Pages

Friday, February 15, 2013

வனயுத்தம் - சினிமா விமர்சனம்

15-02-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்ச் சினிமாவில் உண்மைச் சம்பவங்களை படமாக்குவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.. முதலில் அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தினர் அதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும்.. நடந்தவற்றை அவை சட்ட விரோதமாக இருந்தால், அதனை வெளிக்காட்ட அந்த இந்திய, தமிழகக் குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள்..! அடுத்து இதுவே அரசியல் கதையாக இருக்கும்பட்சத்தில் இயக்குநர்கள் நிறையவே சிரமப்பட வேண்டும்.. எந்த உண்மைப் பெயரையும் வெளிப்படுத்திவிடக்கூடாது.. முடியாது..! அப்படியே எடுத்தாலும் சென்சார் விடாது.. சென்சார் விட்டாலும் தொண்டர்களும், அந்த அரசியல்வியாதிகளும் தாங்க மாட்டார்கள்..! 

உலகத்தில் பல நாடுகளின் அரசியல் சம்பவங்கள், படுகொலைகள் பற்றியெல்லாம் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.. இந்தியாவில் அது மிக, மிக குறைவே.. அதற்குக் காரணம் நான் மேலே சொல்லியிருப்பதுதான்.. இந்த வீரப்பன் கதையும் இப்படித்தான் அரைகுறையாக வெளிவந்திருக்கிறது..! இதனைப் படமாக்காமலேயே எடுத்திருக்கலாம்..!


இதே இயக்குநர் ரமேஷ் முன்பு எடுத்த ‘குப்பி’ படத்தில் சிவராசன் டீம் பெங்களூரில் சிக்கி உயிரிழந்தது எப்படி என்பதை மட்டுமே கவனமாக எடுத்திருந்தார். தப்பித் தவறி, அதன் காரண காரியங்கள் மற்றும் பின்புலங்களை அவர் அலசவே இல்லை.. இதிலும் அப்படியே..! 

வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று உண்மைக் கதை என்றே விளம்பரங்களில் சொல்லி வந்து இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் அவர் கொடுத்த உறுதிமொழிப் பத்திரத்தின்படி  ‘உண்மைக் கதை’ என்ற வாசகம் நீக்கப்பட்டிருக்கிறது.. அவரது பார்வையில் அது உண்மையாக இருந்தாலும், சட்டப்படி அது கற்பனைக் கதைதான்.. இதற்காக 25 லட்சம் ரூபாயை சன்மானமாக வீரப்பனின் மனைவி திருமதி முத்துலட்சுமிக்கு கொடுக்கப் போகிறாராம்..! வேறு வழியில்லை.. 

இவ்வளவு செலவு செய்து படம் எடுக்க முயன்றவர் முதலிலேயே திருமதி முத்துலட்சுமியிடம் பேசி, அவர் அனுமதி பெற்று எடுத்திருக்கலாம்.. இப்போது இத்தனை தடைகளையும், கோர்ட் மூலமான சென்சார் உத்தரவுகளையும் தாண்டி படத்தைப் பார்த்தால் இதுவொரு ஆவணப் படமாகவும் இல்லை.. வீரப்பனின் உண்மையான வாழ்க்கைக் கதையாகவும் இல்லை.. ஒரு நல்ல துப்பறியும் சினிமாவாகவும் இல்லை..! மூன்றுங்கெட்டனாக வந்திருக்கிறது..!

எடுத்த எடுப்பிலேயே வீரப்பனின் வேட்டையாடும் பருவத்திலேயே கதையைத் துவக்கிவிட்டார்..! வீரப்பன் தமிழகத்துக்கு மக்களுக்காக வீடியோ கேஸட்டில் பேசியனுப்பி.. சன் டிவியில் ஒளிபரப்பாகி.. நக்கீரன் கோபால் அதை ‘முதல் வேட்டையும் முதல் கொலையும்’ என்று எழுதிய புத்தகத்தில் இருந்து முக்கால்வாசி கதையை அப்படியே சுட்டு தைரியமாக எடுத்திருக்கிறார். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..! 

நடந்த சம்பவங்களை இங்கே, இத்தனை மணிக்கு, இப்படி இப்படி நடந்தது.. இப்படி ரோட்டில் கல்லை போட்டு மறித்து உயரத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்கள் என்பதை ஒரு விஷூவலாக எடுத்துக் காண்பித்திருக்கிறார்..! அவ்வளவுதான்..!

சொந்தப் பகையால் ஊர்க்கார பயலுகளை வீரப்பன் போடும் முதல் வேட்டை.. அடுத்து நாமே தனியா சம்பாதிக்கணும்னு நினைச்சு ராஜூ கவுண்டரை போட்டுத் தள்ளியது.. பெங்களூர் ஹோட்டலில் தந்தத்துடன் சென்று போலீஸிடம் சிக்குவது..! பின்பு அங்கிருந்து தப்பிப்பது.. தன்னை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்யத் திட்டமிட்ட டிஎஃப்ஓ சீனிவாசனை தந்திரமாக காட்டுக்குள் அழைத்து அவர் தலையை துண்டித்து ஈட்டியில் சொருகி வைத்தது..! 

துப்பாக்கி வாங்கும் ஆசையில் ஷகீல் அகமது, ஹரிகிருஷ்ணன் என்ற இரண்டு போலீஸ் உயரதிகாரிகள் விரித்த வலையில் சிக்கிக் கொண்ட வீரப்பனின் கூட்டாளி மாதையனை போலீஸ் சுட்டுக் கொல்ல.. பதிலுக்கு ஷகீலையும், ஹரிகிருஷ்ணனையும் வரவழைத்து, அவர்கள் வந்த அம்பாசிடர் கார் மீது குண்டு மழை பொழிந்து அவர்களை காலி செய்தது..!

அடுத்து வீரப்பனை பிடிக்காமல் நான் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன் என்று தமிழகத்து மக்களிடம் உறுதி மொழி கொடுத்து எஸ்.பி.யான கோபாலகிருஷ்ணனை அவர் செய்த பல கற்பழிப்புகளுக்காகவும், கொடுமைகளுக்காகவும் தந்திரமாக வரவழைத்து கண்ணிவெடியில் சிக்க வைத்து 22 பேரை கொன்றது..!

ராமாவரம் போலீஸ் ஸ்டேஷனைத் தாக்கி அங்கேயும் சில போலீஸ்காரர்களை கொலை செய்தது..! தன்னை போலீஸில் காட்டிக் கொடுக்க நினைத்த சிலரை கொலை செய்தது..! ராஜ்குமாரை கடத்தியது.. பின்பு பேச்சுவார்த்தை வந்த நக்கீரன் கோபாலிடம் பேசுவது.. நெடுமாறன் அண்ட் கோ.விடம் ராஜ்குமாரை ஒப்படைத்தது..! அடுத்து நாகப்பாவைக் கடத்தியது.. அவரை கொலை செய்தது..! (இந்தக் கொலையை தான் செய்யவில்லை என்று அப்போதே வீரப்பன் அறிக்கையெல்லாம் விட்டார். “கர்நாடக, தமிழக கூட்டு அதிரடிப்படைதான் என் மீது வெறுப்பு வருவதற்காக இதைச் செய்திருக்கிறார்கள். நாகப்பா என்னிடமிருந்து தப்பியோடிவிட்டார்..” என்றார் வீரப்பன். ஆனால் இரு மாநில அரசுகள் அதை மறுத்து வீரப்பன்தான் இந்தக் கொலையைச் செய்தார் என்று இப்போதுவரையிலும் சொல்கிறது. இயக்குநர் அரசுத் தரப்பார் சொன்னதைத்தான்  எடுத்திருக்கிறார்.)

விஜயகுமார் ஐ.பி.எஸ். தலைமைப் பொறுப்பே ஏற்றவுடன் வேறு வழியில் வீரப்பனை பிடிக்க போடும் திட்டம்.. கோவை சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானியிடம் வீரப்பன் கும்பல் துப்பாக்கிகள் மற்றும் ஆட்களை கேட்பது.. மதானியிடம் போலீஸ் தங்களுக்கு இன்பார்மர் வேலை செய்யும்படி சொல்வது.. அதற்குள் சிறையில் இருந்த முத்துக்குமார் உள்ளிட்ட சில இளைஞர்கள் வீரப்பனை பார்க்க காட்டுக்குள் செல்வது.. அவர்கள் உளவாளிகளோ என்று வீரப்பன் சந்தேகப்படுவது.. பின்பு அவர்களை போகச் சொல்வது..! கடைசியாக கண் பார்வைக் குறைபாடு, உடல் நலமின்மை.. இவற்றால் இலங்கைக்கு சென்று பதுங்க முடிவு செய்து போலீஸ் இன்பார்மரின் தேன் வார்த்தைகளை நம்பி ஒரு ஆம்புலன்ஸ் வேனில் தப்பிக்க வந்து தர்மபுரி பாப்பாரப்பட்டி அருகே விஜயகுமாரின் துப்பாக்கிகளினால் துளைக்கப்பட்டு இறந்ததாக அரசுத் தரப்பு சொல்வதை அப்படியே ஒரு வரிகூட மாற்றாமல் எடுத்திருக்கிறார் இயக்குநர்..!

வாழ்க்கைக் கதையைச் சொல்ல வந்தவர்கள், எதனால் வீரப்பன் வேட்டையை விரும்பினான்.. எதனால் அரசு அதிகாரிகளை அவமதித்தான்.. வெறுத்தான் என்பதையெல்லாம் துளிகூட சொல்லாமல், அவர் வசதிக்காக வீரப்பனை கொடுங்கோலன் என்றும், அவனை அழிக்க வந்த போலீஸாரை ஏதோ யோக்கிய புருஷர்களாகவும் காட்டியிருக்கும் இப்படத்தை என்னால் எந்தக் கோணத்திலும் அணுக முடியவில்லை..!

டிஎஃப்ஓ சீனிவாசன் தன்னைக் கொல்ல முயற்சித்ததாலும், தனது ஆட்களை கைது செய்து சிறைக்குள் அனுப்பி வைத்த்தாலும் ஏற்பட்ட கோபத்தில்தான் கொன்றதாக வீரப்பனே சொல்லியிருக்கிறார்.  இதற்குப் பின்னர் வீரப்பனின் குண்டுக்கு பலியான போலீஸ் உயரதிகாரிகள் அனைவருமே மலைவாழ் மக்களை கொடுமைப்படுத்தியதற்காகவும், பல நூறு கற்பழிப்புகளை செய்த காரணத்தினாலும்தான் கொலை செய்ததாக அவரே சொல்லியிருக்கிறார்..!

நான் வீரப்பனுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் நடந்த கதையை சொல்லும்போது 90 சதவிகிதமாவது உண்மையிருக்க வேண்டாமா..? வீரப்பன் வேட்டை என்ற பெயரில் மலைவாழ் மக்களை பிடித்து மாதேஸ்வரன் மலைப்பகுதியில் ஒர்க்ஷாப் என்னும் கொட்டகையில் அடைத்து வைத்து.. ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் யூத மக்களுக்கு நேர்ந்த கொடுமையைப் போலவும், சிங்களப் படைகள் தமிழர்களுக்கு எதிராக செய்ததையும் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இரு மாநில கூட்டு போலீஸ் படைகள் செய்திருப்பதாக ரெங்கநாத்மிஸ்ரா கமிஷன், சதாசிவம் கமிஷன் இரண்டுமே சொல்லியிருந்தும், இதனை படத்தில் குறிப்பிடவே இல்லை..! காட்டவும் இல்லை..!

ஒரேயொரு இடத்தில் ஒரு பெண்ணை அடிப்பது போலவும், வீரப்பனின் கையாளை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடிப்பதுபோலவும் காட்டிவிட்டு அத்தோடு மங்களம் பாடிவிட்டார் இயக்குநர்.. அனைத்தையும் காட்ட முடியாதுதான்.. ஆனால் வசனத்தில் சொல்லியிருக்கலாமே..? 

எத்தனை எத்தனை கொடுமைகளைத்தான் செய்திருக்கிறார்கள் இந்த போலீஸ் பாவிகள்..! எத்தனை கற்பழிப்புகள்.. எத்தனை கொலைகள்.. ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி நாவலில் இருக்கும் காட்சிகளையெல்லாம் படித்தால் நல்ல மனம் படைத்தவர்களுக்கு அதற்குப் பின் தூக்கமே வராது..! இத்தனை கொடூரங்களையும் செய்த யோக்கியசிகாமணிகள் பலரும் இப்போது இரண்டு பதவி உயர்வுகளை ஒரே நேரத்தில் பெற்றுக் கொண்டு நமது சல்யூட்டையும் பெற்றுக் கொண்டு நமக்காகவே உழைத்து வருகிறார்கள்.. இத்தனை கொலைகளுக்காகவும், கற்பழிப்புகளுக்காகவும் இதுவரையிலும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மீதுகூட எஃப்.ஐ.ஆர். போடப்படவில்லை என்பதுதான் மிகப் பெரிய சோகம்..! 

இத்தனை கொடுமைகளையும் செய்துவிட்டு அவர்கள் மீது தடா வழக்கிலும் கைது செய்து சிறையிலும் அடைத்தார்கள் நமது மாண்புமிகு அரசியல், அதிகார வர்க்கம்.. சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தடா கைதிகளாக்கப்பட்டு பின்பு இவர்களில் அதிகம்பேர் எட்டாண்டுகள் கழித்தே விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்..! 

ஒரு விஷயத்தை ஊறப் போட வேண்டுமெனில் அதன் மீது கல்லை போடு.. இல்லையெனில் கமிஷனை போடு என்பதை போல இது விஷயமாக உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு கமிஷனை போட்டு அக்கமிஷன் கொடூரங்கள் நடந்தது உண்மை என்று கொடுத்த இறுதி அறிக்கையின் மீது இன்னமும்கூட நடவடிக்கை எடுக்காமல் வைத்திருக்கிறார்கள்..! 

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் இரு மாநில அரசுகள் நடத்திய இந்த கொடூரத்தைப் பற்றி இந்தச் சினிமாவில் ஒரு வார்த்தைகூட இல்லை என்பதுதான் மிக கேவலமானது..! ராஜ்குமார் கடத்தலின்போது தனது கோரிக்கைகளாக இந்த மலைவாழ் பெண்கள் கற்பழிப்புகள் பற்றியும், சீருடை அணிவித்து பல கிராமத்தினரை வீரப்பனின் ஆட்கள் என்று பொய் சொல்லி படுகொலைகளை செய்த்து பற்றியும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் வீரப்பன் பேசியிருந்தார்.. அது பற்றிய செய்திகளே இதில் இல்லை.. இதற்குப் பதிலாக ராஜ்குமாரின் பேத்தியும், அவரது குடும்பத்தினரும் ரேடியோவில் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கும் காட்சியே இடம் பிடித்திருக்கிறது.. என்னவொரு பாசம்..?

ஒவ்வொரு படுகொலைகளுக்குப் பின்னாலும் வீரப்பன் தரப்பில் ஒரு வலுவான காரணங்கள் இருத்தன.. இவைகள் அத்தனையையும் தூக்கிக் கடாசிவிட்டு ஏதோ வீரப்பன் போலீஸ்காரர்களை கொல்வதற்காகவே காட்டுக்குள் மறைந்திருந்ததாகவும், வீரப்பனை பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் போலீஸார் கடும் சிரமப்படுகிறார்கள் என்றுமே கதையை கொண்டு சென்றிருக்கிறார்..!

இதில் வீரப்பனின் தம்பி அர்ஜூனின் கதையைக் காணோம்.. டிஎஃப்ஓ சிதம்பரநாதனை கடத்தி வைத்துக் கொண்டு அதற்குப் பதிலாகத் சில கோரிக்கைகளுடன், உடல் நலமில்லாமல் இருந்த தனது தம்பி அர்ஜூன்னுக்கு சிகிச்சையளித்து திருப்பி அனுப்பும்படியும் வீரப்பன் கோரிக்கை வைத்திருந்தார். இடையில் சிதம்பரநாதனும் மற்ற இருவரும் தப்பி வந்துவிட.. இங்கே விருந்தாளியாக வந்த அர்ஜூனன் வசமாகச் சிக்கிக் கொண்டார்.. அதற்குப் பின்னர் ஒரு நாள் அர்ஜூனும், அவரது கூட்டாளிகளும் விஷமறிந்து இறந்துவிட்டதாகச் சொல்லி அவர்கள் கதையை முடித்தார்கள்  போலீஸார்.. இது பற்றியும் இதில் எதையும் காணவில்லை..!

தனித்தமிழ் இயக்கத்தின் சார்பாக உள்ளே வந்து ஒட்டிக் கொண்ட முத்துக்குமார் கோஷ்டியின் வருகையையும், கோவை சிறையில் மதானியிடம் வீரப்பனின் ஆட்கள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் பேச்சுவார்த்தைகளை மட்டுமே பிரதானமாக வைத்து.. கோவை குண்டுவெடிப்பை ஒருவகையில் வீரப்பன் பிரமிப்பாக பார்ப்பது போலவும், அது போலவே குண்டு வைப்பதில் மிகச் சிறந்தவர்களை வீரப்பன் தேடுவதாகவும் சொல்லி, அவர் மீதான பயத்தை அப்போது ஊட்டிய இரு மாநில அரசுகளுக்கு முழுக்க முழுக்க ஆதரவாகவே படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர்..!

வீரப்பனின் மனைவி திருமதி முத்துலட்சுமி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக நீக்க வேண்டும் என்று கோர்ட்டுக்கு போய்விட்டதால் வேறு வழியில்லாமல் அவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் மற்றும் வசனங்கள் பலவற்றையும் நீக்கியிருக்கிறார்கள். இடைவேளைக்கு பின்பு பல இடங்களிலும் மியூட் வசனங்கள் நிரம்பி வழிகின்றன..! 

விஜயகுமார் ஐ.பி.எஸ்., என்ற யோக்கிய சிகாமணி, சென்னை மாநகர ஆணையராக இருந்தபோது செய்த போலீஸ் படுகொலைகளில் தலையாயதான அயோத்திக்குப்பம் வீரமணி படுகொலையை பார்த்த பின்பு அப்போதைய முதல்வரான நம்ம ஆத்தா, ரொம்பவும் பாராட்டி மகிழ்ந்து விஜயகுமாரை உடனேயே காட்டுக்கு அனுப்பி வைத்த்தாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்..! இதுதான் இந்தப் படத்தின் முதல் காட்சி..! இது மட்டும் முன்பே தெரிந்திருந்தால் வீரமணியின் குடும்பமும் கோர்ட் படியேறியிருக்கும்..! இந்தக் கொலையைச் செய்தது அப்போது விஜயகுமாரின் கையாளாக இருந்த போலீஸ் கொலையாளி துணை கமிஷனர் வெள்ளத்துரைதான்..! இதற்குப் பின்தான் எத்தனை, எத்தனை என்கவுண்ட்டர்கள்..? விஜயகுமார் போன்ற ஐ.பி.எஸ்.ஸுகள் நமக்குக் கிடைக்க நாம்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

இந்த விஜயகுமாரின் வேடத்தில் அர்ஜூன் நடித்திருக்கிறார். அவர் சும்மாவே வெளியில் விஜயகுமார் புராணம் பாடுவார்.. வேடமும் கிடைத்தால் விடுவாரா..? ராஜ்குமார் வேடத்தில் ஒரு நடிகர்.. முகம் காட்டி பேசுகிறார்.. பின்பு இறுதியில் வீரப்பனை கொலை செய்தவுடனும் வருத்தப்பட்டு டிவிக்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.. நாகப்பாகவும், சீனிவாசனாக, கோபாலகிருஷ்ணனாக, ஷகீல் அகமதுவாக, சங்கர் பிதாரியாக என்று அத்தனை வீராதி வீர கேரக்டர்களுக்கும் ஆர்ட்டிஸ்ட்டுகளை காட்டி நடிக்க வைத்திருக்கும் இயக்குநர், ஆத்தாவுக்கு மட்டும் முயற்சித்து கடைசி நேரத்தில் பயத்தின் காரணாக பதுங்கிவிட்டார்.. ஜெயலலிதாவின் கைகள்,  அவரது முகமறியாத நிலை, அவரது குரல்.. என்று மாறி மாறி காட்டி தப்பித்துக் கொண்டுவிட்டார். தப்பித் தவறி இந்தக் கேரக்டரில் நடித்திருந்த ஜெயசித்ராவை காண்பித்திருந்தால் இயக்குநரின் நிலைமை என்னவாகியிருக்குமோ..?

வீரப்பனாக நடித்திருக்கும் கிஷோர் நல்ல தேர்வுதான்..! அவரது கூட்டாளியாக சம்பத் ராம்..  மாதையனாக இயக்குநர் ரமேஷே நடித்திருக்கிறார்..! இதில் ஒரு சில காட்சிகளில் ஓரிரு ஷாட்டுகளில் மட்டுமே வந்து செல்கிறார் லஷ்மி ராய். ஏதோ பெரிய சேனலில் இந்த வீரப்பன் வேட்டையை மிகப் பிரமாதமாக கவர் செய்யப் போகிறாராம்..! இதுவும் வேஸ்ட்டு..! 

எனது மிகப் பெரிய வருத்தம் இந்தப் படத்தின் வசனகர்த்தா நண்பர் அஜயன்பாலா மீதுதான்..! "வீரப்பன் நல்லவனா? கெட்டவனா என்றெல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. நடந்ததை மட்டுமே சொல்லியிருக்கிறோம்" என்றார்..! "நடந்தது" என்றபோது முழுக் கதையும் சொல்ல வேண்டாமா..? நமக்கு வசதியானதை மட்டும் எடுத்துக் கொண்டு மிச்சத்தை மக்களிடமிருந்து மறைப்பதா படைப்பாளியின் வேலை..!?

வீரப்பனின் இறுதி வேட்டை, போலீஸார் சொன்னதுபோலவே எடுக்கப்பட்டிருப்பதால் அதனை யாரும் நம்புவதற்கில்லை..! இதுபோல் எத்தனை எத்தனை பொய்களை நாம் கேட்டிருப்போம்..! முடிக்க வேண்டு்ம் என்று நினைத்தார்கள் முடித்துவிட்டார்கள்.. ஓகே.. ஆனால் எப்படி என்பது மூன்றாவது நபர்களுக்கு தெரியவில்லை என்பதால் இந்தச் சந்தேகம் சத்தியங்கலம் காடு இருக்கின்றவரையிலும் நாட்டிற்குள் இருக்கத்தான் செய்யும்..!

ஒரு சினிமாவை சினிமாவாக பார்க்க இதுவொன்றும் சாதா சினிமா இல்லை.. ஸ்பெஷல்.. இந்தியாவில் யாருமே செய்ய முடியாத ஒரு ஆவணப் படத்தை தான் உருவாக்கியிருப்பதாக இயக்குநர் ரமேஷ் மீடியாக்களில் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் சினிமாவையும் தாண்டி விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது..! 

இது போன்று உண்மைக்குப் புறம்பாக, நடந்த நிகழ்ச்சியைப் பற்றி மட்டுமே சொல்கிறேன் என்று பலரும் போலி ஆவணப் படங்களைத் தயாரித்தால் திரைத்துறையினருக்கு மக்கள் மத்தியில் என்ன பெயர்தான் கிடைக்கும்..? வருத்தமாக உள்ளது..!

இதே படம் கன்னடத்திலும் ‘ராட்சஷன்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.. பெயரைப் பார்த்தாலே உங்களுக்கு புரிந்திருக்குமே.. படம் எதற்காக, எப்படி தயாரிக்கப்பட்டிருக்குமென்று..!?

அப்பாவி மலைவாழ் மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிய இரு மாநில கூட்டு அதிரடிப் படையினருடன் கூடவே இப்போது இந்த இயக்குநர் ரமேஷும் ஒரு குற்றவாளியாகிவிட்டார்..!

29 comments:

  1. படம் ரிலீஸ் ஆகலையே தள்ளி வைக்க சொல்லி கோர்ட் உத்தரவு நீங்க எங்க பார்த்தீங்க


    அப்புறம் நமக்கு ஒரு விஷயம் பிடிக்காட்டி அது தப்பாதான் தெரியும் ...

    ReplyDelete
  2. //இதற்காக 25 லட்சம் ரூபாயை சன்மானமாக வீரப்பனின் மனைவி திருமதி முத்துலட்சுமிக்கு கொடுக்கப் போகிறாராம்..!
    //

    ம் வீரப்பன் இருந்தாலும் பொன்னு இறந்தாலும் பொன்னு யானை வேட்டையாடியவன் யானையாகவே ஆகிவிட்டான். முத்துலட்சுமி காட்டில் பண மழை

    ReplyDelete
  3. இதற்கு மக்கள் தொலைக்காட்சியில் வெளிவந்த 'சந்தனக்காடு' தொடரே பரவாயில்லை போல இருக்கே!! அதில் இரண்டு climax வைத்திருந்தார்கள். முதலில் அரசு சொன்னதுபோல பாப்பாரப்பட்டியில் போலீசார் சுட்டுக் கொன்றதுபோல காட்டினார்கள். ஆனால் வீரப்பன் விஷம் வைத்து கொல்லப்பட்டதுதான் உண்மை என்று இரண்டாவது climax-ல் காட்டினார்கள். அதில் ஒரு காட்சி...

    வீரப்பனின் இறந்த உடலை சுற்றி காவல் அதிகாரிகள் நின்றிருப்பார்கள். வீரப்பன் கொல்லப்பட்டதை உலகுக்கு அறிவிக்க ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள். அப்போது என்ன காரணத்திற்காகவோ ஒரு போலீஸ் அதிகாரி வீரப்பனின் மீசையை சிரைப்பார்.

    அப்போது பின்னாலிருக்கும் ஒரு அதிகாரி அருகிலிருப்பவரிடம் மெதுவாகக் கூறுவார், "வீரப்பன் உயிரோட இருந்தவரைக்கும் ஒரு மசுரையும் புடுங்க முடியல. ஆனா செத்த பின்னாடி இது மட்டும்தான் நம்மால முடிஞ்சது."

    உங்கள் விமர்சனத்தை படிச்ச பிறகு வனாயுத்தத்திற்குப் பதிலாக சந்தனக்காடே பரவாயில்லை போல..!!!!

    ReplyDelete
  4. [[[எல் கே said...

    படம் ரிலீஸ் ஆகலையே தள்ளி வைக்க சொல்லி கோர்ட் உத்தரவு நீங்க எங்க பார்த்தீங்க?]]]

    Press Show..

    [[[அப்புறம் நமக்கு ஒரு விஷயம் பிடிக்காட்டி அது தப்பாதான் தெரியும்.]]]

    ஓ.. அப்போ எல்லாத்தையும் அவரவர் பார்வையில் பார்க்குறதுதான் நல்லதுன்றீங்களா ஸார்..?

    ReplyDelete
  5. [[[கோவி.கண்ணன் said...

    //இதற்காக 25 லட்சம் ரூபாயை சன்மானமாக வீரப்பனின் மனைவி திருமதி முத்துலட்சுமிக்கு கொடுக்கப் போகிறாராம்..!//

    ம் வீரப்பன் இருந்தாலும் பொன்னு இறந்தாலும் பொன்னு யானை வேட்டையாடியவன் யானையாகவே ஆகிவிட்டான். முத்துலட்சுமி காட்டில் பண மழை.]]]

    கோவி.கண்ணனின் படைப்புகளை நான் எனது பதிப்பகத்தின் மூலமாக அவரிடம் அனுமதி வாங்காமல் வெளியிட்டால், கோவியார் எனக்கு மலர் மாலை அணிவித்து வாழ்த்துவாரோ..?

    ReplyDelete
  6. வெங்கடேஷன் மோகன் ஸார்..

    சந்தனக்காட்டில் வந்ததுதான் உண்மை.. போலீஸ் சொல்வது ரீல் என்பது நமக்கே தெரிகிறது..

    இலங்கையில் சண்டை நடந்து வரும் சூழலில், வீரப்பன் இலங்கைக்கே தப்பியோடும் மனநிலையில் இருக்கிறார் என்று பொய் பரப்பி அவரைப் பற்றிய எதிர்மறை விதையை தமிழ் இன உணர்வாளர்கள் மத்தியில் பரப்பிட அப்போதைய போலீஸ் உயரதிகாரிகள் வீரப்பனி்ன் மரணத்திற்கு முன்பாகவே முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்..

    இறந்தவுடன் அதற்கேற்றபடி கதையை திரித்துவிட்டார்கள்..!

    ReplyDelete
  7. எந்த கதைப்புத்தகத்தையும் நாலு அல்லது ஐந்து மணி நேர வாசிப்பில் ஒரு நாள் அல்லது இரண்டு நாளுக்குள் மேம்போக்காக படித்து விடும் என்னால் சோளகர் தொட்டி நாவலையும் அப்படி படிக்கமுடியவில்லை. மலை வாழ் மக்களுக்கு ஒர்க் ஷாப்பில் நேர்ந்த கொடுமைகளை படித்த போது நகர மக்களாகிய நாம் எல்லாம் எவ்வளவு சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று வெட்கமாக இருந்தது.

    இதற்கு மக்கள் தொலைக்காட்சியில் வெளிவந்த 'சந்தனக்காடு' தொடரே பரவாயில்லை போல இருக்கே!! அதில் இரண்டு climax வைத்திருந்தார்கள். முதலில் அரசு சொன்னதுபோல பாப்பாரப்பட்டியில் போலீசார் சுட்டுக் கொன்றதுபோல காட்டினார்கள். ஆனால் வீரப்பன் விஷம் வைத்து கொல்லப்பட்டதுதான் உண்மை என்று இரண்டாவது climax-ல் காட்டினார்கள். அதில் ஒரு காட்சி...

    வீரப்பனின் இறந்த உடலை சுற்றி காவல் அதிகாரிகள் நின்றிருப்பார்கள். வீரப்பன் கொல்லப்பட்டதை உலகுக்கு அறிவிக்க ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள். அப்போது என்ன காரணத்திற்காகவோ ஒரு போலீஸ் அதிகாரி வீரப்பனின் மீசையை சிரைப்பார்.

    அப்போது பின்னாலிருக்கும் ஒரு அதிகாரி அருகிலிருப்பவரிடம் மெதுவாகக் கூறுவார், "வீரப்பன் உயிரோட இருந்தவரைக்கும் ஒரு மசுரையும் புடுங்க முடியல. ஆனா செத்த பின்னாடி இது மட்டும்தான் நம்மால முடிஞ்சது."
    ---------------இதுதான் உண்மை.

    ReplyDelete
  8. Solagar Thotti will bring tears to the eyes of the readers.

    ReplyDelete
  9. Good review... Nichayama veerappanin ovvoru kolaikku pinnalum ethavathu oru reason irukkirathu... Athellam ippadathil maraikkappadukirathu..

    ReplyDelete
  10. நல்லதொரு விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
  11. திரு.உண்மைத்தமிழன்,

    உங்களை அறியாமல்.....
    'தமிழன் என்ற உள்ளுணர்வு'
    இப்பதிவை இப்படி எழுத வைத்து விட்டது. வேற்று மாநிலத்தவர் எவரும் இந்த படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் எழுதவே மாட்டார்கள் என்று தீர்க்கமாக உறுதி கூறுகிறேன்.

    உங்களுக்கான மிக அருமையான ஒரு எதிர்பதிவை இங்கே படித்தேன்.

    http://riyasdreams.blogspot.com/2013/02/blog-post_15.html

    அதை எழுதிய பதிவர்... ஆப்கானிஸ்தான் தலிபான் காரரோ, அல்கொய்தா காரரோ இல்லை என்பதை முக்கிய குறிப்பாக கூறிக்கொள்கிறேன். :-))

    ReplyDelete
  12. கன்னடாவில் படத்தின் பெயர் இராட்சசன் இல்லை.படத்தின் பெயர் "அட்டகாச".படத்தின் ஆரம்பத்திலயே போட்டு விட்டார்களே படம் வீரப்பனை பிடிக்க கஷ்டபட்ட போலீஸ் காரர்களுக்கு எடுக்கப்பட்ட படம் என்று.ஒரு படத்தில் ஒருவனது வாழ்கையை பற்றி முழுவதும் சொல்லுவது இயலாத காரியம்.நீங்கள் சொன்னது போல படைப்பாளிகளுக்கு இங்கே முழு சுதந்திரம் இல்லை.

    ReplyDelete
  13. அண்ணாச்சி,

    முத்துலஷ்மி தடைக்கேட்டதில் என்ன தப்பு ,மனைவி கேட்க உரிமை உண்டு, சும்மா தமிழ் இயக்கம், இந்து, அவன், வன்னியன்னு சொல்லிக்கிட்டு யாரோ கேட்டால் தப்பு?

    ஏன் சொல்கிறேன் என்றால் உரிமை உள்ளவர்களுக்கே தடை கேட்க உரிமையுண்டு. மற்றவர்கள் கேட்டால் அது வேறு காரணம்.

    ஆனால் உண்மைய சொல்லலைனு இப்போ ரொம்ப வருத்தப்படும் நீங்கள் விஷ்வரூபத்தில உண்மையே சொல்லலையேனு இந்தளவுக்கு வருத்தப்பட்டாப்போல தெரியலை :-))

    நான் சொன்னாப்போல லோகநாயகருக்கு கச்சேரிய வச்சு இருக்கேன், முடிஞ்சா பாருங்க...

    http://vovalpaarvai.blogspot.in/2013/02/blog-post_15.html

    ReplyDelete
  14. இந்த விளம்பரத்தை பார்க்கும் போதே இதைத்தான் எதிர்பார்த்தேன்.
    அதெப்படி நம்ம ஊரில் உண்மையான வரலாறு?

    இவய்ங்க எப்பயுமே இப்படிதானே.

    ReplyDelete
  15. பொதுவாக எல்லா கம்மேன்ட்களுக்கும் விடாமல் பதில் அளிப்பீர்கள். வினோதினி மரணத்தில் வந்த கமெண்டுகலை கண்டு கொள்ள வில்லை? ஏன் ? தமிழ் சினிமா தங்களால் முடிந்ததை அளவுக்கு செய்ற சமுக சீரழிவை பத்தி எழுத புடிக்கலையா? இவ்ளோ பட விமர்சனம் செய்ற நீங்க சினிமா என்ற பேர்ல பொருக்கிங்களை ஹீரோவா காற்றது பத்தி ஒரு தனி பதிவே போடணும். அப்படி போட புடிக்கல, செய்யும் தொழில் தான் தெய்வம் அதை என்னால விமர்சனம் பண்ண முடியாதுன்னு நினைச்சா சமுதாயதுல நடக்கறத விஷயத்தை பத்தி இப்படி பண்ணிட்டாங்களே பாவிங்கன்னு உணர்ச்சி வசப்பட்டு எதுவும் பதிவு போடாதிங்க. காலத்துக்கும் சினிமா விமரிசனமே மற்ற பதிவர்கள் மாதிரி எழுதிட்டு இருங்க. நான் ஏன் கேட்க போறேன்.

    ReplyDelete
  16. [[[சரண் said...

    எந்த கதைப் புத்தகத்தையும் நாலு அல்லது ஐந்து மணி நேர வாசிப்பில் ஒரு நாள் அல்லது இரண்டு நாளுக்குள் மேம்போக்காக படித்து விடும் என்னால் சோளகர் தொட்டி நாவலையும் அப்படி படிக்க முடியவில்லை. மலை வாழ் மக்களுக்கு ஒர்க்ஷாப்பில் நேர்ந்த கொடுமைகளை படித்தபோது நகர மக்களாகிய நாம் எல்லாம் எவ்வளவு சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று வெட்கமாக இருந்தது.]]]

    எனக்கும்தான் நண்பரே..! எழுத மட்டுமே செய்யும் எனது அன்றாட வாழ்க்கையும் மிக மலிவானது என்றே நான் நினைக்கிறேன்..!

    ReplyDelete
  17. [[[AAR said...

    Solagar Thotti will bring tears to the eyes of the readers.]]]

    ஏன் நம்மைப் போன்ற மனித மனது, இந்தக் காவல்துறையினருக்கு இல்லாமல் போகிறது என்பதுதான் தெரியவில்லை..! ச.பாலமுருகனை இந்த ஒரு புத்தகத்துக்காகவே எவ்வளவு வேண்டுமானாலும் வாழ்த்தலாம்..!

    ReplyDelete
  18. [[[பாலாஜி ஜி said...

    Good review. Nichayama veerappanin ovvoru kolaikku pinnalum ethavathu oru reason irukkirathu. Athellam ippadathil maraikkappadukirathu.]]]

    பதிலுக்குப் பதில் கொலையை நான் ஏற்கவில்லை. அதே சமயம் ஒரு நாட்டுக் குடிமகன் சட்டத்தையும், போலீஸையும் நம்பாமல் துப்பாக்கியைத் தூக்குகிறான் என்றால், அதற்கு முழு பொறுப்பை இந்த அரசுகள்தான் ஏற்க வேண்டும்..!

    ReplyDelete
  19. [[[s suresh said...

    நல்லதொரு விமர்சனம்! நன்றி!]]]

    வருகைக்கு நன்றி சுரேஷ்..!

    ReplyDelete
  20. [[[~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

    திரு.உண்மைத்தமிழன்,

    உங்களை அறியாமல் 'தமிழன் என்ற உள்ளுணர்வு' இப்பதிவை இப்படி எழுத வைத்துவிட்டது. வேற்று மாநிலத்தவர் எவரும் இந்த படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் எழுதவே மாட்டார்கள் என்று தீர்க்கமாக உறுதி கூறுகிறேன்.]]]

    வீரப்பனின் முழுக் கதையையும் தெரிந்தவர்கள் இப்படத்தைப் பார்த்தால் நிச்சயம் இதுபோலத்தான் விமர்சிப்பார்கள்..

    [[[உங்களுக்கான மிக அருமையான ஒரு எதிர்பதிவை இங்கே படித்தேன்.

    http://riyasdreams.blogspot.com/2013/02/blog-post_15.html

    அதை எழுதிய பதிவர். ஆப்கானிஸ்தான் தலிபான்காரரோ, அல்கொய்தாகாரரோ இல்லை என்பதை முக்கிய குறிப்பாக கூறிக் கொள்கிறேன். :-))]]]

    தகவலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..! அதை எழுதியவர் ஒரு தலிபனாக இருந்திருந்தால், நான் நிச்சயமாக பதில் சொல்லக் கடமைப்பட்டவன்..!

    ReplyDelete
  21. [[[saravanan selvam said...

    கன்னடாவில் படத்தின் பெயர் இராட்சசன் இல்லை. படத்தின் பெயர் "அட்டகாச". படத்தின் ஆரம்பத்திலயே போட்டு விட்டார்களே படம் வீரப்பனை பிடிக்க கஷ்டபட்ட போலீஸ்காரர்களுக்கு எடுக்கப்பட்ட படம் என்று.]]]

    என்னிடத்தில் இப்படிச் சொன்னார்கள். அதை நானும் நம்பிவிட்டேன். தகவலுக்கு நன்றிகள் நண்பரே.. தவறுக்கு மன்னிக்கவும்..!

    [[[ஒரு படத்தில் ஒருவனது வாழ்கையை பற்றி முழுவதும் சொல்லுவது இயலாத காரியம். நீங்கள் சொன்னது போல படைப்பாளிகளுக்கு இங்கே முழு சுதந்திரம் இல்லை.]]]

    புரிந்து கொண்டமைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  22. [[[வவ்வால் said...

    அண்ணாச்சி, முத்துலஷ்மி தடை கேட்டதில் என்ன தப்பு? மனைவி கேட்க உரிமை உண்டு? சும்மா தமிழ் இயக்கம், இந்து, அவன், வன்னியன்னு சொல்லிக்கிட்டு யாரோ கேட்டால் தப்பு? ஏன் சொல்கிறேன் என்றால் உரிமை உள்ளவர்களுக்கே தடை கேட்க உரிமையுண்டு. மற்றவர்கள் கேட்டால் அது வேறு காரணம்.]]]

    நானும் தப்புன்னு சொல்லலையே..? முன்பே பேசி அனுமதி வாங்கியிருக்கலாம்னுதான் சொல்றேன்..!

    [[[ஆனால் உண்மைய சொல்லலைனு இப்போ ரொம்ப வருத்தப்படும் நீங்கள் விஷ்வரூபத்தில உண்மையே சொல்லலையேனு இந்தளவுக்கு வருத்தப்பட்டாப்போல தெரியலை:-))]]]

    எனக்குத் தெரிஞ்சு விஸ்வரூபம் தலிபான்களின் உண்மைக் கதைன்னு கமல் சொல்லலியே..? சொல்லியிருந்தால் வேறு மாதிரியாகத்தான் எழுதியிருப்பேன்..!

    [[[நான் சொன்னாப்போல லோகநாயகருக்கு கச்சேரிய வச்சு இருக்கேன், முடிஞ்சா பாருங்க.]]]

    அவசியம் வர்றேன்..! வருகைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  23. [[[ஜீவா பரமசாமி said...

    இந்த விளம்பரத்தை பார்க்கும்போதே இதைத்தான் எதிர்பார்த்தேன். அதெப்படி நம்ம ஊரில் உண்மையான வரலாறு? இவய்ங்க எப்பயுமே இப்படிதானே.]]]

    நாமதான் உண்மையான ஜனநாயகவாதிகளாம்.. வெக்கமில்லாம வெளில சொல்லிக்கிட்டிருக்காங்க..!

    ReplyDelete
  24. [[[k.rahman said...

    பொதுவாக எல்லா கம்மேன்ட்களுக்கும் விடாமல் பதில் அளிப்பீர்கள். வினோதினி மரணத்தில் வந்த கமெண்டுகலை கண்டு கொள்ளவில்லை? ஏன்? தமிழ் சினிமா தங்களால் முடிந்ததை அளவுக்கு செய்ற சமுக சீரழிவை பத்தி எழுத புடிக்கலையா? இவ்ளோ பட விமர்சனம் செய்ற நீங்க சினிமா என்ற பேர்ல பொருக்கிங்களை ஹீரோவா காற்றது பத்தி ஒரு தனி பதிவே போடணும். அப்படி போட புடிக்கல, செய்யும் தொழில்தான் தெய்வம் அதை என்னால விமர்சனம் பண்ண முடியாதுன்னு நினைச்சா சமுதாயதுல நடக்கறத விஷயத்தை பத்தி இப்படி பண்ணிட்டாங்களே பாவிங்கன்னு உணர்ச்சி வசப்பட்டு எதுவும் பதிவு போடாதிங்க. காலத்துக்கும் சினிமா விமரிசனமே மற்ற பதிவர்கள் மாதிரி எழுதிட்டு இருங்க. நான் ஏன் கேட்க போறேன்?]]]

    ஒரு இறப்பு பதிவில் போய் மறுபடியும் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கிட்டே இருக்கணுமான்னு யோசிச்சேன்.. அதான் போடலை..!

    மற்றபடி தமிழ்ச் சினிமாக்கள் பற்றிய செய்திகளில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு.. முழுக்க, முழுக்க சினிமாதான் கெடுத்தது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது..! ஒட்டு மொத்தமாக மீடியாக்கள் மூலம்தான் இது பரவியது என்பது மட்டுமே உண்மை.. வழக்கு எண் படத்திற்கு முன்னாடியெல்லாம் தமிழ்நாட்டில் ஆசீட் வீச்சே நடக்கவில்லையா..? யோசிச்சுப் பாருங்க..!

    ReplyDelete
  25. //முழுக்க, முழுக்க சினிமாதான் கெடுத்தது//

    அப்படி யாரும் சொல்லல. ஆனா கணிசமான அளவு இருக்கு. உலகத்திலேயே மூன்று முதல்வர்கள் ஒரு தொழில் துறையில் இருந்து வரும் பொது அதில் சினிமா படம் இடுபவர்கள் தான் என்ன சொல்கிறோம், செய்கிறோம் என்று இன்னமும் பொறுப்போடு இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்.

    ReplyDelete
  26. அந்த அப்பாவி கிராமத்து மக்களுக்கு போலிஸ் செய்த கொடுமைகளை நேரில் , தினமும் பார்த்தவர்கள் நாங்கள்.நல்ல உடல்கட்டுள்ள கிராமத்து பெண்கள் கைது செய்யப்பட்டு வருவார்கள் ஒரு வாரத்தில் அத்தனை போல்சாரின் உடல்பசிக்கு விருந்தாகி நைந்த செளையாகி நடக்க கூட முடியாத நிலை வந்தவுடன் கிராமத்தில் கொண்டுபோய் தூக்கி வீசிஎரியப்படுவார்கள்.வீரப்பன் செய்த கொலைகள் கண்டிப்பாக தவறுதான்.ஆனால் போலிஸ் செய்த அராஜகம் ?

    ReplyDelete
  27. அந்த அப்பாவி கிராமத்து மக்களுக்கு போலிஸ் செய்த கொடுமைகளை நேரில் , தினமும் பார்த்தவர்கள் நாங்கள்.நல்ல உடல்கட்டுள்ள கிராமத்து பெண்கள் கைது செய்யப்பட்டு வருவார்கள் ஒரு வாரத்தில் அத்தனை போல்சாரின் உடல்பசிக்கு விருந்தாகி நைந்த செளையாகி நடக்க கூட முடியாத நிலை வந்தவுடன் கிராமத்தில் கொண்டுபோய் தூக்கி வீசிஎரியப்படுவார்கள்.வீரப்பன் செய்த கொலைகள் கண்டிப்பாக தவறுதான்.ஆனால் போலிஸ் செய்த அராஜகம் ?

    ReplyDelete
  28. [[[k.rahman said...

    //முழுக்க, முழுக்க சினிமாதான் கெடுத்தது//

    அப்படி யாரும் சொல்லல. ஆனா கணிசமான அளவு இருக்கு.]]]

    இதை நானும் ஒத்துக்குறேன்..!

    [[[உலகத்திலேயே மூன்று முதல்வர்கள் ஒரு தொழில் துறையில் இருந்து வரும்பொது அதில் சினிமா படம் இடுபவர்கள்தான் என்ன சொல்கிறோம், செய்கிறோம் என்று இன்னமும் பொறுப்போடு இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன். ]]]

    எனது கருத்தும் இதேதான்.. ஒரு சில பள்ளிகளில் நடக்கும் அசிங்கங்களை போலத்தான் இதுவும் நடக்கிறது..! பல பொறுப்பானவர்களின் திரைப்படங்களால் ரசிகர்களின் மனம் இங்கே பல முறை பக்குவப்பட்டிருக்கிறது..!

    ReplyDelete
  29. [[[pallavan said...

    அந்த அப்பாவி கிராமத்து மக்களுக்கு போலிஸ் செய்த கொடுமைகளை நேரில், தினமும் பார்த்தவர்கள் நாங்கள். நல்ல உடல்கட்டுள்ள கிராமத்து பெண்கள் கைது செய்யப்பட்டு வருவார்கள். ஒரு வாரத்தில் அத்தனை போலீசாரின் உடல் பசிக்கு விருந்தாகி நைந்த செளையாகி நடக்ககூட முடியாத நிலை வந்தவுடன் கிராமத்தில் கொண்டுபோய் தூக்கி வீசி எரியப்படுவார்கள். வீரப்பன் செய்த கொலைகள் கண்டிப்பாக தவறுதான். ஆனால் போலிஸ் செய்த அராஜகம் ?]]]

    இதைத்தான் தட்டிக் கேட்க நமக்கு யாருமே இல்லாத நிலைமை..! எல்லா அரசியல்வியாதிகளும் ஓட்டுக்காக அவ்வப்போது கூட்டணி சேர்ந்து, எதிர்த்து தங்களது சுயலாபத்தை மட்டுமே பெருக்கிக் கொண்டார்களே தவிர.. இந்த அப்பாவிகளைப் பற்றி யார் சிந்தித்தது..?

    ReplyDelete