Pages

Wednesday, June 15, 2011

ஆரண்ய காண்டம் - சினிமா விமர்சனம்

15-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சிறந்த படம், மிகச் சிறந்த படம், உள்ளூர் தரம், இந்தியத் தரம், உலகத் தரம் என்று எத்தனை வகைகளில் பிரித்துப் பார்த்தாலும் இத்திரைப்படம் தமிழ்ச் சினிமாவுலகில் சினிமா விமர்சகர்களால் மட்டுமே கொண்டாடப்படக் கூடிய ஒரு எதார்த்தவாத திரைப்படம்தான்.. அதில் சந்தேகமில்லை..!

வெற்றி, தோல்வி என்கிற இரண்டு அம்சத்தை மையமாக வைத்து பார்த்தீர்களேயானால் இது நிச்சயமாக வணிக ரீதியாக தோல்வியடைந்த படம். ஆனால் படம் பார்த்தவர்களை சிறிதளவேனும் பிரமிக்க வைத்திருக்கிறது..! அதே சமயம் கோடிக்கணக்கான தமிழர்களை பார்க்க வைத்திருக்க வேண்டிய இத்திரைப்படத்தைத் தயாரித்தவர்களே, சில ஆயிரம் பேர் இந்தப் படத்தைப் பார்த்தாலே போதும் என்று நினைத்து செயல்பட்டதினால் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய கிரீடத்தை தாங்களே இழந்துவிட்டிருக்கிறார்கள்.

2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பூஜை போடப்பட்ட இத்திரைப்படம்   மூன்றாண்டுகள் கழித்து தற்போதுதான் வெளியாகியுள்ளது. ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது என்பது பிள்ளை பெறுகின்ற அவஸ்தையைப் போன்றதுதான்..! ஆனாலும், சினிமா மீதிருக்கும் ஆர்வத்தில் தயாரித்தே தீர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டிருக்கும் இதன் தயாரிப்பாளருக்கு எனது சல்யூட்..!

அதே சமயம்.. முழுக்க, முழுக்க வணிகம் சார்ந்த இத்தொழிலில் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளாமல், நல்ல சினிமாவைப் பற்றிச் சிந்தித்து தங்களைத் தியாகியாக்கிக் கொள்வது முட்டாள்தனம் என்றே நான் கருதுகிறேன்.

தான் ஆசை, ஆசையாகத் தனது குருநாதரின் பெயரில் கட்டியமைத்து குருபக்திக்கு உதாரணத்தைக் காட்டிய பாடும் நிலா திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியன், தனது மகனின் இந்த சினிமா ஆர்வத்திற்காக சமீபத்தில் தனது கோதண்டபாணி ரிக்கார்டிங் ஸ்டூடியோவையே அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு தனது கடனை அடைத்திருக்கிறார் என்பது வருத்தமான விஷயம்தான்..!

தனது பெரும் சொத்துக்களை இழந்துதான் இத்திரைப்படம் இப்போது வெளி வந்திருக்கிறது என்கிற ஒரு விஷயம் அவருக்குப் பெருமையோ இல்லையோ.. என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் வருத்தம்தான். இடையில் வந்த நாணயம் திரைப்படமும் பெரும் அளவுக்கு நஷ்டத்தைக் கொடுத்த காரணத்தினால் இத்திரைப்படத்தை உருவாக்குவதிலும் பல இடர்பாடுகள்.. அத்தனையையும் தாண்டி படத்தை ரிலீஸ் செய்யும்போது இவர்களே அமைத்துக் கொண்ட கதைக்களன்களும் அதற்கு இடைஞ்சலே செய்துள்ளன..!

52 இடங்களில் வசனங்கள் மற்றும் காட்சிகளில் கத்திரி போட்டும், 22.81 மீட்டர் அளவுக்குத் தூக்கியெறிந்தும், 2 மணி 45 நிமிடங்களுக்கு எடுக்கப்பட்ட திரைப்படத்தை 8 ரீல்களில், 1 மணி 55 நிமிடங்களுக்குச் சுருக்கிக் கொடுத்தும் படத்தின் அபாரமான திரைக்கதை இப்படத்தைப் பார்க்க வைக்கிறது என்றாலும், இதனால் விளைவித்திருக்கும் நஷ்டத்தை நினைத்து  வருத்தப்படத்தான் முடிகிறது..!

எனக்குத் தெரிந்து இத்தனை சென்சார் வெட்டுகளை வாங்கிய முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கதைக்களன் அப்படிப்பட்டது. இந்தப் படத்தைப் பார்க்க யாரும் குடும்பத்துடன் வந்துவிடாதீர்கள் என்று தயாரிப்பாளரே சொன்ன பிறகு நாம் யார் மீது வருத்தப்படுவது..?

தெரிந்தேதான் எடுத்திருக்கிறார்கள். சென்சாரில் பிரச்சினைகள் வரும்.  ‘ஏ’ சர்டிபிகேட்தான் கிடைக்கும்.. தியேட்டரில் கூட்டம் வராது.. என்பதையெல்லாம் எதிர்பார்த்துதான் செய்திருக்கிறார்கள். உலகத் திரைப்பட விழாக்களில் தமிழ் மொழியின் சார்பாக அவசியம் திரையிட வேண்டிய ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்த திருப்தியே எங்களுக்கு போதும் என்பது இப்படக் குழுவினரின் விருப்பம் போலும்..! அந்த வகையில் சினிமா ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் மிக மிக ஏற்ற படம். மற்றவகையில் ஒரு சராசரி தமிழன் டைம் பாஸுக்காக குடும்பத்துடன் பார்க்கவே முடியாத திரைப்படமும் இதுதான்..!

படத்தின் போஸ்டர்களையாவது தமிழகத்துக்கு ஏற்றாற்போல் கொஞ்சம் புரிவதுபோல் அமைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் கூட்டமாவது வந்திருக்கும். ஏதோ புரியாத பாஷையில் வேற்று மொழி படம் போல் ஒட்டப்பட்டிருப்பதால் அடித்தட்டு மக்களை இப்படம் போய்ச் சேரவில்லை என்பது தெரிகிறது. தியேட்டரில் முக்கால்வாசி காலியாக இருந்த இருக்கைகளுடன் இப்படத்தைப் பார்க்கையில் மிகவும் வேதனையாகவும் இருந்தது. சிறப்பாகவும், கடுமையாகவும் உழைத்து ஒரு சிற்பத்தை உருவாக்கி அதனைப் பார்ப்பதற்கு ஒளி வெளிச்சத்தைக்கூட ஏற்பாடு செய்து வைக்காமல் இருட்டில் வைத்திருப்பதுபோலத்தான் தோன்றியது..!

இராமாயணத்தில், தனது தம்பி இலக்குவணனுடனும், மனைவி சீதாவுடன் ராமபிரான் காட்டில் வசித்து வந்த காலக்கட்டத்தைச் சொல்வதுதான்  ஆரண்ய காண்டம்..! ஆனால் இந்த ஆரண்ய காண்டம், ஒரு நாள் பொழுதில் நடக்கும் போர்க்களக் காட்சிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.


உடலுறவில் ஈடுபட முடியாத அளவுக்கு தளர்ச்சியுடன் இருந்தாலும், தனது கடத்தல் தொழிலில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் தாதா சிங்கப்பெருமாள். இவரிடம் தளபதியாக இருப்பவர் பசுபதி என்னும் சம்பத். இவர்களுக்கு எதிர் கோஷ்டி கஜேந்திரன். அவனது தளபதி கஜபதி.

கஜேந்திரனுக்கு வர வேண்டிய போதை மருந்து சரக்கு ஒன்று ஊருக்குள் வந்திருப்பதாகவும், அதனை நாம் கைப்பற்றலாம் என்றும் ஐடியா கொடுக்கிறார் சம்பத். சிங்கப்பெருமாள் அதை வேண்டாம் என்று சொல்ல, “உனக்கு வயசாயிருச்சு தல.. அதான் சண்டையே வேணாம்ன்றே.. இப்படியே ஒதுங்கிப் போனா நாம தொழில் செய்ய முடியாது. முடியறவரைக்கும் நாம தில்லு காட்டியே ஆகணும். நீ வேண்ணா ஒதுங்கிக்க.. நான் பார்த்துக்குறேன். பசங்களை ரெடி பண்ணணும்.. ரேட் பேசணும்.. பத்து லட்சம் கடனா கொடு. இந்த பிஸினஸை நான் டீல் பண்ணிக்கிறேன்..” என்கிறார் சம்பத்.

ஒரு நிமிடத்தில் தனது தலைமை தாதா பதவி ஆட்டம் கண்டுவிட்டதைப் பார்த்து ஆடிப் போன சிங்கப்பெருமாள் பாண்டிச்சேரிக்கு போய்க் கொண்டிருக்கும் தனது அடியாட்களிடம் சம்பத்தை போட்டுத் தள்ளும்படி சொல்கிறார். இதனை தற்செயலாக கேட்டுவிடும் சம்பத் தப்பிக்க வேண்டி வேண்டுமென்றே போலீஸிடம் சிக்குவதைப் போல பாவ்லா காட்ட.. சம்பத்துக்கே அல்வா கொடுக்கும் பெருமாளின் அடியாட்கள் டீம், சம்பத்தின் மனைவியைத் தூக்கிச் செல்கிறது.

தன்னிடம் இருக்கும் சண்டை சேவலை வைத்து தற்போது பொழப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் முன்னாள் ஜமீன் காளையன், தனது மகன் கொடுக்காப்புளியுடன் சேவற்சண்டைக்காக சென்னை வந்திருக்கிறார். திருவல்லிக்கேணி பாவா லாட்ஜில் கஜேந்திரனுக்காக சரக்கு கொண்டு வந்திருக்கும் ஆளும் அதே லாட்ஜின் பக்கத்து அறையில் தங்கியிருக்கும் காளையனுடன் தண்ணியடிக்கும்போது தனது சரக்கையும், அதன் விலையையும் சொல்லி வைக்க.. காளையனின் புத்திசாலிப் பையன் கொடுக்காப்புளியின் காதில் இது விழுந்து தொலைக்கிறது.

சேவற்சண்டைக்காக போன இடத்தில் காளையனின் வெற்றிக் கூச்சலில் எரிச்சலாகும் பெட் கட்டி ஏமாந்த சிங்கப்பெருமாள், அவனது கோழியை பரலோகத்திற்கு அனுப்பி வைக்கிறார். இருந்த ஒரேயொரு சொத்தும் பறிபோன விரக்தியில் பையனுக்கும், அப்பனுக்குமான கவித்துவம் வாய்ந்த சொற்போரின் இறுதியில் கஜேந்திரனுக்கான சரக்கை எடுத்து தாங்கள் விற்பனை செய்து காசு பார்க்க பையன் ஐடியா கொடுக்கிறான்.

அப்போதுதான் சரக்கு கொண்டு வந்தவன் முந்தின நாள் அடித்த சரக்கினால் இறந்து போயிருப்பது தெரிய வர.. இது முருகனா பார்த்து நமக்குக் கொடுத்த வாய்ப்பு என்றெண்ணி சரக்குடன் அப்பனும், மகனுமாக எஸ்கேப்பாகிறார்கள்..!

கஜேந்திரனின் அடியாட்கள் லாட்ஜுக்கு சரக்கைத் தேடி வந்து கொண்டு வந்த ஆளின் சடலத்தைப் பார்த்து வெறுப்பாகி வெறும் கையுடன் திரும்புகையில் போன் செய்ய வேண்டிய நம்பர் இருந்த பேப்பரை தேடி அப்பனும், மகனும் மீண்டும் லாட்ஜூக்கு வருகிறார்கள். அங்கே கஜேந்திரனின் ஆட்கள் இவர்களைப் பார்த்துவிட்டு விரட்ட.. இவர்கள் அப்போதைக்குத் தப்பிக்கிறார்கள்.

இதனை சம்பத்துதான் செய்திருப்பான் என்று கஜேந்திரனின் ஆட்கள் நினைத்து சம்பத்துக்கு வலை விரிக்க, சிங்கப்பெருமாளிடம் பேசுகிறார்கள். சிங்கப்பெருமாளோ தான் செய்தாலென்ன? அடுத்தவன் செய்தாலென்ன? எப்படியோ சம்பத் செத்தால் சரிதான் என்றெண்ணி சம்பத் மீது வெறியைக் கிளப்பிவிடுகிறார்.

தனது மனைவியைக் காப்பாற்ற வேண்டி போலீஸிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வரும் சம்பத் கஜேந்திரனின் ஆட்களால் தாக்கப்பட்டு தப்பிக்கிறான்.

இதற்கிடையில், சிங்கப்பெருமாள் தனது கீப்பாக வைத்திருக்கும் சுப்பு, அவனிடமிருந்து தப்பிக்க எண்ணியவள்  அவளுக்கு காவலாக போடப்பட்டிருந்த அரவாணி ஸ்டைலில் இருக்கும் சப்பையை இதற்காக உருக்குகிறாள். இது அவர்கள் படுக்கையில் உருள்கின்றவரையில் போகிறது.  சிங்கப்பெருமாளிடம் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு இருவரும் மும்பை சென்று செட்டிலாகிவிடலாம் என்று சப்பையை உசுப்பேற்றிவிடுகிறாள் சுப்பு.

இந்த நிலையில் விவரம் தெரியாத அப்பாவியாய் இருக்கும் காளையன் சிங்கப்பெருமாளின் அடியாளுக்கு போன் செய்து சரக்கு தன்னிடம் இருப்பதாகவும் 2 லட்சம் ரூபாய் கொடுத்து சரக்கை வாங்கிக் கொள்ளும்படியும் சொல்கிறான்.

புத்திசாலி கொடுக்காப்புளி அந்தச் சரக்கை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு வருவதற்குள் சிங்கப்பெருமாளின் அடியாள் படை காளையனை சிறையெடுத்துச் செல்கிறது. சிங்கப்பெருமாளின் முன்னிலையில் காளையனை பரேடு எடுக்கிறார்கள். ஆனாலும் காளையன் சரக்கு தனது மகனிடம் இருக்கிறது என்கிற உண்மையைத்தான் சொல்கிறான். அந்த உண்மையை இவர்களால்தான் நம்ப முடியவில்லை..!

தனது தந்தையை மீட்க வேண்டி பேப்பரில் இருந்த ஒரு எண்ணுக்கு போன் செய்கிறான் கொடுக்காப்புளி. அது சம்பத்தின் எண். சம்பத் சரக்கைத் தன்னிடம் கொடுத்தால் தான் அவனது தந்தையை மீட்டுக் கொடுப்பதாகச் சொல்கிறான். பையன் சரக்கைக் கொண்டு வந்து கொடுக்கும்போது தந்திரமாக கஜேந்திரனின் அடியாட்களையும் வரச் செய்கிறான் சம்பத்.

அதே சமயம் சிங்கப்பெருமாளிடமிருந்து தப்பிக்க நினைத்து சுப்பு நடத்திய நாடகத்தில் அறியாக்குழந்தையாக தானும் ஒரு கதாபாத்திரமாகிறான் சப்பை. சப்பையால் சிங்கப்பெருமாள் சாக.. சப்பையை சுப்பு தீர்த்துக் கட்டுகிறாள்.

இங்கே சம்பத் தனது பராக்கிராமத்தால் கஜேந்திரனையும், கஜபதியையும் வீழ்த்திவிட்டு சிங்கப்பெருமாளின் அரண்மனைக்கு வருகிறான். துப்பாக்கியும், கையுமாக நிற்கும் சுப்பு மீது பரிதாபப்பட்டு அவளை அனுப்பி வைக்க.. பெருமாளிடமே ஆட்டைய போட்ட பணத்துடன் சுப்பு ஏரியாவைவிட்டு வெளியேற.. அடுத்த சிங்கப்பெருமாளாக உருவெடுத்து தனது அரியாசனத்தில் அமர்கிறார் சம்பத்..!

இதுதான் படத்தின் கதை. எப்படியும் இதனைப் படிக்கின்ற அனைவரும் படத்தைப் பார்க்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். அதனால்தான் நீண்ட நாட்கள் கழித்து முழு கதையையும் இங்கே சொல்லிவிட்டேன்..!

கிளைமாக்ஸில் சுப்பு லாரியால் விபத்துக்குள்ளாக்கும் காட்சி உண்மையாக இருந்திருந்து, சம்பத்தும் இறந்து போய் படத்தை முடித்திருந்தால் நிச்சயமாக இந்தப் படம் ஒரு ஸ்பெயின் படத்தின் காப்பி என்று உறுதியாகச் சொல்வேன். இப்போது முழுமையாக இல்லை.. 95 சதவிகிதம் காப்பி என்று மட்டுமே உறுதியுடன் சொல்கிறேன்..!

மூன்றாண்டுகளுக்கு முன்பாக பைலட் தியேட்டரில் உலகத் திரைப்பட விழாவில் பார்த்த அத்திரைப்படத்தின் பெயர்தான் நினைவுக்கு வர மறுக்கிறது..! அந்த ஸ்பெயின் படத்தில் இல்லாமல், காண்டத்தில் இருக்கும் எக்ஸ்ட்ரா கேரக்டர்கள் காளையனும், கொடுக்காப்புளியும்தான்..!

ஆனாலும் என்ன..? காப்பி செய்தாலும் மிக விறுவிறுப்பான திரைக்கதையாக்கம்..! வித்தியாசமான கேமிரா கோணங்கள்.. கேரக்டர் ஸ்கெட்ச்சஸ்.. வசனங்கள் என்று அத்தனையிலும் சென்ட்டம் அடித்திருக்கிறார் இயக்குநர்..!

முதல் படம் போலவே தெரியவில்லை.. நிச்சயம் இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவை  வெகுவாகப் பாராட்ட வேண்டும். அதிலும் காளையன், கொடுக்காப்புளியின் கேரக்டர்களை வடிவமைத்திருப்பதற்கு ஸ்பெஷல் பாராட்டு..! காளையனுக்கும், அவனது மகனுக்குமான நட்பை எந்த வகையிலும் தந்தை, மகனாக பார்க்க முடியாத அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறார். அப்பாவைத் திட்டாதப்பா என்று காளையன் சொல்கின்ற வார்த்தையில் இருக்கும் ஏக்கத்தை அவர் முகமும் காட்டுவிடுகிறது..! பெர்பெக்ட் ஆக்ஷன் அண்ட் டைரக்ஷன்..!

“அப்பா மேல அவ்ளோ பாசமா?” என்ற சம்பத்தின் கேள்விக்கு, “அப்படியில்லை. ஆனா அவர் என் அப்பா..” என்று கொடுக்காப்புளி சொல்லும்போது தியேட்டரே அதிர்ந்தது. இது ஒன்று போதும் இயக்குநருக்கு..!

ஜாக்கிஷெராப் என்னும் இந்தக் கலைஞன் நடித்திருக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் இது என்று நினைக்கிறேன்..! ரொம்ப நடிக்க வேண்டாம். கேரக்டர் ஸ்கெட்ச்சஸே போதும் என்று இயக்குநர் முடிவெடுத்துவிட்டார். கோபத்தில் ஈ என்று பல்லைக் காட்டும் அந்தக் காட்சிகளும், மாடியில் இருந்து கேட்கும் இசைக்கேற்றவாறு தனது உடலை ஆட்டியபடியே அவர் மாடிப்படியேறும் காட்சியிலும் அட்டகாசமான உடல் மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜாக்கி.. ஜாக்கியின் மரணத்தின்போது நிகழ்வது செத்துப் போன ஒருவனின் பிரதியோ என்று நினைக்கத் தோன்றுகிறது..!

'காட்பாதரில்' துவங்கி இந்தப் படம் வரையிலும் தாதாக்கள் வெளிப்படுத்தும் வசன உச்சரிப்புகளும், வசனங்களும், காட்டுகின்ற உடல் மொழியும் ஒன்று போலவே உள்ளன.. தாதாக்கள் என்றால் உலகம் முழுக்க இப்படித்தான் என்று நினைத்துவிட்டார்கள் போலும்..!

ரவிகிருஷ்ணா என்கிற சப்பையை மிகச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்திற்காக உடலை இளைக்க வைத்து, என்னென்னமோ செய்து போலீஸ் வேடத்துக்கு தயாராக இருந்தும் நடிக்க முடியாமல் போன வருத்தத்தில் இருந்த ரவிக்கு இந்த வேடத்தினால் இன்னும் கொஞ்சம் இளைக்க வேண்டிய கட்டாயம். ஆனாலும் கிடைத்திருக்கும் பாராட்டுக்களால் பூரிப்பு அதிகமாகியிருக்கும்..!

நான் பார்த்த அந்த ஸ்பெயின் படத்தில் தான் ஆண்மகன்தான் என்பதைக் காட்டுவதற்காக ரவுடிகள் முன்பாகவே ஒரு விபச்சாரப் பெண்ணுடன் உடலுறவு செய்து காட்டுவான். பின்பு கிளைமாக்ஸில் ரவுடிகளை துப்பாக்கியால் சுடுவது போலவும் காட்சிகள் இருக்கும். ஆனால் இறப்புக் காட்சியில் தமிழ் சிங்கப்பெருமாளைவிடவும் உருக்கம் ஸ்பானிய சப்பையிடம் இருந்தது.. இதில் அது சிங்கப்பெருமாளிடம் போய் சப்பை சப்பையாகவே இறக்கிறான்..!

'பாக்ஸர்' ஆறுமுகம் கஜேந்திரனாக இறுக்கமான முகத்துடன் பிரபு, குஷ்பூ என்ற சீரியஸ் காமெடி வார்த்தைகளை உதிர்க்கும் கேரக்டர். தனது தளபதி இறந்தவுடன் கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு காரில் இருந்து இறங்கி ஓடும் காட்சியில்தான் பயந்து போனேன்.

திரைக்கதையுடன் பல்லாங்குழி ஆடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அந்த பாவா லாட்ஜை அக்குவேறு, ஆணி வேறாக அத்தனை கோணத்திலும் படம் பிடித்திருக்கும் அந்த ஷாட்டுகள் கண்ணுக்கு அழகு..! விறுவிறுவென்ற காட்சியமைப்புக்கு ஒளிப்பதிவாளர் வினோத் பெரும் உதவி செய்திருக்கிறார்.. கேமிரா கோணம் வைப்பதில் வித்தியாசம் இருந்தாலும் அதற்குப் பெரிதும் துணையாய் இருக்க வேண்டியது லொகேஷன்கள்தான்..! அதுவும் இந்தப் படத்தில் பெர்பெக்ட்..!

சம்பத்தின் வீடு, சம்பத் கஜேந்திரனின் ஆட்களிடம் இருந்து தப்பித்து போகும் வழிகள், பாவா லாட்ஜ், காளையன் காத்திருக்கும் தெரு, கஜேந்திரனின் வீடு, சிங்கப்பெருமாளின் வீடு, சேவல் சண்டை நடக்கும் இடம், கிளைமாக்ஸ் சண்டை நடைபெறும் இடம் என்று அத்தனையும் விதம்விதமான ரகங்கள்..! ஒளிப்பதிவாளரின் ஜெயிப்புக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்..!

சுப்புவும், சப்பையும் வெளியில் ஊர் சுற்றும்போது விமானத்தை வாயில் முழுங்குவதைப் போல செய்து காட்டி சுப்புவை சிரிக்க வைக்கும் காட்சியைத் தொடர்ந்து ஒரு காதல் பாடல் இருந்தது..! அதேபோல் இடைவேளைக்கு பின்பு அத்தனை பேருக்குமான காட்சிகளையும் ஒருங்கிணைத்தும் ஒரு பாடல் இருந்ததாம்..! காட்சியின் தீவிரம் கெடுகிறதே என்று பலரும் சொன்னதால் பாடல்கள் கட் செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள்..!

ஆனால் இதற்குப் பதிலாக பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா. பாவா லாட்ஜ் துரத்தல்.. காளையனும், கொடுக்காப்புளியும் ஓடுவது..! சம்பத்தின் ஓட்டம்.. சரக்கை எடுத்துக் கொண்டு கொடுக்காப்புளி சம்பத்தை காண வரும்போது பின்னாடியே வரும் இசை, காளையன்-கொடுக்காப்புளியின் வாய்ச்சண்டை முடிந்து போய் நிற்கும் அந்தத் தருணத்தில் ஒலிக்கும் ரிதம்.. மெல்ல மெல்ல நம்மை அவர்களிடத்தில் கொண்டு போய்விட்டது..! ஹாட்ஸ் ஆஃப் யுவன்..!

கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மட்டுமே சொதப்பல் என்றாலும் சம்பத் ஜெயித்தாக வேண்டும் என்ற இக்கதையின் முடிவின்படி அவர் ஜெயிக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். இது மட்டுமல்ல.. காளையன் வைத்திருந்த பேப்பர், அடுத்தக் காட்சியில் கொடுக்காப்புளியின் கையில் இருப்பது.. யாரும் சொல்லாமலேயே லாட்ஜ் ஆள் காளையனை கை காட்டுவது.. சிங்கப்பெருமாள் செத்தவுடன் எந்தப் பேச்சும் கேட்காமல் சம்பத்தை தலைவனாக ஏற்கும் அடியாள் படை.. என்று சில கேள்விகள் எழுத்தான் செய்கிறது.. இதையெல்லாம் அதுவரையிலும் நம்மை ரசிக்க வைத்ததற்காக மன்னித்துவிட்டுவிடலாம்.

அந்த ஸ்பெயின் திரைப்படத்தின் இறுதியில் டாப் ஆங்கிளில் ஹீரோயின் லாரியால் மோதி இறப்பதையும், அவள் கையில் வைத்திருந்த பேக்கில் இருந்து பணம் முழுவதும் சிதறி காற்றில் அலைபாய்ந்து அந்த சாலை முழுவதுமே பறந்து கொண்டேயிருப்பதைக் காட்டுவதுடன் படம் நிறைவடையும்..! அந்தக் காட்சியும், அந்தப் படமும் சொன்ன செய்தி.. “எல்லாவற்றிற்கும் ஒரு எதிர்வினை உண்டு” என்பதை..!

ஆனால் அது இங்கே நாகதத்தனிடம் விஷ்ணுகுப்தன்(இதில் “விஷ்னு” என்று எழுத்துப் பிழை வேறு..) எது தர்மம் என்று கேட்பதாகச் சொல்லி ஆரம்பித்திருக்கிறார்கள்..!

அவரவர்க்குத் எது தேவையோ,  அதுவே தர்மம் என்று நாகதத்தன் கூறினாராம்..! இது இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும் பொருந்தும்..!

படத்தின் டிரெயிலர் இது :



Aaranya Kaandam Cast

·    Jackie Shroff as Singaperumal
·    Ravi Krishna as Sappai
·    Sampath Raj as Pasupathy
·    Yasmin Ponnappa as Subbu
·    Somasundaram as Kaalayan
·    Rambo Rajkumar
·    Ajay Raj
·    Master Vasanth

Aaranya Kaandam Crew

·    Directed by - Thiagarajan Kumararaja
·    Produced by - S. P. B. Charan
·    Written by - Thiagarajan Kumararaja
·    Music by - Yuvan Shankar Raja
·    Cinematography - P. S. Vinod
·    Editing by - Praveen K. L. & Srikanth N. B.
·    Studio - Capital Film Works
·    Art Director : Vithesh
·    Costume designer : Vasuki Bhaskar
·    PRO : Johnson
·    Stunts : Dileep subrayan

43 comments:

  1. Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.

    http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html

    Thank you.

    Anamika

    ReplyDelete
  2. அண்ணா, ஒரு படத்தின் பின்னாடியிருக்கும் வலியையும் வியாபார ரீதியான வெற்றியின் முக்கியத்துவத்தையும் விலாவாரியாக சொல்லியிருக்கிறீர்கள். புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனாலும், சின்ன பட்ஜெட் என்பதால், இந்த படம் கையை கடிக்காது என்றே தோன்றுகிறது. தமிழின் முக்கியமான பட வரிசையில் இப்படம் கம்பீரமாக சேர்த்துக்கொள்ளலாம்.

    //காளையன் கஜேந்திரனின் ஆளிடம் சரக்கு தன்னிடம் இருப்பதாகவும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சரக்கை வாங்கிக் கொள்ளும்படியும் சொல்கிறான்//

    அது கஜேந்திரன் ஆள் இல்ல... ஜாக்கிசெராப் குருப் தான். அதே போல காளையன் 2 லட்சம் கேட்பார். 

    ReplyDelete
  3. நீங்கதாண்ணே இயக்குனருக்கே புரியும்படி கதையை
    விளக்கமா எழுதியிருக்கீங்க

    நன்றி

    ReplyDelete
  4. அருமை,
    இன்று சத்யம் திரை அரங்கு தண்ணி டேங்கர் லாரி டிரைவரிடம் கேட்டேன். படம் எப்படி போகிறது என்று.
    எங்க சார், ஒரே சின்ன விடலைப் பசங்க கூட்டம் தான், ஒரு வாரம் தாண்டாது

    ReplyDelete
  5. விருது கிடைக்கும் என்பதும் சந்தேகம் என எண்ணுகிறேன்

    ReplyDelete
  6. This is what i was thinking, may be wrong ! Miskin wanted to use Ravikrishna for the character in Nandhalala, later miskin played himself.

    ReplyDelete
  7. உங்க விமர்சனம் படிச்சதுக்கப்புறம் படம் பார்க்கணும்னு தோணுது. பார்த்துட்டு சொல்கிறேன்.

    ReplyDelete
  8. //மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்திற்காக உடலை இளைக்க வைத்து,//

    அது அஞ்சாதே அல்ல... நந்தலாலா...

    ReplyDelete
  9. Write a separate post on this and spread the news...

    http://candlelightfortamils.blogspot.com/

    ReplyDelete
  10. [[[அனாமிகா துவாரகன் said...

    Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.

    http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html

    Thank you.

    Anamika]]]

    ஒவ்வொரு பதிவிலும் இந்தப் பின்னூட்டம் தேவையா அனாமிகா..!?

    ReplyDelete
  11. [[[ஜானகிராமன் said...

    அண்ணா, ஒரு படத்தின் பின்னாடியிருக்கும் வலியையும் வியாபார ரீதியான வெற்றியின் முக்கியத்துவத்தையும் விலாவாரியாக சொல்லியிருக்கிறீர்கள். புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், சின்ன பட்ஜெட் என்பதால், இந்த படம் கையை கடிக்காது என்றே தோன்றுகிறது. தமிழின் முக்கியமான பட வரிசையில் இப்படம் கம்பீரமாக சேர்த்துக் கொள்ளலாம்.]]]

    கையை மட்டுமல்ல உடலையும் சேர்த்தே கடித்துவிட்டது..!

    //காளையன் கஜேந்திரனின் ஆளிடம் சரக்கு தன்னிடம் இருப்பதாகவும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சரக்கை வாங்கிக் கொள்ளும்படியும் சொல்கிறான்//

    அது கஜேந்திரன் ஆள் இல்ல... ஜாக்கிசெராப் குருப்தான். அதே போல காளையன் 2 லட்சம் கேட்பார். ]]]

    நன்றி ஜானகி.. திருத்திவிட்டேன்..!

    ReplyDelete
  12. [[[udhavi iyakkam said...

    நீங்கதாண்ணே இயக்குனருக்கே புரியும்படி கதையை விளக்கமா எழுதியிருக்கீங்க

    நன்றி]]]

    ஹி... ஹி... உள்குத்து ரொம்ப பலமா இருக்கே..?

    ReplyDelete
  13. [[[ராம்ஜி_யாஹூ said...

    அருமை, இன்று சத்யம் திரை அரங்கு தண்ணி டேங்கர் லாரி டிரைவரிடம் கேட்டேன். படம் எப்படி போகிறது என்று. எங்க சார், ஒரே சின்ன விடலைப் பசங்க கூட்டம்தான், ஒரு வாரம் தாண்டாது]]]

    ஒரு வாரம்தான் ராம்ஜி ஸார்.. இவங்க விளம்பரப்படுத்தலை. ஏ படம் வேற.. மவுத் டாக் இல்லை. வேறென்ன செய்ய..?

    ReplyDelete
  14. [[[ராம்ஜி_யாஹூ said...

    விருது கிடைக்கும் என்பதும் சந்தேகம் என எண்ணுகிறேன்.]]]

    வெளிநாட்டு விருதுகள் நிறைய கிடைக்கும்..!

    ReplyDelete
  15. [[[sid said...

    This is what i was thinking, may be wrong ! Miskin wanted to use Ravikrishna for the character in Nandhalala, later miskin played himself.]]]

    இல்லை.. அஞ்சாதே படத்தில் நரேனின் கேரக்டருக்காக..!

    ReplyDelete
  16. [[[பெம்மு குட்டி said...

    உங்க விமர்சனம் படிச்சதுக்கப்புறம் படம் பார்க்கணும்னு தோணுது. பார்த்துட்டு சொல்கிறேன்.]]]

    போச்சுடா.. பார்த்துட்டு வந்து என்னைத் திட்டக் கூடாது..! இப்பவே யோசிச்சுக்குங்க..!

    ReplyDelete
  17. [[[vadi said...

    //மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்திற்காக உடலை இளைக்க வைத்து,//

    அது அஞ்சாதே அல்ல... நந்தலாலா...]]]

    அப்பா சாமிகளா.. ஆளை விடுங்க. எனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டேன்..!

    ReplyDelete
  18. [[[Arvinth said...

    Write a separate post on this and spread the news...

    http://candlelightfortamils.blogspot.com/]]]

    மிக்க நன்றி..!

    ReplyDelete
  19. மொக்கை வாத்தியாரே
    இன்னுமா இந்த உலகம் உங்களை நம்பிட்டு இருக்கு...

    ReplyDelete
  20. ட்ரைளர் பார்த்தேன் நல்ல இருக்கு.

    ReplyDelete
  21. அங்கிள்,
    உங்களுக்கு என்ன ஆச்சு. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கற நீங்களே சனல் 4 வீடியோக்களைப் பற்றி எதுவும் எழுதாமல் பட விமர்சனம் போடறீங்க. உங்களுக்கு என்னாச்சு. எழுதினால் விடிவு வரப் போகிறதா என்ற சலிப்பா? நீங்களே இப்படி நடக்கலாமே. தூக்க கலக்கத்தில வலியுடன் இதைப் பத்தி மக்களுக்கு (தமிழர் அல்லாதவர்களுக்கு) அனுப்புங்கன்னு தான் அதைப் போட்டேன். ஒவ்வொரு பதிவிலும் போடுன்னு சொல்லவில்லை. தெரியாத்தனமாக உங்கள் இரண்டு மூன்று பதிவுகளில் போட்டிருந்தால் சிரமத்திற்கு மன்னிக்கவும். அதுக்காக சலிச்சுக்கறது நல்லா இல்லை =((

    ReplyDelete
  22. இப்ப என்னான்றே...படம் (குடும்பத்தோட) பாக்கலாமா, கூடாதா? வன்முறை அதிகமா? ஆபாசம் இருக்கா?

    ReplyDelete
  23. வணக்கம் தோழரே,

    உங்கள் எண்ணத்தோடு இணைந்து போகிறோம்..

    ஆமாம் ...
    சமீப காலத்தில் வகுப்பறையில் தங்களைக் காணோமே ?

    ReplyDelete
  24. [[[Indy said...

    மொக்கை வாத்தியாரே, இன்னுமா இந்த உலகம் உங்களை நம்பிட்டு இருக்கு.]]]

    அதான் நீங்களே தேடி வர்றீங்களே.. இது போதாதா..?

    ReplyDelete
  25. [[[ConverZ stupidity said...

    ட்ரைளர் பார்த்தேன் நல்ல இருக்கு.]]]

    படத்தையும் பாருங்க. நல்லாத்தான் இருக்கு..!

    ReplyDelete
  26. [[[அனாமிகா துவாரகன் said...

    அங்கிள், உங்களுக்கு என்ன ஆச்சு. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கற நீங்களே சனல் 4 வீடியோக்களைப் பற்றி எதுவும் எழுதாமல் பட விமர்சனம் போடறீங்க. உங்களுக்கு என்னாச்சு. எழுதினால் விடிவு வரப் போகிறதா என்ற சலிப்பா? நீங்களே இப்படி நடக்கலாமே. தூக்க கலக்கத்தில வலியுடன் இதைப் பத்தி மக்களுக்கு (தமிழர் அல்லாதவர்களுக்கு) அனுப்புங்கன்னுதான் அதைப் போட்டேன். ஒவ்வொரு பதிவிலும் போடுன்னு சொல்லவில்லை. தெரியாத்தனமாக உங்கள் இரண்டு மூன்று பதிவுகளில் போட்டிருந்தால் சிரமத்திற்கு மன்னிக்கவும். அதுக்காக சலிச்சுக்கறது நல்லா இல்லை =((]]]

    ஓகே.. ஓகே.. நீயும் கோச்சுக்காத..! நான் நிச்சயமா பதிவு போடுவேன்..!

    ReplyDelete
  27. [[[sivakasi maappillai said...

    என்னவோ போங்க...]]]

    எங்க போறது மாப்ளை..!?

    ReplyDelete
  28. [[[சீனு said...

    இப்ப என்னான்றே... படம் (குடும்பத்தோட) பாக்கலாமா, கூடாதா? வன்முறை அதிகமா? ஆபாசம் இருக்கா?]]]

    வன்முறை அதிகம். ஆபாசமான வார்த்தைகள் அதிகம். இதனால் குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்க்கவே முடியாது. கூடாது..!

    ReplyDelete
  29. [[[சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    வணக்கம் தோழரே, உங்கள் எண்ணத்தோடு இணைந்து போகிறோம்..

    ஆமாம்... சமீப காலத்தில் வகுப்பறையில் தங்களைக் காணோமே?]]]

    இல்லையே.. வந்து போய்க் கொண்டுதானே இருக்கிறேன்..!

    ReplyDelete
  30. [[[ராம்ஜி_யாஹூ said...

    விருது கிடைக்கும் என்பதும் சந்தேகம் என எண்ணுகிறேன்.]]]

    வெளிநாட்டு விருதுகள் நிறைய கிடைக்கும்..!

    Already this movie got big recognition - Officla Selection South Asian intl. Film Festival. New York 2010

    ReplyDelete
  31. Nice Movie.. Better posting given by you. . Almost, youngster may welcome this movie.. best wishes to the team and especially to saran balasubramaniam for his full effot and money. DURAI.THIYAGARAJ

    ReplyDelete
  32. //ஜாக்கிஷெராப் என்னும் இந்தக் கலைஞன் நடித்திருக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் இது என்று நினைக்கிறேன்//

    விக்ரம் நடித்த கந்தசாமி பட்த்தில் இவர் வில்லனாக நடித்துள்ளார் என நினைக்கின்றேன். பஸ் இல் ஆட்டம் போடுவது இவர்தானே

    ReplyDelete
  33. விமர்சகரின் கடமை பார்வையாளனின் திரை நுணுக்கத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.அடுத்தகட்டத்திற்கான ஆய்வுக்குட்படுத்தாமல் மேலொட்டமான குழப்பபார்வையை மட்டுமே தருகிறீர்கள்.மிகவும் குழப்பவாதியான விமர்சகர் என நினைக்கிறேன்.சினிமாவை நேசிப்பதாக சொல்லும் நீங்கள் எதை வைத்து எப்படியும் இதனைப் படிக்கின்ற அனைவரும் படத்தைப் பார்க்க மாட்டீர்கள் என முடிவு செய்கிறீர்கள்.
    தயாரிப்பாளரை குறை கூறும் நீங்கள் அதே தவறை, முழுக்கதையயும் சொல்லி எந்தவிதமான பார்வையையும் வைக்காமல் விடுவது என்ன நியாயம்.இதற்கு தினத்தந்தி விமர்சனம் பெட்டர். கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டால் பிரச்சனையில்லை என நினைக்கிறேன்.பாராட்டுகள் இருப்பினும்,இல்லாவிடினும் தியேட்டரின் வாசலில் அரட்டை அடிக்கும் நுனிப்புல் கண்டிப்பாக நிராகரித்தலின் வலியை அப்படைப்பாளிக்கு ஏற்படுத்தும்.

    ReplyDelete
  34. [[[Silicon Sillu said...

    [[ராம்ஜி_யாஹூ said...

    விருது கிடைக்கும் என்பதும் சந்தேகம் என எண்ணுகிறேன்.]]]
    வெளிநாட்டு விருதுகள் நிறைய கிடைக்கும்..!

    Already this movie got big recognition - Officla Selection South Asian intl. Film Festival. New York 2010.]]]

    வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் கிடைக்கும். உள்ளூரில் குச்சி மிட்டாய்தான்..!

    ReplyDelete
  35. [[[சிவபார்கவி said...

    Nice Movie. Better posting given by you. Almost, youngster may welcome this movie. best wishes to the team and especially to saran balasubramaniam for his full effot and money.

    DURAI.THIYAGARAJ.]]]

    வருகைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  36. [[[ஒரு வாசகன் said...

    //ஜாக்கிஷெராப் என்னும் இந்தக் கலைஞன் நடித்திருக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் இது என்று நினைக்கிறேன்//

    விக்ரம் நடித்த கந்தசாமி பட்த்தில் இவர் வில்லனாக நடித்துள்ளார் என நினைக்கின்றேன். பஸ் இல் ஆட்டம் போடுவது இவர்தானே.]]]

    இல்லை நண்பா.. அது வேறு..! எனக்கு மறந்துவிட்டது..!

    ReplyDelete
  37. [[[pranavviswa said...

    விமர்சகரின் கடமை பார்வையாளனின் திரை நுணுக்கத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்தக் கட்டத்திற்கான ஆய்வுக்குட்படுத்தாமல் மேலொட்டமான குழப்பப் பார்வையை மட்டுமே தருகிறீர்கள்.

    மிகவும் குழப்பவாதியான விமர்சகர் என நினைக்கிறேன்.சினிமாவை நேசிப்பதாக சொல்லும் நீங்கள் எதை வைத்து எப்படியும் இதனைப் படிக்கின்ற அனைவரும் படத்தைப் பார்க்க மாட்டீர்கள் என முடிவு செய்கிறீர்கள்.]]]

    நீங்களே தியேட்டருக்கு போய் பாருங்க.. கூட்டம் எப்படியிருக்குன்னு..? இது தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட சினிமா என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் உங்களுக்கே புரியும்..!

    [[[தயாரிப்பாளரை குறை கூறும் நீங்கள் அதே தவறை, முழுக் கதையயும் சொல்லி எந்தவிதமான பார்வையையும் வைக்காமல் விடுவது என்ன நியாயம். இதற்கு தினத்தந்தி விமர்சனம் பெட்டர். கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டால் பிரச்சனையில்லை என நினைக்கிறேன். பாராட்டுகள் இருப்பினும், இல்லாவிடினும் தியேட்டரின் வாசலில் அரட்டை அடிக்கும் நுனிப்புல் கண்டிப்பாக நிராகரித்தலின் வலியை அப்படைப்பாளிக்கு ஏற்படுத்தும்.]]]

    உங்களுடைய பார்வைக்கும், விமர்சனத்துக்கும் மிக்க நன்றிகள்..!

    ReplyDelete
  38. நான் பார்த்த அந்த ஸ்பெயின் படத்தில் தான் ஆண்மகன்தான் என்பதைக் காட்டுவதற்காக ரவுடிகள் முன்பாகவே ஒரு விபச்சாரப் பெண்ணுடன் உடலுறவு செய்து காட்டுவான். பின்பு கிளைமாக்ஸில் ரவுடிகளை துப்பாக்கியால் சுடுவது போலவும் காட்சிகள் இருக்கும். ஆனால் இறப்புக் காட்சியில் தமிழ் சிங்கப்பெருமாளைவிடவும் உருக்கம் ஸ்பானிய சப்பையிடம் இருந்தது..

    what is the name of the spanish movie ?

    ReplyDelete
  39. ஒரு படத்தை விமர்சனம் செய்வது சரி தான். அதற்காக அந்த படத்தின் கதையை இவ்வளவு விளக்கமாக போடா வேண்டுமா?. விமர்சனம் படித்து விட்டு படம் பார்க்க செல்பவனுக்கு ஒரு சுவாரசியமே இருக்காதே?.

    ReplyDelete
  40. [[[tweety said...

    நான் பார்த்த அந்த ஸ்பெயின் படத்தில் தான் ஆண்மகன்தான் என்பதைக் காட்டுவதற்காக ரவுடிகள் முன்பாகவே ஒரு விபச்சாரப் பெண்ணுடன் உடலுறவு செய்து காட்டுவான். பின்பு கிளைமாக்ஸில் ரவுடிகளை துப்பாக்கியால் சுடுவது போலவும் காட்சிகள் இருக்கும். ஆனால் இறப்புக் காட்சியில் தமிழ் சிங்கப்பெருமாளைவிடவும் உருக்கம் ஸ்பானிய சப்பையிடம் இருந்தது..

    what is the name of the spanish movie ?]]]

    நானும் தேடிக் கொண்டிருக்கிறேன் நண்பரே.. கிடைத்தவுடன் சொல்கிறேன்..!

    ReplyDelete
  41. [[[Lakshmi Narayanan said...

    ஒரு படத்தை விமர்சனம் செய்வது சரிதான். அதற்காக அந்த படத்தின் கதையை இவ்வளவு விளக்கமாக போடா வேண்டுமா?. விமர்சனம் படித்து விட்டு படம் பார்க்க செல்பவனுக்கு ஒரு சுவாரசியமே இருக்காதே?.]]]

    எழுதி, எழுதி ச்சும்மா வைத்துக் கொள்ள முடியாதே..! புத்தகமாக போடலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதனால்தான் முழுமையாகச் சொல்ல வேண்டியுள்ளது..!

    ReplyDelete
  42. அண்ணே அது ராம்போ ராஜ்குமார் இல்லையாம். பாக்ஸர் ஆறுமுகமாம் ...

    ReplyDelete