28-11-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அகில உலக தமிழர்களும் ஆசையோடு காத்துக் கொண்டிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கிற்காக ஆத்தா ஜெயலலிதா, பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகி பதிலளித்தது பற்றிய சென்ற வார நக்கீரனின் சிறப்புக் கட்டுரை இது. பதிவு செய்து வைக்க விரும்புகிறேன்..! ஜெயலலிதா பெங்களூர் ஜெயிலுக்குள் அடியெடுத்து வைக்கவிருக்கும் சூழலுக்கு முதல் படியாக இதனை எடுத்துக் கொள்ளலாம்..! படிக்காதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!
ஜெயலலிதாவின் எதிர்காலம் இனி, இவர் கையில்..!
சுப்ரீம் கோர்ட்டில் பெட்டிஷன் போட்டாலும், பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட ஜெ., தனது 313 ஸ்டேட்மெண்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில், விசாரணையை எதிர்கொள்ளும் பாணியை ரொம்பவும் மாற்றியிருந்தார்.
முதல்முறையாக அக்டோபர் 21, 22 ஆகிய இரு நாட்களும் அவர் ஆஜரான போது, மொத்தமாக அவர் பதில் சொல்லியிருந்த கேள்விகள் 567தான். முதலமைச்சராக இருப்பதால் அதனைக் காட்டி, அடுத்தடுத்த முறை நேரில் ஆஜராகாமல் சுப்ரீம் கோர்ட் மூலம் விலக்கு வாங்கிவிடலாம் என ஜெ. தரப்பு செய்த மூவ்கள் ஃபெயிலியர் ஆனதால், எப்படியாவது இந்த ஸ்டேட்மெண்ட்டை விரைவாக முடித்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார் ஜெ. அதைத்தான் நவம்பர் 22, 23 தேதிகளில் பெங்களூரு பாரப்பண்ண அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள தற்காலிக சிறப்பு நீதிமன்றத்தில் காண முடிந்தது.
நவம்பர் 22.
தமிழக-கர்நாடக எல்லையில் அ.தி.மு.க. கொடி போட்ட கார்களையும், கரைவேட்டி கட்டிய ர.ர.க்களையும் வடிகட்டிக் கொண்டிருந்தது கர்நாடக போலீஸ். பரப்பன அக்ரகாரம் கோர்ட்டுக்கு சில கிலோ மீட்டர்கள் முன்பாகவே 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாது காப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு ஏ.டி.ஜி.பி.க்கள் தலைமையிலான கர்நாடக டீம் தமிழக முதலமைச்சருக்கான இசட் ப்ளஸ் பாதுகாப்பில் கவனமாக இருந்தது. 25 கார்கள் புடைசூழ வந்தது ஜெ.வின் கான்வாய். அந்தக் கான்வாயில் இதே சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள சசிகலா ஒரே காரில் ஜெ.வுடன் வந்தார். தமிழக மந்திரிகளில் 15-க்கும் அதிகமானவர்கள் பாரப்பண்ண அக்ரஹாரத்தில்தான் இருந்தனர். கான்வாயில் கடைசியாக வந்த காரில் உட்கார்ந்திருந்தார் முன்னாள் வளர்ப்பு மகனும் வழக்கில் சிக்கியிருப்பவருமான சுதாகரன். அவருடன் அவரது வக்கீல் சரவணகுமாரும் இருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இம்முறை இளவரசி வரவில்லை.
ஜெ.வுக்காக வக்கீல் குமார் தலைமையில் கருப்புக் கோட் டீம் ரெடியாக இருந்தது. இந்த படைபலம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எப்போதும்போல் சிங்கிளாக தன் பணியை மும்முரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா. காலை 10.30 மணிக்கு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா தனது ஆசனத்தில் அமர, எதிரே குற்றவாளிக் கூண்டில் சசிகலா, சுதாகரன் இருவரும் இருந்தனர். ஜெ.வுக்கு மட்டும் தனியாக நாற்காலி போடப்பட்டிருந்தது. அவர் பெரியளவில் ரியாக்சன் எதுவும் காட்டவில்லை. அவ்வப்போது, சுதாகரனை மட்டும் முறைத்துக் கொண்டிருந்தார்.
முதல் நாளில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகள் பலவும் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் பற்றியதுதான். அந்த ஆடம்பரத் திருமணம் பற்றிய கேள்வி ஒவ்வொன்றும் நீதிபதியிடமிருந்து வெளிப்பட்டபோது, அதற்குப் பதில் சொல்வதற்கு முன்னதாக சுதாகரனை ஒரு முறைப்பு முறைக்க ஜெ. தவறவில்லை என்கிறார்கள் கோர்ட்டுக்குள் இருந்த வழக்கறிஞர்கள். ஜெ.விடம் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றியும் அதற்கான பதில்கள் பற்றியும் அவர்களிடம் கேட்டோம்.
"சுதாகரன் உங்கள் வளர்ப்பு மகனா?''என்று நீதிபதி கேட்க, "அப்படியெல்லாம் எதுவுமில்லை'' என்று அவசரமாக பதில் சொன்னார் ஜெ. நீதிபதியின் கேள்விகள் தொடர்ந்தன.
"திருமணத்திற்காக 6 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறீர்கள். புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கச்சேரி நடந்திருக்கிறது. இன்விடேஷனை ரகுமானுக்குக் கொடுக்கும்போதே வெள்ளிப்பாத்திரங்களைப் பரிசாகக் கொடுத்துதான் இன்விடேஷன் வைத்திருக்கிறீர்கள்'' என்று நீதிபதி வரிசையாகச் சொல்ல, ஜெ.வோ சுதாகரனைப் பார்த்து முறைத்தபடி டென்ஷனாகியிருக்கிறார். (சொத்துக் குவிப்பு வழக்கு சென்னையில் நடந்தபோதே இந்த இசைக்கச்சேரி பற்றி சாட்சியமளித்திருந்தார் ரகுமான்).
ஸ்பெஷல் கோர்ட்டில் இது போன்ற கேள்விகள் கேட்கப்படும் என்பதையும், அதற்கு எப்படி பதிலளிக்கவேண்டும் என்பதையும் ஏற்கனவே கார்டனில் ஜெ.வுக்கு ரிகர்சலாகவே செய்து காட்டியிருந்தார்கள் அவரது வக்கீல்கள். அதனை மறக்காமல் இருந்த ஜெ., நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினார்.
"கல்யாணச் செலவுகளை பெண் வீட்டார் (சிவாஜி குடும்பத்தினர்) ஏற்றுக் கொண்டாங்க. நான் எந்த செலவும் செய்யவில்லை. சிவாஜி மகன் ராம்குமார்தான் எல்லா செலவுகளையும் பார்த்தார். அதற்கான கணக்குகளை அவர் இன்கம்டாக்ஸ் ஆபீ சிலும் சமர்ப்பித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியை ஏற்பாடு செய்தவரும் ராம்குமார்தான்'' என்று ஜெ. பதில் சொல்ல, வளர்ப்பு மகன் திருமணம் தொடர்பாக மற்ற சாட்சிகள் தெரிவித்த தகவல்களிலிருந் தும் கேள்விகள் தொடர்ந்தபடியே இருந்தன.
"கல்யாண வேலை பார்ப்பதற்காகவே ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒரு வருக்கு இன்சார்ஜ் கொடுத்திருக்கிறீர்கள்'' என்று நீதிபதி கேட்க, "அதுவும் எனக்குத் தெரியாது'' என்று ஜெ. சொன்னார். வளர்ப்பு மகன் திருமணம் பற்றி மட்டும் சுமார் 200 கேள்விகளை நீதிபதி கேட்க, பெரும்பாலானவற்றுக்கு, "தெரியாது... தெரியாது...' என்றே பதில் சொன்னார் ஜெ. இன்னும் மற்ற விஷயங்கள் குறித்த கேள்விகளும் இருக்கிறது என்பதால், மதிய உணவுக்காக 15 நிமிடம் மட்டுமே எடுத்துக்கொண்டார் ஜெ. கடந்த முறை 1 மணி நேரம் ஆனது.
ஜெ.வின் வங்கிக் கணக்கு அது தொடர்பான பரிவர்த்தனைகள் பற்றிய கேள்விகள் ஆரம்பமாயின. 36, போயஸ்கார்டன், சென்னை-86 என்ற முகவரியில் மட்டும் 1991-96 காலகட்டத்தில் 42 கம்பெனிகள் நடத்தப்பட்டிருப்பதையும் இதில் ஜெ., சசிகலா, இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக இருந்ததையும் சிலவற்றில் சுதாகரனும் இருந்ததையும் பற்றி நீதிபதி தெரிவித்து, ஜெ. பெயரில் நேரடியாக சில டிரான்ஸ்செக்சன் நடந்திருப்பதையும் சுட்டிக் காட்டி அது பற்றிய கேள்விகளுக்கு வந்தார்.
"நீங்கள் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரில் வருமான வரி எதுவும் கட்டப்படவில்லை. உங்களது ஆட்சி காலமான 91-96 காலகட்டத்தில் இவர்கள் பெயரில் 42 கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் என்ற பொறுப்பில் பொது ஊழியராக இருந்த உங்கள் வீட்டு முகவரியில் இருந்த இவர்கள் உங்களுக்குத் தெரியாமல் எப்படி இவ்வளவு பணத்தை முதலீடு செய்திருக்க முடியும்?'' என்ற நீதிபதி, "சட்டவிரோதமாக நீங்கள் சம்பாதித்தவைதான் இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா?'' என்றார்.
தன் பெயரில் சில டிரான்ஸ்செக்சன்கள் நடந்துள்ளதை ஒப்புக்கொண்ட ஜெ., அதே நேரத்தில் அந்த கம்பெனிகள் ஒவ்வொரு நாள் வரவு-செலவு பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று தனது அறியாமையையும் தெரிவித்தார். எல்லாவற்றையும் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா தெளிவாகப் பதிவு செய்துகொண்டார்.
நகை, டிரஸ், அலங்காரப் பொருட்கள் பற்றிய கேள்விகள் இதனையடுத்துத் தொடங்கின. அப்போது ஜெ, "நான் நடிகையாக பல மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறேன். அதில் அணிந்திருந்த உடைகளை யும் செருப்பு, கைக்கடிகாரம் ஆகியவற்றையும் நினைவுப் பொருட்களாக வைத்திருக்கிறேன். ரெய்டு என்ற பெயரில் 36, போயஸ் கார்டன் என்ற முகவரிக்கு மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு, அருகிலேயே உள்ள 31-ஏ, போயஸ் கார்டன் என்ற முகவரியிலும் வரம்பு மீறிப் போய் ரெய்டு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரமே இல்லாத ஹைதராபாத்துக்கும் போய் அங்கே இருந்த என் பங்களாவிலும் ரெய்டு நடத்தினாங்க'' என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார் ஜெ.
"அந்த டிரஸ் அனைத்தும் உங்களுக்கு சொந்தமானவையா..?'' என்று நீதிபதி கேட்டதற்கு, "அதில் பல உடைகள் சசிகலாவுடையது'' என்ற ஜெ., "நகையிலும் அவருக்கு சொந்தமானவை உண்டு. நான் நடிகையாக இருந்தபோதே 21 கிலோ நகை வாங்கியிருந்தேன். அதற்கான மதிப்பீடும் செய்யப்பட்டிருந்தது. அ.திமு.க. தொண்டர்கள் பலர் எனக்குப் பரிசாக கொடுத்திருந்த தங்கத்திலான பொருட்களையும் வீட்டில் வைத்திருந்தேன். அதையெல்லாம் சேர்த்து ரெய்டுக்கு வந்த அதிகாரிகள் கணக்கிட்டுவிட்டார்கள்'' என்று சொன்னார் ஜெ. முதல் நாளில் கேள்விகளும் பதில்களும் வேகமாகச் செல்ல, ஒரே நாளில் 600 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதில் சொல்லியிருந்தார் ஜெ.
மொத்த கேள்விகள் 1359. அக்டோபர் மாதத்தில் 2 நாட்கள் ஆஜரானபோது பதிலளித்தவை 567. மீதமிருந்த 792 கேள்விகளில் நவம்பர் 22-ந் தேதி மட்டும் 600 கேள்விகளுக்குப் பதில் பெறப்பட்டதால், 192 கேள்விகள் மிச்சமிருந்தன. மறுநாள் விசாரணை தொடர்ந்தது.
நவம்பர் 23. கர்நாடக போலீ சின் கெடுபிடி அதிகமாகவே இருந்தது. கோர்ட் டுக்குள் மீடியாக்கள் யாரும் நுழைய முடியாதபடி தடுப்பரண்கள் போடப்பட்டிருந்தன. அப் போது, பரப்பன அக்ரகாரம் சிறையில் உள்ள கைதிகளைப் பார்ப்பதற்காக வரும் உறவினர்களை அழைத்துச் செல்வதற்காக பஸ் வந்தது. அந்த பஸ்ஸில் நாமும் ஏறிக் கொண்டோம். சிறை வளாகத்தில்தான் சிறப்புக் கோர்ட் தற்காலிகமாக செயல்பட்டுக் கொண்டிருந்ததால், கோர்ட் வளாகத்தை அடைந்தோம்.
இரண்டாவது நாள் விசாரணையில், போலீஸ் அதிகாரிகள் கொடுத்திருந்த ரிப்போர்ட் டின் அடிப்படையில் ஜெ.விடம் கேள்விகள் கேட்கப்பட்டன. "விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு இப்படித் தெரிவித்திருக்கிறார்'' என்று சொல்லிவிட்டு, கேள்வி கேட்டார் நீதிபதி. நல்லம்ம நாயுடு என்ற பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் ஜெ.வின் முகம் கடுமையாகச் சிவந்தது.
கோபத்தை அடக்கியபடி, "முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மாதவனும், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் சேர்ந்துதான் என் மீது இப்படிப்பட்ட கேஸைப் போட நல்லம்ம நாயுடுவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு சுப்ரமணியன் சுவாமி உதவியாக இருந்திருக்கிறார். நான் வருமானத் துக்கு அதிகமா சொத்து சேர்த்ததா சுவாமி ஒரு புகார் கொடுத்திருந்தார். அதுவே பொய்யான புகார். அதன் பேரில் சி.ஆர்.பி.சி. செக்சன் 203-ன் கீழ் கேஸ் போட்டி ருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக போட்ட வழக்கு இது'' என்று சொன்னார் ஜெ.
இரண்டாம் நாள் மதிய உணவு இடை வேளையின்போது, சாப்பாட்டுடன் மல்லிகைப் பூ பொட்டலமும் எடுத்துச் செல்லப்பட்டது. கோர்ட்டை ஒட்டிய பகுதியில் இருந்த நாம், இது பற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டோம். "விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, குற்றவாளிக் கூண்டில் இருந்த சசிகலாவின் தலையிலிருந்து மல்லிகைப்பூ கீழே விழுந்து விட்டதால், புதுப் பூ வேண்டும் என்று கேட்டனுப்பினார். லஞ்ச்சுடன் சேர்த்து மல்லிகைப் பூவையும் கொண்டு போறோம்'' என்றனர்.
போலீஸ் அதிகாரிகள் கொடுத்திருந்த ரெகார்டுகள் தொடர்பான கேள்விகள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்தன. போலீசார் மீதும் முன்னாள் ஆட்சியாளர்கள் மீதுமான குற்றச்சாட்டுகளையே பதிலாக அளித்தார் ஜெ. அவருக்கு சாதகமான விஷயங்கள் அடங்கிய ஒரு டாக்குமெண்ட்டை ஜெ.வின் வழக்கறிஞர், நீதிபதியிடம் கொடுத்தார். இரண்டாம் நாள் விசாரணையில் 192 கேள்விகளுக்குப் பதில் பெறப்பட, மொத்தமாக 1359 கேள்விகளுக்கானப் பதில்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, அதற்கு ஜெ.விடம் தனித்தனியாக கையெழுத்து வாங்கியாக வேண்டும். நீதிமன்றத்தின் இந்த நடைமுறையும் நிறைவடைந்தது.
அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா. ஜெ.வின் பாதுகாப்புக்காக பரப்பன அக்ரகாரத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட சிறப்பு நீதிமன்றம், மீண்டும் பழைய இடத்திலேயே இயங்கும். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் இனி 313 ஸ்டேட்மெண்ட் வாங்கப்படும் என்று வக்கீல்கள் தெரிவித்த நிலையில், வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்பது பற்றி இரண்டு தரப்பு வழக்கறிஞர்களிடமும் சட்ட வல்லுநர்களிடமும் கேட்டோம்.
"நீதிமன்றத்தில் ஜெ. அளித்த 313 ஸ்டேட்மெண்ட்டில், போயஸ் கார்டனில் இருந்த நகைகளில் பெரும்பாலானவை தன்னுடையவை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதுபோல, போயஸ் கார்டன் இல்லத்தை முகவரியாகக் கொண்டு இயங்கிய கம்பெனிகளில் பங்குதாரராக இருந்ததையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். 31-ஏ போயஸ் கார்டன் என்ற முகவரியில் உள்ள வீட்டை 1991-96 ஆட்சிக் காலத்தில் வாங்கியதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்'' என்பதை சுட்டிக் காட்டும் சட்ட வல்லுநர்கள், "மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கிய ஜெ., எப்படி கம்பெனிகளில் முதலீடு செய்தார் என்பதும், புது வீடு வாங்கினார் என்பதும் அவருக்கு எதிரான வாக்குமூலங்களாகவே இருக்கின்றன'' என்கின்றனர்.
ஜெ.வின் வழக்கறிஞர் குமார் நம்மிடம், "இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடைபெற்றாக வேண்டும். அதற்கு வழக்கு விசாரணையை இன்னும் நீட்டிக்க வேண்டும்'' என்றார். ஜெ.வின் வழக்கறிஞர்கள் டீம் தரப்பிலிருந்து நம்மிடம் பேசியவர்கள், "எங்கள் தரப்பு சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்போம். எப்படியும் 200, 300 சாட்சிகளையாவது அவர்கள் விசாரிக்க வேண்டியிருக்கும்'' என்றதுடன், "மேடம் தன்னோட பதில்களை ஆங்கிலத்தில்தான் பதிவு செய்திருக்கிறார். வழக்கில் இடம் பெற்றுள்ள சசிகலா, இளவரசி ஆகியோருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால், இந்தப் பதில்களை தமிழில் தர வேண்டும் எனக் கேட்போம். அதற்கான நடைமுறைகள் முடிய அவகாசம் தேவை'' என்றனர்.
அரசுத் தரப்பில் கேட்டபோது, "இப்போது ஜெ. அளித்த 313 ஸ்டேட்மெண்ட்டை, ஜனவரியிலேயே அவர் முன்னாள் முதல்வராக இருந்த சமயத்திலேயே ஆஜராகி கொடுத்திருக்க முடியும். அவருக்குத் தரப்பட்ட தவறான ஆலோசனைகளால் சுப்ரீம் கோர்ட்வரை சென்று இழுத்தடிக்கப் பார்த்தார். அது நடக்கவில்லை. இப்போது, இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு சிட்டிங் சி.எம். கோர்ட் படியேறி வழக்கை எதிர்கொண்டு 313 ஸ்டேட்மெண்ட் கொடுத்தார் என்ற நிலைமையை உருவாக்கியிருக்கிறார் ஜெ.
ஸ்பெஷல் கோர்ட் விசாரணைகளை இழுத்தடிப்பதற்காக இதுவரை ஜெ. தரப்பில் 45 முறை ஹைகோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போயிருக்கிறார்கள். ஆனால், ஒரு முறைகூட அவர்களுக்கு சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை. இந்த ஸ்டேட்மெண்ட் விஷயத்திலும் அதுதான் நடந்தது. தமிழ் மொழிபெயர்ப்பு என்பது ஒரு வாரத்தில் முடியக் கூடிய வேலை. அதனால் பெரியளவில் காலதாமதமாகாது. அவர்கள் தரப்பு சாட்சி விசாரணை ஏற்கனவே இந்த வழக்கு சென்னையில் இருந்தபோதே நடந்துவிட்டது. அப்போதும் ஜெ. ஆட்சியில் இருந்ததால், கேஸை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்ற வேகத்தில், தங்கள் தரப்பில் இரண்டே இரண்டு சாட்சிகள் மட்டுமே இருப்பதாகச் சொல்லி விசாரிக்கச் செய்தார்கள். அந்த சமயத்தில்தான், வழக்கின் போக்கில் அதிருப்திகொண்டு தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டார். சுப்ரீம் கோர்ட் இதை பெங்களூரில் விசாரிக்க உத்தரவிட்டபோது, "பெங்களூர் வேண்டாம். பாண்டிச்சேரியில் போடுங்கள்' என்றது ஜெ. தரப்பு. நீதிமன்றம் ஏற்கவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் ஜெ. தரப்புக்கு எதிராகவேதான் உத்தரவுகள் வந்தன.
"இந்த சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க டாக்குமெண்ட்ஸ் எவிடென்ஸ்தான். வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு சில கோடிகள் அளவுக்கான சொத்துகளை அவர் முறைகேடாக வாங்கியிருக்கிறார் என்று நிரூபித்தாலே தண்டனைத் தீர்ப்புதான் கிடைக்கும். 313 ஸ்டேட்மெண்ட்டில் ஜெ.வே சில சொத்துகள் பற்றி ஒப்புக் கொண்டுவிட்டார்'' என்றது அரசுத் தரப்பு.
இந்த வழக்கில் ஆரம்பம் முதல் தீவிரமாக இருந்து வரும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவிடம் நாம் பேசினோம். "இந்த வழக்கைப் பொறுத்தவரை தண்டனை என்பது உறுதி. தாமதப்படுத்த முடியுமே தவிர, அவர்களால் வெற்றி பெற முடியாது. இதுதான் நியாயமான நடைமுறை. தமிழ் நாட்டில் நடந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞர் பி.வி.ராஜ மன்னாரின் வாதங்களைக் கேட்டு, அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் மிகச் சரியாகச் செயல்படுவதாகச் சொன்னார். அதுபோல நான் இந்த வழக்கில் மிகச் சரியாக செயல்படவேண்டும் என் பதில் உறுதியாக இருக் கிறேன்'' என்றார் நம்பிக்கை குறையாமல்.
ஜெ. தரப்பிலும் அரசுத் தரப்பிலும் வழக்கு குறித்த கருத்துகள் இப்படி வெளிப்பட்டாலும், வழக்கின் தீர்ப்பும் ஜெ.வின் எதிர்காலமும் நீதிபதியின் கையிலேயே உள்ளது.
- பெங்களூருவிலிருந்து பிரகாஷ்
படங்கள் : ஸ்டாலின்
ஜெ. மீதான சொத்துக் குவிப்பை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு முதலில் நியமிக்கப்பட்டவர் நீதிபதி பச்சாபுரே. அதன்பின் மனோலி நியமிக்கப்பட்டார். மூன்றாவதாக, நியமிக்கப்பட்டவர்தான் தற்போதைய நீதிபதி மல்லிகார்ஜூனய்யா. கர்நாடகாவில் அரசியல்வாதிகளின் ஊழலை விசாரிக்கும் லோக் அயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டபோது அதன் பதிவாளராக நியமிக்கப்பட்டவர் மல்லிகார்ஜூனய்யாதான். பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த லிங்காயத்து சமுதாயத்தவரான மல்லிகார்ஜூனய்யா நெருப்பு. அவரை யாரும் நெருங்கிவிட முடியாது. லிங்காயத்து சமூக மடாதிபதிகள் சிலர் வழக்கு தொடர்பாக இவரை அணுக, அடுத்த முறையிலிருந்து மடத்திற்கு அனுப்பும் நன்கொடையை மணியார்டரில் அனுப்பிவிட்டு, அங்கே நேரில் செல்வதைத் தவிர்த்து விட்டார். வழக்கு தொடர்பாக தன் சக நீதிபதிகள், உறவினர்கள் யாரும் நெருங்க முடியாதபடி நடந்துகொள்ளும் இவர், தன் குடியிருப்பு பகுதியில் வாக்கிங் போவதைக்கூட அண்மைக் காலமாக நிறுத்திவிட்டாராம்.
- நன்றி : நக்கீரன் வார இதழ்
எனக்கு ஒரேயொரு சிங்கிள் டவுட்டு..!
ஜெயலலிதா நகைகளையெல்லாம் முன்பே வாங்கி வைத்திருந்தது உண்மையா..? மைசூர் மகாராஜா வாங்கிக் கொடுத்தது என்றும், அவ்வப்போது ரசிகர்களும், தொண்டர்களும் அன்பளிப்பாக நகைகளை அளித்தார்கள் என்பதும் உண்மையா..?
ஏன்னா, உடல் முழுவதும் நகைகளை அணிந்து சசிகலாவோட நிக்குற மாதிரி இருக்குற போட்டால ஜெயலலிதா அணிந்திருந்த ஒட்டியாணத்தை சைஸ் பார்த்துதானே வாங்கியிருப்பாங்க..? ஆத்தா எப்பவுமே இப்படியேதான் இருந்தாங்களா..?
யாராவது சரியான பதிலைச் சொல்லுங்கப்பா..!!!