31-01-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
"யார், யாருக்கோ சாவு வருது..!!!" - குறிச்சு வைச்சுக்குங்க.. யாருக்குன்னு கடைசியா சொல்றேன்..!
ஜனநாயக ரீதியில் தனக்கு ஆட்சி நடத்தவே தெரியாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் ஜெயலலிதா.! இவரது பாஸிஸ, அராஜக அரசியலை எதிர்த்தும், இஸ்லாமிய அமைப்புகள் என்று சொல்லிக் கொள்ளும் சில ரவுடிக் கும்பல்களையும் எதிர்த்து இப்போதுவரையிலும் சட்டத்தின் துணை கொண்டு மட்டுமே போராடி வரும் கமல்ஹாசன் என்னும் பிரியத்துக்குரிய கலைஞனுக்கு எனது சல்யூட்..!
அரசியல் வஞ்சத்தை அரங்கத்தில் நேரிடையாக நிறைவேற்றுவதில் ஜெயலலிதாவுக்கு நிகர் அவரேதான்..! வலம்புரி ஜான் என்னும் மதிப்புமிக்க எழுத்தாளரை அவமரியாதை செய்ய வேண்டி, அவர் பெற்ற மகள்கள் மூலமாகவே அவர் மீது கற்பழிப்பு வழக்கை பதிவு செய்ய வைத்த உத்தமத் தலைவி இவரே என்பதால் இது மாதிரியான அரசியல் அதிகாரத் திமிரில் ஆடுவது இவருக்கு ஒன்றும் புதிதல்ல..!
ஆனால் இப்போது இவர் எடுத்திருக்கும் ஆட்டம்தான் கொஞ்சம் புதுசு. ஒரு பக்கம் தனது தலை மீது தொங்கிக் கொண்டிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு.. அதில் இருந்து தப்பிக்க வேண்டி தனது அனைத்து சக்தியையும் ஒருமனதோடு செலுத்திக் கொண்டிருக்கும் ஆத்தாவுக்கு கூடுதலாக கிடைத்துள்ள இணைப்பு வசதி வரும் பொதுத் தேர்தல்தான்..!
இதில் 40-க்கு 35 தொகுதிகளையாவது முழுமையாகப் பெற்றுவிட்டு, இதன் மூலம் மத்தியில் தனது ஆதரவில்லாமல் புதிய பிரதமர் உருவாக முடியாது என்னும் சூழலை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒருவேளை தானே பிரதமராகலாம்.. அல்லது பெங்களூர் கோர்ட் சிக்கல்களை உடைத்தெறியும் அளவுக்கு நட்பான ஒருவரை கொண்டு வர செய்யும் உத்தியை துழாவிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா..! இதற்கு இப்போதைக்கு அவருக்குத் தேவை ஒட்டு மொத்த தமிழகத்தின் ஆதரவு.. ஏற்கெனவே மின்வெட்டு பிரச்சினையில் மக்கள் ஆதரவு அதோ கதியாக அந்தரத்தில் இருக்க.. போதாக்குறைக்கு காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடகமும், காங்கிரஸும் செய்யும் தில்லாலங்கடி வேலையினால் விவசாயிகளின் வாயில் தினமும் வெந்து போகும் வெந்தயமாக தான் இருப்பதும் ஆத்தாவுக்கு தெரிந்துதான் இருக்கிறது..! ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு வித்தியாசத்தை கூட்டியோ, குறைத்தோ வெற்றி தோல்விக்கு வழி வகுப்பது சிறுபான்மையினரான இஸ்லாமிய பெருமக்கள் என்பதை தாத்தாவும், ஆத்தாவும் அறிந்துதான் வைத்திருக்கிறார்கள்..!
இவர்களது ஆதரவை ஒட்டு மொத்தமாக கைப்பற்ற என்ன வழி என்று யோசனையில் தானாகவே வந்து சிக்கியிருக்கிறது விஸ்வரூபம். கூடவே ஜெயல்லிதாவின் இயல்பான கோபம், ஆவேசம், பழி வாங்கும் உணர்வுகளுக்கு ஏற்ப சேனல் ரைட்ஸ் விவகாரம் வேறு வெடித்து திசை திரும்பி விஜய் டிவிக்கு போய்விட.. இந்தக் கோபமும் ஒன்று சேர்ந்து இப்போது ஆத்தாவின் நேரடி உத்தரவில்.. அவரது கண் அசைவில்தான் கமல்ஹாசன் என்னும் கலைஞன் போராடிக் கொண்டிருக்கிறார்..!
கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று சத்யம் தியேட்டரில் தனது விஸ்வரூபத்தை பதிவு செய்திருக்கும் புதிய தொழில் நுட்ப முறையான ஆரோ 3-டி முறையைப் பற்றி பத்திரிகையாளர்களுக்கு விளக்கிச் சொல்லிவிட்டு அவசரம், அவசரமாக கோட்டைக்கு ஓடோடிச் சென்று ஆத்தாவின் முன்பு பவ்யமாக உட்கார்ந்து எழுந்த வந்த கமலை நினைக்கும்போது அன்றைக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது..! அவர் எப்போதும் வருடாவருடம் சந்திக்கும் கருணாநிதியைக் கூட அன்றைக்கு அவர் சந்திக்கவில்லை..!
ஜெயா டிவியுடன் சேனல் ரைட்ஸுக்காக ஒப்பந்தம் போட்டு முடித்து கையெழுத்தாகும் முன்பேயே டிடிஹெச் அறிவிப்பை கமல் வெளியிட்டபோது அவர்களும்தான் சற்று சங்கடப்பட்டார்கள். ஆனாலும் மூன்று நகரங்களில் நடந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வேண்டிய அனைத்து செலவுகளையும் செய்து அதனை தங்களது தொலைக்காட்சியில் வெளியிடவும் செய்தார்கள். பின்பு எப்போது பிரச்சினை துவங்கியது..?
சின்னப் பயல் சிதம்பரத்தை ஆத்தாவுக்கு எப்போதுமே பிடிக்காதுதான்.. இருவருக்குமே நன்கு படித்தவர்கள் என்ற திமிரும்.. இயல்பான ஈகோவும் இன்றுவரையில் இருக்கத்தான் செய்கிறது.. ஒரு விழாவுக்கு அழைத்தால் போனோம்.. வந்தோம் என்றெல்லாம் இல்லாமல் ரஜினியை போலவே அன்றைக்கு ரொம்பவே சிதம்பரத்திற்கு ஜோஸியம் பார்த்துவிட்டார் கமல்.. அரங்கம் நிரம்பி வழிந்து தரையில் உட்காரக்கூட இடமில்லாத நிலையில் இருந்த, அந்தக் கூட்டத்தைப் பார்த்து வார்த்தைகள் ஸ்லிப்பானதுபோல் கமல் பேசிய பேச்சுக்கள்தான் அதன் பின்னான இன்றுவரையிலான தரங்கெட்ட சூழலுக்கு காரணம் என்று யூகிக்கவும் முடிகிறது..!
விஸ்வரூபம் பற்றிய சர்ச்சைகள் பெரிதும் வந்து கொண்டிருந்த நேரத்தில், டிடிஹெச் சமயத்திலேயே இந்த முஸ்லீம் பிரச்சனையும் எழுப்பப்பட்டது..! ஆனால் “படத்தில் ஒன்றுமே இல்லை.. படம் பார்த்த பின்பு குற்றம் சொல்பவர்கள் அண்டா அண்டாவாக பிரியாணிதான் சாப்பிட வேண்டி வரும்..” என்றுதான் கமல் சொல்லியிருந்தார். அரசின் நடவடிக்கைகள் நியாயமாக, நடுநிலையாக இருக்கும் அவர் அப்போது பெரிதும் நம்பியிருந்தார்..!
அந்த நம்பிக்கையில் மண்ணையள்ளிப் போட்டு, தான் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்படி இன்றைக்கு விஸ்வரூபத்தை தமிழ்நாட்டில் திரையிட விட மாட்டேன் என்ற சபதத்தையும், வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வர வேண்டும் என்றவரை புரட்சித் தலைவிக்கு நன்றி என்றும் சொல்ல வைப்பேன் என்ற ஆணவச் செருக்கில் இன்றைக்கு தனது அராஜகத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருக்கிறார் ஆத்தா..!
தொடர்ந்து இவைகளையே பேசுவதற்கும், எழுதுவதற்கும், படிப்பதற்கும் எரிச்சலாகத்தான் உள்ளது. ஆனால் பேசாமலும், எழுதாமலும் இருக்கத்தான் முடியவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டிருப்பவர் நான் பிறந்து வளர்ந்த காலத்தில் இருந்தே என்னை மகிழ்வித்தவர்.. என் கூடவே பயணப்பட்டவர்.. என் துக்கத்தில் பங்கு கொண்டவர்.. என்னை பண்படுத்தியவர்.. எனக்குச் சிலவற்றைச் சொல்லிக் கொடுத்தவர்.. என்றெல்லாம் பல முகங்களைக் கொண்ட ஒரு நல்ல கலைஞனாக இருப்பதினால் என்னுடைய இயலாமை.. அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமே என்ற ஆதங்கமே மீண்டும், மீண்டும் இது பற்றி எழுத வைக்கிறது..!
முஸ்லீம் அமைப்பினர் சொல்லும் தங்கள் மனம் புண்பட்டிருக்கிறது என்பதையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கதை நடப்பது ஆப்கானிஸ்தானில்.. அங்கே இருப்பவர்கள் முஸ்லீம்கள்.. தாலிபான்கள் தீவிர முஸ்லீம்கள்.. இஸ்லாத்தை பரப்புபவர்கள்..! இவர்களைக் காட்டும்போது அவர்கள் குரான் படிப்பது போலவும், அதற்குப் பிறகு போர்க்களத்தில் பணியாற்றுவது போலவும் காட்டத்தான் வேண்டும். எவ்வளவு போர்க் காலத்திலும் ஐந்து வேளை தொழுகையை அவர்கள் கைவிட்டதில்லை என்று பல இடங்களில் படித்திருக்கிறேன்.. இதில் தொழுகையை காட்டுகிறார்கள்.. குரானை காட்டுகிறார்கள்.. அப்புறம் துப்பாக்கியையும் காட்டுகிறார்கள்.. சுடுவதையும் காட்டுகிறார்கள் என்று சின்னத்தனமாக ஒப்பாரி வைப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல..!
இந்திய இஸ்லாமியர்களைப் பற்றி படத்தில் எதையும் அவர் குறிப்பிடவில்லை என்று படம் பார்த்தவர்கள் சொல்லிவிட்டார்கள்.. ஆப்கான் தாலிபான்களை பற்றி கூறினால், படமெடுத்தால், இங்கே உள்ளவர்களுக்கு ஏன் வலிக்கிறது என்றுதான் தெரியவில்லை. அமைதியே உருவான புத்தரின் அந்த மகா வடிவத்தை.. அற்புதமான கலைச் சிற்பத்தையே தங்களது மார்க்கத்துக்கு எதிரானது என்று சொல்லி குண்டு வைத்து இடித்த இந்த உத்தமர்களை விமர்சிக்கக் கூடாது என்றால் இது சிரிப்பாக இல்லை..?
பகவத்கீதை, குரான், பைபிள் - இந்த மூன்றுமே படிப்பதற்காக மட்டுமே இருப்பவை.. இவற்றை வைத்துக் கொண்டு வேறு என்ன செய்வது..? தலகாணிக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ளலாம்..! இதில் இருக்கும் கதைகளை படித்துவிட்டு இது மாதிரி நம்மால இருக்க முடியாது.. ஆனால் இருக்கணும் என்று நினைக்கலாம்..! ஆனால் இதையே உயிரைவிட பெரிசாக நினைப்பதெல்லாம் அவரவர் நிலைப்பாடு.. விருப்பம்.. இதனை அவரவர்கள் தங்களது வீட்டிற்குள் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.. தெருவுக்கு வந்துவிட்டால் பக்கத்து வீட்டில் வேறொரு இந்தியன் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு தனது விருப்பத்தை ஓரங்கட்டுவதுதான் சிறந்த மதச் சார்பின்மை..!
குண்டு வைக்கும்போது குரானை காட்டுகிறார்கள்.. முஸ்லீம்களை காட்டுகிறார்கள். இதனாலேயே முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற பொருளாகிவிடுகிறது என்கிறார்கள்..! நானே இதனைப் பற்றி பல முறை, பல சினிமா விமர்சனங்களில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் அதனைக் குறிப்பிட முடியாமைக்குக் காரணம் கதையின் களன்தான்..! ஏன் முஸ்லீம்களில் திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கற்பழித்தவர்கள், கொலைகாரர்கள் யாருமே இல்லையா..? அனைவருமே ஒழுக்கமாகத்தான் வாழ்கிறார்களா என்ன..?
தமிழகத்து சிறைகளில் குண்டு வெடிப்பு கைதிகளைத் தவிர மற்ற பிரச்சினைகளிலும் முஸ்லீம்கள் கைதாகியிருக்கிறார்களே.. வாராவாரம் திருட்டு விசிடி பிரச்சினையில் கைதாகுபவர்களில் 99 சதவிகிதத்தினர், முஸ்லீம்களாத்தான் இருக்கிறார்கள்..! ஒருவரைக் குறிப்பிட்டால், அந்த சமூகத்தையே சொல்வது போலாகிவிடுமா..? அப்படிப் பார்த்தால் இதுவரையில் வந்த எத்தனையோ தமிழ்த் திரைப்படங்களில் கற்பழிக்கும் காட்சிகளில் நடித்தவர்களில் 99 சதவிகிதத்தினர் இந்து பெயர்கள் கொண்ட வில்லன்களே.. அப்படியனால் அனைத்து இந்துக்களும் கற்பழிக்கும் ஆசை கொண்ட வெறியர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா..?
இது சினிமா.. இரண்டரை மணி நேர ஒரு மாயாஜாலத்தை.. ஒரு கற்பனைக் கதையை.. ஒரு இயக்குநர் தனது படைப்புத் திறமையினால் நடந்தது போல் கொண்டு வந்து காட்டுகிறார்..! நிஜத்தில் நடக்காததை.. அல்லது நடந்ததை.. நாம் உணராததை.. நம் கண் முன்னே காட்டுவதற்குப் பெயர்தானே படைப்பு.. அவன்தானே படைப்பாளி.. இவனை இந்தக் கதையைத்தான் படமாக்க வேண்டும்.. அந்தக் கதையை இப்படி எடுக்கக் கூடாது என்றெல்லாம் தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவனுக்குக் கொடுத்திருக்கும் கருத்துரிமை, பேச்சுரிமையை தடை செய்வது போலாகாதா..?
ஒருவரின் கருத்து மற்றவருக்கு கேலியாக இருக்கலாம்.. இன்னொருவருக்கு முட்டாள்தனமாக இருக்கலாம்.. அது அவரவர் விருப்பம்.. இதில் தனி மனித தலையீடு இருக்கவே கூடாது..! மேலே சொன்னபடி குரானை என்னிடம் கொடுத்தால் நான் தலைக்கு வந்து தூங்குவேன்.. கீதைக்கும் இதே கதிதான்.. ஆனால் ஒரு சிலர் அதனை அட்டை டூ அட்டை படிப்பார்கள்.. சிலர் அதனை பரப்புரையே செய்வார்கள்.. ஆனால் அவர்கள் செய்வதுதான் சரி..? நானும் அதைத்தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி..?
இதுவரையிலும் வந்த எத்தனையோ சினிமாக்களில் இந்து கடவுள்களை கேலியாகவும், கிண்டலாகவும் செய்து எத்தனையோ காட்சிகள் வந்திருக்கின்றன.. யாரும் இது பற்றி கண்டு கொண்டதில்லை.. சில வேலை வெட்டியில்லாத இந்து அமைப்புகள் தலைதூக்கும்வரை..! மக்களுக்குத் தெரியும்.. இது கிண்டல்தான் என்று.. இப்படியெல்லாம் கிண்டல் செய்தால் முருகன் வேல் வைச்சு கண்ணைக் குத்துவான் என்றோ.. சிவன் சூலாயுதத்தைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவான் என்றோ அவர்கள் நினைப்பதில்லை.. இவ்வளவு ஏன்..? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டிதொட்டியெங்கும் ஓடிக் கொண்டிருந்த பிட்டு படங்களின் தயாரிப்பாளர்களில் பெரும்பாலோர் தங்களது பட நிறுவனத்திற்கு லஷ்மி மூவிஸ், முருகன் பிலிம்ஸ் என்ற ரீதியில் கடவுளர் பெயர்களைத்தான் வைத்திருந்தார்கள்..! தொழில் வேறு.. பக்தி வேறு என்பது அவர்களது அபிப்ராயம்.. இதனால்தான் இப்போதும் சென்னையில் மாநகராட்சியின் கக்கூஸ்களை ஏலத்தில் எடுத்தவர்கள்கூட கக்கூஸ் வாசலில் திருப்பதி பெருமாளின் படத்தை வைத்திருக்கிறார்கள்..
“ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருக்கு. எங்களுக்கு இல்லை. இஸ்லாமும், குரானும் எங்களுக்கு உயிர் போல..” என்னும் அன்பர்கள், அதனைத் தாங்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் நியாயமும் கூட..! நாங்கள் யாரும் படம் பார்க்க வாருங்கள் என்று யார் கையையும் பிடித்திழுக்கவில்லை.. எப்போதும் போலவே ஒரு சராசரி சினிமா ரசிகன், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டர் வாசலிலேயே பிடித்திருந்தால் பிடித்தது என்றும், இல்லையென்றால் உதட்டைப் பிதுக்கிவிட்டும் அடுத்த வேலையைப் பார்த்து போய்விடுவான்..!
இந்த ஒரு படத்தை பார்த்து முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று நினைக்க இங்கே யாரும் முட்டாள்கள் இல்லை..! அப்படி நினைத்திருந்தால் இப்போதுபோல் முஸ்லீம் பெருமக்கள் தமிழகத்தில் இந்த அளவுக்கு நிம்மதியுடன் வாழ முடியுமா..?
அரசியல்வியாதிகள் எங்கே புகுந்தாலும் அது உருப்படாது என்பதற்கு இந்த அமைப்புகளும் ஒரு உதாரணம்..! குரூப் குரூப்பாக பிரிந்து நிற்கும் தலைவர்கள்.. தங்களது சுய லாபத்துக்காக.. அடுத்தத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. அணியில் சேர துடிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்.. எப்படியாவது கூட்டணி வைத்து எம்.எல்.ஏ.வாகிவிட வேண்டும்.. எம்.பி.யாகிவிட வேண்டும் என்று நினைக்கும் கொள்ளையர்கள்தான் இப்போது அப்பாவி முஸ்லீம்களை முன் வைத்து இந்தப் பிரச்சினையை இழுத்துச் செல்கிறார்கள்.! என்னதான் தலை, தலையாய் அடித்து கூப்பாடு போட்டாலும் ஆத்தாவைவிட்டால் தாத்தா.. தாத்தாவைவிட்டால் ஆத்தா என்றே தேர்வு செய்து வரும் பொதுமக்களில் ஒரு பிரிவினரான இஸ்லாமிய பெருமக்களில் ஒரு சிலரும் இவர்களுக்கு ஆதரவளிப்பது அவர்களது அறிவீனமே..!
இவர்களது எதிர்ப்பை நான் தவறென்று சொல்லவில்லை. இவர்களது கருத்துரிமையும், பேச்சுரிமையும் கமலுக்கு உள்ளதுபோலவே இருக்கும்தான். ஆனால் அதனை இவர்கள் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்..? தியேட்டர்கள் முன் ஓரிடத்தில் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் செய்யலாம்.. உண்ணாவிரதம் இருக்கலாம்.. கோஷங்கள் எழுப்பலாம்.. “இந்தப் படத்தை நாங்கள் எதற்காக எதிர்க்கிறோம்.. புறக்கணிக்கிறோம்..” என்பதை பிட் நோட்டீஸாக அச்சடித்து படம் பார்க்க வரும் ரசிகர்களின் கைகளில் கொடுக்கலாம்.. இதுதான் ஜனநாயக ரீதியிலான ஒரு போராட்ட வழிமுறை.. இதனைவிட்டுவிட்டு “படத்தையே திரையிட விட மாட்டோம்.. உயிரைக் கொடுத்தாவது தடுப்போம்.. ரகளையில் ஈடுபடுவோம்.. தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம்..” என்றெல்லாம் செய்வது ரவுடித்தனம்..! இவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் இந்தச் செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.. விஸ்வரூபத்தில் இவர்கள் இதையே செய்திருக்கலாம்..!
கமல் இன்று முதலீடு செய்திருக்கும் 100 கோடி ரூபாய் அடுத்த வருடம் இதே தமிழ்ச் சினிமாவில் இறக்குமதி செய்யப்பட்டு பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும். 30 ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளர்களைக் கொண்டு, 1 லட்சத்திற்கும் மேலான சார்நிலை தொழிலாளர்களைக் கொண்ட தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் ஒரு போராட்டத்தை இஸ்லாமிய அன்பர்களின் ஆதரவுடன் சில ரவுடிக் கும்பல்கள் இப்படிச் செய்ய நினைப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல..!
கமல்ஹாசனை தவிக்க விட வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் ஜெயலலிதாவின் அரசியல் சூழ்ச்சியில் இஸ்லாமிய அன்பர்களும் சிக்கிக் கொண்டது அவர்களுக்கே தெரியவில்லைபோலும்.. இன்றுவரையிலும் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.. இதுவரையிலும் நான் ஒரு இந்து என்று நினைப்பே வராமல் இருந்த எனக்கு, ஒரு கணத்தில் “இவுங்க மட்டும்தான் சாமி கும்பிடுறாங்களா..? இவங்களுக்கு மட்டும்தான் புத்தகம் இருக்கா..? இவங்களுக்கு மட்டும்தான் பாசம் இருக்கா..? நமக்கெல்லாம் மதம் இல்லையா..?” என்ற ரீதியில் யோசிக்க வைத்துவிட்டார்கள்..! இது என் ஒருவனுக்கு மட்டுமே வந்ததில்லை.. தமிழ்நாட்டில் பெருவாரியான சினிமா ரசிகர்களுக்கு வந்துவிட்டது.. இந்த முட்டாள்தனமான போராட்டத்தினால் இஸ்லாமிய இயக்கங்கள் சாதித்தது இதைத்தான் என்று உறுதியுடன் சொல்லலாம்..!
தன்னுடைய சொத்து முழுவதையும் பணயம் வைத்து ஹாலிவுட் படங்களுக்கு இணையான தொழில நுட்ப நேர்த்தியுடன் ஒரு கலைப்படைப்பை படைத்திருக்கும் கமல் என்னும் கலைஞனை வாழ்த்த உங்களுக்கு மனமில்லாமல் இருக்கலாம்.. அல்லது அது ஒரு கலைத்திறன் சார்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத மூளையும் உங்களுக்கு இருக்கலாம்.. ஆனால் கமல்ஹாசன் என்ற மனிதனுக்கும் தனி கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு என்பதையாவது சற்று சிந்தித்துப் பாருங்கள்..! உங்களது குரான் எப்படி மேம்பட்டது என்று சொல்ல உங்களுக்கு உரிமையுண்டோ, அதே அளவுக்கு அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லவும் அவருக்கும் உரிமையுண்டு..!
நேற்று இரவில் உயர்நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பை பார்த்துவிட்டு உடனுக்குடன் அதனை எதிர்த்து அப்பீல் செய்ய துடியாய் துடித்த இந்த அரசாங்கத்தின் தவிப்பைப் பார்த்தவுடன் “அடப்பாவிகளா..? எம்.ஜி.ஆர். என்ற இதயக்கனி உருவாக்கிய அ.தி.மு.க.வின் பெயரை வைத்துக் கொண்டு தமிழ்ச் சினிமாவை வீழ்ச்சிக்கு கொண்டு போகிறீர்களேடா பாவிகளா..” என்ற என் புலம்பலுக்கு இப்போதுவரையிலும் நல்ல முறையில் தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் ஆத்தா..!
தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வரும் திங்கள்கிழமைக்குள் படத்தை ரிலீஸ் செய்ய நினைத்திருக்கும் கமலின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். உச்சநீதிமன்றமாவது ஒரு கலைஞனின் மனதைப் புரிந்து கொண்டு செயல்பட்டு தீர்ப்பளிக்கும் என்றே நம்புகிறேன்..!
உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகலை உடனுக்குடன் தர விடாமல் இழுத்தடித்து.. வழக்கில் கமலுக்காக ஆஜராகிய எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரது மகனான பி.எஸ்.ராமனை மிரட்டி.. காலையில் தியேட்டர்களில் தவியாய் தவிப்புடன் திரண்டிருந்த ரசிகர்களை போலீஸை வைத்து துரத்தியடித்து.. சில தியேட்டர்களில் போலீஸ் துணையுடன் பெட்ரோல் குண்டுகளை வீச வைத்து.. இந்தக் குண்டுகள் வீசப்பட்ட 15 நிமிடத்தில், அந்தச் செய்தியை வாதிட்டுக் கொண்டிருந்த உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளிடம் புகாராக பதிவு செய்து.. சட்டம் ஒழுங்கு கெட்டு விடும். அதனைக் கட்டுப்படுத்தும் அறிவும், ஆற்றலும் எங்க சி.எம்.முக்கு இல்லவே இல்லை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டு.. பாதிக்குப் பாதி நீதியை அளித்துக் கொண்டிருக்கும் இந்த நீதிபதிகளிடம் மீண்டும் தடை என்று உத்தரவை வாங்கிவிட்டுத்தான் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் ஆத்தாவும், அவருடைய சட்டம் படித்த தொண்டரடிப் பொடியாள்வார்கள்..!
இதே வேகத்தை.. துடிப்பை.. தனது சொத்துக் குவிப்பு வழக்கின் மீதும் செலுத்தி விரைவாக.. ஒரு மாதத்திற்குள்ளாக வழக்கு விசாரணையை முடிக்க வைத்து.. நான் குற்றமற்றவள் என்று நிரூபித்து வெளியே வருவேன்னு சொல்ல இந்தம்மாவுக்கு வக்கில்லை.. அறிவில்லை.. ஆனால் ஒரு நல்ல கலைஞனை அவமானப்படுத்த, அழித்தொழிக்க, மட்டும் துடியாய் துடிக்கும் இந்தக் கேவலமான, வெக்கங்கெட்ட, கேடுகெட்ட அரசியல்தனத்தையெல்லாம் பார்க்கத்தான் வேண்டுமா..? இன்னும் எத்தனை முறைதான் இப்படியே எழுதுவது.. பேசுவது..? இந்தக் கொடுமையையெல்லாம் பார்க்குறதுக்கு பதிலா மேல போய்ச் சேர்ந்தா நிம்மதி கிடைக்மேன்னும் அடிக்கடி எனக்குத் தோணுது.. இதுக்காகத்தான் முதல் வரியில் அந்த வார்த்தைகள்..!