31-12-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வருடத்தின் இறுதி நாளில் பார்த்த சுவையான படம்..! தமிழின் பரீட்சார்த்த முயற்சிகளுக்காக இந்தாண்டு பாராட்டை பெறும் ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படங்களுக்கு அடுத்து இந்தப் படத்தை நிச்சயம் சொல்லலாம்..!
ஹீரோ சிவாஜிதேவ் சினிமாவில் உதவி இயக்குநர். எப்படியாவது இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு கதை பைலோடு தயாரிப்பாளரை தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். சென்னையில் பெரிய தயாரிப்பாளர்களை பிடிப்பதைவிட லோக்கல் ஊர்களில் இருக்கும் சிறிய தொழிலதிபர்களை கவர்ந்து படம் செய்யலாம் என்று நினைத்து நாகர்கோவில் வட்டாரத்தில் தனது தேடுதல் வேட்டையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
சுப்பு அவரது ரூம்மேட். கல்லூரி தோழன். இவருக்கு பணப் பிரச்சினை வந்து அதனால் தற்கொலை அளவுக்கு போகும்போது, சிவாஜிதான் சுப்புவை காப்பாற்றுகிறார். விஷயமறிந்து சுப்புவின் ஊருக்கே அவனை அழைத்து வருகிறார் சிவாஜி. அங்கே சுப்புவின் மாமாவின் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். சுப்புவின் மாமா மகன் ராஜேஷ்யாதவ்.. எப்படியாவது பெரும் பணக்காரனாகிவிட வேண்டும் என்ற குறிக்கோளில் இருப்பவன்.
சுப்பு ஊருக்கு வந்திருப்பதை அறிந்த சுப்புவுக்கு கடன் கொடு்த்து வசூலிக்க முடியாமல் தவிக்கும் எம்.எஸ்.பாஸ்கர் கடைக்கே வந்து சுப்புவைத் தூக்குகிறார். இப்போது இடையில் நுழையும் ராஜேஷ்யாதவ்.. முதல் பொய்யை சொல்ல துவங்குகிறார். சுப்பு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறான். அதனை சிவாஜிதான் டைரக்ட் செய்யப் போகிறான் என்பதுதான் அந்த மகா மகா பொய்.. இதிலிருந்து ஆரம்பிக்கிறது பொய்யின் விளையாட்டு..!
பைசா காசு இல்லாமல் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கி எப்படி சிவாஜி தனது கனவு படத்தை இயக்கி முடிக்கிறான் என்பதுதான் மிச்சம், மீதிக் கதை.. இதில் கிளைமாக்ஸில் வரும் டிவிஸ்ட்டுகள் சொல்லி மாளாது..! நினைக்கவே இல்லை..! இப்படியெல்லாம் திருப்பங்கள் வருமென்று..! எது சினிமா.. எது நிஜம் என்கின்ற குழப்பத்தில் பார்வையாளர்களை சிறிது நேரம் அல்லலோகப்பட வைத்துவிட்டார்கள்..! சினிமாவுக்குள் ஒரு சினிமாவாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் தமிழின் உலக சினிமாக்கள் வரிசையில் நிச்சயமாக இடம் பிடிக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை..!
சிவாஜிதேவ் கொஞ்சம், கொஞ்சமாக நடிப்பில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். இதில் பெரிய அளவுக்கு அடிதடி இல்லை.. காதல் கசமுசாக்கள் இல்லை.. ஆனாலும் காதல் இருக்கிறது..! காதலை எந்தவிடத்திலும் அவர் சொல்லவில்லை. ஆனால் டூயட்டுகள் உள்ளன..! இப்படி எதையுமே லாஜிக் மீறலாக பார்க்க முடியாத அளவுக்கு திரைக்கதையை பின்னியிருக்கிறார் கதை மற்றும் திரைக்கதை ஆசிரியரான எஸ்.ஏ.அபிமன். முதலில் இவருக்கு எனது வாழ்த்துகள்..!
ஷூட்டிங்கின்போது ஒவ்வொரு முறையும் பல பிரச்சினைகள் வந்து குவிந்து கொண்டேயிருக்க டென்ஷனில் அனைத்தையும் சமாளித்து, முடியாமல் கத்தித் தீர்த்துவிட்டு பின்பு தீர்வு நெருங்கும் சமயம், ராஜேஷிடம் சமாதானமாவதுமாக இவரது உதவி இயக்குநர் கேரக்டரை நிஜமாகவே ஹோம்வொர்க் செய்துதான் மெயின் பிக்சரில் நடித்திருக்கிறார் என்று தெரிகிறது..!
ஷூட்டிங்கின்போது ஹீரோவின் தெனாவெட்டை பார்த்து பொறுமுவது.. காட்சிகளில் திருத்தம் சொல்லும்போது ஹீரோவின் சட்டையைப் பிடித்து உலுக்கியெடுப்பது.. கோபத்தின் உச்சிக்கே போய் பேக்கப் சொல்லிவிட்டு ஓடும் காட்சியில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை..
ஹீரோயினாக இருவர். பானு, விஷ்ணு பிரியா. இருவருக்குமே அதிகம் ஸ்கோப் இல்லை.. பார்த்தவுடன் காதல் டைப்பில் விஷ்ணுபிரியா, சிவாஜியின் மீது காதலாவதும்.. 4 வது சீனிலேயே தனது அப்பாவிடம் மரியாதையாக பேசினால்தான் கல்யாணத்துக்கு ஒத்துவார் என்ற ரீதியில் இந்த காதல் டிராக்கை செம ஸ்பீடில் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்..! விஷ்ணு பிரியா அழகாயிருக்கிறார். 2 பாடல் காட்சிகளில் ஆடியிருக்கிறார். அவ்வளவுதான்..
இதேபோல் ‘தாமிரபரணி’ பானு. நடிகையாகவே இதில் நடித்திருக்கிறார். இவருடைய அறிமுகக் காட்சியில் மாடிப் படிக்கட்டில் ஸ்டைலாக நின்று பேசும் அந்த ஒரு காட்சியே இந்தப் படத்தின் இயக்குநரான மனீஷ்பாபுவின் முன் அனுபவத்தைக் காட்டுகிறது..! அந்த இடத்தில் ராஜேஷ்யாதவ் அடிக்கும் டிவிஸ்ட்டு எதிர்பாராதது..! ஆனால் அசத்தல்..! இவரும் இறுதியில் ஒரு டூயட் பாடலை பாடிவிட்டு, படத்துக்கு மங்களம் பாடும்போது சாந்தமாக காட்சியளிக்கிறார்.
பிரபல ஒளிப்பதிவாளரான ராஜேஷ்யாதவ்தான் இதில் முக்கியமான கீ கேரக்டர். இவர்தான் இப்படத்தின் பின்னணியில் இருந்திருக்கிறார். “இந்த ஒரு படத்தோட மரியாதையா நின்னுக்கணும்.. இல்லைன்னா நடக்குறதே வேற..!!” என்று அவருடைய நெருங்கிய இயக்குநர்களால் ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் மிரட்டப்பட்டவர். ஆனாலும் அண்ணன் சசிகுமாரை போல இவரும் முயற்சி செய்தால் கஷ்டப்படாமல் நடித்து சம்பாதிக்கலாம்..!
சுப்புவாக நடித்த ஆதீஷின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸ்.. அதனை இங்கே உடைக்க விரும்பவில்லை. நினைக்கவே இல்லை.. இப்படியிருக்கும் என்று.. ஆனால் அந்த சஸ்பென்ஸை அவர்கள் உடைத்த இடமும் சபாஷ் போட வைக்கிறது.. வெல்டன் டைரக்டர்..!
கிரேன் மனோகருக்கு இப்படத்தில் ரொம்ப நாள் கழித்து வெயிட்டான வேடம்..! பகலில் ஹோட்டல் சப்ளையராகவும், இரவில் தண்ணியடித்துவிட்டு முதலாளியை கலாய்த்துவிட்டு மறுநாள் காலையில் மன்னிப்பு கேட்டு வழியும் நகைச்சுவைத்தனமும் சரி இருக்கட்டும் என்று சொல்ல வைத்த்து. ஆனால் கொஞ்ச நேரம்தான். கறுப்பு பையை மாட்டிக் கொண்டு படத்தின் புரொடெக்ஷன் மேனேஜர் வேலை பார்க்கத் துவங்கியவுடன் இன்னமும் களை கட்டுகிறது ஸ்கிரீன்..! ராஜேஷ், கதையை மாற்றி, மாற்றிச் சொல்லும்போது இவரது மெளனமான ஆக்சனே செம கலகலப்பு..!
இவரைப் போலவே இன்னொரு கலகலப்பு முகம் எம்.எஸ்.பாஸ்கர்.. “ஒரு படத்துல ஹீரோவா நடிக்கப் போறான்.. அது ஹிட்டாகப் போவுது.. 4, 5 படத்துல தொடர்ந்து நடிச்சு பெரிய பணக்காரனாகப் போறான்.. ரசிகர் மன்றங்கள் கூடப் போவது.. அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறான்.. எம்.பி., எம்.எல்.ஏ.வாகக் கூட ஆவான். மினிஸ்டரா இந்த ஊருக்குள்ளாற வரப் போறான்...” என்று ராஜேஷ் ஏத்திவிடும் அளப்பரையை அப்படியே நம்பி திரும்பிப் போகும் அளவுக்கு அப்பாவி கேரக்டர் அவருக்குப் பொருந்துகிறது..! டயலாக் டெலிவரியில் தானும் வடிவேலுக்கு சளைத்தவனில்லை என்பதை இந்தப் படத்திலேயும் நிரூபித்திருக்கிறார் பாஸ்கர்..!
நாகர்கோவில் வட்டாரத்திலேயே அனைத்துக் காட்சிகளையும் படமாக்கியிருப்பதாலும், அதுவும் தான் நடிக்கும் படம் என்பதாலும் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு வழக்கம்போல வண்ணமயம்தான்..! இசைதான் கொஞ்சம் இடிக்கிறது.. பாடல்கள் மனதில் ஒட்டவில்லை என்பது ஒரு வருத்தமான விஷயம்..!
முதலில் இந்த இயக்குநரை ஒரு விஷயத்துக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாங்களே இயக்கவும் செய்வோம் என்ற இயக்குநர்களுக்கு மத்தியில் நல்ல கதை கிடைத்தால் அதனை தான் இயக்குவேன் என்பதை இதில் செய்து காண்பித்திருக்கிறார். இவரைப் பின்பற்றி மற்ற இயக்குநர்களும் சிறந்த கதை, திரைக்கதையாசிரியர்களை உடன் வைத்துக் கொண்டு இயக்கத்தை மட்டுமே தொடர்ந்தால் இது போன்ற சிறந்த படைப்புகள் வரும் வாய்ப்புகள் உள்ளது..! படத்தின் பல காட்சிகளிலும் மெல்லிய நகைச்சுவை இழைந்து ஓடுகிறது.. இந்த நகைச்சுவையை தேனாக ஓட விட்டிருந்தால் இந்நேரம் இப்படம் பெரிய அளவுக்குப் பேசப்பட்டிருக்கும்..!
சிவாஜி-விஷ்ணு பிரியா காதல் டாபிக்கை தவிர படத்தில் மற்றவைகளில் எந்தக் குறையையும் சொல்ல முடியாது. இயக்குநருக்கு முதல் படம் என்பதாலும், நகைச்சுவை காட்சிகளை இயக்கிய அனுபவம் இல்லாததாலும், காமெடி ஸ்கோப் உள்ள அனைத்து காட்சிகளிலும் லைட்டான காமெடிகளே வெளிப்பட்டிருக்கின்றன என்பது இப்படத்தில் நான் கண்ட குறை..! அடுத்த படத்தில் இயக்குநர் இதனை சரி செய்துவிடுவார் என்று நம்புகிறேன்..!
வசனங்களை அண்ணன் கவிதாபாரதி எழுதியிருக்கிறார்..! சினிமா தொடர்பான படம் என்பதால் அதில் பணியாற்றியவரே எழுதினால் நன்றாக இருக்கும் என்று விட்டுக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இதற்கும் அவருக்கு ஒரு பாராட்டு..! கவிதாபாரதியின் வசனங்கள் ஷூட்டிங் காட்சிகளில் இயல்பான நகைச்சுவைக்கும், வேகமான திரைக்கதைக்கும் பெரும் உதவி செய்திருக்கிறது..! வல்லத்து ராஜாவிடம் சிவாஜி வாய்ப்பு கேட்பதும், அவர் பதில் சொல்வதும்.. பானு முதல் முறையாக ராஜேஷிடம் பேசும்போது பேசுகின்ற வார்த்தைகளும் நிச்சயம் முன் அனுபவமாகத்தான் இருக்கும். அவ்வளவு உண்மை அதில் இருக்கிறது..! வெல்டன் கவிதாண்ணே..!
சென்ற வெள்ளியன்று ரிலீஸான இப்படத்தை இன்றுதான் பார்க்க நேர்ந்த்து.. போன வியாழக்கிழமையே இதனை பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருந்தால் ‘கோழி கூவுது’ படத்துக்கு முன்பாகவே இப்படத்தை பிரச்சாரம் செய்திருக்கலாம்..! நல்ல வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது..! படத்தை தயாரிப்பது முக்கியமல்ல.. அதனை விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதுதான் மிக முக்கியமானது.. இப்படம் சம்பந்தப்பட்டவர்கள் எப்படி இதனை மிஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை..!
இருப்பது 3 நாட்கள்.. அதற்குள்ளாக எத்தனை பேருக்கு இப்படம் பற்றி தெரிந்து எப்படி பார்ப்பார்கள் என்று தெரியவில்லை..? எப்படி பார்க்க வைப்பது என்றும் தெரியவில்லை..! ‘ஏவி.எம்.ராஜேஸ்வரி’யில் ‘துப்பாக்கி’யையும், ‘கும்கி’யையும் தூக்கிவிட்டு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தை இப்போது போட்டிருக்கிறார்கள். அதுபோல ஷிப்டிங் முறையில்கூட இப்படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்காரர்கள் முன் வர வேண்டும்..!
சினிமாவுக்குள் சினிமா.. கிளைமாக்ஸுக்குள் ஒரு கிளைமாக்ஸ். படம் முடிந்துவிட்டது என்று எழுந்தால் இன்னுமொரு கிளைமாக்ஸ்.. அட என்று அப்படியே நிற்க வைத்துவிடுகிறார்கள்.. கண்டிப்பாக தமிழ்ச் சினிமாவுக்கு இதுவொரு புதுமைதான்.. இது போன்ற படங்களையும், இயக்குநர்களையும் ஊக்கப்படுத்த வேண்டியதும், பாராட்ட வேண்டியதும் நமது கடமை என்பதால், வாய்ப்பு உள்ள அன்பர்கள் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று இப்படத்தைக் கண்டு களிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..!
நன்றி..