Pages

Wednesday, July 13, 2011

எழுத்து சுதந்திரத்தை நசுக்க முடியாது...! - காலச்சுவடு வழக்கில் சாட்டையடி

13-07-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதலில் கோபித்துக் கொள்ளாமல் 3 ஆண்டுகளுக்கு முன்பாக நான் எழுதிய இந்தப் பதிவைப் படித்துவிட்டு பின்பு இங்கு வந்து மீண்டும் தொடருங்கள்..!

'காலச்சுவடி'ன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி 'காலச்சுவடி'ன் ஆசிரியர் கண்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் சென்ற வாரம்தான் தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளதாம்.

அந்த்த் தீர்ப்பு பற்றி இன்றைய ஜூனியர்விகடனில் வந்திருக்கும் கட்டுரை இது :

''எழுத்து சுதந்திரத்தை நசுக்க முடியாது!'' - 'காலச்சுவடு' வழக்கில் சாட்டையடி

'கருத்து சுதந்திரத்தை அரசியல்​வாதிகள் நினைத்தபடி காலில் போட்டு மிதித்துவிட முடியாது!’ என்பதைச் சொல்லி இருக்கிறது, மதுரை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு!

அரசு நூலகங்களில் முந்தைய இரு ஆட்சிகளிலும் வாங்கப்பட்டு வந்த இலக்கியப் பத்திரிகையான 'காலச்சுவடு', கடந்த தி.மு.க. ஆட்சியில் திடீரென நிறுத்தப்பட்டது.

நூலகங்களில் வாங்குவது நிறுத்​தப்பட்டதற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் 'காலச்சுவடு' சார்பில் வழக்கு தொடரப்​பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். ஆட்சி மாறிய நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 'அரசு நூலகங்களுக்கு 'காலச்சுவடு' மீண்டும் வாங்க வேண்டும்’ என நீதிபதி அரி பரந்தாமன் தீர்ப்பு அளித்தார்.

வழக்கில் வென்ற 'காலச்சுவடு' பத்திரிகை ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணனிடம் பேசினோம்.

''அரசு நூலகங்களில் எங்கள் பத்திரிகையை வாங்குவதற்கு, 2003 டிசம்பரில் பொது நூலகத் துறையின் அனுமதி கிடைத்தது. 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதும், அனுமதி புதுப்பிக்கப்பட்டது. 2008 ஏப்ரலில் இருந்து, மாவட்ட நூலகங்களில்  எங்கள் பத்திரிகையை வாங்கவில்லை. நாங்கள் பத்திரிகையில் முன்வைத்த சில விமர்சனங்கள்தான் இதற்குக் காரணம் என்பதை அறிந்தோம்.

செம்மொழி தொடர்பாக நாங்கள் 2008 மார்ச்​சில் எழுதிய தலையங்கத்தால், முன்னாள் முதல்வர் கருணாநிதி எங்கள் மீது கோபப்பட்டார் என்று தகவல் அறிந்தோம்.

'அதிகம் பேர் படிக்கும் பத்திரி​கையாக இல்லை என்பதால், 'காலச்சுவடு' நூலகங்களுக்கு வாங்குவது நிறுத்தப்​பட்டது’ என்று, முன்னாள் அமைச்சர்  காரணம் சொன்னார். அதே காலகட்டத்தில் 'கடலார்', 'கனிமொழி', 'தாகூர் கல்விச் செய்தி', 'திரிக முகம்', 'அற்புத ஆலயமணி', 'எங்களுக்கு மகிழ்ச்சி', 'ஜெய் பாடி பில்டிங் மாஸ்டர்', 'கவலைப்படாதே', 'நல்வழி', 'நித்தியானந்தம்'
உட்பட இன்னும் பல பத்திரிகைகள் நூலகங்களில் வாங்கப்பட்டது. இந்தப் பத்திரிகைகள் எல்லாம் அதிக மக்கள் படிப்பவை என்று நீதிமன்றத்திலும் வாதம் செய்தார்கள். ஆனாலும், 'அரசு தன் மனம் போனபோக்கில் எந்த முடிவும் எடுத்துவிட முடியாது’ என, ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, மீண்டும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அரசு விளம்பரம் தருவதிலும் இதே தீர்ப்பைப் பொருத்திப் பார்க்க முடியும் என நினைக்கிறேன்...'' என்று முடித்தார் கண்ணன்.

கருத்து சுதந்திரத்தை அழிக்க நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு, இந்தத் தீர்ப்பு ஒரு சவுக்கடி!

- இரா.தமிழ்க்கனல்

நன்றி : ஜூனியர்விகடன்

முந்தைய ஆட்சியாளர்கள் காழ்ப்புணர்வுடன், அப்பட்டமான தனி மனித விரோதத்துடன், ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்பட்டனர் என்பதற்கு இந்தக் 'காலச்சுவடு' விஷயமும் ஒரு உதாரணம்..!

நூலகங்களுக்கு மட்டுமே வந்து கொண்டிருந்த பல புத்தகங்களை அதிகம் பேர் படிக்கிறார்கள் என்று நன்கு படித்த அமைச்சராக இருந்த ஒருவர் பொய் சொன்னது மிகக் கேவலமானது..

“வாசகர்கள் அதிக அளவில் படிக்கும் இதழ்களை நூலகங்களுக்கு வாங்கலாம் என்று தீர்மானித்து அதன் அடிப்படையில்தான், ‘காலச்சுவடு’ பத்திரிகையை நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறார்கள். ‘காலச்சுவடு’ பத்திரிகை வாசகர்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்படும் பத்திரிகைகளில் ஒன்றானால், இந்தப் பிரச்சினை தானாக தீர்ந்துவிடும்..”

இப்படிச் சொல்லியிருக்கிறார் அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு. முந்தையக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த பத்திரிகைகளில் எத்தனை பத்திரிகைகளை அமைச்சர் கேள்விப்பட்டிருப்பார் என்பதை உங்களது ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்..

தானும் ஒரு பத்திரிகையாளன் என்று வாய் கூசாமல் சொல்லிக் கொள்ளும் முத்தமிழ் அறிஞரின் நியாயமான ஆட்சியில்தான் இந்தக் கொடுமை நடந்துள்ளது என்பதையும் நினைத்துப் பார்க்கின்றபோது அந்தப் பட்டத்தை வழங்கியவர்களை நினைத்து பரிதாபப்படத்தான் முடிகிறது..! இந்த ஆட்சி போனது நியாயமானதுதான் என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாக இதனையும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

அதே சமயத்தில் தாத்தா மீது ரொம்ப கோபப்பட வேண்டாம். தாத்தா என்றில்லை.. ஆத்தாவும் இதே குணத்துடன்தான் இருக்கிறார்..
 

'விடுதலை' பத்திரிகையை வாங்குவதை நிறுத்தும்படி சென்ற மாதமே அனைத்து நூலகங்களுக்கும் உத்தரவுகள் சென்று, அது நடைமுறைக்கும் வந்துவிட்டதாம்.. முரசொலி வாங்குகிறார்களா என்று தெரியவில்லை.

உண்மையாகவே ஆத்தா, தடை போடுவதாக இருந்தால் 'முரசொலி'க்குத்தான் தடை விதித்திருக்க வேண்டும். 'விடுதலை'க்கு ஏன் தடையென்று தெரியவில்லை. 'விடுதலை'யின் மிகப் பெரிய வியாபாரமே நூலக வியாபாரம்தான். அந்தப் பொழைப்பிலும் மண்ணையள்ளிப் போட்டுவிட்டார் தமிழகத்தின் உத்தமத் தலைவி..! இவரும் தான் ஜனநாயகவாதி என்றுதான் சொல்லிக் கொள்கிறார்.

'விடுதலை' முழுக்க, முழுக்க நாத்திகம் பேசும் ஒரேயொரு தினசரி பத்திரிகை. இதனை அந்த இயக்கத்தின் தொண்டர்கள் மட்டுமே வீடுகளில் வாங்கிப் படிக்கிறார்கள். அவர்களும் ஊருக்கு சில நூறு பேர் மட்டுமே.. மற்றவர்கள் இதனைப் படிக்க வேண்டுமெனில் நூலகங்களுக்குத்தான் செல்ல வேண்டும்..!

நானும் எனது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பெரியாரின் தோழராக இருந்தபோது 'விடுதலை'யை தினம் தோறும் தவறாமல் விலைக்கு வாங்கி படித்து வந்தவன்தான்.. என்னுடைய தாயாரின் மறைவுக்குப் பின்பு சில நாட்கள் படிக்காமலேயே இருந்தவனின் கண்ணில் 'கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்' கிடைத்த்தும் பெரியாரில் இருந்து பெரியாழ்வாருக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டேன்..! அத்தோடு 'விடுதலை'யை தினமும் படிப்பது நின்றுவிட்டது.

ஆனாலும் மதுரை வைகையாற்றுக் கரையோரம் ஆழ்வார்புரம் ராமச்சந்திரன் நடத்திய 'கலைஞர் படிப்பகம்' பக்கம் போகும்போதெல்லாம் விடுதலையை அடிக்கடி வாசிப்பதுண்டு.. அதில் வரும் நாத்திகக் கருத்துக்களைப் படித்தால் நிஜமாகவே உண்மைதானோ என்று சிந்திக்கத் தோன்றும். அந்த அளவுக்கு கேள்விகளை தீயாய் தீட்டி எழுதியிருப்பார்கள்..

எனக்கு 'விடுதலை'யில் பிடித்தது அறிவியல் முன்னேற்றம் பற்றிய  செய்திகள்தான். அதேபோல் உலக அளவில் முன்னேறிய நாடுகள் பற்றிய செய்திகளையும், அவர்களின் உழைப்புத் திறன், புதிய, அரிய கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகளையும் அடிக்கடி வெளியிடுவார்கள். அவைகளனைத்தும் இளைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டியவைகள்.

அதிகமாக நூலகத்தில் கிடைக்கக் கூடியதாக இருக்கும் அந்த தினசரியை நிறுத்தியது தமிழ் வாசகர்களுக்கு ஜெயலலிதா செய்த துரோகமாகத்தான்  நினைக்கிறேன்.. மாற்றுக் கருத்து இருந்தாலும் அதனை வெளிப்படுத்திவிட்டு அதற்குப் பதிலளிப்பதுதான் சரியான ஜனநாயகம். தன்னை எதிர்த்துப் பேசுகிறாரே, எழுதுகிறாரே என்றெல்லாம் நினைத்து அவர்கள் அழிந்துபோக வேண்டும் என்று ஒரு முதலமைச்சரே நினைப்பது வெட்கமான செயல்..

ஒரு காலத்தில் 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்று தனக்கு பட்டமெல்லாம் கொடுத்து பரவசப்படுத்தியபோது, வீரமணியும், அவரது விடுதலையும் ஜெயல்லிதாவுக்கு மிகவும் பிடித்திருந்த்து. இன்றைக்கு எதிரணியில் இருக்கிறார்.. திட்டம் தீட்டிக் கொடுக்கிறார் என்றெல்லாம் தெரிந்தவுடன் வேண்டாத விருந்தாளியாக மாறிப் போய் தடா உத்தரவு போட்டுவிட்டார்.


இதற்காகவா இவர் ஆட்சிக்கு வந்தார்..? இது போன்ற சில்லரைத்தனங்களை செய்வதைக்கூட நாட்டு மக்களால் ஏன் என்று கேட்க முடியவில்லை என்றால் நமக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்து நாம்தான் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு பொறுத்திருக்க வேண்டிய 5 ஆண்டு காலக்கட்டம் மிக அதிகம்.

சென்ற 3 ஆண்டுகளாக 'காலச்சுவடு' இதழை வாங்காததால் அந்த நிறுவனத்துக்குக் கிடைத்த இழப்பீடை யார் தருவார்..? அதேபோல் அந்த 3 ஆண்டுகளும் அந்தப் புத்தகத்தை நூலகங்களில் படிக்கக் கிடைக்காதவர்களின் வாசகப் பசிக்கு யார் பொறுப்பேற்பது..?

இதேபோல்தான் 'விடுதலை'யின் நிலைமையும்.. இனி வீரமணி நீதிமன்றத்தில் தொடுக்கும் வழக்கு எத்தனையாண்டுகள் கழித்து விசாரணைக்கு வந்து அவருக்கு நியாயம் கிடைக்கப் போகிறதே தெரியவில்லை. ஆனால் அதுவரையிலும் நூலகங்களில் அந்தப் பத்திரிகையை படிக்க வாய்ப்பு கிடைக்காத தமிழ் வாசகர்களுக்கு என்ன பதில்..?

ஆத்தாவும், தாத்தாவும் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டாலும், தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டாலும், இதுபோல் அவ்வப்போது எதையாவது செய்து தாங்கள் இருவருமே ஒருவர்தான் என்பதை நிரூபித்து விடுகிறார்கள்..!

வாழ்க ஜனநாயகம்..!

வாழ்க தமிழகம்..!!

வளர்க திராவிடம்..!!!

26 comments:

  1. இந்த பதிவின் கோபம் சரியா எனக்கு தெரியலை...ஏன்னா புத்தகம் நல்லா இருந்தா அதை வாங்கி படிக்குரவங்க இருக்க தான் செய்யுறாங்க..இந்த பதிவு என்னவோ அந்த பத்திரிக்கைகளை நிறுத்தி விட்ட மாதிரி பேசுவது தவறு..வேணும்னா அந்த அம்மா நிராகரித்த பத்திரிக்கைகள் புதுசா மார்க்கெட்டிங் பண்ணி மக்கள் கிட்ட வித்துக்கட்டுமே பாப்போம்..அது தானே வியாபாரம்...

    ReplyDelete
  2. பாசிச பத்திரிக்கையான உயிர்மையை நூலகங்களில் தடை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் . அரசு செவி சாய்க்குமா ?

    ReplyDelete
  3. விடுதலைக்கு - நூலகத்திலிருந்து விடுதலையா...

    http://oosssai.blogspot.com/2011/05/blog-post_30.html

    ReplyDelete
  4. எழுத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறதே...

    ReplyDelete
  5. //வாழ்க ஜனநாயகம்..!

    வாழ்க தமிழகம்..!!

    வளர்க திராவிடம்..!!!//

    நான் சொல்ல நினைச்சத நீங்க சொல்லி முடிச்சுட்டீங்க...

    ReplyDelete
  6. ippoluthu engal kirama nulakathiriku dinakaran, kungumam varuvathillai. Kalaignar aatchiyil dinamalar , dinamani vanthathilai. Araciyalla ithelam satharanappa ...

    ReplyDelete
  7. ஐயா, இந்த நீதிமன்றங்கள் மட்டும் என்ன குறைச்சலா? ஆட்சி மாறவில்லையென்றால் அவர்கள் இது மாதிரி தீர்ப்பு சொல்லியிருப்பார்களா?

    பத்திரிக்கைகள்??? இன்றைய “தினமல_” பாருங்க... கோவை நடுவீதி கொலை பத்தி வாயே தொறக்கல (நான் அவர்களின் இணைய இதழ் தான் வாசிச்சேன்). ஏன்னா, அவர்களின் அம்மா ஆட்சிக்கு கெட்டபெயர் வந்திருமாம்...

    இருக்குறதுல, நாலு பிரபல பத்திரிக்கைகள, ஊடகங்கள கைக்குள்ள போட்டுக்கிட்டா, அவர்கள் நெனச்சதை சாதிருவாங்க, இந்த அரசியல்வியாதிகள்...

    ReplyDelete
  8. ///எனக்கு 'விடுதலை'யில் பிடித்தது அறிவியல் முன்னேற்றம் பற்றிய செய்திகள்தான். அதேபோல் உலக அளவில் முன்னேறிய நாடுகள் பற்றிய செய்திகளையும், அவர்களின் உழைப்புத் திறன், புதிய, அரிய கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகளையும் அடிக்கடி வெளியிடுவார்கள். அவைகளனைத்தும் இளைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டியவைகள்.///

    ஒரு ஆன்மீகவாதியே `விடுதலை`யை விரும்புகிறார் என்றால் நிச்சயம் அது தரமானதுதான். அந்த வகையில் உங்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
  9. இந்த காலச்சுவட்டிற்கு கருணாநிதியை எழுதியதுபோல் ஜெயலலிதா அரசாங்கத்தின் குறைகளை சுட்டி தலையங்கம் எழுதுவதற்கும் தில் இருக்கா? அப்படி இருந்தால் மட்டுமே காலச்சுவட்டிற்காக நாம் பொதுஜனம் வக்காலத்து வாங்கவேண்டும். இல்லையேல் "பத்தோடு பதினொன்னு..அதிலே இது ஒன்னு.." அப்படினு அலட்டிக்காம போயிட்டே இருக்கணும். அவ்வளவுதான்! மற்றபடி, இந்தத்தீர்ப்பு சவுக்கடி அது இதுங்கறதெல்லாம் ஓவர்!!

    ReplyDelete
  10. ஐயா,.,, எனக்கொரு டவுட்டு..

    முத்தமிழ் அறிஞர் முத்தமிழ் அறிஞர்னு தாத்தாவைச் சொல்றாங்கலே... முத்தமிழ்ல வரும் இயலுக்கு ஏதோ பண்ணியிருக்கார், நாடகத்துக்கும் பண்ணியிருக்கார்னு வைங்க... இன்னொரு தமிழான இசைக்கு இவர் என்னத்த செஞ்சார்??? அப்படி செய்யாட்டி இருதமிழ் அறிஞர்னுதானே சொல்லணும்??

    எதுக்கு இந்த வேண்டாத புகழ்ச்சியெல்லாம்..

    இ.மூ.புலிகேசியில் வடிவேலு சொல்வார்.. “மன்னர் வருகிறார் என்று சொன்னால் போதும்... வீண் புகழாரம் வேண்டாம்”
    அடடா... என்னவொரு டயலாக்... தாத்தாவோட காதுல ஓதுங்கப்பா.

    ReplyDelete
  11. என்னங்க நீங்க அர்த்தமில்லாம பேசிட்டு... இப்படி ஏதாவது உருப்படியா பண்ணினாத்தான் ஒரு தரமான ஆட்சி இருக்கும்... அதைவிட்டுட்டு சும்மா மக்கள் நலன், பிரச்சனை மண்ணாங்கட்டின்னு போயிட்டு இருந்தா.......

    இதுபோல் அவ்வப்போது எதையாவது செய்து தாங்கள் இருவருமே ஒருவர்தான் என்பதை நிரூபித்து விடுகிறார்கள்..!

    இருவரின் பதிலும் இதுதான் :
    அப்படித்தான் பண்ணுவோம்... இஷ்டமிருந்தா படி.. இல்லாட்டி தூக்குல தொங்கு.....

    பாஸ்.... இரண்டு பேருக்கும் உள்ள பயம் தான் இந்த “தடைகளுக்கு” காரணம்!!! அவ்வ்..ச்

    ReplyDelete
  12. அடப்பாவமே.... நான் மனுஷன்யா மனுஷன்... கிருமி இல்லை.. என்னோட பதிவை அழிச்சுட்டாய்ங்களேய்யா.....

    உ.த சார்... இதையும் அழிக்கிறதுக்குள்ள மீட்டுப்போடுங்க..

    ReplyDelete
  13. சரவணா! கலைஞர் செஞ்ச தப்பு காலச்சுவடு நிப்பாட்டினது தான். என்ன ஒரு 100 பேர் படிப்பாங்களா அதை. அதை விடுத்து ஜூவி, ரிப்போர்டரை நிப்பாட்டி இருக்கனும். அதிமுக கட்சி பத்திரிக்கைகளான இவைகள் கூட நடுநிலை பத்திரிக்கை என்கிற போர்வை போத்திகிட்டு அரசு நூலகத்திலே உள்ளே வந்துடுது! சரவணா ஒரு பதிவு போடுப்பா ஜூவியை நிப்பாட்ட சொல்லி:-))

    ReplyDelete
  14. [[[Suresh Kumar said...

    இந்த பதிவின் கோபம் சரியா எனக்கு தெரியலை. ஏன்னா புத்தகம் நல்லா இருந்தா அதை வாங்கி படிக்குரவங்க இருக்கதான் செய்யுறாங்க. இந்த பதிவு என்னவோ அந்த பத்திரிக்கைகளை நிறுத்திவிட்ட மாதிரி பேசுவது தவறு. வேணும்னா அந்த அம்மா நிராகரித்த பத்திரிக்கைகள் புதுசா மார்க்கெட்டிங் பண்ணி மக்கள்கிட்ட வித்துக்கட்டுமே பாப்போம். அதுதானே வியாபாரம்.]]]

    சுரேஷ் நீங்கள் பதிவைப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

    அரசு நூலகங்களுக்கான புத்தகத் தேர்வு என்பது எந்தவிதமான தனி மனித விரோத செயல்பாடில்லாமல் நேர்மையாக, நடுநிலைமையாக நடத்தப்பட வேண்டியது. அந்தப் புத்தகம் அதிகமாக விற்பனையாகிறது அல்லது விற்பனையாகவில்லை என்பது இங்கே ஒரு பிரச்சினையே இல்லை.

    ReplyDelete
  15. [[[பார்வையாளன் said...

    பாசிச பத்திரிக்கையான உயிர்மையை நூலகங்களில் தடை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசு செவி சாய்க்குமா?]]]

    பார்வை, ஏன் இந்தக் கொலை வெறி..? சாருவையே எழுத அனுமதிக்கும்போது உயிர்மைக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்..?

    ReplyDelete
  16. [[[ஒசை. said...

    விடுதலைக்கு - நூலகத்திலிருந்து விடுதலையா...

    http://oosssai.blogspot.com/2011/05/blog-post_30.html]]]

    தகவலுக்கு மிக்க நன்றிகள் ஐயா..!

    ReplyDelete
  17. [[[தமிழ்வாசி - Prakash said...

    எழுத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறதே.]]]

    இது மறைமுகமான மிரட்டல். என்னை எதிர்த்து எழுதினால் உன் தொழிலையே குலைத்துவிடுவேன் என்று ஆட்சி, அதிகாரத்தைத் தன் கையில் வைத்துக் கொண்டு மிரட்டிய கேவலமான அரசியல்..!

    ReplyDelete
  18. [[[R.Gopi said...

    //வாழ்க ஜனநாயகம்..!

    வாழ்க தமிழகம்..!!

    வளர்க திராவிடம்..!!!//

    நான் சொல்ல நினைச்சத நீங்க சொல்லி முடிச்சுட்டீங்க.]]]

    வருகைக்கு நன்றி கோபி..!

    ReplyDelete
  19. [[[sivaG said...

    ippoluthu engal kirama nulakathiriku dinakaran, kungumam varuvathillai. Kalaignar aatchiyil dinamalar, dinamani vanthathilai. Araciyalla ithelam satharanappa.]]]

    ஹா.. ஹா.. வெளங்கிடும். இதுதான் இவர்கள் ஆட்சி செய்யும் லட்சணம்..!

    ReplyDelete
  20. [[[Sundar said...

    ஐயா, இந்த நீதிமன்றங்கள் மட்டும் என்ன குறைச்சலா? ஆட்சி மாறவில்லையென்றால் அவர்கள் இது மாதிரி தீர்ப்பு சொல்லியிருப்பார்களா?]]]

    தவறு.. ஆட்சி நீடித்திருந்தாலும் இது போலவேதான் தீர்ப்பு வந்திருக்கும் என்று நான் உறுதியுடன் நம்புகிறேன்..!

    பத்திரிக்கைகள்??? இன்றைய “தினமல_” பாருங்க... கோவை நடு வீதி கொலை பத்தி வாயே தொறக்கல (நான் அவர்களின் இணைய இதழ்தான் வாசிச்சேன்). ஏன்னா, அவர்களின் அம்மா ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்திருமாம்.
    இருக்குறதுல, நாலு பிரபல பத்திரிக்கைகள, ஊடகங்கள கைக்குள்ள போட்டுக்கிட்டா, அவர்கள் நெனச்சதை சாதிருவாங்க, இந்த அரசியல்வியாதிகள்.]]]

    இதுல தாத்தாவும், ஆத்தாவும் ஒண்ணுதான்..!

    ReplyDelete
  21. [[[சிவானந்தம் said...

    ///எனக்கு 'விடுதலை'யில் பிடித்தது அறிவியல் முன்னேற்றம் பற்றிய செய்திகள்தான். அதேபோல் உலக அளவில் முன்னேறிய நாடுகள் பற்றிய செய்திகளையும், அவர்களின் உழைப்புத் திறன், புதிய, அரிய கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகளையும் அடிக்கடி வெளியிடுவார்கள். அவைகளனைத்தும் இளைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டியவைகள்.///

    ஒரு ஆன்மீகவாதியே `விடுதலை`யை விரும்புகிறார் என்றால் நிச்சயம் அது தரமானதுதான். அந்த வகையில் உங்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.]]]

    நாத்திகக் கருத்துக்களையும் படிக்க வேண்டியதுதான். தவறேயில்லை. அப்போதுதான் ஆத்திகத்தின் மதிப்பு நமக்குத் தெரியும்..!

    ReplyDelete
  22. [[[ரிஷி said...

    இந்த காலச்சுவட்டிற்கு கருணாநிதியை எழுதியதுபோல் ஜெயலலிதா அரசாங்கத்தின் குறைகளை சுட்டி தலையங்கம் எழுதுவதற்கும் தில் இருக்கா? அப்படி இருந்தால் மட்டுமே காலச்சுவட்டிற்காக நாம் பொதுஜனம் வக்காலத்து வாங்க வேண்டும். இல்லையேல் "பத்தோடு பதினொன்னு. அதிலே இது ஒன்னு" அப்படினு அலட்டிக்காம போயிட்டே இருக்கணும். அவ்வளவுதான்! மற்றபடி, இந்தத் தீர்ப்பு சவுக்கடி அது இதுங்கறதெல்லாம் ஓவர்!!]]]

    அப்படி எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதே நியாயமில்லை ரிஷி. அது அவர்களது கருத்து.. பார்வை.. நாம் சொல்வதற்கும், பேசுவதற்கும் தடையில்லை என்றால் ஓகே..!

    ReplyDelete
  23. [[[அபி அப்பா said...

    சரவணா! கலைஞர் செஞ்ச தப்பு காலச்சுவடு நிப்பாட்டினதுதான். என்ன ஒரு 100 பேர் படிப்பாங்களா அதை. அதை விடுத்து ஜூவி, ரிப்போர்டரை நிப்பாட்டி இருக்கனும். அ.தி.மு.க. கட்சி பத்திரிக்கைகளான இவைகள்கூட நடுநிலை பத்திரிக்கை என்கிற போர்வை போத்திகிட்டு அரசு நூலகத்திலே உள்ளே வந்துடுது! சரவணா ஒரு பதிவு போடுப்பா ஜூவியை நிப்பாட்ட சொல்லி:-))]]]

    முடியாது.. அவைகளால்தான் அடுத்த முறையும் தி.மு.க. ஆட்சிக்கு வராமல் தடுக்க முடியும்..! இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கு உங்களைப் பத்தி..!

    ReplyDelete
  24. //அப்படி எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதே நியாயமில்லை ரிஷி. அது அவர்களது கருத்து.. பார்வை.. நாம் சொல்வதற்கும், பேசுவதற்கும் தடையில்லை என்றால் ஓகே..!//

    நீங்க அப்படி வர்றீங்களா..!! என்னைப் பொருத்தவரை ஊடகங்கள் நியாய அநியாயங்கள் பற்றி எத்தரப்பும் சார்பின்றி பேசவேண்டும். பொதுஜனம் எதிர்பார்ப்பது அதைத்தான்!

    ReplyDelete
  25. [[[ரிஷி said...

    //அப்படி எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதே நியாயமில்லை ரிஷி. அது அவர்களது கருத்து.. பார்வை.. நாம் சொல்வதற்கும், பேசுவதற்கும் தடையில்லை என்றால் ஓகே..!//

    நீங்க அப்படி வர்றீங்களா..!! என்னைப் பொருத்தவரை ஊடகங்கள் நியாய அநியாயங்கள் பற்றி எத்தரப்பும் சார்பின்றி பேச வேண்டும். பொதுஜனம் எதிர்பார்ப்பது அதைத்தான்!]]]

    நடுநிலைமை என்பதே அவரது சொந்தப் பார்வைதானே..! அதற்கு மரியாதை அளித்துதானே தீர வேண்டும். நீ எனக்கு ஆதரவளிக்க வேண்டும். அல்லது அவனுக்கு ஆதரவளிக்க வேண்டும். இரண்டுக்கும் நடுவில் நிற்கவே கூடாது என்பது எதேச்சதிகாரம்தானே..!

    ReplyDelete
  26. நல்ல பதிவு..,வாழ்த்துக்கள்...

    ReplyDelete