Pages

Wednesday, December 29, 2010

அம்பேத்கர் - சினிமா விமர்சனம்

29-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாரதரத்னா டாக்டர் பாபாசாஹேப் பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இத்திரைப்படம் பற்றிய எனது முந்தைய பதிவுகளை இதுவரையிலும் படிக்கவில்லையெனில் இப்போதாவது படித்துப் பார்க்கவும்.

அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?

 

அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு - திரையரங்குகள், நேரம் மாற்றம்..!

 

 அண்ணல் அம்பேத்கரின் திரைப்படம் வெளியானது..!

 

இத்திரைப்படம் சட்ட மாமேதை என்ற அளவிலேயே அறிந்திருந்த அம்பேத்கரின் முழு வடிவத்தையும் எனக்கு உணர்த்தியது. காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பாளர். காந்தியாரின் மரியாதைக்குரிய எதிரியாகவும் திகழ்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக சுதந்திரத்திற்கு பின் பல ஆண்டு காலம் நாட்டை ஆண்டு வந்த மத்திய காங்கிரஸ் அரசு அம்பேத்கரை பற்றிய முழு உண்மைகளை இந்திய இளைஞர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்காமல் தந்திரமாக மறைத்திருக்கிறது என்பதையும் இப்படமே உணர்த்தியது.

பொதுவாக வரலாற்றுத் திரைப்படங்களைப் படமாக்குவதற்கு மிகவும் மெனக்கெட வேண்டும். அதிலும் அரை நூற்றாண்டு தாண்டிய திரைப்படங்களெனில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டி வரும் என்பது சினிமாத் துறையில் இருக்கும் எனக்கு நன்கு தெரியும்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் படத்தினை பார்க்கின்றபோது மிகச் சமீபத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் போலவேதான் இருந்தது.

படத்தின் மிகப் பெரும் குறை தமிழ் வசனங்கள் வழக்கு மொழியாக இல்லாமல் தூயத் தமிழாக அமைந்திருந்ததுதான். இந்த ஏற்பாட்டைச் செய்த புண்ணியவான் யாரோ..? ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரே தந்தையான அம்பேத்கரின் திரைப்படம் இது என்பதை உணர்ந்து செய்திருந்தால் இந்தத் தவறு  நடந்திருக்காது..

அம்பேத்கரின் 65 வருட கால வாழ்க்கையை முழுமையாகக் காட்டிவிட முடியாதுதான். அதனால் முடிந்த அளவுக்கு தற்போதைய சினிமா ரசிகர்களும் ஆவலுடன் பார்க்க விரும்புகின்ற சினிமா மொழியில் சம்பந்தப்பட்டவைகளை ரத்தினச் சுருக்கமாக சுருக்கிக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

இத்தனை படிப்புகளை படித்திருக்கும் முதல் இந்தியர் அம்பேத்கர் என்பதும், அந்த முதல் இந்தியரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் என்பதும் நமக்குப் பெருமையான விஷயம்தான். சிறு வயதில் அம்பேத்கர் படும் அவமரியாதைகளின் தொடர்ச்சியாகத்தான் அவரின் எதிர்கால அரசியல் வாழ்க்கை நடந்தேறியது என்பதை திரைப்படம் பதிவாக்கியுள்ளது.

மாட்டு வண்டியில் தனது சகோதரனுடன் பேசிக் கொண்டே செல்கையில் அவர்களுடைய பேச்சை வைத்தே அவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்து வண்டிக்காரன் வண்டியைக் கவிழ்த்துவிடும் காட்சி ஒன்றே போதும்.. இந்த அவமானத்தை தன்மானமுள்ள எந்த மனிதனாலும் மறக்க முடியாது. அம்பேத்கரின் முதல் சமுதாயப் புரட்சி எண்ணத்திற்கு இந்த விஷயமே அடிகோலியிருக்கலாம்..

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவர் படிக்கின்ற சம்பவங்கள்.. அங்கே நடைபெறும் சம்பவங்கள்.. இந்தியர்களை கேலியாகப் பார்க்கும் மேல்நாட்டு வர்க்கத்திற்கு அம்பேத்கர் கொடுக்கின்ற சூடுகள் என்று படத்தின் துவக்கமே அதிரடியாகத்தான் இருந்தன.

கல்விக்கு இந்த மனிதர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் பரிபூரணமாக பதிவு செய்திருக்கிறது. 17 வயதில் ராமாபாயை திருமணம் செய்து முடித்த கையோடு வெளிநாட்டு வந்து படிப்பில் முழு கவனத்தையும் செலுத்திய அந்த மனிதரை என்னவென்று சொல்வது..?

நாடு திரும்பியவுடன் பரோடா மன்னரின் சமஸ்தானத்திலேயே கணக்கு பார்க்கும் வேலைக்கு அமர்கிறார். அங்கே அவர் சந்திக்கும் அவமானங்கள் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கீழே வேலை பார்ப்பவராக இருந்தாலும் ஒரு டம்ளர் தண்ணியை கொண்டு வந்து கொடுக்க மனம் இடம் கொடுக்காத அளவுக்கு சாதிப் பித்துப் பிடித்த இந்தியர்கள் மத்தியில் எத்தனை நாட்கள்தான் அம்பேத்காரால் பணியாற்றியிருக்க முடியும்.. இது குறித்து பரோடா மன்னருடன் அம்பேத்கர் பேசும்போது மன்னர் “இவ்வளவுதான் என்னால் முடியும்..” என்று சொல்வது அப்போதைய இந்திய அரசியல் சூழலை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும்போதும் இதே போன்ற சூழலை அவர் எதிர்கொள்ளும் காட்சியும் மிக அருமை. நீர் அருந்தவிடாமல் தடுத்ததையும் எதிர்த்து தனது தாகத்தைத் தீர்த்துவிட்டு, “வேணும்னா நீங்க வரும்போது உங்க வீட்ல இருந்தே தண்ணி கொண்டு வந்திருங்க..” என்று அம்பேத்கர் சொல்லும் காட்சி மிக ரசனையானது..

நன்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும் தனக்கே இத்தனை இடர்ப்பாடுகளும், சோதனைகளும் கிடைக்கின்றபோது படிப்பறிவில்லாத ஏழை தாழ்த்தப்பட்ட மக்கள் என்னென்ன சோதனைகளை தினம்தோறும் சந்தித்து வருவார்கள் என்று அவர் சிந்தித்த வேளையினால்தான் இன்றைக்கு இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் என்ற பிரிவினரின் செயல்பாடுகள் ஓரளவுக்கேனும் உயர்ந்திருக்கிறது.

சைமன் கமிஷனை காங்கிரஸ் புறக்கணித்தபோதிலும் அம்பேத்கர் அங்கு ஆஜராகி தான் சார்ந்த மக்களுக்காக வாதிடுவது மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. “இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்போரில் இப்போது இருக்கும் ஒரேயொரு வழக்கறிஞர் நான்தான்” என்று அம்பேத்கர் சொல்கின்ற வார்த்தைகள், அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் உள்ளே நுழைந்திருக்கும் சினிமா ரசிகனை நிச்சயம் தாக்கியிருக்கும் என்றே நம்புகிறேன்.

மகாராஷ்டிராவில் கொலாபா மாவட்டத்தில் இருக்கும் மகத் என்னும் ஊரிலிருக்கும் செளதார் குளத்து நீரை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து அம்பேத்கர் நடத்தியிருக்கும் போராட்டம் அற்புதமானது.

மகத் நகரசபையில் செளதார் குளத்தைப் பயன்படுத்தும் உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்பும் சாதி இந்துக்களின் தூண்டுதலாலும், மிரட்டலாலும் அது நடைபெறாமல் இருக்கவே அம்பேத்கரின் தலைமையில் 1927 மார்ச் 20-ல் செளதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம் நடந்துள்ளது.  அந்தப் போராட்டக் காட்சி, காந்தியாரின் தண்டி உப்பு யாத்திரைக்கு ஒப்பானது. ஆனால் இதுவரையிலும் இந்த செளதார் குளம் போராட்டக் காட்சிகள் இந்தியர்களின் மத்தியில் தண்டி யாத்திரைபோல் பிரபலமாகாதது ஏன் என்றும் தெரியவில்லை..

இதைத் தொடர்ந்து நடக்கும் கலவரங்களும் அந்தச் சூழலும் அம்பேத்கரை இன்னமும் அதீத வேகத்துடன் தனது இனத்து மக்களுக்காக உழைக்க வைத்திருக்கிறது.

படம் முழுவதும் சொல்லப்படும் விஷயங்கள் அனைத்துமே சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடையதாக இருப்பினும் நாம் புரிந்து கொள்வது அம்பேத்கர் நடத்திய சுதந்திரப் போராட்டம் பிரிட்டிஷ் ஆதிக்கத்திடம் இருந்து இந்தியா விடுதலை வேண்டி நடைபெற்ற போராட்டம் அல்ல.. ஆண்டாண்டு காலமாக கடவுள்கள், சனாதன தர்மம், வேதங்கள், சாதிகள் என்று இந்து மதத்தில் இருந்த குழப்பங்களை சாக்காக வைத்து ஆதிக்கச் சாதியினர் நடத்திய கொடுமையில் இருந்து தனது இனத்துச் சொந்தங்களான தாழ்த்தப்பட்ட மக்களை மீட்க அம்பேத்கர் நடத்திய சுதந்திரப் போராட்டமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

உதாரணமாக காலாரம் கோவில் போராட்டக் காட்சி அம்பேத்கரின் போராட்ட உறுதியைக் காட்டுகிறது. மதம் என்பது தன்னை பின்பற்றும் அத்தனை பேருக்கும் பாகுபாடில்லாமல் வழி காட்டக் கூடியதாகத்தான் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் குறிப்பிட்டவர்களை மட்டும் என்னைத்தான் தெய்வமாகத் தொழ வேண்டும். ஆனால் அருகில் வந்து தொழக் கூடாது. தூரத்தே நின்று அப்படியே போய்விட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கடவுளாவது சொன்னாலோ.. சொல்லியிருந்தாலோ.. அதனைத் தூக்கியெறிந்துவிட்டுப் போவதுதான் சாலச் சிறந்தது.

இந்தக் கொள்கைக்காகத்தான் தாங்கள் இந்து மதத்தில் உள்ளவரையிலும் இந்துக் கோவில்களில் எங்களுக்கும் சம உரிமையுண்டு என்று போராடிய அந்த கோவில் போராட்டம் அழகுற படமாக்கப்பட்டுள்ளது.. தந்திரமாக தேரை இழுக்கும் உயர்சாதியினரின் கடைசி நேர சூழ்ச்சியைக் கண்டறியும் அம்பேத்கர் அதனை அவர்கள் பாணியிலேயே சென்று முறியடிக்க தனது மக்களை உசுப்பிவிடும் காட்சியில் திரையரங்கில் காது கிழியும் அளவுக்கு கை தட்டல்கள்..

அடக்கி வைக்கப்படும்போதுதான் சுதந்திரத்தின் அருமை தெரியும்.. இந்த அடக்குமுறையை எதிர்த்தாக வேண்டுமெனில் ஆட்சி, அதிகாரத்துக்கு செல்வதுதான் மிகச் சிறந்த வழி என்றுணர்ந்து அதற்கான வழிமுறைகளுக்குள் அம்பேத்கர் இறங்கியபோதுதான் இந்தியாவின் விடிவெள்ளியாக இருந்த காங்கிரஸின் இன்னொரு பக்கமும் அம்பேத்கருக்கு புரிந்திருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஹரிஜன் என்று பெயர் சூட்டி அவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லி, அவர்களை அரவணைத்துச் செல்லும்படி அறிவுரை கூறிய காந்தியார் அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காதது ஏன் என்றுதான் புரியவில்லை.

முதல் இரண்டு வட்ட மேசை மாநாடுகளிலும் அம்பேத்கர் கலந்து கொண்டு தனது இனத்து மக்களுக்காக அவர் வாதாடுவது பதிவாகியிருக்கிறது. அடுத்து வரும் தேர்தல்களில் தனது இனத்திற்காக இரட்டை வாக்குரிமை தேவை என்று கேட்டு போராடி வெற்றி பெற்று வந்த அம்பேத்கரை காந்தியார் தனது தந்திரமான போர்க்குணத்தால் வெற்றி கொண்டது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி..

அவ்வாறு இரட்டை வாக்குரிமை தருவது அவர்களை இன்னமும் ஒதுக்குவது போலாகும். இந்து மதத்தை இரண்டாகப் பிரிப்பது போலாகும் என்று காந்தியார் மறுக்கிறார். அம்பேத்கரும் இதனை ஏற்க மறுக்கிறார். இருவரும் சம அளவிலான தலைவர்கள் என்பதை அப்போதுதான் உணர்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால் காந்தியார் வழக்கம்போல தனது உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார். பூனாவின் எரவாடா சிறையில் அவர் தொடங்கிய உண்ணாவிரதத்தின் முக்கிய நோக்கம், பிரிட்டிஷாருக்கு நான் முக்கியமா, அம்பேத்கர் முக்கியமா என்பதைச் சொல்லாமல் சொல்லியதாக நான் நினைக்கிறேன். இதுவும் ஒரு வகையில் நிச்சயமாக பிளாக்மெயில்தான்.

நான் சொல்வதைச் செய்.. இல்லையெனில் செத்துப் போவேன் என்று இன்னொரு மக்களுக்கு கிடைக்க வேண்டியதை நிறுத்துவது எப்படி அரசியல் போராட்டத்தின் கீழ் வரும் என்று தெரியவில்லை. ஆனால் அன்றையச் சூழலில்.. இந்தியாவில் காந்தியாருக்கு இருந்த தேசத் தந்தை என்ற பெரும் பெயரில் நிச்சயம் இது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது நாம் உணரக் கூடியதே..

இது பற்றிய பேச்சுவார்த்தைக்காக ராஜாஜியும், ராஜேந்திரபிரசாத்தும், பட்டேலும் அம்பேத்கரை சந்திக்கின்ற காட்சி சுவையானது. இந்தக் காட்சியில் ராஜாஜியின் முக பாவனை மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது.. எத்தனை தலைவர்களுக்கு அம்பேத்கர் என்பவர் எவ்வளவு பெரிய ஆபத்தானவராக இருந்திருக்கிறார்.. எதிரியாக அவரைப் பாவித்திருக்கிறார்கள் என்பதை உணர்த்த இந்த ஒரு காட்சியே போதும் என்று நினைக்கிறேன்.

இரண்டு முறை காந்தியாரை நேரில் சந்தித்து பேசும் அம்பேத்கர் இறுதியில் வேறு வழியில்லாமல் நாட்டு நலனுக்காக தனது இனத்து மக்கள் நலனை பலிகடாவாக்கும் அந்தச் சோகக் காட்சியின் பதிவு இதுவரையிலும் எந்த ஒரு வரலாற்றுத் திரைப்படத்திலும் தென்படாதது.

இதனைச் செய்துவிட்டு அம்பேத்கர் காந்தியாரிடம் தெரிவிக்கும் அந்தப் புகழ் பெற்ற வசனமான, ““காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் இன்னமும் தேவைப்படலாம்!”  என்பது காந்திஜி பற்றிய சிந்தனையை நமக்குள் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.

இந்த ஒரு வசனம்தான் என்றில்லை.. காந்தியார் பற்றிய அம்பேத்கரின் விமர்சன வசனங்கள்தான் தியேட்டரில் அதிக கைதட்டல்களைப் பெற்றன.

'மகாத்மாக்கள் வருவார்கள், போவார்கள், தீண்டாமை இன்னும் அப்படியேதானே இருக்கிறது'

'காந்தி வெளிநாட்டுத் துணிகளையெல்லாம் எரித்துப் போராட்டம் செய்கிறாராம்' என்கிறார் ஒருவர். அதற்கு அம்பேத்கர் 'அவர் எரிக்க வேண்டிய விஷயம் இன்னும் நெறைய இருக்கு" என்கிறார்.

இது எல்லாவற்றையும்விட இன்னொரு வசனம்தான் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. சொல்லியிருப்பது உண்மையென்றாலும் சென்சார் போர்டில் எப்படி இதனை அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயமாக இந்த ஒரு விஷயத்துக்காக சென்சார் போர்டுக்காரர்களை பாராட்டலாம். அந்த வசனம் இதுதான் :

“காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை மட்டும் மாறாது.”

இந்த சில வசனங்கள் என்றில்லை.. இத்திரைப்படத்தில் பேசப்படும் அனைத்து வசனங்களுமே அரசியல் களத்தை சூடாக்குபவைதான்.

"ஆலய பிரவேசத்தைவிட அரசியலில் முக்கியத்துவம் பெறுவதுதான் அவசியமானது.." என்று மாநாட்டு மேடையில் நின்று பேசுகின்ற காட்சி..

"நம்மை இந்துக்களும் ஏற்பதில்லை.. நாம் போட்டியாக வந்து விடுவோமோ என நினைத்து மற்ற மதத்தினரும் ஏற்பதில்லை.."

"பலர் புத்த மதமும், பொதுவுடமையும் ஒன்று என நினைக்கின்றனர்.. பொதுவுடமை என்பது ஹிம்சை. புத்த மதம் அஹிம்சை.."

"எல்லா மதத் தலைவர்களும், தான்தான் கடவுளின் அவதாரம் என சொல்கின்றனர்.. புத்த மதத்தில் மட்டும்தான் ஜாதி இல்லை." - என்று தனது நண்பர்களிடம் குமுறுவது..

"நாங்கள் ஹிந்து மதத்தை விட்டு விலகுவதற்கு வருத்தப்படாதீர்க்ள்... நாங்கள் போவதால் அது தூய்மை ஆகிறது என சந்தோசப்படுங்கள்." என்று தன்னை சமாதானம் செய்ய வரும் இந்து மதத் தலைவர்களிடம் சொல்வது..

முழுக்க, முழுக்க அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையைச் சொல்வதாக இருந்தாலும், கொஞ்சம் அம்பேத்கரின் குடும்ப வாழ்க்கையையும் இடையிடையே தொட்டுத் தொடரத்தான் செய்திருக்கிறார்கள்.

அவருடைய மனைவி ரமாபாயின் ஏக்கம், பரிதவிப்பு, அம்பேத்கரின் அருகாமையை உணர்ந்து காத்திருப்பது.. சாப்பிடாமல் இருப்பாரே என்ற கவலையுடன் டிபன் பாக்ஸுடன் அலுவலகத்திற்கு ஓடி வருவது.. இரண்டாவது முறையாக கல்வி பயில அம்பேத்கர் லண்டன் கிளம்பும்போது அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பது.. அடுத்தடுத்து தனக்குப் பிறந்த பிள்ளைகளை இழப்பது என்ற கொடூரத்தில் அம்பேத்கரின் குடும்ப வாழ்க்கையின் இன்னொரு புறத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் நீளத்தைக் கருத்தில் கொண்டு சிற்சில விஷயங்களைப் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் பார்வையாலும், காட்சியாலுமே நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார். அம்பேத்கருக்கு சர்க்கரை வியாதி இருப்பதை வேலைக்காரன் கேட்கின்ற கேள்விக்கு “ஏன் என்னை சீக்கிரமா சாகடிக்கணும்னு பார்க்குறியா?” என்ற பதிலின் மூலம் உணர்த்தி எந்த மாதிரியான வாழ்க்கை முறையில் இந்தத் தலைவர் தனது இனத்து மக்களுக்காக இரவு, பகலாக உழைத்திருக்கிறார் என்பதைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். தனது சோகமான வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் வயலின் வாசிப்பதிலும் மிகத் தேர்ச்சி பெற்றவராகவும், அது ஒன்றையே தனது ஓய்வு நேர செலவழிப்பாகவும் கருதிய அம்பேத்கரின் கலை ரசனையை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

முதல் மனைவியின் இறப்புக் காட்சியில் இருக்கும் ஒரு கவிதைத்தனம் மிக ரசிப்புக்குரியது. பதைபதைப்புடன் தன்னைக் காண ஓடி வரும் கணவனிடம் “வெளியில் மழை பெய்கிறதா..?” என்று மனைவி ரமாபாய் கேட்கின்ற கேள்வியின் தொடர்ச்சியாக அவர்களது கல்யாண தினத்தன்று கொட்டித் தீர்த்த மழையில் ஒட்டி நின்ற அவர்களது முதல் நெருக்கத்தை அப்போதும் நினைத்துப் பார்க்க முயல்வது.. மிக உச்சமான ரசனைத்தனம்.

தனது முதல் மனைவி இறந்த பின்பு மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்ற இடத்தில் தனது நலனையே பெரிதும் விரும்பி கவனித்துக் கொண்ட தாதியையே விரும்பி மணந்து கொண்ட அவரது இன்னொரு மணவாழ்க்கைக் கதையும் படமாக்கப்பட்டிருக்கிறது.

காந்தியார் நேருவிடம் அம்பேத்கரை அமைச்சரவையில் சேர்க்கச் சொல்லியும் சட்டத் துறையை வழங்கக் கோரியும் சிபாரிசு செய்வதை மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியில் ஒருபோதும் உறுப்பினராகக்கூட இருந்ததில்லை. அதே சமயம் காந்தியாரின் மரியாதைக்குரிய எதிரியாகவும் இருந்திருக்கிறார் நேதாஜியைவிடவும். கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தலைவர் பதவிக்குப் போட்டியிட்டபோது நேதாஜி ஜெயிப்பதற்காக நிறைய உதவிகளையும் அம்பேத்கரே செய்திருக்கிறார்.

இவ்வளவும் இருந்தும் காந்தியாரின் இந்த சிபாரிசு கவனிக்கத்தக்கதுதான். எனது கருத்து என்னவெனில், “அவர்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்லையே என்று அவர்கள் நினைக்கக் கூடாது என்பது காந்தியாரின் எண்ணமாக இருக்கலாம்” என்று நினைக்கிறேன். நேரு இதனை எற்றுக் கொண்டதுகூட இந்தியத் திருநாட்டுக்குக் கிடைத்த நன்மைக்கே.

பிரிட்டிஷ் இந்திய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்து இந்தியாவிலேயே முதல் முறையாக தொழிலாளர் நலத்துறை மூலமாக தொழிலாளர்களுக்கு பணி நேரத்தை முறைப்படுத்தி உத்தரவிட்டவர் அம்பேத்கர்தான்.

அந்த அனுபவத்தோடும் தனக்கு உதவியாக நியமிக்கப்பட்டவர்களின் உதவிகள் கிடைக்காத சூழலிலும் தனியொரு மனிதனாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்திருப்பது மிகப் பெரும் சாதனை.

இது பற்றி அப்போதைய பாராளுமன்றத்தில் எடுத்துக் காட்டும்போது அம்பேத்கர் மட்டுமே இதனைச் செய்து முடித்துள்ளார் என்கிறார் ஒரு உறுப்பினர். உடனேயே அம்பேத்கர் எழுந்து, “எனது சக உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன்தான் இந்த வேலையை செய்து முடித்தேன்..” என்று பெருந்தன்மையுடன் சொல்கிறார். இதனை எத்தனை தலைவர்களிடத்தில் காண முடியும்..?

பெண்களுக்கான ஜீவனாம்சம், மறுமண உறுதிச் சட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய இந்துச் சட்டத் திருத்தத்தை அம்பேத்கர் 1951-ம் ஆண்டு கொண்டு வந்தபோது, அதற்கு எழும்பிய எதிர்ப்பும், இதனைக் கண்டும் காணாததுபோல் பிரதமர் நேரு நடந்து கொண்டதையும் பார்த்துதான் மனம் வெறுத்து தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஒரு சட்ட மாமேதையின் உதவியை இந்தியப் பாராளுமன்றமும், இந்திய அமைச்சரவையும் விடுதலை பெற்ற சில ஆண்டுகளிலேயே இழந்தது மிகக் கொடுமையான விஷயம். இதில் வெற்றி பெற்றவர்கள் இந்து சனாதனவாதிகள் என்றாலும் தீவிர நாத்திகர் என்று கருதப்படும் பண்டித நேரு எதற்காக இதற்கு உடந்தையாக இருந்தார் என்பது பற்றியும் இன்னொரு பக்கம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

அன்றையச் சூழலில் இந்தியப் பிரதமர்வரையிலும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவகையில் இருந்த இந்து சனாதனிகள்தான் இன்றைக்கும் பெண்கள் இட ஒதுக்கீடு மசாதோவை வேறு பெயர்களில் மறைமுகமாக எதிர்த்து வருகிறார்கள் என்பதையும் நாம் உணர வேண்டும்.

எந்தப் பக்கம் போனாலும் தான் ஒரு இந்துவாக இருப்பதாலேயே தான் அசிங்கப்படுத்தப்படுகிறோம் என்பது அம்பேத்கருக்கு மிகப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாகவே அவர் இந்து மதத்தைத் துறப்பது என்ற முடிவுக்கு வந்து பெளத்தத்தை தழுவியிருக்கிறார்.

செய்தி கேள்விப்பட்டு சமாதானத்திற்கு ஓடி வரும் இந்து மடாதிபதிகளிடம் “நாங்கள்தான் தீண்டத்தகாதவர்களாயிற்றே.. நாங்கள் உங்களுடன் இருந்தாலென்ன? போனாலென்ன..?” என்று அம்பேத்கர் கேட்கின்ற கேள்வி நியாயமானதுதான்.

கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம் என்று இன்னும் புகழடைந்த பெரிய மதங்கள் இருந்தும் அம்பேத்கர் உருவ வழிபாடோ, மனிதர்களிடையே எவ்வித அடையாள பாகுபாடோ இல்லாத மதம்தான் தன்னை நாடியிருக்கும் மக்களுக்குத் தேவை என்று சொல்லி பெளத்த மதத்தைத் தழுவியிருக்கிறார்.

இத்தனை நாட்கள் அரும்பாடுபட்டும் தனது மக்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பது இந்து மதமே என்றுணர்ந்த அவரது அந்த இறுதிச் செயல்தான் இந்திய அரசியல் வரலாற்றில் அம்பேத்கரின் பெயரை இன்றைக்கும் நிலைநிறுத்தியிருக்கிறது எனலாம்.

சாதியை எதிர்ப்பேன் என்பவர்களும், சாதியை நான் ஒரு பொருட்டாக கருதுபவனில்லை என்பவர்களும், சாதியெல்லாம் நான் பார்ப்பதில்லை என்று சொல்பவர்களும் மூல காரணியான இந்து மதத்தைவிட்டு விலகுவதில்லை. அதில் இருந்து ஒதுங்கியிருக்கிறோம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் அதைத் தூக்கியெறிய வேண்டும் என்று சொல்லி செயலிலும் செய்து காட்டியிருப்பவர் அம்பேத்கர் மட்டுமே. இதற்காக அவர் தொடுத்திருக்கும் காரணங்கள் மிக, மிக நியாயமானவை.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வோடு திரைப்படம் நிறைவடைகிறது.. இதுதான் எனது வருத்தமும்கூட.. அவரது இறப்பு மற்றும் இறுதி ஊர்வலக் காட்சிகளையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் மெகா ஸ்டார் என்னும் மம்முட்டி. எந்த இடத்திலும் கேரளாவின் முன்னணி நடிகராக அவர் தென்படவில்லை. முதல் காட்சியில் இருந்து முடிவுக்கு வருகின்றவரையிலும் அம்பேத்கரை தவிர வேறு யாரையும் நான் பார்க்கவில்லை.


காந்தியார் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் தன் கையில் இருந்த புத்தகத்தை நழுவவிட்டுவிட்டு தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு நிற்கும் ஒற்றை ஷாட்டிலேயே அத்தனை சோகத்தையும்  காட்டிவிட்டார் மம்மூக்கா.

மம்முட்டியின் ஆவேசமில்லாத இயல்பான இயல்பான நடிப்பு, ஜின்னாவை பாராளுமன்ற லாபியில் அவர் சந்தித்து பேசுகின்ற காட்சிதான். முதல் மாநாட்டில் அவர் கையை உயர்த்தி "கற்பி, புரட்சி செய், ஒன்று சேர்.." என்று முழுக்கத்துடன் ஆரம்பிக்கும் அவரது ஆட்சேபணையான குரல்கள் ஒன்று சேர்ந்து இறுதிவரையிலும் தொடர்ந்துள்ளன. இவரது மனைவியாக நடித்திருக்கும் சோனாலி குல்கர்ணி இந்த ஒரு திரைப்படத்தில்தான் இப்படி சாந்த சொரூபியாக நடித்திருப்பார் என்று நினைக்கிறேன். லட்சக்கணக்கான அப்பாவி இந்திய மனைவிமார்களின் ஒரு அடையாளமாக இருந்திருக்கிறார் ரமாபாய். கூடவே அம்பேத்கரின் அண்ணனுக்கும், அவருக்குமான குடும்பப் பிரச்சினைகளையும் மறைக்காமல் காட்டியிருப்பதும் நேர்மையான விஷயம்தான்.

இத்திரைப்படத்தில் காந்தியாரை காட்டியிருப்பது வேறு எந்தத் திரைப்படத்திலும் இப்படி நகைச்சுவையாக காட்டவேயில்லை.  இந்தியாவின் அடையாளம்.. அஹிம்சையின் மறு உருவம் என்றெல்லாம் புகழப்பட்ட ஒரு மனிதரை அவருடைய உடல் அசைவுகளினாலும் திருட்டு முழிகளினாலும் அப்பாவி மனிதரைப் போலவும், சில இடங்களிலும் திருட்டுத்தனக்காரர் போலவும் காட்டியிருக்கும் இயக்குநரின் தைரியத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

பரோடா, நாக்பூர், பூனா, கொலம்பியா, லண்டன், டெல்லி, மும்பை என்று பல இடங்களையும் சுற்றி வந்தாலும் நிஜத்திற்கு அந்தக் கால  வாழ்க்கையை வடிவமைக்க கலை இயக்குநர் ரொம்பவே மெனக்கெட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவருக்கும் எனது பாராட்டுக்கள்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மம்முட்டி பெற்றதில் பெரிய ஆச்சரியமில்லை. அதேபோல் இத்திரைப்படம் பெற்ற விருதுகளெல்லாம் நிச்சயமாகக் கொடுக்கப்பட வேண்டியவைதான். இத்திரைப்படத்தில் பங்கு கொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..

இத்திரைப்படம் இப்போது சென்னையில் ஆல்பர்ட் திரையரங்கில் மட்டுமே காலை காட்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அரை நாள் விடுப்பு எடுத்தாவது இத்திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று பாருங்கள்.. உங்களிடமிருந்து மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மைகளை இத்திரைப்படம் எடுத்துச் சொல்கிறது.

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட பிரதிகள் மிகக் குறைவாக இருப்பதாலும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் சோம்பலினாலும் இனிமேல்தான் சென்னையைத் தாண்டிய பகுதிகளுக்கு இப்படம் வரப் போகிறது. அப்படி வரும்பட்சத்தில் கண்டிப்பாகப் பார்க்கத் தவறாதீர்கள்.

பள்ளிப் பருவத்தில் வெறும் சட்ட மேதை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர் என்ற இரண்டு பிரிவுகளில் மட்டுமே நம் கண் முன்னே அம்பேத்கரை கொண்டு வந்திருக்கும் இப்போதைய அரசியல் ஆட்சியாளர்களின் முகத்திரையை இத்திரைப்படம்தான் கிழித்திருக்கிறது.

செளகார் குளத்தில் நீர் அருந்த வேண்டி அம்பேத்கர் நடத்தியிருக்கும் போராட்டமும், கோவில் நுழைவு போராட்டமும், தாழ்த்தப்பட்டோருக்கு அரசியல், வாழ்வியல் உரிமைகள் கேட்டு போராடிய அம்பேத்கரின் மிக நீண்ட அரசியல் வாழ்க்கையும் மிக மிக நன்கு திட்டமிட்டு நம்மைப் போன்ற இளைய தலைமுறைகளிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது.

தண்டி யாத்திரையை 6-ம் வகுப்பிலேயே சொல்லிக் கொடுத்த ஆட்சியாளர்கள் இந்த செளகார் குளம் விஷயத்தை ஏன் சொல்லித் தருவதில்லை..? சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தை இந்திய மக்களே எதிர்த்ததாக பொய்ப் பிரச்சாரம் செய்து நமது புத்தியில் புகுத்தியது ஏன்..? சைமன் கமிஷன் முன்பும், வட்ட மேசை மாநாட்டில் காந்தியாரின் முன்பாகவே தாழ்த்தப்பட்டோருக்கான ஒரே பிரதிநிதி நான்தான் என்ற உண்மையை முழங்கியிருக்கும் அம்பேத்கரின் உண்மைப் பேச்சை நம்மிடமிருந்து மறைத்தது ஏன்..? இப்படி நேற்றைய, இன்றைய ஆட்சியாளர்களிடம் நாம் கேட்க வேண்டிய பல கேள்விகளை இத்திரைப்படம் நமக்குள் எழுப்புகிறது.

இந்தச் சந்தேகங்களுக்கு விடை தேட வேண்டுமாயின் நாம் பள்ளிப் பருவத்தைப் புறக்கணித்து அம்பேத்கரை வெறும் புத்தகங்கள் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும் என்கிற சூழல் இருக்கின்றபோது இது போன்ற திரைப்படங்களை வரவேற்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

பொறுமையுடன் படித்தமைக்கு எனது நன்றிகள்..

64 comments:

  1. அருமையான எழுத்து . மனதார பாராட்டுகிறேன் . இந்த விமர்சனம் முன்பே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . தேவையற்ற சந்தேகங்களை தவிர்த்திருக்கலாம் . தாமதத்திற்கு நேரமின்மை பொருத்தமான காரணம் இல்லை .

    ReplyDelete
  2. //மிரட்டலாலும் அது நடைபெறாமல் இருக்கவே அம்பேத்கரின் தலைமையில் 1927 மார்ச் 20-ல் செளதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம் நடந்துள்ளது. அந்தப் போராட்டக் காட்சி, காந்தியாரின் தண்டி உப்பு யாத்திரைக்கு ஒப்பானது. ஆனால் இதுவரையிலும் இந்த செளதார் குளம் போராட்டக் காட்சிகள் இந்தியர்களின் மத்தியில் தண்டி யாத்திரைபோல் பிரபலமாகாதது ஏன் என்றும் தெரியவில்லை..//

    இப்படி ஒரு போராட்டம் நடந்தது என்பதே இப்போது தான் தெரிகிறது. இதை போன்ற தலைவர்களின் படங்கள் வருவது நிச்சயமாக வரவேற்கப்படவேண்டும். இந்த படத்திற்கு வரிவிலக்கு கிடைத்து அனைவரையும் இதை போன்ற படங்களை பார்க்க வைக்கவேண்டும்.

    //இந்து சனாதனிகள்தான் இன்றைக்கும் பெண்கள் இட ஒதுக்கீடு மசாதோவை வேறு பெயர்களில் மறைமுகமாக எதிர்த்து வருகிறார்கள் என்பதையும் நாம் உணர வேண்டும்.//

    லாலுவையும் முலாயமையும் சொல்கிறீர்களா?

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம்..மம்முட்டிக்கு மகுடம் இந்தப்படம்.
    -வ---செங்கோவி
    நானா யோசிச்சேன் (டிசம்பர்-2010)

    ReplyDelete
  4. அருமையான திரை விமர்சனம். வகுப்பில் நடத்தப்பட்ட பாடத்திற்கு வெளியேயும் வரலாறு உண்டு என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம்.. மனதார பாராட்டுகிறேன்


    இதையும் படிச்சி பாருங்க

    ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

    ReplyDelete
  6. .
    உண்மைத்தமிழன்,
    அம்பேத்காருக்கு செய்யும் மரியாதை அந்த சனாதன சகதியில் இருந்தும் உங்களை நீங்களே துடைத்துக்கொண்டு வெளியேறுவதுதான். நீங்கள் உங்களை இன்னுமா இந்து என்கிறீர்கள்? இந்து என்பது பார்ப்பன சனாதன வர்ணாசிரமதர்மம் என்று தெரியுமா? எத்தனை காலத்திற்கு இன்னும் இப்படி இருக்கப்போகிறீர்கள்? :-((((

    .

    ReplyDelete
  7. சூப்பர் தலைவரே. நல்ல அலசல். அருமையா எழுதியிருக்கீங்க

    ReplyDelete
  8. //இவ்வளவும் இருந்தும் காந்தியாரின் இந்த சிபாரிசு கவனிக்கத்தக்கதுதான். எனது கருத்து என்னவெனில், “அவர்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்லையே என்று அவர்கள் நினைக்கக் கூடாது என்பது காந்தியாரின் எண்ணமாக இருக்கலாம்” என்று நினைக்கிறேன்.//
    ஏன்? இது காந்தியின் உண்மையான பெருந்தன்மையின் வெளிப்பாடாகவும் இருக்கலாமே? ஒருவரை புகழ இன்னொருவரை இகழ்ந்தால்தான் முடியும் என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  9. திரைப்படம் பார்த்த திருப்தியாகிவிட்டது :)
    அருமை, அருமை...

    ReplyDelete
  10. //ஏன்? இது காந்தியின் உண்மையான பெருந்தன்மையின் வெளிப்பாடாகவும் இருக்கலாமே?//

    என் கருத்தும் இதே தான். காந்தியின் மேல் எனக்கு விமரிசனம் இருந்தாலும், அந்த சூழ்நிலையும் காலநிலையும் நமக்கு என்னவென்று தெரியாமல் இருப்பதால் அவரை சந்தேகப்படத் தோன்றுகிறது என்றே நினைக்கிறேன்.

    //ஒருவரை புகழ இன்னொருவரை இகழ்ந்தால்தான் முடியும் என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

    இப்படி டிஸ்கியோடு கருத்து சொல்லும் இந்த நிலைமை ரொம்ப மோசமானது. எப்பத்தான் திருந்துமோ இந்த மக்களின் மனோபாவம்.

    ReplyDelete
  11. [[[பார்வையாளன் said...
    அருமையான எழுத்து. மனதார பாராட்டுகிறேன். இந்த விமர்சனம் முன்பே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தேவையற்ற சந்தேகங்களை தவிர்த்திருக்கலாம். தாமதத்திற்கு நேரமின்மை பொருத்தமான காரணம் இல்லை.]]]

    மறுபடியுமா..? வேண்டாம்.. எந்த ஒரு சந்தேகத்தோடும் இனிமேல் என்னை நீங்கள் தொடர வேண்டாம்..!

    ReplyDelete
  12. [[[சீனு said...

    //மிரட்டலாலும் அது நடைபெறாமல் இருக்கவே அம்பேத்கரின் தலைமையில் 1927 மார்ச் 20-ல் செளதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம் நடந்துள்ளது. அந்தப் போராட்டக் காட்சி, காந்தியாரின் தண்டி உப்பு யாத்திரைக்கு ஒப்பானது. ஆனால் இதுவரையிலும் இந்த செளதார் குளம் போராட்டக் காட்சிகள் இந்தியர்களின் மத்தியில் தண்டி யாத்திரைபோல் பிரபலமாகாதது ஏன் என்றும் தெரியவில்லை..//

    இப்படி ஒரு போராட்டம் நடந்தது என்பதே இப்போதுதான் தெரிகிறது. இதை போன்ற தலைவர்களின் படங்கள் வருவது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டும். இந்த படத்திற்கு வரி விலக்கு கிடைத்து அனைவரையும் இதை போன்ற படங்களை பார்க்க வைக்க வேண்டும்.]]]

    சத்தியமான உண்மை. இதைச் செய்வதற்குத்தான் இப்போதைய மைனாரிட்டி தி.மு.க.வின் துப்புக்கெட்ட அரசுக்கு துப்பில்லையே..?

    //இந்து சனாதனிகள்தான் இன்றைக்கும் பெண்கள் இட ஒதுக்கீடு மசாதோவை வேறு பெயர்களில் மறைமுகமாக எதிர்த்து வருகிறார்கள் என்பதையும் நாம் உணர வேண்டும்.//

    லாலுவையும் முலாயமையும் சொல்கிறீர்களா?]]]

    வேற யாரைச் சொல்றது.. கடுமையாக எதிர்ப்பவர்கள் அவர்கள்தானே..?

    ReplyDelete
  13. [[[செங்கோவி said...
    அருமையான விமர்சனம். மம்முட்டிக்கு மகுடம் இந்தப் படம்.
    -வ---செங்கோவி
    நானா யோசிச்சேன் (டிசம்பர்-2010)]]]

    நிச்சயமாக மம்மூக்காவின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம் இது..!

    ReplyDelete
  14. [[[Indian said...
    அருமையான திரை விமர்சனம். வகுப்பில் நடத்தப்பட்ட பாடத்திற்கு வெளியேயும் வரலாறு உண்டு என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியதற்கு மிக்க நன்றி.]]]

    உண்மையை உணர்ந்ததினால் சொல்கிறேன் இந்தியன் ஸார்..!

    ReplyDelete
  15. [[[சண்முககுமார் said...

    அருமையான விமர்சனம்.. மனதார பாராட்டுகிறேன்


    இதையும் படிச்சி பாருங்க

    ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்]]]

    வருகைக்கு நன்றி சண்முகக்குமார்..!

    ReplyDelete
  16. [[[கல்வெட்டு said...
    உண்மைத்தமிழன், அம்பேத்காருக்கு செய்யும் மரியாதை அந்த சனாதன சகதியில் இருந்தும் உங்களை நீங்களே துடைத்துக் கொண்டு வெளியேறுவதுதான். நீங்கள் உங்களை இன்னுமா இந்து என்கிறீர்கள்?]]

    ஆமாம்.. இந்து என்னும் மதம் பற்றிய எனது கணிப்பு வேறானதாக இருக்கிறதே..!

    [[[இந்து என்பது பார்ப்பன சனாதன வர்ணாசிரம தர்மம் என்று தெரியுமா? எத்தனை காலத்திற்கு இன்னும் இப்படி இருக்கப் போகிறீர்கள்? :-((((]]]

    இந்தத் தர்மத்தை இடையிலேயே புகுத்தியவர்கள் சில மனிதர்கள் என்றுதான் நான் படித்திருக்கிறேன்.. உணர்கிறேன்.. எனவே இது பற்றிய கவலை எனக்கில்லை..!

    ReplyDelete
  17. [[[Indian Share Market said...
    சூப்பர் தலைவரே. நல்ல அலசல். அருமையா எழுதியிருக்கீங்க.]]]

    நன்றி நண்பரே..!

    ReplyDelete
  18. [[[bandhu said...

    //இவ்வளவும் இருந்தும் காந்தியாரின் இந்த சிபாரிசு கவனிக்கத்தக்கதுதான். எனது கருத்து என்னவெனில், “அவர்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்லையே என்று அவர்கள் நினைக்கக் கூடாது என்பது காந்தியாரின் எண்ணமாக இருக்கலாம்” என்று நினைக்கிறேன்.//

    ஏன்? இது காந்தியின் உண்மையான பெருந்தன்மையின் வெளிப்பாடாகவும் இருக்கலாமே? ஒருவரை புகழ இன்னொருவரை இகழ்ந்தால்தான் முடியும் என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.]]]

    அந்தப் பெருந்தன்மை தான் அந்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லையே என்ற குற்றவுணர்வால் வந்திருக்கலாமே..?

    ReplyDelete
  19. [[[Sugumarje said...
    திரைப்படம் பார்த்த திருப்தியாகிவிட்டது :) அருமை, அருமை...]]]

    அப்படியே நிறுத்திக் கொள்ளாதீர்கள் ஸார். அவசியம் தியேட்டருக்கு சென்று படத்தைப் பாருங்கள்.

    ReplyDelete
  20. [[[சீனு said...

    //ஏன்? இது காந்தியின் உண்மையான பெருந்தன்மையின் வெளிப்பாடாகவும் இருக்கலாமே?//

    என் கருத்தும் இதேதான். காந்தியின் மேல் எனக்கு விமரிசனம் இருந்தாலும், அந்த சூழ்நிலையும் காலநிலையும் நமக்கு என்னவென்று தெரியாமல் இருப்பதால் அவரை சந்தேகப்படத் தோன்றுகிறது என்றே நினைக்கிறேன்.]]]

    நன்றி இதற்கான பதிலை அவருக்கான பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறேன் சீனு..!

    //ஒருவரை புகழ இன்னொருவரை இகழ்ந்தால்தான் முடியும் என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

    இப்படி டிஸ்கியோடு கருத்து சொல்லும் இந்த நிலைமை ரொம்ப மோசமானது. எப்பத்தான் திருந்துமோ இந்த மக்களின் மனோபாவம்.]]]

    இது ஒரு வகை விளையாட்டு.. வருத்தப்பட வேண்டியதில்லை..!

    ReplyDelete
  21. எந்த ஒரு சந்தேகத்தோடும் இனிமேல் என்னை நீங்கள் தொடர வேண்டாம்..!”

    அண்ணே.. ப்ளீஸ் கோபபடாதீங்க

    எனக்கு 0.000001 % கூட சந்தேகம் இல்லை..

    மற்றவர்கள் சந்தேகப்படுகிறார்கள் ( யாரை என சொல்ல விரும்பவில்லை )என்பதைத்தான் உங்கள்மேல் கொண்ட அன்பால் சுட்டி காட்டினேன்..

    இதுவும் கூட உங்களை தர்மசங்கடப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொண்டேன்..

    இந்த விவாகரத்தை இனி நான் பேச மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்..

    ReplyDelete
  22. 1927 மார்ச் 20-ல் செளதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம் நடந்துள்ளது // இதே மாதிரி எத்தனை போராட்டங்களை அன்றைய இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களை திரட்டி அவர் நடத்தியுள்ளார் என்ற தகவலை' நீங்க நம்புற ஹிஸ்டரியை'படித்த சொல்லுங்க. தெரிஞ்சுக்குறேன்.

    ReplyDelete
  23. காந்தியாரின் தண்டி உப்பு யாத்திரைக்கு ஒப்பானது. ஆனால் இதுவரையிலும் இந்த செளதார் குளம் போராட்டக் காட்சிகள் இந்தியர்களின் மத்தியில் தண்டி யாத்திரைபோல் பிரபலமாகாதது ஏன் என்றும் தெரியவில்லை// மொழி இனம் மதம் சாதி மற்றும் பூகோள ரீதியா 565 துண்டுகளாக சிதறிக்கிடந்த மக்களை ஓரணியில் திரட்டி மிகவும் வலிமையான ஒரு சாம்ராஜியத்தை எதிர்த்து அதுவரையில் உலகம் சந்தித்திராத போர் முறையில் தேச விடுதலைக்காக போராடியதை எப்படி கம்பெர் செய்கிறீர்கள் .தண்டி யாத்திரை மாதிரி ஒரு மாபெரும் மக்கள் சக்தி கலந்து கொண்ட ஒரு அறப்போராட்டம் பற்றி இதுவரை நான் நம்பும் வரலாற்றில் படித்தது இல்லை. மற்றபடி அம்பேத்காரை பற்றி எந்த காழ்ப்புணர்வும் எனக்கில்லை. அவரை பின்பற்றி அனைத்து மக்களும் புத்த மத்திற்கு மாறியிருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

    ReplyDelete
  24. சரவணன்!

    மிக அழகாக எழுதியுள்ளீகள். அம்பேத்காரைப் பற்றி இவ்வளவு செய்திகளா என வியந்தேன். திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலை அதிகரித்துள்ளீர்கள். நல்ல பதிவு.

    ReplyDelete
  25. காந்தியின் தண்டி யாத்திரைக்கு ஒப்பாக அண்ணல் அம்பேத்கரின் செளதார் குளம் போராட்டம் கண்டிப்பாக அமையாது.
    முன்னது ஒரு ஒட்டு மொத்த நாட்டுக்கு, பின்னது ஒரு பகுதி மக்களுக்கு. சௌதார் குளம் போராட்டத்தை உயர்த்திப் பிடிக்க ஒரு உவமையாக வேண்டுமானால் பயன்படுத்தலாம் ஆனால் இரண்டும் அடிப்படை நோக்கமே வேறு.

    ReplyDelete
  26. எனக்கு பள்ளிப் பிராயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது.
    10ம் வகுப்பு சமூகவியல் ஆசிரியர் ஒரு கட்சி, இரு கட்சி, பல கட்சி மற்றும் ஜனநாயகம் குறித்த பாடம் நடத்திக் கொண்டிருந்தார். நம் நாட்டின் சட்டம் பற்றிக் கூறும் போது "பிச்சைக்காரன் சோற்றுக் கவளம்" என்றார். அதாவது ஒவ்வொரு
    நாட்டிலிருந்தும் மேன்மையான சட்ட விசயங்களை எடுத்து ஒரு மிக்சர் மாதிரி இருக்கிறது என்றார்.

    அம்பேத்கர் எப்போது
    நல்லதையையே சிந்தித்துக் கொண்டிருந்ததால் அவரால் குறுக்குத்
    தனமாக சிந்தித்து லூப்ஹோல் (தமிழில் தெரியவில்லை) இல்லா சட்டங்களை உருவாக்க
    முடியவில்லை.

    ReplyDelete
  27. பதிவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி ?
    எப்படி தினம் தினம் பதிவு ( அதுவும் நீளமான பதிவுகள்) எழுத நேரமும் விசயமும் கிடைக்குது ? நானும் ஒரு வருசமா இந்த கேள்விய கேக்கணும்னு நெனச்சுட்டு இருக்கேன் . சரி எதோ எழுதனுமேன்னு பதிவு போடறீங்களானு பாத்தா எல்லாம் விஷயம் உள்ளதாத்தன் இருக்கு... என் நண்பர்கள் என்னை blog ஆரம்பிக்க சொல்லி தொல்லை பண்றாங்க .. எனக்கு நேரமே கெடைக்கல.அந்த ரகசியத்த கொஞ்சம் சொல்லுங்களேன்..

    ReplyDelete
  28. தலைவா....

    இந்த “சின்ன” பதிவை படிச்சு முடிக்கறதுக்குள்ள புத்தாண்டு பிறந்தாலும் பிறந்து விடும்...

    வரும் ஆண்டுகளிலும் இதே போல் பல்லாயிரம் “சின்ன” பதிவுகளை இட வேண்டும் என்று வேண்டுகிறேன்...

    ReplyDelete
  29. [[[பார்வையாளன் said...
    எந்த ஒரு சந்தேகத்தோடும் இனிமேல் என்னை நீங்கள் தொடர வேண்டாம்..!”]]

    அண்ணே.. ப்ளீஸ் கோபபடாதீங்க
    எனக்கு 0.000001 % கூட சந்தேகம் இல்லை..

    மற்றவர்கள் சந்தேகப்படுகிறார்கள் (யாரை என சொல்ல விரும்பவில்லை)என்பதைத்தான் உங்கள் மேல் கொண்ட அன்பால் சுட்டி காட்டினேன்..

    இதுவும்கூட உங்களை தர்மசங்கடப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த விவாகரத்தை இனி நான் பேச மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்..]]]

    -))))))))

    ReplyDelete
  30. [[[Ragu said...

    1927 மார்ச் 20-ல் செளதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம் நடந்துள்ளது //

    இதே மாதிரி எத்தனை போராட்டங்களை அன்றைய இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களை திரட்டி அவர் நடத்தியுள்ளார் என்ற தகவலை' நீங்க நம்புற ஹிஸ்டரியை'படித்த சொல்லுங்க. தெரிஞ்சுக்குறேன்.]]]

    இதற்குப் பிறகான அவரது வாழ்க்கையே தாழ்த்தப்பட்ட மக்களுக்கானதாகிவிட்டது..! வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாருங்கள்..!

    ஒரு சின்ன தூண்டுதல்தான்.. இன்னமும் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் அவரை தெய்வமாகத் தொழும் அளவுக்கு நினைத்துப் பார்க்கிறார்கள்!

    அம்பேத்கர் என்றாலே ஏன் இவ்வளவு வெறுப்பு..?

    ReplyDelete
  31. இரண்டு எடுப்பு சாப்பாட்டை உள்ளே தள்ளிய திருப்தியை தருகிறது பதிவு.

    ReplyDelete
  32. [[[Ragu said...

    காந்தியாரின் தண்டி உப்பு யாத்திரைக்கு ஒப்பானது. ஆனால் இதுவரையிலும் இந்த செளதார் குளம் போராட்டக் காட்சிகள் இந்தியர்களின் மத்தியில் தண்டி யாத்திரைபோல் பிரபலமாகாதது ஏன் என்றும் தெரியவில்லை//

    மொழி இனம் மதம் சாதி மற்றும் பூகோள ரீதியா 565 துண்டுகளாக சிதறிக் கிடந்த மக்களை ஓரணியில் திரட்டி மிகவும் வலிமையான ஒரு சாம்ராஜியத்தை எதிர்த்து அதுவரையில் உலகம் சந்தித்திராத போர் முறையில் தேச விடுதலைக்காக போராடியதை எப்படி கம்பெர் செய்கிறீர்கள். தண்டி யாத்திரை மாதிரி ஒரு மாபெரும் மக்கள் சக்தி கலந்து கொண்ட ஒரு அறப்போராட்டம் பற்றி இதுவரை நான் நம்பும் வரலாற்றில் படித்தது இல்லை. மற்றபடி அம்பேத்காரை பற்றி எந்த காழ்ப்புணர்வும் எனக்கில்லை. அவரை பின்பற்றி அனைத்து மக்களும் புத்த மத்திற்கு மாறியிருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.]]]

    சொந்த ஊரில் இருக்கும் மக்களை விலங்குகளைப் போல் நடத்துவதை எதிர்த்து அவர் நடத்திய போராட்டம் அது. போராட்டத்தின் நோக்கத்தை ஒப்பீட்டிப் பார்த்தால் உங்களுக்கே இப்படித்தான் சொல்லத் தோன்றும்.

    எதிர்க்குரல் கொடுப்பதே மிகப் பெரிய விஷயம் என்று நினைத்த அந்தக் காலக்கட்டத்தில் இந்த அளவுக்குப் போராட்டத்தில் ஈடுபடுத்தி அந்த மக்களை உரிமைக் குரல் எழுப்ப வைத்ததே அம்பேத்கரின் குரல்தான்.

    தண்டி யாத்திரையை நான் குறை சொல்லவில்லை. இரண்டும் ஒன்றுதான் என்றேன். காந்தியாருக்கு காங்கிரஸ் என்கிற மிகப் பெரிய ஆயுதம் இருந்தது. ஆனால் அம்பேத்கர் என்ற தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவருக்கு அவர் இனத்து மக்களைத் தவிர வேறு யாருமில்லை..!

    ReplyDelete
  33. [[[senthil said...
    சரவணன்! மிக அழகாக எழுதியுள்ளீகள். அம்பேத்காரைப் பற்றி இவ்வளவு செய்திகளா என வியந்தேன். திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலை அதிகரித்துள்ளீர்கள். நல்ல பதிவு.]]]

    அவசியம் சென்று பாருங்கள் செந்தில்..!

    ReplyDelete
  34. [[[smart said...

    முன்னது ஒரு ஒட்டு மொத்த நாட்டுக்கு, பின்னது ஒரு பகுதி மக்களுக்கு.]]]

    ஒரு பகுதி மக்கள் அல்ல. இன்னமும் இந்த நாட்டில் அடிமைகளைப் போல தனித்தே இருக்கும் மக்களைப் பற்றிச் சிந்திக்கக் கூட ஆள் இல்லாத நிலையில் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அதேவேளையில் உள்ளூர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தாரே.. இதுவும் ஒரு மிகப் பெரும் அறப் போராட்டம்தான்..!

    ReplyDelete
  35. [[[ashok said...

    பதிவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி?

    எப்படி தினம் தினம் பதிவு (அதுவும் நீளமான பதிவுகள்) எழுத நேரமும் விசயமும் கிடைக்குது? நானும் ஒரு வருசமா இந்த கேள்விய கேக்கணும்னு நெனச்சுட்டு இருக்கேன்.

    சரி எதோ எழுதனுமேன்னு பதிவு போடறீங்களானு பாத்தா எல்லாம் விஷயம் உள்ளதாத்தன் இருக்கு... என் நண்பர்கள் என்னை blog ஆரம்பிக்க சொல்லி தொல்லை பண்றாங்க. எனக்கு நேரமே கெடைக்கல. அந்த ரகசியத்த கொஞ்சம் சொல்லுங்களேன்..]]]

    மொதல்ல நான் ஒரு வேலையில்லாத வெட்டி ஆஃபீஸர். அடுத்தது கல்யாணமாகாத பேச்சுலர். வீட்டில் எந்த கடமையும் இல்லை. நான் தமிழ்த் தட்டச்சன். ஆகவே தட்டச்சு பற்றிக் கவலையில்லை. நானொரு பத்திரிகையாளன். தினம்தோறும் முக்கியப் பத்திரிகைகளைப் புரட்டி விடுவேன்.. வேறென்ன வேண்டும் எனக்கு..?

    ReplyDelete
  36. [[[R.Gopi said...

    தலைவா. இந்த “சின்ன” பதிவை படிச்சு முடிக்கறதுக்குள்ள புத்தாண்டு பிறந்தாலும் பிறந்து விடும். வரும் ஆண்டுகளிலும் இதே போல் பல்லாயிரம் “சின்ன” பதிவுகளை இட வேண்டும் என்று வேண்டுகிறேன்.]]]

    உங்க ஆசீர்வாதம் கோபி..!

    ReplyDelete
  37. கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.. நேரமின்மையால் பார்க்க முடியாமல் தள்ளிப்போகிறது.. ஆமா "ஒரிஜினல் உண்மை தமிழன்" எப்படி இருக்காரு??

    ReplyDelete
  38. [[[கவிதை காதலன் said...
    கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.. நேரமின்மையால் பார்க்க முடியாமல் தள்ளிப் போகிறது.]]]

    எப்படியாவது நேரம் ஒதுக்கிச் சென்று பாருங்கள். அடுத்த வாரம் இருக்குமா என்பது சந்தேகமே..!

    [[[ஆமா "ஒரிஜினல் உண்மை தமிழன்" எப்படி இருக்காரு??]]]

    யார் அவரு? எங்க இருக்காரு..? எப்படி இருப்பாரு? எனக்குத் தெரியாதே..?

    ReplyDelete
  39. [[[D.R.Ashok said...
    நன்றி. for detailing.:)]]]

    அவசியம் படம் பாருங்க அசோக்ஜி..!

    ReplyDelete
  40. [[[செந்தழல் ரவி said...
    இரண்டு எடுப்பு சாப்பாட்டை உள்ளே தள்ளிய திருப்தியை தருகிறது பதிவு.]]]

    ஹா.. ஹா.. ஒப்பீட்டை வெகுவாக ரசித்தேன் தம்பி..!

    நன்றி..!

    ReplyDelete
  41. [[[Sivakumar said...

    எனக்கு பள்ளிப் பிராயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது.

    10-ம் வகுப்பு சமூகவியல் ஆசிரியர் ஒரு கட்சி, இரு கட்சி, பல கட்சி மற்றும் ஜனநாயகம் குறித்த பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

    நம் நாட்டின் சட்டம் பற்றிக் கூறும்போது "பிச்சைக்காரன் சோற்றுக் கவளம்" என்றார்.

    அதாவது ஒவ்வொரு
    நாட்டிலிருந்தும் மேன்மையான சட்ட விசயங்களை எடுத்து ஒரு மிக்சர் மாதிரி இருக்கிறது என்றார்.

    அம்பேத்கர் எப்போதும்
    நல்லதையே சிந்தித்துக் கொண்டிருந்ததால் அவரால் குறுக்குத்தனமாக சிந்தித்து லூப் ஹோல் (தமிழில் தெரியவில்லை) இல்லா சட்டங்களை உருவாக்க
    முடியவில்லை.]]]

    ஜனநாயகத்தில் சட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்துவது வருங்காலத்தில் நடக்கும் என்பதை யூகித்துதான் அவர் அவ்வாறு செய்திருக்கிறார் என்பது எனது அனுமானம்..!

    ReplyDelete
  42. சறுக்கு மரம் மாதிரி பதிவு ஆரம்பிச்சதும் தெரியலை... முடிச்சதும் தெரியலை. உங்கள் எழுத்து திறமை அபாரம்...

    ReplyDelete
  43. 1927 மார்ச் 20-ல் செளதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம் நடந்துள்ளது //
    இதே மாதிரி எத்தனை போராட்டங்களை அன்றைய இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களை திரட்டி அவர் நடத்தியுள்ளார் ?? Numbers plz அம்பேத்காரின் தவறுகளை சுட்டிக் காட்டினால் // அம்பேத்கர் என்றாலே ஏன் இவ்வளவு வெறுப்பு..? // :-( .இரண்டு போரட்டமும் ஒன்று தான்.என் கண்ணைத் திறந்தீர்கர்கள்.உங்களது ஒப்பீடு மிகவும் சரிதான்.சிறந்த கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசுக்கு உங்களை சிபாரிசு செய்கிறேன் // வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாருங்கள்.. neengal muthalil padiththu paarungal.DOT

    ReplyDelete
  44. பல இடங்கள் சிந்திக்க வைக்கிறது...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

    ReplyDelete
  45. மிகவும் அருமையான விமர்சனம்

    ReplyDelete
  46. மும்பையில் வரவில்லை....

    கண்டிப்பாக பார்ப்பேன்......

    ReplyDelete
  47. **
    மொதல்ல நான் ஒரு வேலையில்லாத வெட்டி ஆஃபீஸர். அடுத்தது கல்யாணமாகாத பேச்சுலர். வீட்டில் எந்த கடமையும் இல்லை.
    **

    ##
    இந்த விவாகரத்தை இனி நான் பேச மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.
    ##

    ;)))

    ReplyDelete
  48. ///திருட்டு முழிகளினாலும் அப்பாவி மனிதரைப் போலவும், சில இடங்களிலும் திருட்டுத்தனக்காரர் போலவும் காட்டியிருக்கும் இயக்குநரின் தைரியத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்///


    இதில் என்ன உங்களுக்கு இவ்வளவு சந்தோஷம்? இது ரசனைக்குரிய விஷயமாக தெரியவில்லை.

    காந்தியை விமர்சனம் செய்பவர்கள் வரத்து கருத்தைப் பற்றி விமர்சனம் செய்யவேண்டும். இதுபோன்ற விஷயங்களால் அல்ல.

    இந்த ரசனைக் குறைவான காட்சி வைப்பதற்கு எந்த தைரியமும் தேவையில்லை. ஏனெனில் காந்திக்காக ஆட்டோ அனுப்ப யாரும் இங்கில்லை.

    ReplyDelete
  49. @வேழமுகன்,

    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  50. வரலாறு என்பது ஜெய்த்தவர்களால் எழுதபடுவது. அதைதான் நாம் பள்ளிகளில் படிக்கிறோம். உண்மையான வரலாறு என்பது நாம் தேடி கண்டுபிடித்து தெரிந்து கொள்ள வேண்டியது.

    ஒடுக்க பட்ட மக்கள் தெய்வமாக வழிபட வேண்டியவர் அம்பேத்கர். ஒடுக்க பட்ட மக்களின் பிரதிநிதி என்று தங்களை சொல்லி கொள்ளும் பல இன்றைய தலைவர்கள், அம்பேத்கரின் கால் தூசுக்கு கூட சமமாக மாட்டார்கள்.

    நல்ல விமரிசனம் உண்மை தமிழன். நன்றி.

    ReplyDelete
  51. [[[தனுசுராசி said...
    சறுக்கு மரம் மாதிரி பதிவு ஆரம்பிச்சதும் தெரியலை. முடிச்சதும் தெரியலை. உங்கள் எழுத்து திறமை அபாரம்.]]]

    அவ்வளவு நல்லாவா இருக்கு..? எனக்கே ஆச்சரியமா இருக்கு தனுசுராசி ஸார்..

    ஆனாலும் பாராட்டுக்கு எனது நன்றிகள்..!

    ReplyDelete
  52. [[[Ragu said...

    1927 மார்ச் 20-ல் செளதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம் நடந்துள்ளது //

    இதே மாதிரி எத்தனை போராட்டங்களை அன்றைய இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களை திரட்டி அவர் நடத்தியுள்ளார் ??

    Numbers plz அம்பேத்காரின் தவறுகளை சுட்டிக் காட்டினால் //

    அம்பேத்கர் என்றாலே ஏன் இவ்வளவு வெறுப்பு..? //

    இரண்டு போரட்டமும் ஒன்றுதான். என் கண்ணைத் திறந்தீர்கள். உங்களது ஒப்பீடு மிகவும் சரிதான். சிறந்த கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசுக்கு உங்களை சிபாரிசு செய்கிறேன் //

    வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாருங்கள்..

    neengal muthalil padiththu paarungal. DOT]]]

    புரிந்து கொண்டமைக்கு நன்றிகள் ரகு. வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  53. [[[ம.தி.சுதா said...
    பல இடங்கள் சிந்திக்க வைக்கிறது.
    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.]]]

    நன்றி சுதா..!

    ReplyDelete
  54. [[[Kovai Senthil said...
    மிகவும் அருமையான விமர்சனம்.]]]

    நன்றி செந்தில் ஸார்..!

    ReplyDelete
  55. [[[sivakasi maappillai said...
    மும்பையில் வரவில்லை. கண்டிப்பாக பார்ப்பேன்.]]]

    அவசியம் பார்க்க வேண்டிய படம்.. தமிழில் முடியாவிட்டாலும் ஹிந்தியில் டிவிடி கிடைக்கும். வாங்கிப் பாருங்கள்..!

    ReplyDelete
  56. [[[Indian said...

    **
    மொதல்ல நான் ஒரு வேலையில்லாத வெட்டி ஆஃபீஸர். அடுத்தது கல்யாணமாகாத பேச்சுலர். வீட்டில் எந்த கடமையும் இல்லை.
    **

    ##

    இந்த விவாகரத்தை இனி நான் பேச மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.
    ##

    ;)))]]]

    புரிஞ்சுக்கிட்டதுக்கு சந்தோஷம் ஸார்..!

    ReplyDelete
  57. [[[வேழமுகன் said...

    ///திருட்டு முழிகளினாலும் அப்பாவி மனிதரைப் போலவும், சில இடங்களிலும் திருட்டுத்தனக்காரர் போலவும் காட்டியிருக்கும் இயக்குநரின் தைரியத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்///

    இதில் என்ன உங்களுக்கு இவ்வளவு சந்தோஷம்? இது ரசனைக்குரிய விஷயமாக தெரியவில்லை.

    காந்தியை விமர்சனம் செய்பவர்கள் வரத்து கருத்தைப் பற்றி விமர்சனம் செய்யவேண்டும். இதுபோன்ற விஷயங்களால் அல்ல.

    இந்த ரசனைக் குறைவான காட்சி வைப்பதற்கு எந்த தைரியமும் தேவையில்லை. ஏனெனில் காந்திக்காக ஆட்டோ அனுப்ப யாரும் இங்கில்லை.]]]

    ஏன் நான் இல்லையா..? இதில் அவரைப் பற்றித் தவறாகக் காட்டியிருந்தால் நானே கேட்டிருப்பேன். நியாயமாக நடந்ததைத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால் பாடி லாங்குவேஜ், மற்றும் கேரக்டர் ஸ்கெட்ச்தான் காமெடியாகிவிட்டது. அவ்ளோதான். இது சாதாரணமானதுதான். நான் ஆச்சரியப்பட்டதற்குக் காரணம், சென்சார் போர்டில் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்காமல் விட்டிருக்கிறார்களே என்பதால்தான்..!

    ReplyDelete
  58. [[[சீனு said...

    @வேழமுகன்,

    வழி மொழிகிறேன்.]]]

    நன்றி சீனு..!

    ReplyDelete
  59. [[[N.Balajhi said...

    வரலாறு என்பது ஜெய்த்தவர்களால் எழுதபடுவது. அதைதான் நாம் பள்ளிகளில் படிக்கிறோம். உண்மையான வரலாறு என்பது நாம் தேடி கண்டுபிடித்து தெரிந்து கொள்ள வேண்டியது.]]]

    நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தை. ஏற்றுக் கொள்கிறேன் பாலாஜி ஸார்..!

    [[[ஒடுக்கபட்ட மக்கள் தெய்வமாக வழிபட வேண்டியவர் அம்பேத்கர். ஒடுக்கபட்ட மக்களின் பிரதிநிதி என்று தங்களை சொல்லி கொள்ளும் பல இன்றைய தலைவர்கள், அம்பேத்கரின் கால் தூசுக்கு கூட சமமாக மாட்டார்கள்.]]]

    இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்..! இவர்களால்தான் அந்தத் தலைவரின் வாழ்வும், வரலாறும் நம்மிடையே மறைக்கப்படுகிறது..!

    [[[நல்ல விமரிசனம் உண்மை தமிழன். நன்றி.]]]

    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  60. dear Mr.Saranana,

    i forwarde your article to my friend through email. he has given the below comment. i have posted behalf of him.

    best regards from

    kannan
    abu dhabi.
    http://samykannan.blogspot.com/


    இந்திய அரசியல் சட்டத்தை இயர்ரியவர்!!, இன்ரைய இந்திய அரசியலின் நிலை என்ன???? பலங் கதைய விட்டுவிட்டு இன்ரைய சுலலுக்கு என்ன செய்யலாம் நன்பர்கலெ!!!!



    Regards

    Subu

    ReplyDelete