Pages

Monday, November 01, 2010

நேற்றைய ஈழத்துச் செய்திகள்..! - 31-10-2010

01-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நேற்றைய ஈழத்துச் செய்திகளில் முக்கியமானவற்றைத் தொகுத்து தந்துள்ளேன். ச்சும்மா படித்துப் பாருங்கள்..! ஈழத்துத் தமிழையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்..!

தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் அடாவடித்தனம் : யாழ்  அதிகாரி உடனடி இடமாற்றம்

தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் அடாவடித்தனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத யாழ் சிவில் நிர்வாக படை அதிகாரி ஒருவர் உடனடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


அண்மையில் தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகளால் யாழ் பொது நூலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த வேளை அடாவடித்தனத்தில் ஈடுபட்டமையை அடுத்து அங்கு ஒழுங்கான முறையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து யாழ் சிவில் நிர்வாக அலுவலரான மேஜர் பண்டார பலாலி படைத் தலைமையக அதிகாரிகளால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படி கொழும்பு பகுதிக்கு இடமாற்றம் அசய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது படை அதிகாரிகளுக்கிடையிலான பழிவாங்கல் நடவடிக்கையென விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இதே வேளை கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தென்னிலங்கைப் பயணிகள் யாழ் பொது நூலகத்தைப் பார்வையிடுவதற்காக வாகனங்களில் வந்திற்ங்கியபோதும் அவர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அங்கு வந்த ஒரு சிலர் பொது நூலகத்திற்கு முன்பாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.
 
விஷயம் வேறொன்றுமில்லை. கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்குச் சில சிங்களவர்கள் சுற்றுலாவுக்கு வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் மாலை நேரத்தில் யாழ்ப்பாண நூலகத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்த நேரம் பார்வையாளர் நேரம் முடிவுற்றதால் அவர்களை உள்ளேவிட காவலாளி அனுமதிக்கவில்லை.

"எங்களையா உள்ள விட மாட்டேன்ற..?" என்று கோபப்பட்ட சிங்கள சுற்றுலாப் பயணிகள் வலுக்கட்டாயமாக பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை எடுத்துக் கீழே வீசியிருக்கிறார்கள். அலமாரிகளை அப்படியே கவிழ்த்துக் குப்புறப் போட்டிருக்கிறார்கள். கைக்கு கிடைத்த புத்தகங்களை எடுத்துத் தாறுமாறாக வீசியிருக்கிறார்கள். தாங்கள் வந்து சென்றதை இப்படி நிலை நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள்.
 
காவல்துறை, ராணுவம் என்று சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லியும் இந்தக் களேபரம் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வாரம் கழித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டு யாழ்ப்பாணப் பகுதிக்குப் பொறுப்பான இந்த மேஜரை தண்ணியில்லாத காட்டுக்குத் தூக்கியிருக்கிறார்கள் நம்மூர் போலவே..!
 
தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் என்பது உறுதியாகிறது : சுரேஸ் பிரேமச்சந்திரன் வருத்தம்

யாழ். நூலகத்தில் கடந்த வாரம் இடம் பெற்ற சம்பவம் படித்த, நாகரிகம் தெரிந்த மக்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இந்தச் சம்பவத்தின் மூலம் இந்நாட்டில் வாழும் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகள்தான் என்பதனை அரசாஙகம் நிரூபித்துவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
 
கடந்த வாரம் யாழ் நூலகத்துக்குள் நுழைந்த தென்னிலங்கைச் சிங்களச் சுற்றுலாப் பயணிகள் அறிவித்தலை மீறி நூலகத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து அங்கிருந்த புத்தக ராக்கைகளை கீழே தள்ளிவிட்டுப் புத்தகங்களையும் வீசிய சம்பவம் தொடர்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது :
 
தமிழீழ விடுதலைப் புலிகளுடான யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி கொண்டதன் பின்னர் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் புதுவித கருத்தொன்று இன்று தோன்றியுள்ளது. தாங்கள் எங்கும் செல்லலாம் எதனையும் செய்யலாம். யாரும் ஏன் எதற்கு என்று எதனையும் கேட்க முடியாது. தாம் எப்படி நடந்து கொண்டாலும் அதற்கு இலங்கை அரசின் படைத்தரப்பு பாதுகாப்புத் தர வேண்டுமென்ற எண்ணத்திலேயே. இவர்கள் இன்று உள்ளனர். விரும்பத்தகாத குறிப்பிட்ட சம்பவத்தை ஆராயும்போதுகூட இதுவே புலப்படுகிறது.

யாழ் நூலகமென்பது கற்றலுக்கானதொரு இடம். அங்கு செல்பவர்கள் அமைதியான முறையில் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அங்கு ஒரு நிகழ்வு நடக்குமானால் அதனைக் குழப்புவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது. ஜனாதிபதி அலுவலகத்திலிருந்தோ அல்லது வெள்ளை மாளிகையிலிருந்தோ எவரும் வர முடியும். ஆனால், நாட்டின் சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியானதே. ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருகிறேன் என்னை உள்ளே அனுமதியுங்கள் என்று ஒருவர் கேட்டால் அவரை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. ஆனால், அவருக்கு அடிபணிந்து இராணுவமும், பொலிஸாரும் செயற்படுவது கண்டித்தக்க விடயம்.
 
அநுராதபுரத்துக்கும் பொலநறுவைக்கும் தமிழர்களும் முஸ்லிம்களும் சென்று இவ்வாறு நடந்து கொள்ள முடியுமா? அவ்வாறு நடந்து கொண்டால் நிலைமை என்னவாகும்? இங்குள்ள காணிகளில் நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தோம் என்று கூறினால் அது கிடைக்குமா.. அல்லது இதனை அரசாங்கம்தான் ஏற்றுக் கொள்ளுமா?
 
யாழ். ரயில்வே நிலையத்தில் சுமார் 150 சிங்கள மக்கள் தங்கியுள்ளனர். தாம் இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னர் இங்கு வாழ்ந்ததாக இவர்கள் கூறுகின்றனர். இருந்திருக்கலாம்.
 
நாம் இல்லையென்று மறுக்கவில்லை. இப்போது அவர்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கொழும்பிலிருந்து அமைச்சர் வந்து அவர்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார். கொழும்பிலிருந்து அவர்களுக்குச் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படுகிறது.
 
ஆனால், இருபது முப்பது வருடங்களாகத் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இன்னும் அகதி முகாம்களிலேயே உள்ளனர். அவர்களைத் திரும்பிப் பார்ப்பதற்கு இந்த நாட்டில் அமைச்சர்களும் இல்லை. அதிகாரிகளும் இல்லை.
 
இதேபோன்று கிழக்கு மாகாணத்தின் தூர், சம்பூர் போன்ற பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் இன்னும் அகதி முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களையாவது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் அக்கறை இந்த அரசாங்கத்துக்கு இல்லை. ஆனால், பெரும்பான்மைச் சமூகத்துக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் ஒன்றுக்குப் பத்து மடங்கான உதவிகளும் ஒத்தாசைகளும் பாதுகாப்புகளும் வழங்கப்படுகின்றன.
 
ஆனால், தமிழ் மக்கள் என்றால் அவர்கள் விரும்பத்தகாதவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் நோக்கப்படுகின்றனர். பயறுத்தி அவர்களை அடக்கும் முயற்சிகளே இடம் பெறுகின்றன.
 
வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு உல்லாசப் பயணம் செய்யும் சிங்கள மக்கள் இந்த மனோபாவத்தைக் கைவிட வேண்டும். அதனையும் மீறி இவர்கள் விரும்பத்தகாத நடவடிக்கைளில் ஈடுபட்டால் அவர்கள் தண்டிக்கப்பட்டவேண்டும். இதனை விட்டுவிட்டு அவர்களைப் பாதுகாப்பதும், கௌரவிப்பதும் ஓர் அநாகரிகமான செயல்.
 
இதேவேளை, அரசாங்கம் கூறும் இன நல்லிணக்கம் என்பது கிட்டவே நெருங்கி வர முடியாத ஒன்று என்பதும் இந்தச் சம்பவங்கள் மூலம் தெட்டத் தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
 
நிர்வாக சேவை நேர்முகப் பரீட்சைக்கு 257 சிங்களவர் தெரிவு! தமிழ் மொழி மூலம் எவரும் தெரிவாகவில்லை

இலங்கை நிர்வாக சேவை 2009-ம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப் பரீட்சைக்குரிய பெறுபேறுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் நேர்முகப் பரீட்சைக்கு சிங்கள மொழி மூலம் 257 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேநேரம் தமிழ் மொழி மூலம் எவருமே தெரிவு செய்யப்படவில்லை.
 

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நுழைவாயில் அறிவித்தல் பலகையில் எழுத்துப் பரீட்சைக்கான முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
இதில் இலங்கை நிர்வாக சேவை 2009-ம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப் பரீட்சையின் எழுத்துப் பரீட்சையில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்க தகுதியுடையோரென 257 பேரது பெயர், விபரம், சுட்டிலக்கம், பரீட்சைக்கு தோற்றிய மொழி போன்ற விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்த 257 பேரில் தமிழ் மொழி மூலம் தோற்றிய ஒருவரேனும் இல்லையெனத் தெரிவிக்கப்படுவதுடன், இது குறித்து தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
 
பரீட்சைகள் திணைக்களமே மேற்படி எழுத்துப் பரீட்சையை நடத்தியுள்ளது. சிங்கள மொழி மூலம் தோற்றியோரில் 257 பேரே அடுத்த நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த வருடமும் இலங்கை நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தெரிவான 32 பேரும் தற்போது உள்ளகப் பயிற்சியை பெற்று வருகின்றனர். இதில்கூட 32 பேரும் சிங்கள மொழி மூலம் தெரிவானவர்களேயாவர்.
 
தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய எவருமே தெரிவாகவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றாகவே நடத்தப்படுவதாகவும், ஈழம் என்றொரு தேசம் உருவாக வேண்டிய அவசியமி்ல்லையென்றும், தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு இணையாகவே நடத்தப்படுவதாகவும் ரீல் மேல் ரீல் ஓட்டிக் கொண்டிருக்கும் சிங்களவர்களுக்கு ஜால்ரா போடும் தமிழகத்து மகா ஜனங்கள் இதனைப் படித்தாவது அங்கே உள்ள உண்மை நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
இது எதனைக் காட்டுகிறது எனில் இனி வரும்காலங்களில் அரசு அலுவலகங்களில் தமிழ் பேசக்கூடிய ஒருவர்கூட இல்லாத நிலைமையை உருவாக்கி, ஆட்சி மொழியில் சிங்களத்தை மட்டுமே வைத்துக் கொண்டு தமிழை குப்பைத் தொட்டியில் வீசப் போகிறார்கள். இதற்கான முன்னோட்டமாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்..!
 
அரசு அலுவலகங்களில் மொழியைத் தடை செய்தாலே போதுமே.. அந்த அலுவலகத்திற்கு அந்த மொழி பேசும் மக்கள் போகவே முடியாதே. போனாலும் பிரயோசனமில்லை என்ற நிலைமைதான் இருக்கப் போகிறது..!
 
தனது சிங்கள அரசின் நீண்ட நாளைய நிம்மதியை மனதில் கொண்டு நன்கு திட்டமிட்டு எதிர்காலத்தையும் மனதில் வைத்திருந்து ஆட்சி செய்யும் நவீன ஹிட்லர்தான் மஹிந்த ராஜபக்சே என்பதில் சந்தேகமில்லை.
 
சிங்களவர்கள் உட்பட்ட 72 மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
 
நீண்ட நாட்களுக்கு பின்னர் தென் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் உட்பட்ட 72 மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் தென் பகுதி மாணவர்கள் எவரும், சிரேஷ்ட மாணவர்களினால் பகிடி வதைக்கு உள்ளாக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
30 வருட கால இடைவெளிக்குப் பின்னர் அதிக அளவிலான தென் பகுதி மக்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தென் பகுதி மாணவர்கள் பெரும்பாலும் மருத்துவம், சட்டம், முகாமைத்துவ பீடங்களுக்காகவே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
 
இதேவேளை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கும் இந்த முறை வர்ததக, முகாமைத்துவ பீடங்களுக்கு அதிக சிங்கள மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
 
வடக்கு மாகாண நிர்வாகம் யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்படுகிறது!

வட மாகாண சபையின் நிர்வாக நடவடிக்கைகளை திருமலையிலிருந்து யாழ்ப்பாணத்தில் மாற்றுவதற்கு நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
தற்போது வடக்கில் மாகாண சபை இல்லாதபோதும், வடமாகாண நிர்வாக நடவடிக்கைகள் யாவும் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
எனினும் அதனை கிளிநொச்சி மாவட்டத்துக்கு மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளை வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி முன்னெடுத்து வருகிறார். எனினும் இந்த முயற்சிக்கு ஜனாதிபதி உள்ளிட்ட உயர் மட்டத்தினரிடம் விருப்பம் காணப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில் வடக்கின் பிரதான நகரமாக மாங்குளம் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும், அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.
 
இதற்கிடையில் அடுத்த ஆண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனை அடுத்து அங்கு கட்டாயமாக மாகாண சபையை நிறுவ வேண்டிய தேவை ஏற்படும்.
 
எனவே அதனை திருகோணமலையில் தொடர்ந்து நடத்த முடியாது என்ற அடிப்படையில் இதனை யாழ்ப்பாணத்துக்கு மாற்ற அரசாங்க தரப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இராணுவ நீதிமன்றம் ஒன்றினால் எம்.பி. பதவியை பறிக்க முடியாது! ரணில்  பேச்சு..!

உலகில் ஜனநாயக நாடாளுமன்ற முறை நடைமுறையிலுள்ள நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இராணுவ நீதிமன்றத் தீர்ப்பினால் பறிக்கப்பட்டதில்லை என்று இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் தான் மேற்கொண்ட விஜயத்தின்போது அறிந்து கொண்ட விடயங்கள் குறித்து  நேற்று முன் தினம் பன்னல போப்பிட்டி விகாரையில் நடைபெற்ற பூஜையின்போது ரணில் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்து கூறியவை வருமாறு:
 
சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இந்தத் தண்டனை வழங்க முடியாது என நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்தேன். இதுபோன்ற சிறைத்தண்டனை மூலம் அவரது நாடாளுமன்ற எம்.பி பதவியைப் பறிக்க முடியாதெனவும் கூறியிருந்தேன்.
 
பிரிட்டனிலுள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தில் பொதுநலவாய அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக நாடுகளின் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருள்ளனர். சுமார் ஜம்பது நாடுகளின் பிரதிநிதித்துவம் அதிலுள்ளது.
 
எனது பிரிட்டிஷ் விஜயத்தின்போது நான் அந்த சங்கத்துக்கும் சென்றிருந்தேன். இராணுவ நீதிமன்றமொன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினரொருவருக்கு சிறைத் தண்டனை வழங்க முடியுமா என விசாரித்தேன். அவ்வாறான அதிகாரம் இல்லையென்று அவர்கள் உடனடியாகப் பதிலளித்தனர்.
 
அதேபோல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நபரொருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், அவரை இராணுவ நீதிமன்றத்துக்கு முன்னால் ஆஜர் செய்ய முடியுமா என்றும் கேட்டேன். பொதுநலவாய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் எந்தவொரு நாடாளுமன்றத்திலும் இது போன்றதொரு நிலைமை ஏற்பட்டதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
 
இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவரை இராணுவச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உட்படுத்த முடியாதென்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். இருந்தும் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் சிவில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
 
இராணுவ நீதிமன்றத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது எவ்வாறென பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் வியப்புத் தெரிவிக்கின்றன. 

பிரிட்டனில் எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் பொதுக் கொள்கையொன்றின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்கின்றன. 

அதன்படி அந்த இரு தரப்பினரும் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை வன்மையாகக் கண்டிக்கின்றனர்.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
புதிதாகப் படை வீரர்கள் சேர்க்கப்படவில்லை - இராணுவத் தலைமைத் தளபதி தகவல்..!

இலங்கையின் அடுத்த வருடத்துக்கான பாதுகாப்பு செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளபோதும் இனி புதிதாக இராணுவத்துக்கு ஆட்களை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என இராணுவம் தெரிவத்துள்ளது. இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை இராணுவத்தில் 2 லட்சத்துக்கு 10 ஆயிரம் பேர் படை வீரர்களாக உள்ளனர்.

அவர்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேசிய பாதுகாப்பு தேவையான அளவுக்கு மாத்திரமே இராணுவ வீரர்களை இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

எனவே இனிவரும் காலங்களில் புதிதாக இராணுவ வீரர்களை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ள அவர் தேவை ஏற்படும் பட்சத்தில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு ஆதரவான இணையத் தளங்களை முடக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம்

புலிகளுக்கு ஆதரவான செய்திகளையும், சிறிலங்கா அரசுக்கும், ஜனாதிபதிக்கும் எதிரான செய்திகளையும் வெளியிடுகின்ற இணையத் தளங்களை முடக்கும் நடவடிக்கையில் சிறிலங்காவின் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
 
இதற்கமைவாக, எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாமலேயே அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் பல சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளன.
 
அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்த "லங்கா நியூஸ் வெப் இணையத் தளத்தை சில மாதங்களுக்கு முன்னர் சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக் குழு தடைசெய்திருந்தது.
 
புலிகளுக்கு ஆதரவான இணையத் தளங்களையும் தடை செய்யுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக் குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அதேவேளை, அரசுக்கும் சிறிலங்கா அதிபருக்கும் எதிரான செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் மீது தடையை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை பகிரங்கமாகவே மேற்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக் குழு திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இலவச கல்வி நிறுத்தப்பட்டால் குற்றங்கள் அதிகரிக்கும் : ஜே.வி.பி அச்சம் தெரிவிப்பு..!

இலவச கல்வி முறைமை ஒடுக்கப்பட்டால் நாட்டில் குற்றவாளிகளின் எண்ணிக்கை உயர்வடையும் என ஜே.வி.பி கட்சி அறிவிவித்துள்ளது.
 

அரசாங்கம் சர்வதேச சக்திகளுடன் இணைந்து இலவச கல்வி முறைமையை இல்லாதொழிப்பதற்கு முயற்சித்து வருவதாக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்களுக்கு அரசாங்கம் வேறும் வழியிலான அர்த்தங்களை கற்பிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இலவசக் கல்வி முறைமைக்கு குந்தகம் ஏற்பட்டால் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களைப் போன்று குற்றவாளிகளும், கல்வியறிவற்றவர்களும் உருவாக்கக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய உயர் கல்வி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக பெற்றோர் குரல் கொடுக்க வேண்டுமென சோமவன்ச வலியுறுத்தியுள்ளார்.
  
மட்டு.வாழைச்சேனையில் வெடிப் பொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பிரதேசத்திலுள்ள கிரான் தேக்கஞ்சேனை என்னுமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடி மருந்துப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.


தேசிய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகலையடுத்து அங்கு சென்ற புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் அவ்விடத்தை சோதனை செய்தபோது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு மற்றும் சி.4 எனப்படும் ஒருகிலோ நிறையுடைய வெடி மருந்து பொருட்கள், ரி 56 ரக துப்பாக்கி ரவைகள் 183, ரி 56 ரக துப்பாக்கி மெகசீன் ஒன்று, வோக்கி டொக்கி ஒன்று என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட இந்த ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துப் பொருட்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வெடி மருந்துப் பொருட்கள் ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராமப் பணியாளரைத்  தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்யாவிடில் கடையடைப்பு! வர்த்தகர்கள் எச்சரிக்கை..!

மட்டக்களப்பு செங்கலடியில் கிராம சேவை உத்தியோகத்தரை தாக்கி, அவரிடமிருந்த உத்தியோகப்பூர்வ ஆவணங்களை பறித்து கிழித்தெறிந்த ஏறாவூர்ப் பொலிஸ் கான்ஸ்டபிளை இன்றைக்குள் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்காவிடில் நாளை மாவட்டம் பூராகவும் கடையடைப்பில் ஈடுபடப் போவதாக செங்கலடி வர்த்தகர் சங்கத் தலைவர் கே. மோகன் தெரிவித்தார்.

அத்துடன், இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக அரசாங்க திணைக்கள உத்தியோகத்தர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை மாலை செங்கலடி தளவாய் கிராமசேவகர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகரான கே. ஜெகநாதன் அவரது பிரிவில் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சட்ட ஆவணங்களுடன் சென்று பிரச்சினைக்குத் தீர்வு கண்டு தனது வீடு திரும்பும் வழியில் ஏறாவூர் நகர் பிரதேச சபை உறுப்பினரொருவரின் பாதுகாப்பு கடமையில் இணைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் வழிமறித்து தாக்கியதுடன் அவரிடமிருந்த சட்ட ரீதியிலான ஆவணங்களும் கிழித்தெறியப்பட்டன.
 
இது தொடர்பாக கிராம சேவகர் கே.ஜெகநாதன் ஏறாவூர்ப் பொலிஸிலும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவுமில்லை. குறித்த கான்ஸ்டபிளை கைது செய்யவுமில்லை.

பொலிஸார் தமது கடமையைச் செய்ய வேண்டும் என்றும் அரச அதிகாரிகள் தமது கடமையை சுதந்திரமாக நிறைவேற்ற அனுமதிக்குமாறும் கோரியுமே இந்த கடையடைப்பு போராட்டத்தை  நடாத்தவுள்ளதாக வர்த்தகர் சங்கத் தலைவர் கே. மோகன் மேலும் தெரிவித்தார்.
 
தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்
 
கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற் படையினர் பணம் மற்றும் படகில் இருந்து இறால் மீன்களை கொள்ளையடித்து சென்றனர்.


இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 23 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர், கடற்படை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டனர். இதனை அடுத்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்துறை அதிகாரிகளிடம் டோக்கன் பெற்று கடலுக்கு சென்றனர்.

அவர்கள் கச்சத்தீவுக்கு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற் பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் படகுகளில் ஏறி அதில் இருந்த விலை உயர்ந்த இரால்களை பறித்தனர். மேலும் மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து பணத்தையும் பறித்து கொள்ளைடித்து சென்று விட்டனர். இதனால் மீனவர்கள், மீன்பிடிப்பதை பாதியிலேயே கைவிட்டு குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர்.

இலங்கை கடற்படை தாக்குதல் குறித்து அவர்கள் படகு உரிமையாளர்களிடம் புகார் செய்தனர். இது குறித்து விசைப்படகு மீனவர்கள் சங்க செயலாளர் சேசுராஜா கூறியதாவது:-

கலெக்டர் மற்றும் கடற்படை அதிகாரிகள் உறுதி அளித்ததால் வேலை நிறுத்தத்தை கைவிட்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றோம். ஆனால் இலங்கை கடற்படையினர் மீண்டும் மீனவர்களை தாக்கி, இரால் மீன்களை பறித்து சென்றுள்ளனர்.

இதனால் தலா ஒரு படகுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பல முறை எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய-மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டி கொடுக்கும் மீனவர்களை ஏன் அரசு கண்டு கொள்வதில்லை என்று தெரியவில்லை. இலங்கை கடற்படை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் அல்லது மீனவர்களுக்கு மாற்று தொழில் ஏற்பாடு செய்து தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

24 comments:

  1. Not many Eezham news these days!
    Thank you

    ReplyDelete
  2. வருகைபதிவில் மட்டும் கையொப்பம்... பாடங்கள் அறிவுறுதுவது அப்புறம்... சுட்ட... இல்லை... சுடசுட செய்திக்கு நன்றி :)

    ReplyDelete
  3. எந்த டாபிக்கை எடுத்து கொண்டாலும் , விரிவாக செய்திகளை தருவது பாராட்டத்தக்கது...

    சரி, தீபாவளிக்கு ஊருக்கு போகலையா.. ஊருக்கு போனா சொல்லுங்க,,, அங்கே சந்திப்போம்...
    அப்படியே உங்க நீண்ட நாள் ஏக்கத்தை தீர்ப்பதற்கான ஸ்டெப்பையும் எடுக்கலாம்
    :)

    ReplyDelete
  4. எழுத்துப் பரீட்சைக்கான முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


    நல்ல தமிழ் வார்த்தை. நோட்டிஸ் போர்டில் டிஸ்ப்ளே - என்பதற்கு

    ReplyDelete
  5. //
    தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்
    //
    இந்த வாக்கியத்த மட்டும் பேப்பர்ல நிரந்திரமா வச்சிரவேண்டியதுதான்.

    ReplyDelete
  6. [[[PARAYAN said...
    Not many Eezham news these days!
    Thank you]]]

    வருகைக்கு நன்றி பறயன் ஸார்..!

    ReplyDelete
  7. [[[Sugumarje said...
    வருகை பதிவில் மட்டும் கையொப்பம். பாடங்கள் அறிவுறுதுவது அப்புறம்... சுட்ட. இல்லை... சுடசுட செய்திக்கு நன்றி :)]]]

    பதிவேட்டைப் புரட்டிப் பார்த்தோம். கையொப்பமிட்டமைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  8. [[[பார்வையாளன் said...
    தீபாவளிக்கு ஊருக்கு போகலையா.. ஊருக்கு போனா சொல்லுங்க. அங்கே சந்திப்போம். அப்படியே உங்க நீண்ட நாள் ஏக்கத்தை தீர்ப்பதற்கான ஸ்டெப்பையும் எடுக்கலாம்:)]]]

    எந்த ஊருக்குப் போறது? யார் இருக்கா நம்மளை கூப்பிடுறதுக்கு..? நமக்கு இங்கதான் தீபாவளி..!

    ReplyDelete
  9. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    best news]]]

    நன்றிகள்..!

    ReplyDelete
  10. [[[ராம்ஜி_யாஹூ said...

    எழுத்துப் பரீட்சைக்கான முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    நல்ல தமிழ் வார்த்தை. நோட்டிஸ் போர்டில் டிஸ்ப்ளே - என்பதற்கு]]]

    ஈழத் தமிழ் சில வேளைகளில் சிந்திக்க வைக்கிறது.. ஆனால் எந்தத் தமிழ்தான் உண்மையான தமிழ் என்பது தெரியவில்லை..!

    ReplyDelete
  11. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

    //தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்//

    இந்த வாக்கியத்த மட்டும் பேப்பர்ல நிரந்திரமா வச்சிர வேண்டியதுதான்.]]]

    நம்ம இந்திய அரசு மாதிரி ஒரு கையாலாகாத அரசு இருந்தால் நாட்டு மக்களின் நிலைமை இப்படித்தான் இருக்கும்..!

    ReplyDelete
  12. நமக்கு இங்கதான் தீபாவளி..!"

    அட போங்கண்ணே.. என்ன இருந்தாலும் நம்ம ஊர்ல கொண்டாடுற மாதிரி வருமா.?

    நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.. முன்னாடியே சொல்லி இருந்தா, உங்களுக்கும் சேர்த்து டிக்கட் புக் செஞ்சு இருப்பேன்

    ReplyDelete
  13. நன்றி உண்மைத்தமிழன்! இன்றைக்குத் தான் முதல்ல கமெண்ட் பண்றேன். நல்ல பதிவு விரிவாக எழுதி இருக்கீங்க நல்லா இருக்கு. இந்தச் சம்பவம் நடக்கும்போது நானும் யாழ்ப்பாணத்திலதான் இருந்தேன். ஆனா இன்றைக்குத்தான் தெரியும். ஏதோ நானும் கொஞ்சம் இதைப்பற்றி எழுதினேன். முடிஞ்சா நம்ம பக்கம் வாங்க.. :)

    ReplyDelete
  14. [[[பார்வையாளன் said...
    நமக்கு இங்கதான் தீபாவளி..!"
    அட போங்கண்ணே.. என்ன இருந்தாலும் நம்ம ஊர்ல கொண்டாடுற மாதிரி வருமா...? நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.. முன்னாடியே சொல்லி இருந்தா, உங்களுக்கும் சேர்த்து டிக்கட் புக் செஞ்சு இருப்பேன்.]]]

    தீபாவளி முடிஞ்சாவது வீட்டுக்கு வாங்கண்ணே.. சந்திப்போம்..!

    ReplyDelete
  15. சிறப்பான செய்திகள்! விளக்கமான கட்டுரை! மிக்க நன்றி!

    ReplyDelete
  16. சிந்தித்தும் பின்னூட்ட வார்த்தைகள் வரவில்லை.துயரம் மட்டுமே மனதை அப்பிக்கொள்கிறது:(

    ReplyDelete
  17. இதற்குத் தானே ஆசைப்பட்டார்கள்

    ReplyDelete
  18. எத்தனை நாள் ஆனாலும் இப்படி நியூஸ் தான் வந்துகிட்டே இருக்குமா?....

    ReplyDelete
  19. [[[ஜீ... said...

    நன்றி உண்மைத்தமிழன்! இன்றைக்குத்தான் முதல்ல கமெண்ட் பண்றேன். நல்ல பதிவு விரிவாக எழுதி இருக்கீங்க.. நல்லா இருக்கு. இந்தச் சம்பவம் நடக்கும்போது நானும் யாழ்ப்பாணத்திலதான் இருந்தேன். ஆனா இன்றைக்குத்தான் தெரியும். ஏதோ நானும் கொஞ்சம் இதைப் பற்றி எழுதினேன். முடிஞ்சா நம்ம பக்கம் வாங்க.. :)]]]

    கண்டிப்பாக வருகிறேன் ஜி.. வருகைக்கு நன்றி..!

    ReplyDelete
  20. [[[எஸ்.கே said...
    சிறப்பான செய்திகள்! விளக்கமான கட்டுரை! மிக்க நன்றி!]]]

    வருகைக்கு நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  21. [[[ராஜ நடராஜன் said...
    சிந்தித்தும் பின்னூட்ட வார்த்தைகள் வரவில்லை. துயரம் மட்டுமே மனதை அப்பிக் கொள்கிறது:(]]]

    -)))))))))))))

    ReplyDelete
  22. [[[கானா பிரபா said...
    இதற்குத்தானே ஆசைப்பட்டார்கள்.]]]

    அடுத்த பத்தாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள்தான் அதிகமாக இருக்கப் போகிறார்கள்..!

    ReplyDelete
  23. [[[அலைகள் பாலா said...
    எத்தனை நாள் ஆனாலும் இப்படி நியூஸ்தான் வந்துகிட்டே இருக்குமா?]]]

    வேறென்ன செய்யறது..? கஷ்டம் மேல கஷ்டம் வந்துக்கிட்டே இருக்கே..?

    ReplyDelete