Pages

Saturday, September 15, 2012

சுந்தரபாண்டியன் - சினிமா விமர்சனம்

15-09-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான சசிகுமாரின் “நட்பு” கேட்டகிரி படம்தான்..! ஆனால் சக்ஸ்ஸில் நாடோடிகளைத் தொடும் என்றே நினைக்கிறேன்..!



வீட்டில் அப்பத்தா, இரண்டு அம்மாக்களின் செல்லம்.. மற்றும் ஊரில் இருக்கும் பல்லு போன கிழவிகளுக்கும், பல்லு போகக் காத்திருக்கும் ஆண்ட்டிகளுக்கும் லவ்வர் பாய்தான் இந்த சுந்தரபாண்டி. வாயைத் திறந்தால் கேலி, கிண்டல், நக்கல்.. இதில் ஊர்க்கார பெண்கள், உறவுக்காரப் பெண்கள் என்றில்லாமல் எப்பவும், எல்லா விஷயத்துலேயும் நான் ஒப்பனா இருப்பேன்னு சொல்ற கேரக்டர்.. நண்பர்களுக்கு உதவுவதென்றால் இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆர்வம்..!

நெருங்கிய நண்பனின் காதலுக்கு உதவப் போய்... அது இவருக்கே காதலாக மாறி.. இதனால் ஏற்படும் சிறு சண்டையில் ஒரு மரணம் நிகழ்ந்து கொலைக்குற்றத்துக்கு ஆளாகி நிற்கும் சசிகுமார், இறுதியில் காதலியை மணந்தாரா..? இல்லையா? என்பதுதான் கதை..!

சிறிதளவு கடுகாக சுப்பிரமணியபுரம்.. வெங்காயமாக நாடோடிகள்.. பூண்டுவாக தூங்கா நகரம்.. மற்றபடிக்கு ஆங்காங்கே மிச்சம் மீதியிருந்த தனது படங்களையே காப்பி பேஸ்ட் செய்து கொடுத்திருந்தாலும், வழங்கல் துறையினர் புதிய ஆளுகளாக இருந்ததால் இறுதி வரையிலும் ரசிக்கவே முடிந்தது..!

முதல் 20 நிமிடங்களுக்கு யார் பேசுவதற்கு சிரிப்பது என்ற யோசனையில் மூழ்கியிருந்த நமக்கு, ஆபத்வாந்தனாக வந்து வாய்க்கிறார் இனிகோ இளங்கோ.. இவரது காதல் கதையின் ஒரு டிவிஸ்ட்டை ஏற்படுத்த  சசிகுமார் களத்தில் குதித்த பின்புதான் பரோட்டா சூரி, சசி, இனிகோவின் தப்பாட்டம் துவங்கிறது.. சிறிது நேரத்தில் அப்புக்குட்டியும் சேர்ந்து கொள்ள இடைவேளை வரையிலும் படம் ஜிவ்வுதான்..!

சசிகுமாருக்கு ஏற்ற கேரக்டர்தான்.. நடிப்பதே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்கு இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் அண்ணனைவிட்டால் வேறு யாரும் இல்லை..! எந்த இடத்திலும் இவர் நடித்திருக்கிறார் என்று யாரும் சொல்ல முடியாது.. இயல்பாக எப்படி இருப்பாரோ அப்படித்தான் கடைசிவரையிலும் இருக்கிறார்.. 

தாடியுடன் தான் நடிப்பதும்.. இது போன்ற அசால்ட்டாக வந்து போவதிலும் இதுதான் கடைசி படம் என்று பிரஸ் மீட்டில் சொல்லியிருக்கிறார் சசி.. இதனை உடனே நடைமுறைக்குக் கொண்டு வந்தால் நல்லது என்றே நினைக்கிறேன்..! என்னதான் தலையில் இடி மாதிரி அந்த அடியை வாங்கிக் கொண்டும், காணாமல் போகும் காட்சியெல்லாம் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது..! ஹீரோயிஸம் தேவைதான்.. ஆனால் இந்த அளவுக்குத் தேவைதானா..? 



லட்சுமி மேனன் அசத்தல்.. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகு.. குறைவில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார்.. தான் பள்ளியில் படிக்கும்போது சசிகுமார் தன்னிடம் பேசிய அதே டயலாக்கை இப்போது திருப்பிச் சொல்லிவிட்டு போகும் அந்த ஒரு காட்சியிலேயே மொத்த ஆடியன்ஸையும் கவர்ந்துவிட்டார்..! பாடல் காட்சிகளின் மாண்டேஜ்களிலும், அப்பாவிடம் காட்டும் மெளனம்.. சசி அண்ட் கோவிடம் பேருந்தில் காட்டும் முறைப்பு.. தோழியிடம் காட்டும் அலட்சியப் பார்வை.. சிடுசிடுப்பு.. சசியின் அப்பாவை பார்த்தவுடன் படும் சந்தோஷம்.. கல்யாணத்தை எதிர்பார்த்து அவர் காட்டும் ரியாக்ஷன்ஸ்.. இன்னுமொரு அழகுடன் கூடிய நடிப்பு தேவதை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

இனிகோ, சூரியைவிடவும் அப்புக்குட்டிதான் என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறார்.. மன்னாரு போன்ற படங்களில் தனி ஹீரோவாக ஆக்ட் செய்து கொண்டே இது போன்ற படங்களில் தனி கேரக்டரில் நடிக்க துணிந்திருக்கும் அவருடைய ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்..! ஒரு மாசம் நீங்க.. ஒரு மாசம் அவங்க என்ற டீலிங்கிற்கு ஒத்துக் கொண்டு ஹீரோயினை கவர அவர் செய்யும் சாகசங்கள் அனைத்தும் செமத்தியான ஜோக்ஸ்..!  அதேவேகத்தில் லட்சுமியை பார்த்து பஸ்ஸின் கீழேயிருந்து கோபத்துடன் உதிர்க்கும் பேச்சுக்களும் சரவெடி.. 

இவருடைய எதிர்பாராத திடீர் முடிவைத்தான் எதிர்பார்க்க முடியவில்லை..! அதிலும் படத்தில் பல இடங்களில் வைத்திருக்கும் இது போன்ற டிவிஸ்ட்டுகள்தான் படத்தின் வெற்றியை இப்போது தீர்மானித்திருக்கிறது..! சசிகுமாரின் லவ் டிராக்ஸ்.. இனிகோவுக்காக சசி ஏற்றுக் கொண்ட பழி.. இனிகோவின் கிளைமாக்ஸ் பழிவாங்கல்.. விஜய் சேதுபதியின் கிளைமாக்ஸ் ருத்ரதாண்டவம் என்று அனைத்துமே சற்றும் எதிர்பார்க்காதவை.. ஆனால் இது சுப்பிரமணியபுரத்தை நினைத்துப் பார்க்க வைத்தாலும், அடுத்தது என்ன என்றுதான் ஏங்க வைத்தது..!

சின்னச் சின்ன கேரக்டர்கள் மூலமாகவும் இந்தப் படத்தின் சுவாரஸ்யம் குன்றாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.. சசியின் முறைப் பெண்ணாக வருபவர்.. லட்சுமியின் சித்தியாக வரும் சுஜாதா.. கல்லூரிக்கு எதிரில் தச்சு வேலை செய்யும் நண்பர்.. லட்சுமி அப்பாவின் மீசைக்கார நண்பர்.. அப்புக்குட்டியின் உறவினர்கள்.. விஜய் சேதுபதி மற்றும் அவரது அண்ணன்.. என்று பல இடங்களிலும் இவர்களது கேரக்டர் ஸ்கெட்ச்சே சுவாரஸ்யமாக இருந்தது..!

தென்மேற்குப் பருவக் காற்றில் காற்றாய் ஒலித்த ரகுநந்தனின் இசையில் கொண்டாடும் மனசும், ரெக்கை முளைத்ததேனும் பாடல்கள் பார்க்கவும், கேட்கவும் இனித்தன..! ரோஜா படத்திற்குப் பிறகு கிழவிகளும் ஒரு தப்பாட்டத்தில் ஆடியது இந்தப் படத்தில்தானோ..? பாடல் காட்சிகளின் மாண்டேஜ் சீன்ஸ்களை ரம்மியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர்..! அதிலும் பேருந்தின் வாசலில் நின்று கொண்டு சசியும், லட்சுமியும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து நிற்கும் அந்த ஒரு ஷாட்.. பிரமாதம்..! 

காதல் என்ற கத்திரிக்காயை தமிழ்ச் சினிமா இயக்குநர்கள் விதம், விதமாக சமைத்துக் கொடுத்தாலும் அது ருசிக்கத்தான் செய்கிறது.. காதலிக்கப்படும் பெண்களும், காதலிக்கத் துடிக்கும் ஆண்களும் என்னென்ன பாடுபடுவார்கள் என்பதை முதல் பாதியில் சசிகுமார் செய்து காட்டுவது அத்தனையும் சூப்பர்..! இந்த வித்தைக்காகவே இந்தப் படம் நிச்சயம் தலையில் தூக்கி வைக்கப்படும் என்றே நினைக்கிறேன்.. காதலில் டாக்டரேட் பட்டம் வாங்கியதுபோல் பேசும் சசி, லட்சுமியின் கண்களை வைத்தே உண்மையைக் கண்டுபிடித்துவிட்டு தான் திரும்பிக் கொள்வதும்.. லட்சுமி சொல்லி “அதை” கேட்டவுடன், அவர் காட்டும் ரியாக்ஷனும் காதலர்களுக்கு நிச்சயம் பிடித்தமானதுதான்..!

புதிய இயக்குநர் பிரபாகரன் தனது குருவுக்கு நல்லதொரு படத்தைக் காணிக்கையாக்கியிருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் காதலர்களுக்கும், காதலுக்கும் ஜே சொல்லும் விதமாகவே காட்சிகளை வைக்க பிரம்மத்தனம் செய்யும் சசிகுமார், முதல் மூன்று நாட்களில் தியேட்டர்களுக்கு வந்து குவியும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும், ஆர்வத்தோடு தேடி வரும் தன்னுடைய ரசிகர்களுக்கும் எந்தவிதத்திலும் ஏமாற்றம் தரக் கூடாது என்பதற்காகவே மெனக்கெட்டு இந்தப் படத்தின் திரைக்கதை விவாதத்தில் பெருமளவில் பங்கெடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது..! வாழ்க அவரது தொழில் பக்தி..!

“குத்துனவன் நண்பனா இருந்தா, அவன் குத்துனதை, செத்தாலும் வெளிய சொல்லக் கூடாது...” - இதுதான் கிளைமாக்ஸில் சசிகுமார் சொல்லும் பஞ்ச் டயலாக்.. இனி வரும் காலங்களில் நட்புக்கு உதாரணமாக இதனை பலவிதங்களில் நாம் பார்க்கலாம்.. நட்புக்கும், காதலுக்கும் மீண்டுமொரு முறை மரியாதை தந்திருக்கும் சசிகுமாருக்கும், இயக்குநர் பிரபாகரனுக்கும் எனது வாழ்த்துகள்..!

21 comments:

  1. என்னவோ போங்க, நீங்க முன்ன மாதிரி இல்லை. அதாஙக், முழுக்கதையும் சொல்லாம அங்கயும், இங்கயுமா தொட்டுட்டு போய்ட்டீங்க....

    :))

    ReplyDelete
  2. படத்தில் யாரையும் விட அப்புக்குட்டிதான் நன்றாக நடித்திருக்கிறார். கதாநாயகிக்கு நீங்கள் கொடுத்திருக்கிற சர்ட்டிஃபிகேட் கொஞ்சம் கூடுதல்தான்.

    ReplyDelete
  3. அண்ணாச்சி,

    படம் எப்படியோ நல்லவிதமான விமர்சனங்களையே பெற்று வருது ஓடிரும்னே வச்சுக்கலாம், ஆனால் இன்னும் எத்த்அனை நாளைக்கு சசிகுமார், டெம்ப்ளேட்டில் படம் கொடுப்பார்?

    எனக்கு என்னமோ அந்த கால டீ.ஆர் தான் நியாபகம் வருது!

    //“குத்துனவன் நண்பனா இருந்தா, அவன் குத்துனதை, செத்தாலும் வெளிய சொல்லக் கூடாது...//

    நண்பன் குத்துனா அதுக்கு பேரு துரோகம். எதிரியை மன்னித்தாலும் துரோகத்தினை மன்னிக்க முடியாது சொல்வாங்க.

    தத்துவமா எதுனா சொல்லணும்னு கெக்கேபிக்கேனு ஒரு பஞ்ச் டயலாக்கு புடிச்சு இருக்காங்க :-))
    //ரோஜா படத்திற்குப் பிறகு கிழவிகளும் ஒரு தப்பாட்டத்தில் ஆடியது இந்தப் படத்தில்தானோ//

    த.ந. அ.ல:5234னு ஏதோ நம்பருடன் வந்த டாக்சி படத்தில் (பசுபதி,அஜ்மல்) ஆத்தி சூடி ஆத்தி சூடினு ஒரு பாட்டில் ஏகப்பட்ட கிழவிகள் சன் கிளாஸ் எல்லாம் போட்டுக்கிட்டு ஆடும் :-))

    ReplyDelete
  4. படம் நல்லா இருக்கு சார்...

    இனிகோவை கடைசி வரைக்கும் நல்லவனாகவே காட்டியிருந்தால் இன்னும் பெட்டெர் ட்விஸ்ட் கிடைத்திருக்கும்... ஏன்னா அவன் முதுகுல குத்த போறான்னு முக்கால்வாசி பேருக்கு தெரிஞ்சிருச்சு...

    சசிக்கு நல்ல ஓபனிங் இருக்கு... குறைவான விளம்பரங்களையும் மீறி நேற்று ஹவுஸ்புள்... இந்த படம் அந்த பட்டாளத்தை பெரிதாக்கும்... ஆனால் அவர் மீண்டும் இயக்குனர் ஆகணும்... இது வேணாம்...

    ReplyDelete
  5. Nice review. Seems to be another hit for Sasi. No other movies in competition for another two weeks also

    ReplyDelete
  6. [[[நையாண்டி நைனா said...

    Hello... I will see... this film soon.]]]

    அவசியம் பாரு நைனா..! பார்த்துட்டு பேசு..!

    ReplyDelete
  7. [[[மு.சரவணக்குமார் said...

    என்னவோ போங்க, நீங்க முன்ன மாதிரி இல்லை. அதாஙக், முழுக்கதையும் சொல்லாம அங்கயும், இங்கயுமா தொட்டுட்டு போய்ட்டீங்க....

    :))]]]

    போதும்ண்ணே.. இந்தப் படத்தோட முழுக் கதையும் சொல்லி என்ன ஆகப் போவுது..?

    ReplyDelete
  8. [[[rajasundararajan said...

    படத்தில் யாரையும் விட அப்புக்குட்டிதான் நன்றாக நடித்திருக்கிறார். கதாநாயகிக்கு நீங்கள் கொடுத்திருக்கிற சர்ட்டிஃபிகேட் கொஞ்சம் கூடுதல்தான்.]]]

    போங்கண்ணே. இன்னிக்கு இருக்குற ஹீரோயின்ஸையெல்லாம் விடவும் பொண்ணு நல்லாத்தான் நடிச்சிருக்கு..!

    ReplyDelete
  9. [[[வவ்வால் said...

    அண்ணாச்சி, படம் எப்படியோ நல்லவிதமான விமர்சனங்களையே பெற்று வருது ஓடிரும்னே வச்சுக்கலாம், ஆனால் இன்னும் எத்த்அனை நாளைக்கு சசிகுமார், டெம்ப்ளேட்டில் படம் கொடுப்பார்?
    எனக்கு என்னமோ அந்த கால டீ.ஆர்.தான் நியாபகம் வருது!]]]

    இந்தப் படம்தான் இந்த வரிசைல கடைசின்னு அண்ணன் சொல்லியிருக்காரு.. பார்ப்போம்..! எப்படியிருந்தாலும் திரைக்கதையில் சுவாரசியம் இருந்தால் பழைய கதைகளே எடுபடும்ண்ணே..!

    //“குத்துனவன் நண்பனா இருந்தா, அவன் குத்துனதை, செத்தாலும் வெளிய சொல்லக் கூடாது...//

    நண்பன் குத்துனா அதுக்கு பேரு துரோகம். எதிரியை மன்னித்தாலும் துரோகத்தினை மன்னிக்க முடியாது சொல்வாங்க. தத்துவமா எதுனா சொல்லணும்னு கெக்கேபிக்கேனு ஒரு பஞ்ச் டயலாக்கு புடிச்சு இருக்காங்க:-)]]]

    அது நண்பன் என்பதால் அந்தத் துரோகத்தைக்கூட மன்னிக்கலாம் என்கிறார் சசி..!

    [[[//ரோஜா படத்திற்குப் பிறகு கிழவிகளும் ஒரு தப்பாட்டத்தில் ஆடியது இந்தப் படத்தில்தானோ//

    த.ந. அ.ல:5234னு ஏதோ நம்பருடன் வந்த டாக்சி படத்தில் (பசுபதி, அஜ்மல்) ஆத்தி சூடி ஆத்தி சூடினு ஒரு பாட்டில் ஏகப்பட்ட கிழவிகள் சன் கிளாஸ் எல்லாம் போட்டுக்கிட்டு ஆடும் :-))]]]

    உங்க அளவுக்கு நமக்கு அறிவு இல்லீங்கண்ணா.. ஓகே.. தெரிஞ்சுக்கி்ட்டேன்.. நன்றி..!

    ReplyDelete
  10. [[[மயிலன் said...

    படம் நல்லா இருக்கு சார்... இனிகோவை கடைசிவரைக்கும் நல்லவனாகவே காட்டியிருந்தால் இன்னும் பெட்டெர் ட்விஸ்ட் கிடைத்திருக்கும். ஏன்னா அவன் முதுகுல குத்த போறான்னு முக்கால்வாசி பேருக்கு தெரிஞ்சிருச்சு.]]]

    ப்ச்.. அந்த ஆஸ்பத்திரி சீன்ல இனிகோவை குளோஸப்புல காட்டினவுடனேயே தெரிஞ்சு போச்சு.. அதைச் செய்யாம இருந்திருக்கணும்..!

    [[[சசிக்கு நல்ல ஓபனிங் இருக்கு... குறைவான விளம்பரங்களையும் மீறி நேற்று ஹவுஸ்புள். இந்த படம் அந்த பட்டாளத்தை பெரிதாக்கும். ஆனால் அவர் மீண்டும் இயக்குனர் ஆகணும்... இது வேணாம்.]]]

    கரீக்ட்டு.. இதை அவர்கிட்ட சொல்லிடறேன்..!

    ReplyDelete
  11. [[[சிவா G - THE BOSS said...

    Nice review. Seems to be another hit for Sasi. No other movies in competition for another two weeks also.]]]

    யெஸ்.. சரியான நேரம் பார்த்துதான் களத்துல இறக்கியிருக்காங்க.. இதுவும் வெற்றிக்கு ஒரு காரணம்..!

    ReplyDelete
  12. திரைக்கதையே வெற்றிக்கு அச்சாணி !

    ReplyDelete
  13. வணக்கம் உண்மைத்தமிழன்!

    உங்களது சுந்தரபாண்டியன் திரை விமர்சனத்தை 4தமிழ்மீடியாவில் மீள்பிரசுரம் செய்ய அனுமதிப்பீர்களா?

    - 4தமிழ்மீடியா சார்பில் ஸாரா
    இம்மின்னஞ்சலுக்கு பதில் தரவும்
    wathaash@gmail.com

    ReplyDelete
  14. Blog writer is a pimp for movie industry. Getting paid very well during preview show. He writes good review to make others watch even shitty movies.

    ReplyDelete
  15. படம் நல்ல இருக்கு . ஆனா நீங்க அதிகமா பாராட்டுற மாதிரி இருக்கு

    ReplyDelete
  16. [[[ஆகாயமனிதன்.. said...

    திரைக்கதையே வெற்றிக்கு அச்சாணி!]]]

    ஆமாம் ஸார்.. சந்தேகமேயி்ல்லை. தெரிந்த கதைதான் என்றாலும், அதையும் சுவாரஸ்யமாகச் சொன்னாரே.. நிச்சயமாகப் பாராட்ட வேண்டிய விஷயம்..!

    ReplyDelete
  17. [[[Sara said...

    வணக்கம் உண்மைத்தமிழன்!

    உங்களது சுந்தரபாண்டியன் திரை விமர்சனத்தை 4தமிழ்மீடியாவில் மீள்பிரசுரம் செய்ய அனுமதிப்பீர்களா?]]]

    தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..!

    ReplyDelete
  18. [[[Unknown said...

    Blog writer is a pimp for movie industry. Getting paid very well during preview show. He writes good review to make others watch even shitty movies.]]]

    அப்படியல்ல.. பலரும் தங்களது சொந்தக் கருத்துக்களைத்தான் எழுதி வருகிறார்கள். இதனை வியாபாரமாகவோ, பப்ளிசிட்டியாகவோ கருத வேண்டாம்..

    என் மீதான தங்களது கருத்திற்கு எனது நன்றிகள்..!

    ReplyDelete
  19. [[[பால.சரவணன் said...

    படம் நல்ல இருக்கு. ஆனா நீங்க அதிகமா பாராட்டுற மாதிரி இருக்கு.]]]

    இல்ல ஸார்.. இப்பல்லாம் வர்ற படங்களை பார்த்தா பயமா இருக்கு. அதுல இது ஜெயிக்கக் கூடிய வகைல வந்திருக்கு.. அதனால நிச்சயமா நாம பாராட்டித்தான் ஆகணும்..!

    ReplyDelete
  20. The film does not sag even a little. Tightly knit screenplay.Mayakkam Enna and Rattinam also had the same premise.But still this is a good film if only for Sasikumar's voice and dialogue delivery

    ReplyDelete