Pages

Monday, September 19, 2011

எங்கேயும் எப்போதும் – சினிமா விமர்சனம்

19-09-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


முதலில் இப்படியொரு கதையில் சினிமா தயாரிக்க முன் வந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு எனது கோடானுகோடி நன்றிகள். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கும் 28 வயது இளைஞர், அறிமுக இயக்குநர் சரவணனுக்கு எனது அடுத்த நன்றி. இந்த இளைஞரை பார்த்து வரவிருக்கும் புதிய இயக்குநர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்தான் இந்தத் திரைப்படம்.

தினம்தோறும் பத்திரிகைகளில் சாலை விபத்துகள் பற்றிய செய்திகளைப் படிக்கிறோம்.. துக்கப்படுகிறோம். வருத்தப்படுகிறோம். ஏன் இந்த வேகம்..? எதற்காக இந்தச் சம்பவம்..? என்றெல்லாம் விசனப்படுகிறோம். ஆனால் விபத்தில் இறந்து போனவர்களின் குடும்பம், வாழ்க்கை, அவர்களுடைய கனவுகள் பற்றி என்றைக்காவது யோசித்திருக்கிறோமா..? இதைத்தான் செய்திருக்கிறார் இயக்குநர் சரவணன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுங்குவார்சத்திரம் அருகே ஒரு திருமண நிச்சயத்தார்த்தத்திற்காக கிராமத்து மக்கள் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது, டேங்கர் லாரி ஒன்று மோதியதில் 40-க்கும் மேற்பட்ட மக்கள் எரிந்து கரிக்கட்டையாய் ஆனபோது தமிழகமே கண்ணீர்விட்டது.. இன்னமும் மறக்க முடியவில்லை என்னால்..! இந்தப் படம் அந்தச் சம்பவத்தை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திவிட்டது.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்திலும், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தனியார் பேருந்திலும் பயணிகள் அவரவர்கள் வாழ்க்கைக் கனவோடு பயணிக்கையில், அசுர வேகம் என்ற ஒரு வினை சீட்டுக் கட்டுக்களைப் போல் அனைத்தையும் கலைத்துப் போடுகிறது..!  இவ்வளவுதான் வாழ்க்கை என்பதை ஒரு நொடியில் புரிய வைக்கிறது அத்தனை பேருக்கும்..!

இரண்டு காதல் ஜோடிகள்.. ஜெய்-அஞ்சலி. அனன்யா-சர்வா. இரண்டு காதலன்களும், காதலிகளும் மாறுபட்ட குணச்சித்திரங்கள். காதலர்களின் கேரக்டர் ஸ்கெட்ச் சுவாரஸ்யமாக இருக்கிறது. அத்தனையிலும் அதிகம் ஸ்கோர் செய்திருப்பது அஞ்சலிதான். வாவ் என்றே கூச்சலிட வேண்டியிருக்கிறது அஞ்சலியை நினைத்து.

காதலிக்கிறேன் என்று சொல்வதற்குள் இத்தனை போராட்டங்களா..? திரையரங்கில் அத்தனை ரசிப்பு..! ஜெய்யை அப்பாவிடம் அனுப்பி வைப்பது.. தான் நிராகரித்த காதலனிடம் அனுப்பி வைப்பது.. டிரெஸ் எடுக்க படுத்தியெடுப்பது.. ரத்தப் பரிசோதனை செய்வது என்று படபடவென்ற தனது படாபட் ஜெயலஷ்மியின் மறுஉருவத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார் அஞ்சலி. அவருடைய இயல்பான குணமே இதுதான் என்பதால் 100 சதவிகிதம் ஜெயித்திருக்கிறார். "என் மீது கோபப்படு.." என்று அஞ்சலி சொல்வதற்கும், அது முடியாமல் ஜெய் தவிப்பதற்குமான காட்சிகளில் தியேட்டரே அதிர்ந்தது.

திருச்சி மலைக்கோட்டையில் முத்தமிடப் போகும் காட்சியிலும், ஜெய்யைக் கட்டிப் பிடிக்கச் சொல்லும் காட்சியிலும் அதற்கு முந்தைய ரீல்களில் தெரிந்த அஞ்சலி காணாமலேயே போய் மை ஸ்வீட் ஹார்ட்டாகிவிட்டார்..!

ஆனாலும், எந்தவொரு காதலனுக்கும் அஞ்சலி போன்று காதலி கிடைக்காமல் இருக்க என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன். அந்த அளவுக்கு டார்ச்சர் செய்கிறார்.. ஆனால் அத்தனையிலும் க்யூட்டாக ரசிக்கவும் வைத்துள்ளார்.

அனன்யா கதைகளைத் தேர்வு செய்துதான் நடிக்கிறேன் என்று சொல்லியிருந்தார். இந்தக் கதைக்காகத்தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தார் என்றால் நிச்சயமாக அதனைப் பாராட்டலாம். பி.இ. முடித்தவர் இப்படிப்பட்ட சைல்டிஷ் மனநிலையில் இருப்பாரா என்றெல்லாம் கேரக்டர் ஸ்கெட்ச் பற்றி இப்போது ஸ்கெட்ச் போட்டு கொண்டிருக்கிறார்கள்.. இருக்கலாம். இருக்கிற ஒரு பெண் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. போதும்.

செல்போன்கூட வைத்துக் கொள்ளவில்லை என்னும்போதுதான் கொஞ்சம் இடிக்கிறது என்றாலும் கதையின் டிராவலுக்காக இதனை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு சின்ன உதவி செய்யப் போய் எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் சர்வா. அதனைவிட குறிப்பிட வேண்டியது, காதல் உருவாக காரணத்தைத் தேடி கண்டுபிடிக்க வேண்டாம். அது தானாகவே கிராஸ் ஆகும் என்பார்களே.. அது இதுதான்..

அந்த அக்காவின் படபட பேச்சு, அனன்யாவின் கண்கள் பேசும் மொழி, சர்வாவின் தடுமாற்றம் என இவர்களின் பிளாஷ்பேக்கில் அஞ்சலி அண்ட் கோவுக்கு கொஞ்சமும் குறையில்லாத நிகழ்வுகள். பிடித்துவிட்ட நிலையில் பேருந்தில் பக்கத்தில் அமரப் போகும் நிலையில் ஸ்டாப்பிங் வந்திருச்சு என்று சொல்லும் சர்வாவின் அழைப்பில் தாக்குண்ட அனன்யாவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவரது கண்களே ஏமாற்றத்தைக் காட்டிக் கொடுத்தது.. தங்கைதான் இப்படியென்றால் அக்காவும் அவரை மாதிரியே என்பதை போல் வீட்டு வாசலிலேயே அனன்யா சொல்வதை போட்டுடைக்க சர்வா எவ்வளவோ தாங்கிட்டோம், இதைத் தாங்கிர மாட்டோமா என்ற நினைப்பில் ஜெர்க்காவது செம காமடி..!

ஊர் தெரியும்.. பெயர் தெரியாது.. செல் நம்பர் தெரியாத நிலையில் அவரைத் தேடி ஊருக்கு வரும் அனன்யாவின் செயலை லாஜிக் பார்க்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். முதல் முறையாகவே அப்படித்தானே வந்திருக்கிறார். அக்காவின் நம்பர் மட்டும்தானே.. இதனை சாய்ஸில் விட்டுவிடலாம்..!

பேருந்துகளில் விதம்விதமான கேரக்டர்கள்.. மகளின் பேச்சையே செல்போன் ரிங்காக பயன்படுத்தும் அப்பா, தூங்கியே வழியும் ஒருவர், ரோஷமான பொதுஜனம்.. பார்த்த உடனேயே காதல் செய்யத் துடிக்கும் காதலர்கள், மனைவியை விட்டுப் பிரிய முடியாத காதல் கணவன், வாயாடி குழந்தையும், அடக்க மாட்டாத அம்மாவும்.. வெற்றி பெற்ற பரிசுக் கோப்பையுடன் சந்தோஷமும், சிரிப்புமாக ஊர் திரும்பும் மாணவியர் கூட்டம்..  இப்படி அனைவருக்கும் ஒரு கதையைக் கொடுத்துவிட்டு இவர்களின் சந்தோஷத்தில் கொள்ளி வைக்கும் அந்த பேருந்தின் வேகத்தை படு ஆக்ரோஷமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

கண்டிப்பாக இனிவரும் காலங்களில் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளராக இடம் பெறப் போகிறார் வேல்துரை. பேருந்து மோதல் காட்சிகளையும், அது தொடர்பான பின்னணி காட்சிகளையும் கடும் மனதையும்   ஈரம் கசிய வைக்கும்வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

சிதைந்து போன உடல்கள், நசுங்கிக் கிடக்கும் மனிதர்கள், உற்றார் உறவினர்களின் கதறல் என்று அத்தனையையும் விரட்டி விரட்டி படம் பிடித்திருக்கும் கேமிரா, சம்பவத்தின் வினை அசுர வேகம்தான் என்பதை கச்சிதமாக உணர்த்தியிருக்கிறது. அதிலும் ஒரு பேருந்திலிருந்து அடுத்த பேருந்துக்குள் பயணித்து சென்று மீண்டும் வெளியில் வந்து நிற்கும் காட்சியில் ஈரக்குலை நடுங்கியது என்பார்களே.. அது போன்ற நிகழ்வுதான்..! இளகிய மனதுடையவர்கள் கிளைமாக்ஸ் காட்சியை தவிர்ப்பதும் ஒருவகையில் நல்லதுதான்..!

சமூக விழிப்புணர்வுமிக்க திரைப்படம் இது என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் சொல்கின்ற விஷயம் அத்தனை பேருக்கும் சிரமமில்லாமல் போய்ச் சேர வேண்டும் என்கிற நோக்கத்தில் கதைக் களமாக காதலையும், இன்றைய நிலைமையில் காதலர்கள் படுகின்ற பாட்டையும் மிக அழகாக திரைக்கதையில் வடித்திருக்கிறார் இயக்குநர்.

இசை புதுமுகம் சத்யா. ஜெய் பல்பு வாங்கும் இடங்களிலும், சர்வாவை அனன்யா போட்டுத் தாக்கும் இடங்களிலெல்லாம் பின்னணி இசையைக் கூர்ந்து கவனியுங்கள்.. ஹாஸ்ய உணர்வை இசையே கூட்டிக் கொடுக்கிறது. படம் முழுவதும் மிக மெலிதான நகைச்சுவை உணர்வை நடிப்பிலும், இயக்கத்திலும் இயக்குநர் வைத்திருந்தாலும் இசை அதனை கொஞ்சம் உயர்த்தியே பிடித்திருக்கிறது. பாராட்டுக்கள் சத்யா. கிளைமாக்ஸின் உக்கிரத்தில் இசையும் தனது பங்களிப்பை கச்சிதமாகவே செய்திருக்கிறது..!

இந்த வருடத்திய ஹிட் பாடல்கள் பட்டியலில் 'மாசமா ஆறு மாசமா' பாடலும் இடம் பிடித்துவிட்டது. நா.முத்துக்குமாருக்கு பெயர் சொல்லக் கூடிய பாடல்களாக "கோவிந்தா"வும், 'சொட்டச் சொட்ட'வும் அமைந்துவிட்டன. இயக்குநர் சரவணனே எழுதிய 'மாசமா ஆறு மாசமா' பாடல் காட்சிகள் புதுமையாக, ரசிக்கும்வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பும் இயக்குநருக்கு நன்று கை கொடுத்திருக்கிறது..!

"நல்ல திரைப்படங்களை கொடுத்தால் யார் வந்து பார்க்குறா..?" என்று மக்களைக் குற்றம் சொல்பவர்கள் தயவு செய்து இத்திரைப்படத்தை வந்து பார்த்துவிட்டு பின்பு பேசலாம்.. 'தேவி கருமாரி' திரையரங்கில் படம் முடிவடைந்தவுடன் அத்தனை பேரும் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள். மக்களின் மனநிலை ஒன்று போலத்தான் எப்போதும் இருக்கிறது. அதனை வெளிக்கொணர வைப்பதில்தான் இயக்குநர்களின் பங்கு அவசியம் தேவை. இதை சரவணன் மிக அழகாக செய்திருக்கிறார்.

மருந்தை தேனுடன் கலந்து கொடுப்பது மருந்தின் கசப்பு தெரியாமல் இருக்கத்தானே..? சினிமா பார்க்க தற்போது ஆவலுடன் ஓடி வருவது இளையோர் கூட்டம். அவர்களுக்குப் பிடித்தது காதல். காதலர்களின் துயரம், மக்களின் கண்களில் நீரை கசியச் செய்யும்.. அது அவர்களது மனதைப் பாதிக்கும். திரையரங்கு ரசிகர்களாலும், மக்களாலும் குளிர்விக்கப்படும் என்பதை உணர்ந்து அந்தத் திட்டத்திலேயே படத்தை தயாரித்திருக்கிறார்கள். ஜெயித்தும்விட்டார்கள். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

பயணிகளுக்கும் ஒரு மனம் உண்டு. ஏகப்பட்ட கனவுகளோடு வந்து கொண்டிருப்பவர்கள்.. அவர்களை பத்திரமாக கொண்டு போய்ச் சேர். 10 மீட்டர் என்பது, உனக்கும் சாவுக்குமான இடைவெளி என்ற எச்சரிக்கை உணர்வை ஓட்டுநர்களுக்கு உணர்த்தியிருக்கிறது இத்திரைப்படம்.

பொதுவாக மனம் நிறைய கனவுகளோடு இருப்பவர்களுக்குத்தான் மிக எளிதாக மரணம் வரும் என்பார்கள். என்னுடைய வாழ்க்கையிலும் சிலரது மரணத்தின்போது அதனை நான் உணர்ந்திருக்கிறேன். "எப்படியும் பிரணாய் ராய் போல் பேசப்படும் பத்திரிகையாளனாக வருவேன். அத்தனை பேரும் என்னை பாராட்டுவதை போல் செய்யப் போகிறேன்.." என்று தினத்துக்கும் ஒரு கனவோடு இருந்த எனது நண்பர், 'தமிழன் எக்ஸ்பிரஸ்' ரிப்போர்ட்டர் வேல்பாண்டியன் இது போன்ற ஒரு சாலை விபத்தில்தான் அகோரமாக உயிரிழந்தார். "ஷங்கரை போன்று மிகச் சிறந்த கமர்ஷியல் இயக்குநராக முன்னுக்கு வருவேன்.." என்று முதல் படத்தின்போதே அறிவித்திருந்த இயக்குநர் திருப்பதிசாமியும், ஒரு இரவு நேரத்தில் விபத்தொன்றில்தான் உயிரைவிட்டார். எஸ்.பி.பி. போல் வரப் போவதுதான் லட்சியம் என்று சொன்ன பின்னணி பாடகர் சாகுல் ஹமீது, திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில்தான் உயிரைவிட்டார். மிகச் சமீபத்தில் கடந்த புதன்கிழமை எனது நண்பன் ஹரிபாபு திண்டுக்கல்லில் நடந்த சாலை விபத்தில் உயிரை விட்டுள்ளான். நிறைய சீரியல்களில் சிறிய வேடங்களில் நடித்தவன். டிவியில் பெரிய நடிகனாக வர வேண்டும் என்பதற்காக 2 மாதங்களுக்கு ஒரு முறை சென்னைக்கு வந்து டேரா போட்டு வாய்ப்பு தேடி வந்தவன்.. இப்போது வாய்ப்பே இல்லாமல் போய்ச் சேர்ந்துவிட்டான்.. என்னவோ போங்க..!

சிறந்த திரைப்படங்கள் வரும்போது அதனை அங்கீகரித்து, பாராட்டுவது நமது கடமை. இந்த நேரத்தில் இந்தத் திரைப்படத்திற்கும் நாம் அதனைச் செய்தாக வேண்டும்..! வாருங்கள் ஆதரவளிப்போம்..!

கோடி நன்றிகள் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸூக்கும், சரவணனுக்கும்..!

39 comments:

  1. கண்டிப்பா சார்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் எந்த விதமான சர்ச்சைகளும் இல்லாமல் ஒரு நல்ல படம்!!

    ReplyDelete
  2. எதிர்பார்ப்போடு பார்க்க காவல் இருக்கிறேன்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

    ReplyDelete
  3. ம்ம்ம் ஸ்க்ரோல் பட்டன் யூஸ் பண்ணி எம்புட்டு நாளாச்சு...

    ReplyDelete
  4. ம்ம்ம் ஸ்க்ரோல் பட்டன் யூஸ் பண்ணி எம்புட்டு நாளாச்சு...


    பிரபாகர் சரவெடி.

    ReplyDelete
  5. அண்ணே ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க.. என்ட் கார்டு தேவி கருமாரியில் கட் பண்ணிட்டானா?-அது இன்னும் அற்புதம்.அதைபத்தி நீங்க குறிப்பிட்வே இல்லை

    ReplyDelete
  6. //அத்தனையிலும் அதிகம் ஸ்கோர் செய்திருப்பது அஞ்சலிதான். வாவ் என்றே கூச்சலிட வேண்டியிருக்கிறது அஞ்சலியை நினைத்து.//

    உண்மைத்தமிழன் தலைமையில் வலையுலகில் ஒரு அ.இ.அஞ்சலி ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் போலிருக்குதே! :-))

    //அதற்கு முந்தைய ரீல்களில் தெரிந்த அஞ்சலி காணாமலேயே போய் மை ஸ்வீட் ஹார்ட்டாகிவிட்டார்..!//

    அண்ணே, கண்ட்ரோல்..! கண்ட்ரோல்...! :-))

    //மக்களின் மனநிலை ஒன்று போலத்தான் எப்போதும் இருக்கிறது. அதனை வெளிக்கொணர வைப்பதில்தான் இயக்குநர்களின் பங்கு அவசியம் தேவை//

    அதைச் சொல்லுங்கண்ணே! சும்மா மக்கள் மேலே பழியைப் போட்டு மொக்கைப்படமா எடுத்தா எப்புடி?

    கேபிளாரின் விமர்சனம் திரியைக் கொளுத்தியது; உங்கள் விமர்சனம் எண்ணை ஊற்றியிருக்கிறது. பார்த்தே ஆகணும்னு பரபரப்பாயிருக்குது.

    சூப்பர் விமர்சனம்! :-)

    ReplyDelete
  7. நீங்களே சொல்லிட்டிங்க போய் பாத்துட்றேன்...

    ReplyDelete
  8. இப்பத்தான் உண்மைத்தமிழனோட ‘எங்கேயும் எப்போதும்’ விமர்சனம் படிச்சிட்டு வந்தேன் பாராட்டி தள்ளிவிட்டார்.. ஆனா நீங்க முதல் வரியிலேயே வந்தான் வென்றானை – வந்தான் தோற்றான் அல்லது வந்தான் சென்றான் னு ஆக்கிடிங்க...

    அப்போ இந்தவாரம் எங்கேயும் எப்போதும் தான் எனது சாய்ஸ்..

    ReplyDelete
  9. அது உழவனின் நெற்குவியலுக்கு போகவேண்டிய பின்னுட்டம்..
    மன்னித்துவிடுங்கள் என்னை..

    ReplyDelete
  10. நல்ல படம், அருமையான விமர்சனம் அண்ணே...

    ReplyDelete
  11. மிக நன்றாக அனைவரையும் படம் பார்க்கத் தூண்டும்படி எழுதியுள்ளீர்கள்....

    படத்தில் கடைசிக் காட்சிதான் மொத்த படத்தின் அடிநாதமாக உள்ளது. அதைப்பற்றியும் சொல்லியிருக்கலாமே!!!

    ReplyDelete
  12. [[[Real Santhanam Fanz said...

    கண்டிப்பா சார்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் எந்தவிதமான சர்ச்சைகளும் இல்லாமல் ஒரு நல்ல படம்!!]]]

    உண்மைதான் நண்பரே.. வருகைக்கு நன்றி..!

    ReplyDelete
  13. [[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அருமையான விமர்சனம் அண்ணே....!]]]

    நன்றி இராமசாமியண்ணே..!

    ReplyDelete
  14. [[[K.MURALI said...

    A1]]]

    ஆமாம்.. ஏ ஒன் திரைப்படம்தான்..!

    ReplyDelete
  15. [[[♔ம.தி.சுதா♔ said...

    எதிர்பார்ப்போடு பார்க்க காவல் இருக்கிறேன்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்]]]

    அவசியம் பாருங்கள் நண்பரே..!

    ReplyDelete
  16. [[[Philosophy Prabhakaran said...

    ம்ம்ம் ஸ்க்ரோல் பட்டன் யூஸ் பண்ணி எம்புட்டு நாளாச்சு...]]]

    பிரபாகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......!

    ReplyDelete
  17. [[[JOTHIG ஜோதிஜி said...

    ம்ம்ம் ஸ்க்ரோல் பட்டன் யூஸ் பண்ணி எம்புட்டு நாளாச்சு...

    பிரபாகர் சரவெடி.]]]

    ஜால்ராவுக்கு நீங்களா..? நடத்துங்க.. நடத்துங்க..!

    ReplyDelete
  18. [[[பிரியமுடன் பிரபு said...

    Mmmm...]]]

    நன்றி பிரபு..!

    ReplyDelete
  19. [[[ஜாக்கி சேகர் said...

    அண்ணே ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க.. என்ட் கார்டு தேவி கருமாரியில் கட் பண்ணிட்டானா?-அது இன்னும் அற்புதம். அதை பத்தி நீங்க குறிப்பிட்வே இல்லை.]]]

    ஆமாம் ஜாக்கி. கட் செஞ்சுட்டாங்க போல.. நானும் பார்க்கலை..!

    ReplyDelete
  20. [[[சேட்டைக்காரன் said...

    //அத்தனையிலும் அதிகம் ஸ்கோர் செய்திருப்பது அஞ்சலிதான். வாவ் என்றே கூச்சலிட வேண்டியிருக்கிறது அஞ்சலியை நினைத்து.//

    உண்மைத்தமிழன் தலைமையில் வலையுலகில் ஒரு அ.இ.அஞ்சலி ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் போலிருக்குதே! :-))]]]

    ஆரம்பிக்கலாமா..? நான் ரெடி..!

    ReplyDelete
  21. [[[குடிமகன் said...

    நீங்களே சொல்லிட்டிங்க போய் பாத்துட்றேன்...]]]

    ஓகே நண்பரே..!

    ReplyDelete
  22. [[[குடிமகன் said...

    இப்பத்தான் உண்மைத்தமிழனோட ‘எங்கேயும் எப்போதும்’ விமர்சனம் படிச்சிட்டு வந்தேன் பாராட்டி தள்ளிவிட்டார்.. ஆனா நீங்க முதல் வரியிலேயே வந்தான் வென்றானை – வந்தான் தோற்றான் அல்லது வந்தான் சென்றான்னு ஆக்கிடிங்க...]]]

    இந்தப் படம் இப்படித்தான் இருக்குன்னு சொல்றாங்க..!

    ReplyDelete
  23. [[[குடிமகன் said...

    அது உழவனின் நெற்குவியலுக்கு போக வேண்டிய பின்னுட்டம்..
    மன்னித்துவிடுங்கள் என்னை..]]]

    விடுண்ணே.. அதுனால என்ன..? எனக்கு ஒரு கமெண்ட் கூடுதலா கிடைச்சிருக்குன்னு நான் சந்தோஷத்துல இருக்கேன்.. நீங்க வேற..?

    ReplyDelete
  24. [[[Kannan said...

    மிகவும் அருமையான விமர்சனம்.

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com]]]

    வருகைக்கு மிக்க நன்றி கண்ணன்..!

    ReplyDelete
  25. [[[Thomas Ruban said...

    நல்ல படம், அருமையான விமர்சனம் அண்ணே...]]]

    நன்றி தாமஸ்..!

    ReplyDelete
  26. [[[நல்லவன் said...

    மிக நன்றாக அனைவரையும் படம் பார்க்கத் தூண்டும்படி எழுதியுள்ளீர்கள்.
    படத்தில் கடைசிக் காட்சிதான் மொத்த படத்தின் அடிநாதமாக உள்ளது. அதைப் பற்றியும் சொல்லியிருக்கலாமே!!!]]]

    எழுதியிருக்கனே பிரதர்..!

    ReplyDelete
  27. [[[சேட்டைக்காரன் said...

    //அத்தனையிலும் அதிகம் ஸ்கோர் செய்திருப்பது அஞ்சலிதான். வாவ் என்றே கூச்சலிட வேண்டியிருக்கிறது அஞ்சலியை நினைத்து.//

    உண்மைத்தமிழன் தலைமையில் வலையுலகில் ஒரு அ.இ.அஞ்சலி ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் போலிருக்குதே! :-))]]]

    ஆரம்பிக்கலாமா..? நான் ரெடி..!///

    அஞ்சலி மாதிரி நைனாவுக்கு ஒரு அம்மா கிடைச்சா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப் பாத்தேன். ரொம்ப அற்புதமா இருந்துச்சு. கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க ரெடியா இருக்கேன். நைனா, அம்மாவ எப்ப கண்ல காட்டுவே!

    ReplyDelete
  28. அண்ணே : இன்னும் படம் பாக்கலை .... சீக்கிரம் பாக்கணும்... விமர்சனம் அருமை....

    ReplyDelete
  29. படத்தைப்பற்றியதான விமர்சனம் என்றாலும்,,

    கடைசி வரிகளில் விபத்தினால் உயிரிழந்த சிலரை குறிப்பிட்டு சொல்லியது மனதை கனக்கவும் செய்தது...

    வேகத்தை குறைப்போம்... விவேகத்தை வளர்ப்போம்!!!

    ReplyDelete
  30. [[[விஜய்கோபால்சாமி said...

    அஞ்சலி மாதிரி நைனாவுக்கு ஒரு அம்மா கிடைச்சா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப் பாத்தேன். ரொம்ப அற்புதமா இருந்துச்சு. கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க ரெடியா இருக்கேன். நைனா, அம்மாவ எப்ப கண்ல காட்டுவே!]]]

    என் கண்ணுல சிக்குன பின்னாடி உன் கண்ணுல காட்டுறேன் மகனே..!

    ReplyDelete
  31. [[[ஷீ-நிசி said...
    படத்தைப் பற்றியதான விமர்சனம் என்றாலும், கடைசி வரிகளில் விபத்தினால் உயிரிழந்த சிலரை குறிப்பிட்டு சொல்லியது மனதை கனக்கவும் செய்தது. வேகத்தை குறைப்போம். விவேகத்தை வளர்ப்போம்!!!]]]

    இதைத்தான் படமும் சொல்கிறது நண்பரே..!

    ReplyDelete
  32. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    அண்ணே : இன்னும் படம் பாக்கலை .... சீக்கிரம் பாக்கணும்... விமர்சனம் அருமை....]]]

    அவசியம் பாருங்க மக்கா.. மிஸ் பண்ணிராதீங்க..!

    ReplyDelete
  33. ஒவ்வொரு சாலை விபத்தும் பத்தோடு ஒன்று பதினொன்றாக கணக்கில் எடுத்துக் கொள்ள பழகிவிட்டனர். என் தந்தையையும் ஒரு சாலை விபத்தினில் தான் இழந்தேன். இழந்தது ஒரு உயிர் மட்டுமல்ல.. சொல்லில் அடங்கா துயரங்களையும், கண்ணுக்குப் புலப்படாத பல இழப்புகளையும்.... போதுமடா சாமி! ஆனாலும் இன்னமும் மக்கள் விழிப்புணர்வு பெற்ற பாடு தான் இல்லை.

    சாலை விபத்துக்கள் அனைத்துமே தவிர்க்கக் கூடியவைகளையே, ஊர்திகளை இயக்குபவர்களும், அதனைக் கண்காணிப்பவர்களும் (காவல் துறை) எவ்வித சிதறலுக்கு இடம் தராது விவேகத்துடன் இயங்கும் வரை!

    ReplyDelete
  34. [[[நெல்லி. மூர்த்தி said...

    ஒவ்வொரு சாலை விபத்தும் பத்தோடு ஒன்று பதினொன்றாக கணக்கில் எடுத்துக் கொள்ள பழகிவிட்டனர். என் தந்தையையும் ஒரு சாலை விபத்தினில்தான் இழந்தேன். இழந்தது ஒரு உயிர் மட்டுமல்ல.. சொல்லில் அடங்கா துயரங்களையும், கண்ணுக்குப் புலப்படாத பல இழப்புகளையும்.... போதுமடா சாமி! ஆனாலும் இன்னமும் மக்கள் விழிப்புணர்வு பெற்ற பாடுதான் இல்லை. சாலை விபத்துக்கள் அனைத்துமே தவிர்க்கக் கூடியவைகளையே, ஊர்திகளை இயக்குபவர்களும், அதனைக் கண்காணிப்பவர்களும் (காவல் துறை) எவ்வித சிதறலுக்கு இடம் தராது விவேகத்துடன் இயங்கும்வரை!]]]

    வருந்துகிறேன் நண்பரே.. மனிதத் தவறுகளே பெரும்பாலும் விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்றன.. இது பற்றிய விழிப்புணர்வு தேவைதான் என்றாலும் இது ஓட்டுநர்களுக்கான பாடத்தில் கண்டிப்பாக வைக்க வேண்டும். அவர்கள் நினைத்தால் இதனை எளிதாகத் தடுக்கலாம்..!

    ReplyDelete
  35. மனதை தொட்ட படம் !! மிக அருமையான நேர்த்தியான உணர்வுபூர்வமான விமர்சனம் !! வாழ்த்துகள் பாராட்டுகள்!!

    ReplyDelete
  36. [[[Jawahar Shanmugam said...

    மனதை தொட்ட படம் !! மிக அருமையான நேர்த்தியான உணர்வுபூர்வமான விமர்சனம் !! வாழ்த்துகள் பாராட்டுகள்!!]]]

    மிக்க நன்றி ஜவஹர் ஸார்..!

    ReplyDelete