Pages

Wednesday, October 27, 2010

40-வது ஆண்டு விழா - சர்ச்சையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்


27-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
தனது பெருமைக்குரிய உறுப்பினர் 'செந்தமிழன்' சீமான் சிறைக் கொட்டடியில் வாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தனது 40-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.

சென்ற 23-ம் தேதியன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த விழா நிகழ்ச்சிகளின் பூரிப்பில் இயக்குநர்கள் திளைத்திருந்தாலும், பல மூத்தக் கலைஞர்களும், பல திரைப்படத் தொழிலாளர்களும் பெரும் அதிருப்திதான் அடைந்திருக்கிறார்கள்.

பொதுவாக சங்கத்தின் ஆண்டு விழா என்றாலே அச்சங்கத்தின் துவக்கத்திற்குக் காரணமானவர்களையும், மூத்தவர்களையும் மேடையேற்றி கெளரவப்படுத்துவதுதான் வாடிக்கை. அது சங்கத்திற்குப் பெருமையும்கூட. இதனைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் தனது விழாவினை சன் டிவி சொல்லிக் கொடுத்தது போலவே நடத்தி முடித்திருக்கிறார்கள் என்று பொருமுகிறார்கள் சில மூத்த இயக்குநர்கள்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் இல்லாததால் அதற்கான நிதியைத் திரட்டும் பொருட்டே இந்த விழாவை ஏற்பாடு செய்ததாக முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டது.

ஒரு மாதத்திற்கு முன்பாக விழா பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் பாரதிராஜா, “சொந்தக் கட்டிடம் கட்டுவதற்காகத்தான் இந்த விழாவையே நடத்துகிறோம்..” என்று தெள்ளத் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். விழாவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் உரிமையை விற்பதன் மூலம்தான் அத்தொகை கிடைக்கும் என்பதால் முன்னணி சேனல்கள் இரண்டுமே இதற்காக போட்டியிட்டன.

ஆளும் கட்சி கோதாவில் களமிறங்கிய 'கலைஞர் டிவி' ஒன்றரை கோடியைத் தாண்டிப் பேசவே இல்லையாம். எப்படியும் தங்களுக்குத்தான் என்று நினைத்து கொஞ்சம் அலட்சியமாக அவர்கள் இருந்துவிட கிடைத்த கேப்பில் சன் டிவி ஒரே தவணையில் இரண்டே முக்கால் கோடி தருவதாகச் சொல்லி உரிமையைக் கைப்பற்றியது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதைக்கூட பத்திரிகைகள் முன்பாகவே நடத்தினார்கள்.

மிகப் பெரும் தொகை என்பதால் சன் டிவி சொல்லிக் கொடுத்தது போலவே நிகழ்ச்சிகளை வடிவமைத்திருந்தனர். இதில்தான் சங்க நிகழ்ச்சிகளெல்லாம் வடிகட்டப்பட்ட முக்கியமான மார்க்கெட்டிங் விதிமுறைகள் புகுத்தப்பட்டு கதை கந்திரலோகமானது என்கிறார்கள். காலை, மாலை நிகழ்ச்சிகள் இரண்டிலுமே சன்னின் தற்போதைய டார்கெட்டான 'எந்திரனின்' பாடல்கள் மற்றும் அது தொடர்பான ஆடல், பாடல் காட்சிகள் தவறாமல் இடம் பெற்றிருந்தது.

காலை நிகழ்ச்சிகளில் தமிழில் முக்கியமான இசையமைப்பாளர்களை வைத்து பாட்டுக் கச்சேரி லெவலுக்கு ஒன்றை நடத்தினார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் தனது பேவரிட் சில்க் ஜிப்பா உடையில் மேடையில் ரகளை செய்து கொண்டிருந்த கங்கை அமரன், 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே..' பாடல் தனது அம்மா பாடிய கும்மிப் பாட்டு ஒன்றின் காப்பி என்கிற உலக மகா உண்மையை போட்டுடைத்தார். 'சாமி வருகுது..' என்று துவங்கும் அந்தக் கும்மிப் பாட்டையும் பாடிக் காட்டினார் கங்கை அமரன். தொடர்ந்து அவர் பேசும்போது தனது உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் உரமேற்றி அஸ்திவாரமிட்டவர் பாரதிராஜாதான் என்று நன்றிக் கடன் செலுத்தினார். கூடவே அவர் இயக்கிய முதல் படமான 'கோழி கூவுது' படம் சிவாஜி நடித்த பழைய 'புதையல்' படத்தின் கதைதான் என்று சொன்னது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த விஷயம்.

அனுராதா ஸ்ரீராம் 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' என்ற அபூர்வ ராகங்கள் படப் பாடலை பாடினார். இதன் பின்பு 'தனக்கு மிகவும் பிடித்தமான பாடகி சமீபத்தில் மறைந்த சொர்ணலதா' என்று கூறி சொர்ணலதா பாடிய பாடல்களில் இருந்து சிலவற்றை பாடினார்.

வாலியையும், எம்.எஸ்.வி.யையும் மேடையேற்றி கெளரவப்படுத்தினார்கள். வாலி பேசும்போது “நான் எம்,எஸ்.வி.யை சந்திக்கின்றவரையிலும் சோத்துக்கே சிங்கியடித்ததேன். எம்.எஸ்.வி.யை சந்தித்த பின்பு சாப்பிடுவதற்கே நேரமில்லாமல் தவித்தேன்” என்றார். இதனை எம்.எஸ்.வி. மரியாதை பொருட்டு மறுத்தாலும், வாலி “அண்ணா.. அண்ணா..” என்று எம்.எஸ்.வி.யை அழைத்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

மேலும் வாலி பேசுகையில், “என்னதான் நல்ல பாடலை கவிஞன் எழுதிக் கொடுத்திருந்தாலும், எத்தனை சிறந்த இசையமைப்பில் அது பதிவாகியிருந்தாலும் ஒரு நல்ல இயக்குநர் அதை நல்லவிதமாகப் படமாக்கினால்தான் அந்தப் பாடல் வெற்றியடையும். இல்லையெனில் அது விழலுக்கு இறைத்த நீர்தான். இதை இன்றைய இயக்குநர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே...?” என்று சொல்லி வருத்தப்பட்டார்..

கேரள கலையுலகம் சார்பாக வந்திருந்த மெகா ஸ்டார் மம்முட்டி, முழுவதும் தமிழிலேயே பேசி ஆச்சரியப்படுத்தினார். “நானும் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறேன். என்னை இயக்கிய இயக்குநர்களில் அதிகம் ஆச்சரியப்படுத்தியவர் ஆர்.கே.செல்வமணிதான். இரவு, பகல் பாராமல் ஷூட்டிங்கை நடத்துவார். எப்போது தூங்குவார், எப்போது விழிப்பார் என்றெல்லாம் தெரியாமல் நான் ஆச்சரியத்துடன் அவரை பார்ப்பேன். அந்த அளவுக்கு அவர் ஒரு ஸ்பீடு இயக்குநர்” என்று பாராட்டிவிட்டுப் போனார்.

இந்தக் கலை நிகழ்ச்சியை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதனை நடிகர் நெப்போலியன் திறந்து வைத்தார். அந்தக் கண்காட்சியில் தமிழ்த் திரையுலகின் பல இயக்குநர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் மிகக் குறைவான அளவே புகைப்படங்கள் இருந்ததாலும், குறுகிய இடத்தில் செய்யப்பட்டிருந்ததும் பார்வையாளர்களுக்கு முழு திருப்தியை அளிக்கவில்லை.

நடிகர் நெப்போலியன் பேசும்போது, "தனது இன்றைய மத்திய இணை அமைச்சர் வரையிலான உயர்வுக்கு முழுக் காரணமே பாரதிராஜாதான். அவர் மட்டும் இல்லைன்னா நான் இந்த அளவுக்குக்கூட உயர்ந்திருக்க முடியாது" என்று குரு காணிக்கையைச் செலுத்தினார்.


நடிகை சரண்யா தான் திரையுலகில் அறிமுகமானவிதத்தைச் சொன்னபோது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. “முக்தா ஸார் எடுக்குற படத்துக்கு புதுமுகம் தேடுறாங்கன்னு சொன்னாங்க. எங்கப்பா என்னை முக்தா ஸார் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாரு. அப்போ அங்க ஒரு மூலைல மணிரத்னம் உக்காந்து ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருந்தாரு. அப்போ எனக்கு அவர்தான் மணிரத்னம்ன்றது சுத்தமா தெரியாது. முக்தா ஸார் வந்து 'இவர்தாம்மா டைரக்டர் மணிரத்னம்'னு சொன்னப்போ ரொம்ப ஷாக்காயிட்டேன். அப்புறம் அவர்கிட்ட, "ஸார் நான் உங்க பேன் ஸார்.. உங்க 'மெளனராகம்' படம் எனக்கு ரொம்பப் புடிச்ச படம் ஸார்"ன்னு சொன்னேன். நான் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டிட்டு 'ஓகே' 'ஓகே'ன்னு சொன்னாரு.. என்னை எப்படியும் செலக்ட் பண்ண மாட்டாருன்னு நினைச்சேன். பட் செஞ்சுட்டாரு.. எனக்கு ரொம்ப ஆச்சரியந்தான்” என்றார்.

நடிகர் பிரபு பேசும்போது “நான் இதுவரைக்கும் 55 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கேன். என்னதான் நான் நல்லா நடிச்சிருந்ததா நினைச்சிட்டிருந்தாலும் எனக்குள்ள இருக்குற திறமையை வெளிக்கொணர்ந்தது இயக்குநர்கள்தான். இது எனக்கு மட்டுமல்ல. என் அப்பாவுக்கும் பொருந்தும்” என்றார்.

நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார், தன் பங்குக்கு “உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்..” பாடலை பாடி அசத்தினார். ஆனால் அவரது மனைவியான நடிகை ராதிகா பேசிய பேச்சுதான் கொஞ்சம் ஓவராகிப் போனது காலை நிகழ்ச்சிகளுக்கே திருஷ்டிபட்டது போலானது.


தான் அழகாக இல்லாமல் இருந்தும் தன்னை பாரதிராஜா தேர்வு செய்தது தனக்கு மிகப் பெரிய அதிர்ச்சிதான் என்றவர், ஷூட்டிங்கின்போது “உனக்கெல்லாம் நடிப்பு சொல்லித் தரணும்ன்னு என் தலையெழுத்து..” என்று பாரதிராஜா புலம்பியதையும் சிரித்தபடியே சொன்னவிதத்தில் பாரதிராஜாவே நெளிந்துதான் போனார்.

மாலை நிகழ்ச்சிகளில் கே.பாலசந்தர், பாரதிராஜா இருவரைப் பற்றியும் இயக்குநர் வசந்த் எடுத்திருந்த டாக்குமெண்ட்ரிகளைத் தவிர வேறெந்த நிகழ்ச்சியும் இல்லாதது மிகப் பெரும் ஏமாற்றமே. இவர்களின் திரைப்படப் பாடல்களுக்கு நடிகர், நடிகைகள் நடனமாடினார்கள்.

தமிழ்த் திரையுலகின் முன்னோடி இயக்குநர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்து அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை ஒரு ஆவணப் படமாக எடுத்துக் காட்டியிருந்தால் சங்க ஆண்டு விழாவின் நோக்கம் சிறப்பானதாக இருந்திருக்கும்.

அதனைச் சுத்தமாக மறந்துவிட்டு சன் டிவியின் மார்க்கெட்டிங்கிற்காக ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை மட்டுமே வைத்தது பலருக்கும் அதிருப்தியை அளித்தது.

தமிழ்ச் சினிமாவில் துவக்கக் காலப் புள்ளியான மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்றிய முக்தா சீனிவாசனையாவது மேடையேற்றி கெளரவப்படுத்தியிருக்கலாம் என்பது மூத்தக் கலைஞர்களின் அங்கலாய்ப்பு. விழாவுக்கு வந்திருந்த முக்தாவும் தனக்கு எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து பாதியிலேயே வெளியேறினார். அதேபோல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த மூத்த இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஜெகநாதனையும் மேடையேற்றவில்லை.

இதுவாவது பரவாயில்லை. 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கர்ணன்', 'ஆயிரத்தில் ஒருவன்' என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்த் திரைப்படங்களை இயக்கியிருக்கும் பி.ஆர்.பந்தலுவின் நூற்றாண்டு இந்த வருடம் கொண்டாடப்படுகிறது.

அவர் பிறந்த கன்னட தேசத்தில் ஒரு மாதம் முழுக்க கர்நாடக அரசு பந்தலுவை கெளரவிக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் விழாக்களை நடத்தியது. ஊருக்கு ஒரு தியேட்டரில் பந்தலு இயக்கிய திரைப்படங்களை வெளியிட்டு கெளரவித்தது.

ஆனால், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், பந்தலுவைப் பற்றி இன்றுவரையிலும் மூச்சு விடாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை என்றார்கள் சினிமா பத்திரிகையாளர்கள். "இந்த விழாவிலாவது பந்தலுவுக்கு சிறிதளவு நேரம் ஒதுக்கி அவரைப் பெருமைப்படுத்தும்விதத்தில் ஏதாவது செய்திருக்கலாம்.." என்றார் ஒரு மூத்த சினிமா பத்திரிகையாளர்.

என்னதான் பணத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றாலும் சங்கத்தின் தனித்தன்மையை விட்டுக் கொடுப்பதா என்றும் கொந்தளித்தார்கள் சில உதவி இயக்குநர்கள். “நடிகை ரோஜாவும், இயக்குநர் செல்வமணியும் மேடையேறி, தாங்கள் காதலித்தது, கல்யாணம் செய்தது.. சண்டை வந்து பிரிய நினைத்தது என்பதையெல்லாம் விலாவாரியாக எடுத்துரைத்தது ரொம்பவே டூ மச்.  “இதெல்லாம் சங்க ஆண்டு விழாவுக்கு ரொம்ப முக்கியமா ஸார்..? யார் ஸார் இதையெல்லாம் கேட்டது..?” என்றார் ஒரு உதவி இயக்குநர்.


மாலை நிகழ்ச்சிகளில் சுந்தர்.சி., டி.பி.கஜேந்திரன் நடித்த படு மொக்கையான ஒரு நாடகத்தை போட்டு நேரத்தை வீணடித்துவிட்டார்கள். 

இசைஞானி இளையராஜாவும், பாரதிராஜாவும் தாங்கள் எங்கே முதல்முதலாக சந்தித்துக் கொண்டோம் என்று துவங்கி, பல விஷயங்களை பேசி முடிக்க கூட்டம் கலகலத்துப் போனது. ஆனாலும் இவர்கள் இருவரும் இறுதிவரையில் முகத்தோடு முகம் பார்த்து பேசாமல் இருந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை. தனது நிகழ்ச்சி முடிந்ததும் இளையராஜா சொல்லாமல், கொள்ளாமல் அரங்கத்தில் இருந்து வெளியேற.. பாரதிராஜா அவரை பார்த்தபடியேதான் இருந்தார். இதேபோல் 3 மணி நேரத்திற்கும் மேலாக அருகருகே அமர்ந்திருந்தும் சந்தானபாரதியும், வாசுவும் பேசிக் கொள்ளாமலேயே எழுந்து சென்றதையும் பார்க்க நேர்ந்தது.

பல இளைய இயக்குநர்கள் ஓடியாடி உழைத்துக் கொண்டிருந்ததை கண்கூடாக பார்க்க நேர்ந்தது. லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், வசந்த், எழில், கெளதம்மேனன் போன்றோர் பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர். கெளதம் மேனன் மேடை அமைக்கும் பொறுப்பை முழுமையாகத் தானே ஏற்றுக் கொண்டாராம். இதற்காகக் தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாயை செலவழித்திருக்கிறார் என்று நம் காதைக் கடித்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர்.

பிரபலமான ஹிந்தி இயக்குநர் கோவிந்த் நிகாலனிக்கு மணிரத்னம் சங்கத்தின் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கெளரவித்தார். அதேபோல் தெலுங்கு, கன்னடத்தில் இருந்தும் பிரபல இயக்குநர்களை வரவழைத்திருந்தார்கள்.

தெலுங்கில் கே.விஸ்வநாத், கோதண்டராமிரெட்டி, ராகவேந்திரராவ், கன்னடத்தில் துவாரகீஷ் நாகபரணா, கே.எஸ்.ராவ், மலையாள இயக்குநர் ஹரிஹரன் ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தமிழில் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, இராம.நாராயணன் ஆகியோர் விருதுகளைப் பெற்றார்கள். “இவர்களைவிட மூத்தவர்களான  ஏ.சி.திருலோகசந்தர், சி.வி.ராஜேந்திரன், சித்ராலயா கோபு, மகேந்திரன், என்று பலரும் இருக்கிறார்களே..? அவர்களையும் மேடையேற்றி கெளரவித்திருக்கலாமே..?” என்றார் ஒரு திரைப்பட விமர்சகர்.

விருதுகளை கொடுக்கும்போது யார், யாருக்குக் கொடுக்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதை மன்னிக்க முடியாதது. விருந்தினர்களை இவ்வளவு நேரம் காக்க வைத்து அனுப்ப வேண்டுமா என்றெல்லாம் பலரும் முணுமுணுக்கும் அளவுக்கு நிகழ்ச்சியின் நேரம் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போனது.

கார்த்திக்கும், ராதாவும் மேடையேறி பேசிக் கொண்டிருந்தபோதுதான் சூப்பர்ஸ்டார் ரஜினி அரங்கத்தில் நுழைந்தார். கூட்டம் எழுப்பிய கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆகியது. “இப்போ ஒரு சுனாமி வந்த மாதிரியிருக்கே..” என்று டைமிங்காக கார்த்திக் சொன்னது அசத்தல் கமெண்ட்..


இடையில் நடிகர் ராதாரவி நடத்திய 'ரத்தக்கண்ணீர்' நாடகத்தின் சில பகுதிகள் ரசிகர்களின் கைதட்டலை மொத்தமாக அள்ளியது. லேட்டஸ்ட் அரசியல் கருத்துக்களைப் புகுத்தி தனது வழக்கமான பாணி நகைச்சுவையைத் தெளித்திருந்தார் ராதாரவி. இறுதியில் “நீங்க எந்தக் கட்சில சேரப் போறீங்க..?” என்று கேட்டதற்கு “நம்ம நிலைமைதான் இப்படியாயிருச்சே..” என்று இரட்டை விரல்களைக் காட்டிவிட்டுப் போனபோது ரஜினியே கை தட்டினார். ஆனால் எதற்காக இரட்டை விரல்களைக் காட்டினார் என்பது அடுத்த நாள் அவர் அ.தி.மு.க.வில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்ட செய்தி வந்தபோது புரிந்தது.


ரஜினி இறுதிவரையில் அமைதியாக அடக்கமாக அமர்ந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. ஆனால் அந்த அடக்கம் ஏன் என்று கடைசியில்தான் தெரிந்தது. இந்தக் கலை விழாவின் ஹைலைட்டே அவரும் அவருடைய குருநாதர் கே.பாலசந்தரும் கலந்து கொண்ட நேருக்கு நேர் நிகழ்ச்சிதான்.

எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் அமைந்திருந்த இந்த நிகழ்வில் ரஜினி சங்கடப்பட்டது மூன்று கேள்விகளுக்குத்தான். “பஸ் கண்டக்டராக இருந்தபோது யாரையாவது காதலித்திருக்கிறாயா?” என்று கேட்டதற்கு “ஆமாம்..” என்றவர் யார்? என்ன? என்ற மேல் விபரங்களைச் சொல்ல மறுத்து “வேண்டாமே..” என்று தன்மையோடு மறுத்தார்.

அதேபோல் “இந்த கேரக்டரை நாம பண்ணியிருக்கலாமே என்று நீ நினைச்சிருப்பியே.. அதை லிஸ்ட் போடு..?” என்று கேட்டபோது அதற்கும் “வேண்டாம் ஸார்..” என்று மென்மையாக மறுத்தார். “உன்னை அவமானப்படுத்திய விஷயம்?” என்று கேட்ட இன்னொரு கேள்விக்கும் இதேபோல் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

கே.பி.யின் நறுக்குத் தெரித்தாற்போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது இடையில் வந்த பதிலில் கிடைத்தது சூப்பர் ஸ்டார் ஏப்ரல் மாதத்தில் அரங்கேறப் போகும் கே.பி,யின் மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் நடிக்கவிருப்பதுதான். 

இந்த நிகழ்ச்சி முடியவே இரவு 11.30 மணியாகிவிட்டதால் கூட்டம் பெரிதும் கலைந்துவிட்டது. ரஜினியின் பேட்டியின்போதே காலரியில் பாதி காலிதான். இத்தனை நேரத்திற்கும் நிகழ்ச்சியை இழுத்துக் கொண்டே போனால் எப்படி முணுமுணுப்புகள் அரங்கத்தின் உள்ளேயும், வெளியேயும் புகைந்து கொண்டேயிருந்தது.

விழாவில் இயக்குநர்கள் பாலா, மணிரத்னம், அகத்தியன் மூவரையும் பெருமைப்படுத்தும்விதத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட இயக்குநர் சங்கத்தின் அடையாள அட்டை தரப்பட்டது. இதன் பின்பும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூட்டத்தை இருக்க வைத்தாலும்.. பசியிலும், களைப்பிலும் மக்கள் கலைவதை உணராமல் மைக்கில் தொடர்ந்து இதையே சொல்லிக் கொண்டிருந்ததுதான் கொடுமையானது.


நிகழ்ச்சிக்கு வந்திருந்த சில உதவி இயக்குநர்களிடம் பேசியபோது “இரண்டே முக்கால் கோடி ரூபாய்க்காக 'சங்கத்தின் ஆண்டு விழா' என்ற போர்வையில் இதனை நடத்தியதற்குப் பதிலாக 'கலை விழா' என்றே சொல்லி நடத்தியிருக்கலாம். 'சங்க ஆண்டு விழா' என்று எதற்காகச் சொல்ல வேண்டும்..?  எங்களுடைய முன்னோடி இயக்குநர்களையும், சங்கத்தின் வரலாற்றையும் முன்னிறுத்தாமல் வெற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தியதில் எங்களுக்குக் கொஞ்சமும் திருப்தியில்லை..” என்றார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றித்தான் விமர்சனங்கள் எழுந்தன என்றாலும் கடைசியில் இயக்குநர்கள் சங்கத்தின் தற்போதைய நிலையைப் பற்றிக்கூட அங்கே பலராலும் பேசப்பட்டது. முதலிலேயே இந்தக் கலை விழாவை சீமான் வெளியில் வந்த பின்பு வைத்துக் கொள்ளலாம் என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். அவர் வெளியில் வரவே நிச்சயம் 1 ஆண்டு ஆகும் என்று இயக்குநர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் சொன்னதைக் கேட்டு சீமானின் ஆதரவாளர்களே கொதிப்படைந்துவிட்டார்களாம்.

தமிழ்த் திரையுலகம் மட்டுமன்றி அதையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரெடுத்திருக்கும் சீமான் இயக்குநர்கள் சங்கத்தின் கவுரமிக்க ஒரு உறுப்பினர். அவர் அவருடைய அரசியல் கொள்கைக்காக ஜெயிலுக்குப் போயிருக்கட்டும். அதற்காக நம் குடும்பத்துப் பையனை புறக்கணித்துவிட்டு நாமே விழா நடத்துவது ஏற்புடையதுதானா..? என்றெல்லாம் கேள்விகள் உதவி இயக்குநர்கள் மத்தியில் பரவியிருந்தது.


இந்தக் கொதிப்பை உணர்ந்ததினால்தான் இந்த நிகழ்ச்சிக்கு முதல்வரை அழைக்கவில்லையாம். நிகழ்ச்சிக்கு முதல்வர் வந்திருந்து, அந்த நேரத்தில் உதவி இயக்குநர்கள் அவர் முன்பாகவே ஏதாவது தகராறு செய்துவிட்டால் அது சங்கத்திற்கு கேவலமாகிவிடுமே என்ற எண்ணத்தில்தான் முதல்வரை விட்டுவிட்டதாக சங்கத்தில் தொடர்புடைய ஒருவர் கூறினார்.

இதேபோல் உடல் நலக்குறைவால் மணிவண்ணனும், சீமான் விஷயத்தில் கோபம் கொண்டு வெளிநாட்டில் 'ஆதிபகவன்' ஷூட்டிங்கை வைத்துக் கொண்டு அமீர் எஸ்கேப்பானதாகச் சொல்கிறார்கள். தங்கர்பச்சானும் இதனாலேயே வரவில்லை என்கிறார்கள். இதேபோல் ஷங்கரும் அரங்கத்தில் தென்படவில்லை.

அதேசமயத்தில் இன்னொரு அதிர்ச்சியடைய வைத்த செய்தி. சங்கத்தின் பொருளாளரான இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் நிகழ்ச்சிக்கு வரவில்லை. நெருக்கி விசாரித்தபோது அவர் சில மாதங்களுக்கு முன்பாகவே தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் அவரது ராஜினாமாவின் பின்பு பெரும் கதையே இருப்பதாக சுந்தர்ராஜன் தரப்புத் தெரிவிக்கிறது. பல ரசாபாசங்களும் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனாலேயே சுந்தர்ராஜனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டி வந்ததாம்.

இதில் ஒரு ஸ்கூப் நியூஸ்.. நேரு ஸ்டேடியத்தில் இயக்குநர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், ராஜாஅண்ணாமலைபுரம், குமாரராஜா முத்தையா அரங்கத்தில்  எம்.எஸ்.விஸ்வநாதன் அறக்கட்டளை நடத்திய கண்ணதாசன் விழாவுக்கு ஆர்.சுந்தர்ராஜன் வந்திருந்தது சுவையான விஷயம்..!
 

சரி. இவர்தான் வரவில்லையென்றால், சென்ற தேர்தலின்போது ஆர்.சுந்தர்ராஜனிடம் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றுப் போன வி.சேகரும் அரங்கத்தில் தென்படாதது ஏனென்று தெரியவில்லை.

தற்போது சங்கத்தின் புதிய பொருளாளராக 'பெண்ணின் மனதைத் தொட்டு' படத்தின் இயக்குநர் எழில் நியமிக்கப்பட்டிருக்கிறாராம். ஆனால் இந்த மாற்றத்திற்கு சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழுவில் இதுவரை அனுமதி வாங்கவில்லையாம்.. இயக்குநர்கள் சங்கத்தின் இந்த விவகாரம், விரைவில் வெடிக்கத்தான் போகிறது என்கிறார்கள் சங்கத் தொடர்புடையவர்கள்.

இந்த நிகழ்ச்சி முடிந்த இரண்டு நாட்கள் கழித்து நேற்று வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்காக இயக்குநர்கள் சங்கத்தினர் அனைவரும் வெற்றி விழா கொண்டாடியிருக்கிறார்கள். நள்ளிரவு தாண்டியும் 'தீர்த்தவாரி' நடந்து முடிந்ததாம்.

இதைக் கேள்விப்பட்டும் சில உதவி இயக்குநர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். “யார் வீட்டுக் காசு இது..? அவனவன் பொண்டாட்டி தாலியை அடகு வைச்சு ஐம்பதாயிரம் ரூபா பணத்தைக் கட்டி மெம்பர்ஷிப் ஆயிருக்கான் ஸார்.. இவங்க அந்தக் காசுல இப்படி கூத்தடிச்சா என்ன அர்த்தம்..?” என்கிறார்கள் கோபத்தோடு.

நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களோ, “பாரதிராஜா என்ற ஒரு மனிதர் மட்டும் இல்லாவிட்டால் இந்த நிகழ்ச்சி இந்த அளவுக்கு சிறப்பா நடந்திருக்குமா? கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கச் சொல்லுங்க அவுங்களை.

பாரதிராஜா கூப்பிட்டாருன்றதாலதான் மணிரத்னமே ராத்திரி 12 மணிவரைக்கும் உக்காந்திருந்தாரு. ரஜினி வந்திருந்தாரு. வந்த ரஜினி இப்படியொரு பேட்டிக்கு ஒத்துக்கிட்டாரே. வேற யாருக்கு இதையெல்லாம் ஏற்பாடு செய்யற அளவுக்கு தகுதியும், திறமையும் இருக்கு? தெலுங்கு, கன்னட இயக்குநர்களெல்லாம் வந்திருந்தாங்களே.. எப்படி? பாரதிராஜான்ற பேருக்காகத்தானே..?

பாரதிராஜாவை உதவி இயக்குநர்கள் அனைவரும் 'அப்பா' என்றுதான் அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் மீது பாசத்துடன் இருக்கிறார்கள். இந்த விழாவில் பணியாற்றிய அனைவருமே உதவி இயக்குநர்கள்தான். அத்தனை பேருக்குமே நிகழ்ச்சியில் பணியாற்றியதற்காக சிறிதளவு தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. வேலையே இல்லாமல் கஷ்டத்தில் இருந்த அவர்களுக்கு, அடுத்த இரண்டு மாதங்கள் குடும்பத்தை நடத்தும் அளவுக்கு இப்போது உதவி செய்திருப்பதே பாரதிராஜாதான். அவரைப் போய் தப்பா பேசுறாங்களே..?

கொஞ்ச நஞ்சமில்ல ஸார்.. இப்போ இரண்டே முக்கால் கோடி ரூபாய் சங்கத்துக்கு நிதியா கிடைச்சிருக்கு.. இதுக்கு முன்னாடியும் அமைப்பு இருந்துச்சு. நிர்வாகிகள் இருந்தாங்க. அவங்களால செய்ய முடிஞ்சதா? இல்லீல.. இப்ப பாரதிராஜா செஞ்சுட்டாருன்னு சொன்ன உடனேயே பொறாமைல வயிறு எரியறாங்க..” என்று பொரிந்து தள்ளுகிறார்கள்.

10 தமிழர்கள் இருந்தாலே எட்டுவிதமான கருத்துக்கள் அலைமோதும். இதில் 2000 பேர் இருக்கிறார்கள். சர்ச்சைகளும், கலகலப்புகளும் எழத்தான் செய்யும். ஏதோ நல்லவிதமாக பில்டிங் கட்டி முடித்தாலே போதும்தான்..!

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

41 comments:

  1. Very good. சுந்தரராஜன் விவகாரத்தை தனி பதிவாகவே போடலாம் போலிருக்கிறதே... நேரமிருந்தால் அவர் ராஜினாமாவுக்குப் பின் உள்ள உண்மைகளையும் சொல்லுங்கள் சரவணன்.

    அப்புறம் உங்க ரஜினி - கேபி பேட்டியை அப்படியே நண்பர் அந்தணன் எடுத்துப் பயன்படுத்தியிருந்ததைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.

    -சிவா

    ReplyDelete
  2. அப்பாடா... ஒரு வழியா படிச்சு முடிசிட்டேன்... இனி தூங்க போகலாம்... குட் நைட்... ;)

    ReplyDelete
  3. சினிமாவெல்லாம் தமிழனுக்கு தேவையா?

    இப்படிக்கு பதினோராவது தமிழன்

    ReplyDelete
  4. பதினோராவது தமிழன்????

    ReplyDelete
  5. ராதிகாவின் சந்தோஷப் பேச்சின் தொடர்ச்சியாக வர வேண்டிய கட்டுரை என்று நினைக்கின்றேன்? சரிதானே? இந்த முறை நெளிய வைக்காத படங்கள். ரொம்ப தெளிவாகவே இருக்கு. பொதுவா உங்க கட்டுரைகளை நீளளளம் என்றாலும் பத்திரிக்கைகளில் வராத புதிய பாணி ரிப்போர்ட்டிங்.

    ராதிகா நடந்து வர்ற படமும் அவர் ஸ்டைலும் அந்த கம்பீரமும் ரொம்பவே கவர்ந்தது.

    நன்றி சரவணன்.

    ReplyDelete
  6. நிச்சயம் சீமான் வெளியே வந்ததும் தன்னுடைய பாதை குறித்து மீள் ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  7. பாக்கியராஜ், புறக்கணிக்கப் பட்டதாக, ஜுனியர் விகடனில் கிசுகிசுக்கப்பட்டள்ளது!

    ReplyDelete
  8. நல்ல கவரேஜ் அண்ணே..அப்படியே, துணை இயக்குநர்கள் பாடு பற்றி ஒரு பதிவு எழுதுங்கண்ணே..

    ReplyDelete
  9. உண்மைத்தமிழன் கமல் கலந்து கொள்ளவில்லையா?

    உங்க ரிப்போர்ட் செமையா இருக்கு! ஒரு வாரப்பத்திரிக்கை படித்த மாதிரி இருந்தது.

    ReplyDelete
  10. film news ஆனந்தின் வழியில் நீங்கள்.

    வளர்க ...

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அண்ணே,

    direct coverage போல் உள்ளது.

    அபாரம் என்ற சொல்லே உங்களை கொளரவப்படுத்தும்.

    ReplyDelete
  12. [[[siva said...

    Very good. சுந்தரராஜன் விவகாரத்தை தனி பதிவாகவே போடலாம் போலிருக்கிறதே... நேரமிருந்தால் அவர் ராஜினாமாவுக்குப் பின் உள்ள உண்மைகளையும் சொல்லுங்கள் சரவணன்.]]]

    ம்.. போடலாம்..

    [[[அப்புறம் உங்க ரஜினி - கேபி பேட்டியை அப்படியே நண்பர் அந்தணன் எடுத்துப் பயன்படுத்தியிருந்ததைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.

    -சிவா]]]

    சொல்லிவிட்டுத்தான் செய்தார்.. நானும் அவருடைய பல செய்திகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்..!

    ReplyDelete
  13. [[[Sugumarje said...
    அப்பாடா... ஒரு வழியா படிச்சு முடிசிட்டேன்... இனி தூங்க போகலாம்... குட் நைட்... ;)]]]

    குட்டு நைட்டு..!

    ReplyDelete
  14. [[[குடுகுடுப்பை said...
    சினிமாவெல்லாம் தமிழனுக்கு தேவையா? இப்படிக்கு பதினோராவது தமிழன்]]]

    தமிழனின் அடையாளமே இப்போது சினிமாதானே..? சினிமா இல்லாமல் தமிழன் ஏது..?

    ReplyDelete
  15. [[[நசரேயன் said...
    பதினோராவது தமிழன்????]]]

    எனக்கும் தெரியலை..!

    ReplyDelete
  16. [[[ஜோதிஜி said...
    ராதிகாவின் சந்தோஷப் பேச்சின் தொடர்ச்சியாக வர வேண்டிய கட்டுரை என்று நினைக்கின்றேன்? சரிதானே?

    இந்த முறை நெளிய வைக்காத படங்கள். ரொம்ப தெளிவாகவே இருக்கு. பொதுவா உங்க கட்டுரைகளை நீளளளம் என்றாலும் பத்திரிக்கைகளில் வராத புதிய பாணி ரிப்போர்ட்டிங்.

    ராதிகா நடந்து வர்ற படமும் அவர் ஸ்டைலும் அந்த கம்பீரமும் ரொம்பவே கவர்ந்தது.

    நன்றி சரவணன்.]]]

    நன்றிகள் ஜோதிஜி ஸார்..! விடியற்காலை 5 மணிக்கு எந்திரிச்சு படிக்கிறீங்களே..? எப்படிங்கோ ஸார்..?

    ReplyDelete
  17. [[[ஜோதிஜி said...
    நிச்சயம் சீமான் வெளியே வந்ததும் தன்னுடைய பாதை குறித்து மீள் ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.]]]

    அவர் அரசியல் கட்சித் தலைவராகிவிட்டார். அரசியல் களமே தனது மூச்சு என்றுதான் போராடுவார்..!

    ReplyDelete
  18. [[[ரம்மி said...
    பாக்கியராஜ், புறக்கணிக்கப்பட்டதாக, ஜுனியர் விகடனில் கிசுகிசுக்கப்பட்டள்ளது!]]]

    பாக்யராஜ் வந்திருந்தார். ஆனால் மேடையேறவில்லை..!

    ReplyDelete
  19. [[[அவிய்ங்க ராசா said...
    நல்ல கவரேஜ் அண்ணே. அப்படியே, துணை இயக்குநர்கள் பாடு பற்றி ஒரு பதிவு எழுதுங்கண்ணே.]]]

    எழுதலாம். உண்மையிலேயே பாவப்பட்ட ஜீவனுக அவங்கதான்..! நல்ல ஐடியா.. நன்றி அவிய்ங்க ராசா..!

    ReplyDelete
  20. [[[கிரி said...
    உண்மைத்தமிழன் கமல் கலந்து கொள்ளவில்லையா? உங்க ரிப்போர்ட் செமையா இருக்கு! ஒரு வாரப் பத்திரிக்கை படித்த மாதிரி இருந்தது.]]]

    கமல் வர மறுத்து விட்டதாகச் சொல்கிறார்கள்..! எல்லாம் உள் விவகாரம்தான்..!

    ReplyDelete
  21. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    super report]]]

    நன்றி ரமேஷ்..!

    ReplyDelete
  22. [[[தருமி said...
    film news ஆனந்தின் வழியில் நீங்கள். வளர்க...]]]

    அவர் எங்கே? நான் எங்கே..?

    ReplyDelete
  23. [[[காவேரி கணேஷ் said...

    வாழ்த்துக்கள் அண்ணே,

    direct coverage போல் உள்ளது.

    அபாரம் என்ற சொல்லே உங்களை கொளரவப்படுத்தும்.]]]

    பார்த்ததை அப்படியே எழுதறது என்ன பெரிய கஷ்டம் இருக்கப் போகுது காவேரி..?

    சொந்தப் படைப்பு என்றால்தான் கொஞ்சமாவது பெருமைப்படலாம்..!

    ReplyDelete
  24. இதையெல்லாம் நாங்க எந்த பத்திரிக்கையிலும் படிக்க வழியே இல்லை.. உங்க சேவை எங்களுக்கு தேவை

    ReplyDelete
  25. [[[Sukumar Swaminathan said...
    இதையெல்லாம் நாங்க எந்த பத்திரிக்கையிலும் படிக்க வழியே இல்லை. உங்க சேவை எங்களுக்கு தேவை.]]]

    நன்றி தம்பி.. எல்லாம் உங்களை மாதிரியான ரசிகர்களுக்காகத்தான்..!

    ReplyDelete
  26. அலைகள் பதிவு அண்ணே....! என்னே ஒரு டெப்த் மெசேஜ்ல, நீங்க சொன்னது உண்மைதான் பத்து பேரு இருந்தாலே பதினோரு கமென்ட் வரும் இங்கே ரெண்டாயிரத்தில் நிச்சயம். வெட்டு குத்து இல்லாம முடிஞ்சதே அதுக்கு உங்க முருகனுக்கு நன்றி சொல்லுங்கோ....!

    ReplyDelete
  27. பாவம் தமிழ் இயக்குனர்கள் ...

    ReplyDelete
  28. ஏதோ!முதல்வர் கலைஞர் ஒரு படமாவது இயக்கவில்லை. அதனால் எல்லோரும் தப்பினீர்கள். இல்லாவிடில் இந்த விழா எப்படி? ஆகியிருக்கும்...திரைக்குடும்பம் என் குடும்பமென.. அறுத்தெடுத்திருப்பார்...
    முருகன் காப்பாற்றிவிட்டான்.

    ReplyDelete
  29. miga arumai thiru saravanan avargale ungal idam tamil vilaiyadukiradhu ippodhu enda enda thirai padaithil paniyattrikondu irukkirargal endru nan therindu kollalama

    endrum anbudan

    krishna g

    ReplyDelete
  30. [[[பித்தன் said...
    அலைகள் பதிவு அண்ணே....! என்னே ஒரு டெப்த் மெசேஜ்ல, நீங்க சொன்னது உண்மைதான் பத்து பேரு இருந்தாலே பதினோரு கமென்ட் வரும் இங்கே.. ரெண்டாயிரத்தில் நிச்சயம் வெட்டு குத்து இல்லாம முடிஞ்சதே.. அதுக்கு உங்க முருகனுக்கு நன்றி சொல்லுங்கோ....!]]]

    உண்மைதான.. ஒரு வீட்டிலேயே எத்தனை குழப்பங்களும், பிரச்சினைகளும் இருக்கும்போது சங்கத்தில் இருக்காதா..?

    ReplyDelete
  31. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    பாவம் தமிழ் இயக்குனர்கள்...]]]

    மூத்த தமிழ் இயக்குநர்கள்தான் பாவம்..!

    ReplyDelete
  32. [[[யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    ஏதோ! முதல்வர் கலைஞர் ஒரு படமாவது இயக்கவில்லை. அதனால் எல்லோரும் தப்பினீர்கள். இல்லாவிடில் இந்த விழா எப்படி ஆகியிருக்கும். திரைக் குடும்பம் என் குடும்பமென.. அறுத்தெடுத்திருப்பார். முருகன் காப்பாற்றி விட்டான்.]]]

    யோகன் கலக்கல் கமெண்ட்டு.. எனக்கு இது தோணவே இல்லை பாருங்க.!

    அவர் வராதவரைக்கும் சந்தோஷம்னு எல்லாருமே மூச்சு விட்டாங்க..!

    ReplyDelete
  33. [[[gkrishna said...
    miga arumai thiru saravanan avargale ungal idam tamil vilaiyadukiradhu ippodhu enda enda thirai padaithil paniyattrikondu irukkirargal endru nan therindu kollalama..?

    endrum anbudan
    krishna g]]]

    எந்தத் திரைப்படத்திலும் வேலை செய்யவில்லை நண்பரே..! வருங்காலத்தில் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் செய்வேன்..!

    ReplyDelete
  34. ஆனால் அவரது மனைவியான நடிகை ராதிகா பேசிய பேச்சுதான் கொஞ்சம் ஓவராகிப் போனது காலை நிகழ்ச்சிகளுக்கே திருஷ்டிபட்டது போலானது."

    அருமையான பதிவுக்கு திருஷ்டி பட்டது போல இந்த வரிகள் உள்ளன...

    உங்களுக்கு ரசிகனின் பல்ஸ் தெரியவில்லை..
    ரஜினி பெட்டிக்கு அடுத்து விழாவின் ஹைலைட் அதுதான்..
    அந்த பேச்சு சி டி இருந்தால், பார்த்து ரசிக்க இனமான தமிழர்கள் காத்து இருக்கிறோம்.. என்ன விலையானாலும் சரி.. ( அன் சென்சார்ட் )

    அதை போய் தவறாக பேசிய உண்மை தமிழனை வன்மையாக கண்டிக்கிறோம்

    ReplyDelete
  35. வெடிகுண்டு வெங்கட்..

    ஆபீஸில் ஆணி பிடுங்கும் வேலை அதிகம் இருந்ததால் வர முடியவில்லை. தங்களுடைய நேர்முக கவரேஜுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  36. [[[பார்வையாளன் said...

    "ஆனால் அவரது மனைவியான நடிகை ராதிகா பேசிய பேச்சுதான் கொஞ்சம் ஓவராகிப் போனது காலை நிகழ்ச்சிகளுக்கே திருஷ்டிபட்டது போலானது."

    அருமையான பதிவுக்கு திருஷ்டிபட்டது போல இந்த வரிகள் உள்ளன...

    உங்களுக்கு ரசிகனின் பல்ஸ் தெரியவில்லை..

    ரஜினி பெட்டிக்கு அடுத்து விழாவின் ஹைலைட் அதுதான்..

    அந்த பேச்சு சி டி இருந்தால், பார்த்து ரசிக்க இனமான தமிழர்கள் காத்து இருக்கிறோம்.. என்ன விலையானாலும் சரி.. ( அன் சென்சார்ட் )

    அதை போய் தவறாக பேசிய உண்மைதமிழனை வன்மையாக கண்டிக்கிறோம்.]]]

    அதெல்லாம் கடைக்கு வராது ஸார்.. சன் டிவிலேயே அதை எடிட் செஞ்சிருவாங்கன்னு நினைக்கிறேன்..!

    ReplyDelete
  37. அந்த நிகழ்ச்சிக்கு வந்து போன அனுபவத்தை உங்கள் கட்டுரை அளிக்கிற அளவீற்கு எழுதுகிறீர்கள்! நன்றியும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  38. [[[எஸ்.கே said...
    அந்த நிகழ்ச்சிக்கு வந்து போன அனுபவத்தை உங்கள் கட்டுரை அளிக்கிற அளவீற்கு எழுதுகிறீர்கள்! நன்றியும் வாழ்த்துக்கள்!]]]

    எல்லாம் உங்களைப் போன்று வர முடியாதவர்களுக்காகத்தான் ஸார்..! நன்றி..!

    ReplyDelete