Pages

Tuesday, January 17, 2012

மின்வெட்டு - கிராமப்புறங்களில் அகோரம்..!

17-01-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

10 நாட்கள் இன்பச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்றுதான் சென்னை திரும்பினேன்..! திண்டுக்கல், வேடசந்தூர், தேனி, உத்தமபாளையம், கம்பம், திருச்சி என்று ஒரு மின்னல் வேக டூர்..! நெருங்கிய சொந்தங்களையும், சொந்தங்களாக இருப்பவர்களையும் 2 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்து நான் உயிருடன் இருப்பதை நிரூபித்துவிட்டு வந்தேன்..!(எப்படியெல்லாம் பில்டப்பு கொடுக்க வேண்டியிருக்கு..?)

டூர் அனுபவங்களை சிறிய தொகுப்பாக அளிக்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான் எழுதியாக வேண்டும். அதில் முக்கியமானது சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் நிலவும் கடுமையான மின் வெட்டு..!

வேடசந்தூரையும் தாண்டி 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொம்மலூர் கவுண்டனூரில் அக்கா வீட்டில் இருந்தேன். அங்கேயிருந்த 3 நாட்களும் மின்சாரம் திடீர் என்று வந்தது. திடீரென்று போனது. எந்த நேரத்தில் கட்டாகும்..? எப்போது வரும்..? என்று கிராம மக்களுக்கே தெரியவில்லை. நினைத்த நேரத்திலெல்லாம் மின் வெட்டை அமல்படுத்தி வருகிறார்கள்..!

இது எந்த அளவுக்கு அந்த ஊர் மக்களை பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது தெரியுமா..?


கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாகவரையிலும் நெல் மட்டுமே பயிரிட்டு வந்த அந்தப் பகுதி விவசாயிகள் தற்போது அதனை அடியோடு மாற்றிவிட்டார்கள். சோளம், கம்பு, கடலை, வெங்காயம் போன்ற குறுகிய கால விளைபொருட்களையே இப்போது பயிரிட்டு வருகிறார்கள். ஊர் முழுவதும்  தற்போது கடலைதான் பயிரிட்டிருக்கிறார்கள். ஏன் என்று கேட்டபோது, “நினைச்ச நேரத்துக்கு கரண்ட் வருது.. அதை நம்பி நாம நெல்லை விதைச்சா.. அப்புறம் தண்ணிக்கு எங்க போறது..? குறைந்தபட்சம் காலைல 4 மணி நேரம், சாயந்தரம் 3 மணி நேரமாவது கரண்ட் இருந்து, நாங்க தண்ணி பாய்ச்சினாத்தான் நெல்லுக்கும் நிம்மதி. எங்களுக்கும் நிம்மதி.. இப்பத்தான் வர்றதே தெரியலையே.. இதை நம்பி போன ஆட்சிக் காலத்துல நாங்க நெல்லை போட்டுட்டு பட்ட பாடு இருக்கே.. முடியலீங்க.. அதான் 2007-லேயே இந்த ஊர்ல எல்லாருமே நெல்லு விதைக்காம விட்டுட்டோம்..” என்றார்கள்.

தற்போது அந்த ஊரில் மின்சாரம் காலை 6-8, 10-12, 3-4, 6-8 என்று நிறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நான் இருந்த ஒரு நாள் மாலை 6 மணிக்கு போன மின்சாரம் மறுநாள் மதியம் 4 மணிக்கு நான் அங்கேயிருந்து கிளம்புகின்றவரையிலும் வரவில்லை. என்னத்த சொல்லறது..?

பக்கத்து வீட்டுக்காரர்களின் புலம்பல் பரிதாபமாக உள்ளது. “கல்யாணமாகி பொண்ணும், மாப்பிள்ளையும் ஊருக்கு வந்திருக்காங்க.. இட்லிக்காக மாவு அரைக்கலாம்ன்னா பாதில கரண்ட் கட்டு.. வரும், வரும்னு எதிர்பார்த்து வேற வழியில்லாம ராத்திரி 10 மணிக்கு வீட்டு வாசல்ல இருந்த கல்லுல நானும், என் பொண்ணுமா கை வலிக்க அரைச்சோம்.. இப்படியே 3 நாளும் செய்ய முடியுமா..? உங்கக்கா வீட்ல பாதி மாவு, பக்கத்து வீட்ல பாதி மாவுன்னு 2 இடத்துல கொடுத்து அரைச்சு வைச்சுத்தான் 3 நாளும் சமாளிச்சோம்.. இதை நாங்க எங்க போய்ச் சொல்றது..? ஏதோ நீங்க சிட்டில இருக்கீங்க.. 1 மணி நேரம்தான் மின் வெட்டுன்னு சொல்றாங்க. தப்பிச்சீங்க.. எங்களை மாதிரி கிராமத்துல இருக்கிறவங்களைத்தான் ஏமாளியா நினைக்குது கவர்ன்மெண்ட்டு..” என்றார் ஒரு அக்கா..!

இன்னொரு பக்கத்து வீட்டு அக்காவோ நம்மைப் போன்றவர்களுக்கு சாபமே விட்டுவிட்டார்..! “பிள்ளைக படிக்க உக்காரும்போது கரண்ட் கட்டு..! நீயே பார்த்தீல்ல.. 6 மணிக்கு போச்சு 9 மணிக்கு வருது.. இந்த நேரத்துல பிள்ளைக தூங்குமா? இல்லாட்டி படிக்குமா..? எப்படி ஹோம்வொர்க் செய்யுங்க..! ஸ்கூல்ல இருந்து 2 பஸ் மாறி வீட்டுக்கு வருதுக.. அவ்வளவு அலுப்பா இருக்குறதுகளை 5 மணிக்கே ஹோம்வொர்க் செய்யுன்னு சொல்லி டார்ச்சர் பண்ணிக்கிட்டிருக்கோம். எவ்வளவு வெறுப்பா இருக்கு தெரியுமா..? காலைல இந்தக் குளிர்ல பெரியவங்க நமக்கே எந்திரிக்க முடியலை. சின்னப் புள்ளைகளை எழுப்பி படிக்க வைக்க மனசுக்கு கஷ்டமா இருக்கு..! அவர் ஆட்சிலதான் இப்படின்னு சொல்லி மாத்தி ஓட்டைப் போட்டு வைச்சா.. இப்போ அதைவிட கொடூரமா இருக்கு. போன ஆட்சிலயாவது கரண்ட் போற டைம் கரெக்ட்டா தெரியும். இந்த ஆட்சில அதுவும் போயிருச்சு.. எங்களை மாதிரி பாவப்பட்டவங்க பேச்சையெல்லாம் யார் காது கொடுத்துக் கேக்குறா..? இதே மாதிரி சிட்டில செய்ய முடியுமா..? அங்க மட்டும் ஏன் நாள் முழுக்க கரெண்ட்டை கட் செய்ய மாட்டேன்றாங்க..? அவங்கள்லாம் உடனே பஸ் மறியல், போராட்டம்ன்னு உக்காந்தர்றாங்க.. பாரு.. இங்க 30 வீடுதான் இருக்கு. வீட்ல இருக்குற எல்லாரும் கூலி வேலைக்கு போனாத்தான் அன்னிக்கு கஞ்சியாத்த முடியும்.. இதுல எங்கிட்டு போய் போராடறது..” என்றார் வெறுப்பாக..!


இந்த ஊர் மட்டுமல்ல.. என்னுடைய தாயின் சொந்த ஊரான குரும்பப்பட்டியிலும் இதே நிலைமைதான்..! தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த எனது தாய் மாமாவைப் பார்த்துப் பேசிவிட்டு அவருடனேயே சாயந்தரமாக ஊருக்குள் வந்தபோது, வீட்டு வாசலில் அமர்ந்து பிள்ளைகள் மும்முரமாக ஹோம்வொர்க் செய்து கொண்டிருந்தார்கள். “கரெக்ட்டா 6 மணிக்கு கரண்ட் போயிரும். திரும்ப எப்ப வரும்னு அய்யனாருக்கு மட்டும்தான் தெரியும்.. அதான் இப்பவே.. விளையாடப் போற நேரத்துல எழுதிக்கிட்டிருக்குக..” என்றார் மாமா.

இந்த ஊரிலும் நெல்லை ஓரங்கட்டிவிட்டு சோளத்தையும், கடலையையும், வெங்காயத்தையும் பயிரிட்டிருக்கிறார்கள்..! மாடு இருந்தாலும், விவசாயம் பார்க்கும் பெரிசுகளுக்கு வயதாகிவிட்டதால் தண்ணி இறைக்க முடியவில்லையாம். என் மாமாவுக்கு வயது 72. இந்த வயதிலும் தண்ணி இறைக்கத்தான் செய்கிறார். “ஒரு நாள்விட்டு ஒரு நாளுன்னா முடியும்பா.. டெய்லின்னா உடம்புக்கு முடியல. அதான் நானும் நெல்லை விட்டுட்டு வெங்காயத்தை போட்டுட்டேன். இதுக்கும் தண்ணி வேணும்தான். ஆனால் நெல்லு அளவுக்கு இல்லை.. காலைல இருந்து மதியம்வரைக்கும் தண்ணியை இறைச்சி ஊத்தினா போதும்..” என்றார்..!

திண்டுக்கல்லின் நகர்ப் பகுதிகளிலும் காலை, மாலை என இரு முறையும் சேர்த்து 4 அல்லது 6 மணி நேரம் மின் வெட்டு இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத் தலைநகரம் என்றாலும், இருந்த ஒரேயொரு பூட்டு தொழிலுக்கு பூட்டு போடப்பட்டுவிட்டதால், இந்த மின்வெட்டை அனைவருமே தங்களுக்குப் பழக்கமாக்கிக் கொண்டுவிட்டார்கள்..!

நான் அங்கேயிருந்த அன்றைக்குத்தான் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை போட்டுத் தள்ளிவிட்டார்கள். இரவு 8 மணிக்கு. வீட்டு வாசலில் சேரில் அமர்ந்து திருச்சியில் இருந்த சுந்தரி என்ற தனது நண்பியுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தவரின் அருகில் 3 பேர் திடீரென்று சைக்கிளில் வந்து இறங்கியிருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் சட்டை அணியாமல் கிராமத்தான் போல் இருந்திருக்கிறார்கள். “யாருப்பா நீங்க..” என்று போனை ஆனில் வைத்தபடியே கேட்டிருக்கிறார் பாண்டியன். நொடியும் தாமதிக்காமல் அவரை எழுந்திருக்க விடாமலேயே வெட்டித் தள்ளியிருக்கிறார்கள் கொலையாளிகள். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளே இருந்து ஓடி வந்த ஆட்கள் கொலையாளிகளைத் தேடியபோது, அந்தப் பகுதி முழுவதும் கும்மிருட்டு..! 

யெஸ்.. திண்டுக்கல் நந்தவனப்பட்டி பகுதியில் இரவு 8-9 கரண்டு கட்டு..! யார் என்ற அடையாளமே தெரியவில்லை.. சைக்கிளை மட்டுமே போலீஸ் கண்டெடுத்திருக்கிறது. தற்போது 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தாலும், கொலையாளிகள் அவர்கள் இல்லை என்றே போலீஸ் இப்போதுவரையிலும் நம்புகிறது. சரி.. ஆளை பிடித்து நொங்கு உரித்தால், காட்டுகிற இடத்தில் கையெழுத்து போடத்தான் போகிறார்கள். ஆனால் கோர்ட்டில் நிக்காதே.. நேரில் பார்த்த சாட்சியே இல்லை..! என்ன கலர் சட்டைன்னுகூட சொல்ல முடியாது.. எத்தனை பேரை அரெஸ்ட் காண்பித்தாலும், இந்த கேஸ் கடைசியில் என்னாகும் என்று பத்திரிகை அலுவலகங்களில் வாட்ச்மேன் வேலை பார்ப்பவர்கூட சொல்லிவிடுவார்..!  மின் வெட்டினால் ஒரு உயிர் பறி போயிருக்கிறது..!

தேனி, பாளையம், கம்பம் பகுதிகளிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் 4 மணி நேர மின் வெட்டு. இடையில் திடீரென்று ஏதாவது ஒரு நாள் மின் பராமரிப்பு என்று சொல்லி ஒரு நாள் முழுக்க நிறுத்தி விடுகிறார்களாம்..! 

ஏற்கெனவே கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலும் நெல் விளைச்சலை மட்டுப்படுத்தி வெற்றிலை, சோளம், கம்பு, வெங்காயம், கடலை என பயிரிட்டு தங்களைக் காப்பாற்றி வருகிறார்கள். இதில் அரசு வேளாண்மை அதிகாரிகள் ஊர், ஊராக வந்து நெல் விளைச்சலை அதிகப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்து வருகிறார்கள். வருபவர்களிடம் “மொதல்ல கரெண்ட்டை கரெக்ட்டா கொடுங்க. அப்புறமா வந்து பேசுங்க..” என்று சொல்லித் திருப்பியனுப்பவதாகச் சொன்னார் ஒரு சொந்தக்கார விவசாயி..!

“இப்போதைக்கு முல்லை பெரியாறு பிரச்சினைக்காக தீவிரமா இருக்கிறதால மின் வெட்டு இந்தப் பக்கம் 2 வது விஷயமா போயிருச்சு. அதைப் பத்தி இங்க யாரும் பெரிசா கவலைப்படலை.. ஆனா முல்லைப் பெரியாறு மட்டும் இப்போ மேட்டரா இல்லைன்னா, மின் வெட்டு இந்தப் பகுதியில் பெரும் கலவரத்தை உண்டு பண்ணியிருக்கும்..” என்றார் எனது உறவினர் மாமா ஒருவர்.

இப்படி விவசாயத் துறையில் ஒரு தலைகீழ் மாற்றத்தையே கொண்டு வந்திருக்கும் இந்த மின் வெட்டு விவகாரத்தை, மாநில அரசு இன்னமும் சீரியஸாகக் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

மின் வெட்டை தீவிரமாக கிராமப்புறங்களில் அமல்படுத்தி மெட்ரோபாலிட்டன் நகரங்களுக்கு 23 மணி நேரமும் சப்ளையைக் கொடுத்து வருகிறார்கள். ஆட்சியின் மீதான விமர்சனம் என்பதே பெருநகர மக்கள் சொல்வது மட்டும்தான் என்று இந்த ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள் போலும். 

மின் உற்பத்தியைப் பெருக்க சென்ற தி.மு.க. ஆட்சியில் போடப்பட்டிருக்கும் திட்டங்களின் மூலம் இன்னும் 3 ஆண்டுகள் கழித்துதான் மின் சப்ளை கிடைக்கும் என்கிறார்கள். அதுவரையிலும் இந்தக் கொடுமைதான் என்றாலும், அப்போது கூடுதல் சப்ளை கிடைத்தாலும், அதையும் நகர மக்களை திருப்திபடுத்த வேண்டி நகரங்களுக்கே திருப்பியனுப்பி, கிராமத்தினரை அம்போவாக்கும் முயற்சிதான் அப்போதும் நடக்கப் போகிறது..!

தற்போதைக்கு ஆத்தா ஜெயலலிதாவின் கவலையெல்லாம் உடன் பிறவா சகோதரியும், அவர்தம் சொந்த பந்தங்களும் சுருட்டி வைத்திருக்கும் பணத்தை அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்பதும், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து எப்படியாவது தப்பியாக வேண்டும் என்பதும்தான்..! இந்த லட்சணத்தில் மக்களின் குறைகளை காது குடுத்துக் கேட்கக்கூட இந்த ஆட்சியில் ஒருவரும் தயாராக இல்லை என்பது நமது துரதிருஷ்டம்தான்..! 


42 comments:

  1. ஆத்தா மீது இத்தனை அவநம்பிக்கையா? போகட்டும்!

    மின்வேட்டைப்பற்றி இப்படி நேகடிக்வாக எழுதவதில் செலவழிக்கும் நேரத்தில் ஒரு பகுதியை, ஜனங்களும் சேர்ந்து செய்யவேண்டிய சில விஷயங்களை சேர்த்தே எழுதுங்களேன்! உதாரணமாக குண்டு பல்புகளை உபயோகிக்காமல், சி எப் எல் விளக்குகளை உபயோகிப்பாத்து தேவையில்லாத லைட்டுகள் விசிறிகள் ஓடவிடுவதைக் கவனித்து நிறுத்துவது முதல் தனிநபராக மின்விரையத்தைக் குறைப்பதில் பங்கெடுக்க முடியும்.

    ட்ரான்ஸ்மிஷன் லாஸ் எனப்படும் இழப்பு விகிதத்தைக் குறைக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க, அரசின் கவன ஈர்ப்பை கோருவது கூடப்[ பதிவர்களாகிய நாம் செய்யக் கூடிய ஒரு விழிப்புணர்வுதான்!

    ReplyDelete
  2. // 10 நாட்கள் இன்பச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்றுதான் சென்னை திரும்பினேன்..! //

    இனி எங்களுக்கு துன்பச் சுற்றுலா தான்...

    ReplyDelete
  3. Philosophy Prabhakaran said...
    ***
    // 10 நாட்கள் இன்பச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்றுதான் சென்னை திரும்பினேன்..! //

    இனி எங்களுக்கு துன்பச் சுற்றுலா தான்...

    Wednesday, January 18, 2012 1:38:00 AM***

    என்ன பீலா பிளாசஃபி! ஏன் தொடர்ந்து இந்தத் தளத்தில் இப்படிக் கேவலமா பின்னூட்டம் போட்டுக்கிட்டே திரிகிறீங்க?

    ReplyDelete
  4. ***தற்போதைக்கு ஆத்தா ஜெயலலிதாவின் கவலையெல்லாம் உடன் பிறவா சகோதரியும், அவர்தம் சொந்த பந்தங்களும் சுருட்டி வைத்திருக்கும் பணத்தை அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்பதும், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து எப்படியாவது தப்பியாக வேண்டும் என்பதும்தான்..!***

    வரவர உங்களுக்கும் ஆத்தா பத்தி புரிய ஆரம்பிச்சுருச்சு போல! என்ன இருந்தாலும் நான் பாப்பாத்தினு சொல்ல வச்ச நக்கீரனை பாராட்டனும்!

    ReplyDelete
  5. [[[Krishna Moorthy. S. said...

    ஆத்தா மீது இத்தனை அவநம்பிக்கையா? போகட்டும்!
    மின் வேட்டைப்பற்றி இப்படி நேகடிக்வாக எழுதவதில் செலவழிக்கும் நேரத்தில் ஒரு பகுதியை, ஜனங்களும் சேர்ந்து செய்யவேண்டிய சில விஷயங்களை சேர்த்தே எழுதுங்களேன்! உதாரணமாக குண்டு பல்புகளை உபயோகிக்காமல், சி எப் எல் விளக்குகளை உபயோகிப்பாத்து தேவையில்லாத லைட்டுகள் விசிறிகள் ஓட விடுவதைக் கவனித்து நிறுத்துவது முதல் தனி நபராக மின்விரையத்தைக் குறைப்பதில் பங்கெடுக்க முடியும்.
    ட்ரான்ஸ்மிஷன் லாஸ் எனப்படும் இழப்பு விகிதத்தைக் குறைக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க, அரசின் கவன ஈர்ப்பை கோருவது கூடப்[ பதிவர்களாகிய நாம் செய்யக் கூடிய ஒரு விழிப்புணர்வுதான்!]]]

    கிராமங்களில் மின் பயன்பாடு மிகக் குறைவுதான் ஸார்.. நகர்ப் பகுதிகளில் மட்டுமே மின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது..! கிராம மக்களை எந்தவிதத்திலும் குற்றம் சொல்லிவிட முடியாது.. மின் பகிர்வு சம்பந்தமான வேறு பதிவு எழுதும்போது இதனையும் எழுதுகிறேன். வருகைக்கு நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  6. [[[உடன்பிறப்பு said...

    சூப்பர்ணே..]]]

    அம்மாவைத் திட்டுனா வர்றீங்க..? பாராட்டுன்னா என்னையவே திட்டுறீங்க..? ம்.. நல்லாயிருங்கண்ணே..!

    ReplyDelete
  7. [[[Philosophy Prabhakaran said...

    // 10 நாட்கள் இன்பச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்றுதான் சென்னை திரும்பினேன்..! //

    இனி எங்களுக்கு துன்பச் சுற்றுலாதான்...]]]

    பிலாசபி மேதையே.. நீ நல்லவன்போல் நடிக்கும் கெட்டவனா..? அல்லது கெட்டவன் போல் நடிக்கும் நல்லவனா..?

    ReplyDelete
  8. [[[வருண் said...
    Philosophy Prabhakaran said...
    ***
    // 10 நாட்கள் இன்பச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்றுதான் சென்னை திரும்பினேன்..! //

    இனி எங்களுக்கு துன்பச் சுற்றுலாதான்...

    என்ன பீலா பிளாசஃபி! ஏன் தொடர்ந்து இந்தத் தளத்தில் இப்படிக் கேவலமா பின்னூட்டம் போட்டுக்கிட்டே திரிகிறீங்க?]]]

    வருண்.. தம்பி ச்சும்மா ஜாலிக்குத்தான் இப்படி பேசுறாரு.. டென்ஷன் வேண்டாம்..!

    ReplyDelete
  9. [[[வருண் said...

    ***தற்போதைக்கு ஆத்தா ஜெயலலிதாவின் கவலையெல்லாம் உடன் பிறவா சகோதரியும், அவர்தம் சொந்த பந்தங்களும் சுருட்டி வைத்திருக்கும் பணத்தை அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்பதும், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து எப்படியாவது தப்பியாக வேண்டும் என்பதும்தான்..!***

    வர வர உங்களுக்கும் ஆத்தா பத்தி புரிய ஆரம்பிச்சுருச்சு போல! என்ன இருந்தாலும் நான் பாப்பாத்தினு சொல்ல வச்ச நக்கீரனை பாராட்டனும்!]]]

    நான் எப்போதுமே ஆத்தா பத்தி ஒரே மாதிரிதான் எழுதி வருகிறேன் வருண்..!

    நக்கீரன் இப்படி எழுதியது தவறு..! ஜெயலலிதாவின் ஜாதி நக்கீரன் சொல்லித்தான் நமக்குத் தெரிய வேண்டுமா என்ன..?

    ReplyDelete
  10. 'அகோரம்' என்றால் கோரமில்லாதது, அழகானது என்று பொருள். நீங்கள் சொல்லவந்தது அதுவா?!

    ReplyDelete
  11. சமூக அக்கரையோடு அட்டகாசமாக எழுதியிருக்கீங்க.
    'நண்பியோடு கடலை', 'ஆத்தா ஜெயலலிதா' போன்ற தனித்துவமான நக்கல்கள் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  12. உண்மைதான். தமிழகத்தில் இன்னும் எக்கச்சக்க கிராமங்கள் மின்வெட்டால் பாதிப்படைந்து வருகிறது. உங்கள மாதிரி தட்டிக்கேக்க ஆளு இல்லாம ஆட்சியாளர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் ரொம்பவே குளிர்விட்டுப்போச்சு.

    ReplyDelete
  13. Neenga solli thaana aaathaku vote pootoom..nengalee ipadi sonna eppadi ?

    ReplyDelete
  14. ஏற்கனவே பல விவசாய நிலங்களை , ரியல் எஸ்டேட் காரர்களிடம் பறிகொடுத்துவிட்ட நிலையில் ,
    மிச்ச சொச்சம் இருக்கும் விலை நிலங்களையும் , அரசும் ,மின்வெட்டும் , 'தானே' வும் பலி வாங்கினால் ,
    மிக விரைவில் இந்திய அணைத்து தானியங்களையும் இறக்குமதி செய்துதான் மக்களின் பசியாற்ற வேண்டியதாயிருக்கும் . பாவம் விவசாயிகள் !

    ReplyDelete
  15. ஏற்கனவே பல விவசாய நிலங்களை , ரியல் எஸ்டேட் காரர்களிடம் பறிகொடுத்துவிட்ட நிலையில் ,
    மிச்ச சொச்சம் இருக்கும் விளை நிலங்களையும் , அரசும் ,மின்வெட்டும் , 'தானே' வும் பலி வாங்கினால் ,
    மிக விரைவில் இந்திய அணைத்து தானியங்களையும் இறக்குமதி செய்துதான் மக்களின் பசியாற்ற வேண்டியதாயிருக்கும் . பாவம் விவசாயிகள் !

    ReplyDelete
  16. நான் பல வருடமாக வெளிநாட்டில் இருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஏதாவது பொருட்கள் உறவினர்களுக்கு வாங்கிவருவது வழக்கம். போனமுறை அவர்கள் அனைவரும் சொல்லிவைச்ச மாதிரி விரும்பிக்கேட்ட ஒன்று ரொம்பநேரம் எரியுறமாதிரி எமர்ஜன்ஸி லைட் வாங்கிட்டு வான்னுதான். LED Emergency லைட் வாங்கினேன். ஒரு முறை சார்ஜ் செய்தால் சும்மா 6 மணி நேரத்துக்கு பிரச்சனை இல்லை... நீ இதுவரைக்கும் வெளிநாட்டில் இருந்து வாங்கிட்டுவந்ததுலையே இதுதான் உருப்படியான ஒண்ணு இதுகூட இல்லைன்னா சும்மா பொழப்பு நாறிடுக்கும் என்றார்கள்...

    ReplyDelete
  17. நான் கிருஷ்ணமூர்த்தியின் கருத்தை வழி மொழிகிறேன் .

    NDTV யின் க்ரீன்னாதான் ( greenathan ) பார்க்கும் பொழுது அதில் பெட்ரோமாக்ஸ் விளக்கு போல உள்ள சூரிய ஒளியில் எரியும் ஒரு விளக்கை நிறய கிராமங்களுக்கு கொடுத்தார்கள், அதன் விலை தெரிய வில்லை... ஆயிரம் இருக்கலாம் ..நான் என் கணக்குக்கு ஒரு ஐந்து விளக்கு ஸ்பான்சர் செய்கிறேன் , நீங்கள் முதலில் பார்த்த கிராமத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் ... நிறய பேர்களிடம் இந்த மெசேஜ் பரவும் பொழுது, நீங்கள் போய் வந்த எல்லா கிராமத்தையும் ஒன்று அல்லது இரண்டு விளக்குகள் தர முடியும் .... உன்னால் முடியும் தம்பி .

    சுந்தர்

    ReplyDelete
  18. [[[லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

    'அகோரம்' என்றால் கோரமில்லாதது, அழகானது என்று பொருள். நீங்கள் சொல்ல வந்தது அதுவா?!]]]

    ஐயையோ.. தமிழில் இவ்வளவு அறிவோடயா நான் இருக்கேன்.. எனக்கே கேவலமா இருக்கு..! பயங்கரம் என்பதற்கு அகோரம் என்று நினைத்து தட்டச்சிட்டேன் அண்ணே..!

    மன்னிச்சு விட்ருங்கண்ணே..!

    ReplyDelete
  19. [[[Pulavar Tharumi said...

    சமூக அக்கரையோடு அட்டகாசமாக எழுதியிருக்கீங்க. 'நண்பியோடு கடலை', 'ஆத்தா ஜெயலலிதா' போன்ற தனித்துவமான நக்கல்கள் அருமையாக இருக்கிறது.]]]

    வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா..!

    ReplyDelete
  20. [[[RAVI said...

    உண்மைதான். தமிழகத்தில் இன்னும் எக்கச்சக்க கிராமங்கள் மின்வெட்டால் பாதிப்படைந்து வருகிறது. உங்கள மாதிரி தட்டிக் கேக்க ஆளு இல்லாம ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ரொம்பவே குளிர்விட்டுப் போச்சு.]]]

    கிராமப் புறங்களில் இருக்கும் கட்சியினரே அமைதியாக இருக்கிறார்கள். மக்களைக் குறை சொல்லி என்ன புண்ணியம் ஸார்..?

    ReplyDelete
  21. [[[Ramesh said...

    Neenga sollithaana aaathaku vote pootoom. nengalee ipadi sonna eppadi?]]]

    இதென்ன புதுக் கதை..? நானென்ன ஆத்தாவுக்கா ஓட்டு போடச் சொன்னேன்..? பச்சைப் பொய்..!

    ReplyDelete
  22. Vijay Periasamy said...

    ஏற்கனவே பல விவசாய நிலங்களை , ரியல் எஸ்டேட்காரர்களிடம் பறி கொடுத்துவிட்ட நிலையில், மிச்ச சொச்சம் இருக்கும் விலை நிலங்களையும், அரசும், மின்வெட்டும் 'தானே'வும் பலி வாங்கினால்,
    மிக விரைவில் இந்திய அணைத்து தானியங்களையும் இறக்குமதி செய்துதான் மக்களின் பசியாற்ற வேண்டியதாயிருக்கும். பாவம் விவசாயிகள்!]]]

    அப்படியொரு நிலைமை வந்தால் விவசாயிகள் பாவமாக இருக்க மாட்டார்கள். அவர்களைத் தவிர மற்றவர்கள்தான் பாவமாகிவிடுவார்கள்..!

    ReplyDelete
  23. [[[Kaliraj said...
    நான் பல வருடமாக வெளிநாட்டில் இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது பொருட்கள் உறவினர்களுக்கு வாங்கிவருவது வழக்கம். போன முறை அவர்கள் அனைவரும் சொல்லி வைச்ச மாதிரி விரும்பிக்கேட்ட ஒன்று ரொம்ப நேரம் எரியுறமாதிரி எமர்ஜன்ஸி லைட் வாங்கிட்டு வான்னுதான். LED Emergency லைட் வாங்கினேன். ஒரு முறை சார்ஜ் செய்தால் சும்மா 6 மணி நேரத்துக்கு பிரச்சனை இல்லை. நீ இதுவரைக்கும் வெளிநாட்டில் இருந்து வாங்கிட்டு வந்ததுலையே இதுதான் உருப்படியான ஒண்ணு. இதுகூட இல்லைன்னா சும்மா பொழப்பு நாறிடுக்கும் என்றார்கள்.]]]

    நல்ல விஷயம் காளிராஜ் ஸார்.. அதுக்காக அதுதான் லைட் இருக்கேன்னு சொல்லி அலட்சியமாக இருத்தலும் கூடாது.. மக்கள் ஏதாவது செய்துதான் ஆக வேண்டும். இல்லையெனில் ஆட்சியாளர்களுக்கு அறிவும் வராது..!

    ReplyDelete
  24. [[[அது ஒரு கனாக் காலம் said...

    நான் கிருஷ்ணமூர்த்தியின் கருத்தை வழி மொழிகிறேன். NDTVயின் க்ரீன்னாதான் (greenathan) பார்க்கும் பொழுது அதில் பெட்ரோமாக்ஸ் விளக்கு போல உள்ள சூரிய ஒளியில் எரியும் ஒரு விளக்கை நிறய கிராமங்களுக்கு கொடுத்தார்கள், அதன் விலை தெரியவில்லை. ஆயிரம் இருக்கலாம். நான் என் கணக்குக்கு ஒரு ஐந்து விளக்கு ஸ்பான்சர் செய்கிறேன். நீங்கள் முதலில் பார்த்த கிராமத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். நிறய பேர்களிடம் இந்த மெசேஜ் பரவும் பொழுது, நீங்கள் போய் வந்த எல்லா கிராமத்தையும் ஒன்று அல்லது இரண்டு விளக்குகள் தர முடியும். உன்னால் முடியும் தம்பி.

    சுந்தர்]]]

    நல்ல விஷயம்தான் சுந்தர்..! அந்த விளக்கு பற்றி விசாரித்துச் சொல்லுங்கள்.. இதனை எப்படி மக்களிடையே பரப்புரை செய்வது என்று யோசிப்போம்..! பின்பு செயல்படுத்துவோம்..! ஆனால் இது தற்காலிகத்துக்குத்தான்..!

    மக்கள் கவலையில்லாமல் வேறு வழியில் போய்க் கொண்டிருந்தால், ஆட்சியாளர்கள் மின் உற்பத்தியை பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கும் ஏதாவது குட்டு வைக்க வேண்டும்..!

    ReplyDelete
  25. சங்கமம் திரட்டியில் இந்த வார - ஆகச் சிறந்த படைப்பா இந்தப் இடுகையத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அண்ணாச்சி

    ReplyDelete
  26. [[[ஜோதிஜி திருப்பூர் said...

    இப்ப புரியுதா?]]]

    நல்லா புரியுதுண்ணே..!

    ReplyDelete
  27. [[[ILA(@)இளா said...

    சங்கமம் திரட்டியில் இந்த வார - ஆகச் சிறந்த படைப்பா இந்தப் இடுகையத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அண்ணாச்சி]]]

    ஆஹா.. சந்தோஷம்.. பெருமையடைகிறேன் இளா..! நன்றிகள் உமக்கு..!

    ReplyDelete
  28. Though I am not living in TN,or in a village, I share the anxiety.
    It is true, people waste energy. It is also true, so much of energy is wasted for bill boards, and other lavish displays.
    \
    The point is not waste , but why it is not being distributed uniformly.
    While common man suffers with power cuts, it does not get disconnected for all big wigs and those who live in upmarket areas or the other.This is heart burn.

    After decades of planning, generating power, still the supply is erratic. Why no political party is worried about this simple requirement. All the time they point fingers against each other and abuse one another.

    Why no NGO has taken up on themselves to at least regulate the supply of power, or invoke RTI?

    The questions are always the same. Year after year.

    ReplyDelete
  29. நான் அங்கேயிருந்த அன்றைக்குத்தான் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை போட்டுத் தள்ளிவிட்டார்கள்.

    //

    அண்ணே enna அண்ணே சொல்லறிங்க :ஒ அப்ப நீங்கதான அது :) எதோ நம்மளால முடிஞ்சது .

    ReplyDelete
  30. [[[Vetrimagal said...
    Though I am not living in TN,or in a village, I share the anxiety.
    It is true, people waste energy. It is also true, so much of energy is wasted for bill boards, and other lavish displays. The point is not waste , but why it is not being distributed uniformly. While common man suffers with power cuts, it does not get disconnected for all big wigs and those who live in upmarket areas or the other. This is heart burn. After decades of planning, generating power, still the supply is erratic. Why no political party is worried about this simple requirement. All the time they point fingers against each other and abuse one another. Why no NGO has taken up on themselves to at least regulate the supply of power, or invoke RTI?
    The questions are always the same. Year after year.]]]

    நீங்கள் வருத்தப்படுவது நியாயம்தான். ஆனால் அநியாயத்துக்கு மின்சாரத்தை செலவழிப்பது நகர்ப்புற மக்கள்தானே ஒழிய.. கிராமப்புற மக்கள் இல்லை. மின்சாரத்தின் மூலம் பயன்படுத்தும் பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமே இதனை செய்ய முடியும்..? யார் இதனை பிரச்சாரம் செய்வது..? யார் இதனை ஒத்துக் கொள்வது..?

    ReplyDelete
  31. [[[G.Ganapathi said...

    நான் அங்கேயிருந்த அன்றைக்குத்தான் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை போட்டுத் தள்ளிவிட்டார்கள்.//

    அண்ணே enna அண்ணே சொல்லறிங்க: ஒ அப்ப நீங்கதான அது :) எதோ நம்மளால முடிஞ்சது .]]]

    கணபதி.. டூ லேட்..!

    திட்டம் போட்டவர்களும், போட்டுத் தள்ளியவர்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டதாக காவல்துறை செய்திகள் கூறுகின்றன..!

    ReplyDelete
  32. [[[Vijayashankar said...

    what about weaving Biz in that area?]]]

    அந்தப் பகுதியில் நிறைய பஞ்சு மில்கள் இருக்கின்றன. அனைத்துமே ஜெனரேட்டர்கள் உதவியோடுதான் செயல்படுகின்றன.. அவர்களுக்கு டீசல் செலவு கூடுதலாகிறது..! ஆனால் அதுவும் சாதாரண மக்களின் கவலையும் ஒன்றில்லையே..?

    ReplyDelete
  33. உண்மைத்தமிழன் இணையதளத்தின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் ரிஷி மாவட்டத் தலைநகரிலிருந்து எழுதுகிறார்!!

    இங்கு காலை 10லிருந்து 12 வரை, மாலை 4லிருந்து 6 வரை மற்றும் இரவு 7.30லிருந்து 8.15 வரை அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நிலவுகிறது. மொத்தம் 4.75 மணி நேரம். இது போக நள்ளிரவிலோ அதிகாலையிலோ சில நேரங்களில் மின்சாரம் போய் வருகிறது.

    இங்கு எண்ணெய் மற்றும் பருப்பு ஆலைகள் அதிகளவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிவகாசியில் அச்சு மற்றும் அது சார்ந்த தொழில்களில் பெரிதும் சிக்கல் நிலவுகிறது.

    இவையெல்லாம்.. இந்த சுதேசிப் பொருளாதாரத்தை உயர்த்தும் காரணிகளெல்லாம் ஆட்சியாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. பன்னாட்டுக் கம்பெனிகளின் பாடு தான் பெரிதாகத் தெரிகிறது.

    மற்றபடி, இங்கு சிலர் குறிப்பிட்டதுபோல் CFL பல்புகளின் உபயோகமும், மின்விரயத்தை கட்டுப்படுத்தும் வகையிலான முயற்சிகளும் பெரிதும் கைகொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

    - இப்படிக்கு, தொடர்ந்து மக்களுக்காகப் பணியாற்றி வரும் உண்மைத்தமிழன் அண்ணனுக்கு ஒரு அணிலாக ரிஷி!

    ReplyDelete
  34. [[[இங்கு எண்ணெய் மற்றும் பருப்பு ஆலைகள் அதிகளவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிவகாசியில் அச்சு மற்றும் அது சார்ந்த தொழில்களில் பெரிதும் சிக்கல் நிலவுகிறது. இவையெல்லாம்.. இந்த சுதேசிப் பொருளாதாரத்தை உயர்த்தும் காரணிகளெல்லாம் ஆட்சியாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. பன்னாட்டுக் கம்பெனிகளின் பாடுதான் பெரிதாகத் தெரிகிறது. மற்றபடி, இங்கு சிலர் குறிப்பிட்டதுபோல் CFL பல்புகளின் உபயோகமும், மின் விரயத்தை கட்டுப்படுத்தும் வகையிலான முயற்சிகளும் பெரிதும் கை கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.]]]

    மின் விரயத்தைக் கட்டுப்படுத்துவது மக்கள் தலையில் மட்டுமே சுமத்தக் கூடாது. அரசுகளும் இதற்கு பொறுப்பேற்கத்தான் வேண்டும். 40 வால்ட்ஸ் பல்புகளை வீட்டில் வைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு இவர்கள் மட்டும் தங்களது கட்சி மற்றும் ஆட்சி சமப்ந்தமான விழாக்களுக்கு சீரியல் லைட்டுகளை போட்டு அமர்க்களப்படுத்துகிறார்களே.. யார் கேட்பது..?

    ReplyDelete
  35. கிராமங்களில் வாழ்க்கைக்கு வேண்டிய மின்சாரம் இல்லை. நகரங்களில் ஆடம்பரத்திற்காக (நியான் போர்டுகள், AC, ஃப்ரிட்ஜ்) உபயோகிக்கும் மின்சாரத்தின் அளவோ அதிகம்.
    இந்த வேறுபாட்டிற்கு என்னதான் செய்ய முடியும். ஆண்டாண்டு காலமாக பொதுமக்கள்தான் பாதிக்கப் படுகிறார்கள். ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது எதிர்கட்சிக்கு அமோக ஆதரவளித்து ஆட்சியில் அமர்த்துவது மட்டும்தான் முடிகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்கள் நிலை மட்டும் மாறப்போவது இல்லை.

    ReplyDelete
  36. [[[முகில் said...

    கிராமங்களில் வாழ்க்கைக்கு வேண்டிய மின்சாரம் இல்லை. நகரங்களில் ஆடம்பரத்திற்காக (நியான் போர்டுகள், AC, ஃப்ரிட்ஜ்) உபயோகிக்கும் மின்சாரத்தின் அளவோ அதிகம்.
    இந்த வேறுபாட்டிற்கு என்னதான் செய்ய முடியும். ஆண்டாண்டு காலமாக பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது எதிர்கட்சிக்கு அமோக ஆதரவளித்து ஆட்சியில் அமர்த்துவது மட்டும்தான் முடிகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்கள் நிலை மட்டும் மாறப் போவது இல்லை.]]]

    மின் பயன்பாட்டை குறை என்று மக்களைச் சொல்லிவிட்டு அரசாங்கமே வீண் விரயம் செய்கிறது..! இதை யார் கேட்பது..?

    ReplyDelete