24-06-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
‘முதல் தகவல் அறிக்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பாகிய பாடல் காட்சிகள் கொடுத்த அதிர்ச்சியைவிடவும், அதிக அதிர்ச்சியை அளித்தவர்கள் இரண்டு பேர். விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கலைப்புலி சேகரன், கடந்த 20-ம் தேதி காலமான பிரபல சினிமா தயாரிப்பாளர் கே.ராஜகோபால் என்னும் கே.ஆர்.ஜி.யை பற்றிச் சொன்ன தகவல்கள் ஒன்று.. இரண்டு, இதனைத் தொடர்ந்து காமிரா கவிஞர் பாலுமகேந்திரா பேசியது..!
“நேற்று காலமான தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. தனது கடைசிக் காலத்தில் பணத்திற்காக எத்தனை கஷ்டப்பட்டார் என்பது இங்கே இருப்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. கமல், ரஜினியை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.. 70-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர்.. தனது கடைசிக் காலத்தில் ஒரு கார்கூட இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா உங்களுக்கு..? எத்தனை மனத் துயரத்திற்கிடையில் அவர் இறந்து போனார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்..?” என்றார் சேகரன்..! கேட்டவர்களுக்கெல்லாம் அதிர்ச்சிதான்..
ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ இவருடைய கே.ஆர்.ஜி. பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது இன்றைய சினிமாக்காரர்களுக்கே தெரியாத ரகசியம்தான்..! சிவாஜி நடித்த ‘நேர்மை’, ‘திருப்பம்’, ரஜினி நடித்த ‘துடிக்கும் கரங்கள்’, ‘ஜானி’, கமல் நடித்த ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘கடல் மீன்கள்’, பிரபு நடித்த ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘மிடில்கிளாஸ் மாதவன்’, விஜய் நடித்த ‘மின்சாரக் கண்ணா’ என்று தமிழில் மட்டுமே 60-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார் கே.ஆர்.ஜி. அதே சமயம் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ‘நீலகிரி’, ‘ஒளியம்புகள்’, மோகன்லால் நடித்த ‘லால் சலாம்’, ‘வரவேற்பு’, சீனிவாசனின் புகழ் பெற்ற படமான ‘வடக்கு நோக்கிய யந்திரம்’ ஆகியவையும் கே.ஆர்.ஜி.யின் தயாரிப்புதான்..! கடைசியாக 2009-ம் ஆண்டு மாதவன், அப்பாஸ் நடிப்பில் ‘குரு என் ஆளு’ படத்தைத் தயாரித்திருந்தார். இப்படம் தயாரித்து முடிக்கப்பட்டு 1 வருடம் கழித்தே திரைக்கு வந்தது. இந்தப் படத்தின் படு தோல்வி இவரையும் சினிமாவுலகத்தின் ஓரத்தில் தள்ளியது..!
தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கெனவே 4 ஆண்டு காலம் தலைவராகப் பொறுப்பு வகித்திருந்ததால், ஊருக்கெல்லாம் படமெடுக்க அட்வைஸ் செய்தவரின் கடைசிக் காலம் அவரை விரக்தியடைய வைத்துவிட்டது என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். தயாரிப்பாளரும் இயக்குநரை போன்று டெக்னீஷியன்தான்.. ஒரு படம் தோல்வியடைந்தாலும், அடுத்த படத்தை தயாரிக்க வேண்டும். மீண்டும் வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். கே.ஆர்.ஜி. அப்படி நினைத்துத்தான் இன்றைய ஹீரோக்கள் பலரிடமும் கால்ஷீட் கேட்டபடியே இருந்திருக்கிறார்.
ஆனால் கே.ஆர்.ஜி. ஏற்கெனவே “சுத்தமாகி”விட்டார் என்பதை உணர்ந்து, தங்களது கெப்பாசிட்டுக்கு ஏற்றபடி அவரால் செலவு செய்ய முடியாதே என்று நினைத்து பல நடிகர்களும் ஜகா வாங்கிவிட நடிகர்கள் “தயாரிப்பாளர்களை மட்டுமல்ல.. தமிழ்ச் சினிமாவையும் சேர்த்தே அழித்துவிட்டார்கள்..” என்று கோபத்துடன் பேட்டியும் கொடுத்திருந்தார்.
நான் பார்த்தவரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் அம்பாசிடர் காரில் வந்து கொண்டிருந்த கே.ஆர்.ஜி., சில மாதங்களுக்கு முன்பெல்லாம் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் வாசலில் ஆட்டோவில் வந்து இறங்கியபோது சுற்றியிருப்பவர்கள் அவரைப் பார்த்த பார்வையே வேறு.. தன் நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியது போல இருந்தது..!
சினிமாவுலகில் உச்சம் என்பது பணத்தை பத்திரப்படுத்தி வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் காலம்..! இருப்பதையெல்லாம் தொலைத்துவிட்டு மீண்டும் தேடுதல் வேட்டை நடத்தும் காலமல்ல..! 40 ஆண்டு காலமாக தயாரிப்புப் பணியில் இருந்தவர் காலம் முழுக்க தனது பணத்தை எடுத்ததும் இந்தக் கோடம்பாக்கத்தில்தான்..! இழந்ததும் இந்த கோடம்பாக்கத்தில்தான்..!
கே.ஆர்.ஜி.யின் ஒரே மகன் கங்காதரன் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே மறைந்துவிட்டதால், அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் பணியைத் தொடர அவரே தனி மனிதராக அலைய வேண்டிய சூழல்.. இப்படி குடும்பச் சூழலும் அவருக்கு எதிரியாகப் போய்விட, மனிதர் ரொம்பவே தளர்ந்து போயிருந்தார் தனது இறுதிக் காலத்தில்..!
அண்ணன் சேகரன், கே.ஆர்.ஜி.யின் இந்தச் சோகத்தை வெளிப்படையாகச் சொல்லி முடித்த கணத்தில் அரங்கம் நீண்ட மெளனம் காத்தது.. இதற்குப் பின்பும் அன்றைய தினம் காலையில் மரணமடைந்த சினிமா புகைப்படக் கலைஞர் சித்ரா சுவாமிநாதனை பற்றியும் பேசினார் சேகரன்.

சினிமாவில் ஒரு சந்தோஷமான நிகழ்ச்சிக்கு வந்திருக்க, சோகத்தை கொடுக்கிறாரே என்று சினிமாவுலகம் தவிர்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் இருக்க, அதைவிட எதிரில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த கேமிரா கவிஞர் பாலு மகேந்திராவின் முகம் இறுகிப் போய்க் கிடந்தது. இதற்கான காரணத்தை அவர் தன் பேச்சில் குறிப்பிட்ட போது பத்திரிகையாளர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியும் கிடைத்தது..
“இங்கே கலைப்புலி சேகரன் சொன்ன பின்புதான் எனதருமை நண்பர் கே.ஆர்.ஜி. காலமாகிவிட்டார் என்பதே எனக்குத் தெரிந்தது.. மேலும், புகைப்படக் கலைஞர் சித்ராவும் இறந்தது எனக்குத் தெரியாது.. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்..” என்றார்.
இதைக் கேட்டு சேகரனே அதிர்ச்சியாகிவிட்டார்..! இத்தனை தொலைத் தொடர்பு வசதிகள் இருந்தும், இது போன்ற முக்கியத் தகவல்கள் ஒருவரை சென்றடையாததை என்னவென்று சொல்வது..? இத்தனைக்கும் பாலுமகேந்திராவின் அலுவலகத்தில் எப்போதும் சினிமா துறை இளைஞர்கள் இருப்பார்கள். சினிமா பி.ஆர்.ஓ.க்களை கேட்டால் அவருக்கும் மெஸேஜ் அனுப்பினோம் என்கிறார்கள்..! எப்படி இவருக்குத் தெரியாமல் போனது என்று தெரியவில்லை..!
ஒருவருடைய கஷ்ட கால வாழ்க்கைகூட சக நண்பர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் இறப்புச் செய்தி கூட தெரியாமல் இருப்பது ரொம்பவே துரதிருஷ்டம்..!