Pages

Saturday, December 31, 2011

மெளனகுரு – சினிமா விமர்சனம்..!


31-12-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இப்படியொரு படம்.. அதுவும் வருடக் கடைசியில் வருமென்று எதிர்பார்க்கவில்லைதான்..! ஆனால் தமிழ்ச் சினிமாவை பெருமைப்படுத்தியிருக்கும் திரைப்படம்..! கதை இல்லை.. கதை இல்லை என்பவர்களின் முகத்தில் அரை டன் கரியைப் பூசியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் சாந்தகுமார். கதைகளை நமக்குள் இருந்தே எடுக்கலாம். அதைத் தேடாமலேயே புலம்புவதில் அர்த்தமில்லை என்பதையும் புதுமுக இயக்குநர்கள் இப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதிகார வர்க்கம் நினைத்தால் ஒரு சாமான்யனை என்ன பாடுபடுத்தலாம் என்பதுதான் கதை. லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் ஒரு போலீஸ் உயர் அதிகாரியின் அலட்சியமான விளையாட்டால் பாதிக்கப்படுகிறார் அருள்நிதி. தவறு மேல் தவறு செய்தபடியே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அந்த துணை கமிஷனரின் லீலைகளால் தனது வாழ்க்கையை இழக்கும் அபாயத்தில் இருக்கும் அருள்நிதியால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் இறுதிக் கதை..!

விதியின் விளையாட்டு என்று தலைப்பு வைத்திருந்தாலும் அது சரியாகத்தான் இருந்திருக்கும். மெளனகுரு என்று அருள்நிதியின் தனிப்பட்ட கேரக்டர் ஸ்கெட்ச்சையே தலைப்பாக்கியிருக்கிறார்கள். மெளனமாக இருப்பது. பேச ஆரம்பித்தால் வெடுக்கென்று கொட்டுவது.. இடம் பார்த்து பேசத் தெரியாதது.. வெளியுலகம் அறியாமல் வாழ்க்கையோட்டத்தில் கலந்திருப்பது என்று தற்போதைய இளைய சமுதாயத்தில் ஒரு அங்கமாக இருக்கும் ஒருவனாக அருள்நிதி வாழ்ந்து காட்டியிருக்கிறார்..!

சில இடங்களில் அவருடைய அதீத மெளனம் நமக்குள் கோபத்தைக் கிளறுகிறது. ஆனால் அங்கேதான் இயக்குநர் ஜெயித்திருக்கிறார். இப்படியொரு குணாதிசயம் கொண்டவருக்கான முதல் எதிரி உடன் படிக்கும் ஒரு மாணவன்.. இன்னொரு எதிரியாக கல்லூரி முதல்வரின் மகன்.. இந்த விதி விளையாட்டு கடைசியாக அருள்நிதியிடமே போய் நிற்க.. அவர் இப்போது காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் ஒரு குற்றவாளி.. இதையும் யாரும், யாரையும் குறை சொல்ல முடியாத அளவுக்கான வாழ்க்கைப் பாடங்களை, இயக்குநர் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீட்டுக் கட்டுகளை போல் செதுக்கியிருக்கிறார் திரைக்கதையில்..!

அம்மாவுக்கு மூத்த மகனுடனும் இருக்க வேண்டும். பேரனுடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை. அருளுக்கு அம்மாவுடனும் இருக்க வேண்டும். வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்ற ஆசை..! போலீஸ்காரர்களுக்கு எப்படியாவது இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஆசை. மர்ம மரணத்தை எப்படியாவது துப்புத் துலக்கிவிட வேண்டும் என்று கர்ப்பவதியான பெண் எஸ்.ஐ.யின் ஆசை..! சதுரங்க ஆட்டம்போல அனைவரும் ஆடுகின்ற இந்த ஆட்டத்தில் ஒரு மயிலிறகாய் அருள்நிதியின் காதல் எபிசோட்..! 

ஒரு ரூபாய் காயின் கிடைக்காமல் கடைக்காரரிடம் மல்லுக் கட்டும்போதே அருள்நிதியின் கேரக்டர் புரிந்தது.. தன்னை தாக்கிய போலீஸ்காரரை அடித்துவிட்டு அவரது குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷனில் போய் நிற்பது, அண்ணன் அழைத்திருக்கிறான் என்றவுடன் அவன் குழந்தைக்கு பீ துடைக்கக் கூப்பிட்டிருக்கான் என்று வெடுக்கென்று கடுப்படிப்பது, அண்ணனின் வீட்டில் தான் அழையா விருந்தாளி என்பதை புரிந்து கொண்டு கிளம்புவது.. பஸ் மறியலில் தனியாளாக தரையில் அமர்ந்திருப்பது, வந்திருப்பது போலீஸ் என்று தெரியாமல் தெனாவெட்டாக “யாருங்க நீங்க..?” என்று கேட்பது.. மனநல மருத்துவமனையில் தான் யார் என்று சொல்ல முடியாமல் தவிப்பது.. தப்பித்து வந்து தனது குடும்பத்தினருக்கு புரிய வைக்க முயல்வது.. இறுதியில் "இப்ப நான் போலாமாங்க..?" என்று உமா ரியாஸிடம் கேட்பதாக.. அத்தனையிலும் மெளனகுருவாகவே காட்சியளிக்கிறார் அருள்.

அருள்நிதி அதிகாரத்தை எதிர்த்து போராடுவது, தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநரை பாராட்டத்தான் வேண்டும். தனது குடும்பத்தினர் தன்னை பைத்தியம் என்று சொல்லி ஒதுக்குவதைத் தடுக்கவும், தனது கல்லூரியில் தான் மீண்டும் படிக்க விரும்பவுமே போலீஸ் அதிகாரிகளுடன் கடைசிவரையில் அவர் மல்லுக் கட்டுகிறார். செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்கிறபோதுதான் செய்துவிட்டு அனுபவிக்கிறேனே என்பதாக அவர் எடுக்கும் முடிவுக்கு ஒரு சாதாரண சாமான்யனின் எண்ணத்தை பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர்.

போலீஸ் எஸ்.ஐ.யாக வரும் உமா ரியாஸின் பாத்திரப் படைப்புதான் படத்திற்கு மிகப் பெரும் பலம். அவருடைய அடுத்தடுத்த விசாரணைகளுக்கு இடையிலேயே அவருடைய கர்ப்பவதி கோலத்தையும் தொடர்ச்சியாக காட்டியிருக்க.. கோபம் முழுவதும் அந்த 3 போலீஸார் மீதே அதீதமாக எழுகிறது. இயக்குநர் எதை சாதிக்க நினைத்தாரோ, அதைச் செய்து காட்டிவிட்டார்..! 

காவல்துறையின் பச்சை நாடா விதிமுறைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எஸ்.ஐ.யை இடம் மாற்றுவது மிக எளிதானதுதான். ஆனால் விசாரணையை முடக்கினால் பின்னாளில் சமாளிக்க முடியாது என்பதால்தான் பிராடு துணை கமிஷனரே அதனை அனுமதிக்கிறார். எந்த எல்லைவரை போனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுப் பிடிப்பதும், இறுதியில் போலீஸ் டிபார்ட்மெண்ட்டின் மரியாதை என்ற ஒரு வார்த்தையால் தப்பிக்க நினைப்பதும் ரியலிஸம்.

துணை கமிஷனர் ஜான் அசத்துகிறார். இறுக்கமான முகம். டைட் குளோஸப் காட்சிகளில் வசனமே தேவையில்லாமல் அவருடைய முகமே அனைத்தையும் செய்துவிடுகிறது..! அவருடன் கொள்ளையில் ஈடுபடும் அந்த இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தியும்தான் கடைசியில் பலிகடா ஆவார்கள் என்பதை எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பாராத முடிவு..!

முத்தாண்டிக்குப்பம் வசந்தா கற்பழிப்பு வழக்கிலும், அண்ணாமலை நகர் பத்மினி கற்பழிப்பு வழக்கிலும்கூட உடனடியாக காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விஷயத்தை பேசித் தீர்க்கவே அரசு அதிகாரங்கள் செயல்பட்டன. கம்யூனிஸ இயக்கங்களும், சில மனித உரிமை அமைப்புகளும் போர்க்கொடி தூக்கிய பின்பே இன்றைக்கு அவர்கள் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அவர்களைக் காப்பாற்ற முனைந்த அத்தனை உயரதிகாரிகளும் இன்றைக்கும் பொறுப்பில்தான் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் சிந்தித்திருக்க வேண்டுமே..? அவர்களுக்கு அனைத்தையும்விட பெரிய விஷயம் போலீஸ் டிபார்ட்மெண்ட்டின் மரியாதை..!

இந்த வார்த்தையை சொல்லும் அந்த கமிஷனரின் டயலாக்கில் மட்டுமே ஒரு சிறிய தவறு இருந்தது. அன்னியோன்யமாக டி.ஐ.ஜி., ஐ.ஜி.கிட்ட பதில் சொல்ல முடியலை என்பதற்குப் பதிலாக என் மேலதிகாரிகள் என்று அவர் சொல்லி உமா ரியாஸ் பதில் சொல்ல முடியாமல் தவிப்பதில் மட்டுமே ஒரு சின்ன இடறல்..! லாஜிக் மீறல்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் அருளின் கேரக்டர் ஸ்கெட்ச்சே இப்படித்தான் என்பதில் மூழ்கிப் போய் விடுகிறது..!

இனியா என்னும் தேவதை இங்கே கொஞ்ச நேரம் தோகை விரித்து ஆடியது. அதிகமான வாய்ப்புகள் இல்லையென்றாலும், அவர் மூலமாகத்தான் திரைக்கதை ஓரிடத்தில் விரிகிறது என்பதாலும், தற்போதைய சினிமா டிரெண்ட்டுக்கு ஏற்றாற்போலும் இடையில் ஒரு காதலை புகுத்த வேண்டியிருக்கிறது.. ஒன்றும் தவறில்லை..! விபச்சாரப் பெண்ணாக வருபவர், ஒரு சில காட்சிகளே என்றாலும் அசத்தியிருக்கிறார். அவ்வளவோ உயரத்தில் இருக்கும் பேனில் தூக்கு மாட்டிக் கொண்டால் போலீஸுக்கு சந்தேகம் வரத்தானே செய்யும். இதனை டயலாக்கில் வைத்திருந்தால் இன்னும் பொறுத்தமாக இருந்திருக்கும்..

ஒரேயொரு காட்சி என்றாலும் அம்மாவாக நடித்தவர் அசத்தியிருக்கிறார். இனியாவுடனான தொடர்பை பார்த்துவிட்டு அருளின் நெஞ்சில் அடித்துவிட்டுப் போகும் காட்சி தத்ரூபம்.. ஆனால் அதுதான் புறக்கணிப்பின் துவக்கம். முறையான விஷயம்தான். காதல் தவறில்லையே..? ஆனால் தனது மகனை ஏதோவொன்றாக நினைத்திருக்கும் அம்மாவின் கணிப்பை அங்கேயே நிறுவியிருக்கிறார் இயக்குநர்.

முதல் ஷாட்டில் இருந்தே களை கட்டியிருக்கிறது மகேஷ்முத்துச்சாமியின் ஒளிப்பதிவு. அந்த இருட்டில் இருந்து வெளிவரும் முகங்களின் அணிவரிசையில் அருளின் முகத்தைப் பார்த்தவுடன் ஏற்படும் இரக்கம் கடைசிவரையில் இருந்ததுதான் படத்தின் பலம்.. மனநல மருத்துவமனையில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு பெரும் பலம் ஒளிப்பதிவுதான்..! படத்திற்கு காதல் பாடல்கள் தேவையில்லைதான். ஆனாலும் வைத்திருக்கிறார்கள். இசை தமனாம்..! பத்தோடு பதினொன்று..!

படம் பார்த்து என்ன செய்யப் போகிறீர்கள் என்றெல்லாம் கேட்பவர்களுக்கு தயவு செய்து இப்படத்தை சிபாரிசு செய்கிறேன். அவசியம் பாருங்கள். அந்த அருளாக நாளைக்கே நீங்கள் இந்த சமுதாயத்தின் முன்பாக நிற்க வேண்டி வரலாம். எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தையும், எதிர்வரும் ஆபத்துக்களைத் தாண்டும் தந்திரத்தையும் நாம் அறியும் பாடங்களே நமக்குக் கற்றுத் தரும். அதில் இதுவும் ஒன்று..!

முதல் வாரமே படம் பல ஊர்களில் எடுக்கப்பட்டுவிட்டது. பின்பு மெதுவாக பரவிய மெளத்டாக்கினால், நேற்றைக்கு கூடுதலாக 31 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். நிச்சயமாக இத்திரைப்படம் அனைத்து ஊர்களிலும் கொண்டாடப்பட வேண்டியவைகளில் ஒன்று..!

மெளனகுரு – அழுத்தமான திரைப்பாடம்..!

16 comments:

  1. மௌனகுருவின் வசூலுக்கு வழிவிட்ட ராஜபாட்டையாருக்கு ஜெ!

    ReplyDelete
  2. ஹ்ஹ்ம் ... இத நம்மூரு சினிமா கொட்டாயில போடலயே. டீவிடி வந்தப் பிறகு தான் பாக்கணும்.

    ReplyDelete
  3. சந்தேகமே இல்லாமல் நல்ல படம். நான் திருட்டு பிரின்ட்டில் பார்க்க ஆரம்பித்து பாதிக்கு முன்னரே..அதை நிறுத்திவிட்டு தியேட்டரை தேட ஆரம்பித்தேன். தியேட்டரில்தான் முழுபடமும் பார்த்தேன். 2011ல் வந்த படத்தில் நல்ல படம்

    மௌனகுரு - சினிமா

    ReplyDelete
  4. eppadan padam pathu mudichaen.. sema padam...became fan of arul nidhi.....

    ReplyDelete
  5. அந்த குடும்ப படம் எதுவும் ஓடினால் அது நாட்டிற்கு ஆபத்தே அன்றி வேறில்லை. அப்புறம் அந்த கிழவன் இவந்தான் கட்சிக்கு சரியான ஆளுன்னு பிரதமரை போய் பார்க்க வைப்பாரு! அதுக்காகவே ஓடக்கூடது! அருள்நிதியின் வீழ்ச்சி தலைமுறை சாபம் அது விடாது!

    ReplyDelete
  6. [[[! சிவகுமார் ! said...

    மௌனகுருவின் வசூலுக்கு வழிவிட்ட
    ராஜபாட்டையாருக்கு ஜெ!]]]

    ராஜபாட்டை ஓடியிருந்தாலும், இந்தப் படமும் கூடவே ஓடியிருக்கும் சிவா.. தரம் நன்றாக இருந்தால் நிச்சயமாக படம் ஓடும்..!

    ReplyDelete
  7. [[[ஹாலிவுட்ரசிகன் said...

    ஹ்ஹ்ம் ... இத நம்மூரு சினிமா கொட்டாயில போடலயே. டீவிடி வந்த பிறகுதான் பாக்கணும்.]]]

    அவசியம் பாருங்கண்ணே..!

    ReplyDelete
  8. [[[Chilled beers said...

    சந்தேகமே இல்லாமல் நல்ல படம். நான் திருட்டு பிரின்ட்டில் பார்க்க ஆரம்பித்து பாதிக்கு முன்னரே.. அதை நிறுத்திவிட்டு தியேட்டரை தேட ஆரம்பித்தேன். தியேட்டரில்தான் முழு படமும் பார்த்தேன். 2011-ல் வந்த படத்தில் நல்ல படம்.]]]

    நல்ல விஷயம். வாழ்க பீர் ஸார்..!

    ReplyDelete
  9. [[[Dinesh said...

    eppadan padam pathu mudichaen.. sema padam... became fan of arul nidhi.]]]

    அருள்நிதிக்காகவே தயார் செய்த கதை போல் உள்ளது..! இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும்..!

    ReplyDelete
  10. [[[ராஜரத்தினம் said...

    அந்த குடும்ப படம் எதுவும் ஓடினால் அது நாட்டிற்கு ஆபத்தே அன்றி வேறில்லை. அப்புறம் அந்த கிழவன் இவந்தான் கட்சிக்கு சரியான ஆளுன்னு பிரதமரை போய் பார்க்க வைப்பாரு! அதுக்காகவே ஓடக் கூடது! அருள்நிதியின் வீழ்ச்சி தலைமுறை சாபம். அது விடாது!]]]

    ஏண்ணே இப்படி..? விடுண்ணே.. படம் தரமா இருந்தால், நிச்சயமா ஓடும்ண்ணே..!

    ReplyDelete
  11. சின்னப்பசங்கள்லாம் என்னமா கலக்குறாங்க, விக்ரம் மாதிரி ஆளுகதான் சொதப்பிட்டு இருக்காங்க......! நல்ல விமர்சனம்!
    புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணே!

    ReplyDelete
  12. [[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

    சின்னப் பசங்கள்லாம் என்னமா கலக்குறாங்க, விக்ரம் மாதிரி ஆளுகதான் சொதப்பிட்டு இருக்காங்க.! நல்ல விமர்சனம்!]]]

    இயக்குநர்கள் செய்யும் மாய்மாலம் இது. பழையவர்கள் புரிந்து கொண்டால் நல்லது.

    [[[புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணே!]]]

    உங்களுக்கும் எனது வாழ்த்துகள் ராமசாமி..!

    ReplyDelete
  13. யுத்தம் செய் படத்திற்கு பிறகு அதே உணர்வுகளை (அ) தாக்கத்தை ஏற்படுத்திய படம்

    ReplyDelete
  14. விருதுநகருக்கு இந்தப் படம் இன்னும் வரலண்ணே! மாவட்டத் தலைநகருக்கே வரலைன்னா பட விநியோக நிலைமையை என்னன்னு சொல்றது!! வந்தா தியேட்டருக்குப் போயி பார்க்கணும்னு நெனச்சிருக்கேன். வராமலேயே போயிட்டா என்ன பண்றது?

    ReplyDelete
  15. [[[ஸ்ரீகாந்த் said...

    யுத்தம் செய் படத்திற்கு பிறகு அதே உணர்வுகளை (அ) தாக்கத்தை ஏற்படுத்திய படம்.]]]

    சிறந்த மறுமொழி..! உண்மைதான்..!

    ReplyDelete
  16. [[[ரிஷி said...
    விருதுநகருக்கு இந்தப் படம் இன்னும் வரலண்ணே! மாவட்டத் தலைநகருக்கே வரலைன்னா பட விநியோக நிலைமையை என்னன்னு சொல்றது!! வந்தா தியேட்டருக்குப் போயி பார்க்கணும்னு நெனச்சிருக்கேன். வராமலேயே போயிட்டா என்ன பண்றது?]]]

    அவசியம் வரும் ரிஷி.. காத்திருந்து பாருங்கள்..!

    ReplyDelete