Pages

Thursday, May 12, 2011

அழகர்சாமியின் குதிரை – சினிமா விமர்சனம்

12-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கதை வறட்சியோடு வெற்று பொழுதுபோக்குகளையும், களியாட்டங்களையும் திரையில் பார்த்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கோடை வெயிலை குளிர வைக்கும் கோடை மழையாக தமிழ்ச் சினிமாவிற்குள் வந்துள்ள அழகர்சாமியின் குதிரையை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.

கதையில்லாமல் சதையை மட்டுமே நம்பி தமிழ்ச் சினிமாவின் போக்கு போய்க் கொண்டிருக்கிறது என்றெல்லாம் டாஸ்மாக் கடை வாசலில் எழும் புலம்பல்களைப் போல கோடம்பாகத்தின் சந்து பொந்துகளில் கிசுகிசுக்கப்படும் பேச்சுக்கள் இனி நிறுத்தப்படலாம். கதைகள் எங்குதான் இல்லை...? நம்மிடையே இன்னமும் பேசப்படாத, வெளியில் சொல்லப்படாத கதைகள் நிறைய உள்ளன என்பதற்கு இந்தப் படமும் ஒரு சாட்சி.


மழையில்லாமல் வறட்சியோடு ஆண்டுகளை நகர்த்திக் கொண்டிருக்கும் தேனி, மல்லையாபுரத்து மக்களுக்கு இருந்த கடைசி நம்பிக்கை ஊரில் குடியிருக்கும் அழகர்சாமியின் மனம் குளிர அவரை ஆற்றுக்குத் தூக்கி வந்து இறக்கிவிட்டால் கோமாரி பொழியும் என்று நினைக்கிறார்கள்.

கூடவே அந்த ஊர் மக்களிடையே இருக்கும் பிரிவினையினாலும், தனி மனித கோபத்தினாலும் ஊர்த் திருவிழா  நடக்காமலேயே போயிருக்கிறது..! இந்த முறை அழகரைத் தூக்கிவிடுவோம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும்போது அழகரின் வாகனமான குதிரை வாகனமே காணாமல் போய்விடுகிறது..

அதனைத் தேடியலையும்போது நிஜ குதிரையே கிடைத்துவிட.. அழகராக பார்த்துதான் ஊருக்குள் நிஜக் குதிரையைக் கொண்டாந்து விட்டிருக்கிறார் என்ற பாமர நம்பிக்கையில் மக்கள் கொண்டாட்டத்தில் இறங்க.. அந்த நிஜக் குதிரையை நம்பி வாழ்க்கையை ஓட்டி வரும் அப்புக்குட்டி தனது குதிரையைத் தேடி வருகிறான்..

ஊர் மக்களுக்கு மழையும், அழகர் ஆற்றில் இறங்குவதும் முக்கியமாக இருக்க.. அப்புக்குட்டிக்கு குதிரை கிடைத்து அதன் மூலம் தனது கல்யாணம் நடக்க வேண்டும் என்பதும் முக்கியமாய் இருக்க.. கடைசியில் எந்தக் குதிரை ஜெயித்தது என்பதுதான் திரைப்படம்..!

கதையாக உருவெடுத்தபோதே விகடன் வாசகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருந்தது இந்தக் குதிரைக் கதை..! கொஞ்சம் ஹாஸ்யமும், நிறைய கிராமிய மணத்தையும் தூவிவிட்டு அதகளப்படுத்தியிருந்தார் பாஸ்கர் சக்தி..

தாவித் தாவிப் பறந்து அடிக்கும் ஹீரோயிஸம் மிஸ்ஸிங்..  ஐ.நா. சபை செகரட்டரி அளவுக்கு வசனம் பேசும் தாதாயிஸமும் இல்லை..! கண்கவர் காட்சிகளை முனைப்புடன் கிராபிக்ஸ் செய்து அளிக்கும் மேல்பூச்சுக்களும் இல்லை.. இருப்பது ஒன்றே ஒன்று.. அது கிராமத்து வாழ்க்கை.. அந்த செம்மண் பூமியின் அத்தனை மூச்சுக் காற்றுகளையும் அலை மோதவிட்டு அனைத்தையும் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்..!

மூலக் கதையில் இருந்து அதிகம் பிறழாமல் அப்புக்குட்டிக்கு மட்டும் ஒரு துணைக் கதையை கவிதை வடிவில் செதுக்கியிருக்கிறார். எந்தப் பக்கம் திரும்பினாலும் யதார்த்தமான மக்கள்.. கூடவே வரும் வாத்தியாராகவே இருந்தாலும், அவரது மகனை போலீஸில் போட்டுக் கொடுக்கும் ஊர்ப் பெரிசு ஒரு பக்கம்..! ஒரு நாள் கூத்தில் அரசனான கதையாக தான் குறி சொல்லும்போது மட்டும் தன்னை விரட்டும் ஊர்க்காரர்களை “டேய்..!” என்று அழைத்து தனது கோபத்தைத் தீர்த்துக் கொள்ளும் கோடங்கிக்காரன்..! குதிரையே வாழ்க்கை.. அதைத் தவிர வேறில்லை என்ற நினைப்பில் வெறியோடு வரும் அப்புக்குட்டி.. அவனது உருவத்தை பார்க்காமல் உள்ளத்தைப் பார்த்திருக்கும் அவனது வருங்கால மனைவி.. வரி வசூல் செய்ய வந்தவர்களிடம் காது கேளாதவர்கள்போல் நடித்து அனுப்பி வைக்கும் அந்தக் கிழவி.. மகள் சேமித்து வைத்த சில்லரைகளை வரியாக வாரிக் கொடுக்கும் ஒருவர்.. ஊருக்குள் ஒண்ணுக்குள்ள ஒண்ணாக இருந்தாலும் சமயம் பார்த்து காலை வாரிவிடும் பெரிசுகள் கோஷ்டி.. இவர்களுக்கிடையில் ஒரு காதல் ஜோடி.. ஒவ்வொரு ஊரிலும் தவறாமல் இருந்து தொலையும் ஒரு மைனர்.. என்று இந்தக் கதாபாத்திரத் தேடலில் அத்தனை பேரும் பெரிய ஸ்டார்கள் இல்லை. அனைவருமே மண்ணின் மைந்தர்கள்தான்..!

கதையைப் படித்தபோது எனக்குப் பிடித்த கேரக்டரான மப்டி போலீஸ் சந்திரனை ஏனோ திரைப்படத்தில் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அதுவொரு முக்கியமான கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது..! சந்திரனை மிகைப்படுத்தியிருக்கும் ஒரு சில காட்சிகளும், தொடர்ச்சியான மலையாள மாந்திரீகரின் பூஜை, புனஸ்காரம் என்ற காட்சிகளும் திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்தியிருப்பது நிஜம்தான்..!

சாமியே கும்பிடாதவன் தனது காதலிக்காக கும்பிடுவதும்.. தச்சரைக் காப்பாற்ற வேண்டி விட்டுக் கொடுக்கும் காட்சியும் சினிமாத்தனம்தான் என்றாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்..!  

அப்புக்குட்டி அறிமுகமாகும்போது நடக்கும் அந்த சண்டைக் காட்சி பிரமாதம்.. சண்டையாகவும் இல்லாமல், இயல்பாகவும் இல்லாமல் எடுத்திருக்கும் அக்காட்சியைப் படமாக்கியிருக்கும் விதத்தை பாராட்டியே ஆக வேண்டும். கேமிராமேன் தேனி ஈஸ்வரின் புகழ்பாட இந்த ஒரு காட்சியே போதும்..! அப்புக்குட்டியின் கதை மனதை நெகிழ வைக்கிறது..! பாடல் காட்சியில் வெயிலில் படுத்திருக்க குதிரை ஓடி வந்து நிழல் கொடுப்பதுபோல் சூரியனை மறைத்து நிற்கும் அந்த ஒரு காட்சியே போதும்.. குதிரைக்கும் அவனுக்குமான உறவைச் சொல்ல..!

பெண் பார்க்கக் கிளம்பும்போது தனது பருத்த வயிற்றை ஒட்டி வைத்துப் பார்த்து திருப்திபடும் அவன் பொண்ணு வந்தவுடன் அதேபோல் தனது வயிற்றை ஒட்டி வைத்து நிமிர்ந்து உட்காரும் கட்சியும் படு யதார்த்தம்.. யார்தான் செய்ய மாட்டார்கள் இதனை.. பாடலின் நடுவே வரும் “உன்னைத் தொட்டுப் பார்க்கலாமா..?” என்று கேட்டுவிட்டு தொடுகின்ற காட்சியும் செல்லுலூயிட் கவிதை..!

அந்தக் கனமான மரக் குதிரையை யார்தான் களவாடியிருப்பார்கள் என்ற தேடுதலில் ஊரையே சுற்றி வரும் ஒரு சிறுவனிடம் துப்புக் கொடுக்கச் சொல்லி அவனுக்கு புரோட்டாவை வாங்கிக் கொடுத்து தகவல் கறக்கும் காட்சியில்  என்னவொரு வில்லத்தனம்..? இவர்களுக்காகவே என்று வந்து வாய்க்கும் அப்பாவி போலீஸ்காரர்கள்..! தமிழ்நாட்டில் இன்னமும் கிராமப்புற ஸ்டேஷன்களில் நடக்கும் அன்றாட நிகழ்வை அப்படியே தத்ரூபமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்..! குதிரை காணாமல் போய் புகார் கொடுக்க வரும் ஒரு காட்சியே இதற்கு உதாரணம்..!

நடிப்பில் அப்புக்குட்டியும், வாத்தியாராக வரும் அழகன் தமிழ்மணியும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இறுதிக் காட்சியில் அதுவரையில் சொல்லப்படாத ஒரு விஷயம்.. “ஜாதி” என்ற வார்த்தை வாத்தியாரின் வாயில் இருந்தே வருவதைப் பார்க்கின்றபோது, இங்கே அழிக்க முடியாதது அதுதான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது..!

எல்லாமே நம்பிக்கைதான்.. ஊரே அருள் புரிய வேண்டும் என்று அழகர்சாமியின் வேண்டுதல்கள் வைக்கிறது.. ஆனாலும் எப்படியாவது அடுத்தவனை முந்திவிட வேண்டும் என்று நினைக்கும் மனித புத்தியும் சஞ்சலமில்லாமல் உடன் வருவதை பல காட்சிகளில் சொல்லியிருக்கிறார் கதாசிரியர் பாஸ்கர் சக்தி..!

இளையராஜாவின் இசைதானா என்ற சந்தேகம் டைட்டில் காட்சிகளின்போது தெரிந்தது..! ஆனாலும் படத்தில் சிற்சில இடங்களில் பிரமாதப்படுத்தியிருந்தார். முயல் வேட்டைக்காக ஊர் மக்கள் செல்லும்போது அவர்களைப் பின் தொடர்ந்து செல்கின்ற காட்சியிலும், குதிரை தப்பித்து ஓட பின்னாலேயே அனைவரும் துரத்தும் காட்சியிலும், அப்புக்குட்டியுடன் நடக்கும் சண்டைக் காட்சியின்போதும்தான் ராஜா தெரிகிறார்..!

அவருக்கான இடம் பாடல் காட்சிகளில் ஏற்கெனவே அளிக்கப்பட்டுவிட்டதால் அதிகமாக அவர் அலட்டிக் கொள்ளவில்லைய என்று தோன்றுகிறது.. “அடியே இவளே” என்று ஆரம்பிக்கும் அந்த முதல் பாடலும் சரி.. “பூவைக் கேளு காத்தைக் கேளு..” பாடலும் இந்த வருடத்தின் ஹிட்டாக இருக்கும் என்று நினைக்கிறேன்..! “குதிக்கிற குதிக்கிற குதிரை” பாடல் காட்சியை படமாக்கியவிதம் அருமை..! தனது முதல் படத்திலேயே ஸ்கோர் செய்யக்கூடிய அளவுக்கு தேனி ஈஸ்வருக்கு இந்தப் பாடல் காட்சி நல்ல வாய்ப்பைத் தந்திருக்கிறது..!

பாஸ்கர் சக்தியின் வசனம் பல இடங்களில் மிளிர்கிறது..! கோடங்கிக்காரனின் சுயமரியாதைக்கு சோதனையைக் கொடுக்கும் விதமாகப் பேசுகின்ற அந்த வசனத்தையும், அதைத் தொடர்ந்து அவன் வீட்டுக்கு வந்தவுடன் மனைவியுடன் பேசுகின்ற பேச்சுக்களும் அசத்தல்..! கேரக்டர் ஸ்கெட்ச்சுக்களை மிகக் கவனமாக செதுக்கியிருக்கிறார் பாஸ்கர்..! இத்திரைப்படத்தின் மூலம் பாஸ்கர் சக்தி எங்கயோ போகப் போகிறார்..!!!

இப்படியொரு கதையை திரைப்படமாக்கிய சுசீந்திரனுக்கு எனது தலை தாழ்ந்த வணக்கங்கள்..! நல்ல கதை நல்ல சினிமாவை கொடுக்கும். நல்ல சினிமாவை நல்ல இயக்குநரால் தர முடியும்.. சுசீந்திரன் செய்து காட்டியிருக்கிறார். அதுவும் தனது மூன்றாவது படத்திலேயே இலக்கியத்தைக் கையாளும் தைரியம் அவருக்குக் கிட்டியிருக்கிறதே.. இதுவே ஆச்சரியமானது. பாராட்டுக்குரியது.. இவரைப் போலவே இனி வரும் இயக்குநர்களும் நல்ல கதைகளை நம் மண்ணில் இருந்தே எடுத்துக் கொடுத்தார்களேயானால் தமிழ்ச் சினிமாவுலகம் நிச்சயம் பயன்பெறும்..

அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் அழகர்சாமியின் குதிரை..!


படத்தின் டிரெயிலர் :




33 comments:

  1. சுடச்சுட விமர்சனம்....

    அவசியம் பாக்கணும்...

    ReplyDelete
  2. Nalla vimarsanam, anne. ithumaathiri nalla patangkal adikkadi varanum!

    ReplyDelete
  3. பார்த்துடுவோம் சரவணன். இந்தப் படம் பார்ப்பதற்கு முன்னால் விமர்சனம் படித்துவிட்டு போகவேண்டும் என்றிருந்தேன். இது பார்க்கத்தூண்டுகிறது.

    ReplyDelete
  4. ஒளிபதிவாளர் எங்க ஊரு...ஒளிபதிவு செஞ்சதும் எங்க ஊருல..இசையும் எங்க ஊருகாரர்தான்... அப்போ படம் நல்லாதான இருக்கும் ...

    ReplyDelete
  5. யதார்த்த மக்களை, மண்ணை, கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் ஜெயித்துவிடுகின்றன. தேர்ந்த படப் பிடிப்பும், களமும், வசனமும், நடிப்பும் ஓரளவுக்கு இருந்தாலே வெற்றி உறுதி. உங்கள் விமர்சனத்தைப் படித்த பிறகு பார்க்கத்தான் வேண்டும் அழகரை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அவசியம் பார்க்கத்தான் வேண்டும்...

    ReplyDelete
  7. இந்த வாரம் பாத்துருவோம். ஆனா, சந்தோஷமா பார்கறதா இல்ல வருத்தத்தோட பார்க்கிறதாங்கிறது நாளைக்குதான் தெரியும்.

    ReplyDelete
  8. அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் அழகர்சாமியின் குதிரை..!//

    அப்டினா எனக்கு டிக்கெட் அனுப்பி வைங்க..

    ReplyDelete
  9. arumaiyana vimarsanam.. DVD vara varaikkum wait pannithan pakkanum..inga

    ReplyDelete
  10. சரி நானும் ஜோசியம் சொல்றேன்.. மொபைல் நம்பர் 420420420420 : இதுநாள் வரை கலர் டீவி, இலவச நிலம், காப்பீட்டு திட்டம் போன்ற அதிர்ஷ்ட கிரகங்களின் சஞ்சாரத்தின் ஆதரவோடு மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என்ற அனுகூலமான திசை கருணாநிதிக்கு இருந்தாலும்.. தேர்தலுக்கு முன்னாள் நிகழ்ந்த ஸ்பெக்ட்ரம் கிரகணம் அவருடைய மகள் கனிமொழியின் ஜென்மராசிக்கு பாதகமாக அமைந்தது வெற்றியின் நம்பிக்கையை குறைக்கும் வண்ணமே அமைந்தது.. ஆனாலும் அந்த கிரகணத்தின் பாதிப்பை முழுவதுமாக தங்கள் காவல் தெய்வம் ராஜாவின் மேல் திருப்பி விட்டு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் நேரத்தில் தேர்தல் கமிஷன் கெடுபிடி, ஓட்டுக்கு துட்டு கொடுக்க முடியாமை போன்ற துர் கிரகங்கள் எதிர்பாராமல் அவரது ஜாதக கட்டத்துக்குள் சஞ்சாரித்து விட்டது மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்றே தோன்றுகிறது.. அந்த பக்கம் அம்மாவின் ஜாதகத்தை பார்த்தால் 'தமிழக மக்களுக்கு மாற்றுக்கு இன்னொரு தலைமைக்கு வழி இன்னமும் இல்லை' என்ற வாஸ்து மிக பலமாக அமைந்து விட்டது மிகப்பெரிய பலம்.. தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் சசிகலா குடும்பத்தினர் கூகுள் மேப் பார்த்து தமிழகத்தில் மிச்சம் மீதி இருக்கும் காலி நிலங்களையும் பினாமி பெயரில் வளைத்து போடும் புண்ணிய காரியத்தில் ஈடுபடுவது உசிதமாக இருக்கும்.. அதே நேரத்தில் கருணாநிதி 'ஐயோ என்னையும் என் மகளையும் கொல்றாங்களே' என்ற ஜனாநாயக ஸ்லோகத்தை பிழையின்றி கதற.. ச்சே.. கூற இப்பவே கற்றுகொள்வது மிகமிக உசிதம்....

    ReplyDelete
  11. இந்த படத்தின் பின்னனி இசைக் கோர்வை மிகுந்த தரத்தில் இருப்பதாக பா.ராகவன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார். நீங்கள் தலைகீழாக சொல்கிறீர்கள்.

    இப்படியான படங்களை எடுக்க நிறைய தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்.அந்த வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் பாராட்டுக்குறியவரே...

    ReplyDelete
  12. சரி நாம் தமிழகத்தின் வாக்காளர்களின் ஜாதகத்தை பார்ப்போம். தமிழகத்தின் ராசி மேஷம் ( மோஷம் இல்லங்க ) இந்த ராசியின் உருவம் ஆடு இதன்படி ஆடு தானம் கொடுப்பவருக்குத்தான் செம்மறி ஆடு கூட்டம் போல மக்கள் வாக்கு அளிப்பார்கள் . லாப ஸ்தானமான 11 இல் சுக்ரன் இருப்பதால் மக்களுக்கு சுற்றுகிற திசைதான் ! மிக்ஷி கிரைண்டர் பேன் என்று இலவசங்கள் கொட்டும் மின்சார கிரகமான ராகு வும் இதனுடன் சேர்ந்து இருப்பதால் மின்சாரம் அளவுக்கு அதிகமாக கிடைக்கும் .சுவிட்சை ஆப் செய்தாலும் விளக்கு எரிந்துகொண்டே இருக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்களேன் ! நீர் கிரஹமான சந்திரன் மேஷத்தில் ஸ்தான பெற்றுள்ளதால் விவசாயம் செழித்து விலைவாசி மிக குறைந்த விலைக்கே கிடைக்கும் அரிசி கிலோ 50 காசு க்கு கிடைக்கும் சீனி மூன்று ரூபாய் . ஒரு கிலோ சீனி வாங்கினால் ஒரு லிட்டர் பாம் ஆயில் அல்லது கெரசின் இலவசம் . ரேஷன் கடைக்கு மக்கள் வராததால் ரேஷன் கடைகள் மூடப்படும். ரேஷன் கடைகள் டாஸ்மாக் கடைகளாக மாற்றப்படும். ஞான காரகனான கேது பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தில் இருப்பதால் அரசு ஊழியர்களின் ,மற்றும் M.L A., மந்திரிகளின் ஆடை காவி நிறத்தில்தான் அணிய சட்டம் வரும். இதன் மூலம் அவர்கள் புனிதம் அடைந்து லஞ்சம் வாங்க மாட்டார்கள் ஏற்கனவே வாங்கிய லஞ்ச பணங்களையும் மக்கள் வங்கியில் போட்டு விடுவார்கள் . இவர்களை பார்த்து கோவில் அர்ச்சகர்களும் திருந்தி தட்டில் காசு போடாதவர்களுக்கும் பிரசாதம் கொடுப்பார்கள். அரசு கிரகமான சூரியன் ஒன்பதாம் இடத்தில உள்ளார் அது இரண்டும் கேட்டான் இடம் எனவே ஆண் ஆலும் பெண் ஆலும் இவர்களுக்கு கெடுதல் தான் . ரோஸ் ஆண்டால் இவர்களுக்கு சிறப்பு. தங்க கிரகமான குரு பகவன் இரும்புக்கு அதிபதி ஆனா சனியை ஒன்பதாம் பார்வையால் பார்ப்பதால் இரும்பு தங்கமா மாறிவிடும். அரசு ஏழை பெண்களுக்கு மாங்கல்யதிற்கு நாலு கிலோ தங்கம் இலவசமாக கொடுக்கும். மேலும் குரு பகவான் நெருப்பு கிரகமான செவ்வாயை ஐந்தாம் பார்வையால் பார்ப்பதால் மூலிகை பெட்ரோல் ராம் தன் ஐந்தாம் அறிவோடு ஆறாம் அறிவான அப்துல் கலாம் அவர்களுடன் சேர்ந்து மூலிகை பெற்றோலை கண்டுபிடித்து விடுவார். எனவே பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விளையும் அடுத்த ஆட்சியில் குறைந்து விடும். படிப்புக்கு சொந்த காரனான புதன் பகவான் பத்தில் இருந்து கல்வி கட்டணங்களை குறைத்து விடுவார். அடுத்த ஆட்சியில் யாராக இருந்தாலும் வாக்களர்களுக்கு பொற்காலம் தான். ஆனால் ஒரே ஒரு குறைதான் . மாந்தி எட்டில் இருப்பதால் இவை எல்லாம் மக்கள் தூங்கும் பொது கனவில் மட்டும் கிட்டும்.முழித்து விட்டால் இதெல்லாம் கிட்டாது. கேட்டவன் கிட்டில் கேட்டது ராஜ யோகம் .

    ReplyDelete
  13. பாரா,லக்கிலுக்,அதிசாவின் விமர்சனம் தொடர்ந்து இப்போது உங்கள் விமர்சனம் படிக்கிறேன்.
    கிட்டத்தட்ட எல்லாமே ஒரே மாதிரியானவை.அப்படியானால் சந்தேகத்திற்கிடமில்லாமல் நல்ல படமே.இது போன்ற படங்களுக்கு கிடைக்கும் வெற்றியே மேலும் இதுபோன்ற சினிமாக்களுக்கு வழிவிடும்.
    (ங்கோத்தா இதுவும் அவனுங்க பேனர்லதானா?தமிழ்நாட்டுல படம் எடுக்க வேற யாராவது
    இருக்காங்களா இல்லையா?)

    ReplyDelete
  14. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

    சுடச்சுட விமர்சனம்....

    அவசியம் பாக்கணும்...]]]

    அவசியம் பாருங்க யோகேஷ்..!

    ReplyDelete
  15. [[[தஞ்சாவூரான் said...

    Nalla vimarsanam, anne. ithumaathiri nalla patangkal adikkadi varanum!]]]

    நானும் இதைத்தான் சொல்கிறேன் தஞ்சாவூரான்..!

    ReplyDelete
  16. [[[krishna said...

    ஒளிபதிவாளர் எங்க ஊரு. ஒளிபதிவு செஞ்சதும் எங்க ஊருல. இசையும் எங்க ஊருகாரர்தான்... அப்போ படம் நல்லாதான இருக்கும் ...]]]

    அபார நம்பிக்கை போங்க..!

    ReplyDelete
  17. [[[ரிஷி said...

    பார்த்துடுவோம் சரவணன். இந்தப் படம் பார்ப்பதற்கு முன்னால் விமர்சனம் படித்துவிட்டு போகவேண்டும் என்றிருந்தேன். இது பார்க்கத் தூண்டுகிறது.]]]

    அவசியம் பாருங்கள் ரிஷி..!

    ReplyDelete
  18. [[[கே.ஆர்.பி.செந்தில் said...

    அவசியம் பார்க்கத்தான் வேண்டும்...]]]

    ஓகே.. கோ பாய்.. பார்த்துட்டு வந்து பேசு பாய்..!

    ReplyDelete
  19. [[[ko.punniavan said...

    யதார்த்த மக்களை, மண்ணை, கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் ஜெயித்துவிடுகின்றன. தேர்ந்த படப் பிடிப்பும், களமும், வசனமும், நடிப்பும் ஓரளவுக்கு இருந்தாலே வெற்றி உறுதி. உங்கள் விமர்சனத்தைப் படித்த பிறகு பார்க்கத்தான் வேண்டும் அழகரை. வாழ்த்துகள்.]]]

    கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.. இது போன்ற படங்களை நாம் ஆதரிக்காவிட்டால் நல்ல சினிமாக்கள் வரவே வராது..!

    ReplyDelete
  20. [[[shiva said...

    இந்த வாரம் பாத்துருவோம். ஆனா, சந்தோஷமா பார்கறதா இல்ல வருத்தத்தோட பார்க்கிறதாங்கிறது நாளைக்குதான் தெரியும்.]]]

    சந்தோஷத்தோடவே பார்ப்போம்னு நினைங்க சிவா..!

    ReplyDelete
  21. [[[அகில் பூங்குன்றன் said...

    arumaiyana vimarsanam.. DVD vara varaikkum wait pannithan pakkanum..inga]]]

    பாருங்க.. பாருங்க..!

    ReplyDelete
  22. [[[ramesh said...

    அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் அழகர்சாமியின் குதிரை..!//

    அப்டினா எனக்கு டிக்கெட் அனுப்பி வைங்க..]]]

    எந்த ஊர்ல இருக்கீங்க ரமேஷ்..?

    ReplyDelete
  23. ஆட்டோமேஷன்..

    எதுக்கு இந்த பதிவுல இந்த வில்லங்கம்..?

    கவலை வேண்டாம்.. நிச்சயம் கருணாநிதி தோற்பார்..!

    ReplyDelete
  24. [[[மு.சரவணக்குமார் said...

    இந்த படத்தின் பின்னனி இசைக் கோர்வை மிகுந்த தரத்தில் இருப்பதாக பா.ராகவன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார். நீங்கள் தலைகீழாக சொல்கிறீர்கள்.

    இப்படியான படங்களை எடுக்க நிறைய தயாரிப்பாளர்கள் முன் வர வேண்டும். அந்த வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் பாராட்டுக்குறியவரே...]]]

    கொஞ்சம் சிதறலாகிவிட்டது இசை..! மறுக்க முடியாத உண்மை இது..!

    ReplyDelete
  25. [[[basheer said...

    பாரா, லக்கிலுக், அதிசாவின் விமர்சனம் தொடர்ந்து இப்போது உங்கள் விமர்சனம் படிக்கிறேன்.
    கிட்டத்தட்ட எல்லாமே ஒரே மாதிரியானவை. அப்படியானால் சந்தேகத்திற்கிடமில்லாமல் நல்ல படமே. இது போன்ற படங்களுக்கு கிடைக்கும் வெற்றியே மேலும் இது போன்ற சினிமாக்களுக்கு வழிவிடும்.

    (ங்கோத்தா இதுவும் அவனுங்க பேனர்லதானா? தமிழ்நாட்டுல படம் எடுக்க வேற யாராவது
    இருக்காங்களா இல்லையா?)]]]

    இருக்காங்க.. ஆனால் அமைதியா மூலைல உக்காந்திருக்காங்க..! அவ்ளோதான்..!

    ReplyDelete
  26. ஆட்டோமேஷன்.. எங்க நிலைமையும் நல்லாத்தான் இருக்குன்னு நினைக்கிறேன். பயம் வேண்டாம். நாளைக்கு நல்லதே நடக்கும்..!

    ReplyDelete
  27. நல்ல தெளிவான விமர்சனம்.. ரொம்ப நல்லாயிருந்தது..


    இன்னைக்கு ஈவ்னிங் ஷோ போறேன்.. :-)..

    ReplyDelete
  28. இன்று முற்பகல் காட்சிக்கு புதுச்சேரியின் அட்லாப்ஸ் திரையரங்கில் பார்த்தேன்.....பார்த்தேன் என்பதைவிட மைனா திரைபடத்தை போல் மல்லையாபுரத்திலேயே அவர்களுடன் இருந்தது போன்ற ஓர் உன்மத்த நிலையய் அடைந்தேன் தயவு செய்து தமிழ் ப்ளாக் படிப்பவர்களுக்கு ஓர் முக்கிய வேண்டுகோள் ! ! ! இது போன்ற உன்னதமான திரைப்படங்களை சினிமா ரசிகர்கள் பார்க்கவில்லை என்றால் அப்புறம் சுசீந்திரன் போன்ற நல்ல இயக்குனர்கள் வேறு விதமாகவோ அல்லது சினிமா எடுப்பதையோ விட்டு விடுவார்கள் ....

    http://kanthakadavul.blogspot.com/

    ReplyDelete
  29. தமிழ் திரையுலகில் இருந்து ஒரு உலகபடம்.இந்த மாதிரி படங்களுக்கு ஆங்கில சப் டைட்டில் இருந்தால் டாலரிலும் வசூலை பார்க்க முடியும்.

    ReplyDelete
  30. [[[பதிவுலகில் பாபு said...

    நல்ல தெளிவான விமர்சனம்.. ரொம்ப நல்லாயிருந்தது. இன்னைக்கு ஈவ்னிங் ஷோ போறேன்.. :-)..]]]

    நன்றி பாபு.. படம் எப்படி..?

    ReplyDelete
  31. [[[ஸ்ரீகாந்த் said...

    இன்று முற்பகல் காட்சிக்கு புதுச்சேரியின் அட்லாப்ஸ் திரையரங்கில் பார்த்தேன். பார்த்தேன் என்பதைவிட மைனா திரைபடத்தை போல் மல்லையாபுரத்திலேயே அவர்களுடன் இருந்தது போன்ற ஓர் உன்மத்த நிலையய் அடைந்தேன் தயவு செய்து தமிழ் ப்ளாக் படிப்பவர்களுக்கு ஓர் முக்கிய வேண்டுகோள்!!! இது போன்ற உன்னதமான திரைப்படங்களை சினிமா ரசிகர்கள் பார்க்கவில்லை என்றால் அப்புறம் சுசீந்திரன் போன்ற நல்ல இயக்குனர்கள் வேறு விதமாகவோ அல்லது சினிமா எடுப்பதையோவிட்டு விடுவார்கள். http://kanthakadavul.blogspot.com/]]]

    இதையேதான் நானும் சொல்லியிருக்கிறேன் ஸார்..! இது போன்ற படங்களை வரவேற்க வேண்டியது நமது கடமை..!

    ReplyDelete
  32. [[[ஒதிகை நிழல் said...

    தமிழ்த் திரையுலகில் இருந்து ஒரு உலகப் படம். இந்த மாதிரி படங்களுக்கு ஆங்கில சப் டைட்டில் இருந்தால் டாலரிலும் வசூலை பார்க்க முடியும்.]]]

    இந்த மார்க்கெட்டிங் திறமை ஒரு சில தமிழ்த் தயாரிப்பாளர்களுக்கு இல்லை..! இதையும் செய்தார்களேயானால் நிச்சயமாக ஜெயிப்பார்கள்..

    ReplyDelete