகுமா? சிந்திப்பீர்களாக சகோ.

    ReplyDelete
  45. //தற்கொலை)தான் உயர்வான போற்றத்தக்க அத்தியாவசியமான புரட்சிக்கு வித்திடும் செயல் என்றால்...//

    அப்படியா சொல்லியிருக்கிறார்? எனக்கு தெரியவில்லையே?

    //தற்கொலைதான் புரட்சிக்கு சரியான வித்தாகுமா? சிந்திப்பீர்களாக சகோ.//

    புரட்சிக்கு சரியான வித்து தற்கொலை தான் என்று யாரும் சொல்லவில்லை, அதை ஆதரிக்கவும் இல்லை. உங்களுக்கு மட்டும் தான் அப்படி புரிந்திருக்கிறது போலும்.

    ReplyDelete
  46. @ ராஜ நடராஜன் said ......

    @ தமிழன்பன் said....

    ஈழத்தமிழர்களின் கோபத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. நானும் ஒரு தமிழன் என்ற முறையில் அங்கே ஈழம் அமைந்தால் எனக்கு சந்தோஷமே! ஆனால் சூழ்நிலைகள் சரியில்லை என்றால் நாம் அதை அனுசரித்து போகவேண்டும்.

    மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா போருக்கு போக முடிந்ததா? இல்லை, தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றபோது பதிலடிதான் கொடுத்ததா? இந்தியாவால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கமுடியாதா என்ன? இன்று வெற்றியை பலம் நிர்ணயிப்பதில்லை, விவேகம்தான் நிர்ணயிக்கிறது. சூழ்நிலை சரி இல்லை என்றால் கொஞ்சம் அடக்கிதான் வாசிக்க வேண்டும். இது இந்தியாவுக்கும் பொருந்தும், புலிகளுக்கும் பொருந்தும்.

    புலிகளின் பலத்துடன் ஒப்பிடும்போது கருணா ஒரு எலியாக இருக்கலாம். ஆனால் அந்த எலியை பகைத்துக்கொண்டதால் என்னவாயிற்று? அந்த எலி ராஜபக்சே என்ற குள்ள நரியுடன் சேர்ந்து பிரபாகரனையே பலிவாங்கிவிட்டது. எனவே ஸ்ரீலங்கா என்ற எலியை இந்தியா என்ற புலி தற்போதைக்கு பகைத்துக் கொண்டால் இந்தியாவுக்கும் சில பிரச்சினைகள் வரலாம்.

    அதற்காக தமிழ் மக்களை கொன்று குவிக்க இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்யவேண்டுமா? அதை தடுக்க முயற்சி செய்யவேண்டாமா? நியாயமான கேள்விதான். ஈழத்தமிழர்களின் துரதிருஷ்டம் விவேகமில்லாத ஒரு தலைவன். இந்திய தமிழனின் துரதிருஷ்டம் சுயநலம் நிறைந்த ஒரு தலைவர். அதன் விளைவுதான் இது. அதற்காக இது ஒரு துன்பவியல் சம்பவம் என்றெல்லாம் சொல்லி ஒரு (இனப்) படுகொலையை நான் நியாயப்படுத்தமாட்டேன்.

    இந்திய தலைவர்கள் குறிப்பாக தமிழக தலைவர்கள், `சீன அல்லது இந்திய உதவியுடன் உங்களுக்கு ஒரு முடிவு வந்துவிடும். எனவே ஒரு முடிவுக்கு வாருங்கள்` என்று பிரபாகரனை வற்புறுத்தியிருக்க வேண்டும். அல்லது ஒட்டு மொத்தமாக இலங்கை விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கியிருக்க வேண்டும். இதுதான் என் கருத்து. அப்படி ஒதுங்கியிருந்தாலும் சீன உதவியுடன் இந்த சண்டை முடிந்திருக்கும். அப்போதும் இந்தியா தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கும். இந்தியா என்ன முடிவெடுத்திருந்தாலும் பழி இந்தியா மேலதான். எதையாவது திட்டிட்டு போங்க.

    ReplyDelete
  47. //ஈழத்தமிழர்களின் கோபத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. நானும் ஒரு தமிழன் என்ற முறையில் அங்கே ஈழம் அமைந்தால் எனக்கு சந்தோஷமே! ஆனால் சூழ்நிலைகள் சரியில்லை என்றால் நாம் அதை அனுசரித்து போகவேண்டும்.//

    மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா போருக்கு போக முடிந்ததா? இல்லை, தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றபோது பதிலடிதான் கொடுத்ததா? இந்தியாவால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கமுடியாதா என்ன? இன்று வெற்றியை பலம் நிர்ணயிப்பதில்லை, விவேகம்தான் நிர்ணயிக்கிறது. சூழ்நிலை சரி இல்லை என்றால் கொஞ்சம் அடக்கிதான் வாசிக்க வேண்டும். இது இந்தியாவுக்கும் பொருந்தும், புலிகளுக்கும் பொருந்தும்.

    சிவா!பழத்தை பழமின்னும் சொல்லலாம்,பயமின்னும் சொல்லலாம்.கூடவே வடிவேலு மாதிரி இந்தியா எத்தனை அடிச்சாலும் தாங்குவான்னும் சொல்லலாம்.

    மனிதர்கள் பூமிப்பந்தில் ஒன்றாக வாழ்ந்தாலும் வாழும் மண்ணிற்கேற்பவும்,இதர காரணிகள் காரணமாகவும் அவரவர்க்கு என்று குணநலன்கள் அமைந்து விடுகிறது.எத்தனை படையெடுப்புக்கள்,எத்தனை ஆட்சி மாற்றங்கள்,இன்னும் இந்தியா தனித்துவமாக நிற்கிறது என்று பேருக்கு பெத்த பேரு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.ஆனால் வாழ்வியல் முறை எப்படியென்பதை நாமே பறைசாற்றிக்கொண்டிருக்கிறோம்.

    இந்தியா யாரையும் அடிக்காது அதே நேரத்தில் இந்தியாவை அடிக்க அனுமதிக்க கூடாது என்ற பலம் மட்டுமே விவேகமாக இருக்க இயலும்.கோழைத்தனத்தின் இன்னொரு பெயர் என்பதை அடக்கி வாசிப்பது என்றும் எடுத்துக்கொள்ளலாமோ?

    ReplyDelete
  48. //புலிகளின் பலத்துடன் ஒப்பிடும்போது கருணா ஒரு எலியாக இருக்கலாம். ஆனால் அந்த எலியை பகைத்துக்கொண்டதால் என்னவாயிற்று? அந்த எலி ராஜபக்சே என்ற குள்ள நரியுடன் சேர்ந்து பிரபாகரனையே பலிவாங்கிவிட்டது. எனவே ஸ்ரீலங்கா என்ற எலியை இந்தியா என்ற புலி தற்போதைக்கு பகைத்துக் கொண்டால் இந்தியாவுக்கும் சில பிரச்சினைகள் வரலாம்.//

    எலி வீட்டையே குழி பறிக்கிறது.அதற்காக இத்தனூண்டு எலி இம்மாந்தண்டி வீட்டையே குழி பறிச்சிருச்சுன்னா பெருமை பட்டுக்கிறது.எலிக்கு பொறி வைத்து பொட்டிக்குள் அடைக்கும் வழியை மட்டுமே வீட்டுக்காரன் யோசிப்பான்.

    இலங்கை எலியும் சீனா குள்ளநரியுடன் குழி பறிச்சுகிட்டுத்தான் இருக்கிறது.எலி கூடவும் குள்ளநரியுடனும் இந்தியப்புலி பகைச்சுக்க கூடாது.பிரச்சினை வரும் இல்ல?

    கரியப்பா கூடத்தான் இந்திராகாந்தியிடம் “மேடம்!இந்த பாகிஸ்தானி பசங்களை Line of control க்கும் அப்பால போய் ஒரு போடு போட்டுட்டு வந்துடறேன்.அனுமதி கொடுங்கன்னு கேட்டப்ப அதெல்லாம் வேண்டாம் அமெரிக்க தாதா அவனுக்கு பலமா இருக்கான்.பிரச்சினை வரும்ன்னாங்க.அவன் விடாம காஷ்மீர்ன்னு பிரச்சினை கொடுத்துகிட்டே இருந்தான்.இருக்கான்.

    விடுகதை போட்டிருக்கேன்.புரிஞ்சா நல்லது.

    ReplyDelete
  49. //ஈழத்தமிழர்களின் துரதிருஷ்டம் விவேகமில்லாத ஒரு தலைவன். இந்திய தமிழனின் துரதிருஷ்டம் சுயநலம் நிறைந்த ஒரு தலைவர். அதன் விளைவுதான் இது.//

    முந்தையதை விட இரண்டாமதில் உண்மை ஒளிந்து கொண்டுள்ளது.

    ReplyDelete
  50. //இந்திய தலைவர்கள் குறிப்பாக தமிழக தலைவர்கள், `சீன அல்லது இந்திய உதவியுடன் உங்களுக்கு ஒரு முடிவு வந்துவிடும். எனவே ஒரு முடிவுக்கு வாருங்கள்` என்று பிரபாகரனை வற்புறுத்தியிருக்க வேண்டும்.//

    இந்த வார்த்தைகளுக்கு களம் நின்ற போராளிகளும்,வழி நடத்திய போராளிகளுமே சூதுகள் வாய்ந்த,திருப்பங்கள் நிறைந்த போராட்டத்தின் விளைவுகளை விவாதிக்க தக்கவர்கள்.

    ReplyDelete
  51. \\இப்படித்தான் நானும் சில காலம் நினைத்து இந்திய தேசியம் பேசிக் கொண்டிருந்தேன். இணையத்தில் இருக்கும் பல விஷயங்களைத் தோண்டியெடுத்து படித்த பின்புதான் உண்மையான ஈழம் விஷயமே தெரிந்தது.. முத்துக்குமாரின் மரணமும் சேர்ந்தே இந்தியத் தேசிய ஆதரவாளனாக என்னை ஒரு சுயமரியாதையுள்ள தமிழனாக மாற்றியது..

    ராம் ஸார்.. ஈழம் தொடர்பான கட்டுரைகள் அனைத்தையும் தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்கள். பின்பு பேசுங்கள்..!\\

    நான் எங்கே இந்திய தேசியம் பேசி இருக்கிறேன்? நம் அரசின் கையாலாகா தனத்தின் அடிப்படை என்ன என்று தான் கூறியிருக்கிறேன்.
    ஈழம் தொடர்பான கட்டுரைகளை நான் உங்கள் அளவுக்கு படித்ததில்லை. நன்றாக படித்த நீங்கள் பிரபாகரன் "நாங்கள் சர்வாதிகாரத்தையே கையாள்வோம்" என்று கூறவில்லை என்கிறீர்களா?

    ReplyDelete
  52. @ ராஜ நடராஜன் said.... <<<>>>>


    வார்த்தைகளோடு வருடக்கணக்கில் விளையாடலாம் நண்பரே. கடந்த 30 ஆண்டுகளாக மாவீரன் என்று வர்ணிக்கப்பட்டவர் கடைசியில் கைப்புள்ள கணக்கா காணாம போனத வரலாறு இப்பதான் பதிவு செஞ்சிருக்கு. அவர சொல்லி குற்றமில்லை. எல்லாரும் அவர உசுப்பி உட்டு ரணகளமாக்கிட்டாங்க. எனவே ஆரம்பத்தில் புலியாய் உறுமி பின்னர் எலியாய் போவதைவிட, தற்போதைக்கு அடக்கி வாசித்து சரியான நேரத்தில் வீரத்தை காட்டுவதுதான் விவேகம். இது உங்களுக்கு கோழைத்தனமாக தெரிந்தால் எனக்கொன்றும் ஆட்சபனையில்லை.

    நான் இந்தியன் என்பதற்காக இந்தியாவை கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் இல்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எனக்கும் அதிருப்தி இருக்கிறது. ஆனால் ஈழத்தமிழனின் இன்றைய பரிதாப நிலைக்கு இந்தியா மட்டும்தான் காரணம் என்று நினைக்காதீர்.இந்தியா ஆயுதம் வழங்கியிருக்கலாம், சிங்களவன் சுட்டிருக்கலாம். ஆனால் வெற்றி சாத்தியமில்லாத நிலையில் வரட்டுபிடிவாதம் பிடித்து ஈழத்தமிழனுக்கு குழிதோண்டி வைத்தது பிரபாகரன்தான்.

    ReplyDelete
  53. //வளைகுடா நாடுகளில் சிக்கலில் மாட்டிய கேரளாக்காரர்களை மீட்க மின்னல் வேகத்தில் செயல்படும் அரசு இலங்கை என்றாலே கண்டுகொள்ளாமல் போவதற்கு அங்கே இருப்பவன் தமிழன் என்பதும் ஒரு காரணம்தானே..! அப்போதெல்லாம் அடுத்த நாட்டு உள் விவகாரம் என்ற பேச்சு எழுவதில்லையே..?//

    வளைகுடா நாடுகளில் சிக்கலில் இருப்பவர்கள் இந்திய குடி மக்கள்! வாயிற்று பிழைப்புக்காக அங்கே வேலை பார்பவர்கள். இலங்கைளில் இருப்பவர்கள் இந்திய குடி மக்கள் அல்லர்!
    Note: நீங்கள் கூறியிருக்கும் கருத்தில் உள்ள முரண்பாட்டை மட்டுமே சுட்டிக்காடியிருக்கிறேன். தமிழர்களை அப்பிடியே விட வேண்டும் என்று கூற வில்லை!

    ReplyDelete
  54. //சக வங்காளி கிழக்கு பாகிஸ்தானில் கொல்லப்படுகிறான் என்றவுடன் இந்திய மத்திய அரசு இராணுவத்தை அனுப்பாவிட்டால் மேற்கு வங்கப் காவற்துறையினர் கிழக்கு பாகிஸ்தானுக்குச் செல்வார்கள் என எச்சரித்தார் அன்றைய மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கரரே. அதைத்தொடர்ந்துதான் ரானுவத்தை அனுப்பி வங்கதேசத்தை உருவாக்கியது இந்திராகாந்தி தலைமையிலான் இந்திய அரசு.//

    கோபத்தில் வார்த்தைகளை வீசி விட்டீர்கள். பரவாயில்லை! நீங்கள் மேலே குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சி நியாயமானது என்று நான் கூறவே இல்லையே! நான் கூறாத கருத்துக்கு ஏன் மேல் ஏன் இந்த பாய்ச்சல்?

    ReplyDelete
  55. ராஜ நடராஜனின் பின்னூட்டங்கள் சிறப்பாக உள்ளன...
    மேலும் பல தகவல்களுக்கு கீழுள்ள இணைப்பையும் பாருங்கள்...

    http://www.tamilulakam.com/news/view.php?id=22870

    ReplyDelete
  56. //அதற்காக தமிழ் மக்களை கொன்று குவிக்க இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்யவேண்டுமா?//

    நிச்சயம் தவறு தான்! இதை நாம் செய்திருக்க கூடாது!

    சரி, நாம் ஆயுதம் வழங்காமலே பிரபாகரன் தமிழர்களை கொன்றானே, அதை ஏன் யாருமே தட்டி கேட்பதில்லை?

    ReplyDelete
  57. //Immature comments by chandran and RAM pirabakaran never kill any srilankan people (singla)//
    That's right! Pirabakaran killed a lot of Tamilians right from Amirthalingam to Neelan Thiruchelvam to Maathaiya!!! Chandan & RAM should have gotten their facts correct before making 'immature' comments!!!

    ReplyDelete
  58. புலிகள் பயங்கரவாதிகள் என்பதும் அவர்கள் நம்பத்தகாதவர்கள் என்பதும் அமிர்தலிங்கம் முதல் மாத்தையா, நீலன் திருச்செல்வம் வரை கொன்று குவித்ததில் நிரூபணமானது. தனக்குப் போட்டியாக யாரும் இருக்கக் கூடாது என்ற தனிமனிதப் பேராசை ஒரு இனத்தின் வாழ்வாதாரப் போராட்டத்தை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது.

    சிங்களர்கள் சீனர்களுக்கு சொம்பு தூக்குவது நமக்குப் பாதுகாப்புச் சிக்கல். சீனர்கள் அருணாசலப் பிரதேசம், காஷ்மீர் என்று துவங்கி இன்று இந்தப் பக்கமும் பாரதத்தை நெருக்குகிறார்கள்.

    இலங்கை நமக்குப் பாதகமாய்ச் சீனாவுடன் சேர்வது நமக்கு நல்லதல்ல. ஈழத்தமிழர் நலனில் நாம் காட்டும் அக்கறையும் சீனத்தின் ஆசியோடு நடக்கும் சின்னத்தனங்களைத் தடுக்கச் செய்யும் உதவிகளுமே அங்கே நமக்கொரு support base தரும். ராஜபக்ஷே நமக்குப் பாதகமாய்ச் செயல்பட மிகவும் யோசிப்பார்.

    ஈழப் பிரச்சினையில் புலிகளைப் புறந்தள்ளிவிட்டு அவர்கள் சொதப்பிய ராஜதந்திர விஷயங்களில் சற்றே முனைந்திருந்தால் நாம் தெற்காசியாவில் நிஜமாகவே பெரியண்ணன் ஆகியிருப்போம். அந்த மக்களும் மகிழ்வுடன் வாழ்ந்திருப்பார்கள். ஆனால், இலங்கையிடமும் முறையாகப் பேசாமல், பிரச்சினையின் ஆணிவேரையும் பிடுங்காமல் அதை வைத்து ஓட்டு வாங்கவே நம் தமிழினத் தலைவர்கள் முனைந்தனர்.

    ஈழப் பிரச்சினையில் புலிகள் ஒழிந்ததும் ஈழத்து மக்களை ஆதரிப்பது என்று ஜெயலலிதா சரியான முடிவெடுத்தார். புலிகளைத் தவிர்த்து சாதாரண மக்கள் நம்மவர் என்று உறுதியாகச் சொன்னார். அந்த உறுதி தொடர்ந்தால் நல்லது.

    My views will be India centric! That is the only way I would approach any issue!

    ReplyDelete
  59. //சென்னையில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஹைதராபாத்தில்//அண்ணே இது ஓவரால்ல?அது 725 கிலோமீட்டர்.தகவல் பிழை இருக்கலாம்,அதுக்குன்னு மூணுமடங்கா?

    ====
    இந்த முபாரக் திருடனின் சொத்து மதிப்பு எட்டரை லட்சம் கோடி கோடி ரூபாய் என கணித்திருக்கின்றனராம்.

    ReplyDelete
  60. ஒரே வாரத்தில் 300க்கும் மேற்பட்டோர் இறந்துபோயும்,இந்த கொலைகாரன் பதவி விலக மாட்டேன் என்கிறான். ஒருக்கால் இவன் மக்களால் அடித்து விரட்டப்பட்டால் பலே திருடனுக்கும் இடி அமீனுக்கு கொடுத்ததுபோல அயோக்கிய நாடு சவுதிஅரேபியா அடைக்கலம் கொடுத்து விடும்.

    ReplyDelete
  61. //Immature comments by chandran and RAM
    pirabakaran never kill any srilankan people (singla)//

    Are you sure Mr. C. Vel? I just cannot understand why some of you are so desparately trying to hide the truth which the entire world knows!

    Ram

    ReplyDelete
  62. //வார்த்தைகளோடு வருடக்கணக்கில் விளையாடலாம் நண்பரே. கடந்த 30 ஆண்டுகளாக மாவீரன் என்று வர்ணிக்கப்பட்டவர் கடைசியில் கைப்புள்ள கணக்கா காணாம போனத வரலாறு இப்பதான் பதிவு செஞ்சிருக்கு.//

    சிவா!உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.என்னை விட நேரடி வாழ்க்கை அனுபவங்கள் உங்களுக்கு இருந்தும் பிரபாகரன் என்ற சொல்லையும் தாண்டிய ஒரு போராட்டத்தின் மையப்புள்ளி பற்றி அலசாமலும் ஈழப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகராமலும் குற்றம் சொல்லல் என்ற எல்லையிலே நீங்கள் நிற்பதால் உங்கள் மொழி... வார்த்தை விளையாட்டை நிறுத்திக்கொள்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  63. Arun Ambie said...

    //சிங்களர்கள் சீனர்களுக்கு சொம்பு தூக்குவது நமக்குப் பாதுகாப்புச் சிக்கல். சீனர்கள் அருணாசலப் பிரதேசம், காஷ்மீர் என்று துவங்கி இன்று இந்தப் பக்கமும் பாரதத்தை நெருக்குகிறார்கள்.

    இலங்கை நமக்குப் பாதகமாய்ச் சீனாவுடன் சேர்வது நமக்கு நல்லதல்ல. ஈழத்தமிழர் நலனில் நாம் காட்டும் அக்கறையும் சீனத்தின் ஆசியோடு நடக்கும் சின்னத்தனங்களைத் தடுக்கச் செய்யும் உதவிகளுமே அங்கே நமக்கொரு support base தரும். ராஜபக்ஷே நமக்குப் பாதகமாய்ச் செயல்பட மிகவும் யோசிப்பார்.

    ஈழப் பிரச்சினையில் புலிகளைப் புறந்தள்ளிவிட்டு அவர்கள் சொதப்பிய ராஜதந்திர விஷயங்களில் சற்றே முனைந்திருந்தால் நாம் தெற்காசியாவில் நிஜமாகவே பெரியண்ணன் ஆகியிருப்போம். அந்த மக்களும் மகிழ்வுடன் வாழ்ந்திருப்பார்கள். ஆனால், இலங்கையிடமும் முறையாகப் பேசாமல், பிரச்சினையின் ஆணிவேரையும் பிடுங்காமல் அதை வைத்து ஓட்டு வாங்கவே நம் தமிழினத் தலைவர்கள் முனைந்தனர்.

    ஈழப் பிரச்சினையில் புலிகள் ஒழிந்ததும் ஈழத்து மக்களை ஆதரிப்பது என்று ஜெயலலிதா சரியான முடிவெடுத்தார். புலிகளைத் தவிர்த்து சாதாரண மக்கள் நம்மவர் என்று உறுதியாகச் சொன்னார். அந்த உறுதி தொடர்ந்தால் நல்லது.//

    பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.
    ஈழத்து தமிழரின் நலனில் இந்தியா கொண்டுள்ள அக்கறையை தெட்டத் தெளிவாகப் புலப்படுத்தும் வார்த்தைகள்....

    ReplyDelete
  64. தலைவா....

    தலைப்பிலிருந்து ஆரம்பித்து, பதிவின் முடிவு வரை ஒரே சூடோ சூடு....

    ”ஆம்” அல்லது “இல்லை” என்ற ஏதாவதொரு வார்த்தை சொல்லுங்க... வர்ற எலெக்‌ஷன்ல “தல”க்கு ஓட்டு போடணுமா, இல்ல போடாம விரட்டணுமா?

    ReplyDelete
  65. புலிகள் அழிவுக்கு காரணம் புலிகள்தான் தம்மை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவத்தில் அவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமா?, 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணதில் தான் உண்டு தன் வியாபாரம் உண்டு என்று இருந்த அப்பாவி முஸ்லிம் தமிழர்களை துப்பாக்கி முனையில் அவர்கள் பல பல நுற்றாண்டு காலமாய் வாழ்ந்த வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாவற்றயும் போட்டுவிட்டு உடுத்திய துணி 500 ருபாய் பணம் மட்டுமே அனுமதி என்று நான்கு மணி நேரத்தில் லாரிகளில் வைத்து விரட்டியது யார்? இரக்கமே இல்லாமல் குழ்ந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் நோயாளிகள் என்று பார்க்காமல் விரட்டியது யார்? குழ்ந்தைகள் கழுத்தில் கிடந்த சங்கிலி, வளையல் நகைகளை கொரடை கொண்டு வெட்டி எடுத்தவர்கள் யார்? கொள்ளை அடித்த பொருள்களை புத்த கோவிலில் வைத்து விற்றவர்கள் யார்? சிங்களவனா? இல்லையே புலிகளைதானே அது மட்டுமா கிழக்கு மாகாணத்தில் வாசித்த லட்சகணக்கான முஸ்லிம் தமிழர்களை விரட்டி அவர்களை அகதியாய் ஆக்கியது, காலையில் பள்ளிவாசலில் தொழுது விட்டு வந்த அப்பாவி முஸ்லிம்களை குருவி சுடுவது போல் சுட்டு கொன்றது என்று சொல்லிக்கொண்டே போகலாம், நரேந்திர மோடியை விட ஒருபடி மேலே போய் முஸ்லிம்களுக்கு அநீதி இளைத்தது புலிகள்தானே இந்த விசயத்தில் பிரபாகரன் ஓர் இந்துமதவெறியர் போல் நடந்த இருக்கின்றார் ஆனால் அவரை ஆதரிப்பது எல்லோரும் இந்து மத எதிர்பாளர்கள் இதுதான் வேடிக்கை,
    அப்பாவிகளை கொலை செய்வதில் ராஜபக்சேவுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை பிரபாகரன், எத்தனை தமிழர்கள், மாற்று கருத்து உள்ள அரசியல் தலைவர்கள், சகோதர இயக்க தலைவர்கள், சொந்த இயக்கத்தை சேர்த்தவர்கள் முஸ்லிம்கள், அப்பாவி சிங்களவர்கள் சொல்லிக்கொண்டே போகலாம், 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பொழுது 40 கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்களும் போலீஸ் இறந்தர்களே அவர்கள் தமிழர்கள் இல்லையா? இவர்கள் எல்லோரும் இந்திய அமைதி படையுடன் சேர்ந்து போய் தமிழ் பெண்களின் கற்பை சூறையாடி விட்டு வந்தவர்களா? புலிகளுக்கு உதவ போய் அவருக்கே தெரியாமல் மிகபெரிய சதியில் நளினி என்ற அப்பாவி 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுவதற்கு காரணம் புலிகள்தானே,
    புலிகளுக்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டார் என்று சொல்லுகின்றர்களே புலிகள் மட்டும் கலைஞர்க்கு துரோகம் செய்யவில்லயா? 1989 இல் புலிகளுக்கு உதவ போய் ஆட்சியை இழந்தார், புலிகளை ஆதரித்த ஒரே காரணத்துக்காக ராஜிவ் கொலை பழியை சுமந்தார், அதனால் தானே 1991ஆம் ஆண்டு தி,மு, க படுதோல்வியை சந்தித்தது, ராஜுவை கொலை செய்தால் அந்த பழி நம்மை ஆதரிக்கும் தி மு கதிற்கு போய் விழும் என்று ஏன் பிரபாகரன் சிந்திக்கவில்லை?, எல்லோரும் தமிழர்கள் என்கின்றர்களே இலங்கைஇல் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு பிரச்சினை வந்த பொழுது புலிகள் என்ன உதவி செய்தார்கள்? தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அது எல்லோருக்கும் பொருந்தும் ஆனால் மற்றவர்களுடை பிரச்னை அவரவர்களுக்கு, 1985 களில் எல்லோரையும் போல் புலிகளை ஆதரித்தவன்தான் நான், இப்போது என்னை இப்படி எழுதுவதற்கும் காரணம்மும பிரபாகரன்தான், அப்பாவி இலங்கை தமிழர்கள்தான் பாவம் ஒருபக்கம் புலிகளும் மறுபக்கம் இலங்கை ராணுவத்தாலும் வாழ்விழந்து நிற்கின்ற்கள்,

    ReplyDelete
  66. அண்ணா,உங்கள் அரசியல் அறிவும் தேடலும் பிரமிக்க வைக்கின்றது.இத்தனை பொறுமை வேண்டும்,இப்படியான ஆக்கங்களை எழுதுவதற்கு.
    You are Great anna.

    ReplyDelete
  67. சரவணன் நீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் பதிவில் நல்ல பயன் உள்ள விவாதங்கள்.

    ReplyDelete
  68. //...அப்போது முத்துக்குமார், அல்லது முகமது என்ற பெயருடன் எவர் வந்து நமக்காக தீக்குளிக்கப் போகிறாரோ? பார்ப்போம்

    அந்த திருத்தொண்டினை செய்ய மற்றவர்களை ஏன் எதிர்பார்க்கிறீர்கள், இதைத்தானே எல்லா அரசியல்"வியாதி"களும் செய்கிறார்கள்....you too.....

    ReplyDelete
  69. நம்ம மக்கள் எப்போ திருந்த போறாங்க

    ReplyDelete
  70. நண்பரே இஸ்லாமிய நாடுகளில் நாடாகும் புரட்சிகள் நல்லதுக்கு அல்ல , அது மக்கள் முன்னேற ஏற்படும் புரட்சி அல்ல , மக்களை 1500 ஆண்டுகள் பினோக்கி கொண்டுசெல்லவே அங்கு புரட்சிகள் ஏற்படுகிறது !! உதாரணம் ஈரான் , மன்றின் ஆட்சில் மத சகிப்புதன்மை கொண்ட நாடாக இருந்த ஈரான் இன்று எப்படி இருக்கிறது என்று தெரியும் !! அதே போலவே தான் இங்கயும் , எகிப்தில் புரட்சிக்கு பின்னல் இருபது முஸ்லிம் brotherhood என்ற இயக்கம்,அவர்களில் தீவிர மத வெறி தலிபானை விட கொடியது. இஸ்லாமிய நாடுகளில் புரட்சி ஏற்பட்டால் சுத்திர உலகத்துக்கு அது ஆபத்தானது. விரைவில் நமக்கு அது புரியும்.

    தமிழ் நாட்டில் முதுகுமருக்கு பின் புரட்சி ஏற்படமால் போன காரணம் இரண்டு
    1 . ஈழ தமிழர்களுக்காக போராடும் அணைத்து தலைவர்களும் இது வரை மக்களை பிரித்தே பழக்க பட்டவர்கள் , அவர்களின் உண்மையான நோக்கம் அரசியல் செய்வதே , சீமான் அவரின் அப்பட்டமான ஹிந்து விரோத பேச்சுகளினால் பெரும்பாணமி மக்களிடம் இவரும் கிறித்துவ கை கூலி என்ற என்னத்தை ஏற்படுத்தியவர் . திருமாவை பற்றி கேட்கவே வேண்டாம் , அவர் ஜாதி அரசியல் செய்து , பிரிவினையின் உதரணாமாக இருப்பவர் , அவரை பார்த்தாலே ,அவரும் அவரின் தொண்டர்களும் செய்த ரவுடி தனமே நியாபகம் வரும்.
    2 . தமிழ் நாட்டில் இருக்கும் வேலை வாய்புகள் , மற்றும் பொருளாதார முன்னேற்றம் . படித்து வெளியே வந்த உடனேயே வேலை தயாராக இருபதினால் புரட்சி செய்ய நேரம் இல்லை. பொருளாதரத்தில் முனேறிய நாடுகளில் புரட்சி ஏற்பட வைப்பு இல்லை , எகிப்தில் ஏற்பட்ட புரட்சி துபாயில் ஏற்படாது . இது தான் நிதர்சனம் .

    ReplyDelete
  71. thanks for all you guys for the sincere comments. I think the blogger is too narrow or biased of his viewings. How many people when you travel & work to european countries get recognized as a tamilan by srilankan tamils. Do they have some soft corner about us. I would say they see like us animals. In this way why should muthukumar burnt himself. What he knows about tamils before the civil war in srilanka. Tamils from srilanka never think about us when they live peacefully, & now they claim that we need to do something who has assasinated a Prim Minister of Biggest democratic country. In my openion, we dont need to do think about this problem. It better as the blogger says, we think about our own home and if we become clean try to clean others as well...thanks, Jaihind

    ReplyDelete