Pages

Sunday, October 14, 2012

மாற்றான் - சினிமா விமர்சனம்

14-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

 ஒரு இயக்குநருக்கு சமூக அக்கறை தேவைதான்.. அதனை தான் இயங்கும் தளத்திலேயே வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் பாராட்டுக்குரியதுதான்.  ஆனால் அது இந்த அளவுக்கு இருக்கணுமா என்று கே.வி.ஆனந்த் தன்னையே ஒரு முறை கேட்டுக் கொள்ளலாம்..!




மரபணு ஆராய்ச்சியாளரான தனது தந்தை குழந்தைகளுக்கான பால் பவுடரில் ஆபத்தானவைகளைக் கலந்து விற்பனை செய்வதைக் கண்டறியும் மகன் சூர்யா, தனது தந்தையின் வியாபார முகமூடியை எப்படி கழட்டியெறிகிறார் என்பதைத்தான் நமது கழுத்தைத் திருகாத குறையாக உட்கார வைத்து கொன்றிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

நிச்சயமாக இந்தப் படத்தில் அயன், கோ போன்று திரைக்கதையில் வித்தை காட்டிய படமில்லை.. சொத்தையாகிப் போன திரைக்கதையை வைத்து எத்தனைதான் நடிப்பைக் கொட்டினாலும் அத்தனையும் வீண்தானே..?  இரட்டை சூர்யாக்கள் கதையே முதலில் இதற்குத் தேவையே இல்லை.. ஒரு சூர்யாவே போதும்..! இடைவேளையின்போது தந்தையின் கோர முகம் தெரிய வர.. அடுத்த பகுதியில் அதனை கிழித்தெறியக் கிளம்பும் சூர்யாவாக கொண்டு போயிருந்தால் தியேட்டரில் சூர்யாவின் ரசிகர்கள் கை தட்டவாவது வாய்ப்புக் கிட்டியிருக்கும்..!

10 பேருக்கு பிறந்தவன்டா என்று கிளைமாக்ஸில் அப்பா சொல்லும் வசனத்தை முன்பே சொல்லியிருந்தால், கொஞ்சமாவது பீலிங்காவது வந்திருக்கும். சாகப் போகும்போது “சங்கரா, சங்கரா” என்ற ரீதியில் சொல்வது படத்திற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை..!  நல்ல ஆராய்ச்சியாளராக இருந்த தான், ஒரு அமைச்சரின் புறக்கணிப்பு.. அரசுகளின் கண்டு கொள்ளாமையால்தான் இப்படி கெட்ட ஆராய்ச்சியாளராக மாறியதாகச் சொல்வது நம்பும்படியாக இல்லை..!

1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகள் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்த நாடுகள் அணியாகப் போட்டியிட்டு மொத்தம் 112 மெடல்களை பெற்று முதலிடம் பெற்றன.. இதில் அதிக பதக்கங்களை வாங்கியது உக்ரைன் நாட்டு அணி. இந்தச் சின்ன விஷயத்தை மையமாக வைத்து எழுத்தாளர்கள் சுபா எழுதியிருக்கும் இந்தக் கட்டுக் கதையை கொஞ்சமும் நம்பும்படியாக கொடுக்கத் தவறிவிட்டார்கள்..!

ஒரு சீரியஸ் மேட்டரை சொல்லும்போது அதில் சிறிதளவாவது லாஜிக் இருக்க வேண்டும்..! உக்ரைன் விளையாட்டு வீரர்கள் சென்னையில் இருந்து சென்ற ஒரு ஆராய்ச்சியாளரின் அறிவுரையினால்தான் பதக்கங்களை வேட்டையாடினார்கள் என்றால் புத்தகத்தில் படிப்பதற்கு ஓகே.. ஆனால் விஷூவலாக பார்ப்பதற்கு நம்பும்படியான காட்சிகள் வேண்டுமே..? இதில் அதனை ச்சும்மா காமெடி காட்சிகள்போல ஜஸ்ட் லைக் தேட் டைப்பில் பேசியே நகர்த்தியிருக்கிறார்கள்..! இதுவும் திரைக்கதையின் தொய்வுக்கு ஒரு காரணமாகிவிட்டது..!

தீம் பார்க் சண்டையின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். அதேபோல் உக்ரைனில் நடைபெறும் சண்டையும் தேறவில்லை..! போதாக்குறைக்கு உக்ரைனில் சூர்யா, காஜலை பாலோ செய்யும் இரண்டு டீம்களையும் அடையாளப்படுத்துவதில் சுணங்கிவிட்டார் இயக்குநர்.. போலீஸ் இன்பார்மர் அங்கே வருவதற்கு என்ன அவசியம் என்றும் தெரியவில்லை..! அடுத்தடுத்து இவர்களுடைய திரைக்கதைக்கு ஏற்றாற்போல் அந்த நாட்டிலேயே உடனுக்குடன் முகவரியைக் கண்டுபிடித்து பேசுவதும், வருவதுமாக காட்சியமைப்பு சின்னப்புள்ளத்தனமாகவே இருக்கிறது..!

அப்பாவின் திசை திருப்பல் கதையைக் கேட்டு கோபப்பட்டு டைனிங் டேபிளை உடைத்தற்கு பதிலாக அப்பாவின் பல்லை உடைத்திருந்தால்கூட ரசிகர்களும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்..!  அந்த ஆவேச கோபத்தைக் கட்டுப்படுத்தி உக்ரைன் போய் நிரூபிக்க அனுப்பி வைத்திருக்கும் இயக்குநரின் மீதுதான் இப்போது கோபம் வருகிறது..!

கிளைமாக்ஸ் சொதப்பல் அதைவிட..! இதற்கெதற்கு குஜராத்..? இவரே சென்னைக்கு வந்து கம்பெனியை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு அப்பனின் திருட்டுத்தனத்தை வெளிப்படுத்தியிருந்தால் திரைக்கதை இன்னும் சூப்பராகத்தான் வந்திருக்கும்..! ம்ஹூம்.. சில வெற்றிகளைப் பெற்றவுடன் நாம் என்ன செய்தாலும், எப்படி கொடுத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று சில இயக்குநர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்..! மிஷ்கின், விஜய் வரிசையில் மூன்றாவதாக இடம் பிடித்துவிட்டார் கே.வி.ஆனந்த்..!

சூர்யாவின் நடிப்பு மென்மேலும் மெருகேறி வருகிறது..! விமலன், அகிலன் நடிப்பில் வித்தியாசம் காட்டும் அளவுக்கு இருக்கும் காட்சிப்படுத்தலில் கஷ்டப்பட்டுத்தான் நடித்திருக்கிறார் சூர்யா.. விமலனைவிடவும் அகிலன் சூர்யாதான் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவர்கள் இரட்டையர்களாக இல்லாமல் இருந்திருந்தாலும் இன்னும் நல்ல பெர்பார்மென்ஸ் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது..! 

பல இடங்களில் அகிலனின் நக்கல் கமெண்ட்டுகள்தான் கொஞ்சமாவது பல்லைக் காட்டும் அளவுக்கு புன்னகைக்க வைத்தது..! போலீஸ் ஸ்டேஷனில் பெண் இன்ஸ்பெக்டருக்கு கடுக்கான் கொடுத்துவிட்டு, அவரையே புலம்ப வைக்கும் அந்தக் காட்சியும்.. காஜலிடம் ஜோடி சேர விமலனுக்கு கிளாஸ் எடுக்கும் தியேட்டர் காட்சியும் ஓகே..!

காஜல் இருந்த தைரியத்தில்தான் படம் முழுக்க உட்கார முடிந்தது..! பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று பார்த்தால் இந்தப் படம் முழுக்கவே காஜல்தான் போஸ்ட்வுமன் வேலையைச் செய்திருக்கிறார்.. அவருடைய கண்களே தனி கதையை பேசுகின்றன..! இந்தப் பொண்ணுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தமான நடிப்பை வாங்கும் அளவுக்கு கேரக்டர்கள் இனிமேலாச்சும் கிடைக்கட்டும்..!

இங்கேயும் ஒரு கங்கை தாராவை கடைசியாக இந்தக் கோலத்தில்தான் பார்க்க வேண்டுமா..? ஒரு சூர்யாவை கொன்றுவிடலாம் என்று டாக்டர்கள் கொடுக்கும் அட்வைஸை தாரா அரைகுறை தூக்கத்தில் கேட்பது போன்ற அந்த ஒரு காட்சியை யாராவது உதவி இயக்குநர் இயக்கினாரா என்ற சந்தேகம் வருகிறது.. இப்படித்தானா பக்கென்று இராம.நாராயணன் ஸ்டைலில் கதையை நகர்த்துவது..? தோடா ராமா..?

சூர்யாவின் அப்பாவாக நடித்தவருக்கு வில்லத்தனம் பொருத்தமாகவே இருக்கிறது.. உக்ரைன் பெண்ணின் கேமிரா பேனாவை பிடிங்கிக் கொண்டு வார்த்தைகளால் விளாசும் அந்தக் கோபக்கார மனுஷனை அப்போது சந்தேகமே பட முடியவில்லை.. தாராவுடன் சண்டையிட்டு இன்னும் நல்லா சாப்பிடு என்று கோபப்படும் காட்சியிலும், டைவர்ஸ் கேட்டு தாரா செல்லும் அவளது அண்ணன் வீட்டிற்கே சென்று சமாதானப்படுத்தும் காட்சியிலும் தான் நல்லவன் என்ற அந்தத் தொனி குறையாமலேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்..!

5 கேரக்டர்களை மெயினாக வைத்து படம் முழுக்க உழைக்க வைத்திருக்கும் இயக்குநரின் நம்பிக்கையை பாராட்டத்தான் வேண்டும்..! ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வார்த்தைகளைக் காணாமல் இசை மட்டுமே காதில் ரீங்காரித்தது..! நார்வே நாட்டில் ஆடிப் பாடும் அந்த ஒரு காட்சியில் ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன்  தனித்து நிற்கிறார்.. அவ்வளவே..!  எதையாவது செய்து படத்தைத் தூக்கி நிறுத்தவும் என்று அனைத்தையும் எடிட்டரிடம் தள்ளிவிட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.. அவராலேயும் ரசிகர்களின் ஓட்டத்தை நிறுத்த முடியவில்லை.. முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும்போதே பேஸ்புக்கில் சில சுவையான பின்னூட்டங்கள் வந்தவண்ணம் இருந்தன..!

பாட்டு சீனில் சூர்யா அறிமுகம்  - விசில் சத்தம்..

கிச்சுகிச்சு மூட்டுறாங்கப்பா..

மயான அமைதி..

இடைவேளையாம்.. ஐயோ இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்காம்ல..

நல்லவேளை காஜலுக்கு மட்டும் உக்ரைன் மொழி தெரியலை.. நாம செத்தோம்..!

மீண்டும் மயான அமைதி..

கை தட்டுவது எப்படி..? மறந்து விட்டார்கள் ரசிகர்கள்..!

அப்பாடி.. ஒரு டான்ஸ் ஆரம்பிச்சிருச்சு. குட்டு நைட்டு..!

இந்தியா வந்தாச்சு.. உடனேயே குஜராத்துக்கு கிளம்பிட்டோம்..!

எலிக் குகை பார்த்ததுண்டா..? நாங்க கண்ணால பார்க்குறோம்..!

ஐ ஜாலி.. படம் முடிஞ்சிருச்சாம்.. கெளம்பிட்டோம் வீட்டுக்கு..!

- இப்படி வகை, வகையாக போட்டிருந்த கமெண்ட்டுகளெல்லாம் முதலில் எரிச்சல்படுத்தினாலும், நாமளே படம் பார்க்கும்போது இதையேதான் சொல்லணும்னு தோணுச்சு..!

ஒரு சிறப்பான சமூக நோக்குடன் கூடிய இந்தக் கதையை வழக்கமான பாணியிலேயே கொண்டு சென்று கமர்ஷியல் கம்மர் கட்டாக கொடுத்திருக்கலாம்.. இயக்குநரின் திரைக்கதை சொதப்பல் படத்தை வெற்றிப் படம் என்று சொல்ல முடியாமல் தடுக்கிறது..! அடுத்தப் படத்தில் அண்ணன் கே.வி.ஆனந்த் நிச்சயம் ஜெயிப்பார் என்றே நம்புகிறேன்..!

20 comments:

  1. படம் திரை அரங்கை விட்டுத்
    தூக்கின பிறகு உங்க
    விமர்சனம் வருது

    ReplyDelete
  2. //அடுத்தப் படத்தில் அண்ணன் கே.வி.ஆனந்த் நிச்சயம் ஜெயிப்பார் என்றே நம்புகிறேன்..!//

    அது கெடக்குது ஒரு பக்கம். படம் பாத்தவன் காசு போனது போனதுதான....!!

    ReplyDelete

  3. ஒன்று மணிரத்னம், கௌதம் டைப்பாக இருக்க வேண்டும் அல்லது ஹரி டைப் இயக்குனராக இருக்க வேண்டும். கே.வி.ஆனந்துக்கு கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை.

    ReplyDelete
  4. ஏனிந்த அறச்சீற்றம்...???

    ReplyDelete
  5. [[[ராம்ஜி_யாஹூ said...

    படம் திரை அரங்கைவிட்டுத் தூக்கின பிறகு உங்க விமர்சனம் வருது.]]]

    என்ன செய்யறதுண்ணே..? ஆபீஸ் வேலை ஜாஸ்தி..! அதுதான்..

    ReplyDelete
  6. [[[! சிவகுமார் ! said...

    //அடுத்தப் படத்தில் அண்ணன் கே.வி.ஆனந்த் நிச்சயம் ஜெயிப்பார் என்றே நம்புகிறேன்..!//

    அது கெடக்குது ஒரு பக்கம். படம் பாத்தவன் காசு போனது போனதுதான.!!]]]

    இதெல்லாம் நம்மளோட சினிமா வாழ்க்கைல சகஜம் சிவா.. வேற ஒரு படம் வரும் பாருங்க.. கொடுக்குற காசுக்கு மேலேயே நமக்குக் கிடைக்கும்..! நான் ஈ மாதிரி..!

    ReplyDelete
  7. [[[! சிவகுமார் ! said...

    ஒன்று மணிரத்னம், கௌதம் டைப்பாக இருக்க வேண்டும் அல்லது ஹரி டைப் இயக்குனராக இருக்க வேண்டும். கே.வி.ஆனந்துக்கு கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை.]]]

    அவர் எல்லாத்தையும் கலந்து ஒரு மிக்ஸ்டு இயக்குநரா இருக்கணும்னு நினைக்கிறார்..! இந்த முறை சொதப்பியதை மனதில் வைத்து அடுத்த படம் செய்தால் தப்பிப்பார்..!

    ReplyDelete
  8. [[[Philosophy Prabhakaran said...

    ஏனிந்த அறச்சீற்றம்...???]]]

    ரொம்ப ஏமாத்திட்டார் ஆனந்த்.. அதுதான்..!

    ReplyDelete
  9. அவ்வளவு மோசமாவா இருக்குது?? நான் கூட மற்ற விமர்சனங்களைப் பார்த்துவிட்டு அடுத்த சனிக்கிழமை போகலாம்னு நினைச்சேனே? சரி ... வழமையான மாதிரி செய்திடவேண்டியது தான். :)

    ReplyDelete
  10. எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்

    நன்றி

    ReplyDelete
  11. [[[ஹாலிவுட் ரசிகன் said...

    அவ்வளவு மோசமாவா இருக்குது?? நான்கூட மற்ற விமர்சனங்களைப் பார்த்துவிட்டு அடுத்த சனிக்கிழமை போகலாம்னு நினைச்சேனே? சரி. வழமையான மாதிரி செய்திடவேண்டியதுதான். :)]]]

    பார்க்கணும்னா பார்த்திருங்க..! ஒரு தடவை பார்க்கலாம். அவ்ளோதான்..!

    ReplyDelete
  12. [[[முத்தரசு said...

    எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். நன்றி.]]]

    போச்சுடா.. நான் போக வேண்டாம்னு சொல்லவே இல்லியேண்ணே..!? ஒரு முறை போய்தான் பாருங்களேன்..!

    ReplyDelete
  13. நானும் என் மகனும் படத்திற்குப்போனோம்.. என் மகனிடம் ஒரு கட்டத்தில் `ஐயா, இன்னும் இடைவேளையே வரவில்லையா?’ என ஒரு நீண்ட கொட்டாவியே வந்துவிட்டது எனக்கு.முடியல. ஒருமுறை பாருங்கள்.. அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம்

    ReplyDelete
  14. [[[ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

    நானும் என் மகனும் படத்திற்குப் போனோம்.. என் மகனிடம் ஒரு கட்டத்தில் `ஐயா, இன்னும் இடைவேளையே வரவில்லையா?’ என ஒரு நீண்ட கொட்டாவியே வந்துவிட்டது எனக்கு. முடியல. ஒரு முறை பாருங்கள். அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம்.]]]

    முடியலன்னு சொல்லிட்டும் ஒரு தடவை பாருங்கன்னு சொல்றீங்களே மேடம்.. சூர்யாவின் தீவிர ரசிகையோ..?

    ReplyDelete
  15. படத்தயும் பாத்தாச்சு... இப்ப உங்க விமர்சனத்தையும் படிச்சாச்சு... இனி என்னண்ணே பண்ண...கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்தே வா... இப்ப 20நிமிஷம் தூக்கிருக்காங்களாம்...

    ReplyDelete
  16. இட்லி வடை பொங்கல் வடை சட்னி சாம்பார் கடைசியாக 8/11/11ல் போட்டது! அப்புறம் ஒரே சினிமா விமர்சனம்!

    :)))

    ReplyDelete
  17. [[[சித்ரவேல் - சித்திரன் said...

    படத்தயும் பாத்தாச்சு... இப்ப உங்க விமர்சனத்தையும் படிச்சாச்சு... இனி என்னண்ணே பண்ண... கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்தேவா... இப்ப 20 நிமிஷம் தூக்கிருக்காங்களாம்...]]]

    நோ பீலிங்.. ஒரு தடவை பார்க்கக் கூடிய படம்தானே..? விடுண்ணே..!

    ReplyDelete
  18. [[[[ஸ்ரீராம். said...

    இட்லி வடை பொங்கல் வடை சட்னி சாம்பார் கடைசியாக 8/11/11ல் போட்டது! அப்புறம் ஒரே சினிமா விமர்சனம்!

    :)))]]]

    போடுவோம்.. கூடிய சீக்கிரமே..!

    ReplyDelete
  19. I liked the Movie :)
    K.V.Anand aduthadhu Thalaivar a vechu eduthaa semaya irukkum..

    Kandippaa attakasaamaa eduppar..

    Kana Kanden : good
    Ayan : Super
    Ko : Wonderful
    Maatraan : btw good and Super :)

    ReplyDelete
  20. [[[Srinivas said...

    I liked the Movie :)
    K.V.Anand aduthadhu Thalaivara vechu eduthaa semaya irukkum..

    Kandippaa attakasaamaa eduppar..

    Kana Kanden : good
    Ayan : Super
    Ko : Wonderful
    Maatraan : btw good and Super :)]]]

    முடியலை.. கே.விஆனந்துக்கு இவ்வளவு தீவிர ரசிகரா..? ஆச்சரியமா இருக்கு..!

    ReplyDelete