Pages

Thursday, February 07, 2013

டோண்டு ராகவன் - அஞ்சலி..!

07-02-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனது டூவீலர் நங்கநல்லூர், ஹிந்து காலனி, 15-வது குறுக்குத் தெருவில் நுழைந்த போது மிகச் சரியாக மணி காலை 10.25. எனக்கு முன்பாகவே பாலபாரதியும், லக்கியும், அன்புடன் பாலா சாரும் வந்திருந்தார்கள்..! ஒரு எளிமையான சிறிய வீடு.. அதிக வெளிச்சமில்லாத வீட்டு ஹாலில், குளிர்பதனப்பெட்டியில் ஜம்மென்று படுத்திருந்தார் நமது வலையுலக சண்டைக்கார பார்ப்பான்..!


2007 மார்ச் மாதம்தான் நான் வலையுலகத்திற்குள் நுழைந்தேன். முதல் ஒரு மாதம் மட்டும் பெரியாரின் பொன்மொழிகளையே பதிவிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் தேன்கூடு, தமிழ்மணத்தின் மூலமாக அனைவரின் பதிவிற்கும் சென்று இலவச பின்னூட்ட சேவைகளைச் செய்து கொண்டிருந்தேன்..! அப்படித்தான் டோண்டு ராகவன் என்னும் இந்த மனிதர் எனக்குப் பழக்கமானார்.

தினமும் போன் செய்வார்.. புது பதிவை எழுதினாலே போன் செய்து, “படிச்சீங்களா..? பாருங்க..” என்பார்.. கூடவே, “ஒரு கமெண்ட்டும் போட்டிருங்க..” என்பார்..! ஒருவரின் பின்னூட்டத்திற்கு பதிலாக அவரது பதிவில் போய் பதில் பின்னூட்டமிடுவதுமாக வலையுலகத்தில் அன்றைக்கு பின்னூட்ட எதிர்பார்ப்புகளே மிக அதிகமாக இருந்தன..! 

டோண்டு ஸாரின் தளத்தில் அனானிகளின் ஆட்டம் அதிகமாகவே இருக்கும்..! எனக்கு முதலில் இதுவொரு நகைச்சுவை விளையாட்டாகத்தான் இருந்தது.. அனானிகள் சொல்கின்ற கமெண்ட்டுகளைவிடவும் அனானிகளின் பெயர்கள்தான் நகைச்சுவையாக இருக்கும்.. “இத்தனை கமெண்ட்டுகளை யார் ஸார் போடுறா?”ன்னு கேட்டபோது, ஒரு பட்டியைலேயே சொன்னார்..! என்னால் நம்ப முடியவில்லை..! ஆனால் கொஞ்ச நாள் போனதும், அதில் பாதி உண்மை என்பதை தெரிந்து கொண்டேன்.. மீதி உண்மையை அவரே ஒரு நாள் அவசரத்தில் என்னிடம் சொல்லிவிட்டார்..!

ஒரு நாள் ஒரு பிரபல பதிவரின் பெயரைக் குறிப்பிட்டு, “அவர் இப்போ எங்க இருக்காருன்னு தெரியுமா?” என்றார்.. “எனக்கெப்படி ஸார் தெரியும்..? நான் என் ஆபீஸ்ல இருக்கனே..?” என்றேன்.. “இல்ல.. இப்போ அவருக்கு போன் அடிச்சு கேளுங்க..” என்றார். “எதுக்கு ஸார்.. என்ன மேட்டர்..?” என்றேன்.. “என்னோட போஸ்ட்ல புது பேர்ல கமெண்ட்டுகள் வந்திருக்கு. அவர்தான் போட்டிருக்காருன்னு யூகிக்கிறேன்.. ஊர்ஜிதப்படுத்தலாம்னுதான்” என்றார்.. “நீங்களே போன் பண்ணலாமே...” என்றேன்.. “இல்ல.. இல்ல. அவர் கண்டுபிடிச்சிருவாரு..” என்றார்.. “எந்த பதிவு ஸார்...?”ன்னு கேட்டு அந்தப் பதிவை படித்தேன்.. அதுவொரு அரசியல் பதிவு..! 
கருணாநிதியின் மூன்றாவது திருமணம் சரியா, தவறா என்பதுபோல் இருந்தாக ஞாபகம்..! பின்னூட்டங்களை வாசித்தேன்.. 4 அல்லது 5 பின்னூட்டங்களுக்கு பிறகு அனைத்துமே அனானிகளின் ஆட்டம்தான்.. “பதிவைத் தூக்கு..” “தூக்கலைன்னா அப்புறம் நடக்குறதே வேற..” என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் மிரட்டல்கள்..! சில அனானிகளின் பின்னூட்டங்களுக்கு பிறகு, “உன் மகரநெடுங்குழைநாதன் மட்டும் யோக்கியமா?” என்ற ரீதியில் அந்த அரசியல் பதிவு ஹிந்து மத எதிர்ப்பு பதிவாக உருமாறியிருந்தது..  

“இதுல எந்த கமெண்ட்டை ஸார் சொல்றீங்க?”ன்னேன்.. “ஜாகீர் அப்பாஸ், சர்ப்ராஸ் நவாஸ், முடாசர் நாசர்ன்னு வந்திருக்கு பாருங்க.. அதைச் சொல்றேன்..” என்றார்.. “இதுல என்ன ஸார் இருக்கு.. மூணு பேருமே பழைய பாகிஸ்தான் டீம் பிளேயர்ஸ்..  வழக்கம்போலத்தான போட்டிருக்காங்க..” என்றேன்.. “இல்ல.. இல்ல.. இது அரசியல் பதிவு.. இவங்க வேணும்னே என்னைத் திசை திருப்பணும்னு இப்படி முஸ்லீம் பேர்ல கமெண்ட் போட்டிருக்காங்க..” என்றார்.. 

அதற்கும் மேலேயே படித்துப் பார்த்தேன்.. அதில் வரிசையாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களின் பெயர்களில் காமெடி பின்னூட்டங்கள். அதில் முகமது அஸாருதீனின் பெயரும் இருந்தது. அதனைச் சுட்டிக் காட்டினேன்.. “ஸார்.. முன்னாடியே அஸாருதீன் பேர் இருக்கே..?” என்றேன்.. “ச்சூ.. உங்களுக்கு ஒண்ணுமே தெரியலைங்க.. அது இல்ல. அதுக்கப்புறமா வந்ததுலதான்..” என்றார்.. “என்ன ஸார் இது..? அதுவும் முஸ்லீம் பேர்தானே..?” என்றேன் அப்பாவியாக.. ரொம்ப வேகமாகவே பதில் வந்தது அவரிடமிருந்து, “அது நானே போட்டதுங்க..!!!”

இதுதான் டோண்டு ஸார்.. அவரது அரசியல் கொள்கை மற்றும் அதனை தெரியப்படுத்தும் வீரியமான வார்த்தைகள் அடங்கிய அவரது பதிவுகளைக் கண்டு சீரியஸ் இல்லாத பதிவர்களுக்கெல்லாம் கொஞ்சம் பயமுண்டு.. வெறுமனே படிப்பதோடு சரி என்று இருந்தார்கள். சீரியஸ் பதிவர்களும் அதிகமாக பின்னூட்ட சண்டையை வளர்க்காமல் விட்டதினால், எதையாவது புதிய செய்தியை வெளிப்படுத்த வேண்டுமெனில் அதற்கு மட்டும் தனக்குத் தானே தி்டடமாக ஒரு அனானியை உருவாக்கிக் கொள்வது அவரது வழக்கம்..!

அவரது சாதிப் பற்று வலையுலகமே அறிந்ததுதான்.. அவர்களுடைய சாதியைச் சேர்ந்த பலர் இங்கே இருந்தாலும் அவர் அளவுக்கு வேறு யாரும் அந்த சாதிப் பற்றோடு எழுதியவர்களில்லை..! வந்த சண்டையை விடக் கூடாது என்பதிலும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் இப்போதைய நாத்திகத்தின் ஒன் சைடு பார்வையை அம்பலப்படுத்தலுமாக அவரது இறுதிவரையிலான அந்தப் பணியை அவரது எதிர்ப்பாளர்களே இன்றைக்கு பாராட்டுகிறார்கள்..!

அன்றைக்கு வலையுலகம் நாத்திகம்-ஆத்திகம், தி.மு.க. எதிர்ப்பு-ஆதரவு என்ற 2 விஷயங்களில்தான் அதிகம் அல்லலோகப்பட்டுக் கொண்டிருந்தது..! இதில் முக்கியமான தளகர்த்தர் டோண்டு ஸார்தான்..!  பிரச்சனையை ஆரம்பித்து வைத்துவிட்டு சென்றுவிடுவார்.. பின்பு அது வேறு வேறு தளங்களில் பரவிக் கொண்டிருக்கும்போது புதிதாக வேறொரு பிரச்சினையை ஆரம்பித்திருப்பார்.. அனைத்துமே அவரது சாதியை முன் வைத்தோ அல்லது அவர்களை திராவிட இயக்கங்களின் குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றுவது போலவோத்தான் இருக்கும்..! ஆனால் ஒவ்வொரு விஷயத்திலும் தனது எதிர்ப்பையோ, ஆதரவையோ உறுதியான தனது எழுத்துக்களினால் நிலைநிறுத்தியே வந்தார்..!

போலி டோண்டு பிரச்சினையில் அவர் காட்டிய தைரியமும், முனைப்பும், உழைப்பும் வேறு யாரும் செய்யாதது..! போராடி களைத்துப் போய் பலரும் ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த சூழலில், தன்னால் முடிந்த அத்தனை வேலைகளையும் செய்து போலி டோண்டுவை அடையாளப்படுத்தி அவரை வெளிப்படுத்தியதோடு அல்லாமல்,  அப்போதும் தைரியத்துடன் போராடிக் கொண்டுதான் இருந்தார்..!

அப்போதெல்லாம் டோண்டு ஸாரின் பதிவுக்கு யாரெல்லாம் பின்னூட்டமிடுவார்களோ அவர்களுக்கெல்லாம் போலி டோண்டுவிடமிருந்து முதலில் ஒரு அன்பான எச்சரிக்கை வரும். அதைப் புறக்கணித்தால் லேசான அன்புடன் பின்னூட்டங்கள் வரும். அதையும் நிராகரித்தால் நம் கதி அதோ கதிதான்.. இந்த விஷயத்தை அவர் என்னிடம் முதலில் சொல்லாமல் விட்டுவிட்டு நானும் அதோ கதியில் நின்ற பின்பு, டோண்டு ஸார் எலிக்குட்டி சோதனையைச் செய்யச் சொன்னபோது நானே கோபப்பட்டு, ஆத்திரமடைந்து அவரை எதிர்ப்பு பதிவுகளெல்லாம் எழுதினேன்.

அந்தப் பதிவைக்கூட அலட்சியப்படுத்தும்விதமாக போனில் பேசிவிட்டு பின்னூட்டமும் அப்படியே போட்டுவிட்டு, பதிவர் சந்திப்பில் என்னைப் பார்த்தவுடன் கட்டிப் பிடித்துக் கொண்டார்.. அவரது அன்றைய பிடி எனக்கொரு அடிமை சிக்கிட்டான்டா என்பது போலவே எனக்குத் தெரிந்தது..! உண்மையாகவே அதையும் போலி டோண்டுவே சொல்லி, ‘டோண்டுவின் அல்லக்கை’ என்ற பட்டப் பெயருடன் அடுத்த 2 ஆண்டுகள் நடந்த மல்லுக் கட்டலில் எனது பொன்னான பல மணி நேரங்கள் வீணாகச் செலவானது..!

இந்த நேரத்தில் அவர் மீது ஏற்பட்ட கசப்புணர்வில் சில காலம் பேசாமல்கூட இருந்து பார்த்தேன். ஆனால் எங்காவது பதிவர் சந்திப்பில் பார்த்தவுடன் கையைப் பிடித்திழுத்து அவரே பேசிவிடுவார்..! அந்தப் பேச்சில் இருக்கும் நாகரிகமும், அன்பும் நாம் எதிர்பாராதது..! சந்திக்க முடியாத பட்சத்தில் ஏதாவது ஒரு பதிவில் வேண்டுமென்றே என்னை இழுத்து வைத்துவிடுவார். “இப்படியெல்லாம் செஞ்சா எப்படி ஸார்..?”ன்னு நானே கேட்டுப் பார்த்துட்டேன்.. ம்ஹூம்.. பேச்சில் அவரை அடிக்க முடியவில்லை.. நான் தி.மு.க.வை திட்டி ஒரு பதிவு போட்டுவிட்டால், உடனேயே அவர் அதை எங்காவது குறிப்பிட்டு ஒரு போஸ்ட் போட்டுவிடுவார்.. அதனாலேயே அவரது ‘அல்லக்கை’ என்ற பட்டப் பெயர் நான் விரும்பாமலேயே, எனக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துவிட்டது.. 

போலி டோண்டு விவகாரத்தில் நானும் அதிகம் பாதிக்கப்பட்டு வேறு வழியில்லாத சூழலில் காவல்துறையில் புகார் கொடுக்கும் அளவுக்கு போனபோது தன்னால் முடிந்த அளவுக்கான உதவிகளைச் செய்தார்.. போலி டோண்டுவை பார்க்க பெரும் விருப்பம் கொண்டு வந்தாலும், இவர் வந்த அன்று போலி வரவில்லை. போலி வந்த அன்று இவரால்  வர முடியவில்லை..! “அவன்கிட்ட ஒரு கேள்வியாவது கேக்கணும்னு நினைச்சேன்..” என்று வருத்தத்துடன் சொல்லிக் கொண்டேயிருந்தார்..! 

அவரது அரசியல் கொள்கையை விட்டுவிடுங்கள்.. சாதிப் பற்றை விடுங்கள்.. ஆனால் யதார்த்தமான வாழ்க்கையின் பல விஷயங்களை எடுத்துக் காட்டாய் சொன்னதில் எனக்கெல்லாம் மிகச் சிறந்த அனுபவம் கிடைத்தது.. நான் சில பேருக்கு.. நண்பர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இலவசமாக டைப்பிங் செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன்.. இதை ஒரு நாள் அவரிடம் சொன்னபோது நிறையவே கோபப்பட்டார்..!

“இப்படி செஞ்சா பொழைக்கவே முடியாது.. அவங்களும் வாங்கிட்டுப் போய் அதை காசுதானே பார்க்கப் போறாங்க. அப்போ அதுல நீங்களும் பங்கு கேக்குறதுல தப்பே இல்லை.. ப்ரீயா மட்டும் எதையுமே செய்யாதீங்க.. அதுக்கு மதிப்பில்லாம போயிரும். உங்களுக்கே ஒரு நாள் தெரியும்...” என்று அட்வைஸ் செய்தார். அவருடைய வாக்கு ஒரு வருடத்திற்கு பின்பு ஒரு சினிமா இயக்குநர் மூலமாக எனக்குக் கிடைத்தது. அன்றிலிருந்து நானும் அவர் கொள்கைக்கே மாறிவிட்டேன்..!

இஸ்ரேல் மற்றும் திராவிட இயக்கம் குறித்த அவருடைய கொள்கைகள் அதிகம் வலையுலகில் விமர்சிக்கப்பட்டவை.. அதையெல்லாம் எதிர்கொள்ளும் அறிவும், ஆற்றலும், திறனும் அவருக்கு இருந்தது ஆச்சரியம்தான்.. எத்தனை கேள்விகளையும் அவர் சமாளிக்கும்விதமும், அதற்குப் பதில் சொல்ல சமீபத்தில் என்று சொல்லி அவர் எடுத்துப் போடும் அந்த உடனடி ஆதாரங்களும் ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு என்பதைத்தான் சொல்லிக் கொடுத்திருக்கின்றன..!

அதேபோல் அவருடைய துபாஷி நினைவுகள்.. வேலை அனுபவங்கள்.. மொழி பெயர்ப்பு அனுபவங்கள் அனைத்துமே இனி வருங்கால பதிவுலகத்தினருக்கு ஒரு அனுபவப் பாடமாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்..! மொழி பெயர்ப்பு வேலைகளில் இருக்கும் இத்தனை பெரிய வேலை வாய்ப்பு இவர் சொல்லித்தான் நமக்குத் தெரிந்தது..! இதனை இன்னும் அதிகமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அப்போது வேலை பார்த்து வந்த ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சியில் அவரை விருந்தினராக வரவழைத்து பேச வைத்தேன்.. அதேபோல் திரும்பவும் ஒரு முறை வலைப்பதிவுகள் பற்றியும் அதே டிவியில் பேச வைத்தேன்.. 

அப்போது இந்த 2 நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் என்னிடம் செல்லமாக கடிந்து கொண்டடார்கள். “என்ன மனுஷன்யா இவரு..? பேசிக்கிட்டே போறாரு.. எங்க கட் சொல்றதுன்னே தெரியாமப் போயி அப்படியே விட்டுட்டோம்.. இப்போ எடிட்டிங்ல  கட் பண்றதுக்குள்ள உசிரு போயிருச்சு” என்றார்கள்..! ஒரு வாக்கியத்தில் ஆரம்பித்து எங்கேயும் நிறுத்தாமல் போய்க் கொண்டேயிருந்தது அவருடைய பேச்சு.. படாதபாடுபட்டு எடிட் செய்து வெளியிட்டார்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்..! 

எந்தப் புதிய பதிவர்கள் வந்தாலும் உடனுக்குடன் அவர்களுக்கு பின்னூட்டமிட்டு உற்சாகமிட்டுக் கொண்டிருந்தார்.. கடந்த 2 ஆண்டுகளாகத்தான் அந்த வேலையையும் அறவே நிறுத்திவிட்டு, தன் பிளாக்கில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்.. ஆனால் நேரில் பார்க்கும்போது மட்டும் வஞ்சகமில்லாத வசந்தசேனையாக மாறி விடுவார்.. இது ஒன்றுதான் அவரது மிகப் பெரிய பலம்..!

பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிய விவகாரத்திலும், இலங்கை பிரச்சினையிலும் இவர் கொண்ட கொள்கை, சென்ற 2 வருடங்களில் பதிவுலகத்தில் இருந்து அவரை தள்ளி வைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.. முன்பு தனக்குத்தானே திட்டத்தில் இருந்தவர், இப்போது அதைக்கூட விட்டுவிட்டு தனக்குத் தோன்றியதை கடைசி நாள் வரையிலும்கூட தைரியமாக திடமாக எழுதியிருக்கிறார்.. மாலை 4.23 மணிக்கு கடைசி கமெண்ட்டை ஓப்பன் செய்துவிட்டவர் ஒரு மணி நேரம் கழித்து, உடம்பு ஒரு மாதிரியாக இருப்பதாகச் சொல்லி மருத்துவமனைக்குச் சென்று, அடுத்த 3 மணி நேரத்தில் நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்..!

அவரது அதீத அறிவாற்றலும், தீவிரமான கொள்கைப் பற்றும், அவரது வயதும் சேர்ந்து வலையுலகில் அதிகம் ஒட்டாமல் செய்துவிட்டது.. இப்போது இங்கே அதிகம் குழுக்களாக இருக்கும் சூழலில் அவர் எங்கேயும் சேர முடியாமல் போனதும், அவரும் விரும்பாமல் இருந்ததும் காரணமாகிவிட்டது.. இன்றைய தினம் நான், பாலபாரதி, லக்கி, அன்புடன் பாலா, நைஜீரியா ராகவன், ரஜினி ராம்கி என்று 6 பதிவர்களே அவரைச் சந்தித்து பிரியாவிடை கொடுத்திருக்கிறோம் என்ற சூழலே, அந்த மனிதர், இத்தனையாண்டுகளாக எழுதி ஆவணமாக வைத்திருக்கும் பதிவுகளுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய தோல்விதான்..! 

கடைசியாக துளசி டீச்சரின் குடும்ப விழாவில் சந்தித்தபோதுதான் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்தார்.. கேட்டவுடன் “கேன்சர்..” என்றார்.. பக்கென்றானது எனக்கு.. “என்ன ஸார்...” என்றேன்.. “ஆமாங்க. சரியா போச்சு. “ஆபரேஷன் பண்ணியாச்சு.. கால்ல வந்துச்சு..” என்றார்.. “என்ன ஸார்.. உங்களுக்கே இப்படியா? உங்க மகரநெடுங்குழைநாதன் ஏன் ஸார் இப்படி பண்ணிட்டான்..? என்றேன். லேசாகச் சிரித்துக் கொண்டார்.. அவரிடத்தில் எப்போதும் இருக்கும் அந்த பளீச்சென்ற சிரிப்பு காணாமல் போய், கொஞ்சம் தயக்கத்துடனான அவரது தொடர்ந்த பேச்சு என்னை கலங்கடித்தது..! மிகவும் வருத்தப்பட்டேன்..!

அன்றைக்கு போகும்போதும் “தயிர் சாதம் சாப்பிட்டேன்.. வரேன்.. அடிக்கடி போன் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டுத்தான் போனார்.. அவர் போன பின்பும் அவரைப் பற்றிய பேச்சுதான் அங்கே அதிகம் இருந்தது..! அதன் பின்பு 2 முறை நான் போன் செய்து அவரது உடல் நலம் பற்றி விசாரித்தபோது அவரது குரல் முன்புபோல் ஒத்துழைக்கவில்லை. செல்போனில் அழைத்தபோதெல்லாம் அதை கட் செய்துவிட்டு லேண்ட்லைனுக்கு வந்தே பேசினார்..! 

சாயந்தர வேளைகளில் வெளியில் போய் வருவதாகவும், சாப்பிட முடிவதாகவும், “ஐ ஆம் ஆல்ரைட்..” என்றார்.. டோண்டு என்ற வலைப்பதிவர், வலைப்பதிவுகள் பற்றி என்னிடம் பேசாதது இதற்குப் பின்புதான்.. நோய்தான் ஒரு மனிதனுக்கு ஸ்பீடு பிரேக்கர் என்பதை புரிந்து கொண்டேன். இதற்குப் பின்பு செக்ஸ் உணர்ச்சியே இப்போது தோன்றவில்லை என்றும் ஒரு பதிவு இட்டிருந்தார்.. அப்போது போன் செய்து, “என்ன ஸார்.. இதையெல்லாம் போய் வெளில எழுதலாமா..?” என்றேன்.. “அட விடுங்க. இதுனால என்ன..? உண்மையைத்தானே சொன்னேன்.. பலரும் தெரிஞ்சுக்கட்டுமே..? இதுல எல்லாம் தப்பில்லை..” என்று எப்போதும்போலவே பேசினார்..! முகமூடிகள் சிலருக்கு மட்டுமே தேவை இல்லை என்பதை இப்போது உணர்ந்தேன்..!

நான் எனது அண்ணனுக்கு கேன்சர் என்று சொல்லி சமீபத்தில் பதிவிட்டவுடன் அவரே அன்றைக்கே போன் செய்தார்.. “அது ஒண்ணுமில்லை.. ஆபரேஷன் பண்ணியாச்சுல்ல.. செகண்ட்டரி ஸ்டேஜ்தானே..? சரியாப் போயிரும்.. ஒரு மாசம் கழிச்சு சாதமெல்லாம் சாப்பிடச் சொல்லுங்க.. தைரியமா இருக்கச் சொல்லுங்க.. அவரோட வில்பவர் மட்டுமே இனிமே அவரைக் காப்பாத்தும்.. எல்லாத்துக்கும் மேல உங்கப்பன் முருகன் இருக்கான்.. பார்த்துப்பான்..” என்று சொன்னவர் மேலே சொல்லிக் கொண்டே போனார் அவரது ஸ்டைலில்..! அப்போது நான் ஒரு சினிமா நிகழ்ச்சியில் இருந்ததால் அதிகம் பேச முடியவில்லை.. “அப்புறம் வீட்டுக்கு வந்துட்டு பேசுறேன் ஸார்..” என்றேன்.. ஆனால் நான்தான் பேச இல்லை.. இனியும் முடியாது.. 

நேற்று காலை ஆறரை மணிக்கு டோண்டு ஸாரின் போனில் இருந்தே எனக்கு அழைப்பு வந்திருந்தது.. காலையில் எழுந்தது லேட் என்பதாலும், கொஞ்ச நேரம் கழித்து விசாரிக்கலாம் என்ற அலட்சியத்துடன் இணையத்தை திறந்து பார்த்துதான் இந்த கொடுமையான உண்மையைத் தெரிந்து கொண்டேன்.. உடனே பாலபாரதிக்கு போன் செய்து, “வீடு எங்கேயிருக்கு?” என்று கேட்டேன். அவருக்கும் தெரியாமல் போய், மீண்டும் அதே நம்பருக்கு போன் செய்தேன்.. அவருடைய மனைவிதான் போனை எடுத்தார். “நான்தாங்க போன் செஞ்சேன்..” என்றார்.. “வீட்டு அட்ரஸ் வேணும்.. வேற யார்கிட்டயாச்சும் போனை கொடுங்க.. கேட்டுக்குறேன்..” என்றேன்.. “இல்ல.. இல்ல.. நானே சொல்றேன்.. குறிச்சுக்குங்க..” என்று தங்கு தடையில்லாமல் சொன்னார்.. ஆச்சரியப்பட்டுப் போனேன்..! வீட்டிலும் அதுபோலவே பேசினார்.. டோண்டு ஸாரின் கடைசி சில நிமிடங்கள் பற்றி என்னிடமும் அன்புடன் பாலா சாரிடமும் பகிர்ந்து கொண்டார்..!  சொல்வதற்கு எங்களிடம் ஏதுமில்லை என்றாலும், அவர்களும் எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதும் புரிந்தது..!  

மனித வாழ்க்கையின் மிகப் பெரிய தத்துவமே ‘இன்றிருப்பார் நாளை இல்லை’ என்பார்கள். இதை யோசித்துப் பார்த்தால் சற்று திகைப்பாகவே இருக்கிறது. முந்தா நாள் மாலை வரையிலும் நம்முடன் இருந்தவர், இப்போது இல்லைதான். ஆனால் அவரது பதிவுகள் அனைத்தும் நம்மிடையே இருக்கின்றன..! அந்தப் பதிவுகள் என்றென்றும் டோண்டு ராகவன் என்ற பெயரை பரப்புரை செய்து கொண்டேதான் இருக்கும்..! அதில் நமக்கு பிடிக்காதவைகளும் உண்டு.. நாம் யாருக்காக எழுதுகிறோமோ அதுபோலவேதான் அவரும் எழுதினார்.. அவர் இன்றைக்கு.. நாம் நாளைய பொழுதில்.. அவரது பதிவுகளை போலவே நமது பதிவுகளும் ஒரு நாள் இதுபோல் ஆசிரியன் இல்லாது அப்படியே இருக்கும்..! அப்போதும் நமக்காக யாரோ ஒருவர், இதுபோல் இரங்கற்பா எழுதுவார்..! அதுவும் இங்கே பதிவாகும்.. ஆவணமாகும்..! எல்லாம் ஒரு கடிகாரச் சுற்று போலத்தான்..!

காலச் சூழலும், பணிச் சூழலும் ஒன்று சேர்ந்து இம்சை செய்ய.. உடனிருந்து சுடுகாடுவரையிலும் அவருடன் போக முடியவில்லை என்ற பெரும் வருத்தம் எனக்குண்டு.. ஆனால் இதற்காக டோண்டு ஸார் என்னை மன்னிப்பார் என்றே நினைக்கிறேன்..! அவர்தான் எப்போதும்-எதிலும் யாரையும் எதிர்பார்க்காமல் ‘போடா ஜோட்டான்’ என்று சொல்லிக் கொண்டே போய்விடுவாரே..! தயவு செய்து கடைசியாக எனக்காக ஒரு முறை அதைச் சொல்லிவிடுங்கள் ஸார்..!

32 comments:

  1. விரிவா..அன்பா.. உணர்வு பூர்வமா எழுதி இருக்கீங்க சரவணன். டோண்டு சாருக்கு மிகச் சரியான அஞ்சலி..
    இன்றைக்கு எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது. நேற்று இரவு அதற்காக 6 மணி நேரம் தயார்செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். டோண்டு சார் செய்தி கேள்விப்பட்டதிலிருந்து வேறெதிலும் மனம் செல்லவில்லை.. என்னைப் போல நிறைய்ய பேர் அப்படி..

    //இன்றைய தினம் நான், பாலபாரதி, லக்கி, அன்புடன் பாலா, நைஜீரியா ராகவன், ரஜினி ராம்கி என்று 6 பதிவர்களே அவரைச் சந்தித்து பிரியாவிடை கொடுத்திருக்கிறோம் என்ற சூழலே, அந்த மனிதர், இத்தனையாண்டுகளாக எழுதி ஆவணமாக வைத்திருக்கும் பதிவுகளுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய தோல்விதான்..!
    //

    நிறைய்ய பதிவர்கள் வந்திருப்பார்கள்.. ஆனால் கிடைத்த கால இடைவெளி மிகக் குறைவு..
    எங்கள் மயிலாடுதுறை பதிவர்கள் சார்பாக ரஜினிராம்கி வந்திருந்தது ஒரு நிறைவாக இருந்தது..

    போய் வாருங்கள் டோண்டு சார் !!

    ReplyDelete
  2. சென்ற பின்னூட்டமிட்டது நாந்தான் சீமாச்சு !!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. டொண்டூ சார் மன்னிக்கவும் அலுவலகத்தில் வேலை... ஊரில் இருப்பது போல சரிய சாயங்காலம் போயிக்குவோம் என்று மனதை தேத்திக்கொண்டேன்.. ஆனால் மதியமே.....? என் அஞ்சலிகள்.

    ReplyDelete
  5. அவர் இன்றைக்கு.. நாம் நாளைய பொழுதில்.. அவரது பதிவுகளை போலவே நமது பதிவுகளும் ஒரு நாள் இதுபோல் ஆசிரியன் இல்லாது அப்படியே இருக்கும்..! அப்போதும் நமக்காக யாரோ ஒருவர், இதுபோல் இரங்கற்பா எழுதுவார்..! அதுவும் இங்கே பதிவாகும்.. ஆவணமாகும்..! எல்லாம் ஒரு கடிகாரச் சுற்று போலத்தான்..!

    ReplyDelete
  6. வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக எனது இறுதி அஞ்சலிகளை நேரடியாக செலுத்தியிருப்பேன்....சமயத்தில் நாட்டை விட்டு பிரிந்திருப்பதில் உள்ள சங்கடங்களில் இதுவும் ஒன்று...

    இன்னும் பலரும் என்னைப்போல நண்பரே....

    தவிர , முற்றிலும் சுயநலம் பெருகிவிட்ட இச்சூழலில் ஆறு பதிவர்களாவது தமது அஞ்சலிகளை செலுத்தியிருக்கிறார்களே...அதற்காக சந்தோசப்படுகிறேன்...

    ReplyDelete
  7. I was shocked when I read this news in FB. Strong person with strong knowledge in the field, he choose. RIP. My deepest condolence to his family. We will miss those knowledgeable posts Dondu sir.

    ReplyDelete
  8. //இன்றைய தினம் நான், பாலபாரதி, லக்கி, அன்புடன் பாலா, நைஜீரியா ராகவன், ரஜினி ராம்கி என்று 6 பதிவர்களே அவரைச் சந்தித்து பிரியாவிடை கொடுத்திருக்கிறோம் என்ற சூழலே, அந்த மனிதர், இத்தனையாண்டுகளாக எழுதி ஆவணமாக வைத்திருக்கும் பதிவுகளுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய தோல்விதான்..! //

    இல்லை. விஷயம் தெரியாது. தெரிந்திருந்தால் நானும் வந்திருப்பேன். (ஆனால், யாரும் எப்பொழுது அவர் இறந்தார் என்று எங்குமே காணமுடியவில்லை)

    ReplyDelete
  9. நேற்று மதியம் 2 மணி அளவில் தான் அவர் வீட்டிற்கு செல்ல முடிந்தது. அதற்க்குள் சுடுக்காட்டுக்கு கொண்டு சென்று விட்டார்கள். அங்கு சென்று இறுதி மரியாதை செய்ய முடிந்தது.

    ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டோம்.
    கடந்த வருடம் அவரிடம் பேசாமல் விட்டுவிட்டேன் என்று மிக வருத்தம்.

    ReplyDelete
  10. கஷ்டமில்லாமல் போய்ச் சேர்ந்துவிட்டார் என்று நம்புவோம்.
    ஒரு பெரிய திடமான ஜாம்பவான்.
    நம் கதியும் இதுதான். நம் பதிவுகள் கதியும் இதுதான்.
    போய்ச் சுகமடையுங்கள் ராகவன் சார். நன்றி சரவணன்.

    ReplyDelete
  11. உ.தமிழன்,

    மிகச்சிறந்த ஓர் அஞ்சலி. உங்கள் மேல் அவருக்கு மிகுந்த அபிமானம் இருந்தது என்பதை நான் அறிவேன்.

    தன் சாதியை இழுத்தால் அவர் சண்டைக்கு வருவார் என்பது உண்மை. ஆனால் அவர் சாதீயவாதி கிடையாது! யாரையும் அவர் தன்னை விட கீழானவராக ஒருபோதும் எண்ணியதுமில்லை, பேசியதுமில்லை. வலைச்சூழல் அவரை பலவிதமாக பேச வைத்தது!

    ReplyDelete
  12. ஆம். அவர் சாதி வெறிய்ர் அல்லர். ஆனல் சுயசாதி அடையாளம் கொண்டவர். பெரிய குற்றமல்ல. மனு நீதியை, தீண்டாமையை, சாதி அடக்குமுறைகளுக்கு எதிரானவர் தான்.

    ReplyDelete
  13. நான் வந்திருப்பேன். வரவும் புறப்பட்டேன். ஏனோ,உடல் நலமில்லாத அவரின் உருவத்தை மனதில் பதித்துக்கொள்ள விரும்பாமல் நின்றுவிட்டேன்.

    அவர் நலமுடன் இருக்கையில் பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

    ReplyDelete
  14. உணர்வுபூர்வமான ஆழமான அஞ்சலியை செலுத்தியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  15. திரு டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

    சினிமா விரும்பி

    http://cinemavirumbi.blogspot.in

    ReplyDelete
  16. மனம் கனத்துப் போச்சு:(

    ReplyDelete
  17. அவரின் பதிவுகளை சமீபத்தில் படிக்க ஆரம்பித்து தொடர ஆரம்பித்தேன்! இதற்குள் இப்படி ஆகிவிட்டது! ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  18. ////இன்றைய தினம் நான், பாலபாரதி, லக்கி, அன்புடன் பாலா, நைஜீரியா ராகவன், ரஜினி ராம்கி என்று 6 பதிவர்களே அவரைச் சந்தித்து பிரியாவிடை கொடுத்திருக்கிறோம் என்ற சூழலே, அந்த மனிதர், இத்தனையாண்டுகளாக எழுதி ஆவணமாக வைத்திருக்கும் பதிவுகளுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய தோல்விதான்..! //

    அலுவலகத்தில் மீட்டிங்கின் இடைவேளையில் 11 மணி அளவில் முகநூலைப் பிரித்த போது செய்தி பார்த்தேன். நேரில் வர இயலவில்லை. அவரோடு தொலைபேசியில் அடிக்கடி பேசியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. :’(

    ReplyDelete
  19. என் ஆழ்ந்த இரங்கல்கள். எனக்கு டோண்டு சாரை, தெரியாது. ஆனால் உங்க பதிவில் குறிப்பிட்ட விஷயங்கள்,ஒரு நல்ல மனிதரை நாம் இழந்த விட்டோம் என அறிகிறேன். மனம் கனக்கிறது... அன்னாரின் ஆன்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  20. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். பதிவுகளின் மூலம் மட்டுமே அறிந்த ஒரு ஆளுமை. நான் சந்திக்க விரும்பிய ஒரு மனிதர். டோன்டு ராகவையங்காருக்கு என் மனமார்ந்த அஞ்சலிகளும் அவர் தம் குடும்பத்துக்கு ஆறுதல்களும்.

    ReplyDelete
  21. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  22. ///வல்லிசிம்ஹன் said...

    கஷ்டமில்லாமல் போய்ச் சேர்ந்துவிட்டார் என்று நம்புவோம்.
    ஒரு பெரிய திடமான ஜாம்பவான்.
    நம் கதியும் இதுதான். நம் பதிவுகள் கதியும் இதுதான்.///

    முற்றிலும் உண்மை, வல்லியம்மா!

    ReplyDelete
  23. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  24. என் ஆழ்ந்த இரங்கல்கள். எனக்கு டோண்டு சாரை, தெரியாது. ஒரு நல்ல மனிதரை நாம் இழந்த விட்டோம் என அறிகிறேன். மனம் கனக்கிறது... அன்னாரின் ஆன்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  25. //நாம் நாளைய பொழுதில்.. அவரது பதிவுகளை போலவே நமது பதிவுகளும் ஒரு நாள் இதுபோல் ஆசிரியன் இல்லாது அப்படியே இருக்கும்..! அப்போதும் நமக்காக யாரோ ஒருவர், இதுபோல் இரங்கற்பா எழுதுவார்..! அதுவும் இங்கே பதிவாகும்.. ஆவணமாகும்..! எல்லாம் ஒரு கடிகாரச் சுற்று போலத்தான்..!

    Read more: http://truetamilans.blogspot.com/2013/02/blog-post_7.html#ixzz2KFynp3M8 //

    ஆழ்ந்த இரங்கல்கள் :(

    ReplyDelete
  26. மனம் கனக்கிறது.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தியா வரும் போது பார்க்க நினைத்த மனிதர்களில் ஒருவர்

    ReplyDelete
  27. மனது கனத்தது.எனக்கு அவருடைய கொள்கைகளில் நிறைய பேதமிருந்ததே தவிர அவரது எழுத்துக்களும் மனப்போக்கும் பிடிக்கும். குறிப்பாக அவரிடமிருந்த திறமைகள். இணையத்தில் ஒரு ஜாம்பவான் போல் அவர் தம்மை நிலைநிறுத்திக்கொண்டார் என்றபோதிலும் அதற்கான முழுத்தகுதியும் அவருக்கிருந்தது. குறிப்பாக அவர் எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் தம் கருத்து சார்ந்து அவர் முன்வைக்கும் வாதங்கள் அபாரமானவை. நாம் ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ அவரது பாணியில் அதற்கு அவ்வளவு எளிதாக பதில் சொல்லிவிடமுடியாது.
    எனக்கு அவரிடம் நேரடியாகவோ போனிலோ பழக்கமில்லை. ஆனால் சில பதிவுகளில் பின்னூட்டமிட்டதில் என்னை சாவி காலத்திலிருந்து படித்து வருவதாக குறிப்பிட்டார்.
    இணையத்தில் தமிழில் டைப் பண்ணுவதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது என்றும் பதிவைத் தமிழ்மணத்தில் இணைப்பதிலேயே சிரமங்கள் இருக்கிறது எனவும் நான் தெரிவித்திருந்தமைக்கு அவராகவே முன்வந்து இப்படி இப்படி செய்யுங்கள் சரியாய்ப்போகும் என்று சொன்னார்.
    திடீரென்று அவருக்கு கான்சர் என்பதாக ஒரு பதிவு அவரே எழுதியிருந்தது பார்த்து மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.சீக்கிரம் குணமாகவேண்டும் என்று விருப்பம் தெரிவித்து அவர் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டேன்.
    சமீபத்தில் சோவின் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதற்குக்கூட நீங்கள் சரியான ரிப்போர்டிங் செய்யவில்லை. நல்லவேளை நீங்கள் பத்திரிகைத்துறைக்குப் போயிருந்தீர்கள் என்றால் அப்போதே திருப்பியனுப்பியிருப்பார்கள் என்று கமெண்ட் போட்டேன்.
    ஆமாம் அமுதவன் அதனால்தான் நான் பத்திரிகைத்துறைக்குப் போகவில்லை என்று பதிலளித்திருந்தார்.
    உடம்பு சரியில்லை என்று அவர் தெரிவித்திருந்த பிறகு சென்னைப் பக்கம் போனால் நங்கநல்லூர் சென்று பார்த்துவரலாம் என்று நினைத்திருந்தேன். திடீரென்று இப்படி.......நேற்றிலிருந்து மனது கனக்கிறது. அஞ்சலி என்று சொல்வதைத்தவிர வேறு என்ன செய்துவிடமுடியும்?

    ReplyDelete
  28. அன்னாரைப் பிரிந்து துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாகுக.

    இந்த பதிவுலகம் எனக்கு அறிமுகமான ஆரம்ப நாட்களில் (2008 ஆண்டு இறுதி/2009 ஆண்டு) அவருடைய இடுகைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். பல பின்னூட்டங்களைப் பார்த்து நமக்கு எதுக்கு வம்பு என்று எந்த பின்னூட்டமும் இடாமல் இருந்திருக்கிறேன். வேலை பளு, உடல் நலமின்மை ஆகிய காரணங்களால் இதற்கு பின் வந்த காலங்களில் பதிவுகளைப் படிப்பதை குறைத்துக் கொண்டு ஒரு கால கட்டத்தில் இந்த பதிவுலகமே எனக்கு மறந்து விட்டிருந்தது. எனக்கு நேரம் சரியில்லையோ என்னவோ மீண்டும் வர வேண்டியதாகி விட்டது. தங்களுடைய இடுகைகளை தவறாமல் தொடர்ந்து படித்து வருகிறேன். பின்னூட்டம்தான் இடுவதில்லை.

    ReplyDelete
  29. dear unmaithamizhan
    it is a shocking news to me
    [I was away from chennai from 13 jan
    to 13 feb]otherwise i could have seen him off
    my mind goes back to the day on which we two along with trb joseph and maravandu ganesh have coducted the first pathivar meeting at woodlands
    he is a great uncompromising soldier
    may his soul rest in peace

    ReplyDelete